இன்றைக்கும் ஜப்பான் என்றால் எனக்கு முதலில் ஞாபகம் வருவது காமாகுராதான். நரூசே சானின் அன்பும், அமைதியான புத்தரும், கூடவே அந்த தலைவலியும்.
அன்று திடீரென்று, “இந்த சனிக்கிழமை நான் உங்களை காமாகுரா அழைத்து செல்கிறேன். நீங்கள் வருவீர்களா?” என்று நரூசே சான் கேட்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
தன்பாத், சிந்த்ரி, ராஜ்கன்க்பூர், ஜகதீஷ்ர், நாக்தா என்று யாரும் பார்க்காத ஊர்களாக சுற்றிக் கொண்டிருந்த எனக்கு அதுதான் முதல் வெளிநாட்டு பயணம். இரண்டு நாட்களுக்கு முன் நரீதாவில் இறங்கி, வேக ரயில் பிடித்து டோக்கியோ வந்து சேர்ந்திருந்தேன். அடுத்த நாள் விடுமுறை நாள். முதல் முறையாக ‘வெண்டிங் மெஷின்’ பார்த்து, அதில் பணம் போட்டு ஒரு குளிர்பானம் கையில் எடுத்து, தெருவில் நடக்கும் எல்லோருக்கும் ஜப்பானிய விதிப்படி தலை குனிந்து வணக்கம் சொல்லிக்கொண்டே நடந்தேன். அன்று தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த எல்லோரையும் வணங்கியிருப்பேன். இந்தியாவிலிருந்து வந்தவனுக்கு ஜப்பான் சம்பிரதாயம் தெரியாது என்று யாரும் நினைக்கக் கூடாதல்லவா? வெளிநாட்டிற்குச் செல்லும்பொழுது எப்படியெல்லாம் நம் நாட்டின் பெயரை காப்பாற்ற வேண்டியிருக்கிறது!
நான் வேலை செய்ய வேண்டிய பிரிவு வேறு. நரூசே சான் இருந்த பிரிவு வேறு. இரண்டிற்கும் சம்பந்தம் இல்லை. என் அலுவலகத்தில் ஏதோ டாகுமென்ட்ஸ் நரூசே சானிடம் கொடுக்க சொன்னார்கள் என்பதனால் அவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்து சென்று, டாகுமென்ட்ஸ் பத்திரமாக ஒப்படைத்தேன்.
அவர் நடுத்தர வயது மனிதர். கண்ணாடி போட்டுக்கொண்டிருந்தார். எல்லா ஜப்பானியர்கள் போலும் மீசை இல்லாத முகம், சிக்கென்ற உடல். குனிந்து குனிந்து நான்கு முறை வணக்கம் சொன்னார். நானும் நான்கு முறை குனிந்தேன். டாகுமென்ட்ஸ் வாங்கிக்கொண்ட பிறகு என்னை கேட்டார்,
“நீங்கள் ஜப்பான் வருவது இதுதான் முதல் முறையா?”
“ஆம். இந்தியாவை விட்டு வெளியே முதல் முறையாக வருகிறேன்”
சம்பிரதாயமாக, “ஜப்பான் பிடித்திருக்கிறதா?” என்று கேட்பார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவரோ, “இந்த சனிக்கிழமை நான் உங்களை காமாகுரா அழைத்து செல்கிறேன். நீங்கள் வருவீர்களா?” என்று கேட்டார்.
இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் கேட்டதும் எனக்கு ஜப்பானியர்கள் மீது ப்ரியம் அதிகமாகியது. புளகாங்கிதம் அடைந்த நான், “எனக்கு மிக்க மகிழ்ச்சி. நிச்சயம் வருகிறேன்” என்றேன்.
அதைச் சொன்ன பிறகுதான், “இந்த காமாகுரா என்பது என்ன?” என்ற கேள்வியே எழுந்தது. அவர் என் மைண்ட் வாய்சை கேட்ச் செய்து, “காமாகுரா டோக்கியோவிற்கு வெளியே உள்ள ஒரு சுற்றுலா தலம். பீச் இருக்கிறது. புகழ்பெற்ற புத்தர் சிலை ஒன்று இருக்கிறது. அருமையான இடம்,” என்றார். சனிக்கிழமை டோக்கியோ ஸ்டேஷனில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்தோம்.
டோக்கியோ ஸ்டேஷனில் நரூசே சானுடன் அவர் மனைவி மற்றும் அவர்களுக்கு நண்பரான ஒரு பிலிப்பீன்ஸ் நாட்டு பெண்மணியும் இருந்தார்கள். “இன்னொருவர் வரவேண்டும்” என்றார் நரூசே சான்.
வந்தவர் ஒரு இந்தியர். தேசாய் என்ற குஜராத்தி. நரூசே சானின் நண்பர். ஜப்பானிய மொழி அறிந்தவர். என்னைவிட இளையவர் ஆனால் தலை வழுக்கை.
(நான் தேசாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அலுவலகத்தில் ஒரு ஜப்பானிய மேனேஜரிடம் காட்டினேன். புகைப்படம் பார்த்த அவருக்கு ஒரே ஆச்சரியம். தேசாயைக் காட்டி, “இவர் இந்தியரா? இவர் இந்தியரா?” என்று கேட்டார். “ஆமாம்” என்றேன். “நம்ப முடியவில்லையே” என்றார். “ஏன்” “இவருக்கு மீசை இல்லை. இவர் எப்படி இந்தியராக இருக்க முடியும்?”)
எல்லோரும் காமாகுராவுக்குச் செல்ல ரயில் ஏறினோம். ரயிலில் உட்கார்ந்த பிறகு சம்பிரதாய விசாரிப்புகள் தொடங்கின. கொஞ்சம் நேரம் ஆனபின் நரூசே சானின் மனைவி என்னிடம் கேட்டார், “போன மாதம் சுஜாதா சான் ஜப்பான் வந்திருதார். அவர் ஒரு ஸாரி அன்பளிப்பாகக் கொடுத்தார். எனக்கு ஸாரி எப்படி கட்டவேண்டும் என்று தெரியாது. நீங்கள் கட்டிவிடுகிறீர்களா?”. நான் திடுக்கிட்டதை அவர் கவனிக்கவில்லை. சுதாரித்துக்கொண்டு, “ஆண்களுக்கு புடவை கட்ட தெரியாது” என்றேன்.
பேச்சு உணவு பக்கம் திரும்பியது. நான் அசைவம் உண்பதில்லை என்று சொன்னபிறகு நடந்த உரையாடல் இது:
பிலிப்பீன்ஸ் அம்மணி : “ஒ. நீங்கள் வெஜிடேரியனா? அப்படி என்றால் சிக்கன் மட்டும் சாப்பிடுவீர்களா?”
நான்: “இல்லை. நான் சிக்கன் சாப்பிடுவதில்லை”
நரூசே சான் மனைவி: “மீனாவது சாப்பிடுவீர்களா?”
நான்: “இல்லை. நாம் மீன் சாப்பிடுவதில்லை. வெறும் காய்கறிகள் தான்”
இருவரும்: “ஐயையோ”
பிலிப்பீன்ஸ் அம்மணி : “ஏன் அப்படி”
நான்: “இது எங்கள் மத வழக்கம்”
பிலிப்பீன்ஸ் அம்மணி : “வாட் ஏ பேட் ரிலிஜன். என்ன கொடூரமான மதம் இது. வெறும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்கிறது?”
ஜப்பானிய அம்மணி தலையை ஆட்டி ஆமோதித்தார்.
எங்கள் மதத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் அசைவம் சாப்பிடுவார்கள் என்றும், சைவம் சிறுபான்மைதான் என்றும் தெரிவித்தேன். இது அவர்களுக்கு ஆறுதல் அளித்தது.
காமாகுராவுக்கு வந்து சேர்ந்தோம். மனதில் சட்டென்று சந்தோஷம் குடிகொண்டது. டோக்கியோ ஒரு ‘கான்க்ரீட் காடு’. காமாகுரா சிறு மலைகள் சூழ பச்சை பசேல் என்று இருந்தது. ரயிலிருந்து இறங்கி புத்தரைப் பார்க்க மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.
‘தாய்புத்சு’ (The Great Buddha) என்றழைக்கப்படும் காமாகுரா புத்தாவை வர்ணிப்பது என்னால் ஆகாத ஒரு விஷயம். இந்த நாற்பது அடி உயரமுள்ள வெண்கலச் சிலையை பார்த்தவுடன் கிடைத்த அமைதியை விவரிக்க முடியாது. பின்னால் ஒரு குன்றிருக்க, வெட்டவெளியில் இந்த உலகத்தில் காண முடியாத ஒரு அமைதியுடம் புத்தர் உட்கார்ந்திருந்தார்.
புத்தரைப் பார்த்து முடித்தபின் மதிய உணவு சாப்பிட ஒரு ஜப்பானிய ஹோட்டலுக்கு சென்றோம். எனக்கு ஜப்பானிய உணவு வகைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்பது நரூசே சானின் நல்லெண்ணம். எனக்கோ பசி உச்சத்தில் இருந்தது. ஹோட்டலைப் பார்த்தவுடன் எனக்கு ஒரே குஷியாக இருந்தது. ஆனால் விதி வலியது.
சைவம் என்ற வார்த்தையை ஜப்பானில் வெகு சிலர்தான் கேள்விப்பட்டிருப்பார்கள். ஹோட்டல் நடத்துபவரின் காதுகளில் அது விழுந்திருக்காது என்பது சாப்பிட உட்கார்ந்தபின்தான் எனக்கு தெரிந்தது. எங்கள் மேஜைக்கு வந்த பதார்த்தங்கள் எல்லாமே அசைவம்தான். நான் முழித்துக்கொண்டிருக்க, நரூசே சான் என்னை தோஃபு சாப்பிட சொன்னார். “இது பன்னீர் போல் இருக்கும்” என்று தேசாய் சொன்னான். எனக்கோ அது வாயில் வைக்க வழங்கவில்லை. என் முகம் கோணுவதைப் பார்த்த நரூசே சான், “அதை இந்த சாஸுடன் சாப்பிடுங்கள். அப்பொழுது நன்றாக இருக்கும்” என்றார். அது இன்னும் கொடுமையாக இருந்தது. கடைசியில் தேசாய் தெம்புரா எனப்படும் பஜ்ஜி போன்ற ஒன்றைச் சாப்பிட சொன்னான். இதில் ஒரு சிக்கல் இருந்தது. தெம்புராவில் சைவம், அசைவம் இரண்டும் கலந்து இருந்தன. கத்திரிக்காய் பஜ்ஜி, குடைமிளகாய் பஜ்ஜியுடன் மீன் பஜ்ஜியும் இருந்தது. தேசாய் அசைவ பஜ்ஜிகளை எடுத்துவிட்டு சைவ பஜ்ஜிகளை என்னிடம் கொடுத்தான். அசைவம் எடுத்துவிட்ட பிறகு அந்த பாத்திரத்தில் நான்கு பஜ்ஜிகள்தான் மிஞ்சி இருந்தன. அவையே என் மதிய உணவாகின. சரியான உணவில்லாததால் எனக்கு சரியான தலைவலி. அது என் ரூமுக்கு வந்து சமைத்து சாப்பிட்ட பிறகுதான் சரியானது.
ஒரு மாதத்திற்கு பிறகு சுஜாதா சான் ஜப்பான் வந்தார். அப்பொழுது எங்களையெல்லாம் அவர் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருந்தார். சுஜாதா சான் நரூசே சான் மனைவிக்கு புடவை கட்டிவிட்டார். அவர் புடவையில் மிக அழகாக இருந்தார். நாங்கள் விருந்துக்கு செல்லும் முன் சுஜாதா சான் எங்களிடம், “ஜப்பானியர் வீட்டிற்கு விருந்திற்கு செல்லும்பொழுது ஏதாவது தின்பண்டங்களை நாம் அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டுசெல்ல வேண்டும்” என்றார். நான் நான்கு வெஜிடபிள் பர்கர்கள் வாங்கிச்சென்றேன்.
image credit – lonelyplanet.com
ரொம்ப நல்ல பதிவு, வெகு சுவாரசியம் 🙂
amas32
சிறுகதை இல்லையா ? 🙂