வளவ. துரையன்
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் நீர்நிலைகளில் குளித்து ஆடுவது என்பது மிகவும் விருப்பமான ஒன்றாகும். இதற்குப் பால்வேறுபாடும் கிடையாது. குளம், ஆறு, கடல் போன்றவற்றில் நீராடுவது அவர்களுக்கு ஒரு விளையாட்டாகும். அதனால் இதை நீர் விளையாட்டு என்றும் அழைப்பர். இலக்கியங்கள் இதைப் புனலாடல் என்றழைக்கின்றன. சுனையாடல் என்றும் இதைக் கூறுவார்கள்.
ஆண்டாள் தம் திருப்பாவையில், “நீராடப் போதுவீர்” “மார்கழி நீராட” “குள்ளக் குளிர்ந்து நீராடாதே” :மார்கழி நீராடுவான்” என்றெல்லாம் நீராடுதலைக் காட்டுவார். சிலப்பதிகாரம் கடலில் சென்று நீராடுவதைக் கடலாடு காதை எனும் பகுதியில் காட்டும்.
ஐங்குறு நூறு நூலில் தலைவனும் தலைவியும் நீராடும் செய்திகளைக் காட்டும் புனலாட்டுப் பத்து என்னும் பகுதியே உள்ளது. இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் புனலாட்டையே கூறுகின்றன.
ஒரு தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையிடம் சென்று ஒழுகி வந்தான். அப்பரத்தையுடன் அவன் புனலாடுகிறான். அதைத் தலைவி கேள்விப்படுகிறாள். அவளுக்கு மட்டுமன்று; அச்செய்தி ஊருக்கே தெரிந்து போகிறது. அதனால் எல்லாருமே அது குறித்துப் பேசுகின்றனர்.
சிலநாள்கள் கழித்து அவன் தலைவியிடம் மீண்டு வருகிறான். அப்பொழுது அவனிடம் அவன் பரத்தையரோடு சேர்ந்து புனலாடியது பற்றிக் கேட்கிறாள். “தலைவ! நீர் அழகிய தொடியும், வளையும் அணிந்த பரத்தையரோடு நீராடினீரே” என்கிறாள். அவனோ இல்லவே இல்லயென மறுக்கிறான். அதற்குத் தலைவி, “நேற்று கூட நீர் நீராடியது ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. பலரும் அதுபற்றிப் பேசுகின்றனர். சூரியனின் ஒளியை எவற்றாலும் மறைக்க இயலுமோ? அது போல நீ கூறும் பொய்மொழிகளால் நீர் நீராடியதை மறைக்க முடியாது” என்று மறுமொழி கூறுகிறாள்.
ஊராரின் அலர் தூற்றலுக்கு ஞாயிற்றின் ஒளியை உவமையாக காட்டலும் பரத்தையைக் கூடத் தலைவி அழகாக வருணிப்பதும் இப்பாடலில் குறிப்பிடத்தக்கவையாகும். இது ஐங்குறுநூறு புனலாட்டுப்பத்தின் முதல் பாடலாகும்
”சூதுஆர் குறுந்தொடிச் சூர்அமை நுடக்கத்து
நின்வெங் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப, புனலே; அலரே
மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந?
புதைத்தல் ஒல்லுமோ, ஞாயிற்றது ஒளியே”
புனலாட்டுப் பத்தின் நான்காம் பாடல் தலைவி புனலாடியதைப் பற்றிப் பெருமையாகத் தலைவன் கூறுவதாக அமைந்துள்ளது. பெண்களும் ஆண்களைப் போல நீர்நிலைகளின் கரைகளில் வளர்ந்துள்ள மரங்களில் ஏறி அங்கிருந்து நீர்நிலையில் குதித்து நீராடினர் என இப்பாடல் காட்டுகிறது.
அழகான தலைவி அவள்; பொன்னாலான நகைகள் அணிந்திருக்கிறாள். அந்த நகைகளுடனேயே நீராடுகிறாள். அந்த நீர்நிலையின் கரையில் உயரமான மருதமரம் இருக்கிறது. தலைவி அந்த மருத மரத்தில் ஏறி அதன் உச்சியிலிருந்து நீரில் பாய்ந்து நீராடினாள். அவள் அணிந்துள்ள நகைகள் ஒளி வீசுகின்றன.அப்படி அவள் பாயும்போது அவள் கூந்தல் பறக்கிறது. அது வானத்திலிருந்து கீழே இறங்கும் மயிலின் தோகை போன்று அழகாக இருந்தது எனத் தலைவன் வருணித்துக் கூறுகிறான்.
மகளிர் கூந்தலை, “மென்சீர்க் கலிமயிற் கலாவத் தன்ன இவள், ஒலிமென் கூந்தல்” என்று மயிலின் தோகைக்கு உவமையாகக் குறுந்தொகை [225]யும் காட்டுகிறது. இது புனலாட்டுப்பத்தின் நான்காம் பாடலாகும்.
”விசும்புஇழி தோகைச் சீர்போன் றிசினே
பசும்பொன் அவிரிழை பைய நிழற்ற
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்நறுங் கதுப்பே”
தலைவியுடன் அவன் புனலாடினான் எனக் கேள்விப்பட்ட அவனுடைய காதற்பரத்தை அவனிடம் ஊடல் கொண்டாள். பிற்பாடு புதுப்புனல் வந்தது. இப்பொழுது அவனுடன் அதில் ஆட ஆசை எழுந்தது. அவள் அவனை அழைக்கிறாள். “தலைவனே! நீ என்னுடன் புனலாட வருக; என் தோளைத் தெப்பமாகக் கருதி ஆடுவதற்கு உடன் வருக; இதோ இந்தப் புதுப்புனல் எப்படி வருகிறது தெரியுமா? விரைந்து செல்லக்கூடைய குதிரைகளை உடைய சோழ மன்னன் கிள்ளியின் யானைப் படை எப்படிப் பகைவரின் மதிலை அழிக்க விரைந்து செல்லுமோ அது போல இது வருகிறது. நீ ஆட வருக” என்றழைக்கிறாள்.
அகத்துறையில் நீராடும்போது கூட மன்னனது குதிரை மற்றும் யானையின் வீரத்தை உவமையாகக் காட்டும் புறச்செய்தியைத் தந்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது புனலாட்டுப்பத்தின் எட்டாவது பாடலாகும்.
”கதிர்இலை நெடுவேல் கடுமான் கிள்ளி
மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த
சிறைஅழி புதுப்புனல் ஆடுகம்
எம்மொடு கொண்மோஎம் தோள்புரை புணையே.
இவ்வாறு அகத்துறையில் நீர்விளையாட்டான புனலாடல் பெரும்பங்கு வகித்துள்ளது என்பதை இலக்கியம் வழி நாம் உணர முடிகிறது.