நடந்தாய் வாழி காவேரி

பானுமதி ந 

 

“தன்னுள்ளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுள்ளே விரைத்தெழுந்து அடங்குகின்றன தன்மைபோல்
நின் உள்ளே பிறந்து இறந்து நிற்கவும் திரிபவும்
நின் உள்ளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே”.

இது திருமழிசை ஆழ்வார் கடவுளைப் பார்த்து பாடிய பாடல்; இது மிகவும் பொருத்தமாக காவிரிக்கும் அமைகிறது.

நீரின்றி அமையாது இவ்வுலகு;. நதி இன்றி அமையாது நம் வாழ்க்கை அந்த நதியை போற்றி நால்வர் அடங்கிய ஒரு நண்பர் குழு பயணித்ததை நடந்தாய் வாழி காவேரி என்று அருமையான பயண நூலாக சிட்டி – ஜானகிராமன் வழங்கியிருக்கிறார்கள்.
.
நதியின் பயணம் என்பது ஒரு நாட்டின் நாகரீகத்தின் பயணம். அதன் புராதனங்களின்தொகுப்பு, அந்த மக்களின் பண்பாடு, அவர்களின் கலை இலக்கியத் தேர்ச்சி. நிலவளம் நீர் வளத்தைச் சார்ந்தது. வானிலிருந்து பெய்யும் மழையும், மலைகளில் பிறந்து சமவெளியில் தவழ்ந்து, குறுக்கிடும் பாறைகளைக் குடைந்து ,மண்ணைச் செழிப்பாக்கி, மானுடம் உயரும் கலைகளைப் பிறக்க வைத்து உன்னதம் தரும் நதிகளும் பொக்கிஷங்கள் தான்.
.
இந்தப் பயண நூல் ஒரு அழகான ராகமாலிகையாக அமைந்திருக்கிறது. அனேகமாக இதில் சொல்லப்படாத செய்திகள் இல்லை என்றே தோன்றுகிறது. அவள் உற்பத்தியாகும் இடம் ,அவள் சலசலக்கும் இடம், அவள் அமைதி காக்கும் இடம், அவள் துளிகளாக, நீர்த் திவிலைகளாக, ஆர்ப்பாட்ட மிக அருவியாக, அகண்ட காவிரியாக, அஞ்சி நடக்கும் அழகாக, கடலைச் சேரும் அன்பாக காட்டப்படுகிறாள். அதில் இணைந்து வருவது சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களில் காட்டப்படும் காவிரியின் வர்ணனை, அவளின் இரு கரைகளிலும் வாழ்ந்த முனிவர்கள், சாதுக்கள், ஞானிகள் வாக்கேயக்காரர்கள், பாடலாசிரியர்கள், இசை வல்லுநர்கள், ஓவியம், சிற்பம், நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபட்டவர்கள், அமைக்கப்பட்ட பெருங்கோயில்கள், சிறு கோயில்கள், ஆண்ட மன்னர்கள், வாழ்ந்த பொதுமக்கள், பசுமைபூர்த்தியாய் அலையாடும் கழனிகள், ஓடங்கள், பரிசல்கள் ,முகத்துவாரங்கள், கால்வாய்கள் ,வெண்மணல் படுகை ,பறவைகள் என்று வந்து கொண்டே இருக்கின்றது .இதில் எதை எடுத்துக் கொள்ள முடியும் எதை விட முடியும்? ஒரு இனிப்பு எந்தப் பகுதியில் இனிப்பாக இருக்கிறது என்று யார் சொல்வது? அனைத்துமே சுவைமிகுந்த சாறு நிறைந்த வரலாறு புதைந்த செய்திகள் .இதில் நண்பர்கள், அவர்களின் எதிர்பார்ப்புகள் ,ஆவலாதிகள், கோபதாபங்கள் சந்தோஷங்கள் அனைத்தும் நாம் அவர்களுடனேயே பயணிப்பது போல திறமையான எழுத்தில் வடிக்கப்பட்டிருக்கிறது. இதில் மொத்தம் பதினெட்டு அத்தியாயங்கள். அத்தனை இசை மயமாக, சொல் வளம் மிக்க எழுத்தாக இந்த இரட்டையர் இதைப் படைத்து இருக்கின்றனர். மிக அழகான ஓவியங்கள், புகைப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. இவர்கள் செல்லும் வழியில் எல்லாம் எதிர்பாராதவிதமாக நண்பர்களும் ஊர் வாசி களும் சந்தித்து உதவுவதை என்னவென்று சொல்வது? இப்படி ஒரு பயணத்தில் நம்மால் மனதால் தான் இணைய முடியும்
.
முதல் அத்தியாயம்- ஆவேசம்- நான் கம்பீரநாட்டை என்பேன். கம்பீரநாட்டையில் மல்லாரி வாசித்து, ஊர்வலம் வரும் தெய்வங்களின் அழகு மிளிர்கிறது. பூவர் சோலை மயிலாட புரிந்து குயில்கள் இசைபாட காமர் மாலை அருகு அசைய நடந்த காவிரியை, நடையிலேயே பார்க்கும் ஆசை இந்தக் குழுவினருக்கு. கோவலன் கண்ணகி நடந்த பாதையில் புகாரில் இருந்து மதுரை வரை நடக்க வேண்டும் என்பது இலக்கியத் தரமிக்க ஒரு தாகம். முதலில் கர்நாடகா பகுதிகளுக்குத்தான் செல்கிறர்கள்.

கொள்ளேகால்- அதிலிருந்து புறப்பட்டு சிவசமுத்திரம் வந்ததை இவர்கள் சொல்வதைக் கேளுங்கள். காமனைக் கண்ணால் எரித்த சிவபெருமானின் சினத்தின் உருவாக விளங்கி கோபக்கனல் தெறிக்கும் வகையில் நீர்த்திவலைகள் தெறிக்கும் அற்புதக் காட்சி சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி .காவிரி இரு கிளைகளாகப் பிரிந்து வளைந்து பார் சுக்கி, ககன சுக்கி என்று இரு பெரும் நீர்வீழ்ச்சிகளாகப் பிரிந்து பாய்ந்து மீண்டும் ஒன்று கூடுகிறாள். பிரம்மாண்ட பாறைகளுக்கிடையே குதித்து விளையாடி நுரைத்துப் பாய்ந்து குலுங்கச் சிரித்து விளையாடும் இவள் நாட்டை அன்றி வேறு யார்? துறவு மேற்கொள்வதற்கு, தனிமையில் ஆனந்தம் அடைவதற்கு ,பரோபகார சிந்தனை ஒரு தடையல்ல என்று ஒரு கதையில் சொன்ன தி.ஜா அத்தகைய ஒருவரை நேரிலும்சந்திக்கிறார்.

அத்தியாயம் 2 அமைதி- பூபாளம் என்று சொல்லலாமா? இங்கே நதி முகம், திருமுக்கூடல், கபினி, தலைக்காடு, ஸ்ரீரங்கப்பட்டினம், சோமநாதபுரம் அகஸ்தீஸ்வரர் ஆலயம், அழகிய மஞ்சள் மாலை என்று எதைச் சொல்ல எதை விட? சோமநாத புரத்தில் சென்னகேசவர் ஆலயம் இவர்களுடைய வர்ணனையில் நவரங்க மண்டபத்தோடு கண்முன்னே எழுகிறது. இதில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காலரா ஊசிக்கு இவர்கள் பயந்து காரில் பறந்தது நல்ல நகைச்சுவை.

அத்தியாயம் 3 அடக்கம் சாரமதி அடங்குவாள், அடக்குவாள் விஸ்வரூபமும் எடுப்பாள் .கிருஷ்ணராஜ சாகர் அப்படித்தான். காவேரி அணைக்குள் கட்டுப்படுகிறாள். மீண்டும் எழுகிறாள் பாய்ந்து பறக்கிறாள் .மின் சக்திக்கும் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் ஆன ஆதாரம்.மெர்க்காரா சென்ற அனுபவம் நமக்கு கிலி தரக்கூடியது. சித்தாப்பூரில் கடந்த அந்தச் சாலை! மலைச்சாலை …காப்பித் தோட்டங்களும், பலா மரங்களும், தேக்கு மரங்களும், மலைச்சரிவு வயல்களும், மலையிலும், மரத்திலும், வீட்டிலும் தேனீக்கள் மனிதனுக்காகத் தேன் சேர்க்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அழகும்.. இதை முற்றிலும் உணர அந்த சாலையில் பிறகு அவர்கள் சந்தித்த இடர்களையும் நூலில் படிக்க வேண்டும்.

அத்தியாயம்-4 -அழகு- ஹம்சத்வனி அழகல்லவா மலையில் சுழல்கின்ற பாதை.? யானைக்கூட்டம் கூட வரலாம். அவர்கள் பார்க்கும் இயற்கை காட்சி எவ்வளவு அற்புதமாக வந்திருக்கிறது!. ‘ஜன்னல் கண்ணாடி வழியாக நிலவு தெரிந்தது .இடையிடையே சிறுசிறு புட்களின் ஒலி கேட்டது. மண்ணெண்ணெய் விளக்கின் வெள்ளை சுடர் சுவற்றில் ஆடியது; நிழல்கள் ,காடு, மலை, தனிமை ,காட்டு விலங்கு பற்றிய உணர்வு இவர்களுக்கு ருட்யார்ட் கிப்ளிங்கின் கதைகள் நினைவுக்கு வந்ததாம். காவிரி ஒரு சுனையில் சிறியவளாகப் பிறக்கிறாள், அம்சத்தின் ஒலியைப் போல. டிவி குண்டப்பா அவர்கள் குடகை வர்ணித்து பாடிய பாடலையும் சேக்கிழாரையும் இங்கே காட்டுகிறார்கள் .அசல் குடகு மக்களைப் பார்ப்பதற்காகச் சென்றவர்கள் அழகான திருமணத்தையும் பார்க்கிறார்கள். நல்ல விருந்து சாப்பிட முடியாமல் இவர்களது சைவ உணவு முறை தடுத்து விடுகிறது. ஸ்ரீரங்கலா என்ற இடத்தில் காவிரியின் சுயரூபத்தைப் பார்க்கிறார்கள். அதுவரை வடக்கு நோக்கி வந்த நதியின் திருப்பம் கிழக்கை நோக்கி ஏற்படுகிறது .
அது தமிழகத்தில் பாயும் காவிரியை நினைவு படுத்துகிறது.

அத்தியாயம் 5 அணிநடை- இது காம்போதி தான். குளிர்ந்த காற்று, உயரமான பாலத்தின் கீழ் காவிரி சலசலத்து ராமநாதன் ஆலயத்தின் முதுகை தழுவிக் கொண்டு ஓடி வருகிறாள் .வெள்ளி நீர் கூட்டம், நதி, கோயில், இயற்கை வனப்பு, ஓசைகள் அற்ற பெருவெளி எல்லாம் சேர்ந்து முந்தைய காலம் ஒன்றிற்கு திரும்பிப் போன மயக்கத்தை கொடுக்கிறது. இந்த ராமநாதபுரம் கர்நாடகத்தில் உள்ளது இந்தியாவின் மொத்த கிராம அமைதியையும் இங்கே காணலாம் என்று இந்த இரட்டையர்கள் கூறுகிறார்கள் இப்பயணத்தில் இவர்கள் சந்திக்கும் ஒரு சிறுவன் ,அவன் குணாதிசயம் மிகவும் சுவாரஸ்யமானது.

அத்தியாயம் ஆறு ஆடு தாண்டும் பகாரி என்ற ஹிந்துஸ்தானி ராகம் நினைவில் வருகிறது ஆதிகாலத்து மலைவாழ் மக்களின் ராகம் இன்று வரை நிலவி வருகிறது அப்படித்தான் செட்டியாரைச் சந்திக்கிறார்கள். கந்தா மரம் என்ற மரத்திலிருந்து அருமையான நறுமணம் வருகிறது அது முல்லையா மல்லியா? இயற்கையின் நறுமணம், வேறென்ன சொல்ல? ஹன்னடு சக்கரா அது பத்து முறை சுற்றியதோ, 12 முறையோ ஆனால் பாறைகளில் தாவிக்குதித்து ஏறி இறங்கி தனிமையில் அனுபவித்திருக்கிறார்கள் .மேகதாட்டு இன்றும் நம்மை வாட்டி எடுக்கும் மேகதாட்டு. பாறைகள் சில இடங்களில் லேசான நீலம், லேசான சிகப்பு, சில இடங்களில் யானையின் உள்ளங்காலை மேல் நோக்கி நிறுத்தி வைத்தது போல வர்ணம், என்ன ஒரு வர்ணனை.!காவிரி இரு சுவர்களுக்கு இடையே ஆழத்தில் ஓடுகிறாள் அங்கே. ஆர்க்காவதி சங்கமம் அழகுக்கென்று என்று காவிரி தேர்ந்தெடுத்த இடமாம் மனிதர்களை விட ஒரு சீமைக்கு தனி அடையாளம் மாடுகள் தான் தருகின்றனவாம்..

அத்தியாயம் ஏழு-புகை தரும் புனல்-தோடி ஆரம்பத்தில் கனகா ,சுஜோதி என்ற நதிகளையும் பின்னர் ஹேமாவதி ,லட்சுமண தீர்த்தம்,கபினி ,சிம்சா ,லோக பாவனி ,சுவர்ணவதி போன்ற நதிகளையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு மைசூர் ராஜ்யத்தை செழிக்கச் செய்து விட்டு காவிரி தமிழ்நாட்டை நோக்கி விரைகிறாள் .அவளை ஒகேனக்கலில் பார்க்கும் ஆவலை சுமந்துகொண்டு இவர்கள் வருகிறார்கள். ஒரு சந்தைக்காட்சியை பென்னாகரத்தில் கண்டு மனம் மயங்குகிறார்கள் .வளம் குறிக்கும் பொருள் வகைகள், ஏக்கமும் வேட்கையும் துடிக்காத மகிழ்ச்சி நிறைந்த பேச்சுக்குரல் அவர்களுக்கு மனித சமுதாயத்தின் இன்னும் விட்டுவிடாத அந்த சந்தைக் கலாச்சாரத்தை மனக்கண்முன் கொண்டு வருகிறது. குற்றாலத்தின் அழகு இல்லை ஆனால் வனப்பு மிகுந்த அமைதியான ஒகேனக்கல் இவர்களைக் கவர்கிறது.நதி ஒடும் இடங்களிலெல்லாம் பல புராணக் கதைகள். பல இடங்களில் அகத்தியருக்கு ஆலயங்கள் .ஒவ்வொரு நதிக்கரையின் அருகிலும் ராமாயணம் சம்பந்தப்பட்ட புராணக் கதைகள். யாகம் செய்த முனிவர்கள் மற்ற மக்களும் இயற்கையை அனுபவிக்க வேண்டும் என்று ஒகேனக்கலில் ஆடி பதினெட்டிலும் ஐப்பசி முழு நிலவன்றும் குளித்தால் புண்ணியம் என்று மக்களை ஈர்த்து இருக்கிறார்கள். இங்கே பரிசலில் பயணித்ததும்,மன்னார்குடி மாமி பரிமாறிய நல் உணவும் கள்ளிச் சொட்டு காப்பியும் நம் நாவிலும் நீர் ஊறச் செய்கின்றன.

அத்தியாயம் எட்டு பொன்னி வளம். கல்யாணி இந்த ராக ஆலாபனையில் இன்னும் இன்னும் என்று கேட்கத் தோன்றிக்கொண்டே இருக்கும் அதைப்போல அதுவரை சென்ற இடங்களில் பார்க்கத் தவறிய இடங்களைப் பற்றி இவர்களுக்குள் சிறு வாக்குவாதங்கள் ,பேச்சுக்கள். ஸ்ரீரங்கத் திட்டு பார்க்காததில், பறவைகளைத் தவற விட்டதில், ஒருவருக்கு மனக்குறை. சேர்வராயன் மலைகளில் மஞ்சவாடி கணவாயில் உற்பத்தியாகும் சிற்றாறு திருமணிமுத்தாறு. இது சேலத்தில் பாய்கிறது. இந்தத் திருமணி முத்தாறில் கோதுமை வடிவத்தில் அதை விட ஆறு மடங்கு அளவிலான பெரிய முத்து கிடைத்திருக்கிறது .அதை சிவன் கோயில் அம்மனுக்கு அணியாகத் தந்திருப்பதாக புராணக் கதை நிலவுகிறது. இவர்கள் சென்னைக்குத் திரும்பி நண்பர் சீனிவாசன் நலமாக இருப்பதை பார்த்ததும் நிம்மதி அடைகிறார்கள் கல்யாணி மங்கல ராகம் அல்லவா?

அத்தியாயம் 9 புதுப் புகார் -அசாவேரி ‘ஸாரி வெதலின இ காவேரி ஜொ டரே’ இந்த அருமையான அசாவேரி நிச்சயமாக தி ஜா தான் பாடி இருக்கக்கூடும். காவிரியின் வனப்பை அழகை, வர்ணனை செய்து, அவள் பஞ்சநதீஸ்வரரைப் பார்க்க வரும் அழகை, தியாகராஜ சுவாமிகள் பாடவேண்டும், அதை இவர்களின் எழுத்தில் தேனாய் பருகவேண்டும். காவிரிப்பூம்பட்டினத்தில் சாயா வனத்தில், பச்சையும் வனப்புமாக, கண்ணுக்கு உகந்த காட்டின் அடர்த்தியாக இவர்கள் நம்மை புகார் துறைமுகத்திற்கு கைபிடித்து அழைத்துச் செல்கிறார்கள். கடற்கரை ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள கண்ணகி சிலையைப் பார்த்து அதை ஒழுங்காக நல்ல ஸ்தபதியை வைத்து செய்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறார்கள். சம்பந்தர் பாடிய பாடல் மிகப் பொருத்தமாக இங்கே கையாளப்படுகிறது . கடற்கரையும் மீனவர்களின் உடற்கட்டும் அந்த அழகிய தமிழ் பேச்சும் கலாசாகரத்தை மிகவும் கவர்ந்து விட அவர் வரைந்து தள்ளுகிறார்.. இவர்கள் நினைவில் தமிழக வரலாறு. அரசர்கள், கவிஞர்கள் ,பாடலாசிரியர்கள் ,ஞானிகள், நாயன்மார்கள் ,ஆழ்வார்கள் ,ஆதீனங்கள் ,நூல் நிலையங்கள் எல்லாம் ஒருங்கே எழுந்து நம்மையும் சுற்றி வளைக்கின்றன. புத்த விகாரத்தையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை.. மாயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை மீது தீக்ஷிதர் பாடிய நவாவரண கீர்த்தனை, வள்ளலார் கோயில் ,கோபால கிருஷ்ண பாரதியின் பாடல், மீனவப் பெண்ணை பார்த்து கண்ணகியை நினைவு கூறல்; மணிமேகலை மணிபல்லவத் தீவுக்குச் சென்று ஐந்தாண்டுகள் கழித்து திரும்புவதற்குள் புகார் நகரம் கடலில் மூழ்கி விட்டதால் இந்த அத்தியாயத்தை கடக்கவே மனம் வரவில்லை
.
அத்தியாயம் 10 கொள்ளிடம் தாண்டி -வசந்தா. வரலாறு சம அந்தஸ்துள்ள இருவரையும் நினைவு கூர்ந்தாலும் நம் மனம் ஒருவர் சற்று குறைவாக நினைவில் வருகிறாரோ என்று அயர்கிறது. ஆம் ராஜராஜனை ராஜாதி ராஜனாகக் கொண்டாடுகிறோம். கங்கைகொண்ட சோழபுரம் கட்டிய ராஜேந்திர சோழன் மறதி அடுக்குகளில் போய் ஒளிந்து கொண்டு விட்டான். செயற்கையாக ஏரியை உருவாக்கிய மாபெரும் மன்னன். கொள்ளிடத்தின் குறுக்கே கீழணை கட்டப்பட்டபோது இந்த கோவிலின் மதிலை உடைத்து கற்களை எடுத்து அணையை அமைத்திருக்கிறார்கள். வரலாற்றில் நமக்கு இருக்கும் ஆர்வம் அவ்வளவுதான்! இந்தக் கட்டுரையை ஊன்றிப் படிக்க வேண்டும் :ஓரிடத்தில் சொல்கிறார்கள் தஞ்சை பெரிய கோவில் ஆண் அம்சத்துடன் இருந்தால், கங்கை கொண்ட சோழபுரம் பெண் அம்சத்தோடு விளங்குகிறது. உட்புற அமைப்பு அத்தனை எழிலாக அமைந்துள்ளது.

அத்தியாயம் 11 இசைவெள்ளம் -சண்முகப்பிரியா. நமக்கெல்லாம் கஞ்சனூர் நெசவைப் பற்றி தெரியுமா? ஹரதத்த சிவாச்சாரியார் ,திருவிசைநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், விகடகவி ராமஸ்வாமி சாஸ்திரி ,சதாசிவ பிரம்மேந்திரர் இவர்களையெல்லாம் பற்றிப் படிக்கும்போது புல்லரிக்கிறது. சதாசிவ பிரம்மேந்திரர் பற்றி புதுக்கோட்டையில் ஒரு வரலாறு பேசப்படுகிறது. சமஸ்தானம் வறட்சிக்கு உட்பட்ட போது அன்றைய அரசர் இவரை பக்தியுடன் அணுகி பஞ்சத்தைப் போக்க வழி கேட்கிறார். மலை வரை கோயிலான திருக்கோகர்ணத்திற்கு சுவாமிகள் எழுந்தருளுகிறார். தூங்கா விளக்காக பிரகதாம்பாள் சன்னதியில் ஒன்றை ஏற்றச் சொல்கிறார்.. பஞ்சம் நீங்கி சுபிக்ஷம் வருகிறது. கோவிந்த தீக்ஷதர் மகாமக குளத்தைச் சுற்றி 16 அழகிய மண்டபங்கள் கட்டி உள்ள செய்தி, நாகேஸ்வரன் கோயில் ,உமையாள்புரம், திருவையாறு ,திருப்பழனம் ,வேங்கட மகி யாரை சொல்ல, யாரை விட?

அத்தியாயம் 12 கழனி நாடு-அமிர்தவர்ஷினி. கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணை நம்முடைய தமிழர்களின் அபாரமான திறமைக்கு பெரிய எடுத்துக்காட்டு. கண்ணம்பாடி அணையும் மேட்டூர் அணையும் தடுத்து நிறுத்தி பின்னர் அனுமதிக்கும் அளவை மட்டும் கொண்டு ஓடிவரும் காவேரியின் தோற்றத்தை இப்போது காண்கையில் கரிகாலன் கட்டிய போது எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வி எழாமல் இருக்க வாய்ப்பே இல்லை. திருச்சியில் அகண்ட காவிரியாகப் பாய்ந்து ஸ்ரீரங்கத்தை நெருங்கும் போது தன்னிடம் இருந்து பிரிந்த கொள்ளிடத்துடன் காவிரி ஸ்ரீரங்கத்தைத் தாண்டி மீண்டும் இணைகிறாள். இப்பகுதியில் காவிரி நீர்ப் பாசனத்திற்காக எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ரெகுலேட்டர் வைப்பது, வெண்ணாறு, வெட்டாறு, தண்ணீர் வடிகால் அமைப்புகள் எல்லாவற்றையும் எழுதியிருக்கிறார்கள்…. திரு ராஜகோபால் இப்பகுதியில் விவரிக்கும் காவிரி வெள்ளப்பெருக்கு தத்துரூபமாக கண்முன்னே எழுகிறது.

அத்தியாயம் 13 ஆர் இரண்டும்- நீலாம்பரி. சங்க நூல்களிலும் சிலப்பதிகாரத்திலும் காவிரியைப் பற்றி காணப்படும் குறிப்புகளை அலசி ஆராய்கிறார் ஒரு நண்பர். திருச்சி மலைக்கோட்டை, அதன் மேலே ஏறிப் பார்த்த காவிரியின் அழகு, ஊரின் அமைப்பு, சமயபுரம் மாரியம்மன் கோயில் அற்புதம் ,மாத்ரு பூதேஸ்வரர் கோயில், அங்கே சந்தித்த சடகோபன், அவரிடம் இருந்த மணிஐயர் ரெக்கார்டுகள், அந்த சங்கீத ஞானம், திருப்பராய்த்துறை விஜயம் ,அங்கே நடைபெறும் தொழில், மாணவர் ஒழுக்கம் ,அமைதி, ஸ்ரீரங்கத்து கோயில் சிறப்பு, திருவானைக்காவில் உருகி உருகி இவர்கள் எழுதிய விதம் அனைத்தும் நம்மை அசைத்து விடுகிறது. நம்மையும் அறியாமல் ஒரு ஆழ் மயக்கத்திற்கு சென்று விடுகிறோம்.

அத்தியாயம் 14 அகண்டம்- சங்கராபரணம். பெருக மணியைத் தாண்டி இவர்கள் சந்திக்கும் அகண்ட காவிரி,. முக்கொம்பு திட்டு, அதன் வனப்பு, மீண்டும் காண கலாதரன் பற்றிய பேச்சு, கோபாலகிருஷ்ண பாரதி சோக ரசமான முகாரியில், கோப ரசத்தை ஏற்றிப் பாடிய பாடல், அலை அலையாக அதைப் பாடிய அழகு, மத்யம கால நடையில் ரத்னாசல பாடல். கடலைக் காண இயலாமல் அமராவதி காவிரி உடனேயே கலந்துவிடுகிறதாம்!
.

அத்தியாயம் 15 காணிக்கை- தன்யாசி. அமராவதி காவிரி சங்கமம் இயற்கையாகவே அமைந்த எல்லைப் பிரதேசம் கரூர். சேரராட்சியில் ஒரு முக்கிய நிலையமாக விளங்கிய ஊர். தென்னகத்தில் எங்கெங்கோ தொலைவில் எல்லாம் குழுமியும், தொடர்ச்சியாகவும், தனிப்பட்டும் நின்று காவல் புரியும் மலைகளுக்கிடையே உற்பத்தியாகும் நதிகளில் பல காவிரியைத் தேடியே விரைந்து வரும் ரகசியத்தை அமராவதி இவர்களிடம் சொன்னாளாம். நெரூராரின் சன்னதியை இவர்கள் வர்ணித்த விதம் நெகிழ வைக்கிறது. இவர்களின் இசை ஆர்வம், அகஸ்தியரை சங்கீத யோகிகளுக்கு ஒரு படி கீழே காட்டப் பார்க்கிறது. கொடுமுடி என்றதும் ஒரு கம்பீர கந்தர்வ குரல் நம் மனச் செவியில் ஒலிக்கும் . அந்த ஊரில் எது அழகு -கோவிலா, காவேரியா, பரிசல்களா?. ஒரு இடம் சிந்திக்க வைக்கிறது- நம்முடைய ரிஷிகள் ஆராய்ச்சிக்காரர்களாக, விஞ்ஞானிகளாக, காடழித்து நாடாக்கியவர்களாக, புவியியல் அறிஞர்களாக, அறிவே தெய்வம் என்று நினைத்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்லி சான்றையும் காட்டுகிறார்கள் இவர்கள். இயற்கைப் பொருளுக்கு மாற்றாக செயற்கை இரட்டை காண முனைந்தவர் விசுவாமித்திரர் ;.அகஸ்தியர் புது நிலம் காண முனைந்தவர். நாம் நம்முடைய வரலாற்றை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்
.
அத்தியாயம் 16 நிறைவு- மத்தியமாவதி. ஹரித்வாரில் சமவெளியில் இறங்கிய பிறகு, கட் முக்தேஸ்வர் போன்ற இடங்களில் கங்கையைப் பார்த்தால் புகளூர் பாலத்திலிருந்து காவிரியை பார்ப்பது போல் இருக்குமாம். பவானியில் சங்கமேஸ்வரர் கோயில், ஜமுக்காளம் இவர்களை ஈர்த்து வசப்படுத்துகிறது.. ஆனால் பாவம், கார் ரிப்பேர் ஆனதால் பஸ்ஸில் மேட்டூர் போய் வருகிறார்கள். கணவாய் போன்ற இடைவெளியில் மேட்டூர் அணை அமைக்கப்பட்டிருக்கிறது. மேட்டூரிலிருந்து பவானி திரும்பியவர்கள் சும்மா இருக்கலாம் அல்லவா? ஒரு சினிமா பார்ப்பதற்குப் போய்விட்டு தலைவலியுடன் இடைவேளை நேரத்தில் விடுதிக்கு திரும்பி விடுகிறார்கள்.. மீண்டும் ஒரு அழகான இலக்கிய சர்ச்சை- சுடர் இலை நெடு வேல் நெடுவேள் குன்றம் வேறு எங்கு இருக்கிறது என்று கேட்டது ஜானகிராமனாகத்தான் இருக்கும். ஆனால் ஆராய்ச்சி நண்பர் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டு திருச்செங்கோடு அல்ல சுருளிமலை ஆகத்தான் இருக்கும் என்று தன் தரப்பை நிறுவுகிறார்.

அத்தியாயம் 17 ஆலாபனை -ஹிந்தோளம். ஜோடர்பாளையம் போகிறார்கள் பனை மரத்தை வெட்டி குறுக்கே போடப்பட்ட பாதை .இவர்களுக்கு கூழாங்கல் பொறுக்கும் ஆசை வந்துவிட்டது. மிக மிக நயமான வடிவு கொண்ட கற்கள் . பொறுக்கிய பிறகு அனைத்தையும் ஆற்றிலேயே போட்டுவிடுகிறார்கள். கரும்பு பூக்களின் வெண் பட்டுக்கொண்டைகளைப் பார்த்துக்கொண்டே, சிலிர்த்துக்கொண்டே ஒருபயணம் திருஈங்கோய்மலை மிக அருமையான வர்ணனை. அகத்தியர் ஈயாக வடிவெடுத்து சிவனை சுற்றிப் பாடி பரவசப்பட்ட அருமையான இடம்.

அத்தியாயம் 18 பல்லவி -ஆனந்தபைரவி. ஆற்றுக்கு அக்கரையில் தொலைவில் ரத்தனகிரி, இடது பக்கம் அடிவானத்தில் திருச்சி மலைக்கோட்டை, வலது பக்கத்தில் கொல்லி மலைக் குவியல்கள்,. வைரக் கற்கள் பதித்த ஆபரணம் போல் காலை இளவெயிலில் காவேரி ஜொலிக்கிறாள். குணசீலத்தைத் தவிர்த்து விடுகிறார்கள். வரகூரின் கிருஷ்ண பக்தியை அபாரமாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு கிளை நதியோடும் போய் பார்க்க வேண்டுமென்றால் நாயன்மாராக, ஆழ்வாராக,, பண்டாரமாக அல்லது ஹிப்பியாகவாவது இருக்க வேண்டுமாம்!. இங்கே ஒரு அருமையான ஓடப் பாடல் ஒரு பாட்டி பாடுகிறார் எனக்கு மரப்பசு நாவலில் கல்யாணக் கச்சேரி செய்த கோபாலி நினைவிற்கு வந்து விட்டார்.

சென்னை வரும்காவிரியைப் பற்றியும் காவிரி நீர் பங்கீடு பற்றியும் இந்த நூலுக்காக தகவல்கள் எடுத்துக்கொண்ட நூல்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள்.

நதியின் சிறப்பை ,அதன்வழி நடந்ததை சொல்லும் நூலில், வரலாறும் இசை யும் , தமிழும், நம்முடனே பயணிக்கின்றன.. நினைந்து நினைந்து உருகி உருகி உடன் பயணிக்க வேண்டிய அற்புத நூல்.

தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர் கன்னடத்து குடகு மலை கனி வயிற்றில் கருவாகி, தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி, ஏர் வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி எனும் பெயரால், நீண்ட வரலாறாய், வண்ணம் பாடி ஒரு வளர் தென்றல் தாலாட்டு, கண்ணம்பாடி அணை கடந்து, ஆடு தாண்டும் காவிரிப் பேர் பெற்று, அகண்ட காவிரியாய் பின் நடந்து, கல்லணையில், கொள்ளிடத்தில், காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டை தாயாகிக் காப்பவள். அவள் கங்கையில் புனிதமாய காவிரி அல்லவா?

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.