நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது- அசோகமித்திரன் சிறுகதை குறித்து

 அஜய் ஆர்

ami

PDF

ஒரு ஓவரின் இறுதி இரு பந்துகளில் அடுத்தடுத்து இருவரை ஆட்டமிழக்கச் செய்கிறான் ஒரு போலர். இன்னொரு போலர் வீசும் அடுத்த ஓவர் முடித்த பின் ‘ஹாட்ரிக்’ செய்யும் சாத்தியத்துடன் முதல் போலர் மீண்டும் பந்து வீசத் தயாராகிறான். எதிரணிக்கும் அதனுடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் உவப்பாக இருக்க முடியாத ‘ஹாட்ரிக்கை’ அவன் அடையக் கூடாது என்று கதைசொல்லி ஏன் எண்ணுகிறான்?

மனக்கோணல் பற்றிய இந்தச் சிறிய கதையில் கணிசமானப் பகுதியை அதன் புறச்சூழலைக் கட்டமைப்பதில் செலவிடுகிறார் அசோகமித்திரன். மாலைநேரத்தில் நூலகத்துக்குச் செல்லும் வழியில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை கவனிப்பது கதைசொல்லியின் வழக்கம். இப்படி எந்த ஆரவாரமுமற்ற காட்சியோடு ஆரம்பிக்கும் கதையில் ஒரு மாலை அவன் கவனிக்க நேர்வதுதான் இந்த ஆட்டமும். ‘நான் உத்தியோகமின்றி இருந்த பல தருணங்களில் அதுவம் ஒன்று’ என்று அந்த தினத்தைப் பற்றி அவன் சொல்லும் ஒரு வரியிலிருந்தே, கதைசொல்லி தொடர்ந்து வேலை தேடிக் கொண்டிருப்பவன், ஆனால் ஏதோ காரணத்தால் அடிக்கடி வேலையை இழப்பவன் என்று அவன் பின்னணி குறித்து யூகிக்க முடிகிறது (அவனுடைய குணாதிசயம் இதற்கு காரணமாக இருக்கலாம்) . இரண்டு மணி நேரம் தேடி ஒரு நூலை தேர்வு செய்பவன் என்பது அவன் வாசிப்பு குறித்து நாம் யோசிக்கச் செய்கிறது. பள்ளி மைதானத்தைச் சுற்றியுள்ள வேலியில் ஒரு சில இடங்கள் மட்டும் – மாணவர்கள் குறுக்கு வழியில் வெளியேற/ நுழைய – அகலப்படுத்தப்பட்டிருப்பது, கதைசொல்லி பள்ளி நாட்களில் வாயில் வழியாகச் செல்லாமல் சுவர் ஏறிக் குதித்துச் சென்றது குறித்த நினைவுகள் என்றுஅனைவருக்கும் பொதுவான பள்ளி நிகழ்வுகளை மீட்டெடுக்கின்றது.

இவற்றைத் தொடர்ந்து ஆட்டக்காரர்களைப் பற்றிய கதைசொல்லியின் அவதானிப்புக்கள் கதையின் மையத்திற்கு அருகில் வாசகனை இட்டுச் செல்கின்றன. அந்த போலர் அடுத்தடுத்து இரண்டு ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்கிறான். பிறகு அவன் மீண்டும் பந்து வீசத் துவங்கும் முன் அவனும் அணியின் தலைவனும் மற்றவர்களை எந்த இடங்களில் நிறுத்த வேண்டும் என்று நேரமெடுத்துக் கொண்டு முடிவுசெய்கிறார்கள். ஹாட்ரிக் என்பது அரிய நிகழ்வல்லவா. இப்போது தான் கதைசொல்லி போலரின் தோல்வியை விரும்புகிறான். வாசகன் இப்போது கதையின் மையத்தை அடைந்து விட்டான்.

கதைசொல்லி விரும்பியதைப் போலவே அந்த பந்தில் விக்கெட் விழுவதில்லை. ஆனால் இப்போது கதைசொல்லி போலருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறான். தொடர்ந்து ஆட்டத்தைப் பார்க்க விரும்பாமல் நூலகத்திற்குச் செல்கிறான். கதைசொல்லி தன் வெறுப்பைக் கடந்து வந்து விட்டானா அல்லது தான் நினைத்தது நடந்து விட்டது என்ற வெற்றி உருவாக்கும் பெருந்தன்மையில்தான் அவ்வாறு எண்ணுகிறானா என்ற கேள்விகள் எழும் அதே நேரம் கதை அதைப் பற்றியதல்ல என்ற எண்ணமும் ஏற்படுகிறது. கதைசொல்லி தான் சிக்கிய சுழலிலிருந்து தன்னை மீட்டெடுக்கிறான் என்பதாக கதையின் முடிவைப் நாம் புரிந்து கொண்டாலும், அவனிடம் போலரின் கொண்டாட்டம் (அல்லது பிறிதொன்று) ஏற்படுத்தும் மனக் கோணலிற்கான உண்மையான காரணம் எளிதில் புலப்படுவதில்லை.

வேறெங்கோ சென்றுகொண்டிருக்கும்போது தனக்கு நேரடியாக சம்பந்தமில்லாத ஆட்டத்தை கவனிக்க ஆரம்பித்த – பொதுவாக கிரிக்கெட் என்றில்லாமல் விளையாட்டு மேல் கதைசொல்லிக்கு பெரிய விருப்பு இல்லாத நிலையில் (புகழ் பெற்ற ஆட்டக்கார்களை தெரிந்து வைத்திருப்பதைத் தவிர) – ‘எளிய ஓடிப் பிடிப்பது தவிர வேறு விளையாட்டு நான் ஆடினதாக ஞாபகம் இல்லை’ என்று அவன் சொல்வதிலிருந்து இதை புரிந்து கொள்ள முடிகிறது – மிகக் குறைவான நேரத்திற்கே என்றாலும், முகம் கூட சரியாக பார்க்க முடியாத ஆட்டக்காரனின் தோல்வியை அவன் விரும்பும் அளவிற்கு அவனுள் வெறுப்பு குடிகொண்டு, அதன் கசப்பினால் அவன் தன்னையே ஏன் சுயவதை செய்து கொள்ள வேண்டும்.

‘First impression is the best impression’ என்று அடிக்கடி சொல்லப்படுவதற்கேற்ப விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்த குறைந்த நேரத்திலேயே அந்த போலரிடம் கதைசொல்லிக்கு – அவன் யாரென்று தெரியாமலேயே – மனவிலக்கு ஏற்பட்டுவிடுகிறது. முதல் இரு விக்கட்டை வீழ்த்தியவுடன் போலரின் உற்சாகமான – மற்ற பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கக்கூடிய – கொண்டாட்டம் கதைசொல்லிக்கு மட்டும் இவ்வளவு பெரிய அசூயையையும், மன விலக்கத்தையும் ஏன் உருவாக்க வேண்டும். கதைசொல்லியும் இதை உணர்ந்தே இருக்கிறான். அந்த போலரால் இப்படி சம்பந்தமேயில்லாத ஒருவன் தன் தோல்வியை விரும்புவான் என்று கற்பனைகூட செய்ய முடியாது.

ஆனால் கதைசொல்லியை பொறாமைக்காரனாகவோ மற்றவர்கள் மகிழ்ச்சியை தாள முடியாத மனப் பிழற்சி கொண்டவனாகவோ அசோகமித்திரன் சித்தரிப்பதில்லை. தான் சுட்ட விரும்புவதை முன்வைக்க அத்தகைய வழமையான பாத்திர வார்ப்பு அவருக்குத் தேவைப்படுவதும் இல்லை. ஒரு சில கணங்கள் மட்டும் தன் அகத்தில் இருள் குடிகொள்ளும் சராசரி ஆசாமி தான் நம் கதைசொல்லி. அப்படி அவன் இருப்பதாலேயே அவன் கொள்ளும் உணர்வுகள் அதிக கூர்மை கொள்வதோடு, அவ்வுணர்வுகளுக்கான உந்துதல் புரியாவிட்டாலும், நம்மை அவற்றுடன் அடையாளப்படுத்திக் கொண்டு அணுக்கமாகவும் உணர முடிவதோடு, கதைசொல்லி கதையைப் படிக்கும் வாசகர்களில் ஒருவராகவும் இருக்கலாம் என்ற சுயபரிசோதனையை செய்யவும் தூண்டுகிறது. ஏளனத்தை, அகம்பாவத்தை வெளிக்காட்டுபவை என ஒருவரின் புன்சிரிப்பை, உடலசைவை இன்னொருவர் (தவறாக) புரிந்து கொண்டு ,முதாலமவர் மீது காழ்ப்பு கொண்டு அதை விருட்சமாக வளர்க்கும் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.

அசோகமித்திரனின் பிற சிறுகதைகள் குறித்து- 

இரு திருமணங்கள்

இரண்டு விரல் தட்டச்சு

இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்

oOo

ஒளிப்பட உதவி – Vaidheeswaran Voices…

4 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.