வீமன் பூட்டு

தி. வேல்முருகன்

(பிடிஎப்)

– எலேய் கொல்லைக்கு தண்ணி வைக்கனும்டா! வாப்பா

– நான் வரல மூனு நாளா ராத்திரில இழுத்துட்டு அலையற. எவனாவது தண்ணீ வைக்க நாம காவ இருக்கனுமா? நான் வரல

– இங்க இருந்து மயிரா புடுங்கப் போற?,

என்ற சத்தம் வீட்டு உள்ளிருந்து வந்ததும் மாமா திரும்ப,

– வாச்சோறுப்பா வாப்பா பயிர்வோ காயிறத பார்க்க முடியல.

நான் கொடியில் இருந்து ஒரு தோரணம் போல் வளைந்தும் நெளிந்தும் தெரிந்த சால்வைத் துண்டை எடுத்தேன். முழுவதும் உல்லன். குளிருக்கு கதகதப்பாக இருக்கும்.

– லைட்டை எடுத்துக்கப்பா

எடுத்து கொண்டு வெளியில் வந்தேன், மாமா லாந்தரில் எண்ணெய் பார்த்து பத்த வைத்ததும் குப்பென்று பத்தி முழுவதும் எரிந்ததைச் சீராக்கி மினுக்கும் அளவு வைத்தார் லாந்தரை என் கையில் கொடுத்து விட்டு முதலில் அரையடி இலை அகலம் உள்ள கட்டகுட்டு மம்டியை வெளியில் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு மொட்டைக்கத்தியை இடுப்பில் சொருகி விட்டு ஏலத்தில் எடுத்த கருத்த, இரண்டு புறமும் சிவப்பு வெள்ளையில் கோடு போட்ட மம்பட்டியான் போர்வையை தோளில் சுற்றிக் கொண்டார். வெள்ளைத் துண்டை எடுத்து காதை மறைத்துக் கட்டி இரண்டு சீனி சாக்கை எடுத்து தலையில் வைத்தார். சர்வ அலங்காரம் முடிந்தும் ஏதோ குறை தெரிந்தது எனக்கு.

– காசு வச்சிருக்கியாடா?

– இல்லை மாமா டீ குடிக்கதான் இருக்கு

– அப்பாட்ட கேளேன்?

– …

– வாணாம்டா வா போவும் பார்த்துக்கலாம்

கையில் தனது கழியை எடுத்து கொண்டார். அலங்காரம் பூரணமாகி நகர்வலம் தொடங்கியது. ரயிலடி வந்ததும் சண்முகம் கடையில் நின்று, தன் தலையிலிருந்து சாக்கை கீழே இறக்கி,

– அண்ணே இரண்டு காளி சுருட்டும் வத்திப்புட்டியும் குடுண்ண

சுருட்டைப் பத்த வைத்து கொண்டு,

– ஏன்ணன் தண்ணீ பாக்க யாராவது போனாங்களா?

– ஏய் சாமி நீனும்தான் பத்து நாளா போற, வாய்க்கால்ல தண்ணி சுருண்டு போச்சு. இன்னைக்கும் யாரையும் காணும். போயி வாய்க்கால பாக்காம கொல்லை வரைக்கும் போயி வாங்கடா

மாமா ஒன்றும் சொல்லவில்லை. மேலும் இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு சுருட்டை மண்ணில் தேய்த்து அணைத்து பேப்பரில் சுற்றி முடிந்து மடியில் வைத்துக் கொண்டார். டிங் டிங் டிங் என்று ராகத்தோடு பத்து மணி வண்டிக்கு மணி அடித்து முடிந்ததும் ரயில்வே கேட் சாத்த தொடங்கினர். கேட் கீழே இறங்குவதைப் பார்த்து தூரத்தில் பஸ் மிக சத்தமாக ஹாரன் அடித்துக் கொண்டு வந்தது. கேட் பாதியிலே நின்றது.

– ஏய் வாடா சாத்தறதுக்குள்ள அந்தாண்ட போயிடும்,

என்று மாமா சாக்கை எடுத்துக் கொண்டு வேகமாக நடந்தார் நாங்கள் கேட்டைத் தாண்டியதும் எதிர்ப்புறமிருந்து கடலூர் செல்லும் இந்துமதி பஸ் எங்களைக் கடந்து சென்றவுடன் கேட் இறங்க ஆரம்பித்தது. சாலைக்கரை மாரியம்மனின் சரவிளக்கு வெளிச்சம். கண்ணில் தெரிந்ததை மனதில் வணங்கி மேற்கே திரும்பினேன். சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுர உச்சியிலும் வெள்ளை விளக்கொளி தெரிந்தது. வணங்கிக் கொண்டு பார்வையைத் தாழ்த்தினேன். கொல்லையின் இரண்டு குண்டுக்கு மேற்கே இருந்த கூந்தல் பனையும் பஞ்சு மரமும் சுத்தமாகத் தெரியவில்லை. முன்னிரவு நிலா கீழே இறங்க ஆரம்பித்திருந்தது. மார்கழி மாத கர்ப்ப ஓட்ட மாசி அதை மறைத்து மறைத்துச் சென்றது.

– ஏன் மாமா கீரிப்பள்ளம் எவ்வளவு தூரம் இருக்கும்?

– கேட்டுல இருந்து சரியா இரண்டு மைலு நடைய எட்டி போட்டினா ஒரு மணி நேரத்தில போயிடுலாம்

– நீ போவ போவ… இந்த கிழவனுவ இங்க ரோட்டோரம் பார்த்து வாங்காம எங்க போயி வாங்கி இருக்கானுவ பாரு

– ஏய் பழிக்காதடா தெற்கு வாய்க்கால் நிலமெல்லாம் இரண்டு போகம் விளைஞ்சது, இப்பதான் ஒரு போகம் சம்பாவுக்கே வழியக் காணும்

– நீ ஏதாவது பழைய கதைய சொல்லாத மாமா

– ஆமாண்டா நா சொல்றது உனக்கு பழைய கததான் நம்மகிட்ட வரதராசு கொல்லை இருந்தது ஞாபகம் இருக்கா உனக்கு?

– ஆமாம் அதுக்கென்ன மாமா?

– அதுக்கும் கீழ பூர்வீக நிலம் காகாணி இருந்தது தெரியுமா?

– தெரியும் தெரியும் உனக்கு சோறு எடுத்துட்டு சோறுமோடு களம் வழியா வந்து வாய்க்காமனையில வாய்க்கால்ல தண்ணி அதிகமா இருக்குன்னு திரும்பி சைமன் கட்டைக்கு நேர இறங்கி ஏற முடியாம சோத்த வாளியோடு தண்ணியில போட்டுட்டன் மானம்படியார்தான் வாளிய எடுத்துக் கொடுத்தார். அழுத என்னப் பாத்து, போயி சோறு கொட்டிப்புடுச்சுன்னு சொல்றா, வரப்ப பார்த்துக்கிட்டு -பசியோட இருப்பாங்கன்னு தெருத்துனாரு

– இன்னும் ஞாபகம் வச்சிருக்கியாடா?

– நல்லா ஞாபகம் இருக்கு. ஏன் மாமா, சோறுமோடு களம் எவ்வளவு தூரம் கீரிப்பள்ளத்துலேருந்து?

– ஒரு மைலு. முதல்லாம் களம் சோறுமோட்டுல தான் வைக்கறது பூரா களிமண் தர சோத்துல ஒரு கல்லு இருக்காது பாழாப்போன எறாக்குட்டை வந்துதான் ரோட்டுல களத்தை வச்சி கல்லத் திங்கறோம்

– யாரு மாமா எறாக்குட்டைக்கு நிலம் கொடுத்தது முதல்ல?

– நிறையா நிலம் வச்சிருந்தவங்க பாக்க முடியாம கொடுத்தாங்க இடையில் ஒரு காணி., அரை காணி வச்சிருந்தவனும் வேற வழியில்லாம காசுக்கு ஆசைப்பட்டு கொடுத்துட்டானுவ. வாங்குனவனுக்கு வருசம் ஆனா லோனும் மானியமும் தள்ளுபடியும் அரசாங்கம் கொடுத்ததும் அவன் பயிர் வளர்ற மாதிரி அவனுவ வளந்துட்டான். மோட்டு வாய்க்காலுக்கு தெக்க வெள்ளாத்து ஆரம்பிச்சு அஞ்சே வருசம் வாய்க்கா மானை திரும்பி அஞ்சு கண்ணு மதுவு வர வந்துட்டான். யாரு அவன கேப்பா? இங்கே இருக்குற ஏழை பாழைவளுக்கு வேல குடுத்ததும் அவனவன் பொழப்பப் பார்க்குறான். இது மட்டுமா? ரெண்டு மூணு மீட்டர் பள்ளம் நோண்டி ஆத்துலேருந்து உப்பு தண்ணீ ஏத்தி இறா வளக்கறான் கீழே நீரோட்டம் எல்லாம் உப்பு தண்ணீ ஏறி நிலம் எல்லாம் சவுராவி அவன்ட்டையே எல்லாரும் விக்கிறானுவ.

– யாம் மாமா, அரசாங்கம் தான பர்மிசன் தருது?

– அரசாங்கம் மயிரு தருது. இங்க இருக்கற படிச்சவன்லாம் என்னடா பண்றிங்க? காலம் காலமாய் பொழைச்சவன்லாம் வழியில்லாம கேரளா போறானுவ. என்ன ஆவுமோ போவப் போவ…

– சரி சரி பேச்சை வுடு நீ கோவமா இருக்க

– இதுக்குத்தான் மனசு கேக்காம தண்ணியப் போட்டு கிடந்துறன்

– சரி கட்டமதுவு போவுமா இல்ல இப்படியே இறங்கி சிவலோகம் கொல்லை வழியா நேர் வரப்புல போவுமா

– சித்த இரு

தலையில் சாக்க இறக்கிவிட்டு மடியிலிருந்து சுருட்டைப் பத்த வைத்துக் கொண்டு சரிவில் இறங்கி சிறுநீர் கழித்தார் மாமா. நான் எதிரில் சென்று இருந்துவிட்டு எழுந்தேன். சிதம்பரம் செல்லும் சாமியார்ப்பேட்டை பஸ் வேகமாக கடந்து சென்றது பஸ்சில் ஆக மொத்தம் பத்து பேரே இருந்தனர். சாலையோரம் இருந்த இரண்டு தென்னை மரத்து மட்டைகளும் காற்றில் ஆடின. தொலைவில் சென்ற பஸ் வெளிச்சத்தில் புளிய மரங்கள் வரிசையாகத் தெரிந்தன. எதிர்ப்புறம் வெள்ளாற்றை ஒட்டி இரண்டு பக்கமும் இருந்த இறால் பண்ணைகளின் டியூப் லைட்கள் வெளிச்சத்தில் வாய்க்கால் வரப்பு தெரியாத அளவு இருள் சூழ்ந்து இருந்தது

– ரொம்ப இருட்டா இருக்கு, காலடி தெரியாது மாமா

காலின் சுண்டு விரல் கட்டை அவிழ்த்துக் கொண்டு,

– தினம் போற பாதைதான் பார்த்துக்கலாம் வா

– எப்படி மாமா ஆச்சு காயம்?

– தண்ணி இல்லாம வரப்பு வாய்க்கால் காஞ்சு கிடக்குல்ல, கட்டியில நடந்தது விரலு ஊட்டி அரந்து போச்சு

– இப்ப ஏன் அத அவுக்கற?

– இருடா ரவ மண்ணெண்ணெய் வைக்கிறன்

– அய்யோ செப்டிக் ஆயிடப் போவுது மாமா

– அதெல்லாம் ஆவாது. நீ இந்த எண்ணெய் போடறத நல்லா திருவி லாந்தர கையில எடுத்துக்க கை லைட்ட ஏங்கிட்ட கூடு

– யாருமே காணும மாமா, தண்ணீ வரலன்னு நினைக்கிறேன்

– மலைக்காம வாடா போயி பார்ப்போம்

மாமா லைட்டை அடித்துப் பார்த்துவிட்டு வடிவாய்க்காலில் இறங்கி மேடேறி வரப்பில் லைட் வெளிச்சத்தில் நடந்தார். நான் பின்தொடர்ந்தேன் இருவரது நிழலும் நெற்பயிர் மீது நீண்டு விழுந்தது. வரப்பில் இருந்த தவளைகள் துள்ளி வயலில் குதித்தன. சிறிதும் தண்ணீர் இல்லை

– நீர்முள்ளு இருக்கு பாரு பார்த்து வா மேல குத்துச்சுன்னா பிறகு பழுத்துதான் வெளில வரும்

– இது யாரு கொல்லை மாமா பூரா கதிரு வந்துட்டுது?

– வடக்கத்தியான் வூட்டுது புஞ்சையில விர உட்டு நட்டது தை முதலிலேயே அரக்கலாம்

நிலவு விழுந்து வானத்தில் ஒன்றும் இரண்டுமாக மேகங்கள் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தன. வரப்பில் திரும்பிய மாமா என்னைப் பார்த்து விட்டு,

– வரப்ப பாத்து வாடா ராத்திரில மானத்தை பார்க்காம…

– மேகம் இருக்கான்னு பாத்தேன்

– வழக்கமா மார்கழி கர்ப்ப ஓட்டத்தில பூமி நனைய மழை பேயும் இப்ப அடிக்கற வெயில்ல பயிர் பச்சைல்லாம் பிடிச்சு எரியாம இருக்கிறதே ஆச்சரியம்தான்… ஏய் செமதாங்கி வந்துட்டுது குனிஞ்சு பாரு தண்ணி நவுருதான்னு

– க்கும் உனக்குதான் ஆசை கெட்ட கேடு அடிச்சுக்குது ஒன்னும் காணும்

– ஒரே ஒரு மழை பேஞ்சா போதும், என்ன செய்யறது… ஏய் இரு இரு ஏதோ சத்தம் வரல?

– இல்லியே மாமா

– நல்லா உத்துக் கேளு

– ஆமாம் மாமா மோட்டுவாய்க்கால்ல ஆளுவ இருக்கு

– கொல்லைத் தளமோடு போறவரைக்கும் பேச்சு கொடுக்காம வா

– சரி மாமா

மாமா பேச்சு கொடுக்காமல் அமைதியாகி நடையை துரிதப்படுத்தினார் நான் பின் தொடர்ந்தேன், முதலில் புத்திரங்கன்னி அடுத்து செட்டிக்கன்னி வேகமாக நடந்து தாண்டியதும் மேற்கு நோக்கி திரும்பி நடந்து தாய்வாய்க்கால் ரோடு அடைந்தோம். லாந்தரைக் குறைத்து விட்டு கைலைட்டை தேவைப்படும்போது மட்டும் அடித்துக் கொண்டு வேகமாக நடந்தோம் கொல்லைத் தளமோடு வந்தது. மாமா அலங்காரத்தைக் கலைத்து சுருட்டு பத்த வைத்ததும் நான் லைட் ஒளியை கீழே குனித்து புல் நுனியை கிள்ளிப் போட்டேன் தண்ணீர். கிழக்கு வாய்க்காலில் எறும்பு ஊறுவது போல் சிறு அசைவு மாமா கிட்டே நெருங்கிப் பார்த்தார் ஒரே சுருட்டு நெடி.

– மயிரு, வந்தாலும் வரலன்னாலும் பரவால்ல கட்றா ரெண்டு வாய்க்காலையும்,

என்று சட்டையைக் கழட்டினார். வேட்டியை தார்ப்பாய்ந்து கட்டி கொண்டு மண் வெட்டியை கொண்டு பத்தை வெட்ட ஆரம்பித்தார். நான் வாய்க்காலில் இறக்கி பத்தையை வாங்கி மெறித்து அடுக்க ஆரம்பித்தேன் சிறிது சிறிதாக மேலேழுந்து வந்ததும் வாய்க்காலில் ஒதுங்கி இருந்த சேறை அள்ளிப் பூசிவிட்டு ஓரம் கிடந்த பனைமட்டையையும் எடுத்து அனவுக் கொடுத்து அதன் மேலும் சேறை அள்ளி வைத்தேன். கிழக்கு வாய்க்கால் கொண்டம் கட்டியாயிற்று பிறகு தெற்கு வாய்க்காலையும் கட்டவேண்டும். எங்கள் கொல்லை இரண்டு வாய்க்காலின் தலைப்பில் இருக்கிறது இரண்டு வாய்க்காலும் கட்டாவிட்டால் தண்ணீர் பாயாது. ஒவ்வொரு முறையும் தண்ணீர் வைக்கும் போதும் கீழ் கொல்லைகாரர் வந்து, தாய் வாய்க்காலை கட்டாதே, என்று திறந்து விடுவார். அரைமணி நேரம் ஒரு மணிநேரம் அவர்களிடம் கெஞ்சித்தான் வைக்க வேண்டும் வாய்க்கால் மேலேறி தெற்கு வாய்க்கால் உள்ளே இறங்கி மாமாவிடம் மண்பத்தையை வாங்க ஆரம்பித்து விட்டேன். வேலை என்று ஆரம்பித்து விட்டால் நானும் மாமாவும் ஒரே சீராக இழுக்கும் உழவு மாடுபோல்தான். இந்தப் பழக்கம் மாமாவை பார்த்தே எனக்கும் வந்தது. முடியும் வரை பேச்சே இருக்காது.

கட்ட மதுவில் இருந்து உரமுட்டையைத் நிறந்து கட்டி தூக்கி வருவோம். வாய்க்கால் மோட்டில் இருக்கும் நாயுருவி, நீர்முள் எல்லாம் விலக்கி ஒரே சீரான மெல்லோட்ட நடையில் கொல்லை வந்து சேர்ந்து கீழே இறக்குவோம் சிறிது நேரத்துக்கு தலையை அசைக்க முடியாது. நான் அப்படியே இடுப்பில் கையை ஊன்றி நிறபேன். மாமா அப்படியே அமர்ந்து சுருட்டைப் பத்த வைப்பார். பிறகு அடுத்த நடை சென்று வருவோம். உரத்தை கூடையில் அள்ளிக் கொடுப்பேன் மாமா பட்ட இடைவெளியில் நடந்து இருபுறமும் மாறி மாறி வீசுவார். மீந்ததை நான் கையில் வாமடையோரம் பயிரில் வீசுவேன். மொத்த பயிரிலும் அதன் வளர்த்தி தனியாக செழித்து தெரியும். மாமா அப்படி நான் செய்யும்போது எல்லாம் என்னைச்\ சத்தம் போடுவார் வாமடையில் மருந்தைப் போடோதே அதை பார்த்ததும் விளைச்சல் அதிகம் என்று நினைப்பார்கள், செய்யாதே என்பார். நான் சிறுபிள்ளை போல் அப்படியே செய்வேன்

பூச்சி மருந்து அடிக்கும் போது மருந்தை கலந்து ஸ்பிரேயரில் நிரப்பி முதுகில் ஏற்றிக் கட்டி விடுவது என் வேலை. மாமா காற்று வாட்டம் பார்த்து பயிரில் இறங்கி அடித்து வருவார் நான் கரையில் அமர்ந்து பகல் கனவில் மூழ்கியும் பறக்கும் பறவைகள் கருவாட்டு வால் குருவி அல்லது கொக்கு மடையானைப் பார்த்துக் கொண்டும் இருப்பேன். மாமாவின் ‘ம்க்ரும்’ என்று கனைப்புச் சத்தம் கேட்கும் அப்படி கேட்டால், ‘முடிந்து விட்டது வா’ என்று அர்த்தம். இப்போதும் அப்படியே, ‘ம்க்ரும்’ என்கிறார்

– ஏன் மாமா

– தூரத்தில் வண்டி வருது பாரு

நான் கொண்டத்தின் ஓரமாகவும் மாமா கரையில் அமர்ந்த நிலையிலும் சிலையாக இருந்தோம். வண்டியின் ஒளியில் யாரும் தெரியவில்லை. புத்திரங்கன்னிக்கு நேர் மேற்கே தாவாய்க்காலில் வரிசையாக பனை மரங்களும் மூங்கில் புதரும் மோட்டுவாய்க்கால் மேல் இருந்த கூந்தல் பனையும் இலவம் பஞ்சுமரமும் அதற்குப் பின் இருந்த தென்னந்தோப்பும் விட்டு விட்டு தெரிந்தன.. வண்டி எங்களை நோக்கி வந்து பிறகு தாண்டிச் சென்றது பின்னால் டீசல் கேன் இருந்தது எறா குட்டையில் வேலை பார்க்கும் வெளியூர் ஆள் போல. இருட்டில் சரியாக தெரியவில்லை

– ஏய் யாரும் வரல இன்னைக்கு வா தாவாய்க்காலில் நடந்து மேல போயி செட்டிக்கன்னி, புத்திரங்கன்னி, செமதாங்கி எல்லாத்திலும் குறுக்கே கொண்டம் போட்டு வருவோம் தண்ணி வந்தாலும் சரி வராட்டியும் சரி

– சரி அப்ப சாக்கு லாந்தர் எல்லாம் என்ன பண்றது மாமா

– எல்லாத்தையும் எடுத்து கொல்லை வரப்புல வை வா மடை தொரந்து இருக்கா பாரு

– அதான் பத்து பதினைஞ்சு நாளா தொறந்து தான் கிடக்கு

– சரி வா பேச்சு கொடுக்காத காத்து வாட்டத்தில் கொரலு ரொம்ப தூரம் கேக்கும்… கத்தியும் மம்டியும் நான் எடுத்துக்கறன், கைலைட்டை தரையில தாழ்த்தி அடிச்சுகிட்டு
எட்டிப் போ.

நடந்து சென்று செட்டிக்கன்னியும் புத்திரங்கன்னியும் கொண்டம் போடும்போது ஒன்றும் தெரியவில்லை சிரமமில்லாமல் முடித்தோம் ஆனால் செமதாங்கி வாய்க்கால் உள்ளே திரும்பிய உடன் ஒரு ஆட்காட்டி மேலெழுந்து பறந்து தலைக்கு மேலே வட்டமிட்டு ட்ரட்டீ, ட்ரட்டீ, ட்ரட்டீ என்று கத்திக் கூப்பாடு போட்டது. மாமா வாய்மேல் விரலை வைத்து ‘உஷ்…’ என்று சொல்லி உட்காரச் சொன்னார். இருவரும் அசையாமல் ஒரு நிமிடம் இருந்தோம். ஆட்காட்டி குருவி சீராக தரையில் அமர்ந்து சிறிது தூரம் ஓடி அதன் கூட்டில் அடைந்தது.

– நீ இங்க இருக்கியா குடும்பமா? உன்ன ஒன்னும் பண்ண மாட்டோம் நாங்க அப்படியே போயிடறோம் நீ கொஞ்சம் சத்தம் போடாத,

என்றார் மாமா. சிறிது குனிந்த வாட்டத்தில் சென்று வாய்க்காலில் இறங்கியதும் தான் தெரிந்தது முள் இருக்கு என்று காலெல்லாம் குத்தி கிழித்து விட்டது

– ஆ… அம்மா… மாமா இரண்டு பக்கமும் முள்ள அணைச்சி வச்சிருக்கு யாரும் கட்ட கூடாதுன்னு

– கெட்ட வக்கால ஒழிவோதான் இந்த மாதிரி பண்ணுவான் நீ மேல ஏறு நான் கட்டறேன்”

– வாணாம் நீ வேற கிழிச்சுப்ப மாமா பேசாம வெட்டிக் கொடு நான் கொண்டத்த போடறன்

– கட்டுனாலும் வண்டை வண்டையா பேசுவானுவோடா… தாய் வாய்ககாலை வெட்ட வாங்கடான்னா ஒரு பயலும் வரமாட்டான் கிளை வாய்க்கால பூரா கொடைஞ்சுதான் வச்சிருக்கானுவ

சரியாக வேலை வாங்கி விட்டது முடித்து கரையேரும் போது இருவருமே சோர்ந்து இருந்தோம்.

– ஏய் வாடா, அப்படியே வாய்க்கால் மேலே சுற்றி போய் தண்ணி வருதான்னு பார்த்துட்டு முட்லூர்ல டீ குடிச்சுட்டு வரலாம் குளிருக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும் பாரு

எனக்கும் சரியென்று தோன்றியது.

– ஏம் மாமா முதல்ல சொல்லி இருந்தா சைக்கிள் எடுத்து வந்துருக்கலாம் இப்ப எவ்வளவு தூரம் நடக்கிறது?

– ஏய் அப்படி இல்லடா நடந்து போனாதான் குறுக்கே கட்டி இருந்தா பார்த்து தொறக்க முடியும், மலைக்காம வாடா

கட்டமதுவு படித்துறையில் இறங்கி கை கால் கழுவி சுத்தம் செய்து சட்டையை போட்டுக் கொண்டு நடையை எட்டிப்போட்டோம். முள் கிழித்திருந்தது. சிறிது எரிச்சல் இருந்தது. முதலில் வாய்க்கா மோட்டுமேல் நிற்கும் தூங்குமூஞ்சி மரம் பூதம் போல் தெரிந்தது. அதற்கு மேற்கே இருக்கும் சிறு காட்டில்தான் முத்துமினி கோவில் இருக்கிறது. பகலில் கூட பூசாலி மற்றும் படைப்பவர்கள் தவிர வேறு யாரும் செல்ல மாட்டார்கள். பார்வை தன்னிச்சையாகச் சென்று அதிர்ந்தது பிறகு உடன் கீழே தாழ்த்தி பாதையைப் பார்த்துச் செல்ல ஆரம்பித்தேன். மாமாவிடம் இருந்து பேச்சு ஒன்றும் இல்லை . கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த பிறகு ஓரு மணி நேரம் பத்தை வெட்டித் தந்தார், கொண்டம் கட்டுவதற்கு அதனால் வயிற்றில் ஒன்றும் இல்லை சோர்வாக தெரிந்தார். அது மட்டும் அல்ல வெள்ளாத்து ஒரம் உப்பங்காத்து ஒரே சீராக அடித்துக் கொண்டு இருக்கும், அதுவும் வயலுக்கு வந்து விட்டாலே தனியாக ஒரு பசி வந்து விடும் எவ்வளவு சாப்பிட்டாலும் ஒன்றும் கரை காணாது. பாதையில் கோயில் தாண்டி அடர்ந்த முந்திரி தோப்பும் வாய்க்காலில் வரிசையாக பனைமரமும் வந்தன சற்று நடையில் ரோடும் வந்து விட்டது. ரோடு ஏறியதும்,

– என்ன மாமா ஒருத்தனையும் காணும் ஆச்சரியமா இருக்கே?

– அதான்டா எனக்கும் தெரியல ஒருக்கா மேல ஆதானாவூர்ல கொண்டம் போட்டு இருப்போனுவோளோ?

– மாமா சும்மா என்னால இனி முடியாது கால்லாம் முள்ளு காலையிலே பாத்தாதான் தெரியும்

சொல்லிக் கொண்டு இருக்கும்போதே ஒரு சுமோ வண்டி எங்களை அணைத்தது போல் வந்து நின்றது. வண்டியில் இருந்து, ‘வாங்கடா இங்க,’ என்று அதிகார குரல் அழைத்தது. சென்று பார்த்தபோது சுமோ முன்பக்க கண்ணாடியில் காவல் என்று காகிதத்தால் ஒட்டி இருந்தது டிரைவர் சீட்டிலிருந்தவர் மேல் கூரை லைட்டை போட்டதும் இருவர் முகமும் தெரிந்தது. டிரைவர் சீட்டில் இருந்தவர் காக்கி நிற தொப்பி அணிந்து இருந்தார் கான்ஸ்டபிள் முகம் மிக அதிக விரைப்பாக அடிக்க வருவது போல் கடுமையாக தெரிந்தது. டிரைவர் பக்கத்து சீட்டில் இருந்தவரைப் பார்த்ததும் தெரிந்தது, அவர் தான் அந்த அதிகாரக்குரல் என்று.. கீழே இறங்கி,

– திருட்டு பயல்களா எங்கடா போயிட்டு வரிங்க?

அதிகாரி பெயர் கன்னியப்பன் என்று வெள்ளை நிற வில்லையில் ஆங்கிலத்தில் தெரிந்தது. வருடக் கடைசி. கேஸ் பிடிக்க எங்களை நிறுத்தி விசாரிக்கிறார்கள். அப்போதுதான் எங்கள் நிலமையைப் பார்க்கிறேன் என் கையில் மொட்டைக்கத்தியும் மாமா கையில் கைலைட்டும் இருந்தது தெரிந்தது. கத்தியை சும்மா வச்சிருக்காமல் ஒரு பச்சைக் கழியை கரும்பு வெட்டுவது போல் வெட்டி கொண்டு வந்ததும் தெரிந்தது. இருவரும் ஒரே குரலில் அனிச்சையாய், கொல்லைக்கு வந்தோம் சார், என்று நானும், வந்தங்க, என்பதை மாமா கொஞ்சம் கூட்டியும் சொன்னோம். டிரைவர் சீட்டில் இருந்த விறைப்பு போலிஸ், யார்ட்ட கதை சொல்றிங்க?, என்று லைட்டை எங்கள் மேல் அடித்தார் அதிகாரி போலிஸ்,

– கை கால் எல்லாம் சுத்தமா இருக்கு நீங்க இரண்டு பேரும் கத்தி கழிய காட்டி வழிப்பறி பண்றீங்கன்னு சொல்றேன் என்ன பண்ணுவீங்க? வண்டில ஏறுங்கடா எதா இருந்தாலும் ஸ்டேசனுக்கு போயிட்டு பேசிக்கலாம்

நான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, ‘தெய்வமே’ என்று கலங்கி, எனக்கு பேச நா எழவில்லை. மாமா,

– இல்லீங்க சாரு. நான் பத்து நாளா நடக்குறன் இந்தப் புள்ள நாலு நாளா வரான் எல்லாம் சூல் பயிரு சாரு, கதிரு எல்லாம் தொண்டையில நிக்குது சுருண்டு காயுது சாரு தண்ணி வைக்கலன்னா மாட்டுக்குதான் சாரு ஆவும் வாய்க்கால் நெடுக்க பார்த்து வாரோம் குண்டி கழுவ தண்ணிவ இல்ல சாரு. பனியில நின்னது குளிருதுன்னு டீ குடிக்கத்தான் வந்தோம் எங்கள சோதனை பண்ணிக்க சாரு, என்றார்

– கதையிலாம் சொல்லாத பாக்கெட்டில் இருக்கிறத காட்றா

மாமாவும் நானும் பாக்கெட்டில் கை விட்டு எடுத்து சுமோ பானேட்டில் வைத்தோம். வேலை வெட்டி இல்லாத என் பாக்கெட்டில் சில வெளிநாட்டு வேலை வாய்ப்பு துண்டுச் சீட்டும் ஒரு டிராவல்ஸ் விசிட்டிங் கார்டும் மாமாவிடம் ஒரு சுருட்டும் இரட்டைக் கிளி வத்திப்பெட்டியும் இருந்தது. மாமா வேட்டியையும் நான் கைலியையும் உதறிக் காட்டி விட்டு கட்டினோம்.

– பெயர் எனன?

– கார்த்திகேயன் சார்

– வயசு?

– 25 சார்

– யோவ் உம்பேரு?

– சாமிங்க

– என்னது பேர்?

– சாமி சாரு

– வயசு?

– அது தமிழ் வருசம் ஒரு சுத்து முடிஞ்சு இரண்டு வருசம், 62 வயசு சாரு

-கையை காட்டுங்கடா

இருவரும் கத்தியையும் லைட்டையும் போட்டு விட்டு வேகமாக மாமா வெட்டு சீட்டு போல் இரண்டு உள்ளங்கையையும் விரித்தார். நான் சாதாரணமாகக் காட்டினேன். விறைப்பு போலிஸ் அவரது லைட்டை கொண்டு இருவர் கையிலும் வெளிச்சத்தைக் காண்பித்தார், அதிகாரி பார்த்து விட்டு என்னிடம்,

– என்ன செய்யற?

– படிச்சேன் வேலை இல்லை வெளிநாடு போக பாத்துக்கிட்டு இருக்கேன்

சிறிது தைரியம் பெற்று,

– சார் அதுல டிராவல்ஸ் விசிட்டிங் கார்டும் சீட்டுகளும் இருக்கு பாருங்க சார்.

விறைப்பு போலிஸ் பார்த்துவிட்டு, ஆமாம் என்றதும், அதிகாரி ஒரு பெருமூச்சு விட்டார் பிறகு மாமா கையைப் பார்த்து விட்டு,

– என்ன வேலை செய்யுற இவ்வளவு காய்ப்பு இருக்கு?

– இல்லிங்க சாரு நான் முப்பது நாற்பது வருசமா கூலி வேலையும் இப்ப சூளைக்கு கல் அறுக்க மண்ணு கொத்தி கல்லருத்துத்தான் சாப்பிடுறன்

என்னை அறியாமல் கண்கள் கலங்கி நீர் குவளை கட்டியது. தொடர்ந்து மாமா,

– சாரு முதல்லாம் இப்படி இல்லை வீராணம் தண்ணிய நம்பி நாங்க பயிர் பண்ணுறோம். இப்ப வீராணம் தண்ணி மெட்ராசுக்கு குடிக்கப் போவுது இல்லை, அதுலேருந்து எங்க ஊரு பரங்கிப்பேட்டை பில்லம்பரவெளிக்கு தண்ணி கிடைக்க மாட்டேங்குது கடைமடையாச்சில்ல, அதான் சாரு போர் போடவும் முடியாது பக்கத்திலே வெள்ளாரு சவுரு தண்ணி. காலமெல்லாம் இத நம்பித்தான் இருக்கோம். எல்லாம் அரைகாணி காகாணிக்காரன்தாம் நகர் போடற பாண்டிச்சேரிகாரனுவட்ட வித்துட்டு பொழப்புக்கு வெளியூர் வெளிநாடுன்னு போறானுவ சாரு. குடிதண்ணீ தடுக்கக் கூடாதுன்னு எல்லாம் கலங்கி பார்த்துட்டு இருக்கோம் பயிருவோலும் கலங்குது சாரு, எந்தக் காலம் விடிவு பொறக்கும்ன்னு தெரியல

விறைப்பு போலிஸ் தளர்ந்து தெரிந்தார் அதிகாரி மவுனமாகி தலையாட்டி, போகச் சொன்னார். இருவரும் மவுனமாகி கனத்த மனத்துடன் நடந்தோம். முதலில் சுமோ வண்டி தாண்டிச் சென்றது. பின்னால் தொடர்ந்து வேளாங்கண்ணி பேருந்து சென்றது. அதன் வெளிச்சத்தில் முட்லூர் முக்கூட்டு ஆலமரமும் அதன் கீழே கட்டையில் இருவர் அமர்ந்து இருந்ததும் தெரிந்தது. இந்த மாதிரி குட்டி போட்ட நாய் மாதிரி அலையறதவிட பேசாம வித்துட்டு போயிடலாம் மாமா., என்றதும் மாமா கடுங் கோபத்துடன், வித்துபுட்டு போ போயி பொரி உண்டை வாங்கி தின்னுங்க, என்றார். மாமாவின் விரக்தி புரிந்து மவுனமாக நடந்தேன் கடையில் டீ பிஸ்கட் சாப்பிட்டதும் காசைக் கொடுத்து விட்டு கிளம்பினோம். மாமா சற்று தூரம் வந்ததும் நின்று சுருட்டைப் பத்த வைத்தார் இரண்டு இழுப்பு முழுவதும் இழுத்து விட்டு, ‘ம்க்ரும்’, என்றார். நான் நின்று திரும்பிப் பார்த்தேன். மாமா குனிந்து சுருட்டை ரோட்டில் தேய்த்து அணைத்து விட்டு,

– ஏன்டா கார்த்தி அந்த வெளிநாடு செய்தி என்னதான்டா ஆச்சு?

– ப்ச்

கதிர் அறுக்கும் இயந்திரம் ரோட்டு ஓரம் நின்று கொண்டிருந்தது.

– மாமா, இந்த வருடம் மிஷின் வச்சி அரப்போம், நெல்லு கூட கிடைக்கும்

– மயிரு கிடைக்கும்! நீ எல்லாம் என்ன படிச்சியோ? மிஷின் அரக்கர வைக்க கூலாம் போல ஆயிடும். மாடு திங்காதுரா. கையால அறுத்தா நாலு பேரு வாயில படும் சிந்தரத குருவிவோ திங்கும் அதிலேயும் மண்ணு போட பார்க்கறியா, ஏண்டா?

– சரி மாமா தண்ணீ வச்சி விளையட்டும் பார்ப்போம் மாமா ஏமாத்தறவனுக்குதான் காலம் நீதான் தர்ம நியாயம் பேசுவ ஒரு பயலுவ கேட்க மாட்டான்

– அப்படி சொல்லாதடா நான் பாரதம் படிச்சவன்டா எனக்கு தெரியும்டா

– வெறும் இரண்டாவது படிச்ச நீ தருமம் பேசர… நிறைய படிச்சவன் எல்லாம் திருடறான். இன்னைக்கு இந்த போலிஸ் நம்மள என்ன பாடு படுத்துனான்?

– இந்த மயிரு பேச்சு பேசுனாக்கதான் நான் கடுப்பாவறேன் போலிசுக்கு ஆளப் பார்த்தாலே தெரியும்

– சரி சரி கோவப்படாத மாமா நீ பாரதம் எப்படி கத்துக்கிட்ட?

– ஏய், வயசுல நல்ல வாட்டசாட்டமா இருப்பேன். ஊருல திரோபதியம்மன் கோயில் திருத்தி கும்பாபிஷேகம் பண்ணி பாரதக் கூத்து கட்டறதுக்கு ஊர் கூடி முடிவாச்சு. அப்பலாம் ஊருக்கு ஊர் கூத்தும் நாடகமும்தான் நடக்கும் அதுல நடிக்கறவங்களுக்கு தனி மரியாதை தான். எனக்கு பத்தொன்பது இருபது வயசு இருக்கும் திங்கறது மானங்கானியா திரியதுன்னு இருந்தேன். அந்தபந்தமா கைக்கு அடங்காத கன்னங்கரேரு கோயில் சிலை நிறத்துக்கு இருப்பேன். என்ன கவனிச்சுக்கிட்டு இருந்த பாரத வாத்தியார், ‘ஏ காட்டான் இங்கே வாடா.’ன்னு கூப்பிட்டார்

– ஊம் பேரு காட்டானா?

அட குறுக்கே பேசாம கேள்றான்னா

– சொல்லு மாமா

– ‘எவான்டா அது’ன்னு வந்த வேகத்தில நொடில கீழே தள்ளி மேல ஒக்காந்து ஒரு புடியப் போட்டுட்டாரு. -என்னால அசைய முடியல. ‘இதான் வீமன் பூட்டு, சொல்லித் தரன் நடிக்கிறியா?”ன்னாரு. சொல்லி கொடு சாமி கத்துக்கறேன்ன பிறகுதான் உட்டாரு ஒரு மாசம் வலி இருந்தது முதுவுல.

– அப்புறம் மாமா?

– இராப்பகலு அவர் கூடய கிடந்து கத்துகிட்டேன். விராட பருவம் அரங்கேற்றம் முதல்ல. பஞ்சபாண்டவர் அஞ்சு பேரும் வன்னி மரத்துல ஆயுதங்களை வச்சிட்டு விராடன் சபைக்கு வரோம் நான் வடவாரியோடு வந்து பீமனின் சமையல் கூடத்தில் வேலை செய்தவன் என்று தலைமை சமையல்காரனாக பணி அமர்ந்தேன். மறுநாள் கூத்தில் திரோபதி என்னிடம் கீசகன் மானபங்கம் செய்வதாகப் புலம்ப நான் அவளிடம் என் திட்டத்தை சொல்லிப் போர்வையை போத்திகிட்டு கீசகனுக்காக கட்டிலில் காத்திருக்கேன். கீசகன் வந்து என்னைப் பின்னாடி இருந்து கட்டி அணைக்கிறான், நான் அந்த போர்வையாலேயே அப்படியே அவன கட்டி அடித்து துவைக்கிறேன், திரை இறங்குது.

மாமா உணர்ச்சி மேலிட்டு இருந்தார் எதிர் திசையில் இருந்து வண்டி ஒன்று வந்தது. அதன் ஒளியில் வரிசையாக இருந்த மரங்கள் விட்டு விட்டு தெரிந்தன. வண்டி மிக வேகமாக எங்களைக் கடந்து சென்றது கேரளாவுக்கு செல்லும் மீன் வண்டி அது தண்ணீர் நெடுக்கச் சொட்டி மீன் கவுள் அடித்தது

-சரி மாமா நா ஒத்துக்கிறேன்

– இந்த வளவுல இருக்கற நிலம் பூரா பாண்டிச்சேரிக்காரனுவ நகர் போட வாங்கி இருக்கானுவ. நம்ம ஊருக்கு குடிக்க தண்ணீர் தர மாட்டேன்காரனுவ ஒழுங்கா. இவனுவ ஆச காட்டினால் காசு இருக்கறவன் குடி தண்ணீர் கிடைக்குமேன்னு வாங்கப் போறான். கட்டமதுவு வந்துட்டுது பாரு மம்டி கழிய எடு

எடுத்துக் கொண்டு மவுனமாகி அவரவர் கவலையில் ஆழ்ந்து நடக்க ஆரம்பித்தோம்

– நில்லுடா

– ஏன் மாமா?

புத்திரங்கன்னியோரம் இருந்த பனையடியில் இருந்து கழியால் தள்ளி மட்டையை எடுத்தார்

– ஏன் மாமா இது?

– சொல்றேன் வா

கொல்லைத் தலைமாட்டை அடைந்ததும் வழியை விட்டு சாக்கை உதறிப்போட்டு அமர்ந்தோம். பனி சன்னமாக இறங்கிக் கொண்டிருந்தது. சுருட்டைப் பத்த வைத்து இரண்டு இழுப்புடன் கீழே தீற்றி அணைத்தார். வாய்க்கால் தண்ணீரிலிருந்து சுள்ளான் வந்து மேல் அப்பியது நான் ச்ச என்று கையால் அடித்தேன். மாமா மட்டையை பற்ற வைத்து போட்டு எரியும் அதன் மேல் பீக்காலத்தி செடியை வெட்டி போட்டார் நாற்றம் குடலை புரட்டியது

– என்ன மாமா செய்யற?

– ஏலேய் இனி விடியற வரைக்கும் சுள்ளான் வராது பாரு. அப்படியே சாக்குல படு

– பூச்சி பொட்டு வராதா மாமா?

– பீக்காலத்தி நாத்தத்துக்கு ஒன்றும் கிட்ட வராது படுரா

நாற்றம் தலைவலியைக் கிளப்பி விட்டது சாக்கு கணகண\ப்பில் படுத்து கைலியையும் துண்டு சால்வையையும் போர்த்திக் கொண்டேன் குளிர் தெரிந்தது மாமாவும் படுத்தார் எனக்கு தூக்கம் வரவில்லை வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன் கடந்த வருடம் எல்லோரும் தண்ணி நேரத்துக்கு வரவில்லை என்று விரைகால் விட்டு அறுத்தனர் நாங்கள் விதை விடாமல் நாற்று ஆலப்பாக்கம் சென்று வாங்கி வந்து நட்டோம் பூ வரும் தருணத்தில் அடித்த புயற்காற்றில் பாதி பதராகப் போய் சாப்பாட்டுக்கே ஒப்பிடியாகவில்லை வருசம் தவறாமல் கடலூரிலும் நாகப்பட்டினத்திலும் வீசும் புயல் இடையில் இருக்கும் எங்கள் ஊர் வெள்ளாத்து முகத்தூவரத்தில் புகுந்து அதகளப்படுத்திச் செல்லும் பயிர்கள் ஆடுமாடுகள் கூரைகள் சேதப்படுத்தியது போக மிச்சம் மீதி எல்லாம் ஆற்றோர நாணலைப் போல் வளைந்து பிறகு அடிக்கும் வெயிலில் நிமிரும் இந்த ஆண்டு அந்த அதகளம் ஐப்பசி முதல் வாரத்திலே முடிந்து மழை ஏறக்கட்டி விட்டது பல ஆயிரம் கன அடி தண்ணீர் வெள்ளத்தில் சென்றது இந்த வருடம் தண்ணி வந்து விதை விட்டு நாற்று நட்டபோது பிந்திவிட்டது ஆரம்பத்திலிருந்தே இந்த வருடம் தண்ணிப் பஞ்சம் நடையாய் நடந்துதான் பயிரை வளர்த்து இருக்கிறோம் இந்த ஒரு தண்ணி கிடைச்சாப் போதும் இல்லை என்றால் நினைக்கவே பயமாக இருக்கிறது எட்டு பேர் வருச சாப்பாடுக்கு வாங்கி ஆக்குவது என்றால் கடவுளே என்றது மனம் எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை உறக்கத்திலேயே ஒரு நீலநிற டிராவல் பேகை ரயிலில் வைத்துவிட்டு வாசலில் நின்று கையை ஆட்டுகிறேன் ரயில் பாம் என்று ஓசையுடன் புறப்படுகிறது எங்கோ ரேடியோவில் பக்திப் பாடல் ஒலிக்கிறது திரும்பவும் பாம் என்ற ஒலியும் தடிர் தடிர் என்று சத்தமும் கேட்டு விழிப்பு வந்து பார்க்கிறேன் எங்கும் அதிகாலை வெம்மை பரவுகிறது ரயிலடியில் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் ஓசை கேட்கிறது பனிமூட்டத்தால் ரயில் தெரியவில்லை புரண்டு படுத்தேன். மாமாவிடமிருந்து சன்னமாக குறட்டை ஒலி ஒரு தேரை நீரிலிருந்து பாய்ந்து வாய்க்காலில் இருந்த சம்புவில் அமர்ந்தது சம்புதட்டை மேலும் கீழும் ஆடியபோது சம்புவின் முனை நீரில் தட்டித் தட்டி வட்டம் உண்டாக்கியது. தேரை ஆடுவதைப் பார்த்தும் சிறுவயதில் ஊஞ்சலில் ஆடியது ஞாபகம் வந்து புன்னகையோடு நீரில் தெரிந்த வட்டத்தைப் பார்த்தேன் அதில் அலை அலையாக வெண்மேகத்தின் அடியில் கொக்குகள் கொக்குகளைப் பின் தொடர்ந்த பார்வை கொண்டத்தின் மேல் நிலைகுத்தியது அதற்குப்பின் தெரிந்த காட்சிகள் ஆகா என் வாழ்நாளில் இதற்கு இணையாகக் காணப் போவதில்லை குருடனுக்குப் பார்வை கிடைத்ததைப் போல் பிறந்த குழந்தையை தாய் பார்க்கும் முதல் கணம் போல் இருந்தது இரண்டு கொண்டத்துக்கு இடையிலும் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி வயலில் தண்ணீர் சலசல என்று பாய்ந்து கொண்டு இருப்பது உணர்ச்சி மேலிட்டு நான் மாமா மாமா என்கிறேன் எரிச்சலில் கம்னு இர்றா என்றவரை வாய் குளரி இங்கே பாரு என்கிறேன் அதிர்ந்து எழுந்தவர் நீரைப் பார்த்து விட்டார் தெய்வமே அங்காளம்மே என்று கிழக்கு நோக்கி கும்பிட்டார் கிழக்கின் ஒளி அவர் மீது பட்டது இரவு கீசகனைத் தொளில் கிடத்தி முதுகை உடைத்தபோது கூர்மையான மூக்கும் கண்ணமும் துடிக்க கொவ்வை பழம் போல் சிவந்திருந்த கண்ணில் இப்போது சாந்தமும் அருளும் ஆச்சரியமும் ஒரு சேரத் தெரிந்தது

– எலெய் கார்த்தி ஓடுப்பா நடு குண்டு மடைய நல்லா வெட்டி விடுப்பா

நான் வெட்டிவிட்டுக் கொண்டு மாமாவைப் பார்க்கிறேன் அவர் பயிர்களை கைகளால் அணைத்து அணைத்துக் கொடுக்கிறார். கைபடாத பயிர்கள் என்னையும் கொஞ்சம் தொடேன் என்று அவர் பக்கம் சாய்வது போல் எனக்கு ஒரு பிரமை. வாமடையை அழுத்தி வெட்டி விட்டேன். நடுகுண்டும் பாய்ந்து விட்டது. இனி கடைசி குண்டு வாமடையை அழுத்தி வெட்ட வேண்டும். மாமா கடைசி குண்டில் இறங்கி குறுக்கே நடந்து,

– ஏலேய் கார்த்தி இன்னும் ஒரு வெலா பாயணும் அழுத்தி வெட்டி விடு அரை மணி நேரம் ஒடுனா பாஞ்சிடும்

அப்போது வாய்க்கால் தலமோட்டில் அரவம் கேட்டு மாமா, யாருப்பா அது ஏய் கொண்டத்தைத் தொறக்காத, என்று சத்தமிட்டார். நான் மண்வெட்டியோடு தடுமாறி ஓடினேன் வாய்க்காலை எட்டுவதற்குள் இருவர் கிழக்கு வாய்க்காலை முழுமையாகத் திறந்து விட்டு விட்டனர்

– அரை மணிநேரத்தில பாய்ஞ்சிடும் சித்த விட்டு கொடுங்கப்பா, என்றார் மாமா

வாய்க்காலின் நீர்மட்டம் தொடர்ந்து தாழவும் நான் முதலில் கொல்லை வரப்பின் வாய்மடையை தூக்கி மெறித்துக் கட்டி விட்டு கோவத்தோடு கிழக்கு வாய்க்காலில் இறங்கி கொண்டத்தைக் கட்ட மண் இழுத்து வைத்தேன். கீழே சென்ற இருவரும் திரும்ப கொண்டத்தை நோக்கி வந்து அமைதியாக நின்றனர் நான் மேலும் மண்ணை வெட்டி அணைத்தேன். மாமா அவர்களிடம்,

– ஏம்பா ஒரு அரைமணி நேரம் பொறுக்கக் கூடாது? இப்படி பண்ணிட்டிங்களேப்பா, இனி எப்ப பாயறது? ஏய் கார்த்தி, வா போவும் அவங்க வைக்கட்டும்

நிதர்சனம் புரிந்து நான் கோவத்துடன் அவர்களை முறைத்துப் பார்த்து விட்டு மேலேறினேன். அவர்கள் போய் விட்டனர். மாமா என்னிடம்,

– வாடா அவனுவளது நம்மளவிட மோசமா காஞ்சு இருக்கு. இந்த வருசம்தான் ஏதோ போக்கியம் புடிச்சு நட்டு இருக்கானுவ போனாப் போறானுவ வா. நமக்கு ஒரு வெலாவும் ஊறி ஓடிக் கலந்துடும் நீ வாடா

இருவரும் அலங்காரத்தோடு திரும்பி நடந்தோம்.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.