கணபதி தம்பி புரண்டு படுத்தார்.
‘கா’ என்று சத்தம். முழுவதுமாக விழிப்பு வந்து விட்டது அவருக்கு. வீட்டின் பின்புறம் பக்கத்து வீட்டு வேப்பமரம் தழைய இருக்கிறது. விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் காகங்கள் சில. ‘கா’ ‘கா’ என வந்து விடும்.‘கா கா, கர்’ என்று கரையும் சத்தம் விட்டு விட்டு கேட்கும். எழுந்து மாரி பிஸ்கட்களை சின்ன சின்ன வில்லைகளாக்கி வீட்டின் மதில் மேல் வைப்பார்.
எதிர் வீட்டு மாமா ஓரக்கண்ணால் அவர் செயல்களையும் பார்த்துக் கொண்டு மாடுகளை அவிழ்த்துச் செல்வார். ஊரில் இரண்டு கணபதி உண்டு. இவர் இரண்டாவது கணபதி. அதனால் இவரது பெயர் கணபதி தம்பி. அதுவும் சின்னப் பிள்ளைகள் கூப்பிடும்போது இவரும் சின்னப் பிள்ளைகள் போலவே ஆகி அவர்களோடு அன்பாகப் பேசுவார்.
காக்கைகள் ஒரே சத்தம். அவைகள் மொழியில் கூவி அழைப்பதும் பிறகு தலையைச் சாய்த்து பார்ப்பதுமாக இருந்தது. அதில் ஒரு குஞ்சு தயங்கித் தயங்கி வந்தது. மற்ற காக்கைகளைக் கண்டு அதற்கு பயம். புத்திசாலி அது. டப்பேன்று கவ்விக்கொண்டு பக்கத்தில் இருக்கும் வேப்பங்கிளையில் வைத்து சிறிது சிறிதாக கொத்தித் திங்க ஆரம்பித்தது. அதன் மூக்கையொட்டிய தோல் சிவந்து இருந்தது எல்லாம் கொஞ்சம் நேரம்தான். காகம் கா கா எனப் பறந்து விட்டதும் பிறகு காட்சிகள் குளத்தில் காற்றிலாடும் அலைகள் அடங்கியது போல் அடங்கி விடும் கணபதிக்கு. மனம் பேயாட்டம் ஆட ஆரம்பிக்கும். எல்லாம் இந்த வேலை இல்லாத மூன்று மாதமாகதான்.
மனைவியும் பிள்ளைகளும் அவர் மேல் எவ்வளவு பிரியமாக இருந்தாலும் அவருக்கு சாதாரணமாக இருக்கத் தெரியவில்லை. எப்போதும் கோவம், ஒரு எரிச்சல். பிள்ளைகள் கோழியின் இறக்கைக்குள் பதுங்கி இருக்கும் குஞ்சுகள் போல் அவள் குரலுக்கு மட்டுமே ஓடி நடக்கின்றன. ஏக்கமாக இருக்கிறது அவருக்கு. வளர்ந்து விட்டார்கள். கணபதி தம்பி கூப்பிடுவதைச் சரியாக காதில் வாங்காமல் மெதுவாக பதில் சொல்வது, எங்காவது வேடிக்கை பார்த்துக் கொண்டு, இல்லை, ஏதாவது படிப்பது போல் பாவ்லா செய்கிறார்கள். இல்லை, அவர்கள் சாதாரணமாக இருப்பதுகூட அவருக்கு அப்படி நினைக்கத் தோன்றுகிறது.
சொச்ச சம்பளத்தில் கிடைத்த வேலையை செய்து இருக்கலாம். இனி யோசித்து ஒன்றும் ஆவப்போவதில்லை. நடுவாந்திர வயதில் வேலையைப் பற்றியே சதா சிந்தனை. அப்படச் செய்து இருக்கலாம் இப்படிச் செய்து இருக்கலாம் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது அவருக்கு. நேரம் போகாமல் ஜியோ உதவியுடன், படிப்பது, நோக்கிரியில் வேலை தேடுவது என்று இருப்பார். வேலை தேடுவது என்றால் சும்மா இல்லை. அவருக்கு நன்கு தெரிந்த அத்தனை வகையிலும் உள்நாடு வெளிநாடு என்று முயற்சித்து கொண்டு இருப்பார். ஒரே வெறுப்பு.
அன்று அப்படியே இடையில் யாஹூ நோட்டிபிகேஷன் பார்த்துக் கொண்டு இருந்தார். ஒரு நேர்முக தேர்வு வந்திருந்தது அவருக்கு. ஹைதராபாத் கூப்பிட்டிருந்தனர். அவர்கள் கம்பனிக்கு புரோபைல் மேட்சாகவில்லை பிறகு எதற்கு மெயில் அனுப்பி இருக்கிறார்கள் என அவருக்கு குழப்பமாக இருந்தது அதுவும் ஒரு நாள் பொழுதில் ஹைதராபாத் செல்ல வேண்டும். விருப்பமில்லை. பெருமையாக மனைவியிடம், ஒரு நேர்முக தேர்வு ஹைதராபாத்தில், என்றதுதான் தாமதம், ‘எப்போது?’ என்று கேட்டுவிட்டு, ‘உடன் கிளம்புங்கள்’, என்று சொல்லிவிட்டாள்.
இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை. பின் விளைவுகள் மோசமாக ஞாபகம் வந்தது அவருக்கு. போய்த்தான் ஆக வேண்டும். பிறகு அவள் ஏதேனும் சாதாரணமாக சொன்னாலும் புத்தி மரமேறிவிடும், குத்தி காட்டுவதாக எண்ணம் ஏற்படும். மொபைலில் ஹாட் ஸ்பாட் ஆன் செய்து லேப்டாப்பில் இணைத்து குரோமில் டிக்கெட் தேட ஆரம்பித்தார். ரயில் டிக்கெட் ஒன்றும் கிடைக்கவில்லை. வெயிட்டிங் லிஸ்ட் நூறைத் தாண்டி காண்பித்தது. விமானம் இருக்கா எனப் பார்த்தார். காலையில் இருந்தது, கொஞ்சம் பணம் அதிகமாக செலவு செய்யவேண்டும். ஆம்னி பஸ் இருக்கா எனப் பார்த்தார். கட்டுப்படியாகும் செலவில் இருந்தது. ஆம்னியில் கோயம்பேடுவிலிருந்து ஹைதராபாத்திற்கு இரவு 8 மணி வண்டிக்கு புக் செய்து விட்டார். .பரபர என மனம் கணக்கு போட, ஷோல்டர் பேகில் வேண்டியவைகளை எடுத்து வைத்து வீட்டிலிருந்து கிளம்பியது மதியம் 1 மணி.
பஸ் நிறுத்ததில் நேரம் கடந்து கொண்டு இருந்தது. சென்னை செல்லும் அரசு பேருந்து வந்ததும் நிறுத்தி பாண்டி டிக்கெட் எடுத்து கொண்டார். பஸ் காலியாகதான் இருந்தது. வழியில் எங்கும் நிற்காமல் பின் மதியம் 2.40 கடலூர் வந்திருக்கிறது, தாராளமாக போதுமான நேரம் இருக்கிறது, என்று நினைத்தார். பாண்டி வரும்போது 3.30. இந்திராகாந்தி நிறுத்தத்தில் இறங்கி வேறு பஸ் மாறலாமா என்று யோசித்தவர், இறங்கவில்லை. பாண்டி பஸ் ஸ்டாண்ட்டில் இறங்கி வேறு பஸ் முயற்சித்தார். ஏ .சி வண்டி நிரம்பி விட்டது. அடுத்த அடுத்த வண்டிகளும் நிரம்பி நின்றன. இனி நின்றால் சரி வராது என வந்த வண்டியிலேயே ஓடி ஏறிக் கொண்டார்.
கண்டக்டரிடம், ‘சார் எத்தனை மணிக்கு கோயேம்பேடு போவும்?” எனக் கேட்டார்.
7.15 என்றதும் டிக்கெட் வாங்கி அமர்ந்தார். பத்து வருட பழைய பஸ். சீட் எல்லாம் நெட்டுக் குத்தலாக இருந்தது. கண்டக்டர் ஒவ்வொரு நிறுத்தமாக சென்னை, பெருங்களத்தூர், மருவத்தூர், திண்டிவனம் என்று இறங்கி வந்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் ஐன்னலோர காற்று முகத்தில் படவும், அசதி, உறங்கி விட்டார். ஒரு நினைவும் இல்லை அவருக்கு. அப்புறம் கசகசப்பில் விழிப்பு வந்தபோது பஸ் திண்டிவனத்தில் நின்று கொண்டு இருந்தது. இருந்த கொஞ்சம் பேரும் இறங்கி விட்டனர். கண்டக்டர் மருவத்தூர், செங்கல்பட்டு எனக் கூப்பிட ஆரம்பித்தார்.
ரப்பர் பேன்ட் போட்டுக் கட்டிய வெள்ளரிப் பிஞ்சுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், வெவித்த நிலக்கடலை 10 ரூபாய், என வாங்கிக் கொள்ள சொன்னார்கள். ஐம்பதை நெருங்க இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது. வயதுக்கு உரிய எல்லா வியாதியோடும் அமர்ந்திருந்த அவரிடம் திரும்பத் திரும்பக் கேட்டனர். இப்போது யாரும் வாங்க மாட்டேன் என்கிறார்களே, ஏழைகள் இப்படியா கஷ்டப்படணும், மழை வந்தால் வேறு வேலைக்கு போவார்கள், என்று நினைத்தார் கணபதி தம்பி. பாவம் வேர்வையில் வாடி வதங்கிப்போய் போய் ஆண்கள் தலையில் தொப்பியோடும் பெண்கள் வெறும் தலையோடும் கையில் இருப்பதை வரும் பஸ்கள் நிற்கும்போது ஓடி ஓடி வாங்கச் சொல்லி கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.
வெய்யில் மிகக் கடுமையாக இருந்தது. யாராவது வாங்க மாட்டாங்களா எனத் தோன்றியபோது, பஸ் வழிச் சீட்டுகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.
எல்லோருக்கும் அதிக கஷ்டமில்லாமல் நிரந்தரமாக ஒரு வேலை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கடவுள் என்று ஒருவர் இருந்தால் இப்படியா கஷ்டம் கொடுப்பார். இரண்டு நாள் சேர்ந்தாற்போல் வழியில் பார்த்து விட்டால், ஏன் வேலைக்கு போகவில்லையா, என்று கணபதி தம்பியை பார்த்து கத்தியைச் சொருகி எடுக்கிறார்கள். அவர் பார்க்க மாட்டேன் என்றா சொல்கிறார், எங்குமே வேலை இல்லை. சுதாரிப்பதற்குள் அடுத்த கேள்வி, உடம்பு சரியில்லையா, என்று. ஆத்திரம் வந்தது. ஒன்றும் நினைக்க வேண்டாம் என எதிரில் வரும் வாகனங்களை வேடிக்கை பார்ப்பதும் மணி பார்ப்பதுமாக இருந்தார். காரணம் இல்லாமல் பஸ்ஸின் வேகம் குறைவதும் பிறகு கூடிச் செல்வதுமாக இருந்தது. கூடுவாஞ்சேரி வரும்போது 6 மணி. அவ்வளவு டிராபிக் ஐாம். டிரைவரிடம் தயங்கிக் கொண்டு அவரது நிலையை, அதாவது ஹைதராபாத் வண்டி 8 மணிக்கு, என்று சொன்னார்.
“சார் முயற்சிக்கிறேன். எனக்கு 7.25 க்கு டிரிப் திரும்பவும். இங்கே பாருங்க ஒரு ஆள் போவதற்கு ஒரு காரை எடுத்துக் கொண்டு வந்து விடுகின்றனர். இவர்களால்தான் இந்த மாதிரி நிற்க வேண்டியிருக்கிறது. எத்தனை பஸ் விட்டு என்ன பிரயோசனம்? சார், நீங்க ஒன்னு செய்யுங்க. பதட்டப்படாம ஆம்னிகாரனுக்கு போன் போடுங்க. 10 மணி வரைக்கும் சீட் ஏத்துவானுங்க, ரோகினி தியேட்டர்ட்ட,” என்றார். டிரைவரின் நிதானம் கலந்து ஓட்டும் லாகவம் புன்னகையுடன் அந்த பண்பு அபூர்வமாக தெரிந்தது
ஆம்னி ஆபீஸ்க்கு கணபதி தம்பி போன் செய்தார். ஆம்னிகாரனின் போன் தொடர்ந்து என்கேஜூடுவாகவே இருந்தது. ஒன்றும் செய்வதற்கு இல்லை. சாலை முழுவதும் விதவிதமான கார்கள், மணல் லாரிகள், பஸ்கள் நின்று கொண்டு இருந்தன. வண்டி எடுத்து திரும்ப நிற்கும்போது எல்லாம் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு கணபதி தம்பி தவிப்பதைப் பார்த்த டிரைவர் முடிந்த அளவு விரட்டியும் ஹாரன் அடித்துக் கொண்டும் ஓட்டி வந்தார். அங்கிருந்து கோயம்பேடு வருவதற்குள் 8 மணி ஆகி விட்டது. இடையில் எதிர்பார்த்த ஆம்னிகாரனின் போன் வந்தது கணபதி தம்பிக்கு. தனது நிலையைச் சொல்லி ரோகினி தியேட்டரில் இறங்கி கொண்டு டிரைவருக்கு, நன்றி, நன்றி, சார், என தன்னையறியாமல் இரண்டாவது முறையும் சொன்னார்.
ஹைதராபாத் செல்வதற்கான பிக்கப் பஸ் 9 மணிக்குதான் வந்தது. ஏறியதும் சிறிது நிம்மதி அவருக்கு அருகில் இருந்தவரிடம் சினேகமாக புன்னகைத்தார்.
நீங்க ஹைதராபாத் தான, என்று இந்தியில் கேட்டார். ஆமாம், என்றதும் “நான் முதல் முறையாக ஹைதராபாத் செல்கிறேன் எனக்கு தெலுங்கு தெரியாது ஒரு நேர்முக தேர்வு இருக்கிறது நீங்கள் கொஞ்சம் இந்த முகவரியை பாருங்கள்- பாலநகர், இன்டஸ்ரியல் எஸ்டேட், ஹைதராபாத். இந்த இடம் வந்ததும் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்,” என்றார். வாங்கிப் பார்த்த அவர், நான் இதற்கு முன்பே இறங்கி விடுவேன், என்றதும், பக்கத்தில் இருந்தவர், நான் அந்த இடத்தைத் தாண்டிதான் போகிறேன். கவலைப்பட வேண்டாம், சொல்கிறேன் என்றார். கணபதி தம்பி அவருக்கும் ஒரு வணக்கம் வைத்தார் நன்றியுடன்.
ரெட்கில்ஸில் வேறு பஸ்ஸில் மாற்றி விட்டார்கள். ஏசி வால்வோ சிலிப்பர் போர்த்திக் கொள்ள பிளான்கேட் என நவீனமாக இருந்தது. ஹைதராபாத் காரருக்கு இருக்கை மிகப் பின்னால் போய் விட்டது. பஸ்ஸில் சவுண்ட் அதிகமாக படத்தைப் போட்டு விட்டனர். ஒரே தொல்லை. தெலுங்கு சினிமா. மனம் ஒன்றி பார்க்க முடியவில்லை அவருக்கு எல்லாம் அடிதடி படம் இரைச்சல் ஏசி குளிருக்கு பிளாங்கேட்டால் காதை மறைத்து போர்த்தி கொண்டார் .இந்த வேலை கிடைத்தால் அடுத்த முறை விமானத்தில்தான் செல்ல வேண்டும் கற்பனையில் ஆழ்ந்தார்
எப்போது உறங்கினார் என தெரியவில்லை
சத்தம் கேட்டு அவருக்கு விழிப்பு வந்த போது காலை 5மணி ஹைதராபாத் சிட்டி 100 கி மி என போர்டில் தெரிந்தது இன்னும் 2 மணி நேரத்தில் வந்து விடும் நல்ல தூக்கம் ஆதலால் புத்துணர்ச்சியாக நேர்முகத்தேர்வு எப்படி இருக்கும் ஒன்றும் அதற்காக தயாராகவில்லையே என்று தனது தற்போதைய ரெஸ்யுமை மனக்கண்ணில் கொண்டு வந்தார். செய்த புராஜக்ட் வேலையெல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகத்திற்கு கொண்டு வந்து வேலைகளை நினைவுபடுத்திக்கொண்டார். அவற்றில் மிகப்பெரிய வேலைகள், நடுவாந்திர வேலைகள், சிறிய வேலைகள் என வகைப்படுத்தி கொண்டு வந்து கேள்விகள் எப்படி இருக்கும் பதில் எப்படி சொல்ல வேண்டும் என்பதை கற்பனை செய்து பார்த்தார். கடைசியாக நடந்த நேர்முகம் எல்லாம், 20 வருடத்திற்கு மேல் அனுபவம் உங்களுக்கு நீங்களே செய்த வேலைகளை பற்றி சொல்லுங்களேன், என்பார்கள். கணபதி தம்பிக்கு அவர்கள் முகத்தைப் பார்த்தவுடன் ஒரு பிடி கிடைக்கும். பிடித்த மாதிரி சொல்வதற்கு ஓரளவு தெரிந்தும் வைத்து இருந்தார். அதையும் தாண்டி நிராகரிக்கப்பட்டும் இருக்கிறார், தானும் நிராகரித்து இருக்கிறார். ஆனால் இப்போது எந்த வீம்பும் பிடிக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு நடிப்புதான், அவர்களுக்கு பிடித்த மாதிரி இன்று நடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் வெளியே பார்க்க ஆரம்பித்தார்.
பஸ் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் அதிவேகமாக சென்று கொண்டு இருந்தது. கதிர் அறுத்த நெல் வயல்கள் கோரைப்பாயை விரித்துப் போட்டது போல் சின்ன சின்ன கட்டமாக தெரிந்தது ஹைதராபாத் இது வரை வந்தது இல்லை, ஆனால் பார்க்க வேண்டும் என்ற ஆவல் சின்ன வயதிலேயே அவருக்கு இருந்தது. காரணம் சிகரெட் அட்டைதான். அப்போது சிகரெட் அட்டை வைத்து கோலி விளையாடுவார். அவரது அப்பா வில்ஸ் பிளைன்தான் பத்த வைப்பார். அந்த அட்டைப் பெட்டியை தந்தால் 4 சார்மினார் அட்டை தருவான் பிச்சுவா. அவன்தான் சொன்னான் அட்டையில் இருந்த படத்தைக் காட்டி,இது அல்லா கோயில்டா, ஒரு நாளைக்கு பார்க்கணும்டா, என்றது இன்னும் மனது ஓரம் அப்படியே இருக்கிறது அவருக்கு. சார்மினார் எங்கு இருக்கிறது என்பதை சின்ன வயசுலேயே தெரிந்து கொண்டார்.
பஸ் சிட்டியில் நுழைந்து ஒவ்வொருவராக இறக்கி விட ஆரம்பித்ததும் கணபதி தம்பி திடீரென்று ஞாபகம் வந்து நண்பரை பார்கிறார், அவரும பார்க்கிறார். கிட்டே நெருங்கி, எங்கு இறங்க வேண்டும், என்று கேட்டதும் அந்த இடம் தாண்டி வந்து விட்டோம். நீ முதலிலேயே கேட்காமல் இப்ப வந்து கேட்கிறாயே, என்று அவர் கேட்டதும் கணபதி தம்பிக்கு, ச்சை இப்படியா ஏமாறுவோம், பகல் கனவில் இருந்தால் இப்படிதான். நாமாகவே டிரைவரை கேட்டு இருக்கலாம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை நமது முட்டாள்தனம்தான் என்று வந்த நிறுத்தத்தில் இறங்கி கொண்டார்.
நேரமோ பசியோ அவருக்குத் தெரியவில்லை, முதலில் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பை தவிர. சுற்றிப் பார்த்தார் எல்லோரும் அவசரமாக வரும் பஸ்ஸில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். பக்கத்தில் இருந்த கடைகளில் வியாபாரம் அதிகம், டிபன் டீ என பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தனர். யாரிடம் கேட்கலாம் என ஒவ்வொரு முகமாக பார்த்துக் கொண்டே வந்தபோது தூரத்தில் தனியாக அமர்ந்து ஷூவுக்கு பளபள என பாலிஷ் போடுபவரைப் பார்த்தார் . கை மித வேகத்தில்ஷூ வை நேர்த்தியாக பளபளப்பாக ஆக்குகிறது. எல்லா கால்களையும் பார்க்கிறார் அவர், நிமிரவே இல்லை.
கணபதி தம்பி நேராக அவரிடம் சென்று இந்தியில் முகவரியைச் சொல்லி எப்படி செல்வது என வழி கேட்டார். சிறிது நேரம் ஒன்றும் பதிலில்லை. பிறகு, சென்னையிலிருந்து வருகிறேன் எனக்கு தெலுங்கு பேச தெரியாது இந்தி பேச வரும் படிக்க வராது, என்றதும் ரோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போ, வர வண்டிய கேளு, என்றார் பாலிஷ் போட்டுக் கொண்டே, மிக எரிச்சலாக இந்தியில்.
சிக்னல் இல்லாத ஹைவேயை தாண்டுவது கஷ்டமாக இருந்தது. அவ்வளவு வாகனங்கள் நிற்காமல் வந்து கொண்டே இருந்தன. ஒரு வழியாக சாலை தாண்டி பாலநகர், பாலநகர் என கேட்க ஆரம்பித்தார். வரும் வண்டிகள் எல்லாம் உதட்டை பிதுக்கி காண்பிக்கின்றனர். எங்க போகவேண்டும், என தெலுங்குலேயே கேட்கின்றனர். பத்து மணி. அவர் சோர்ந்து போக ஆரம்பித்து விட்டார். ஒரு வெள்ளை டாட்டா வேன் வந்தது. காலியாக இருந்ததைப் பார்த்து டிரைவரிடம், சென்னையிலிருந்து வருகிறேன், எனக்கு பாலநகர் போகவேண்டும் ஒரு இன்டர்வியூ இருக்கு, கொஞ்சம் உதவ முடியுமா, என்றார் இந்தியில்.
டிரைவர் கணபதியின் முகத்தையும் தோரணையையும் ஒரு முறை பார்த்தார். முன்னாள் வந்து உட்கார், என்று சொல்லி விட்டு டிக்கெட் ஏற்ற ஆரம்பித்து இரண்டு மூன்று பேர் ஏறியவுடன் வண்டியை எடுத்தார். முகவரியை திரும்பக் கேட்டு சரியாக அதே இடத்தில் இறக்கி விட்டுச் சென்றார்.
அவர் எதிரே அந்த அடுக்கு மாடி கட்டிடம் நின்றது, கம்பெனியின் பெயர் தாங்கி. செக்யூரிட்டி செக்கப் முடித்து உள்ளே விட்டனர். முப்பதிலிருந்து ஐம்பதுக்குள் அவர்கள் ஐம்பது பேர் ஒரு ஹாலில் உட்கார வைக்கப்பட்டனர். எல்லோருக்கும் ஒரு அப்ளிகேஷன் பார்ம் தந்து, தகுதி, அனுபவம், சம்பளம், விபரங்களை நிரப்பி வாங்கிக் கொண்டனர். யாரை முதலில் கூப்பிடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடும் ஆவலோடும் எச் ஆர் முகத்தை பார்த்து கொண்டு இருந்தனர் எல்லோரும். எச் ஆர் கம்பெனியை பற்றி ஒரு சின்ன அறிமுகம் என்று கையை காட்டினார். அவரது ஐூனியர் அந்த ஹாலில் இருந்த அத்தனை லைட்டையும் ஆப் பண்ணி விட்டு புரோஐக்டரை ஆன் பண்ணினார்.
ஒரு துளி வெளிச்சம் பொட்டாக திரையில். பிறகு குளோசப்பாக காட்சி திரையில் விரிந்த போது ஒரு சிறுவன் விளக்கு ஒளியில் பாடபுத்தகம் வாசிப்பது தெரிந்தது. ஒரே ஒரு மின்மினி பூச்சி அந்த விளக்கு ஒளியை நோக்கி வந்தது. சிறுவன் படிப்பை விட்டு விட்டு மின்மினி பூச்சியை பார்த்தான். அதைப் பிடிக்க துரத்தினான். அப்போது எண்ணற்ற பூச்சிகள் சேர்ந்து கொண்டன. சிறுவன் துரத்திச் செல்கிறான். பாதை முடிந்து மிகப்பெரிய பள்ளம், எதிரே. சிறுவன் தயங்கிப் பார்க்கிறான். பள்ளத்தில் எல்லாம் மின்மினி பூச்சிகளின் வெளிச்சம், இப்போது வீட்டில் எரியும் விளக்காக தெரிகிறது. இருட்டு முழுவதும் அகன்று வெளிச்சம் மொத்தமும் வீடாகவும், ரோடாக, பாலமாக, டேமாக, மெட்ரோவாக, இன்டஸ்ரியல் கன்ஸ்ட்ரக்ஷனாக, பவர் மற்றும் சோலார் பிளாண்டாக மாறும்போது சிறுவன் வளர்ந்து கம்பெனி லோகோ முன் நிற்கிறான், முதலாளியாக.
ஐந்து நிமிட காட்சியில் கட்டிப் போட்டு என்ன எதிர்பார்கிறார்கள் என்பதை தெளிவாகச் சொல்லி விட்டனர். ஆழ்ந்த பெருமூச்சு சத்தங்கள் கேட்டது. மனம் தனக்குத் தெரிந்த ப்ளஸ் மைனஸ்களை கணக்கு போட ஆரம்பித்தது தானாகவே, கணபதி தம்பிக்கு. அருகே இருந்தவர்களும் குழப்பமாக ஆலோசிக்க ஆரம்பித்தனர். பேஞ்சூத் என்று, சத்தம் திரும்பி பார்த்தார்
இரண்டு பேர் தங்களுக்குள் இந்தியில் திட்டிக் கொண்டே, எங்கேயேயுமே வேலை இல்லை, நீ எங்கேயிருந்து வருகிறாய், என்றனர். சென்னை, என்றார் கணபதி தம்பி. பச் என்று சத்தத்தோடு சரி, மேற்கொண்டு ஒன்றும் கேட்கவில்லை. பத்து பத்து பேராக குழுவாக அழைத்துச் சென்றனர். தனது முறைக்காகக் காத்திருந்தார்.
நேர்முகம் முடியும்போது மணி 12.30. வெளியில் வந்தால் இரும்பையே உருக்கும் வெய்யில். காற்றே இல்லை. கண்கள் சிவந்து எரிய ஆரம்பித்து விட்டன. செம்மஞ்சள் நிறத்தில் பங்கனப்பள்ளி மாம்பழங்கள் பெரிய கூடைகளில் அடுக்கி இருந்தனர். புள்ளியாக வைத்த தரை சக்கரம் போல் தெரிந்தது. கடும் வெய்யிலுக்காக சாலையோரம் தண்ணீர் பந்தல் அமைத்து இருந்தனர்.
ரிட்டன் பஸ் 8 மணிக்குதான். சார்மினாரை பார்த்து விடுவோம், என காத்திருந்து பஸ் ஏறி அங்கு சென்றார். வழி யெங்கும் நவாப் காலத்து பழமையான கட்டிடங்களும் நவீன கட்டிடங்களும் மால்களும் மெட்ரோ பாலமும் வந்து கொண்டே இருந்தது. கராச்சி சுவிட் ஸ்டால்கள் இருந்தன. மக்கள் வெய்யிலைப் பொருட்படுத்தாமல் அவர்கள் வேலையைப் பார்க்க அலைந்து கொண்டு இருந்தனர்.
மறுநாள் பின்மதியம் வீடு திரும்பினார் கணபதி தம்பி. இரண்டு நாள் தொடர்ந்து பயணத்தினால் உடம்பு வேதனை. நாற்காலியில் அமர முடியவில்லை அவருக்கு. ஷோல்டர் பேக்கை வைத்துவிட்டு சட்டையோடு குப்புற படுத்தார். சின்ன மகனைக் கூப்பிட்டு மிதித்து விடச் சொன்னார், நடு முதுகிலிருந்து பிருஷ்டம் வரை. மனைவி குடிக்க தண்ணீரும் ‘ டீ” யூம் கொடுத்தார். குடித்து விட்டு குளித்து வரும் வரை முகத்தை பார்த்து கொண்டு இருந்தனர் வீட்டினர்.
உடம்பு வலி போக்கும் சூப் ஆவி பறக்க எதிரே வைத்துவிட்டு, ஆறுவதற்கு முன் குடியுங்கள், என்றதும் மிளகின் நெடி நாசிக்கு இன்பமாக இருந்த தருணத்தில் மனைவியின் ஆர்வம் தெரிந்தது அவருக்கு.
இரண்டு பேர் இண்டர்வியு செய்தார்கள், என்று ஆரம்பித்தார்.
ம், சொல்லுங்க, என்றார் கணபதி தம்பியின் மனைவி.
அதில் ஒருவர் பெண் நடிகை சரிதா போல் இருந்தார். முதலில் உங்களை பற்றி கூறுங்கள், என்றார் அவர்.
சூப்பை ஒரு முறை உறிந்து கொண்டார். காரத்தில் தலையை ஒருமுறை சிலுப்பிக் கொண்டு, அடுத்து வேலையை பற்றி கேட்டார்கள், என்றார். எங்கல்லாம் வேலை பார்த்திருக்கிறீர்கள், என்றும் என்ன மாதிரி வேலை செய்திருக்கிறீர்கள் என்றும், ஆண் மட்டுமே தொடர்ந்து கேட்டு கொண்டு இருந்தார் என்று சொன்னார் கணபதி தம்பி.
இதுவரை பார்த்த வேலைகளில் அவர்கள் கம்பெனிக்கு உகந்தவைகளை விரிவாக .நம்பக் கூடிய வகையில் சொல்லிவிட்டு,எங்கு பிரச்சினைகள் வரும், அதை எப்படி சரி செய்யலாம், என கூட சொன்னேன், என்றார் கணபதி தம்பி. எல்லா மிகப் பெரிய வேலைக்கும் ஸ்பெக்க்கும் திட்டமிடலும் பாதுகாப்பு பற்றிய டாக்குமெண்ட்ஸ் பார்த்தால் செய்துவிட முடியும் என்றும் பிறகு அவர்கள் கம்பெனி செய்யாத வேலைகளை அவர் செய்ததாக சொன்னபோது, சில சமயம் சரிதா அலட்சியமாகவும் தன் அகன்ற கண்களால் வியப்பாகவும் பார்த்தார். .அதைப் பார்த்து, கணபதி தம்பி சரிதாவைப் பார்த்து ஆவலாக, நீங்க ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க, என்றார்.
அது வரை எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்த சரிதா ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டார், என்று சொன்னார் கணபதி தம்பி.
என்ன, என்று ஆவல் தாங்காமல் கேட்டாள் கணபதி தம்பி மனைவி.
“மிஸ்டர் கணபதி, நீரு தமிளா? தெலுங்கு தெலுசா?“