ஒரு வெள்ளிக்கிழமையன்று பள்ளி விடும் சமயம் வாரக்கடைசியை எப்படிக் கழிக்கலாம் என்று ஒரு சிறுவன் யோசிப்பதில் தொடங்கும் இந்தக் கதை, வெவ்வேறு மனிதர்களைக் கடந்து சென்று நாம் சாதாரணமாக எண்ண முடியாத ஒரு முடிவை அடைகிறது.
தி வேல்முருகனுடைய கதைகளில் இருக்கும் ஒரிஜினாலிட்டி அவற்றை மற்ற எல்லோரிடமிருதும் வேறுபட்டு நிற்க வைக்கிறது. இந்த மனிதர்களை வேல்முருகன் அன்றி வேறொருவர் நமக்கு அறிமுகப்படுத்த முடியாது. அதுவும், ஒரே கதையில் வரும் வெவ்வேறு மனிதர்கள், ஒன்றுபடும் விதமும் வேறுபடும் விதமும் சிந்திப்பவர்களுக்கு பல திறப்புகளைத் தரக்கூடும். அவர் அப்படி நினைத்து, தன் கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் என்று நீங்கள் சொல்லக்கூடும். எனக்கு அப்படித் தோன்றவில்லை. என் எண்ணம் தவறென்றாலும் பிரச்சனையில்லை. அது அவருடைய கதைகள் தரும் உற்சாகத்தையும், அளிக்கும் தாக்கத்தையும் எந்த விதத்திலும் குறைத்துவிடுவதில்லை.
இங்கே ஆயாவும் பவுனும். இரண்டு பேருக்கும் ஒரு தலைமுறைக்கான இடைவெளி இருந்தாலும் பவுனின் இன்றைய நிலையும், ஆயாவின் முந்தைய நிலையும் ஒன்று- ஆயாவை குழந்தைகளையும் விட்டுவிட்டு அவள் கணவன் போனபின் அவள் குடும்பத்தைக் கரை சேர்க்கிறாள், பவுனு பொறுப்பில்லாத கணவனுடன் இருந்தாலும், குழந்தை இல்லாத குறைக்காக வருந்துகிறாள். இருவரும் வெவ்வேறு விதமாக தங்கள் நிலையைக் கடக்கிறார்கள். பவுனை நம்முடைய காலத்து மனுஷி என்று வைத்துக் கொண்டால், நமக்குள்ளிருந்து எழும் குரலை நம்பி மேலேறி வருவதை விட, இன்றைக்கு நம்முடைய சொந்த வாழ்க்கைக்கு மற்றவர்களின் அங்கீகாரம் நமக்கு அவசியமாகிவிட்டதோ என்று தோன்றுகிறது. ’உன் வயதில் நானும் பிள்ளைகளை வைத்துக் கொண்டு மேலே வரவில்லையா’ என்று கேட்கும் ஆயாவுக்கு எனக்குப் பிள்ளைகள் இல்லை என்று பவுன் சொல்கிறாள். மனிதர்களுக்கு அவர்களைச் சார்ந்து யாரும் இல்லை எனும்போது, வரும் வேகத்தை என்னவென்று சொல்வது? இல்லை, ஒருவனோ ஒருத்தியோ தனக்காகவே மட்டுமே தன்னுடைய வாழ்க்கையை முன்னெடுத்துக் கொண்டு செல்வது அத்தனை கடினமானதா?
என்னைப் போல தேவையில்லாததை எல்லாம் எழுதிவிடும் கெட்ட பழக்கம் வேல்முருகனிடம் இல்லை. கதைக்கு என்ன தேவையோ அவற்றை மட்டுமே எழுதும் ராணுவ ஒழுங்கு அவரிடம் இருக்கிறது. ஒவ்வொரு வரியும் கதையை முன்னே எடுத்துக் கொண்டு போவதை இந்தக் கதையில் காணலாம்.
அவன் (அந்தச் சிறுவன்) தன்னுடைய வாரக்கடைசி இப்படிப் போகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆயாவுக்கும் பவுனுக்கும் நடக்கும் சந்திப்பும் அதன் தொடர்ச்சியும், மாமா வளர்க்கும் ஆட்டுக்கு விழும் அடியும் கூட அவை நிகழும் நொடிக்கு முன்பு வரை எதிர்பாராதவை. தன் பாட்டியுடன் அவள் வீட்டுக்கு வார இறுதியில் செல்லும் சிறுவன் அங்கு தன் மாமாவுடன் ஊர் சுற்றுகிறான். அவர் ஆடு வளர்க்கிறார், அது இவன் கொடுக்கும் புல்லைத் தின்றதும் முட்ட வருகிறது- தான் வளர்க்கும் ஆட்டுக்கு அவர் சண்டை பழக்கிக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் ஆடுகளுக்கு இடையில் நடக்கும் சண்டையில் வெளிப்படும் வன்மம் இயற்கையாகவே அவற்றுக்கு உரியதா அல்லது அதுவும் மனிதர்களால் பழக்கப்பட்டதா என்றே சந்தேகம் வருகிறது. மனிதனையும் மிருகத்தையும் எது பிரிக்கின்றது என்று யோசித்தால் மனிதனின் காரணமற்ற, ஆனால் திட்டமிட்ட வன்முறையும், தன்னிச்சையாய் அவனுள் சுரக்கும் கருணையும்தான் என்று தோன்றுகிறது. வேல்முருகனுடைய எழுத்து இந்த திருப்பங்களை சிந்தனையின் உளைச்சல் இல்லாமல் மிக இயல்பாகவும் எளிதாகவும் கொண்டு சேர்க்கின்றது.
பொதுவாகவே வேல்முருகன் எழுதும் கதைகளில் பலவற்றின் முடிவு ஒரு எளிதான செண்டிமெண்டாலிடியை நோக்கிச் செல்வதைப் பார்க்க முடியும். அது இந்தக் கதையிலும் இருக்கிறது. ஆனால் அதற்கு வேல்முருகனைக் குற்றம் சொல்ல முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. அவர் காணும் மனிதர்கள் இயல்பாகவே மிக எளிதில் நெகிழ்ந்து விடுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் கோபமும் குரூரமும்கூட கனிவு நிறைந்த ஒரு கணத்தை நோக்கிக் காத்திருப்பவை.