தி வேல்முருகன்
மணி 4.15க்கு கடைசியாக டிங் டிங் டிங் என்று ராகத்தொடு ஆரம்பித்து டாங் டாங் என்று முடிந்தபோது அவனுக்கு முன்னால் மனம் சென்று விட்டது வீட்டிற்கு.
வரிசையாகதான் செல்ல வேண்டும். 4வது வாத்தியார் வாசலில் நின்று கொண்டு ஓவ்வோரு வகுப்பாக வெளியே விட்டார். ஒவ்வொரு வகுப்பிலும் அ, ஆ என இரண்டு பிரிவுகள் உண்டு. இவனது பிரிவு வந்தபோது முதல் ஆளாக பிடித்த ஓட்டம் வீடு வரும்வரை தொடர்ந்தது.
தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் விடுமுறை- சனி, ஞாயிறு என்று மனம் கணக்கிட்டது. மரமேறி மாங்காயும் கொய்யாக்காயும் பறித்து திங்கனும், கொடுக்காப்புளி அடித்து திங்கனும் என்று நினைத்துக்கொண்டே ஓடிய ஓட்டத்தில் சீக்கிரம் வீடு வந்து விட்டது.
குடத்தில் வாயை வைத்துச் சாய்த்துக் குடித்தபோதுதான் பார்த்தான், ஊரிலிருந்து ஆயா வந்திருந்தார். உடனே அனைத்தும் மறந்து விட்டது, இப்போது அவனுக்கு ஆயாவுடன் ஊருக்குச் செல்ல வேண்டும்.
“ஆயா, எப்ப வந்திங்க?”
“ஒரு மணி வண்டிக்கு வந்தேன்டி”
“ஆயா, ஊருக்கு நானும் வரேன். எனக்கு இரண்டு நாள் லீவு”
“மாராசனா வாடி”
அம்மா இடையில் புகுந்து, “வாண்டாம், அவன் சொன்ன பேச்சு கேட்க மாட்டான்,” என்றார்.
“நான் கேட்கிறேன் ஆயா, நீ சொல்லு ஆயா”
“இல்லம்மா… பொழுது போயிடும், நீ எப்படிம்மா இவனை இட்டுட்டு தனியா போவ?”
“புள்ள ஆசைப்படுறான், மோட்டையன பொட்டி வண்டி கொண்டு வரச் சொல்லி இருக்கேன், இவனை அனுப்பும்மா”
“ஏய், மாத்து துணி எடுத்துக்க, ஆயாவை தொந்தரவு பண்ணாம பார்த்து இருந்துட்டு வா”
“சரிம்மா”
பையை எடுத்த அவன் ரயில்வே ஸ்டேஷன் வரும்வரை கேட்ட கேள்விக்கு எல்லாம் ஆயா பொறுமையாக பதில் அளித்தார். டிக்கெட் எடுத்து ரயில் ஏறியதும் ஐன்னலை ஒட்டி நின்று கொண்டு, ஓட தொடங்கியதும் காட்சிகளைப் பார்த்து, “ஆயா, இது வெள்ளாறு, இது பழையாறு, இப்ப கிள்ளை வரும் பாரு,” என்றபோது வந்துவிட்டது கிள்ளை.
“யம்மா, அரும்பு, அரும்பு… குண்டுமல்லி, குண்டுமல்லி…”
அவனும் சேர்ந்து ராகம் வைத்ததில் அந்த அக்கா கோபத்துடன் திரும்பியதும் இவன் ஆயா பின்னாடி ஒளிந்து கொண்டான்.
ஆயாவைப் பார்த்தவுடன், அத்தே எங்க, மகவூட்டுக்கு போயிட்டு வரியா?” என்றாள் அந்த அக்கா.
“ஆமாண்டி பவூனு”
“நல்லா இருக்கா உம் புள்ள?”
“இருக்காடி. நீ எங்க இங்க நிக்கற? என்னாச்சுடி, கட்டிக் குடுத்த இடத்தில பிரச்சினையா?”
“இதாரு, உம் பேரனா?”
“ஆமாண்டி. நீ ஊருக்கு வரதுல்ல, வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்”
“குடிகாரன் அத்த, அத ஏன் கேட்கற? குடிச்சுட்டு அடிப்பான், குடிக்கலனா சந்தேகப்பட்டு அடிப்பான். தாலியத் தவிர நிலம் நட்டு ஒன்னுடாம குடிச்சு அழிச்சாட்டியம் பண்ணி இப்ப பத்தாயிரம் பணத்தோட வாடின்னு சொல்றான். அப்பா, அம்மாவுக்கு வயசாயிடுச்சு. ஒரு ஏக்கர் நிலத்தை வித்துதான் என்ன கரையேத்துச்சு, இப்ப இங்கே திரும்ப வந்து சீரழியணுமானுருக்கு”
கண்ணீர் துளிர்த்து இரண்டு கண்ணிலும் வழிகிறது.
“அழாதடி, நான்லாம் இல்லையா?புள்ளகுட்டில விட்டுவிட்டு அவரு போனதும் வானமே இடிஞ்சு தலை மேல விழுந்த மாதிரி இருந்துச்சு. நான் மீண்டு வரல? என்ன, எம்மவன்தான் சொன்ன பேச்சு கேட்க மாட்டான்”
“இல்லத்த… புள்ளைவோ இருந்தா முகத்த பார்த்துட்டு இருந்திடலாம். இங்கே அண்ணிவோ எல்லாம் தப்பா பேசறாளுவோ, உயிர உட்டுடலாம் போலிருக்கு. நான் ஏன் இருக்கணும், நீ சொல்லு?”
எதிர் திசையில் வந்த இரயில் வேகமாய் கடந்து சென்றது. ஆயா அக்காளின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு, “அவசரப்பட்டுடாதடி காலம் மாறும். வந்து புருஷன் இட்டுப் போவான், பவுனு அவசரப்பட்டுடாதடி” என்று சொன்னாள்.
அக்கா இவனை அழைத்து இரண்டு கன்னத்தையும் வழித்து நெட்டி முறித்து முத்தம் கொடுத்தார்.
இரயில் நின்றதும் அக்கா இறங்கிக் கொண்டார். அது மீண்டும் புறப்பட்டதும் சிறிது தூரம் வரை வந்து கையாட்டினாா், ஒரு கண்ணில் கோடாககண்ணீர் தெரிந்தது.
ஆயா கண்ணிலும் நீர். வேறெங்கோ சென்றிருந்தார். இவன் வெளியே பார்த்தான். வண்டி சிதம்பரம் தாண்டி பழங்கொள்ளிடம் வந்து விட்டது.
“ஆயா, வந்துடுச்சி”
வெளியில் பார்த்து, உடனே பையோடு எழுந்தார். “சும்மாவா சொன்னாங்க, சாண் புள்ளனாலும் ஆண் புள்ளதான். நல்ல வேளை, வண்டி போயிருக்கும், கடவுளே, யப்பா கைய புடிச்சுக்கடி”
இறங்கிப் பார்த்தபோது மொட்டைப்பிள்ளை வண்டி பூட்டிக் கொண்டிருந்தார்.
இருவரும் ஏறியபிறகு பொட்டி வண்டி நகர்ந்தது. ஆயா, மொட்டப்பிள்ளையிடம், “இந்த ஊட்டுகாரன பார்த்தியா? சாயந்திரம் செம்மறி ஆட்டப் புடுச்சுகிட்டு மேற்கே போனான்” என்று கேட்டாள்.
“ஆடா? எப்ப ஆயா வாங்கினிங்க?”
“இவன் ஒருத்தன்… அந்தக் கூத்த அங்க வந்து பாரு”. ஆயா வருத்தத்துடன் சொன்னதைக் கேட்டுக்கொண்டே வெளியே வேடிக்கை பார்த்தான்.
செம்மண் சாலை அது. வண்டி கேட்டை தாண்டியதும் மாடுகள் தீனியை நினைத்து மெல்லோட்டமாக சென்றன. இருபுறமும் வரிசையாக வேலி, இடையில் புளி, மா மரங்கள். ஆடு மாடுகள் மேய்ச்சல் சென்று வழியை அடைத்து கொண்டு வந்தன. வண்டி தேங்கி, பின் சென்றது. அடிவானில் சூரியன் இறங்கிக் கொண்டிருந்தது, அதன் ஒளி அவன் மேல் விட்டுவிட்டுப் பட்டது.
அவன் முன் நகர்ந்து மொட்டைப்பிள்ளையிடம், “மாமா, செம்மறி ஆடு முட்டுமா?” என்று கேட்டான்.
“ஏலே முட்டிடும். படிக்கிற பையன் நீ கிட்ட கிட்ட போயிடாத”
அவனுக்கு வருத்தமாகிவிட்டது.
வண்டி கிழனையை விட்டு இறங்கியது. இருபுறமும் சொய்சா மரங்களில் கீச் கீச் என்று பறவைகள் சத்தமிட்டதைக் கேட்டு அதிசயத்தான்.
சிறிது நேரம்தான், அவன் தளர்ந்து தூங்க ஆரம்பித்ததும், “எப்பா போழுது போன நேரம் தூங்காதடி… ஆயா கதை சொல்றேன்,” என்று எழுப்பிவிட்டாள் ஆயா.
“ஏ மொட்டைப்பிள்ளை, வண்டிய எட்டி ஓட்டு. போயி விளக்கு வைக்கணும் பாரு”
“ஆயா, கத?”
“சொல்றண்டி.
“…ஒரு ஊர்ல ஒரு ஆம்படையான் பெண்டாட்டி இருந்தாங்க, அவங்களுக்கு இரண்டு பெண் ஒரு ஆண் குழந்தைகள் இருந்துச்சு. பெரிய பொண்ணு கட்டிக் குடுத்து ஒரு பேரன் பிறந்த பிறகு அவரு குடிச்சுக் குடிச்சு உடம்பு சரியில்லாமப் போய் செத்து போயிட்டாரு. அப்புறம் அந்தம்மா இன்னொரு பொண்ணயும் எப்படியோ கட்டிக்குடுத்துட்டு படிக்காத பையன வச்சிக்கிட்டு கஷ்டப்படுது”
“ஏன் ஆயா அழுவுற?”
“ஏலே, கம்முனு வா,” என்று அதட்டினார் மொட்டைப்பிள்ளை.
“பூவோட சேர்ந்தா மணக்கும், இது பன்னியோடல்ல சுத்துது,” என்றார் ஆயா.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
வீட்டின் வாசல் கேட்டில் ஒரு செம்மறியாடு கட்டியிருந்தது.
“மாமா…” என்று அவன் ஓடிப்போய் பார்த்தபோது அதற்கு புல் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணி புல்லை உதறித் திங்கும்போதும் அது தலை ஆட்டும்போதும் ஒலியெழுப்பியது.
“மாமா, முட்டுமா?”
:கிட்ட கிட்ட போயிடாத, சன்டை பழக்கி வச்சிருக்கேன்,” என்று மண்வெட்டியின் அடிபாகத்தை காண்பித்தார் மாமா. ஆடு பாய்ந்து வந்து முட்டியது. அவன் பயந்ததைப் பார்த்துச் சிரித்தார் அவர்.
“குடுத்தனக்காரன் செய்யற வேலையா இது?” என்று சத்தம் போட்ட ஆயா, மாமா முறைத்ததும் உள்ளே சென்று விட்டார்.
“மாமா, ஆட்டுக்கு பேர் வச்சிட்டியா?”
உள்ளிருந்து, “விளக்குமாறுக்கு பட்டுக் குஞ்சம்தான் கொறச்ச,” என்றார் ஆயா.
மாமா, “யேய், பேரு முத்து. முத்து…”, என்றார் கிசுகிசுப்பாக.
ஆட்டைப் பார்த்தான். கருப்பில் மரை கலரில் பெரிய கொம்புடன் இருந்தது.
“முத்து,” என்று பில் அள்ளிக் கொடுத்தபோது அதைத் தின்று விட்டு முட்ட வந்தது அவனை. “மாமா…”
“ஏய், பழகற வரைக்கும் அப்படிதான் இருக்கும். கிட்டப் போகாத, எட்ட இருந்து குடு”
ஆயா இருவரையும் சாப்பிட கூப்பிட்டார்கள்.
சாப்பிட்டுவிட்டுப் படுக்கும்போது மாமா அவனிடம், :நாளைக்கு நம்ம முத்துவ இன்னோரு ஆட்டுக்கூட சண்டைக்கு உடப் போறேன். நீனும் வா,” என்றார்.
“ஏய், உன் போக்கிரித்தனம்லாம் அவனுக்கு சொல்லி குடுக்காத,” என்றார் ஆயா. அவர் வருத்தமா இருப்பது தெரிந்தது. மாமா திரும்பிப் படுத்து கொண்டார். இவனும் தூங்கிவிட்டான்.
மொட்டைப்பிள்ளை மாமா கழுத்தில் மாலையுடன் கையில் தீச்சட்டி ஏந்தி ஆடிக்கொண்டிருக்கிறார். அருகில் பூசாரி மிகப் பெரிய கொடுவாள் கத்தியுடன் நின்றாடுகிறார். கத்தியில் பட்டை பூசி பொட்டு வைத்து கூம்பில் பூச்சூட்டியிருந்தது. மாமா ஆட்டைப் பிடித்திருக்கிறார். ஆடு பரிதாபமாக இவனைப் பார்க்கிறது. ஆட்டை வெட்டப் போகிறார்கள் என்று உணர்ந்து அலறி எழுந்து விட்டான்.
மாமாவைத் தேடிப் போனால், ஆடு புல்லைத் தின்று கொண்டிருக்கிறது. மாமா அதைத் தடவி கொடுத்துக் கொண்டு நின்றார்.
இவனை பார்த்து, “போயி பல்ல விளக்கு, சாப்பிடு, நாம வெளியே போகணும்” என்கிறார்.
அவன் தட்டை எடுத்து வைத்ததும், இடியாப்பமும் தேங்காய்ப் பாலும் இட்டுக் கொடுக்கிறார். அது ஏலக்காய் போட்டு அமிர்தமாக இருந்தது.
“ஆயா எங்க மாமா?”
“ஏதோ செய்தி வந்து முட்லூர் போயிருக்கு. உன்னைத் தண்ணிக்கு போகாம வெள்ளாடச் சொல்லியிருக்கு. சாப்பிடு, கொல்லைக்கு போவோம்.”
“சரி மாமா”
மாமா முத்தை அவுத்துப் பிடித்துக்கொண்டு முன்னாள் நடந்தார். இவன் அவர் பின்னால் நடந்தான்.
முத்தின் விதைமணி தொடையில் உராய்ந்ததால் அது காலை அகட்டிக் கொண்டு பெண்கள் மாதிரி நடந்தது. இவன் சிரித்து விட்டான்.
“என்னடா சிரிக்கற?”
“இல்ல மாமா, ஆடு பொம்பளை மாதிரி நடக்குது”
“வக்கால…” என்று அடிக்க வந்தார் மாமா. இவன் அமைதியாகி விட்டான்.
இருபுறமும் சோளம் விளைந்து ஒடிக்கும் பதத்தில் இருந்தது. மாமாவிடம் கேட்க பயம், அவன் எதுவும் பேசாமல் நடந்தான். மாந்தோப்பு வந்ததும், “ஏய் சோளம் சுடுமா?”| என்று கேட்டார் மாமா.
“சரி, மாமா. ஆட்டுச் சன்டை எப்ப? நம்ம முத்து செய்ச்சுடுமா?”
“குட்டியா வாங்கி பழக்கி வச்சிருக்கேன். வெறும் புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, புல்லுனு கொடுத்து வளத்திருக்கேன். சொன்னதைச் செய்யும். சாயந்திரம்தான் போட்டி”
ஆட்டை அவிழ்த்து தெரித்து விட்டுவிட்டு இளம் சோளக் கதிராக ஒடித்து வந்து தீ முட்டி இட்டார். பதமாக வாட்டி அவனிடம் இரண்டு கொடுத்து விட்டு தீயில் மர்ளிக் கிழங்குகளைச் சொருகினார்.
அருகில் குருவிகள் விரட்டும் பரண் பந்தல் இருந்தது.
“யேய், இப்ப பாக்கிரியா…”
“உய், உய், உய்ய்ய்ய்ய்ய்…” என்று விசிலடித்ததும் முத்து தாவி பறந்து ஒடி வந்தது. அவன் பயந்து பரன் மேல் ஏறிவிட்டான். முத்து சுற்றி வந்து மாமா மேல் உரசிவிட்டு தீயை ஒரே தாவலாக தாவிச் சென்றது. மாமா கிழங்கும் சோளக் கதிருடனும் மேலேறி வந்தார்.
“என்னடா பயந்திட்டியா? நம்ம முத்து எப்படி பாத்தியா?”
“மாமா, அந்த ஆட்டுப் பேரு என்ன?”
“குட்டி மணிடா”
“பெருசா இருக்குமா?”
“நம்ம முத்து பெருசுதான், ஆனால் குட்டி மணி கொஞ்சம் சூட்டிகைடா”
“அப்ப முத்து தோத்துடும்”
மாமா, “யாய்,” என்று கையை ஓங்கியதும் அமைதியாகிவிட்டான். மீண்டும் விசிலடித்து முத்துவைக் கூப்பிட்டார். முத்து தாவி ஒடி வந்து பரணைச் சுற்றியது.
மாமா கீழிறங்கிப் போய் விட்டார். இவன் அருகில் இருந்த டின்னில் சிறிது மோளமடித்தான், குருவி எதுவும் இல்லை. உற்சாகம் இழந்து கீழிறங்கி மாமாவுடன் சேர்ந்து கொண்டான்.
“ஏய், அடிக்க மாட்டன் வா குளிக்க போவம்”
“எங்க போயி மாமா?”
“நம்ம இன்ஐின்லதான்”
மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வந்து இன்ஐினில் மாட்டிச் சுற்றினார். அது அசக், அசக், என்று தொடங்கியதும் சாவியை அவசரப்பட்டு எடுத்து விட்டார். சுற்று பத்தாமல் அச்சக் என்று நின்று விட்டது. மீண்டும் சாவியை மாட்டி இம்முறை கைகளில் மண்ணைத் தொட்டு கபடி வீரன் போல் சுற்றினார். இஞ்சின் அசக் அசக் அசக் என்று ஸ்டார்ட் ஆகிவிட்டது, சாவியை எடுக்க முடியவில்லை.
“ஏலேய், ஓடிடு. சாவி மாட்டிக்கிச்சு”
அவன் ஓடத்தொடங்கியதும் எதிர்ப்புற மரத்தில் இருந்த பாம்பு தாவியது. இவன் பயந்து மிரண்டு வந்த வழியே திரும்பவும் சாவி முன்னாள் விழுந்தது. பதறி நின்றவனை அடித்து விட்டார் மாமா. அழுது கொண்டே, “மாமா, அங்கே பாரு பாம்பு,” என்றான்.
“ஏலேய் நல்லதுடே”
அழுகையை நிறுத்தி, “அடிப்பமா?” என்று கேட்டான்.
“ஏய், அத அடிக்க முடியாது, போட்டுடும்”
“வா, குளிச்சு விட்டு ஆட்ட சண்டைக்கு விட இட்டுட்டு போவம்”
அவன் பார்க்கும்போதே நல்லது திரும்பி பூவரசு மரத்தில் ஏறி பொந்தில் இறங்கியதும், “மாமா பாம்பு அந்த ஓட்டையிலருக்கு, நான் பார்த்துட்டன்”, என்றான்.
“யேய், வாடா, வந்து குளிடா,” என்றார் மாமா.
அவன் மரத்தைப் பார்த்துக் கொண்டே குளித்தான். இன்ஜினை நிறுத்திவிட்டு அங்கிருந்து செல்லும்வரை தன் பார்வையை விலக்கவில்லை.
“பசிக்குது மாமா…”
தென்னையேறி இளநீர் போட்டு இன்ஐின் கொட்டாயில் இருந்து சூரிக்கத்தி எடுத்து சீவிக் கொடுத்தார். குடிக்கத் தெரியாமல் மேலெல்லாம் ஊற்றிக் கொண்டு புரையேரியது இவனுக்கு. அடிக்க கையை ஒங்கியவர் விட்டு விட்டார், இவனும் மௌனமாகி விட்டான். குளித்து தலை துவட்டியதால் முடி படிந்திருந்தது.
“ஏய், தேங்காய தின்னு”
“நீ தின்னு, எனக்கு வாணாம்”
முறைத்து விட்டு மாமா விசிலடித்ததும் மேய்ந்து கொண்டிருந்த முத்து மான் போல துள்ளி ஒடிவந்தது. உற்சாகமாகி, “மாமா, மாமா, நான் தரேன்,” என்றான். முத்து ஆவலோடு கையில் இருந்த தேங்காயைத்
தின்றது.
“சரி வா, போவும்”
முன்னும் பின்னுமாக முத்துவுடன் நடந்து மேடு இறங்கியதும் தூரத்தில் ஆற்றுக் கரம்பில் ஆடுகள் மேய்வது தெரிந்தது நெருங்கியதும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பாலேசன் வந்தார்.
“ஏய் பாலேசா, மணிய பிரிச்சு கொண்டு வா. சண்டை உடணும்”
” வாணாண்ணன், ஓ ஆடு தோத்துப்புடுச்சுனா நீ என்ன அடிப்ப, நான் வரல”
“ஏலே, இப்ப பிரிக்க போறியா, உத வாங்கப் போறியா?” சூரிக்கத்தியை எடுத்தார் மாமா. பாலேசன் அவரது ஆட்டைப் பிரிக்க சென்றதும் மாமா முத்தின் தலைக் கயிறு, மணிக்கயிறு எல்லாம் அவிழ்த்தார், முத்து முண்டம் போல் தெரிந்தது. தட்டித் தட்டிக் கொடுத்தார். முத்து, தன் தலையை ஆட்டிக் கொண்டு, மண்ணை முன் காலால் கிளறி ரோமாஞ்சனம் கொண்டு சிறிது மமதையுடன் நின்றது. அவன் மனதில் முத்து ஐெயிக்கனும் என்று வேண்டிக் கொண்டு திரும்பியபோது குட்டி மணிய்ஹை பெட்டைகளின் பின்னிருந்து பாலேசன் பிரித்துக் கொண்டு வந்தார்.
பத்தடி தூரத்தில் ஓன்றை ஓன்றை பார்க்கும்படி நிறுத்தி, பாலேசன் “உம்”, என்றதும் மிக அலட்சியமாக குட்டி மணி முத்தை எதிர்கொண்டது. முதலில் ஓரே சீராக இரண்டும் முட்டிக் கொண்டன. சிறிது சிறிதாக உச்சபச்ச வேகத்தை அடைந்தது சண்டை. தொடர்ச்சியாக பின்னகர்ந்து முன்னேறி இரு ஆடுகளும் முட்டிக் கொண்டன. முத்து சோர்ந்து போகாமல் சண்டை போட்டது, இறுதியில் குட்டிமணி சோர்ந்து ஓவ்வோரு அடியாக பின்னகர்ந்து மந்தையினுள் பாய்ந்தோடி மறைந்தது. மாமாவும் அவனும், “ஏய்…” என்று கத்திக் கூப்பாடு போட்டனர். பாலேசனைப் பார்க்க பாவமாக இருந்தது அவனுக்கு.
முத்து பெருமிதத்துடன் நடந்து அங்கிருந்த பெட்டையை மோப்பம் பிடித்து மூக்கைச் சுழித்து தலையை உயர்த்திய தருணத்தில் எங்கிருந்தோ குட்டி மணி பாய்ந்து வந்து முத்துவின் பின்புறம் சரியாக விதைமணியில் குத்தித் தூக்கியது.
“மே…” என்ற அதன் அலறலில் அதிர்ந்து அவனும் மாமாவும் ஓடிச் சென்று முத்தைத் தூக்கினர். முத்தால் நிற்க முடியவில்லை. கால் நடுங்கி சிறுநீர் கழித்தது. பின் கிழே ஒருக்களித்து, கத்திக்கொண்டு விழுந்தது. மாமா ஆவேசம் கொண்டு குட்டிமணியை வெட்டப் பாய்ந்தார்.
“மாமா, வாணாம்” என கத்தினான் அவன். பாலேசனும், “வாயில்லா ஐீவன், வாணாம்ணே” என்று கும்பிட்டதும் கத்தியை விட்டெறிந்துந்து விட்டு மாமா முத்தை தூக்கப் பார்த்தார், அவரால் முடியவில்லை. அவனும் சேர்ந்து தூக்கிப் பார்த்ததில் முத்து அசையவில்லை.
மாமா மவுனமாக அழுதுகொண்டு நின்றார். இவனுக்கு அதிர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை. மாமா அவனிடம், “நம்ம வண்டிய கொண்டு வரன். ஏய், பார்த்துக்க, ஆயாகிட்ட மூச்சு உடக்கூடாது”, என்று வாயில் விரலை வைத்து காண்பித்தார் .
முத்தைப் பார்த்தான். பாவமாக இருந்தது கண்ணில் நீர் துளித்துளியாக சொட்டியது. இவன் நெற்றியைத் தடவிவிட்டான். அவன் கையை அது நக்கிய போது உடல் சிலிர்த்தான்.
வண்டி நெருங்கி வந்தது. அவன் தன் ஆயாவைத் தேடினான். அவர் அங்கில்லை.
“என்னடா பண்ணீங்க?” என்றார் மொட்டைப்பிள்ளை.
இவன் ஒன்றும் சொல்லவில்லை. ஆடு கால் மாட்டி விழுந்துவிட்டதாக மாமாதான் சொன்னார். அவர் நம்பவில்லை, “ஏன்டா இது பாவத்த எடுத்துக் கொட்டினிங்க” என்று வருத்தப்பட்டார்.
முத்துவால் எழ முடியவில்லை. மொட்டைப்பிள்ளை கை கொடுத்து தூக்கி முத்துவைத் தூக்கினார். ஆனால் அவரால் முடியவில்லை, பிறகு மாமாவும் சேர்ந்து தூக்கி வண்டியில் ஏற்றினார்கள். வலியில் அது கத்தியது. மாமா வண்டியை நேராக கிழக்கே வைத்தியரிடம் விடச் சொல்லிவிட்டு முத்தைப் பார்த்தார். அவனால் இருவரையும் பார்க்க முடியவில்லை, பார்வையை வெளியில் திருப்பினான்.
வண்டி மனம் போல் வேகாமாய் ஓடி வைத்தியர் வீட்டில் நின்றது. வைத்தியர் தன் வேட்டியை மடித்துக் கட்டி அதை நிறுத்த பச்சை பெல்ட் கட்டி இருந்தார். நல்ல உயரம். கருப்பு. ஒடிசலான உடம்புக்கு இடுப்பில் இடது கையால் முட்டுக் கொடுத்திருந்தார். வலது கையில் சுருட்டு புகைந்த நெடி சுழன்று அடித்தது.
வைத்தியரிடம் மாமா நடந்ததைச் சொன்னார்.
“ஏலேய், அடுத்தவன் பெண்டாட்டிய தொட்டா சும்மா விடுவானா?” என்றார் வைத்தியர் சிரித்துக் கொண்டே. பின்னர், அவர் முத்துவை எழுப்பி தடவிப் பார்த்தார், வலியில் “மே…”, எனக் கத்தியது. மருந்து கொடுத்தார், அதன் நாக்கை இழுத்து, உள்ளுக்கு.
“ஏலேய், வர்ம அடி பட்டிருக்கு. வித்துடு,” என்றார் மாமாவிடம். மாமா அழுதார், அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
“சரி, போயி சோறு வடிச்ச தண்ணியில மஞ்சள் பொடி போட்டு சுடவச்சு தடவி விடுங்க. ரத்தக்கட்டு கரையும், காலையிலே வரன்,” என்றார் வைத்தியர்.
இரவாகிவிட்டது. முத்தை இறக்கும்போது ஆயா, “இது என்னடா கொடுமை! அய்யோ என்னடாச்சு,” என்று அலறினார்.
நடந்த விஷயத்தை மொட்டைப்பிள்ளை மாமா விரிவாகச் சொன்னார். ஆயா சத்தமில்லாமல் அழுதார், அவர் தலைக்கு குளித்திருந்தார். அவனைப் பார்த்து, “ஏலேய், நேற்று இரயிலடில பார்த்தம பவுனு… அவ மருந்தக் குடிச்சுட்டு செத்துப் போயிட்டாடா…” என்று அழுதுகொண்டே சொன்னார். அப்புறம், “இன்னும் நான் என்னவெல்லாம் பாக்கணுமோ,” என்று மாமாவைப் பார்த்துச் சொன்னார். மாமா தலையைத் திருப்பிக் கொண்டார். ஆயாவின் முகம் ரொம்ப சோகமாக இருந்தது, அவன் கேவிக் கேவி ஒலமிட்டு அழ ஆரம்பித்தான். ஆயா, மாமா, மொட்டைப்பிள்ளை யார் சொல்லியும் அவன் அழுகை அடங்கவில்லை.
ஆயா மோட்டப்பிள்ளையிடம், “காலை முதவண்டியில் இவனை கொண்டு விட்டு வா”, என்றார். அவனுக்கு அப்பொதே அம்மாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. பிறகு மாமாவையும் முத்துவையும் பார்த்துச் சமாதானமானான். ஆயா இருவரையும் சாப்பிட கூப்பிட்டார்கள். மாமா முதலில் மறுத்து, பிறகு இவன் வற்புறுத்தியதும் சாப்பிட வந்தார்.
முத்து தண்ணீர், தீனி எடுக்கவில்லை. அசையும் போடவில்லை. “யே மொட்டைப்பிள்ளை, கசாப்புக்காரனைக் கூப்பிட்டு வா,” என்று ஆயா சொன்னார்.
சிறிது நேரத்தில் கசாப்புக்காரன் ஒரு ஆளோடு வந்தார். மாமா குடுகுடு என்று ஓடி வீட்டிலிருந்து சுலுக்கியோடு வெளிவந்து, “ஏலேய், எவனாவது ஆட்டத் தொட்டிங்க, குடல சரிச்சுடுவன்,” என்று கத்தினார்.
முத்துவின் சன்னமான முனகலைத் தவிர வேறு சப்தமில்லை. சிறிது நேரம் பொருத்து கசாப்புக்காரர், “தம்பி பொழைக்காதுப்பா,” என்றார். மாமா கீழே குனிந்து தேடினார். திண்ணையில்யில் தராசுப் படிகல் இருந்தது. அதை எடுத்து எறிந்ததும், “நான் போறன்டா சாமீ, நீ இஷ்டப்படி செய்டா யப்பா…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
மாமா ஆட்டை பார்த்து கொண்டே படுத்தார். காலை எழுந்தபோது முத்து செத்து விறைத்திருந்தது.மாமா சன்னமாக அழுதார். இவனை பார்த்ததும் கேவி அழுதார். ஆயா, “இப்படி கொள்ளை போவத்தான் இப்படி மாங்கு மாங்குன்னு வளந்துச்சோ… அழுவாதடா, வேற வாங்கி தரன்,” என்றார்.
அதற்குள் கேள்விபட்டு ஊர் கூடி தலைக்கு தல பேச வந்துவிட்டார்கள். ஒரு தாத்தா, “நல்ல இளம்கிடா. வெட்டி ஆளுக்கோரு கூறு போட்டா ஊரே கல அடங்கும், என்றார். தாத்தா தலை முழுக்க நரைத்து வயிறு ஒட்டி கறிசோறு கண்ணால் கண்டு பலவருசம் ஆகி இருக்கும் போல நாக்கை சப்புகொட்டிக் கொண்டிருந்தார். கூட இருந்தவர்களும் அவருடன்
சேர்ந்து ஆளாளுக்குப் பேச ஆரம்பித்ததும் மாமா, “முத்தை தொட்டிங்க உங்கள வெட்டி கறி போட்டுடுவன்,” என்று கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வீச ஆரம்பித்து விட்டார். “அப்படியே கிழக்கே போங்க பொணம் எரியும். ஆளுக்கு ஒரு கையா பிச்சு தின்னுங்க,” என்றார் மாமா.
“முரட்டுப் பய”, என்று திட்டிக்கொண்டே எல்லாரும் கலைந்து சென்றனர்.
மாமா எதுவும் பேசவில்லை. எல்லாருக்கும் அவரிடம் பேச பயம்.
மாமா எழுந்து மண்வெட்டி எடுத்து குப்பை மேடு ஒரமாக குழி வெட்ட ஆரம்பித்தார். புரிந்து கொண்டு மொட்டைப்பிள்ளை மண்வெட்டியை வாங்கி பள்ளம் வெட்ட ஆரம்பித்தார்.
ஆயா வந்து பார்த்து, “பள்ளம் இடுப்ப தாண்டி ஆழம் இருக்கட்டும், இல்லனா நாய் நோண்டிடும்,” என்று சொன்னார்
பள்ளம் வெட்டிவிட்டு மொட்டைப்பிள்ளையும் மாமாவும் இருவருமாக சேர்ந்து முத்துவைத் தூக்கி வந்தனர்.
மாமா அவனிடம், “ஏய் ஓடி சிவப்பு எடுத்து வா,” என்றார். அவன் சிவப்பு கொண்டு வந்தபோது அவர் பூவுடன் நின்றார். சிவப்பும் செம்பருத்தி பூவும் வைத்து குழியில் இறக்கினர். ஆயா அழுது கொண்டிருந்தார். மாமா மண் தள்ளினார். பாதி குழியில் இருக்கும்போது பாலேசன் ஒரு செம்மறிக் குட்டியுடன் வந்து, “அண்ண, முதலாளி கேள்விப்பட்டு இந்த குட்டிய
குடுத்துட்டு வரச் சொன்னாங்க,” என்றார்.
“ஏய் நீ எடுத்துட்டு போ, எனக்கு வாணாம்,” என்றார் மாமா. ஆயா, “இருக்கட்டுமப்பா, என்று சொன்னதற்கு, மாமா முறைத்ததும் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல வில்லை. பாலேசன் நின்று பார்த்து விட்டு குட்டியுடன் சென்று விட்டார்.
மாமா மொட்டைப்பிள்ளையிடம் மம்மட்டியை வாங்கி அடிபம்பு ஓரம் சென்றார். அங்கு புதைத்து இருந்ததில் முன்று தென்னை நெற்றுக்கள் முளை விட்டிருந்தது. அதில் துடியாய் இருந்ததை நோண்டி வந்து மொட்டைப்பிள்ளையிடம் கொடுத்து, குழியில் வைக்கச் சொன்னார். அதன்பின், சுற்றி மூங்கில் படல் வைத்து வேலி அடைத்து சென்று வர வழியெல்லாம் வைத்தார். பிறகு அடிபம்பிலிருந்து தண்ணீர் வர வாய்க்கால் அமைத்தார்.
அவன், “மாமா இனிமேல் முத்துவ பார்க்கவே முடியாது இல்ல,” என்று கேட்டான்.
ஆயா சத்தமாக, “அங்க தோரணம் கட்டுனது போதும், வந்து சாப்பிட்டுட்டு ஊருக்கு கிளம்பு. இந்த ஊட்டுக்காரனையும் இட்டுட்டு வா,” என்றார்.
“மாமா, ஆயா கூப்புடுறாங்க,” என்று மாமாவிடம் போய் சொன்னான்.
“யேய் இங்கே வா, இது பேர் என்ன தெரியுதா? என்று கேட்டார் மாமா.
“தென்னம்பிள்ள, மாமா”, என்றான் அவன்.
“இல்லடா, இது முத்துப்புள்ள, முத்துப்புள்ள,” என்றார் அவர் கிசுகிசுப்பாக.
One comment