(முடிவைத் தெளிவாகச் சொல்லாத புனைவுகள், நிச்சயத்தன்மையற்ற முடிவுகள், இவை ஏதோ ஓர் உயர் இலக்கிய மதிப்பீடு கொண்டிருப்பதான பாவனை நம்மிடையே காணப்படுகிறது, கருத்துலக யதேச்சாதிகாரத்துக்கு எதிராகவும் பன்முகத்தன்மைக்கு ஆதரவாகவும் உள்ள செயல்பாடு என்றும் பல்பொருட்படுதல் பாராட்டப்படுகிறது. அப்படிப்பட்ட புத்திசாலித்தனமோ அரசியலோ இந்த விஷயத்தில் தேவையில்லை என்று சொல்லும் டிம் பார்க்ஸ், “ஒரு நாவல் பல்பொருட்படுதல், படைப்பு குறித்து அதனால் நிகழக்கூடிய அனுமானங்கள் போன்றவற்றை நாம் எவ்வளவு துல்லியமாகப் பேச முடியுமோ அவ்வளவு துல்லியமாய்ப் பேச வேண்டும்” என்கிறார். அதற்கான இலக்கிய காரணங்கள் கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு சிறு பகுதி இங்கே மொழியாக்கம் செய்யப்படுகிறது)
‘செவன் டைப்ஸ் ஆஃப் ஆம்பிக்யுட்டி‘ (1930) நூலின் பக்கங்களைத் திறக்கும்போது ஒரு விஷயம் என் கவனத்தைக் கவர்ந்தது- தெளிவின்மையின் வெவ்வேறு வடிவங்கள் மிகத் துல்லியமாய் இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. கிரேக்க துயர் நாடகங்கள் முதற்கொண்டு இன்றைய இலக்கியம் வரை, குறிப்பாக ஷேக்ஸ்பியர் மற்றும் அவரது சமகாலத்தவர்களை கவனப்படுத்தி, பல உதாரணங்களைக் கொண்டு எம்ப்சன் இந்த நூலில் ஒரு வேறுபாட்டை எப்போதும் வலியுறுத்துகிறார். சாதாரண தெளிவின்மைக்கும் (அது ஆர்வமூட்டினாலும்கூட), அதற்கு மாறாய், மொழிபடும் பொருள் அமைப்பின் செறிவால் உருவாகும் தெளிவின்மைக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை கவனப்படுத்துகிறார் அவர். உணர்த்துதல்கள் கொண்ட, ஆனால் வரையறைக்கு அடங்காத, தாமஸ் நாஷின் “Brightness falls from the air” என்பதற்கும் கவிதையின் அதே ஸ்டான்சாவில் பின்னர் வரும் “Dust hath closed Helen’s eye,” என்ற வரியின் பல்வகை துலக்கத்துக்கு இடமளிக்கும் பொருட்செறிவையும் அவர் வேறுபடுத்துகிறார். “Dust hath closed Helen’s eye,” என்பதை, ஒரு கண் தூளிதமாகிறது என்று புரிந்து கொள்ளலாம், ஆனால் துகள் விழும் சிலையைக் கவிஞர் உணர்த்துகிறார் என்று எம்ப்சன் சுட்டுகிறார். எது எப்படியானாலும், ஒரு நுண்விபரம் ஒரே சமயத்தில் பல்வேறு வகைகளில் பொருட்படும் “முதலாம் தெளிவின்மை” குறித்த விளக்கத்தின் முடிவில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“இரண்டையும் ஒரே சமயத்தில் யாரும் செய்திருக்க முடியாது, ஆனால் இரண்டையும் செய்வதற்கு ஏதோ ஒரு வகையில் தயாராக இருந்திருக்க வேண்டும். இரண்டில் எதைச் செய்திருந்தாலும் அதற்கு மாறான வேறொன்றைச் செய்து தம் சுயமரியாதையை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் மனதில் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கும். இரு சாத்தியங்களையும் மனதில் கொண்டால்தான் இவர்களைப் புரிந்து கொள்ள முடியும்”.
தெளிவின்மை என்றால் என்ன என்பதன் துல்லியமான வரையறையை விட்டுவிடுவோம். ஆனால் எம்ப்சன் என்ன செய்ய முயற்சிக்கிறார் என்பது நமக்குச் சீக்கிரமே புலப்படுகிறது- இலக்கியம் எவ்வகைகளில் அடர்த்தியாய் இருக்க முடியும், செறிவை உருவாக்க முடியும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல நினைக்கிறார் எம்ப்சன். இத்தகைய அடர்த்தியில் அது சிடுக்குகளூடாய்ச் செறிவடைந்து ஒரு வகை யதார்த்தத்தைத் தொடுகிறது. எவ்வாறெனில், அனுபவம் அதனியல்பில் சிக்கல்கள் நிறைந்தது, அடர்த்தியானது, எளிதில் விளங்கிக்கொள்ள முடியாதது. “அடர்ந்து இறுகிய அறிவு வளத்தையும் ஒன்றுடனொன்று தொடர்பு கொண்ட பல்வகைப்பட்ட உணர்வுகளுக்கிடையிலான சமநிலை குறித்தும் ஒரு பொது உணர்வு” என்ற ஒன்றை அவர் முன்வைக்கிறார். அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் தெரிகிறது. பென் ஜான்சனின் இந்த வரிகளில் “அலாஸ்” என்ற சொல்லால் ஏற்படும் தெளிவின்மை குறித்து அவர் அருமையாக விவாதிக்கிறார்-
Pan is our All, by him we breathe, we live,
We move, we are;…
But when he frowns, the sheep, alas,
The shepherds wither, and the grass.
அதன்பின் எம்ப்சன் இவ்வாறு எழுதுகிறார்-
“சொற்பொருள் குறித்த தேர்வுகள் உன்னால் புரிந்து கொள்ள முடியாத அளவு தீர்மானமாய் எழுத்தாளனால் கைகொள்ளப்பட்டிருக்கின்றன என்ற உணர்த்தல்தான் முக்கியம். இந்த மொழியையே ஒரு பிரதியாய்க் கொண்டு, உனக்குத் தெரியாத எண்ணற்ற அர்த்தங்களைக் கண்டடைய முடியும் என்ற உணர்வுதான் ஒருவரின் நடை குறித்து ஒரு உயர்மதிப்பை நீ உருவாக்கிக்கொள்ளச் செய்கிறது.
“பொதுவாக மொழி எப்போதும் எளிமைப்படுத்துகிறது, அது எதைக் குறிக்கிறதோ அதை எளிமைப்படுத்தியே விவரிக்கிறது என்று ஜேனட் சோல்பர்க் கூறுவதற்கு மாறான விஷயம் இது- மொழி இப்படிதான் இருக்க முடியும். ஓய்வின்றி, முரட்டுத்தனமாய், சொல்லமைப்பைக் கொண்டு மொழி நம் அனுபவத்தை நிறைக்கிறது. நம்மைச் சுற்றி நடப்பதைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் நாம் அடையும் சிக்கலான உணர்வுகளையும் அவற்றின் அடர்த்தியையும் ஓரளவுக்காவது தன் மொழியில் வெளிப்படுத்துபவனை நாம் உயர்வாய் மதிப்பது இதனால்தான்”.
இந்த இடத்தில் ஒன்று சொல்லலாம். நம் எதார்த்த அனுபவம் தெளிவற்றதாக இருக்கிறது என்பது உண்மையானால் மெய்ம்மையின் ஒப்புமையாதலை நோக்கமாகக் கொண்ட எந்த ஒரு இலக்கியம் அதை எவ்வாறு அணுக முடியும்? ஓர் இலக்கியப்புனைவு புற விவரணைகளைத் துல்லியமாக விவரிக்கும்போதே அது அளிக்கும் முழுமையான தரிசனம் தெளிவற்றதாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் உண்மையின் ஒப்புமையாவதற்கும் அப்பால் தெளிவின்மைக்கு ஒரு மதிப்பு உண்டு என்றும் சொல்ல இடமிருக்கிறது.
முந்தைய கட்டுரை ஒன்றில் கிரெகரி பேட்சன் என்ற மானுடவியலாளர் பாலி ஓவியங்கள் மற்றும் கலை குறித்து எழுதியதைக் குறிப்பிட்டிருக்கிறேன். நோக்கங்கள் கொண்ட, பிரச்சினைகளைத் தீர்க்கும் விழிப்பு நிலை மனதை உயர்ந்த இடத்தில் இருத்தி , நனவிலியை நோக்கும் வழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பின்தள்ளும் நவீன உலகின் போக்கைப் பற்றிய தன் பதைப்பை அவர் பதிவு செய்கிறார்.. எப்போதும் இந்த உலகை இனம் பிரித்து புரிந்து கொள்ளும், அதனால் பிரச்சினைகளை வளர்த்துக் கொள்ளும், உத்தி சார்ந்த உந்துதலைக் குடைசாய்த்து, குழப்பும் தன்மை கொண்டிருப்பதே தெளிவின்மையைக் கைகொள்ளும் கலையின் நோக்கமாக இருக்கலாம் என்கிறார் அவர். எனவே ஒரு சவ ஊர்வலம் பற்றிய ஓவியம், லிங்கக் குறியாகவும் வாசிக்கப்படலாம் என்றால் (ஓவியத்தின் மத்தியில் இடுகாட்டின் உயர்ந்த கோபுரம், இரு புறமும் வட்ட வடிவில் இரு யானைகள்), அந்த ஓவியத்தின் கூறுகளாய் நாம் காணும் எதைப் பற்றியும் அந்த ஓவியம் பேசுவதாகக் கொள்ள வேண்டியதில்லை. மாறாய், அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புறுதலின் சாத்தியம் குறித்துச் சிந்திக்க நம்மை அழைப்பதாகக் கொள்ளலாம். எனவே கருவி நோக்கம் கொண்ட மனநிலையைவிட தியானத்துக்குத் தக்க மனநிலையைத் தெளிவின்மை ஊக்குவிக்கிறது- உலகு செறிவு நிறைந்த சிக்கல் எனும் மர்மத்தின் வெளிச்சத்தில் கண்கூசி நின்று மதிக்கச் செய்கிறது- நேரடியாய் களத்தில் குதித்து எதிர்கொள்ளும் நம் உந்துதலுக்கு அது இடமில்லாமல் செய்கிறது…
டி. ஹெச். லாரன்சும் பேட்சனின் எண்ணத் தடத்தையொட்டியே சிந்தித்தார் என்று சொல்லலாம். 1925ஆம் ஆண்டு அவர் நாவலுக்குரிய உயர்ந்த இடத்தைச் சுட்டும்போது, எம்ப்சன் தெளிவின்மை குறித்து வெளிப்படுத்தும் உற்சாகத்தின் முன்னோடியாகிறார். புனைவு வெளியினுள், “உலகில் உள்ள அனைத்தும் பிற அனைத்தினோடும் உறவு பூண்டிருக்கிறது“, எனவே எதுவொன்று குறித்தும் நாவல்கள் தீர்மானமான நிலைப்பாடு எடுக்க முடியாது என்பதையே நாவல் வடிவின் மகோன்னதம் என்றார் அவர். தால்ஸ்டாய் கிறித்தவ லட்சியங்களை “பதுக்கி வைத்திருக்கலாம்“, ஆனால் சிறந்த ஒரு நாவலாசிரியன் வாழ்க்கையின் செறிவான சிக்கல்களில் கவனம் செலுத்தி எழுதும்போது, நாவலின் பிற கூறுகளுடன் தொடர்புறுத்தி வாசிக்க வேண்டிய பலவற்றில் ஒன்று மட்டுமே அது என்ற நிலைக்குத் தன் நோக்கத்தை ஒடுக்கி விடுவான் என்கிறார் அவர். இப்படி அவர் சொல்வதில் ஒரு சுவையான புதிர்த்தன்மை இருக்கிறது…
எனவே நாவல், “அறிவுறுத்தும் பொய்களைச் சொல்ல விடாது,” என்று முடிக்கிறார் லாரன்ஸ். பேட்சன் போல் அவரும் கலையை அதன் எதிர்ப்பாற்றலுக்காக, அதன் எதிர்மறை இயல்புக்காக, போற்றுகிறார். இங்குதான் நாம் இன்னும் பின் சென்று கீட்ஸின், “எதிர்மறை ஆற்றல்” என்ற கருத்துருவாக்கத்தில் இது ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதை உணர்கிறோம்- “எந்த தகவலையும் தர்க்கத்தையும் தேடிச் செல்லாமல் ஒருவன் நிச்சயமின்மைகளில், மர்மங்களில், சந்தேகங்களில் நீடித்திருக்கும் போதுள்ளது“-
அவ்வளவுதான் விஷயம், இல்லையா? தெளிவின்மை, நிச்சயமின்மை, பல்விரிவு இவை இலக்கியத்தின் நேர்மறைக் கூறுகள்- மனதின் மேலாதிக்கம் செலுத்தும், கருவி நோக்கச் செயல்பாட்டால் ஊறு விளைவிக்கக்கூடிய தீச்செயல் இறுமாப்புக்கு மாற்றாய், இவை இருக்கும்வரை. இதுவெல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் கலை இந்த இயல்பை எட்ட வேண்டுமென்றால், கலைஞன் நனவிலி வெளிப்படக்கூடிய மெய்யான திறப்பு கொண்டவனாக இருக்க வேண்டும். எதுவெல்லாம் பகுத்தறியவும் கட்டுப்படுத்தவும் முனையும் நடத்தைக்கு வெளியே இருக்கிறதோ, அது அனைத்துக்கும் அவன் தன்னைத் திறந்து வைத்துக் கொண்டவனாக இருக்க வேண்டும் என்கிறார் பேட்சன். இதை லாரன்ஸும் ஏற்றுக் கொள்கிறார். நாவல் அறிவுறுத்தும் தன்மை கொண்டதாக இருக்கக்கூடாது என்றால், தான் விவரிக்கும் உலகு தன்னுள் வெளிப்படும் வகையில் உண்மையாகவே திறந்த மனம் கொண்டவனாக இருக்க வேண்டும் நாவலாசிரியன். அப்போது தன் பிரதியுள் அவன் பல்விரிவை நுழைய அனுமதிக்கும்போது, அது சரிகளைத் தேர்ந்தறியும் அற்பப் பழக்கத்தைச் சாய்த்து விடுகிறது.
நன்றி – Clearing Up Ambiguity, Tim Parks, The New York Review of Books, September 1, 2015