– நீனா க்ருஷ்சேவா-
1985. சோவியத் யூனியனில் மாற்றங்கள் நிகழத் துவங்கியிருந்த நேரம். வெயிலில் சுருண்டு விழும் ஈக்கள் போல் முதுமையடைந்த பொதுச் செயலாளர்கள் வீழ்ந்து கொண்டிருந்த காலம். நாம் கண்டு வளர்ந்த நாயகத்தன்மைகளைத் தவிர்த்து மகத்தான மானுட துயரைச் சித்தரித்தது எலம் க்ளீமோவின் “கம் அண்ட் சீ” என்ற மிகச்சிறந்த திரைப்படம். க்ளீமோவின் அணுகுமுறை இவ்வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச்சின் பார்வையை எதிரொலித்தது. அவரது முதல் நூல், “வார்’ஸ் அன்வுமன்லி ஃபேஸ்” முந்தைய ஆண்டு பதிப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால் க்ளீமோவின் படத்தை ஏராளமானவர்கள் திரையரங்குகளுக்கு விரைந்தனர், அலெக்ஸியெவிச்சின் புத்தகம் வாசகர்கள் மத்தியில் எந்த பரபரப்பையும் தூண்டவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது. முற்போக்கு என்று சொல்லப்படும் சோவியத் யூனியன், தந்தைவழிச் சமூகமாகவே இருந்தது. பெண்கள் வேலைக்குப் போனார்கள், ஆனால் அவர்கள் அதை ஒரு தொழிலாய்க் கொள்ளவில்லை. பெண் எழுத்தாளர்கள் அழகிய கவிதைளும் உரைநடையும் எழுதினார்கள், கிட்டத்தட்ட ஆண் எழுத்தாளர்களுக்கு இணையான அதிகாரபூர்வ அங்கீகாரம் இருந்தது- ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சில விஷயங்கள் குறித்து எழுதுவதைத் தவிர்த்தார்கள்- போர் ஆண்களுக்கு உரியது. அலெக்ஸியெவிச் தன் புத்தகத்தை இவ்வாறாக தொடங்குகிறார், “உலகில் மூன்றாயிரத்துக்கும் அதிகமான யுத்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன, அவற்றைவிட அதிக புத்தகங்களும் இருக்கின்றன.. ஆனால் போரைப் பற்றி நாம் அறிந்ததெல்லாம் ஆண்களால் சொல்லப்பட்டவை”.
ஆண்களும் நிறைய சொன்னார்கள். “”நாம் பள்ளிகளிலும் வீட்டிலும் திருமணங்களிலும் பெயர்சூட்டு விழாக்களிலும் விடுமுறைகளிலும் ஈமச்சடங்குகளிலும் எப்போதும் நாம் போரை நினைவுகூர்ந்தோம்,” என்று எழுதுகிறார் அலெக்ஸியெவிச்சின் , “நம் ஆன்மாவை இல்லமாய்க் கொண்டு போரும் போருக்குப் பிற்பட்ட காலமும் உறைந்திருக்கின்றன” ஆம், அவரது புத்தகம் வெளிவருவதற்குமுன் நான் போர் பற்றி நிறைய அறிந்திருந்தேன், அது பற்றி மேலும் அறிவதற்கு ஆர்வம் இல்லாத அளவுக்கு அறிந்திருந்தேன்; துயரம், தியாகம், சாகசம், வெற்றி- எந்தக் கோணத்திலும் போர் குறித்த செய்திகளில் நாட்டம் இருக்கவில்லை.
பத்தாண்டுகள் கடந்து செல்வோம். பாலின வேறுபாட்டின் அரசியல் குறித்து அமெரிக்காவில் பெரிய அளவில் பேசப்படுகிறது. இங்கு பட்டக்கல்வி பயிலும் மாணவியாக இருக்கும் நான், இந்த விஷயத்தில் பின்தங்கி இருப்பது குறித்து சங்கடப்பட்டேன்.. எனவே, ஒரு வழியாக வார்’ஸ் அன்வுமன்லி ஃபேஸ் வாசித்தேன்.
என்ன ஒரு ஆச்சரியம், அதில் நான் இரண்டாம் உலக யுத்தம் குறித்து வாசிக்கவில்லை. மாறாக என் உறவினர்களின் அனுபவமாக இருந்த உணர்வுகளை, அவர்கள் எப்படி போரிட்டார்கள், எப்படி உயிர் பிழைத்தார்கள் என்பதை, நான் முதல்முறையாக அறிந்தேன். என் பாட்டி முதலானவர்கள், தம் அனுபவத்தையும் முழுமையாய் மறுத்து, ஆண்களால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட அதே கதையையே திரும்பவும் சொன்னார்கள். ஆனால் அவளது அனுபவதட்டுக்கு ஒரு இடம் இருந்தது, அதை அலெக்ஸியெவிச் அங்கீகரித்தார். அவரது புத்தகம் என் மீது ஏற்படுத்திய தாக்கம் எந்த அளவு இருந்தது என்றால், போரால் சீரழிக்கப்ப்பட்ட சோவியத் யூனியனில் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எப்படிப்பட்ட துயரங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதை விவரிக்கும் புத்தகம் ஒன்றை நானும் சில ஆண்டுகளுக்கு முன் எழுதினேன்.
அலெக்ஸியெவிச் எழுதிய பிற புத்தகங்களும் அப்படிப்பட்ட தாக்கம் கொண்டவையாக இருந்தன. “ஜின்கி பாய்ஸ்: சோவியத் வாய்சஸ் ஃப்ரம் தி ஆப்கானிஸ்தான் வார்” (1991) என்ற புத்தகம் ருஷ்ய கலாசாரத்தையும் மானுட நேயத்தையும் சிதைத்த ஒரு தொலைதூர யுத்தத்தை விவரித்தது- ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த ஒன்பதாண்டு கால யுத்தம். “வாய்சஸ் ஃப்ரம் செர்னோபில்: தி ஓரல் ஹிஸ்டரி ஆஃப் எ ந்யூக்ளியர் டிசாஸ்டர்” (1997) என்ற புத்தகம் அதன் அணு உலை விபத்தின் உலகளாவிய முக்கியத்துவம் குறித்த தியானமாக இருந்தது. இரண்டு புத்தகங்களும் பல்வகைப்பட்ட எதிர்வினைகளைச் சந்தித்தன. ஆப்கானிஸ்தான் குறித்தும் செர்னோபில் குறித்தும் உள்ள உணர்வுகளில் அரசுக்கும் மக்களுக்கும் தெளிவான புரிதல் இருக்கவில்லை- ஒன்று தோல்வியுற்ற யுத்தம், மற்றொன்று புரிந்து கொள்ள முடியாத பேரழிவு..
தான் “ஒரு செவி, பேனாவல்ல” என்று அலெக்ஸியெவிச் தன்னைக் குறித்துச் சொல்கிறார். காது கொடுத்து கேட்டு ஒரு கதையை உருவாக்கிக் கொள்கிறார், அதன் பின்னரே அதற்கு எழுத்து வடிவம் அளிக்கிறார். தனியுணர்வுகளைப் பொதுவெளிக்கு உரித்தாக்குவதுதான் அவரது ஆற்றல், மக்கள் நினைக்க அஞ்சும் எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்.
தான் எழுதும் விஷயத்தின் பயங்கரங்களைக் கண்டு அலெக்ஸியெவிச் தவிர்த்து விலகுவதில்லை. வார்’ஸ் அன்வுமன்லி ஃபேஸ் என்ற நூலில் வரும் ஒரு பகுதி இதற்குச் சான்று: “(கைதிகளை) நாங்கள் சும்மாச் சுடவில்லை…பன்றிகளைப் போல் இரும்புக் கம்பிகளில் செருகினோம், அதன்பின் துண்டங்களாய் வெட்டினோம். நான் அதைப் பார்க்கப் போனேன்… வலி தாங்காமல் அவர்களின் கண்கள் தெறிக்கும் கணத்துக்குக் காத்திருந்தேன்”. சாதாரண உரையாடல் போல் இந்தக் கொடூரத்தைப் பேசும் தொனி வாசகர்களைச் சங்கடப்படுத்தலாம் (இந்தப் புத்தகத்தை நான் படித்து முடிக்க நீண்ட காலம் எடுத்துக்கொள்ள இது ஒரு காரணமாக இருந்தது). ஆனால் நாம் உண்மை நம்மைச் சங்கடப்படுத்துகிறது என்பது உண்மையை அறியாதிருக்க ஒரு காரணமாக முடியாது. ஏன், அந்த அசௌகரிய உணர்வே உண்மையை அறிவதற்கான முக்கியமான காரணம் ஆகலாம்.
நேர்மையாய், துணிச்சலாய், சோகம் நிறைந்ததாய் எழுதப்பட்ட அலெக்ஸியெவிச்சின் நூல்கள்- மரணத்தைக் காட்டிலும் மோசமான, உடைந்த, களவு போன வாழ்க்கைகளை விவரிக்கும் கதைகள் நிறைந்த நூல்கள்- ஒரு பெண்ணின் பார்வை உலகப் பிரச்சினைகளுக்கு மானுட நேயம் பாய்ச்சி அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடியதாவது எப்படி என்பதைக் காட்டுகின்றன. சில வகைகளில்,அலெக்ஸியெவிச்சின் இலக்கியப் பங்களிப்பு என்பது, ஆஸ்திரிய நாவலாசிரியரும் நாடகாசிரியருமான எல்ஃப்ரைட் ஜெலினக்குக்கு இணையானது. ஆஸ்திரியாவின் நாஜி கடந்த காலத்தையும் ஆண்-மைய நிகழ்காலத்தையும் பெண்ணிய விமரிசனத்துக்கு உட்படுத்திய அவரது எழுத்து 2004ஆம் ஆண்டு நோபல் பரிசு அளித்து அங்கீகரிக்கப்பட்டது. அலெக்ஸியெவிச்சின் இலக்கிய பங்களிப்பை நோபல் கமிட்டி, “நம் காலத்தின் துயருக்கும் வீரத்துக்கும் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம்” என்று அழைக்கிறது.
ஜெலினக்கின் எழுத்து ஜெர்மன் மொழி அறியாத வாசகர்களை அவர் நோபல் பரிசு வென்ற பின்னரே சென்று சேர்ந்தது. இப்போது அலெக்ஸியெவிச்சும் அவரது செறிவான தாக்கத்துக்கு அன்கீகரிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் பரிசு சக்திவாய்ந்த செய்தியொன்றைச் சொல்கிறது- அவரது எழுத்தாற்றல் பற்றி மட்டுமல்ல, பொதுவெளியில் பெண்பார்வைக்கு உள்ள முக்கியத்துவம் குறித்தும்.
ஆம், இதற்கு முன் அவர் அறியப்படாதவராக இருந்தார் என்று சொல்ல முடியாதுதான். அவரது புத்தகங்கள் இருபது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன, பல லட்சம் பிரதிகள் விற்கப்படுகின்றன. ஜெலினக் உட்பட, நோபல் பரிசு பெற்ற பிற எழுத்தாளர்கள் பலரையும் போலவே, அவரும் குடிமைச் சமூகச் செயல்பாடுகளில் நேரடியாகப் பங்கேற்றிருக்கிறார்- அண்மையில் கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு முன்னைவிட இப்போது பெண்களுக்கு அதிக அளவில் அளிக்கப்படுவது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப்பின்னர் முதல் முறையாக 1991ஆம் ஆண்டு நடீன் கோர்டிமர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இப்போது ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பெண்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. மேலும்,இவ்வாண்டின் கோடைப்பருவத்தில், எழுத்தாளரும் இலக்கிய விமரிசகருமான சாரா டேனியஸ் இருநூறு ஆண்டுகளில் முதல் முறையாக ஸ்வீடிஷ் அகாதமியின் நிரந்தரச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார்- இக்குழுவே இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கிறது.
ஆனால் எந்த ஆண்-மைய கலாசாரத்தைக் கடந்து அலெக்ஸியெவிச் தோன்றினாரோ அது இன்னும் அழியவில்லை. கடினமான, வரலாற்று நோக்கில் ஆண்மைத்தன்மை கொண்ட விஷயங்கள் குறித்த சிந்தனையை அவர் எவ்வகைகளில் செறிவாக்கியிருக்கிறார் என்பதை அங்கீகரிப்பது, அவரால் உத்வேகம் பெரும் பெண்களுக்கு மட்டுமல்ல, அவரது தாக்கம் கொண்ட ஆண்களுக்கும் நன்மை பயக்கும்.
“செகன்ட்ஹாண்ட் டைம்” என்ற அவரது தாளவொண்ணா மாஸ்டர்பீசை இப்போதுதான் படித்து முடித்திருக்கிறேன். 1990களில் ரஷ்யாவில் நிலவிய இரக்கமற்ற முதலியத்தை விவரிக்கும் புத்தகம் இது. சமீபத்திய நேர்காணல்களில் இன்னும் இரு புத்தகங்கள் எழுதிக் கொண்டிருப்பதாக அலெக்ஸியெவிச் கூறியிருக்கிறார்- காதல் பற்றிய புத்தகம் ஒன்று, மற்றொன்று முதுமை பற்றியது. இந்த இரண்டில் எதையும் வாசிக்கும் விருப்பம் எனக்கு இல்லை, ஆனால் படிப்பேன்.
நன்றி – Alexievich’s Achievement Nina L. Khrushcheva, Project Syndicate