‘ரோஜாவைப் போல் இருந்தான். நீலமும், பச்சையும் கலந்த கண்கள். உன்னைப் போல் முகமெல்லாம் மூக்கு. எவ்வளவு மென்மையான காதுகள்! அவன்- ‘ம்—மா’ என்று கூப்பிட்டான். அவன் எங்கே, பிரின்ஸ்? எனக்கு அவன் வேண்டும்’
இவள் இப்பொழுதெல்லாம் கனவுகளை உண்மையென நம்புகிறாள். இருள் பிரியவில்லை இன்னமும். பனிக்காற்று அதிகம் வீசுகிறது. உறைந்த நதிகளின் கரைகளில் இருந்த நாணல்கள் என்னவாயின? கூம்பி நிற்பதாக மனதில் எழும் அந்தப் பைன் மரக் கிளைகளில் விளையாடிய அணில்கள் எந்தக் கூட்டுக்குள் சென்றன? என் மூன்று வயது மகள் உறங்கும் கல்லறையில் அவள் எழுந்து வருவாள் எனக் காத்திருக்கிறதோ? லில்லி மலர்களும் அவளுடனே தூங்கச் சென்று விட்டன போலும்.வெறுமையான வெண்பனிதான் இடறிக் கொண்டிருக்கிறது.
ஜான் எதைச் சொன்னாலும் கேட்காமல் பனியில் விளையாடுவான். உருட்டி உருட்டி பொம்மைகள்- ஆறு வயதில் அவனுக்கு எவ்வளவு கற்பனை! அதிகமும் குல்லாய் போட்ட ஏசு. என்னடா இது என்றால் ‘எனக்கு குல்லா, சாமிக்கும்- அவருக்கும் குளிரும்,” என்பான். முடிவில் எங்களை விட்டுப் போய்விட்டான்.
பனியில் கானலின் வெம்மையில் நாங்கள். தலையால் கவ்விக் கொண்டு வாலால் பிணைத்துக் கொண்டு எங்களை விழுங்கும் தனிமை. எலும்புகள் நொறுங்கும் வாதை. ’எஸ்தர், சற்றுத் தூங்கு’
நான் கண் விழிக்கையில் அவள் மண்டியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தாள். ஒரு சோகம் கவ்வியது என்னை. தன்னிலை மறந்த அவளும் விட்டுப் போய் விடுவாளோ? நான் தலையைக் குலுக்கி சிலுவையிட்டுக் கொண்டேன்.
மிகச் சூடான சுவையான மசித்த உருளை பான் கேக் காலை உணவிற்கு. எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது- இயல்பு நிலை வந்துவிட்டதென்று. எஸ்தர் ஆலிவ் பச்சை வண்ணத்தில் காஷ்மீர கதகதப்பு ஆடைகள் அணிந்து ஒரு பூங்கொத்தினைப் போல் இருந்தாள். என்னைப் பார்த்து சிரித்தாலும் அவள் கண்களும், உதடுகளும் எதையோ சொல்லத் தவித்தன. மீண்டும் குழந்தையைப் பற்றி சொல்லப் போகிறாள் எனத் தெரிந்தாலும் தவிர்க்க முடியாதல்லவா?
‘அவன் பால் வாசனையோடு சிரிக்கிறான் பிரின்ஸ். உன்னைப் பார்த்தால் உடனே என்னைப் பார்த்துக் கொள்கிறான். நான் ‘டாடிடா’ என்றால்தான் அரை மனதோடு உன்னிடம் வருகிறான்.ஒரு சிட்டுக் குருவியைப் போல் வாயைக் குவித்து ம்-மா என்கிறான்.’
“எஸ்தர், போதும் இந்த விளையாட்டு. உண்மையை உணர்ந்து கொள்.’ என் குரலின் கடுமையும் அதன் ஆயாசமும் அவளைக் காயப்படுத்தியிருக்க வேண்டும்.
‘பிரின்ஸ், நமக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது’
‘எஸ்தர், அது உயிரோடு இருக்கப் போவதில்லையே’
‘என்னால்தானே, எல்லாமும். அதை நான்தானே சரி செய்ய வேண்டும்’
நான் சிரிக்கப் பார்த்தேன். வெறும் ஒலி தான் எழுந்தது.
‘நீ கடவுளின் வேலையைப் பார். நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ என்று எழ முயன்றேன்.
அவள் ஓடி வந்து என் மடியில் உட்கார்ந்து விட்டாள். ‘என்ன, இன்று ரொமான்ஸ் இப்பொழுதே!’ அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டேன். மிக நளினமாக விடுவித்துக் கொண்டாள்.
‘நாம் இன்று ஒரு புதிய மருத்துவரை பார்க்கப் போகிறோம் ஒரு மணிக்கு. அவர் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்பவராம். நெட்டில் எல்லா விவரமும் பார்த்தேன்’
நான் நிஜமாகவே சிரித்தேன்.’ தெருவிற்கு இரண்டு இருக்கிறது இப்பொழுது’
‘இது வேறு, பிரின்ஸ்’
‘தத்து எடுக்கப் போகிறோமா? இல்லை, வாடகைத் தாய், தந்தை என ஏதாவது?’
‘இது மிகவும் புதியது. நம் குழந்தைக்கு மூன்று பெற்றோர்கள்’
‘என்னது? உன் கற்பனைகள் எல்லை தாண்டிப் போகின்றன, எஸ்தர், நான் உன்னையும் இழக்க விரும்பவில்லை. நீ இப்படியே இருந்தால் உன் மனம் பாதிக்கப்படும். விடு இந்தப் பேச்சை’
‘ப்ரின்ஸ், எனக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. நாம் டாக்டர். லீயைப் பார்ப்போம். நமக்கு சரிவராதெனில் விட்டுவிடலாம். ப்ராமிஸ், இதுவும் இல்லையென்றால் நான் குழந்தையைப் பற்றி பேசவே மாட்டேன்’
சாலைகளில் பனியை அகற்றி பாதை அமைத்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் பனி பொழியும், ஆனாலும் பாதை சீராக்கப்படத்தான் வேண்டும்.
டாக்டர். லீயின் க்ளினிக் அமைதியாக இருந்தது. அவரது வயதே அவரது அனுபவம் என்று சொல்லத்தக்க தோற்றம். புரியாத ஓவியங்களைப் பார்ப்பது போல் இருந்தது அவர் அறையில் மாட்டப்பட்டிருந்த ஜெனோம் சார்ட்டுகள்.
சிறு புன்னகையுடன் ஒரு கைகுலுக்கல். இரண்டு மணி நேரம் எங்களின் பழைய மருத்துவ அறிக்கைகளைப் பார்வையிட்டார்.
‘இரு குழந்தைகளை இழந்த உங்களுக்கு என் அனுதாபங்கள். இம்முறை நாம் செய்யப் போவது உங்களுக்கு ஒரு வரமென அமையலாம். ஆமாம், ஏன் மூவர் மூலம் செயற்கைக் கரு உருவாக்கக் கூடாது?’
‘மிஸ்டர். லீ?’
‘1990 முதல் இது ஒவ்வொரு வகையாக நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலே எம்ஆர்டி வரையறைக்கு முன்னால் 17 குழந்தைகள் இம்முறையில் பிறந்துள்ளனர். அதில் இன்றைக்கு 13 குழந்தைகள் பற்றி இரகசியமான விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. ஆனால், இம்முறை இன்னமும் சட்ட அங்கீகாரம் பெறவில்லை. இம்முறையில் கரு தரிப்பது தாய்க்கு ஆபத்தில்லை’
‘மிஸ்டர். லீ,எங்களுக்குத் தலைகால் புரியவில்லை. நான், எஸ்தர் இருவர் தானே, மூன்று என்றால்?’
‘எஸ்தரின் ஊண் குருத்துகள் (mitochondria) பழுதாகி உள்ளன. இது அவருக்கு எந்த உடல் குறைபாட்டையும் ஏற்படுத்தாது. அவரது 37 ஜீன்களில் ஏற்படும் தன் பெருக்கமானது அவரது குழந்தைகளுக்கு கடத்தப்படுவதால், புதிய உயிர்கள் செல் சக்தியைப் பெற இயலாது சிறு வயதிலே இறந்து விடுகின்றனர்.’
‘ஆம், எங்கள் மருத்துவரும் அதைச் சொன்னார்’
‘இதைச் சரி செய்வதற்குத்தான் மூன்றாவது நபர்’
எஸ்தர் முதல் முறையாக, ‘எப்படி?’ என்றாள்.
‘உங்கள் கரு முட்டையின் மையம் ஸ்பிண்டில் நுட்பம் மூலம் அணுகப்படும். அதன் திசுக்கள், ஊண் குருத்துகள் மட்டும் நீக்கப்பட்டு உங்கள் கரு மையம் கொடையாளரின் மையக் கருவிற்குள் செலுத்தப்படும். உங்களுடைய மரபணு மாறாது. கொடையாளரின் நலமான ஊண் குருத்துக்கள் இப்பொழுது உங்கள் கரு முட்டையில். பிரின்ஸின் விந்தினை இணைத்து கருமுளையை உங்கள் கர்பைப்பையில் வைத்துவிடுவோம். கரு வழக்கம் போல் வளரும். உங்கள் வாரிசு, உங்கள் குறைபாடில்லாமல்.’
‘இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் இயல்பாக இருக்குமா? அதாவது மனிதனாக?’ என்றேன் நான்.
‘சில்லி கொஸ்டின். மனிதக் கரு, மனித விந்து. பின்னர் பிறப்பது என்னவாக இருக்கும்?’
‘இதற்கு பதிலாக நாம் ஏன் வேற்று கருமுட்டையைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடாது?’
‘செய்யலாம். உங்கள் மனைவியின் அழகோடும், ஆற்றலோடும் உங்களுக்கு வாரிசு வேண்டாமா?’
‘எங்களுக்கு சிறிது கால அவகாசம் வேண்டும்’
‘நாளைக்குச் சொல்லுங்கள்’ என்றார் லீ சிரிக்காமல்.
என்னால் தீர்மானிக்க முடியவில்லை. ஆபத்தில்லையென்றால் இந்த செயல்பாட்டிற்கு ஏன் சட்ட அனுமதி இல்லை? யூகேயில் அனுமதிக்கப்பட்டதாக லீ சொன்னாரே. இதை ஒத்துக் கொண்டு அவளையோ, குழந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்து விட்டால்? நான் அவளுக்குச் சொல்ல காரணங்கள் தேடிக்கொண்டிருந்தேன். அவள் அமைதியாக குழந்தைக்கான காலுறை செய்து கொண்டிருந்தாலும் அவளும் சிந்தனையில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது.
‘பிரின்ஸ், உனக்கு கேத்ரினை நினைவு இருக்கிறதா?’ என்றாள்
‘உன் கஸின் தானே, அவளுக்கு என்ன இப்போ?’
‘அவள் வாடகைத் தாய் ஒருத்தி மூலம் குழந்தை பெற ஏற்பாடு செய்து கொண்டாள். ஆனால், பார் அந்த பெண்ணிற்கு எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டு இவளின் கனவும் அழிந்தது.’
‘ஏதோ ஒருத்தருக்கு நடந்ததை வைத்து இப்படிப் பேசுவது என் புத்திசாலி மனைவிக்குப் பொருந்தவில்லை’
‘பொய்ப் புகழ்ச்சி. நான் சொல்வது ரிஸ்க் என்பது எதிலும் இருக்கிறது’
‘ஆனால், அதைத் தவிர்க்கவும், இல்லையெனில் அதன் விசையைக் குறைக்கவும் நாம் முடிந்ததை செய்கிறோம் அல்லவா?’
‘இன்று காலை உணவு எப்படி இருந்தது?’ என்றாள் சம்பந்தமில்லாமல்.
குழந்தை, ட்ரீட்மென்ட் இதை விட்டுவிட்டு இவள் ஏதோ பேசுவது மகிழ்ச்சியாக இருந்தது. ’டேஸ்டி, வெரி டேஸ்டி’
‘மதியம் வெளியில் சாப்பிட்ட லன்ச்?’
‘அது சுமார்தான்.’
‘நல்ல உணவகம். மேஜைகள் சிறப்பாக செட் செய்யப்பட்டிருந்தன. விலையும் அதிகம், மெனுவும் அதிகம். ஆனாலும் நம் பான் கேக்கிற்கு ஈடில்லை’ என்றாள் சிரித்துக் கொண்டே.
இவள் எங்கே வருகிறாள் என்று புரியாமல் பார்த்தேன்.
‘பணம் கொடுத்து பொருள் வாங்குகிறோம், ஆனால் அதை நம் பக்குவத்தில் செய்கிறோம். நமக்கே நமக்கென. அதில் அன்பு கலந்து விடுகிறது. பணம் கொடுத்து வெளியில் உண்பது நம் பக்குவத்தில் இருப்பதில்லை’
‘இது பொதுவான வாதம்’
‘பிரின்ஸ், என் உடல் நலமாக இருக்கிறது. என் கர்ப்பைப்பை நம் உயிர் தாங்கும் ஒரு அனுபவம், அது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. கருமுளையின் ஒவ்வொரு வளர்ச்சியும் என்னுள் திறக்கும் கதவுகள் தேவன் கோயிலின் வாசல்கள். நான் உன்னை நினைத்துக் கொண்டே அதனுடன் பேசுவேன். என் பாடல்களை இரகசியமாக சொல்லித் தருவேன். கடவுள் நம் பங்கில் கொடுக்க நினைப்பதை வாங்க கைகளை ஏந்துவோம்’
‘உணர்ச்சிகரமாக இருக்கிறது. எதற்கும் நாம் நம் பாதிரியாரைக் கேட்போம். இதில் மதத்திற்கு எதிரான, இயற்கைக்கு மாறான செயல் இருக்கிறது’ என்றேன்.
‘கடவுள் மனிதனுக்கு இன்பங்களை மறுப்பதில்லை. ஆனால், கடவுளைக் காட்டுவதாகச் சொல்லும் சில மனிதர்கள் மறுக்கக்கூடும்’ என்றாள் அமைதியாக.
எனக்கு அதிர்ச்சிதான். எந்த ஞாயிறும் தேவாலயம் தவறாதவள், இரு வேளை ஜெபிப்பவள், பிரசங்கக் கூட்டங்களில் கண்களில் ததும்பும் நீருடன் இருப்பவள், இவள் தேவ மைந்தனுடன் வசித்திருக்கிறாள். நான் அறியா எஸ்தர்.
நாங்கள் டாக்டர் லீயைப் பார்த்தோம்.
ரோஜாவைப் போல் இருந்தான் எங்கள் மகன்.