மீனாட்டம்

தி. வேல்முருகன்

கார்த்தி கடலூர் செல்லும் பஸ்ஸில் இருந்து அகரம் கடைத்தெருவில் இறங்கும்போதே மழை பிடித்துக் கொண்டது.

ஒடிப்போய் நரசிம்ம பெருமாள் கோயில் மேடையில் ஏறி சுவரை ஒட்டி நின்று கொண்டான். கோயில் முகப்புச் சாரம் நாட்டு ஓடு வேய்ந்து இருந்தது.  சாரத்தை நான்கு தூண்கள் தாங்கிக் கொண்டிருந்தன.

அவனைப் பார்த்து பத்துவிரலும் கோயிலுக்கு ஓடி வந்தார். அவர் பின்னாடியே ஒரு  ஆடும் அதன் குட்டியும் ஒடிவந்து கோயில் மோடையில் ஏறிக் கொண்டன.

பத்துவிரலு, “ந்தா… ந்தா…” என்றார், ஆட்டையும் குட்டியும் பார்த்து. அது இரண்டும் கார்த்தி பக்கம் ஓடி வந்து அண்டிக் கொண்டு நின்றன.

“மாப்பிள்ளை நீ எங்கடா போயிட்டு வந்த?”

“பள்ளிக்கூடம் மாமா “

“எத்தனையாவது படிக்கர?”

“பதினென்னாவது”

“வயசு பதினாறு இருக்குமா?”

“ஆமாம் மாமா இப்ப தான் நடக்குது”

“இரண்டு கெட்டான் வயசு. ம்ம்…? நல்லா சாப்புடுரா”

கார்த்தி ஆட்டையும் குட்டியையும் பார்த்தான். ஆடு உடம்பை உதறிக் கொண்டது. குட்டி பால் குடிக்க பின்புறமாக முட்டியது.

பத்துவிரலு சிவப்பு நூல் துண்டால் தலையிலிருந்த ஈரத்தைத் தொடைத்துவிட்டு மடியில் இருந்த சுருட்டு வத்திப்புட்டியெடுத்து சுருட்டைப் பத்த வைத்து ஒரு இழுப்பு இழுத்து புகையை வெளியே விட்டார்.

“கச்சாங்காத்துடா மாப்பிள்ளை, அதான் மழை இப்ப”

உட்டுடூம்!

மழை அடித்துப் பெய்தது, மழை நீர் ஓட்டின் வழியாக வந்து நீர்க்கோடாக விழுந்து ஓடியது.  கார்த்தி காலையில் பள்ளிக்குச் சென்றவன், பசி வேறு. மழை எப்போதும் விடும், நனைந்து கொண்டே ஓடலாமா, என பார்த்தான்.

மழை விட்டபாடில்லை. இரண்டொருவர் நனைந்து கொண்டே சென்றனர். வேகமாக இரண்டு சைக்கிள்கள் சென்றன. ஒரு டவுன் பஸ் நின்று சென்றது. மழை சிறிது குறைய ஆரம்பித்ததும் பஸ்ஸில் இருந்து இறங்கிய இரண்டு பெண்களும் மழைத் தூறலை சட்டை செய்யாமல் நடக்க ஆரம்பித்தனர்.

சிறிது நேரத்தில் சொல்லி வைத்தது போல் மழை நின்று சிறிது வெளிச்சம் கூட வந்தது.

“ஓடிப்போடா, நான் பரங்கிப்பேட்டைக்கு போயிட்டு வந்துடறேன்”

கார்த்தி கோயிலிருந்து வெளியே வந்து நடக்க ஆரம்பித்தான். வானம் வெளுத்து வெய்யில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்ததும் கடைத் தெருவில் நின்றவர்கள், “கம்ணாட்டி பய மானம் புரட்டாசி பாஞ்சு தேதியாயிடுச்சு மழை இறங்காம தரைய நனைச்சிட்டு ஓடுதுய்யா. விதவுட்டு ஒரு மாசமாச்சு இந்த வருசமாவது சமயத்தில பேயும்னு பார்த்தா இப்படி காயுத,” என்றனர்.

கார்த்தி மோட்டுத் தெரு வழியாக வீட்டுக்கு போகலாமா, என யோசித்தான். வேண்டாம் மணியங்கால் ஓடையில் தண்ணி கிடக்கும் ரோட்டு வழியாக போவும், என்று நடந்தான்.

பாலம் வரவும் மானம் முழுமையாக வெளுத்து விட்டது. பாலத்தின் கைப்பிடி கட்டையை பிடித்துக் கொண்டு தண்ணியை எட்டிப் பார்த்தான்.

பாலத்தின் அடியிலிருந்து மோட்டுத் தெரு கலியமூர்த்தி கையில் தூண்டிலும் நாக்குப் பூச்சு வைத்திருந்த தகர டப்பியோடும் பாலத்தின் மேல் வருவதற்கு ரோட்டுச் சருவலில் ஏற ஆரம்பித்தார்.

தூண்டிலைப் பார்த்த கார்த்தி மேற்கொண்டு நடக்காமல் அப்படியே நின்று விட்டான்.

கலியமூர்த்தி ரோட்டில் மேல் வந்து கார்த்தியை தாண்டிச் சென்று டப்பியை கீழே வைத்துவிட்டு தூண்டில் நைலான் கயிற்றை காற்றில் உதறி தண்ணியில் இரண்டு முறை அடித்ததும் ஏதோ விழுந்தது போல் தண்ணீரில் அலை எழுந்து கரையை தொட்டது. தக்கையாக செருப்பை அறுத்துக் கட்டி இருந்தார்.  அது மஞ்சள் நிறத்தில் நீர் மேல் மிதந்தது.

மீன் ஏதாவது கொத்தும் என கார்த்தி பார்த்தான். ஒன்றும் கொத்தவில்லை. தக்கை காற்றிலடித்துக் கொண்டு அவன் பக்கம் வந்தது.  உலர்ந்து இருந்த வாயிலிருந்து எச்சிலைக் கூட்டித் துப்பினான். எதிர்பாராமல் சரியாக தக்கை மேலே சென்று சொத் என்று விழுந்து விட்டது.

கலியமூர்த்திக்கு கடும் கோவம் வந்து, “நீலாம் என்ன மயிருடா படிக்கற?

உன் பேனா மேல எச்சி துப்புனா எப்படிரா இருக்கும்? அடிவாங்காம ஒடி போயிடு,” என்று சத்தம் போட்டார்.

கார்த்தி ஓடவில்லை. வாட்டமான முகத்துடன் சற்று தள்ளிச் சென்று தண்ணியை எட்டிப் பார்த்தான். பாலத்தின் அடியில் தண்ணிரில் தலையின் நிழலுக்கு நேர் கீழே ஒரு இரண்டு விரல் மொத்த விரால் மீன் நின்றது. தலையசைவின் நிழலில் மீனும் அசைந்தது. அவன் தலையை சீராக முன்னோக்கி நீட்ட நீட்ட மீன் முன்னோக்கி நகர்ந்தது.

அப்படியே தலையை சீராக பின்னோக்கி இழுத்துக்கொண்டே பார்த்தான். மீனும் அதன் வாலைத் தள்ளிக் கொண்டு நிழலின் பின் வந்தது.

வாலில் இருந்த புள்ளியும் கோடும்கூட தெளிவாக தெரிந்து அவனுக்கு நாகத்தை ஞாபகப்படுத்தியதும் உடல் சிலிர்த்துக் கொண்டான். மீன் அப்படியே நிழலசைவுக்கு தகுந்தாற்போல் வாலை ஆட்டி முன்னும் பின்னும் நகர்ந்தது.

கார்த்திக்கு அந்த மீனாட்டம் பிடித்து இருந்தது.

கலியமூர்த்தி பார்த்து விட்டால் வம்பாகிவிடும், மீனைப் பிடித்து விடுவான் என்று அப்படியே கிளம்பி வந்து விட்டான்.

மறுநாள் பள்ளி விட்டு வரும்போது பாலம் வந்ததும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பாலத்தின் அடியில் பார்த்தான். விரால் மீன் நின்றது. அதனுடன் நேற்று போலவே விளையாடினான். விரால் மீன் குஞ்சு ஏதோ சொல்ல வருவது போல் மேலே வந்து சிறிது வாயைக்கூட திறந்தது. அப்படியே இரண்டு காற்றுக் குமிழும் வந்ததும் தண்ணீரில் அலை வட்டம் உருவாகி கரையைத் தொட்டது.

மீன் தலை குப்புற கீழே வாலை ஆட்டிக் கொண்டு சென்று பிறகு மெல்ல மெல்ல நிழலை நோக்கி  தலையைக் கொண்டு வந்தது. ரொம்ப நேரம் ஆகி பசியெல்லாம் மறந்து, பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனுக்கு மோட்டுத்தெரு கலியமூர்த்தி ஞாபகம் வந்து விட்டது. எங்கிருந்தாவது பார்த்து விட்டால் பிடித்து விடுவானே, என்று எழுந்தான்.

கலியமூர்த்தியை எந்த விளையாட்டிலும் ஜெயிக்க முடியாது. வச்சாவாகட்டும், பேந்தாவகட்டும், அடிஜானாகட்டும் எந்த கோலிக்குண்டுவாக இருந்தாலும் அவனுக்கு மட்டும் தனியாக கைவரும். நைலான் நூல் தூண்டி முள் தக்கையோடு உள்ளங்கையில் கரகர என்று வளையமாக சுத்தி வைத்து பாக்கெட்டில் மடித்து வைத்து இருப்பான். மீனைப் பார்த்து விட்டால் பிடிக்காமல் விடமாட்டான். விளையாட்டு என்றால் எல்லாரிடமும் கடைசி  வரை ஐெயித்துக் கொண்டே போவான். கபடி ஓடிப் பிடித்தல் எதிலும் ஜெயிக்க முடியாது கலியமூர்த்தியை.

“சைக்கிள்காரர. நில்லு நில்லு…  மீனு வேனுமா?” என்ற கலியமூர்த்தியின் குரலைக் கேட்டு விட்டு கார்த்தி பயந்து திரும்பி நின்று கொண்டான்.

ரோட்டின் தென்புறம் தண்ணீரில் தாழ்ந்து இருந்த கருவை மரத்தினடியிலிருந்து எழுந்து தூண்டிலை மண்ணில் சொருகி விட்டு கயிறில் வரிசையாக கோர்த்த சிலேபி மீன்களை கொண்டு வந்தான்.

“மீன்காரர? ஒரு கிலோ வரும்!  எவ்வளவு தருவ?”

“இரண்டு ரூபாய் தரம்ப்பா”

“யோவ் அஞ்சு ரூபாய்  இருந்தா பார, இல்லைன்னா போய்கிட்டே இரு”

“இல்லப்பா அவ்வளவு விக்காது ஒரு ரூபாய் சேர்த்து மூனா வாங்கிக்க”

“சரி, பீடி இருக்கா?”

“இந்தா? இரண்டு இருக்கு, நீ ஒன்னு எடுத்துக்க”

கலியமூர்த்தி மூணு ருபாயும் பீடியும் வாங்கிக் கொண்டு திரும்ப மீன் பிடிக்கச் சென்றதை பார்த்து கொண்டே வீட்டுக்கு நடந்தான்.

தொடர்ந்து அடுத்த அடுத்த தினங்களில் பள்ளி விட்டு வரும்போது கார்த்திக்கும் மீனுக்குமான விளையாட்டு தொடர்ந்தது. மீனுக்கு என்ன தின்ன கொடுக்கலாம் தீனி கொடுத்தால் சீக்கிரம் வளர்ந்து விடுமே? அப்புறம் யாராவது பிடித்து விடுவார்களே?

இப்படி நாள் முழுவதும் ஒவ்வோறு சமயம் மீனைப்பற்றிய கவலை வந்து அலைக்கழித்தது. ஒவ்வொரு முறையும் மீனைப் பார்த்தபிறகுதான் ஒரு ஆசுவாசம், ஒரு திருப்தி வரும் கார்த்திக்கு.

இப்படியே நாட்கள் சென்று கொண்டு இருந்தபோது மழைக்காலம் தொடங்கி விட்டது. பெருமழை பிடித்துக் கொண்டது. இரண்டு நாளில் புயலடிக்கும் என்று பேப்பரிலும் வானொலியிலும் டிவியிலும் சொல்கிறார்கள். மழை தொடங்கிய பிறகு தண்ணீர் பச்சை ஓணான் போல் நிறம் மாறி செங்காமுட்டி நிறமாக மாறிச் சென்றதும் கார்த்தியின் கண்ணுக்கு மீன் தட்டுப்படவில்லை.

குடையோடு கடைக்கு செல்லும்போது பாலத்தின் நின்று பார்த்தான். வெள்ள நீர் சுழித்துக் கொண்டு, அம்மா அரிசி களையும்போது வரும் நிறம் போல, சின்ன மதுவு வழியாக வெளியேறி நுரைத்துக் கொண்டு ஒடியது. கண்ணுக்கெட்டிய தூரம் மழை நீர் வெள்ளக்காடாக தெரிந்தது. வெள்ளாறு எகுத்து விட்டது, தண்ணீர் உள் வாங்கவில்லை.

இரவு எப்படியும் வெள்ளம் வரும் கூரை வீடுகள் அதோகதிதான்  என்று கடைத்தெருவில் பேசிக் கொண்டனர். சிலர் தண்ணீர் வடிவதைத் தடுக்கும் பழைய ரோட்டை வெட்டி விட்டால் வெள்ள நீர் வடிந்துவிடும், இல்லை என்றால் கூரை வீட்டு மண் சுவர்கள் எல்லாம் இடிந்து கூரை சாய்ந்து விடும் என்று சொன்னார்கள்

ரோட்டை உடைத்தால் வம்பாகி விடும் என்றும் பயன்படுத்தாத ரோடை உடைக்க என்ன பயம் அட யாராவது உடைச்சு விடுங்க என்று பலவிதமாக பேசி கொண்டு இருந்தனர். சிலர் மண்வெட்டி பாரையோடு ரோட்டு பக்கம் வந்தனர்

சேராக்குத்தாரும், ஆண்டிக்குழியார் மகனும் முதலில் பழைய ரோட்டின் தாரை கொத்திப் பெயர்க்க ஆரம்பித்தார்கள். பழமையான ரோடு, மிகுந்த கஷ்டப்பட்டார்கள். அதற்குள் மேலு‌ம் சில இளைஞர்கள் சேர்ந்து வாய்க்காலாக தோண்ட ஆரம்பித்தனர். பச்சை கெட்ட வார்த்தையால் அழகர் மானத்தைத் திட்டினார்- ஒன்னு பேஞ்சு கெடுக்குது இல்லைன்னா காஞ்சு கெடுக்குது என்று

வாய்க்காலின் மையம் கார்த்தி  விரால் மீன்  பார்க்கும் இடத்துக்கு நேர் வந்து விட்டது. பாலத்தின் மையமும் அதுதான். தண்ணீர் வடிய ஆரம்பிக்கும்போது மீனை வெள்ளாத்துக்குக் கொண்டு செல்லும், பிறகு அப்படியே கடலுக்குப் போய்விடும். இனி அவ்வளவுதான், விரால் மீனைப் பார்க்க முடியாது.

இந்த சேராக்குத்தாருக்கு மட்டும் எது கேட்டாலும் செய்யக்கூடாது என்று நினைத்து கொண்டான்.

அன்று இரவு முழுவதும் கடும் மழை. மறுநாளும் மழை. சாயந்தரம் சீராக ஆரம்பித்த காற்று நேரம் செல்லச் செல்ல அதிகமாகி விட்டது. ஆடு மாடுகள் கத்தும் சத்தம் மனிதர்களின் சத்தம் அதனுடே காற்றின் உய்ய்ய்ய்ய்ய், உய்ய்ய்ய்ய்ய் சத்தம் வீட்டை ஒட்டி மரங்கள் முறிந்து விழும் சத்தம் என ஒரே பரிதவிப்பாக இருந்தது.

யாருக்கும் யாரும் உதவமுடியாத இருள். அப்போது இ டியும் மின்னலும் சேர்ந்து கொண்டதால் வெளியே பார்க்கக்கூட முடியவில்லை. கார்த்தியின் ஓட்டு வீட்டின் ஒடுகள் சில இடங்களில் பெயர்ந்தது காற்றில், மழை நீர் வீட்டினுள் விழ ஆரம்பித்ததும்  இடி படபட படீர் என்றும் தீடிர் தீடிர் என்று இடிச் சத்தம் கேட்கும்போது சுவர்கள் அதிர்ந்தன.

“கூரை வீடுகளின் கதி ஆடுமாடுகள் கதி என்னவாகும் கடவுளே, எப்போது காத்து விடும்? மழை பெய்தால் கூட பரவாயில்லையே, இந்த பேய்க்காத்து நின்று விட வேண்டும்,” என அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டனர்.

ஊய் ஊய் என்ற அந்த பேய்காத்து விட்டு விட வேண்டும் பத்துவிரலு வீட்டு பனைமரத்தில் இருக்கும் காக்கா கூடு தப்பிக்க வேண்டும் என்று கார்த்தியும் வேண்டி கொண்டான்.

மறுநாள் பார்த் போது அவன் நினைத்ததைவிட புயல்காத்து மோசம் செய்து இருந்தது. தெருவிலிருந்த கூரை வீடுகள் எல்லாம் பாதிக்கு மேல் விழுந்து இருந்தன. வீட்டை ஒட்டி இருந்த முருங்கை மரங்கள், உறுதியான பூவரசு, வேப்ப மரங்கள் எல்லாம் சாய்ந்து கிடந்தன. வீட்டின் மேல் கிடந்ததை எல்லாம் வெட்ட ஆரம்பித்து இருந்தனர்.

வீட்டுக்கு பின்புறம் இருந்த பத்துவிரலு வீட்டு பனைமரத்தின் காய்ந்த மட்டைகள் கீழே விழுந்து வழியை அடைத்து கொண்டு கிடந்தது. அதில் இருந்த காக்கா கூட்டில் இருந்த குச்சிகள் சரிந்து தொங்கின.

பச்சைமுட்டையின் ஓடு பனையை ஒட்டி கிடந்தது. காகங்களை காணவில்லை. கார்த்தி சோர்ந்து  போய் திரும்பினான்.

மழை ஒரே சீராக பெய்து கொண்டு இருந்தது. கார்த்தி குடையோடு பாலத்திற்கு சென்று பார்த்தான். சேராகுத்தார் வெட்டிய வழி ஏற்படுத்திய பழைய தார் ரோடே இல்லை. எல்லாவற்றையும் மழை வெள்ளம் கொண்டு சென்று கொண்டு இருந்தது. சேராகுத்தார் வெட்டவில்லை என்றால் தண்ணீர் வீடுகளில் புகுந்து இருக்கும் என பேசிக்கொண்டனர்.

மழை வெள்ளம் பார்க்க கூட்டம் பாலத்தில் நின்று இருந்தது. எட்டிப் பார்க்கச் சென்றவனை, ரெண்டும் கெட்டான் பயல போடா எட்ட, என்று சத்தம் போட்டார்கள். ஆலப்பாக்கம், புதுச் சத்திரம் எல்லாம் தண்ணீரில் மிதப்பதாகவும் பெருமாள் ஏரி உடைந்து போக்குவரத்து நின்று விட்டதாகவும் அந்த தண்ணீரும் இந்த வழியாகதான் வடியும் என்று பேசிக்கொண்டனர். பாலத்தின் அடியில் குனிந்து பார்க்க வந்த கார்த்தி திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

ரேஷன் கடையிலிருந்து அரிசி விநியோகம் வீட்டுக்கு இரண்டு கிலோ என்று இளைஞர்கள் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். தலையாரி மணியாரோடு விழுந்த வீடுகளை பார்க்கனும் என்றும் பேசி கொண்டனர்.

அப்போது கச்சா வலையை எடுத்துக் கொண்டு பத்துவிரலு அங்காளம்மன் கோயில் பக்கம் சென்றார். கார்த்தி அவரைப் பின்தொடர்ந்து கோயிலுக்கு சென்றான்.

இந்த மழை ஆரம்பித்ததிலிருந்து  கோயிலில்தான் அவனுக்கு பொழுது போய்க்கொண்டு இருந்தது. கொத்து வேலை,ஆசாரி வேலை, வயல் வேலைகளுக்குச் செல்ல முடியாத பெரியவர்கள் எல்லாம் கோயிலில் அமர்ந்து காசு வைத்து தாயம் விளையாடிக் கொண்டு இருப்பர்.

ஒரே சத்தமாக இருக்கும், சிறுவர்கள் எல்லாம் கோலி விளையாடுவார்கள். கார்த்தி நேரத்துக்கு தகுந்தவாறு இரண்டு விளையாட்டிலும் இருப்பான்.

பத்துவிரலு வாகாக கோயில் தரையில் உட்கார்ந்து வலையில் அதிகமாக கிழிந்து இருந்த துவாரங்களைத் தைக்கும் நோக்கோடு செப்பு ஊசியில் பருத்தி நூலை கோர்க்க ஆரம்பித்தார்.

“மாமா இந்த வலையால விராலு மீனு புடிக்கலாமா?”

“அட ஒங்க?  இ   ல்ல மாப்பிள்ள,இதுல புடிக்க முடியாதுடா, இது சும்மா வாய்க்கால் ஓரம் ஏந்துன்னா கெண்டகுஞ்சுவோ மாட்டும் மாப்பிள்ளை… கொழம்புக்கு ஆவும்ல”

“ம்ம்? மாமா அப்ப விராலு எப்படி புடிக்கறது?”

“அது சின்ன மீனு போட்டு பெரிய மீனு புடிக்கறதுடா மாப்பிள்ளை”

“சொல்லேன்?”

அது வந்து நல்லா வெய்யில் அடிக்கும்போது விராலு நிக்குதான்னு பார்க்கனும். தண்ணீர்ல விராலு இருந்தா அது தண்ணிய அடிக்கறது தெரியும் எங்க நிக்குதுன்னு பார்த்து தூண்டில சின்ன பொடி உயிர் மீன முள்ளுல மாட்டி தண்ணியில போட்டா விராலு மாட்டும். நீ ஏண்டா இதெல்லாம் கேக்கர?”

“சரி மாமா உனக்கு பத்து விரலுன்னு ஏன் பேர் வந்துச்சி? ”

“அட ஒக்காலவோழி,” திட்ட ஆரம்பித்தார்

“ஏய் மாப்பிள்ளை இங்கே வாடா நான் சொல்றேன்,” என்று பக்கிரி கூப்பிட்டார்.

பக்கிரி அவனிடம் தாயம் விளையாடச் சொல்லி எப்போதும் அவன் மேல் பந்தயம் வைப்பார்.

“யோவ் மாப்பிள்ளை ஐெயிக்கரான்யா… யாராவது பந்தயம் கட்டுரீங்களா? ஒரு ரூபாய், ஐம்பது காசு, ம்ம்…” என்பார்

“மாப்பிள்ளை போடரா தாயத்த என்பார்”

அவன் கையை குளுக்கி ஒரு இழுப்பு இழுத்து விடுவான். ஆறு தீத்திய புளியங்கொட்டையில் ஒன்று மட்டும் மல்லாந்து வெள்ளையாகவும் மற்ற ஐந்து புளியங்கொட்டகைகள் கவுந்து கருப்பாக கிடக்கும்.

“பார்த்தியா, மாப்பிள்ளை தாயத்த போட்டுட்டான் பார்”

காசு வைத்தவர்கள் அவனைத் திட்டுவார்கள்.

பக்கிரி சேதி தெரிந்த கார்த்தி நிக்காமல் ஓடினான். அவருக்கு பத்து விரலு என்று பெயர் எப்படி வந்தது என்று அவனுக்குத் தெரியும்.

பத்துவிரலு பேரு கலியபெருமாள், மனைவி பேரு லட்சுமி. “இந்த உலகத்திலேயே அந்த நாராயணனுக்குப் பிறகு எனக்கு மட்டும் தான் பெயர் பொருத்தம் அமைஞ்ச மனைவி,” நிறைபோதையில், “லெட்சுமி, லெட்சுமி,” என்பார்.

“ஊத்திட்டி வந்துட்டியா, சும்மா கிட”, என்பார்கள் அவர் மனைவி. பிறகு சத்தம் ஒன்றும் வராது.

பத்துவிரலு சும்மா இருக்க மாட்டார். கூலி வேலைக்குதான் போவார். வந்தும் சும்மா இல்லாமல் விறகு வெட்டவோ, மீன் பிடிக்க வலையை தோளில் மாட்டிக்கொண்டோ, விறகு பொளக்கவோ யாராவது வேலை என்றால் முன்பே வந்து நிப்பார். அப்ப காரியமாக ஏதேனும் சொல்லிக் கொடுத்தும் விடுவார். அது பத்திக் கொண்டு இருக்கும். இப்படி எல்லாவற்றுக்கும் முந்திக் கொண்டு நிற்பதால் அவருக்கு பத்துவிரலும் வேலை செய்யும் பத்துவிரலு என்று அதுவே பரிகாச பெயராகி விட்டது.

வெளியில் வேலை இல்லாதபோது, அவர் மனைவியே, “தம்பி பத்துவிரல அந்தப் பக்கம் பாத்தியா?” என்றுதான் கேட்பார்கள். வரிசையாக ஞாபகம் வந்து சிரித்துக்கொண்டான்.

இனி மழை விட்டு வெள்ளம் வடிந்துதான் விராலு மீன பார்க்க முடியும். அதுவும் வெள்ளத்தில் பெரிய பெரிய மரங்களே அடித்துச் செல்லும்போது விரால் மீன் மட்டும் எப்படி இருக்கும், அதுவும் போயிவிடும். சிரிப்பெல்லாம் கவலையாக இருந்தது அவனுக்கு

தொடர்ந்து வந்த நாட்களில் மழை விட்டு வெள்ள நீர் வடிய ஆரம்பித்து விட்டது. பாலத்தின் கட்டையில் மிகப் பெரிய பள்ளம் ஒன்றும் உண்டாகி இருந்தது.

கார்த்தி பள்ளி விட்டு வரும்போது மட்டும் அல்லாமல் பாலத்தின் மேல் செல்லும்போது எல்லாம் அவனுக்கு விரால் மீன் சிந்தனை வந்து எட்டிப் பார்க்காமல் செல்லவே மாட்டான்.

இப்படி நாட்கள் மாதங்களாக கடந்தபோது மணியங்கால் ஓடை தண்ணீர் வற்றி அங்கு அங்கே திட்டு திட்டாக குளமாக நிற்க ஆரம்பித்து விட்டது.

கலியமூர்த்திகூட காணவில்லை. வேலைக்கு வெளியூர் சென்று இருக்கவேண்டும். அப்படி ஒரு நாள் பார்க்கும்போது சிவன் படவர் தெரு பெரியவர் தன் விசிறு வலையை கையை ஒரு சுழற்று சுற்றி வீசினார். வலை வட்டமாக விழுந்து அலையெழுப்பியது. மீன்கள் வலையில் மாட்டி படபடவென தண்ணீரை அடித்தன.

அருகிலிருந்த நீர்த் திட்டையிலிருந்த இரண்டு கொக்குகளும் எம்பி பறந்து வட்டமிட்டு இறக்கையை அடிக்காமல் தண்ணீரில் இறங்கி நின்றன. பெரியவர் வலையை சுருக்கி இழுத்து கரைக்கு கொண்டு வந்து வலையை உதறி மீன்களை பொறுக்கினார். சின்னச் சின்ன கென்டை மீன்கள், சிலேபி மீன்கள் இருந்தது. அவர் பொறுக்காத பொடி மீன்களை  காக்காய்கள் சத்தமிட்டு கொத்திக் கொண்டு சென்றன.

மறுநாள் கார்த்தி பள்ளி விட்டு வரும்போது பாலத்தின் மேல் வந்து நின்று கீழே குனிந்து தண்ணிரை நோக்கிக் கொண்டு இருந்தான், நீர் சிறிது பாசி பிடித்து கலங்கலாக ஒரு பாசி நிறமாக தெரிந்தது. மீன் ஒன்றும் காணாமல் தலையை திருப்பும்போது ஒரு அசைவை கண்டான்.

திரும்பவும் நிதானமாக தண்ணீரைப் பார்த்தான். அப்போது பாலத்தின் அடிக்கட்டையில் இருந்த பத்திருப்பில் விரால் படுத்து இருந்தது தெரிந்தது.

கார்த்திக்கு என்னவோ போல் இருந்தது. மகிழ்ச்சியாகவும் அந்த மீனாக இருக்குமா இல்லை இது வேறா ஏன் மீனாட்டத்திற்க்கு வரவில்லை என்று சந்தேகமாகவும்.

திரும்பத் திரும்ப பழைய மாதிரி தலையை நீட்டிப் பார்ப்பதும் உள்ளிழுப்பதுமாக செய்தான். நிழல்கூட முன்பு போல் விழுவது மாதிரி தான் தெரிந்தது அவனுக்கு. ஆனால் விரால் மீன் முன்பு போல் மேலே வரவில்லை. மீன்கூட சற்று பெரியதாக தெரிந்தது. அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. நாளைக்கு பார்க்கலாம் என வந்து விட்டான்.

அப்போது ஆண்டுத் தேர்வு வேறு நடந்து கொண்டு இருந்தது. ஆனால் தினமும் வரும்போது பார்க்கத் தவறவில்லை. மீன் சட்டென்று பார்த்தால் தெரியாது. உத்துப் பார்த்தால்தான் தெரியும். சிறிதாக எச்சி துப்புவது, சின்ன குப்பைகளை போடுவது என்று அவனது முயற்சி இருக்கும். மீனிடமிருந்து எந்த அசைவும் இருக்காது. ஏமாற்றமாக இருந்தாலும் தினமும் பார்த்து உறுதி செய்து கொண்டான்.

அன்று கடைசி தேர்வு எழுதிவிட்டு வரும்போது முயற்சித்தான். மீன் ஒன்றும் சட்டை செய்யவில்லை.

அம்மா வேலை சொல்லும்போது வரும் எரிச்சல் அப்போது அவனுக்கு வந்து கல்லால் அடிக்கலாமா என சுற்றுமுற்றும் பார்த்தான். கல் ஒன்றும் இல்லை.

தூரத்தில் பெரியவர் வலையை வீசி சுருட்டி வாரிக்கொண்டு இருந்தார். சின்ன மதுவில் மோட்டு தெரு முருகன் மீன் பிடித்து கொண்டு இருந்தான். கார்த்தியை விட முருகன் நாலு வயது சின்னவன்.

சரசர என பாலத்தின் சரிவில் இறங்கினான். நரவலாக இருந்தது. ஒதுங்கி ஒதுங்கி காலைப் பார்த்து வைத்துக் கொண்டு மீன் பிடிப்பதை பார்க்க கார்த்தி முருகனிடம் வந்தான். மீன் ஒன்றும் கொத்தவில்லை. கார்த்திக்கு அப்போது திடீரென அந்த யோசனை வந்தது.

“முருகா உனக்கு விரால் மீனு வேனுமா? “

“எங்கண்ண இருக்கு?”

“வா புடிக்கலாம். முருகா நீ போயி நாக்குபூச்சிய கொட்டிட்டு தா பாரு காலவாயிக்கு போற வழியில பெரியவர் வலையில விழற பொடி சிலேபி குஞ்ச தண்ணிபுடிச்சு டப்பால போட்டு எடுத்துட்டு ஓடியா சீக்கிரம்“

“தூண்டிலை நீ எடுத்துட்டு வர்ரியாண்ண?”

“இல்லடா முருகா, நீ எடுத்துட்டு வா. வீட்டுல யாராவது பார்த்துட்டா பிரச்சினையாயிடும்”

“சரிண்ண”

முருகன் தகர டப்பியில் இருந்த நாக்குப்பூச்சியை கொட்டிவிட்டு சிறிது தண்ணீரை மொண்டுக் கொண்டு பெரியவரிடம் சென்று அவர் வலையை கரைக்கு கொண்டு வரும்வரை காத்திருந்து மீனைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு பாலத்தின் மேல் வந்தான்.

கார்த்தி குனிந்து விரால் மீன் படுத்திருப்பதைக் காட்டி தூண்டிலில் மீன் குஞ்சை மாட்டி கொடுக்கச் சொன்னான்.

முருகன் தூண்டில் முள்ளில் சின்ன சிலேபி குஞ்சை மாட்டி அதன் தலையில் எச்சிலைத் துப்பி, “போடுண,” என்றான்.

கார்த்தி தூண்டிலைத் தண்ணீரில் வீசியதும் மீன் குஞ்சு தூண்டிலில் தண்ணீர் மேலே நீந்தி கொண்டு விரால் மீன் படுத்து இருக்கும் இடத்திற்கு வராமல் இழுத்துக் கொண்டு சென்றது. தூண்டிலில் இருந்த தக்கை காற்று வாட்டத்திற்கு மீன் குஞ்சை இழுத்து சென்றது.

கார்த்தி மீன் குஞ்சை விரால் மீன் படுத்து இருக்கும் இடத்திற்கு நேர் சிரமப்பட்டு கொண்டு வரவும் படுத்து இருந்த விரால் மீன் மேலே வாலை ஆட்டி கொண்டு வரும்போதே கார்த்திக்கு புரிந்து விட்டது. அந்த மீன்தான் என்று!

விரால் மீன் குஞ்சை லபக்கென்று கவ்விக்கொண்டு உள்ளே இழுத்து சென்றது.

கார்த்தி என்ன செய்வது என திகைத்து நிற்க முருகன், “இங்கே குடுண்ண, உனக்கு புடிக்க தெரியல,” என்று தூண்டிலை வாங்கி விராலை ஒரே இழுப்பில் மேலே தூக்கி, “முள்ள முழுங்கிடுச்சு! வூட்டுல போயி கழட்டிக்கறேன்,” என்று ஓட ஆரம்பித்தான்.

விரால் மீன் தூண்டியின் முள்ளில் மாட்டி துடித்து கொண்டு இருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.