‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ அதன் வடிவமைப்பில், பொருளில் என எல்லாவற்றிலும், எனை வழமையான கதைப் புத்தகமாக நடத்தாதே, நான் கூடுதல் கவனத்தை கோருபவன், என அறைக்கூவல் விடுக்கிறது. முன்னுரையே, “கடவுள் வாசகர்களாகிய உங்களை நீள முன்னுரைகளில் இருந்து காப்பாராக” எனும் போர்ஹெசின் மேற்கோளோடு துவங்குகிறது. அடுத்து ‘தோரணம்’ பகுதியில் சில மேற்கோள்கள் உள்ளன. அவை உண்மைக்கும், புனைவுக்கும், அசலுக்குமான உறவைச் சுட்டுகின்றன. அவருடைய ‘வலை’ கதையில் இந்த வினா விரிகிறது. நான் வாசிக்கும் பொருளடக்கம் இல்லாத முதல் சிறுகதை தொகுப்பு இதுதான். இத்தனை கதைகள் கொண்ட பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் சிறுகதை தொகுப்பு, என்று கட்டுரையை துவங்குவதற்கு முன் பக்கங்களைப் புரட்டியோ அல்லது நினைவுகளைத் தோண்டியோதான் எழுத வேண்டியிருக்கிறது. சிறுகதை தொகுப்பின் இறுதியில் குறிப்புகளுக்காக இரண்டு மூன்று பக்கங்கள் விடப்பட்டுள்ளன. இதுவும் தமிழ் சிறுகதைகளில் புதிய முன்மாதிரிதான்.
‘தந்திகள்’ ‘புடவு’ ‘உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்பவர்கள்’ ‘உடைந்துபோன ஒரு பூர்ஷ்வா கனவு’ ‘ஜங்க்’ ‘நாளை இறந்து போன நாய்’ ‘பன்னிரண்டு மரணங்களின் துயர் நிரம்பிய தொகுப்பேடு’ ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ ‘வலை’ என ஒன்பது சிறுகதைகள் கொண்ட தொகுப்பு ‘யாவரும்’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது (பட்டியலிடவில்லை என்றால் மனம் ஆறாது). இக்கதைகள் வழமையான சிறுகதை வடிவத்திற்கு பொருந்தாதவை. கடினமான, திருகல் எனக் கூறத்தக்க மொழியில் எழுதப்பட்டவை, அவசியம் என்றால் ஆங்கிலத்தைப் பயன்படுத்த தயங்காதவை, பெரும்பாலான கதைகள் தமிழ் நிலத்துடன் (அல்லது நிலத்துடன்) தொடர்பற்ற அந்நியத்தன்மை கொண்டவை. இவை யதார்த்தவாத கதைகளை மதிப்பிட உள்ள கருவிகள், பின்நவீனத்துவ கதைகளுக்குப் பொருந்தாது என்றொரு வாதம் வைக்கலாம். ஆனால் பின்நவீனத்துவ கதைகளுக்குரிய கட்டுடைப்பையோ, மொழி விளையாட்டையோ பாலாவின் கதைகளில் காண முடிவதில்லை. ஒரு எழுத்தாளரை, அவருடைய படைப்புகளை நிராகரிக்க மேற்கண்ட காரணிகள் போதும்.
ஆனால் பாலா இவற்றைத்தான் தனது படைக்கலமாக கொள்கிறார். தனது படைப்புலகை தான் பிரத்தியேகமாக கண்டடைந்த சட்டங்களைச் சேர்த்து முடைகிறார். அதன் அத்தனை கோணல்கள், பிசிறுகள், துருத்தல்கள், பிழைகளோடும் அவை கலையாகின்றன. காரணம் அவை கலைஞனின் தனிப்பட்ட தேடலை அவனுக்கே உரிய அசலான குரலில் பதிவாக்குகின்றன. அவ்வகையில் ஒரு வாசகனாக இத்தொகுதியில் உள்ள அனைத்து கதைகளுமே என்னை ஈர்த்தன. புதிய வகையான எழுத்தை வாசிக்கும் பரபரப்பு என்னை தொற்றிக் கொண்டது. கதை சொல்லல் முறையில் தமிழ் புனைகதை உலகில் பாலா தாக்கம் செலுத்துவார் என்றே எண்ணுகிறேன்.
பாலாவின் கதைமாந்தர்கள் அனைவரும் நடுத்தர, உயர்- நடுத்தர வர்க்கத்து நகரவாசிகள். எல்லா கதைசொல்லிகளும், அல்லது முக்கிய கதைமாந்தர்களும் ஆண்கள். பெண்கள் வலுவான பாத்திரங்களாக மனதில் நிலைகொள்ளவில்லை. பொருளாதார மந்த நிலை காரணமான வேலையிழப்பு ஒரு கதைமாந்தரைப் போல் சில கதைகளில் வலுவாக தனது இருப்பைப் பிரகடனப்படுத்திக் கொள்கிறது. ‘தந்திகள்’ கதையில் மாதக்கணக்கில் வேலையின்றி இருக்கும் கணவனை விட்டு மனைவி அகன்று செல்கிறாள். ‘உடைந்து போன பூர்ஷ்வா கனவு’ கதையிலும் சம்பத் எட்டு மாதங்களாக வேலையில்லாமல் இருக்கிறான். மெல்ல கணவன் மனைவிக்கு இடையே விரிசல் நேர்கிறது. நவீன வாழ்வு குடும்ப அமைப்பை என்னவாக மாற்றி இருக்கிறது? உறவுப் பின்னலின் வலுவிற்கும் பொருளாதார காரணிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? இது போன்ற கேள்விகள் கதைகளில் விவாதப் பொருளாக ஆகின்றன.
‘தந்திகள்’ கதையில் இப்படி ஒரு வரி வருகிறது- ‘அவனுடைய விதியை விலங்கின் பெயரால் அழைக்க வேண்டுமென்றால் தயங்காமல் அது ஒரு பூனை என்பான்.’ மூன்று மாதமாக புதிய சான்றிதழ் படிப்புக்கும் சேர்ந்திருக்கிறான். வேலைக்கான முனைப்பை இழந்தவனாக இருக்கும் அவனை விட்டு அவன் மனைவி அகன்று செல்கிறாள். ஒன்றுக்கு பதிலீடாக மற்றொன்று வரும் எனும் நம்பிக்கை அவனுக்கு உண்டு. மனைவி அவனை விட்டுச் சென்ற அன்று இந்தப் பூனை வந்து சேர்கிறது. இறந்து மூன்று மாதமாகியும் அழுகாமல் கிடக்கும் பூனையை புதிய சமையலறை கத்தியின் சோதனைக்காக பயன்படுத்த எண்ணுகிறான். ‘அழுகாத பூனையை அறுக்கவும் முடியாது’ என அதை தவிர்த்து விடுகிறான். எப்போதும் பிள்ளையை சுமந்து கொண்டு வரும் குடியிருப்பு காவலரின் ஒடிசலான மனைவி மீனாவின் சித்திரம் வருகிறது. பன்றி வேட்டையில் ஓலமிடும் பன்றியின் ஓலத்தைக் கேட்டு மருத்துவம் படிக்க வந்த ஈரானியர்கள் அவன் வீட்டிற்குள் நுழைகிறார்கள். உதிரிச் சரடுகளான இவை யாவும் எப்படி இசையாகிறது என்பதே ‘தந்திகள்’. மனிதர்கள் கதைகளால் பிணைக்கப்படுகிறார்கள்.
‘உடைந்து போன பூர்ஷ்வா கனவு’ நவீன முதலாளித்துவ நுகர்வு சார் வாழ்வு குடும்ப அமைப்பிற்குள் செலுத்தும் பாதிப்பைப் பற்றிய நல்ல பகடி. இரண்டு நண்பர்கள் அவர்களின் குடும்பங்கள், நவீன உயர் வர்க்க வாழ்வின் கொண்டாட்டங்களில் திளைப்பவர்கள். ஒவ்வொரு முக்கிய நாட்களிலும் பரஸ்பரம் அத்தியாவசியமான பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்பவர்கள். அந்த திருமண நாளுக்கு என்ன பரிசு கிடைக்கும் என வேலையிழப்பின் அழுத்தத்தில் நாக்கைத்’ தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருக்கும்போது மகேந்திரன் ஜோடி அவர்களுக்கு மிகவும் அவசியமான ‘அழுக்குக் கூடையை’ பரிசளிக்கிறது. உறவுகளின் ஊடே ஊடுருவும் பொருளியல் சமன்பாடுகள் குறித்தான அபார சித்திரம் அளிக்கும் கதை.
பாலாவின் மிக முக்கியமான பலம் என்பது நுண்ணிய காட்சிச் சித்தரிப்பு. அவை கவித்துவமாகவும் திகழ்கின்றன. ‘சித்திரையில் பெய்த கோடை மழையின் ஈரம் வற்றிய ஓடைத்தடத்தின் நுண் துகள் மணலில் வெய்யிலுக்கு முதுகைக் காண்பித்துக் கிடக்கும் கூழாங்கற்களை மிதித்து மேலேறினர் மூவர்.’ ‘காமிக்ஸ் வேதாளத்தின் கண்கள்’ போல பாறையின் பொத்தல்கள் தென்படுகின்றன. சுடப்படும்போது ‘கரையான் புற்றின் வாயிலிருந்து பாம்பு வெளியேறுவது போல என் உடலில் இருந்து குருதி வெளியேறியதைப் பார்த்தேன்.’ அதே போல், பாலா அசலான சிந்தனைத் தெறிப்புகளை ஒற்றை வரிகளில் சொல்லி விடுகிறார். அண்மைய கால எழுத்தாளர்களில் அதிகமாக மேற்கோள் காட்டத்தக்க எழுத்தாளர் பாலாவாகவே இருப்பார். ‘கண்களால் நாக்குகளைவிட அதிகமான வரலாற்றை சொல்லிவிட முடியும். ஓவியம் கண்களின் வரலாறு.’ ‘மெதுவாக இயங்கும் இணைய தொடர்பே போர்னோகிராபியிலிருந்து நம்மை குணப்படுத்த போதுமானது’ போன்றவை சில உதாரணங்கள். இந்த ஒற்றை வரிகள் சில நேரங்களில் கதையை விட்டு மனம் அகன்ற பின்னும்கூட மனதில் தங்கிவிடுகின்றன.
‘புடவு’ கதையில் அகஸ்டின், சாமிநாதன், கதிரேசன் ஆகிய மூவரும் ‘ஃ’ வடிவ பாறைகளில் ஒளிந்திருக்கும் சமணப் புடவினைக் காண செல்கிறார்கள். அப்போது ஒரு தவிட்டு குருவியை இரண்டு அண்டங்காக்கைகள் துரத்துகின்றன. மகாவீரர், சாமானியன், நீட்ஷே என விவாதம் நகர்கிறது. பாலாவின் கதைகளில் இந்த ‘தளமிடுதல்’ (layering) உள்ளது. உறவிணைப்பை சித்தரிக்கிறார். அகஸ்டின் நடைமுறைவாதி. கதிரேசன் – சாமிநாதனின் உரையாடல்களில் அவனுக்கு ஆர்வமில்லை. தொல்மனிதர்களின் ஓவியங்களைக் காணும்போது ‘கண் முன்னாடி நிற்கிற சேணம் ஏந்திய குதிரையை ஓட்டுவதைவிட நீங்க பேசும் லாஸ்கோ குகையின் ஓவியக் குதிரைகளைப் பார்க்குறது எனக்கு விருப்பமில்லை’ என்கிறான். ஜைனம், மகாவீரரின் உடல் மறுப்பு, துறவு ஒரு பக்கம், மறுபக்கம் உடலை மையமாக கொண்ட நீட்ஷே பற்றிய விவாதம் வருகிறது. அகஸ்டின் இரண்டிலும் விலகி நடைமுறை நோக்குடன் பேசுகிறான். கதை இறுதியில் இரண்டு காக்கைகளுக்கு இடையில் உயிர் பிழைக்கப் போராடும் குருவியை கல்லைக் கொண்டு வீழ்த்துகிறான். “இப்ப எல்லாருக்கும் விடுதலை” என்கிறான். செறிவான மெய்யியல் உரையாடல்களும் குறியீட்டுத் தன்மையும் கொண்ட மிக நல்ல கதை. அகஸ்டின் இருத்தலியல் சிக்கல்களை எதிர்கொள்ளாமல் நிராகரிப்பதன் வழியாகவே கடக்கிறான். மரணத்திற்கு முன் அவை பொருளிழப்பதை சுட்டிக் காட்டுகிறான். எல்லா உன்னதங்களையும் மறுக்கிறான். அமரத்துவம் பற்றிய கேள்விகள் பாலா தனது புனைவுகளின் ஊடாக விவாதிக்கிறார். ‘வலை’ கதையையும் சேர்த்துக் கொள்ளலாம். ‘புடவி’ கதையில் மட்டுமே பாலா மரபை கையாண்டுள்ளார். ஒரு தத்துவச் சிக்கலை வெவ்வேறு மெய்யியல் நோக்குகள் அணுகுவதை கதையாக்குகிறார். இக்கதைகள் பெரும் உள்விவாதங்களின் தீர்மானமான முடிவுகளை உலகிற்கு அறிவிக்கின்றன. பாலா தனது சிந்தனைகளை, மெய்யியல்களை, வெளிப்படுத்தும் ஊடகமாக புனைவைக் கையாள்கிறார் என்றொரு எண்ணம் ஏற்பட்டது. ஆனால் ‘பன்னிரண்டு மரணங்களின் துயரம் மிகுந்த தொகுப்பேடு’, ‘வலை’ ஆகிய கதைகளில் இந்தப் போக்கை மீறுகிறார் எனச் சொல்லத் தோன்றுகிறது.
‘உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்பவர்கள்’ கதை இத்தொகுப்பில் என்னை அவ்வளவாக ஈர்க்காத (பிடிக்காத அல்ல) கதை என்று சொல்லலாம். வேறொருவனாக தன்னை மாற்றிக்கொள்ள முயன்று தோற்பவனின் கதை. நுட்பமாக உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்பவர்களின் உளவியலை பாலா காட்டுகிறார். தன் காதலி ஏற்கனவே இருவருடன் உறவு முறிந்தவள் என்று அறிந்து விலகுகிறான். அவளுடைய வெற்றிடத்தை தன்னால் நிரப்பமுடியும் என நம்பியவன் தன்னால் அது இயலாது என்பதை உணர்ந்து கொள்கிறான். எனை ஈர்க்காத மற்றொரு கதை என தொகுப்பின் தலைப்பிற்குரிய கதையான “துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை”யை சொல்லலாம். நிகழ் காலத்தில், இறந்த காலத்தில், என இரு வேறு காலங்களில் நிகழ்ந்த கப்பல் தரைதட்டும் நிகழ்வை ஒன்றாகப் பிணைந்து எழுதி இருக்கிறார். அப்பிணைப்பு அளிக்கும் மயக்கமே இக்கதை. இரண்டு காலகட்டங்களுக்கும் சென்று மீளும் உத்திக்காக முக்கியத்துவம் வாய்ந்த கதையாகச் சொல்லலாம்.
பாலாவின் கதைகள் நிகழ்வுகளின் ஊடே அசாதாரண தருணங்களை உருவாகின்றன. அழுகாத பூனையை போல், ‘ஜங்க்’ கதையில் போர்னோகிராபி அடிமைகள் மீட்கும் ரகசிய சங்கம் வருகிறது. தொடர்பறுந்து போன வடகிழக்கு காதலி கிடைப்பதற்கு முன், போர்னோவில் முங்கி கிடக்கும்போது ‘எனக்கு என்ன தேவையென்பதை பிரபஞ்சத்தின் மூலையில் யாரோ அறிந்திருக்கிறார்கள்.’ என பாவ்லோ கொஹெல்ஹோத்தனமாக புளங்காகிதம் அடையும் கதைசொல்லி, இறுதியில் அவளிடமிருந்து, சந்திக்க வேண்டும், என ஒரு குறுஞ்செய்தி வந்தவுடன் ‘எனக்கு என்ன தேவையில்லை என்பதையும் பிரபஞ்சத்தில் யாரோ அறிந்திருக்கிறார்கள்’, என முடிக்கிறார். பின்னை- வாய்மை காலகட்டத்தில் உற்பத்தியாகி நம்முன் வந்து குவியும் போலி தகவல்கள் நினைவுக்கு வந்தபடி இருந்தது.
அசாதாரண தருணங்களுக்கு மற்றுமொரு உதாரணம், கதையின் தலைப்பே சொல்லிவிடுவது போல் “நாளை இறந்து போன நாய்”. இந்த தலைப்பு எனக்களித்த கற்பனைகள், பரவசங்கள், சாத்தியங்கள் அற்புதமானவை. கதைசொல்லி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறான். அவன் வளர்க்காத நாய் இறந்து போய்விட்டதாக எதிர்க் குடியிருப்பில் இருந்து சொல்லிச் செல்கிறார்கள். அதன் உடமைகளை அளிக்கிறார்கள். அதன் சடலத்தை கூவத்தில் கண்டெடுத்தவர்கள் அப்புறப்படுத்த பணம் கேட்கிறார்கள். அதற்கு உணவு வாங்கிய வகையில் கட்டணம் செலுத்த கோருகிறார்கள். அவனுடைய பிரக்ஞையில் நாய் வளர்த்ததற்கான தடயமே இல்லை. நாட்குறிப்பில் தேடுகிறான், அறிந்தவர்களிடம் பேசிப் பார்க்கிறான், அம்மாவிடம், காதலியிடம், கேட்டுப் பார்க்கிறான். வலுவான புறச் சான்று, தடயமற்ற அகச் சான்றுக்கு இடையிலான போராட்டத்தில் ஒருவழியாக சமரசப் புள்ளியை அடைந்து விடுகிறான். புறச் சான்றின் கை மேலோங்கி விடுகிறது. ஏறத்தாழ காஃப்காவின் ‘விசாரணை’ கதையை ஒட்டியதுதான். செய்யாத, அல்லது என்னவென்றே சொல்லப்படாத, குற்றத்திற்கு எதிராக போராடி கே அதை ஏற்றுக்கொண்டு தண்டனையை சுவீகரிப்பான். இக்கதைக்குள் காஃப்காவின் தொடர்பைப் பற்றிய குறிப்பும் வருகிறது.
எனது சிறுகதை வெளியீட்டு விழா அறிமுக உரையில் இரண்டுவிதமான சிறுகதை போக்குகள் தற்காலத்தில் நிலவுகின்றன, என குறிப்பிட்டு இருந்தேன். நாவலின் தன்மை கொண்ட கதைகள், கவிதைக்கு நெருக்கமான கதைகள். நண்பர் விஷால் ராஜா ‘கவிதைத்தன்மை’ கொண்ட கதைகளுக்கு சில உதாரணங்கள் அளிக்கமுடியுமா என கேட்டபோது சட்டென்று எனக்கு எந்தப் பெயரும் சொல்லத் தெரியவில்லை. பாலாவின் கதைகளை வாசிக்கும்போது அவரின் கதைகளை அப்படி வகைப்படுத்த முடியும் என்று தோன்றுகிறது. கவிதை ஏதோ ஒரு வகையில் குழந்தையின் கற்பனையுடன் நெருக்கமானதும்கூட. தேர்ந்த எழுத்தாளனின் சவால் என்பது, தான் சேகரித்த மேதமைக்கும் தனக்குள் இருக்கும் குழந்தைமைக்கும் இடையிலான சமநிலையை பேணுவதே.
இத்தொகுப்பில் எனை ஈர்த்த, அல்லது முற்றிலும் சாய்த்த, கதைகள் என இரண்டைச் சொல்வேன். ‘வலை’ மற்றும் ‘பன்னிரண்டு மரணங்களின் துயர் நிரம்பிய தொகுப்பேடு’. ‘பன்னிரண்டு மரணங்கள்…’ கதை அதன் தலைப்பு சுட்டுவதைப் போல் பன்னிரண்டு மரணங்களின் கதையைச் சொல்கிறது. கல்லடிபட்டு இறக்கும் சிட்டுக்குருவி, குளியலறையில் தட்டில் மூழ்கி எலும்புக்கூடான வாலறுந்த பல்லி, சாலையில் அடிபட்டுச் சாகும் தெரு நாய் என உயிர்ப் பிராணிகளில் துவங்கி இப்பட்டியல் சிகரட், ஷூ லேஸ், சதுப்பு நிலம், இரவு, மகாராணியின் வீரப்பதக்கம், கூர் மழுங்கிய கத்தரிக்கோல் என நீள்கிறது. ‘வேறு எவற்றையும்விட விளக்குகள்தான் இப்போது வரை நிகழ்பவைகளின் சாட்சியமாக இருக்க முடியும். விளக்குகளின் இருப்பில் அல்லது இன்மையில் மட்டுமே இப்போது வரை அத்தனையுமே நிகழ்ந்திருக்கின்றன,’ எனும் வரி கவிக்கூற்றுக்கு சான்று. கழிவறைத் தொட்டியில் மூழ்கி மரித்துப் போன பல்லிக்கும், இற்றுப் போன சப்பாத்துக்களின் உள்ளே மரித்துக் கிடக்கும் கொசுக்களுக்கு இரங்கும் அகம் கலைஞனுக்கு உரியது. இக்கதை என்னை நெகிழச் செய்தது. விரட்டி வரும் நான்காவது தோட்டா பற்றிய அச்சுறுத்தல் எல்லாம் சிறுத்துப் போயின. ‘வலை’ மற்றும் இக்கதையின் வழியாக தென்படும் பாலா ஒரு ‘அனிமிஸ்ட்’ என சொல்லத் தோன்றுகிறது. அசையும், அசையா பொருட்கள் என எல்லாவற்றிலும் உயிர்த்துடிப்பை கண்ட பழங்குடியின் நீட்சியாக, உயிர்ப் பரப்பின் வலைப் பின்னலை காட்டி விடுகிறார் என தோன்றியது. பாலாவைப் போல் சொல்வதாக இருந்தால், “ஒரு சிட்டுக் குருவியை விடவோ, ரப்பர் சக்கரங்களில் நசுங்கிச் சாவும் நாயை விடவோ மனிதனின் மரணம் வேறானது அல்ல”.
தொகுப்பின் இறுதி கதை ‘வலை’ சந்தேகமின்றி இத்தொகுதியின் சிறந்த கதை. சிந்தனையின் ஊடகமாக பயணித்த கதைகள் எனும் பாணி மறைந்து கதை தன் போக்கில் விருட்சமாக வேர் கொண்டு வளர்ந்த கதை. பொதுவாக ‘நல்ல கதைகளை’ இரண்டாக வகுக்கலாம். தொழில்நுட்ப நேர்த்தியுடன் நம் உணர்வுகளை கிளர்த்தி, அல்லது உணர்த்தி முடிபவை ஒரு வகை. பெரும்பாலான சிறந்த கதைகள் இவ்வகையையே சாரும். மற்றொரு வகையான ‘நல்ல கதைகள்’ படைப்பாளியாக நமது படைப்பு மனத்தின் மீது தாக்கம் செலுத்தித் தூண்டும். ‘வலை’ இரண்டாம் விதமான கதை. ஓர் எழுத்தாளனாக நான் எழுத விரும்பும் கதை. ‘வலை’ நவீன தேவதைக் கதையின் அம்சம் கொண்டது. ‘சோபியின் உலகம்’ வாசிக்கும்போது ஏற்பட்ட ஆச்சரியம் எனக்கு வலை வாசிக்கும்போதும் கிடைத்தது. மிகுபுனைவு தேவதைக் கதையாக பயணிக்கும் அதே சமயத்தில் உயர் தத்துவ சிக்கல்களை, கேள்விகளை, கதை எதிர்கொள்கிறது. முடிவற்ற ஊழின் நெசவை, வாழ்க்கைச் சுழலை, சித்தரிக்கிறது. அ. கா. பெருமாள் தொகுத்த நாட்டாரியல் ராமாயண கதைகளைக் கொண்ட தொகுப்பான ‘இராமன் எத்தனை இராமனடி’யில் ஒரு கதை வரும். சீதையைக் காண இலங்கை செல்வதற்கு முன் ஹனுமான் குளித்து ஓய்வெடுத்துச் செல்வான். அப்போது ராமன் அளித்த கணையாழியை அங்கு தவம் செய்யும் துறவியிடம் ஒப்படைப்பான். அவர் அதை நீர்ச் செப்பு கலத்தில் போட சொல்வார். கிளம்புவதற்கு முன் அனுமான் தனது கணையாழியை எடுக்கும்போது அதில் ஒரே மாதிரியான பல கணையாழிகள் கிடக்கும். குழம்பி முனிவரிடம் கேட்பான். அப்போது அந்த முனிவர் நீ எத்தனையாவது அனுமானோ, உன்னுடையது எத்தனையாவது கணையாழியோ, எத்தனையோ அனுமான்கள் வந்து செல்கிறார்கள், என்பார். சட்டென இக்கதை அடையும் காலாதீத தன்மை, உயரம், ‘வலை’ கதையின் முடிவில் அடையப்படும் உணர்வு நிலைக்கு நெருக்கமானது. பாலா புதிய கடவுள்களை, அவர்களுக்கென கதைகளை உருவாக்குகிறார். ஜெசியாவை உதாரணமாகச் சொல்லலாம். நாமறிந்த தொன்மங்களை உருமாற்றுகிறார். மூன்று ராஜ்ஜியங்களின் கதை பைபிள் கதையுடன் தொடர்புடையதாக வாசிக்க முடியும். ‘வலை’ கதையைப் பற்றி மட்டுமே தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்.
பரந்த வாசிப்பும், கூர்ந்த அவதானிப்புகளும் ஒருங்கே அமையும்போது தேர்ந்த எழுத்தாளன் உருவாகிறான். ஒவ்வொரு சொல்லுக்கும் பொறுப்பேற்று பிரக்ஞைபூர்வமாக கதைசொல்லல் ஒருமுறை. அவ்வப்போது நழுவிச்செல்லும் பிரக்ஞையை கதைசொல்லி பின்தொடர்ந்து செல்வது மற்றொரு முறை. பாலா இரண்டு வகைகளையும் பின்பற்றி கதைகளை எழுதுகிறார். பேசுபொருள், கூறும் விதம் என இரண்டு காரணங்களினாலும் பாலா தமிழின் தனிக்குரலாக ஒலிக்கிறார். அண்மையில் சொல்வனம் இதழில் வில் செல்ஃப் வாசகர்களுக்கு வாசிக்க ‘கடினமாக’ இருக்கும் நாவல்களின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் வந்துள்ளது. “விமரிசகர்கள் எங்களைப் புகழ்ந்தபோதும், எங்கள் பிரதிகளோடு ஒரு எச்சரிக்கை வாசகத்தைச் சேர்க்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறார்கள். ‘கடினம்,’ என்று சொல்கிறார்கள்- கூடவே அச்சுறுத்தும் உள்ளர்த்தமாய்-, ஓர் எதிரொலி, டெர் ஸ்டெப்பென்வுல்ஃபின் தாக்கமாய் இருக்கலாம்-, “இந்தப் புத்தகம் அனைவருக்குமானது அல்ல,” என்கிறார்கள்.”… நவீன டிஜிடல் யுகத்தில் வாசிப்பை எளிமைப்படுத்தும், பக்கங்களை விரைவாக விரட்டிச் செல்லும் ஆக்கங்களை உருவாக்குவதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். இவை பெருவாரியான மக்களை சென்று சேரும். ஆனால் அதே நேரம் லட்சிய வாசகன் தன்னை திருப்திப்படுத்தும், உழைப்பைக் கோரும் கடின ஆக்கங்களுக்காக தேடி அலைகிறான். வில் செல்ஃப் நவதாராளவாதம் ‘கடின’ நாவல்களின் விற்பனையை உண்மையில் பெருக்கியுள்ளன, என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். ஒரு வகையில் இந்த அளவுகோளின்படி பாலாவின் புனைவுலகை அறிமுகம் செய்யும்போது அவரையும் “எல்லோருக்குமான எழுத்தாளர்” அல்ல என்றே அறிமுகம் செய்ய முடியும் என தோன்றுகிறது.
மகரந்த் பரஞ்சபே எழுதிய நூலுக்கு ஆஷிஷ் நந்தி எழுதிய முன்னுரையில் பிற விஷயங்கள் பின்னுக்குச் சென்றால்கூட காந்தி, ‘நவீனத்துவத்தின் விமர்சகராக’ எப்போதும் முக்கியமான குரலாக திகழ்வார் என்கிறார். பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதையை வாசித்து முடித்தவுடன் ஏற்பட்ட முதல் மனப்பதிவு என ஆஷிஸ் நந்தியின் இக்கருத்தை சொல்லலாம். நவீன வாழ்வின் அபத்தங்களைப் பாடும் புதுயுக பாணன் பாலா.