“டேய்… எங்கடா போற…”
பாலுவின் பாட்டி கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவன் வேகமாக இறங்கி மெயின் ரோட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தான். கிழவி கத்திக்கொண்டேயிருந்தாள். “அய்யோ… நானே இந்தப் புள்ளய சீரழிச்சிட்டனே, இந்தப் புள்ளய வெச்சிக்கிட்டு நான் என்ன பண்ணுவேன்” என்று தொடர்ந்து இதையே வேவ்வேறு மாதிரி புலம்பிக் கொண்டிருந்தாள். வீட்டில் இருந்தவர்கள் இதைப் பொருட்படுத்தாமல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பாலுவின் அம்மா இறந்து பதினாறாம் நாள் காரியத்துக்கான வேலை நடந்து கொண்டிருந்தது. மறுபடியும் பாலு தெரிகிறானா என்று கிழவி எட்டிப்பார்த்தாள், தெருவில் யாருமே தட்டுப்படவில்லை.
பாலு, அவன் அம்மா வயித்துல இருக்கும்போதே அவன் அப்பா விபத்தில் செத்துட்டார். பாலு பொறக்கற வரைக்கும் கிழவிதான் எல்லாம் பாத்துகிட்டது. கிழவி பெயர் கண்ணம்மா. பாலுவின் அப்பாவை பெத்தவள். பாலுவிற்கு அம்மா வகையில சொந்தம்னு பெருசா ஒண்ணும் இல்ல. கிழவிக்கு ரெண்டு பசங்க, பெரியவன் பேரு குமார், சின்னவன் பேரு சேகர். குமார்தான் பாலுவோட அப்பா. ஏ.எப்.டி மில்லுல வேலை செஞ்சிட்டிருந்தாரு. வேலை முடிஞ்சி சைக்கிள்ள வரும்போது சேலியமேடுகிட்ட லாரி அடிச்சிட்டு அங்கயே உயிர் போய்டுச்சி. ராத்திரில நடந்ததுனால அடிச்சது யாருனு தெரியல. பாலு அப்பா சாகும்போது அவங்க அம்மா நாலு மாசம். எல்லாம் கலச்சிடலாம்னு சொன்னாங்க. கிழவி விடவேயில்ல. “சின்ன பொண்ணு, புள்ள பெத்துட்டு தனியா இன்னா பண்ணும்,” எல்லாரும் கேக்கும்போது “எல்லாம் எனக்கு தெரியும், போய் வேலைய பாருங்க, என்னமோ இவனுங்க வந்துதான் கஞ்சி ஊத்தர மாதிரி நிக்கறானுங்க” னு மூஞ்சில அடிச்சாப்புல கேட்டதால, அதுக்கப்பறம் யாரும் கிழவிகிட்ட எதுவும் கேக்கல.
குழந்த பொறந்தவுடனே கிழவி, பாலுவோட அம்மாகிட்ட ஜாடயா கேக்க ஆரம்பிச்சது, “ஏ வள்ளி, எவ்வளோ நாளுக்கு இப்படி இருக்கலாம்னு இருக்க. எல்லாரும் என்னல ஏசராங்க. நானும் உன்ன இன்னும் எத்தினி நாலுக்கு காவக்காக்கறது.”
வள்ளி எதுவும் பேசல. அவள் அடுப்புல இருந்த சட்டிய இறக்கி கீழ வெச்சிட்டு எழுந்து தோட்டத்து பக்கம் போகும்போது கிழவி மறுபடியும் ஆரம்பித்தது.
“நான் கேக்குறேன் என்ன பதிலே சொல்லாம போறவ, நில்லுடி” என்றாள்.
நின்று திரும்பி “என்ன” என்பது போல் பார்த்தாள் வள்ளி.
“சேகர கட்டிக்கறியா என்ன?. உன்ன வெளியலாம் கட்டிக் குடுக்க எனக்கு யோசன இல்ல. ஏன் வாரிசு என் வீட்டுலதான் வளரனும். ஒழுங்கா சொல்லறத செய்” என்றாள்.
செஞ்சிதான் ஆகனும். இல்ல வெற வழி. கைபுள்ள எடுத்துனு எங்க போறது.
பெருசா யாரயும் கூப்புடுல. அக்கம் பக்கம் நாலு பேரு, ஊர் பெருசு ரெண்டு பேரு, சொந்தம் கொஞ்சம். மொத்தமாவே ஒரு நாப்பது பேருகூட இல்ல. செலவும் பெருசா செய்யல. கல்யாணத்த முடிச்ச சந்தோசம் கிழவிக்கு. கிழவி வள்ளிய பள்ளத்துல இருந்து தூக்கறன்னு இழுத்து பாதாளத்துல எறக்கிடுச்சி.
பாலு ஏரிக்கரை பக்கமா சுத்திக்கிட்டிருந்தான். ஊர்ல எங்கல்லாம் ஒதுக்குப்புறமான எடம் இருந்துச்சோ அங்கெல்லாம் போய் தேடிக்கிட்டிருந்தான். எங்க தேடியும் சேகர காணல. எல்லாம் எடத்துலயும் சுத்திட்டு வீட்டுக்கு போலாம்னு வரப்புல வரும்போது பம்பு செட்டுல சரக்கு அடிச்சிட்டு இருந்த ரெண்டு பேரு இவன அடையாளம் கண்டு, “டேய், யாரு சேகரயா தேடர” என்றான் ஒருத்தன்.
பதிலுக்கு பாலு “ஆமா எங்க இருக்கு” என்றான்.
“பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல பாத்தேன்டா” என்று சொல்லிட்டு அவர்களுக்குள் ஏதோ பேசிகிட்டானுங்க அப்பறம் சிரிச்சிக்கிட்டாங்க.
பாலு வேகமா பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஓடினான்.
கல்யாணம் ஆகியும் கொஞ்ச நாளுக்கு சேகர் வள்ளிய அண்ணினே கூப்பிட்டான். அதுக்கு ஒரு நாள் கிழவி கூப்பாடு போட்டதும்தான் பேரு சொல்லி கூப்பிட்டான். சேகர் சின்ன வயசுலருந்தே கிழவிகூடவே தான் திரிவான். அவங்க அண்ணன்கூடலாம் விளையாட போகமாட்டான். கிழவிக்கு பாதிவேலைய அவன்தான் செய்வான். கிழவிகூட ஆரம்பத்துல ஏதோ நம்ம மேல இருக்கற பாசத்துலதான் செய்யறானு நினைச்சிக்கிச்சி. ஆனா சேகருக்கு ஆம்பள பசங்ககூட போய் விளையாடறத விட வீட்டு வேல செய்றதுதான் புடிச்சிருந்தது.
நிரந்தரமா எந்த வேலயும் இல்ல. எங்க போனாலும் நிலையில்ல. கிழவிக்கு ஒண்ணும் புரியல. இருக்குற கொஞ்ச நிலத்த பாத்துக்கனு சொல்லிடுச்சி. சரி அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணிடலாம்னு குமாருகிட்ட கேட்டப்ப, “இவனுக்கு எவன் பொண்ணு குடுப்பான்”னு கேட்டுட்டு போனான். ஏன்னு கிழவி எதிர்க் கேள்வி கேட்டப்ப பதில் இல்ல. குமார் போன கொஞ்ச நாள்லயே கிழவிக்கு இப்படி ஒரு யோசன வந்துடுச்சி. ஆனா புள்ள பொறக்கட்டும்னு காத்திருந்துச்சி.
சேகர், பாலு மேல உசுரயே வச்சிருந்தான். குழந்த தல நிக்கறவரைக்கும் அவன் கொஞ்சம் எட்டிதான் இருந்தான். ஆனா அதுக்கப்பறம் பாலுக்கு எல்லாமே அவன்தான். கால்ல போட்டு குளிப்பாட்டறதுல இருந்து, பவுடர் போட்டு மை வைக்கிறவரைக்கும் அவன்தான் செஞ்சான். பாலுவும் எப்பவும் சேகரே கதினு வளர்ந்தான். சேகர் அவன் அப்பன் இல்லனு பாலு வளர தெரிஞ்சிக்கிட்டான். ஆனா அது அவனுக்கு எதுவும் உறுத்தல. வள்ளிய விட சேகர்தான் அவன நல்லா பாத்துக்கற மாதிரி அவனுக்கு தோனுச்சி.
கொஞ்ச நாள் போனதுக்கு அப்பறம்தான் சேகரோட குணம் வள்ளிக்கு தெரிய ஆரம்பிச்சது. சேகருக்கு சேகரா இருக்கப் பிடிக்கல. ஆனா அத அவன் யாருகிட்டயும் இவ்வளவு நாளா காட்டிக்கல. கிழவி மேல இருந்த பயம்தான் அதுக்கு முக்கியமான காரணம். இதெல்லாம் கிழவிக்கு தெரிஞ்சா அவளோதான். கிழவியே சோத்துல விஷத்த வெச்சிடும். வீட்டுல யாரும் இல்லாதப்ப புடவை கட்டிப் பார்ப்பான். எப்பவுமே நெத்தில குங்குமம் இருக்கும். கேட்டா அம்மன் கோவிலுக்கு போனேன்னு சொல்லுவான். யாரும் அத பெருசா கண்டுக்கல. லேசா சாயல் தெரிஞ்சாலும் அவன் யாருகூடவும் பழகாததுனால யாருக்கும் எதும் தெரில. கல்யாணத்துக்கு முன்னாடி தனியா இருந்ததுனால சேகரால ஊரயும் வீட்டயும் ஏமாத்த முடிஞ்சது. ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் எங்க சுத்தனாலும் ராத்திரி வீட்டுக்குதான வரனும். தனியா போய் படுத்தா கிழவி சும்மா வுடுமா. சேகர் வள்ளிகிட்ட பெருசா எதுவும் பேசமாட்டான். வள்ளியும், ஏதோ நம்பல மாதிரி கிழவி சொன்னதுக்காதான் கட்டிக்கிட்டான் போலன்னு விட்டுட்டா. வள்ளிக்கு புள்ள ஒழுங்கா வளத்தா போதும்னு தான் இருந்துச்சி. சேகர் வெறும் ஆம்பள துணைக்குதான். அதான் வேற எவனும் இன்னும் வள்ளிய அண்டாம இருக்கான். வள்ளிக்கு இதுவே போதும்னு தான் இருந்துச்சி.
ஊர் திருவிழாவுல சேகர பாத்ததுமே அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சி. இவனும் நம்ம ஆளுதானு. அவன் கண்ணுல அவ்வளவு ஏக்கம். அவங்களோட புடவ, மேக்கப் எல்லாம் பாத்து அவனுக்கு அவங்க கூடவே போய்டனும் தோனிச்சி. கிழவி பின்னாடியே வந்து, “இங்க என்னடா பண்ற…” என்றாள். முதல் முறையாக சேகர் கிழவியிடம் எரிந்து விழுந்தான் “நீ போ… நான் வரேன்..”
கிழவிக்கு ஆத்திரம் வந்தாலும், மனசுக்குள்ள “வீட்டுக்கு வா” னு நினச்சப்படியே நடந்தது. வள்ளிகூட கல்யாணம் ஆகி எட்டு வருசமாகிடுச்சி. அவளுக்கு தெரியாம இவ்வளோ நாளு இருந்ததே அதிகம். அதுவும் ஒரே அறையில, எங்க பாத்தாலும் வள்ளியோட துணிங்கதான் இருக்கும். அவ புடவ, ரவிக்க, அத பாக்கும் போதுலாம் ஆத்திரமா வரும். அந்த ஆத்திரம் பல நேரம் பாலு பக்கமாதான் திரும்பும். இவன் பொறந்ததுனால தான நமக்கு இந்த கல்யாணல் ஆச்சினு. ஆனா அவனால கிழவிய மீறி ஒண்ணும் பண்ண முடில.
சேகர பாத்து ஒன்னு சிரிச்சிது. சேகர் மறைவா போய் பேச்சி குடுத்தான். மெல்ல எல்லாத்தையும் சொல்லி அழ ஆரம்பித்தான். அவங்க எல்லாரும் சேந்து அவன தேத்தி, அவன் எப்ப வேணா வரலாம்னு சொல்லி விலாசம் தந்தாங்க. அவன் வாங்கி பத்திரமா வெச்சிக்கிட்டான்.
திருவிழா முடிஞ்ச கொஞ்ச நாள்ல சேகருக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. வீட்டுல புடவ கட்ட ஆரம்பிச்சான். வள்ளி வருவானு தெரிஞ்சும் அவன் நிறுத்தல. முழுசா கட்டி அலமாரில இருந்த கண்ணாடில பாத்துக்கிட்டி இருந்தான். இத எல்லாத்தயும் வள்ளி பாத்துக்கிட்டு தான் இருந்தாள். அவன்கிட்ட எதுவும் கேக்கல. கிழவி வந்ததும் கிழவியிடம் அழுது எல்லாத்தையும் சொன்னாள். கிழவி முதலில் இதை நம்பல. ஆனா வள்ளி அழறத பாத்து சேகர் கிட்ட கேட்டா, அவன் எதுவும் சொல்லல. கிழவி வெளக்கமாற எடுத்து சேகர வெளுத்துட்டா. அவனுக்கு இராத்திரி முழுக்க தூக்கம் வரல. கிழவி அடிச்சத அவனால தாங்க முடியல. கிழவிய பழிவாங்கியே ஆகனும்னு முடிவுகட்டி கண்ண மூடினான்.
காலையில வள்ளியோட கல்யாணப் புடவைய எடுத்து கட்டிகிட்டு கல்யாண பொண்ணு மாதிரி சிங்காரிச்சிகிட்டு ஊரயே ஒருவாட்டி சுத்தி வந்தான். அவ்வளவுதான் அன்னிக்கு பாதி பேரு வேலை வெட்டிக்கு போகல. கிழவி வாசல்ல ஒப்பாரிய ஆரமிச்சுது. பொம்பளைங்க அவங்க வேலைய ஆரம்பிச்சாங்க. வள்ளியால இந்த பேச்ச எதயும் கேக்க முடில. ராத்திரி வரைக்கும் கத பேசன ஜனங்க தூக்கம் வந்ததும் போய்டுச்சிங்க. ஆனா எல்லாம் முடிஞ்சிதா என்ன. மறுபடியும் காலைல விடியாமயா போய்டும். விடிஞ்சிது. ஆனா அவங்களுக்கு பேச வேற கதைய விட்டுட்டு வள்ளி தொங்கினு இருந்தா.
பாலு பஸ் ஸ்டாண்ட்க்கு வந்தப்ப சேகர் ஒரு கல்லு மேல ஒக்காந்துனு இருந்தான். கைலி தான் கட்டினு இருந்தான். கைல ஒரு பை, அதுல கொஞ்சம் துணிங்க. பாலு நேரா சேகர்கிட்ட போய் நின்னான். அவன பாத்ததும் சேகர் விரட்டனான். ஆனா பாலு போகாம அவன் கைய புடிச்சி “வாப்பா” னு இழுத்தான்.
“நான் உன் அப்பன் இல்ல. வீட்டுக்கு போடா” னு விரட்டனான், ஆனா அவன் கண்னு கலங்க ஆரம்பிச்சிடுச்சி.
“அப்பா என்னயும் இட்டுகினு போப்பா”
“நான் திரும்பி வரமாட்டன். இங்க கிழவி கூடவே இரு போ”
“அப்பா வேணாம்பா”
“என்னய அப்பானு கூப்பிடாத” என்று ஆத்திரப்பட்டான். “உனக்கு தெரியுமில்ல. என்னால உனக்கு அப்பனாலாம் இருக்க முடியாது”
தூரத்தில் பேருந்து வருவதை கண்டு எழுந்தான்.
அவன் கையை பிடித்த பாலு, “உன்னால அப்பாவாதான இருக்க முடியாது. அம்மாவா இருக்கலாம் இல்ல, எனக்கு அம்மாவா இரு,” என்றான்.
சேகர், பாலுவை அணைத்தபடி கதறி அழ ஆரம்பித்தான். பேருந்து அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தது.