பூதம் – காளி பிரசாத் சிறுகதை

காளி பிரசாத்

ஆம்புலன்ஸ் என்றால் பெரிய வண்டியாக இல்லை. சிறிய ஆம்னிவண்டிதான். ஆனால் வேகமாக போனது. அதன் பின்னாலேயே அந்த நீல நிற பைக்கும் சென்றது. அதைத் தொடர்ந்து இன்னும் சில இருசக்கர வாகனங்கள். ஒதுங்கி நின்ற இருசக்கர வண்டியோட்டிகளும் ஆம்புலன்ஸ் கடக்கும்போது அந்த சங்கிலியில் இணைந்து கொண்டனர். இருபுறமும் வண்டிகள் நிற்க, சிறப்பு தரிசன சீட்டு வாங்கிய வரிசையாக ஆம்புலன்ஸ் பின்னால் அவர்கள் சென்றுகொண்டிருந்தனர். முதலிடத்தை நீல நிற வண்டிக்காரன் விடுவதாய் இல்லை. அதை பிடிக்க ஒரு பெண்ணும் இன்னொரு வெள்ளை சட்டைக்காரனும் முயன்றார்கள். அதற்குள் இன்னொரு வண்டிக்காரன் குறுக்கே இடிப்பதுபோல் வர, நீலகண்டன் தன் உள்ளங்கைகளால் கண்களை மூடிக்கொண்டார். ஆண்டவன்தான் காக்கணும் என்று நினைத்தார். உடனே, கந்த சஷ்டி கவசத்தில் அவருக்குத் தெரிந்த அந்த நாலு வரிகள் ஞாபகம் வந்து முணுமுணுத்தார். பின் இயல்பாக எடுப்பதுபோல கைகளை விலக்கிப் பார்த்தார். கந்தன் காப்பாற்றியிருந்தது போலத்தான் இருந்தது. தான் மிகவும் பதட்டப்பட்டதை நினைத்து வெட்கப்பட்டவராக கைபேசியை எடுத்துப் பார்ப்பது போல தன்னை யாராவது பார்த்தார்களா என நோக்கினார். அர்னால்டு பார்த்திருப்பான் என்று தோன்றியது. அர்னால்டு பேருந்தை சற்று நகர்த்தி நிறுத்தி இவரைப் பார்த்து சிரித்தான்.

“ஒண்ணியும்ஆவல. ஆச்சுன்னா இன்னும் ட்ராஃபிக் ஆயிருக்கும்.”

“இந்த நெரிசலுக்கே அரையவராவது ஆவும்…”

இன்றும் அலுவலகத்திற்கு பத்து நிமிடங்களாவது தாமதமாகத்தான் போகப் போகிறார். அலுவலக வாழ்க்கையில் கடந்த ஆறு மாதங்கள்போல அவர் தாமதமாக போனதே இல்லை. எல்லாம் கிண்டி தலைமை அலுவலகத்திற்கு மாறிய பிறகுதான். இன்னும் ஆறு மாதங்கள்தான். அப்புறம் அவர் நினைக்கும்போது கிளம்பலாம் அல்லது கிளம்பாமலும் இருக்கலாம். எல்லாம் அவர் இஷ்டம்தான். அதுவரையில் இந்த மாநகரப் பேருந்தும் மாதப் பயணச்சீட்டும் அர்னால்டும் தணிகைவேலும் மாறப் போவதில்லை.

அலுவலகம் சற்று கும்மாளமாக இருந்தது. நாகராஜு இனிப்பு கொண்டு வந்திருந்தான். ஓங்கோலிலிருந்து சென்னைக்கு புது வீடு மாறியபின் இன்றுதான் வருகிறான்.

“ஸ்கூலுக்கு அனுப்பிட்டு அவளுக்கு போகவர வழியும் சொல்லிக் கொடுத்தாச்சு சார். நீங்க மட்டும் இல்லாட்டி பாஷையும் இடமும் தெரியாம ரொம்ப அலைஞ்சிருப்பேன் சார். இப்படி டக்குனு முடிச்சு கொடுத்துட்டீங்க” சமாளித்தாலும் அவன் குரல் சற்று இடறியது.

“ரொம்ப சந்தோஷம்ப்பா…” பதிலுக்கு இவரும் ஆங்கிலத்தில் சொல்லி தோளில் தட்டிக் கொடுத்தார்.

பின் செருமியபடிக்கே லட்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டபோது கைபேசி சிணுங்கியது. லட்டுத்தூள் தொண்டையிலே சிக்கி புரையேறியது. ‘அந்த சனியன் பிடிச்ச கொரங்கு எதாவது பண்ணிருப்பானா? அல்லது காலையில் பேசின விஷயந்தானா?’ இரண்டு பூதங்களில் எந்த பூதம் என தெரியவில்லை.

காலையில் காலண்டரைக் கிழித்து வியாழக்கிழமை குருவுக்கு நல்லெண்ணை விளக்கு ஏற்ற வேண்டுமென்று நினைத்தபோது அகிலா சமையற்கட்டிலிருந்தபடியே கூறினாள் “இன்னைக்கு எப்படியும் போயி நைச்சியமா பேசிட்டுவாங்க… ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிடாதீங்க… இல்லாட்டி கிருஷ்ணமூர்த்திய கூப்புட்டு போங்க.. வேணும்னா மாப்பிள்ளைய வர சொல்லி பிரியாகிட்ட சொல்லவா? சாயங்காலம் எத்தன மணிக்குன்னு சொல்லுங்க. அவருக்கு இப்பவே சொன்னாத்தான் கிளம்பி வர சரியா இருக்கும்.. நான் வேணும்னா கேட்டு சொல்லவா…?”

”இன்னைக்கு வியாழக்கிழமையா இருக்கு கோயிலுக்குப் போகணுமே.. வேணும்னா நாளைக்குப் போறேன்”

“கோயில் கெடக்கு, மொதல்ல இதை பாருங்க.. நாளைக்கு சரிபடாது. சனி ஞாயிறுன்னு எங்கயாவது கிளம்பிடுவாங்க”

இன்று எப்படியும் குருவுக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டும் என்று நீலகண்டன் மீண்டும் நினைத்துக் கொண்டார். பல வருடங்களாக அவர் வியாழனன்று கோவிலுக்குப் போவது வழக்கம். அது ஏன் தடைபடவேண்டும்.

“ஆங்… சொல்லும்மா.”

“ஆபீஸ் போயாச்சா? ஆபீஸ்ல கேக்கிறேன்னீங்களே.. என்ன சொன்னாங்க? எத்தினி மணிக்கு கிளம்பணும்?”

“சாயங்காலம் நானே போயிட்டு வரேன்… யாரும் வர வேணாம்.”

“ஆமாம்… என்னன்னாலும் உங்க தம்பி. நீங்க பேசுறதுதான் சரின்னு மாப்பிள்ளைகூட சொன்னாராம். ஏன் விடாம இருமுறீங்க?”

”பொறயேறிக்கிச்சும்மா. தொண்டைல சிக்கிடுச்சி. நான் அப்புறம் பேசறேன்.”

பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது அது. அப்பாவிற்குப் பின், பாகம் பிரிக்கையில் அந்த ஓட்டு வீடும் நாற்பது பவுன் நகையும் மிஞ்சின. வீடு வெங்கடேஸ்வரனுக்கும் நகை நீலகண்டனுக்கும் என வாய்மொழி முடிவாக உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. நீலகண்டனுக்கு நகையைப் போட வயசுக்கு வந்த பெண் இருப்பதும் கம்பெனி க்வார்ட்டர்சில் வீடு இருப்பதும் காரணமானது. வீடில்லாமல் இருப்பதால் அந்த வீட்டில் வெங்கடேஸ்வரன் இருப்பதாகவும் ஒருமித்த கருத்தாகக் கூறி, முடித்து வைத்தார்கள். இது எப்படியோ அனைவரின் உள்ளத்திலும் ஏற்கனவே பதிய வைக்கப்பட்டிருந்தது. அடுத்த ஐந்து வருடங்களில் நடந்த கல்யாணத்தில் நாற்பது பவுனும் திருகு குறையாமல் அப்படியே பிரியாவுடன் சென்றன.

அதன்பின் க்வார்ட்டர்சில் இரண்டுமுறை வேறு ப்ளாக்குகள் மாறி நாலு வருடங்கள் முன்பு இந்த இரு படுக்கை அறைகள், ஒரு ஹால், சமையலறை மற்றும் கொல்லையும் இருக்கும் தரை தளத்திற்கு வந்திருக்கிறார்கள். வாசலில் பெரிய வேப்பமரம் உண்டு. மாலை அதனடியில் நாற்காலி போட்டு அமர்ந்தால் காற்று அள்ளிக்கொண்டு போகும். வீட்டுக்குள் அமைதி, கொல்லையில் பசுமை, வெளியே வேப்பமரக்காற்று என்று சொர்க்கமாக இருந்தது.

ஐந்து மாதங்களுக்கு முன் ஆஞ்சநேயலு குடும்பம் மாடிக்கு வந்தது. அவர்களின் தினப்படிசாதனைகளானவை முறையே, வீட்டிற்குள் குழந்தைகளுடன் கிரிக்கெட் ஆடுவது அல்லது டான்ஸ் ஆடுவது, கொல்லையில் குப்பையைக் கொட்டுவது மற்றும் அவர்கள் காரை வேப்ப மரத்தடியில் நிறுத்துவது. பலமுறை மறைமுகமாகவும் ரெட்டியின் மனைவியை வைத்தும் சொல்லிப் பார்த்தாள் அகிலா. ஆனால் சற்று குறைந்ததே தவிர நிற்கவில்லை. ஒருமுறை காரை நிறுத்துவதற்கு முன்பே நாற்காலியை போட்டுவைத்தாள். அன்று மாலை, நமஸ்காரம் ஒதினா, என்று அன்புடன் அழைத்து நாற்காலியை கொடுத்துவிட்டுச் சென்றான். அக்கணம் முதல் அவன். சனியன் பிடிச்சகொரங்கு, என அகிலாவால் அழைக்கப்படலானான். நாளாக நாளாக அகிலாவால் இருக்கவே முடியாதென ஆனது.

“இவ்ளோ டார்ச்சரா பண்ணுவான்? நீங்க ஆபீஸ்ல ஒரு கம்ப்ளைண்ட்கொடுங்க.”

“அவன் என்னவிட சீனியர் போஸ்ட். கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் ஆறு மாசம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகத்தான் சொல்லுவங்க.”

ஆறு மாசம் கழித்து ஓய்வு பெற்றதன் பின்னும் ஒரு வருடத்திற்கு அந்த வீட்டை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு வருஷம்லாம் முடியாதுங்க உடனே வேற வீடு பாருங்க, என அகிலம் நச்சரிக்கத் துவங்கியபோதுதான் இந்த அடுத்த பூதம் கிளம்பியது.

அன்று மேசை மீது இருந்த போளியை ஒரு விள்ளல் எடுத்து சாப்பிடும்போது அகிலாச மையற்கட்டிலிருந்து வந்தாள். “என்ன பிரச்சனையிருந்தாலும் சரி… ஏதாவது சாப்பிட இருந்தா எடுத்து அப்படியே சாப்பிட வேண்டியது… யாரு கொடுத்தா என்ன ஒண்ணும் தேவையில்லை.”

“யாழு கொழுத்தா?” இன்னும் அவர் முழுங்கவும் இல்லை. கொல்லைப்பக்கம் வரும் எலிக்கு வாங்கியதாய் இருக்குமோ…?

“எல்லாம் உங்க கொல்ட்டி தம்பிதான். நல்லா சிரிச்சு ஈஈ-னு போளி சாப்ட்டு அப்புறம் ஒண்ணுஞ் சொல்லாத ஏமாளி அண்ணனா இருக்கத்தானே பொறப்பே உங்களுக்கு…”

“இப்ப இத துப்பணும்ங்கிறியா திங்கணும்ங்கிறியா?”

“திண்ணுங்க.. ஒரு போளியக் கொடுத்தா ஈசியா காரை நிறுத்திக்கலாம்னு தெரிஞ்சிருக்கு… நாலு வளையலக் கொடுத்தா சொந்த வீட்டையே எழுதி கொடுப்பீங்க.. எழுதிதான் ஒட்டிருக்கே.. இது என்ன கேவலம், ஆறுமாசம்தானே? அவனவன் கோடீஸ்வரனாவான்… நீங்க பிச்சையெடுங்க”

தட்டை விசிறியடித்தார். வாயில் இருந்ததை நடு வீட்டில் துப்பிவிட்டு வெளியேறினார்.

அன்று மாலை பிரியா மாப்பிள்ளை குழந்தையுடன் வந்திருந்தாள். “தாத்தா வா” என அழைத்ததால் நாலு கிண்டர்ஜாயுடன் வீட்டுக்கு திரும்பினார்.

“நம்ம பூர்வீக வீட்ட சித்தப்பா ப்ளாட் போட்டு விக்கப் போறாராம்… நாலு வீடு, அதுல ஒண்ணு அவருக்கு. அப்புறம் ஒரு கோடி ரூவா பணமுமாம்.”

ஒரு ஈ நீலகண்டனின் வாயில் புகுந்து காது வழியே வெளியே வந்தது.

“ஒரு கோடியா…? எப்படி?”

“எப்படின்னா? அந்த நிலத்தோட மதிப்பு இப்ப அந்தளவு இருக்கு. நல்லா ஆறு லட்சம் ரூவா நகைய கொடுத்துட்டு ஏமாத்திட்டாரு உங்க தம்பி.”

“சும்மா இரு. இப்ப ஏதோ ஏறியிருக்கும்.. அன்னைக்கு இவ கல்யாணத்துக்கு அததான் போட்டோம் மறக்காதே. அப்பா அம்மா வைத்தியம் காரியம் எல்லாம் முடிஞ்சு ஒண்ணும் இல்லாதப்போ அத வச்சுத்தான் கல்யாணம் பண்ணினோம். கல்யாணத்துக்கும் அவன்தான் முன்னால நின்னான்… எவ்ளோ பண்ணான்…!”

“என்ன பண்ணாரு? நெக்லசோட பாக்கிறப்போ அப்படியே அம்மா மாதிரி இருக்குன்னு அழுது, நகைய கொடுத்தத எல்லார் முன்னாடியும் சொல்லிக் காட்ற மாதிரி பண்ணாரு.”

“மாமா, நீங்களோ அத்தையோ அப்பவே ஒரு வார்த்த சொல்லிருக்கலாம்.. நான் வீட்ட வாங்கிட்டு நகைய கொடுக்க சொல்லிருப்பேன். நிலம்லாம் இப்போ எந்த ரேஞ்சிலயோ ஏறிக்கிட்டிருக்கு. நீங்க போட்ட நகை கூட இப்போ பாதிக்குத்தான் எடுப்பான் தெரியுமா? கெடீயெம் கூட இல்ல அந்த நகைங்க…”

‘அன்னைக்கு உங்க அம்மா நாப்பதுதான்னு கண்டிப்பா சொன்னப்போ நீங்க இதெல்லாம் சொல்லிருந்திருக்கலாமே மாப்ளே…? என் பொண்ணு இடுப்பத்தானே பாத்துக்கிட்டிருந்தீங்க…?’ நீலகண்டனால் கேட்க முடியாது. மாப்பிள்ளை மகேஸ்வரன் மாதிரி என்பது அகிலாவின் பெருமிதம். பிரியாவும் தாட்சாயணியாக மாறலாம்.

“நாங்க வேணும்னா நகைய அப்படியே தறோம். புதுசா பாகம் பிரிங்க. இல்லாட்டி கேஸ் போடலாம்…”

முழங்கையில் இடித்துக்கொண்டதுபோல வலித்தது நீலகண்டனுக்கு.

“தம்பி மேல அண்ணன் கேஸ் போடறதா?”

“இல்ல, அந்த ஃப்ளாட்ல ஒரு வீட்ட உங்களுக்கு கொடுக்க சொல்லுங்க…”

“இப்ப தங்கம் வெல ஏறி நெலம் வெல ஏறாம இருந்தா நீ பாதி நகைய தருவியா? உன் சம்மதத்தோடவும் பேசி கொடுத்ததுதானே?”

“இதுதான் உங்க தம்பி சாமர்த்தியம். என்ன இருந்தாலும் நீங்க ஒரு குமாஸ்தா. அவரு வியாபாரி. எத சொல்லி எத கொடுத்து எத வாங்கணும்னு அவருக்கு நல்லா தெரியும்… இல்லாட்டி இப்படி கார்ல்லாம் வாங்க முடியுமா?”

நாளடைவில் அப்படியே சொந்தங்களுக்குள் பேசி வெங்கடேஸ்வரன் காது வரை விஷயம் போனாலும் இதுவரை இருவரும் அதுபற்றி பேசிக் கொள்ளவில்லை. அகிலாவிற்கு ஆதரவாக பலர் ஃபோன் செய்து ஒரு கோடி என்பது ஸ்மார்ட் சிட்டி வந்ததும் நாலு கோடியாகும் என்று தெரிவித்தார்கள். வீட்டு வாசலில் பஸ்ஸும் மாடியில் மெட்ரோவும் கொல்லையில் ஸ்கூலும் வரும் என்றார்கள்.

‘எங்கோ வரும் ஸ்மார்ட்சிட்டினால கையில் தரப்போகும் ஒருகோடி எப்படி நாலு கோடியாகும்? இங்கே கிரிக்கெட் சத்தத்துலேயே தூங்க முடியல. ட்ரெயின்லாம் வந்தா அத்தனை சத்தத்தில் எப்படி வாழமுடியும்?’ என யோசித்தார்.

“ஒரு கோடில்லாம் கிடைக்காது. அடையாரே அந்தளவுதான் போகும். இந்த ரேட்டெல்லாம் சும்மா அடிச்சு விடறதுதான். வியாபார தந்திரம். கைக்கு வரும்வரை நிச்சயம் இல்லை” என்று கிருஷ்ணமூர்த்தி ஒருநாள் கேண்டீனில் சொன்னார்.

“எப்படியிருந்தாலும் ஒரு ஃப்ளாட்டாவது எழுதி வாங்கிடுப்பா” என்றாள் பிரியா.

“ஒன்றரை வருசம் கழிச்சு எப்படியும் வேற வீடதான் பாக்கணும். நைச்சியமா பேசி வாங்குங்க. உங்களுக்கு என்ன தெரியும்…? ஒண்ணு முழுங்குவீங்க, இல்ல தூக்கிப் போட்டு உடைப்பீங்க.”

நீலகண்டன் தள்ளித் தள்ளி போட்டு வந்தார். அகிலாவால் முடியவில்லை. தினம் கேட்டவள் இன்று நாளுக்கு மூன்று முறை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். இன்றுதான் வெங்கடேஸ்வரனை நேரில் பார்த்து கேட்டு வரலாம் என கிளம்பினார்.

“நீங்க வச்சா குடுமி எடுத்தா மொட்டை கேஸு. நைச்சியமா பேசச் சொல்லி மாப்ள சொன்னாராம்.”

‘நைச்சியமாக எப்படி பேசுவது. நைச்சியம்ங்கிரவன் யாரு? லிட்டர் எவ்வளவு? டின்ல தருவானா தூக்கு எடுத்துகிட்டுப் போணுமா?’

தம்பியிடம் போய் என்னவென்று கேட்பது? தன் ஐஸிலும் மிட்டாயிலும் பாதியைக் கொடுத்து பழக்கமிருக்கிறது. எதையும் கேட்டு பழக்கமில்லை. அண்ணி அவல் கொடுத்தான்னு சொல்லி கொடுத்தா புரிஞ்சிட்டு கொடுத்திருவானோ? அல்லது அவன் மகனின் குழந்தையை மடியில கொடுத்தா அதோட சிரிப்புக்கு உயிரையே கொடுப்பேனே? இந்த வீடெல்லாம் எந்த மூலைக்கு?

பர்மிஷன் போட்டுவிட்டு இப்படி ரோட்டில் நின்று யோசிப்பதைவிட ஏதாவது ஒரு கோயிலுக்குப் போகலாம் என்று முடிவெடுத்தார். இன்று வியாழன் வேறு. குருவுக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றவேண்டும். அவர் ஏரியாவில் பாடல் பெற்ற ஸ்தலமே உண்டு. அது அவர் எப்போதும் போகும் கோயில். இன்று போவதற்குள் நடை சாத்திவிடுவார்கள். இந்த மாநகரத்தில் வேறு எந்த கோவிலுக்குப் போவது? கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோயில் போய் திரும்பி வந்து பேசி பின் கிளம்பிப் போவது கடினம். அப்போது அவருக்கு தம்பி வீட்டிற்குப் போகும் வழியில் இருந்த கைலாசநாதர் கோயில் ஞாபகம் வந்தது. இரண்டு ஸ்டாப்பிங் தள்ளி காந்தி நகரில் இறங்கினால் நடந்து போய்விடலாம். பிரியா கைக்குழந்தையாக இருந்தபோது தூக்கிக்கொண்டு சென்றது. இருபது வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சிறிய கோயில். போகிற வழியில் அங்கு போய்விட்டு போகலாம் என முடிவு செய்தார்.

இந்த டேங்குக்கு எதிரில் அவர் கடைசியாக கண்ட சின்ன சிவன் கோயில் இல்லை. முன்பு சின்ன கோபுரம் கிழக்குப் பக்கம் இருந்தது. இப்போது இன்னொன்று மேற்கு நோக்கி இருந்தாலும் பெரிய கோபுரமாய் இருந்தது.

வாசலிலேயே குருவிற்கு ஒரு நல்லெண்ணெய் விளக்கும், சிவனுக்கு சங்குப்பூ மாலையும் வாங்கிக் கொண்டார்.

“அந்த கேட்டு வழியா போனீங்கன்னா நவகிரகம் வந்துடும்” என்றாள் பூக்காரி.

கோயில் நன்றாக விஸ்தரிக்கப்பட்டிருந்தது. முன்பு அந்தப் பக்கம் சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் காலி மைதானம் இருந்தது. இப்போது அதையெல்லாம் எடுத்து கோவிலை அதுவரை நீட்டித்து கட்டியிருக்கிறார்கள். நவக்ரஹ வாயிலிலேயே கூட்டம் இருந்தது. நெருக்கி உள்ளே போய் குருவிற்கு முன்னால் இருந்த அரசமரத்தடியில் விளக்கை ஏற்றி வைத்து நின்றிருந்தார்.

“அர்ச்சகர் வரலையா?”

“சந்நிதில சாமிக்கு அலங்காரம் பண்ண ஒத்தாசையா இருக்காப்ல… வந்துடுவாரு”

திடீரென கூட்டம் எழுந்தது, “சாயி சரணம் பாபா சரணம் சரணம்” என்ற கோஷம் உச்சஸ்தாயியில் கேட்டது. சாய் ஆரத்தி பாக்கலாம் வாங்க என ஒருவர் அழைக்க, கூட்டம் மொத்தம் அங்கு முன்னேறியது.
சிறிது நேரத்துக்குப்பின் அவர்களில் இருந்து குருக்கள் பிதுங்கி வெளியே வந்தார். நீலகண்டன் குருவுக்கு அர்ச்சனை செய்தார்.

“ஈஸ்வரனுக்கும் அர்ச்சனை செய்யனும்”

குருக்கள் கையை வலது பக்கம் நீட்டி ”அங்க போங்கோ, வேற குருக்கள் இருப்பார். அப்புறம் ஹனுமார் பல்லக்குத் தொட்டில்ல விளக்க ஏத்தாதீங்கோ. விளக்கேத்தற இடம் அந்தண்ட இருக்கு”

மரத்தடியில் இருந்தது பல்லக்கு என அப்போதுதான் புரிந்தது

சிவன் சன்னதிக்கு நடக்கும் வழியில் நீலகண்டன் ஒவ்வொன்றாக பார்த்தார். இப்போது சிவன் கோயில் மாத்திரம் இல்லை. அருள்மிகு ஸ்ரீ அலர்மேல்மங்கா சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி / ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஸ்வாமி கோயில் என பெயர் கொண்டிருந்தது. போகும் வழியில் அனுமாரும் அவருக்கு நேராக கருப்பண்ணசாமியும் இருந்தார்கள்.

“சாமி… அனுமார்க்கு நேரா ராமர்தானே இருப்பாரு…?”

“இவர் பஞ்சமுக ஹனுமார் ஸ்வாமி. ராமர் சைடுல இருக்கார் பாருங்கோ. பஞ்சமுகத்துல குதிரை முகம் அவரைப் பார்த்த மாதிரியே இருக்கும். இந்தியாவிலேயே இங்கதான் இந்த விசேஷம். ஹயக்ரீவ முகம் ராமரை பாக்கறத சேவிச்சா கல்வியும் ஒழுக்கமும் செல்வமும் சேரும். இன்னைக்கு வியாழக்கிழமை வேற. இன்னும் கொஞ்ச நேரத்துல சுதர்சனர், அனுமார், பாபா சந்நிதில கூட்டம் தாங்காது.”

“நேர்த்தியா கட்டிருக்காங்களே, தொழிற்சாலை இயந்திரங்களை மாதிரி வரிசையா அடுக்கடுக்கா””

“டைல்ஸெல்லாம் தேச்சு அலம்பிருக்கா. பாத்து நடங்கோ.”

நீலகண்டன் ஒவ்வொரு சன்னதியாக நின்று கைகூப்பி சென்றார். முருகன், ஐயப்பன், விநாயகர், சரஸ்வதி, கருமாரியம்மன் சன்னதிகளைத் தாண்டி வெங்கடேஸ்வர பெருமாள் சன்னதியை சுற்றி வந்தார். சுதர்சனரையும் அவரை அடிப்பிரதட்சணம் செய்பவர்களையும் சேர்த்து சிலர் அவசர பிரதட்சணம் செய்து கொண்டிருந்தார்கள்.

கைலாசநாதர் பழைய இடத்தில் லிங்கரூபியாக இருந்தார். அம்பாளும் பழைய இடத்திலேயே இருந்தாள். இருவரின் உற்சவ மூர்த்திகளும் சிவன் சந்நிதியின் பக்கவாட்டில் இருந்தனர். குருக்கள் அலங்காரம் செய்து கொண்டிருந்தார். நீலகண்டன் மட்டும்தான் அப்போது அங்கிருந்தார்.

“அமைதியான நல்ல தரிசனம்”

நீலகண்டன் அளித்த சங்குப்பூ மாலை ஈஸ்வரனின் கழுத்தைச் சுற்றி நீலமாக ஒளிர்ந்தது.

அப்போது பெருமாள் சந்நிதி பட்டர் அவசரமாக வந்து அங்கிருந்த பெரிய ரோஜாப்பூ மாலையை எடுத்துக் கொண்டார்.

“மஹேஷா, ட்ரஸ்டி வறார், இந்த மாலையை பெருமாளுக்கு எடுத்துண்டு போறேன். இந்த தாமரையையும்.”

குருக்கள் அலங்காரத்திலிருந்து திரும்பாமல் தலையசைத்தார்.

“இந்தா ஹனுமார் ப்ரசாதம். அப்படியே வாய்ல போட்டுண்டு தா.. நான் கிளம்பணும்.”குருக்கள் பஞ்சாமிர்த கரண்டியை அண்ணாத்தி வாயில் போட்டுக் கொண்டார்.

பட்டர் கிளம்பிச் சென்று, அலங்காரமும் ஆனதும் தீபாராதனை துவங்கியது.

“நம: பார்வதீ பதயே ஹரஹர மஹாதேவா…”

உமையும் ஈஸ்வரனும் ஜொலித்தார்கள். சங்குப்பூ நீல உறை போல ஈஸ்வரனின் கழுத்தை சுற்றியிருந்தது. உதட்டின் மேல் ஒரு துளி தேன் இருந்தது. தீபஒளியில் இருவரையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் நீலகண்டன்

“நல்லா இருக்கு, நம்ம எடத்த அவன் எடுத்துக்கிட்டான்… அங்க மரத்தடியில் கொரங்கன் வண்டிய நிறுத்திருக்கான். ரோஜாப்பூவையும் தாமரையையும் அவன் எடுத்துட்டு உங்க கழுத்த சுத்தி வெறும் நீலத்த விட்டு வச்சிருக்கான்.. அதக் கேக்காம பஞ்சாமிர்தம் தின்னிட்டிருக்கீங்க…” என்று கடுகடுத்தாள் அகிலாண்டேஸ்வரி அம்மை.

“திங்கட்டுமா துப்பட்டுமா சொல்லு” என்றது நீலகண்ட சிவம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.