அரிநிழல் -காலத்துகள்

காலத்துகள்

நாடார் பத்து பைசாவிற்கு இங்க் ஊற்றிக் கொண்டிருக்க, பின்னணியில் ராதா மாணிக்கம் இயேசுவின் ஜீவித சரிதத்தை பாடிக் கொண்டிருந்தார். அடுத்து ஜாலி அப்ரஹாம் பாட ஆரம்பிப்பார். ‘ஜாலி’ என்பது பெயரின் பகுதியா அல்லது அடைமொழியா என்பது நாடாருக்கும் தெரியவில்லை. தினமும் காலையில் இரண்டு மூன்று முறையாவது நாடார் கடைக்கு வருவது வாடிக்கை, பாடல் வரிகளும், அவை ஒலிபரப்பாகும் வரிசையும் அத்துப்படி. அடுத்த வருடத்தில் இருந்து இவனும் பேனா உபயோகிக்கலாம். இன்று ஒரு தகவல் ஆரம்பித்திருக்கக்கூடும், அதன் இறுதியில் வரும் குட்டிக்கதையையேனும் கேட்டு விட வேண்டும்.

தேங்காய் பத்தைகளை வாங்கிக் கொண்டு திரும்பினான், மதியம் மிளகாய்ப்பொடி தடவிய இட்லிகள். இரண்டு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும், சந்துருவுக்கு பிடிக்கும். நாளை சனி, பள்ளி இல்லை, இன்று மாலையே எல்லா வீட்டுப்பாடத்தையும் எழுதி முடித்து விட வேண்டும், பின் இரண்டு நாட்கள் செய்ய நிறைய உள்ளது. அடுத்த தெருவில் இருக்கும், வெளியிலிருந்து மட்டும்எ ட்டிப் பார்த்திருக்கும் ஐஸ் பேக்டரிக்குச் சென்று உள்ளே விடுவார்களா என்று கேட்டுப் பார்க்கலாம், டப்பா ஸ்கூலும், ஸ்ரீனிவாசா தியேட்டர் மைதானமும் தவிர்த்து ஆர்ட்ஸ் காலேஜ் க்ரவுண்டிற்கு செல்லலாம், எதுவும் இல்லாவிட்டால் வீட்டின் பின்னாலேயே விளையாடலாம். எதிரே பாட்டி வந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் ஓடிச்சென்று ‘என்ன தாத்தி, வேறேதாவது வாங்கணுமா’ என்று கேட்டான். தலையசைத்து திரும்பி நடக்க ஆரம்பித்தவர், இவன் முழங்கையை பற்றிக் கொண்டு ‘தாத்தி ஒண்ணு கேட்டா உண்மையைச் சொல்லணும் என்ன. நீதானே சாவி மேகஜீன்ல வரஞ்சு வெச்சிருக்க’ என்று கேட்டார்.

‘ஹிந்து’ மற்றும் ‘எக்ஸ்பிரஸ்’ மட்டும் வீட்டில் அதிகாரபூர்வமாக வாங்குவது. பேப்பர் விநியோகிக்கும் ஸ்ரீதர் கிட்டத்தட்ட அனைத்து மாத வார- ராணி காமிக்ஸ், பூந்தளிர் போன்ற சிறார்- இதழ்களையும் போட்டுவிடுவார். ‘ஞான பூமியை’கூட வீட்டில் பார்க்க முடியும். இதற்காக தனியாக ஏதேனும் பணம் வாங்கிக் கொள்வாரா என்று தெரியவில்லை. சாவியில் ஆறேழு வாரமாக மாந்த்ரீகத் தொடர் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. கல்லூரி விரிவுரையாளர், அவரிடம் பயில்பவர்கள், இன்னும் சில பாத்திரங்கள். இதுவரை யார் நல்லவர், கெட்டவர் என்பது பிடிபடவில்லை.

‘நா எதுவும் பண்ணலயே தாத்தி’ என்று சொன்னதற்கு, ‘ஏய்ய் பொய்ய் சொல்லக்கூடாது, வேற யார் பண்ணிருப்பா அப்ப, நீ சொல்லு’ என்றார்.

‘என்ன சொல்றேன்னே புரியல தாத்தி, அந்த புக்குக்கு என்னாச்சு’. இதையே மீண்டும் மீண்டும் பேசியபடி சந்தினுள் நுழைந்திருந்தார்கள்.

இந்த வார அத்தியாயத்தில் படுக்கையின்மீது ஒரு காலை முட்டி போட்டபடி இரவு ஆடை அணிந்து கொண்டிருக்கும் பெண்ணொருத்தி எழும் ஓவியம். ஆடையினுள் அவள் அணிந்திருக்கும் உள்ளாடையின் உருவரை தெளிவாகத் தெரிந்தது. பெண்களும் ஜட்டி அணிவார்கள் என்றும், அதை ‘பேண்டீஸ்’ என்று கூறுவார்கள் என்றும் இரண்டு வருஷம் முன்னால்தான் அறிந்து கொண்டான். முக்கோணத்தை திருப்பிப் போட்டது போன்ற பேண்டீஸின் உருவரையை அவ்வப்போது யாரும் கவனிக்காதவாறு பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் இரு நாட்களில் அடுத்த இதழ் வந்து விடும், நேற்று இரவுதான் அந்த உருவரையின் கோடுகளின் மீது சிவப்பு நிற ஸ்கெட்ச் பென்னினால் அழுத்தி முக்கோணத்தை இன்னும் அடர்த்தியாகவும், துல்லியமாகவும் ஆக்கினான்.

சுந்தரி அக்கா போர்ஷனை தாண்டும்போதே வீட்டினுள் உரத்த குரலில் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. உள்ளே நுழையும்போது ‘சாவியை’ கையில் வைத்துக் கொண்டு ‘அதான் சொல்றேனே, இந்த வார இஷ்யு காணலையேன்னு தேடும்போது புக்ஸ்ல எங்கேயாவது போட்டிருப்பானோன்னு பாத்தா கெடச்சுது, அட்டைல இருக்கற பொண்ணு மூஞ்சில ரெட் ஸ்கெட்ச்ல நாமம் போட்டிருக்கான், எதோ விளையாட்டா பண்ணிருக்கான்னு நெனச்சேன், அப்பறம் உள்ள பாத்தா இப்படி பண்ணிருக்கான்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். இவனைப் பார்த்ததும் ‘ஏண்டா இப்படி பண்ணின?’

“…”

‘நீ பண்ணலனா யார் பண்ணா, நைட் பூதம் வந்து வரஞ்சுதா’

“…”

‘புஸ்தகத்துக்கு கால் மொளச்சு தானா நடந்து வந்து ஒன் புக்ஸ்ஸோட வந்து ஒக்காந்துகிச்சா’

அனைத்திற்கும் ‘எனக்கு தெரியாதுமா’, ‘நா பண்ணல’, ‘அது எப்படி என் புக்ஸ் வந்துதுன்னு தெரியாது’, ‘வந்தனிக்கே அத படிச்சு முடிச்சுட்டேன்’ என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தான். சத்தம் கேட்டு வந்த சுந்தரி அக்காவிடமும் விஷயத்தைச் சொல்ல புத்தகத்தை புரட்டி உடனேயே திருப்பித் தந்து விட்டார்.

‘என்ன சுந்தரி சிரிக்கற’ என்று அம்மா கேட்க, ‘சின்ன பையன்தானே தெரியாம செஞ்சிருப்பான், விட்ருங்கக்கா’ என்றார். ‘அதில்ல சுந்தரி, சரி ஏதோ பண்ணிட்டான், அத ஒத்துக்கலாம்ல ஒழக்கு மாதிரி இருந்துட்டு என்ன அழுத்தம், தெரியாது தெரியாதுன்னு சொல்லிட்டே இருக்கான்’ என்றார். அவர் தன் போர்ஷனுக்குச் செல்லும்வரை தலை நிமிராமல் இருந்தான்.

‘தோ பார்டா அம்மா அடிக்க மாட்டேன், அப்பாவும் மாட்டா, தப்பு செஞ்சிருந்தா ஒத்துக்கணும், அதுதான் நல்ல மனுஷத்தனம்’ என்பதை திரும்பத் திரும்ப சிற்சில மாற்றங்களுடன் சொல்லிக் கொண்டிருந்த அம்மா எட்டு மணிக்கு மேல் பள்ளிக்கு கிளம்பினார்.

இன்னும் குளிக்கக்கூட இல்லை. ‘போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுடா’ என்றார் பாட்டி. தட்டில் இட்லியை வைத்து விட்டு, தன் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு, ‘தாத்தி சொன்னா கேக்கணும் சரியா, தாத்திய ஒனக்கு பிடிக்கும்ல’ என்று சொல்ல தலையாட்டினான். ‘அப்போ ஏன் அப்படி பண்ணினே சொல்லு, அப்பத்தான் தாத்திய ஒனக்கு பிடிக்கும்னு நம்புவேன்’.

“—“

‘இது ஒண்ணு பெரிய தப்பில்லையே, நா ஸ்கூல்ல படிக்கும் போது எங்க மிஸ் ஸ்கர்ட்லதான் வருவா, சைக்கிள்ள அவங்க ஏறர டைம்ல நாங்க குனிஞ்சு பாப்போம்’ என்று அப்பா சொன்னதை இடைமறித்து ‘ஏண்டா கொழந்தட்ட பேசற பேச்சா இது’ என்றார் பாட்டி. ‘அதுக்கில்லமா, இது ஒரு நேச்சுரல் க்யுரியாசிடி தான்னு சொல்ல வரேன், ஆனா அத நான் பண்ணலேன்னு சாதிக்கறான் பாரு அது தான் தப்பு’.

‘ஏண்டா நாலு இட்லியோட நிறுத்திட்ட’ என்று பாட்டி சொல்லச் சொல்ல கையலம்ப வெளியே சென்றான். கிணற்றடியில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த சுந்தரி அக்கா நிமிர்ந்து பார்க்க, அவர் பார்வையைத் தவிர்த்து விட்டு கைகழுவிக் கொண்டு உள்ளே வந்து பள்ளி சீருடையை அணிந்தான்.

ஷூ போட்டுக் கொண்டிருக்கும்போது மீண்டும் அருகே வந்த பாட்டி ‘அப்போ நீ சொல்ல மாட்டேல்ல, பாட்டி மேல ஒனக்கு அப்போ கொஞ்சம் கூட பாசம் கெடையாது அப்படித்தானே’ என்றார். ‘என்ன பாட்டி, நான் தான் செய்யலங்கறேனே, யார் அத பண்ணாங்கன்னு எனக்கு தெரியாது’

‘அப்போ நான், ஒன் ஸ்கூலுக்கு வந்து டீச்சர்ட்ட, ஹெச்.எம்கிட்ட சொல்றேன், அவங்க கண்டுபிடிப்பாங்க’ என்று அவர் சொல்ல, ‘என்ன பாட்டி இதெல்லாம் போய் ஸ்கூலுக்கு வரேங்கற, அவங்க என்ன பண்ணுவாங்க’ என்று ஒரு காலில் மட்டும் ஷூவோடு எழுந்து நின்றபடி கத்தினான். ‘அப்ப நீ உண்மைய சொல்லு, இல்லேனா நான் கண்டிப்பா ஸ்கூலுக்கு வருவேன், எனக்கென்ன’ என்று பாட்டி மீண்டும் சொல்ல, ‘நீ என்ன வேணா பண்ணிக்கோ’ என்று சொல்லியபடி மீண்டும் அமர்ந்து மற்றொரு காலிலும் ஷூவை அணிந்தான். வாசற்படியை தாண்டியபின் மீண்டும் உள்ளே வந்து ‘ஸ்கூலுக்குலாம் வராதே தாத்தி’ என்று சொல்ல, ‘நீ தான் ஒத்துக்க மாட்டேங்கறல, அப்ப நான் கண்டிப்பா வருவேன்’ என்றார்.

ஐந்து நிமிட நடை தூரத்தில்தான் பள்ளி என்றாலும் எட்டரை, அதிகபட்சம் எட்டே முக்கால் மணிக்கெல்லாம் மதிய உணவை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவது வழக்கம். முதல் மணி அடிக்கும்வரை விளையாட்டும், மதிய உணவு இடைவேளையின்போது பத்து நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடித்து பின் மீண்டும் ஆட்டம். இன்று கிளம்ப ஒன்பது ஐந்தாகி விட்டது. சந்தைக் கடந்து மெதுவாக நடந்து சென்றுகொண்டிருந்தான்.

போன வருடம் மரத்தடியில் வினோலியா மிஸ் க்ளாஸ் எடுத்துக்கொண்டிருக்கும் போது எதிரே இருந்த ஐந்தாம் வகுப்பு பி பிரிவில் இருந்து பத்மினி மிஸ் வெளியேறி வேகமாக நடக்க ஆரம்பிக்க பின்னால் இரு மாணவர்கள். ஒருவனின் பெயர் விக்கி என்பதைத் தவிர அவர்களைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. பத்மினி மிஸ் கையில் ஏதோ புத்தகம். இவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் வரும்போது, இரு மாணவர்களும் அழ ஆரம்பித்திருந்தார்கள். வினோலியா மிஸ் என்னவென்று கேட்க ‘க்ளாஸ்ல பாருங்க மிஸ், மேகஸின் படிக்கறாங்க’ என்று அந்த புத்தகத்தை உயர்த்திக் காட்டினார். ‘ஆனந்த விகடன்’. இவர்களைக் கடந்து தலைமையாசிரியர் அறை நோக்கி மிஸ் செல்வதை, இருவரும் அவரின் முன்னால் சென்று மன்றாடுவதை, மிஸ் விலகி முன்னே செல்ல, பின்னால் சில அடிகள்நடந்து மீண்டும் அவர் முன்னே சென்று கெஞ்சுவதை குனிந்தபடி ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். வாயசைப்பில் இருந்து அவர்கள் ‘ஸாரி மிஸ், வேணாம் மிஸ்’ என்று மீண்டும் மீண்டும் சொல்வது தெரிந்து.

சாலையைக் கடப்பதற்கு பதில் பள்ளியை தாண்டிவிட்டிருந்தான். திரும்பி சில அடிகள் எடுத்து வைத்து நின்றான். முதல் மணி அடித்திருப்பார்கள். பள்ளி வாசலில் கூட்டம் அதிகமாக இல்லை, கடைசி நேரத்தில் வரும் ஒரு சிலர் மட்டும். இப்போது சென்றாலும், காலை வழிபாட்டில் கலந்து கொள்ள முடியாது, வெளியில்தான் நின்றிருக்க வேண்டும். ப்ரேயர் முடிந்து தலைமையாசிரியை வந்து தாமதமாக வந்ததற்கு கொடுக்கும் தண்டனையை வாங்கியபின் தான் உள்ளே செல்ல முடியும். அதற்குள் பாட்டியும் பள்ளிக்கு வந்து விடலாம், இந்நேரம் கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருப்பார், கிளம்பிக்கூட இருக்கலாம். மீண்டும் திரும்பி வேதாச்சல நகருக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்தவன், புதிய பேருந்து நிலையம் வர அதனுள் நுழைந்தான்.

தாம்பரம் செல்லும், டி.சிக்ஸ்டி, அம்மா பெரும்பாலும் பள்ளிக்கு இதில்தான் செல்வார். நிறைய தனியார் பேருந்துகள். பயணிகள் அமரும் இடத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்து, வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்தான். சிறிது நேரத்தில் நிலையம் சற்று அமைதியடைய ஆரம்பித்தது. அருகில் அமர்ந்திருந்தவர் கையில் கடிகாரம் இல்லை, எழுந்து அங்கிருப்பவர்களின் மணிக்கட்டை பார்த்தபடி நடந்தான். பத்தேகால். மீண்டும் அதே பெஞ்சிற்கு வந்தமர்ந்தான். எதிரே பூ விற்றுக் கொண்டிருந்த பெண் இவனையே கவனிக்க எழுந்து வேறு இடத்திற்கு செல்லும் போது டையை அவிழ்த்துக் கொண்டபின், சட்டையை ட்ரவுசரில் இருந்து வெளியே எடுத்துவிட்டுக் கொண்டான்.

ஒவ்வொரு இடத்திலும் கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பது, பின் நிலையத்தினுள் சுற்றி வருவது. பேருந்து நிலைய கழிப்பறைக்குள் நுழையாமல், அதன் முன் சில கணங்கள் நின்றிருந்தான். புத்தகப்பையுடன் எப்படி உள்ளே செல்ல. சற்று தள்ளி வைத்து விட்டு அவசரமாக உள்ளே நுழைந்தான். மலம் கழிக்கும் அறைகள் மட்டும்தான். நுரைத்துத் தள்ளி கழிவறை துளை வரை வந்திருக்கும் மலம். சட்டையின் மேற்பகுதியை மூக்கின் மீது இழுத்து விட்டுக் கொண்டான். வெளியே வந்து சட்டையை மூக்கிலிருந்து எடுத்துவிட்டு நன்கு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டபோது, இன்னும் கடுத்தது. இன்னும் சிறிது நேரத்தில் கழிவறையை சுத்தம் செய்யக் கூடும், அதன் பின் மீண்டும் செல்லலாம்.

கூட்டம் குறைவாக இருந்த இடத்திற்கு சென்றான், அங்கு அமர்ந்திருந்தவரின் மணிக்கட்டில் பன்னிரெண்டரை ஆகியிருந்தது. பொதுவாக ஒரு மணிக்கு சாப்பிடும்போதுகூட இப்படி பசித்ததில்லை. சாப்பிட ஆரம்பித்தவன் நிமிரும்போது நிலைய வளாகத்தின் மறு முனையில் கழிவறையில் இருந்து வெளியே வருபவரைப் பார்த்தான். இரண்டு இட்லிகளுடன் எழுந்தவன், மீதி இட்லிகளை அங்கு அலைந்து கொண்டிருந்த நாயின் முன் வைக்க அது உண்டு முடித்தது. டிபன் பாக்ஸ்சை கழுவியபின், நிலையத்தில் நின்றிருந்த பேருந்தொன்றில் சென்றமர்ந்தான். உள்ளே இவனும் காக்காயொன்றும்.

போன வருடம் ஸ்டவ் எரியாமல் தொல்லை கொடுக்க, காலை விடுமுறை எடுக்கச் சொன்னார்கள் வீட்டில். மறுத்து விட்டு பள்ளிக்குச் சென்றவனின் வகுப்பிற்கு, இரண்டாம் பீரியட் முடியும் தருவாயில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்துவிட்ட பாட்டி, முதல் இன்டர்வெல்லின்போது அனைவரும் பார்த்தபடி இருக்க, இவனை சாப்பிடச் செய்த பின்னரே கிளம்பினார், மதிய உணவிற்கான டிபன் பாக்ஸை வைத்து விட்டு. அதன் பின் ‘பப்பா’, ‘கொயந்த’, ‘வீட்லனா ஊட்டி விட்டுருப்பாங்கல’ என்று நண்பர்களின் கேள்விகள்.

இந்நேரத்திற்கு பள்ளிக்குச் சென்றிருப்பார். வகுப்பில் இல்லை என்பதை அறிந்தவுடன் அம்மாவிற்கு தகவல் சொல்லிவிடுவார்கள். அவர் வேலை செய்யும் பள்ளியில் தொலைபேசி உண்டு, வீட்டிலோ, தெரிந்தவர்களிடமோ கிடையாது. டெலிக்ராம் ஆபிஸ் சென்றுதான் அழைக்க முடியும். அம்மா அடித்துப் பிடித்துக் கொண்டு வரும்போது இங்குதான் இறங்க வேண்டும். பள்ளியில் இந்த விஷயம் பரவியிருக்கும், வினோலியா மிஸ்தான் இந்த வருடம் க்ளாஸ் டீச்சர், மிகவும் அன்பானவர், கோபப்பட்டு பார்த்ததில்லை.

இவனுக்கு மிகவும் பிடித்த டீச்சர். ஏதேனும் பேருந்தில் ஏறி எங்கேயாவது சென்று விடலாம், கையில் கொஞ்சம்கூட காசு இல்லை. பேருந்தினுள் பயணிகள் வந்தமர ஆரம்பிக்க இறங்கி காலியாக இருந்த இன்னொரு பேருந்தினுள் ஏறினான்.

வரலாற்றுப் புத்தகத்தை திறந்தால், இடது பக்கத்தின் எண் ஐம்பத்தி நான்கு, நான்கு ரன். புத்தகத்தை மூடித் திறந்தான், எழுவத்தி இரண்டு, ஸ்கோர் ஆறு. அடுத்தது தொண்ணூற்றி ஆறாம் பக்கம். ஸ்கோர் பண்ணிரண்டு. அடுத்து நாற்பது. முதல் விக்கெட் அவுட். பத்தாவது விக்கெட் விழும்போது ஸ்கோர் எழுவத்தி எட்டு, தொடர்ந்து மூன்று முறை பூஜ்யத்தில் முடியும் பக்க எண்கள் வந்துவிட்டன.

எழுவத்தியெட்டை இலக்காக கொண்டு அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கும்போது ‘சீக்கரம் ஏறித் தொலை’ என்று கத்தியபடி வண்டியினுள் ஏறியவருக்குப் பின் கையில் இரு மூட்டைகளுடன் ஒரு பெண்ணும் இவனை விட ரெண்டு மூன்று வயது கூடுதலாக இருக்கக்கூடிய சிறுவனொருவனும் வந்தார்கள். அவனும் பையொன்றை வைத்திருந்தான். முன்னிருக்கையில் அமர்ந்தபடி ‘பால்லாம் கரெக்ட்டா உற குத்தி வெச்சியா, கெட்டுபோவப் போகுது, சாம்பார், கொழும்புன்னு எதையாவது அப்படியே வெச்சுட்டு வந்திருக்கப் போற, திங்கக்கெழம வரும்போது கப்படிக்கும், ‘அந்தப் பையை நல்லா உள்ள வை, இல்லனா கால்ல இடிக்கும்.’ என்று உரத்த குரலில் அம்மனிதர் சொல்ல ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி தலையை மட்டும் அசைத்தார் அந்தப் பெண். ‘டேய் ஜன்னல் சீட்ல ஒக்காராத இங்க வா’ என்று சிறுவனை இவனருகில் உட்காரச் செய்தார். ‘கையை ஜன்னல் கம்பி மேல வெக்காத வண்டி ஓட்டும்போது சைட்ல வேற வண்டி வந்தா அடிபடும்’ என்று அந்தப் பெண்ணிடம் அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது பேருந்தை விட்டு இறங்கினான்.

சிறுநீர் முட்டிக் கொண்டு வந்தது, கழிவறையின் அருகே செல்லும்போதே நாற்றமடித்தது. விலகிச் சென்று சுற்றிப் பார்த்தான். நிலையத்தின் ஒரு ஓரத்தில் வெளியிலேயே சுவரோரம் சிறுநீர் கழிக்கிறார்கள். சிறிது நேரத்திற்குப்பின் அங்கு சென்றான். அடிவயிற்றில் வலியுடன் இணைந்த கிளர்ச்சி, வலது கையை சுவற்றில் வைத்துக் கொண்டான். சிறுநீர் கழித்து முடித்த பின்பும் குறியின் நுனியில் ஊசி குத்துவது போன்ற வலி. நிலையத்தில் இருந்த கடையின் முன் டீ குடிக்கும் கூட்டம், கோகுலத்தின் இந்த இதழ் வந்து விட்டது, ஸ்ரீதர் நாளை போட்டு விடுவார், இந்த வார சாவியை பார்த்ததும் அங்கிருந்து விலகி முதலில் அமர்ந்த இடத்திற்கே வந்தான்.

‘என்ன தம்பி காத்தாலேந்து இங்கயே சுத்திட்டு இருக்க, இஸ்கூலுக்கு போலையா’ என்றார் பூக்காரம்மா. ‘இல்லையே கொஞ்ச நேரம்தான் இங்க இருந்தேன், ஒடம்பு சரில. அப்பறம் ஸ்கூல் போயிட்டேன்’.

‘இஸ்கூல்லு வுட்ற நேரமாலியே’ என்றவர், அங்கு பேருந்திற்காக நின்றிருந்தவரிடம் மணி கேட்டுவிட்டு,. ‘நாலற ஆவலியே அதுக்குள்ள வந்துட்ட’ என்று சொன்னார்.

‘கட் அடிச்சிருப்பான், இந்த வயசுலேயே’ என்றார் மணி சொன்னவர்.

‘எந்த ஊரு ஒனக்கு, வீட்ட விட்டு ஓடி வந்துட்டியா, இந்த நேரம்னு பாத்து எந்த போலீஸும் இல்லை’ என்று பூக்காரம்மா ஆரம்பிக்க, ‘ஐயோ இல்ல, நெஜமா எனக்கு ஒடம்பு சரியில்ல’ என்றான்.

அங்கு வந்து நின்ற பேருந்தில் மணி சொன்னவர் ஏற, ஒரு பெண் பூ வாங்க வந்தார். வீட்டிற்குச் செல்ல திரும்பினான். ஒருவேளை இவனைக் காணாமல் வீட்டினர் பயந்து போய் எதுவும் சொல்லாமல் விட்டுவிடக் கூடும். நிலையத்தின் வாயிலை அடைந்தவுடன் திரும்பிப் பார்த்தான். இன்னுமொரு பெண் பூ வாங்க வந்திருக்க பூக்காரம்மா அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

வேதாச்சல நகர் முனையில் இருந்து பார்த்தபோது பள்ளி வாசலில் எந்த அரவமும் இல்லை. டையை கட்டிக் கொண்டு, சட்டையை உள்ளே திணித்துக் கொண்டு, சற்று தூரம் சென்று காப்பி அரைக்கும் கடைக்கு சற்று முன்பு மரத்தடியில் நின்று கொண்டான். மூன்றாம் வகுப்புக்களுக்கு நேர் எதிரேதான் கடை, பாட்டி ஒரு முறை காப்பி அரைக்க வந்ததை வகுப்பின் ஜன்னல் வழியாக பார்த்திருக்கிறான்.

மணி அடிக்கும் சப்தம் மிக மெல்லியதாக. முதல் மாணவர்கள் வெளியே வர ஆரம்பிக்கிறார்கள், ஓட்டமும் நடையுமாக சென்று ரோட்டை கடப்பவர்களுடன் சேர்ந்து கொண்டான். கூடப் படிப்பவர்கள் பார்க்கும்முன் வீட்டிற்குச் சென்று விட வேண்டும். இவனுக்கு என்னவாயிற்று என்று சந்துரு யோசித்துக் கொண்டிருந்திருப்பான். சந்து முனையில் யாரும் நிற்கவில்லை, உள்ளே காத்துக் கொண்டிருக்கக்கூடும்.

தன் போர்ஷனின் முன் மல்லாட்டை உடைத்துக் கொண்டிருந்த சுந்தரி அக்கா அவற்றை கையில் அள்ளி நீட்டி ‘இந்தா எடுத்துக்கோ’ என்றார். ‘பசிக்கலக்கா’ என்று விட்டு தன் போர்ஷனுள் நுழைந்தான்.

‘டூ இன் ஒன்னில்’ அப்பா பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார், ‘ட்ரெஸ் மாத்திட்டு வா காபி தரேன். புள்ளாண்டான் சட்ட காத்தால இன் பண்ணினது அப்படியே இருக்கு மழதான் பெய்யப் போறது போ’ என்றார் பாட்டி. தெரியாதது போல் நடிக்கிறார். தனியாக கூப்பிட்டுக் கேட்கக் கூடும் அல்லது அம்மா வருவதற்காக காத்துக் கொண்டிருக்கலாம். ஒரு வேளை தலைமையாசிரியை இவன் பள்ளிக்கு வராதது குறித்து அறிந்திராமல் பாட்டியுடன் பேசியிருக்கக் கூடும்.

சிறிது நேரம் கழித்து ‘என்ன ஹோம்வர்க் எழுத ஆரம்பிக்கல, ப்ரைடே சாங்காலமே முடிச்சுடுவே அப்பத்தான் ரெண்டு நாளு ஜாலியா இருக்கலாம்ப’ என்று பாட்டி கேட்க புத்தகங்களை எடுத்துக் கொண்டு அமர்ந்தான். நாளை சந்துரு வீட்டிற்குச் சென்று என்ன வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டுக் கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களாக செய்து கொண்டிருக்கும் ஸ்வெட்டர் பின்னும் வேலையை பாட்டி தொடர்ந்தார். நடுவில் ஊசியில் நூலைக் கோர்க்கும்படி இவனிடம் கேட்டார். கண்டிப்பாக அம்மாவிற்குத்தான் காத்திருக்கிறார்கள்.

அம்மா வந்த பின் உடை மாற்றிக்கொள்ள உள்ளே செல்ல, சிறிது நேரம் கழித்து பாட்டியும் அங்கு போனார். இனி அவர்களுக்குள் பேசி விட்டு ஆரம்பிப்பார்கள். வெளியே வந்த பின் சிறிது நேரம் இவனுடன் பேசிக்கொண்டிருந்தார் அம்மா.

திங்கட்கிழமை பள்ளிக்கு வரத்தான் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹெச்.எம் கண்டிப்பானவர், காலை இறைவணக்கத்தின்போது ஸ்டேஜிற்கு வரச் செய்து எல்லோர் முன்னிலையிலும் இவன் செய்ததை சொல்லக்கூடும், அவர் கையில் சாவி, அனைவர் பார்வையும் இவன் மீது. நிறைய வீட்டுப்பாடங்கள் கொடுத்துள்ளார்களா, சந்துரு இன்று மாலை வர வாய்ப்பில்லை, நாளை காலை முதல் வேலையாக அவன் வீட்டிற்குச் சென்று அது குறித்து கேட்டு விட்டு, இன்று வராததற்கு ஏதேனும் காரணம் சொல்லி விட வேண்டும்.

மாலையில் பாட்டி வீட்டு உரிமையாளர் மனைவியுடன் அரட்டையடிக்கக் கிளம்பினார், அப்பா உள்ளறையில் அன்றைய தினசரியை மீண்டும் புரட்டியபடி. அம்மா சமையலறையில், அங்கு சென்றான். வேக வைத்த உருளைக்கிழங்குகளை தோலுரித்து உப்பு தடவிக் கொண்டிருந்தவர் ‘எடுத்துக்கடா’ என்றார். எதுவும் சொல்லாமல் திரும்பியவன், சில நிமிடங்கள் கழித்து மீண்டும் சென்று ‘தாத்தி ஸ்கூலுக்கு வந்து ஹெச்.எம்ம பாத்து சொல்லப் போறேன்னு சொன்னாம்மா’ என்றான். தக்காளி துண்டுகளை தள்ளி வைத்து விட்டு வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தவர் திரும்பாமல் ‘பின்ன நீ இப்படி பண்ணினா அப்படித்தான் செய்வா’ என்றார்.

‘தாத்தி ஸ்கூலுக்கு வந்தாளாமா, நா ஒண்ணும் பண்ணலமா, அங்கெல்லாம் வர வேணாம்னு சொல்லுமா’ என்றிவன் சொல்ல கத்தியை மேடையில் வைத்து விட்டு முன்னே வந்து இவனை இழுத்து அணைத்துக் கொண்டவர், சில கணங்கள் கழித்து இவன் விலக மீண்டும் தக்காளி நறுக்க தொடங்கினார். ‘தாத்தி வரல இல்லமா’ என்று மீண்டும் கேட்டுவிட்டு வெங்காயத்தின் பச்சை வீச்சத்துடன் முன்னறைக்கு வந்தான்.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.