படபடவென சிறகடித்துப் போகும் பட்டாம்பூச்சிகளை பார்க்கும்போதெல்லாம் அவருக்கு அப்படியொரு களிப்பு. தம் கள்ளமில்லா தூய்மையால் அவை பூவுலகை நிறைத்துக் கொண்டிருப்பதாக பெருமை.
காற்றில் தவழ்ந்து வந்து கைமேலேறி அமர்ந்த வண்ணத்துப்பூச்சியை வாஞ்சையோடு தடவிக் கொடுக்கிறார்.
‘சிறு எறும்பு கூட தன் எதிர்ப்பை தெரிவிக்காது இறப்பதில்லை. எந்த ஜீவராசிக்கும் தற்காப்புக்கு போரிடும் நியாயம் உண்டு. பாவம் நீங்கள். இப்படி வலிமையற்ற வெகுளிகளாகவே தேங்கிவிட்டீர்கள். எங்கோ ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது’
அதன் தலைக்கு மேலிருந்த தளிர்த் தண்டுகளை தடவி கொடுத்தபடிக்கு,
“உங்கள் வலிமையைக் கூட்டும் வரம் என்ன வேண்டும்? கேளுங்கள்”
சிருஷ்டிக்கலையில் நிகழப்போகும் அதிசயத்தை எதிர்பார்த்து, பிரபஞ்சமே சற்று நிதானித்து திரும்பிப் பார்க்கிறது.
அவர் கரத்தை இறுகப் பற்றிக் கொண்ட வண்ணத்துப்பூச்சி, விரலுக்கு ஒரு முத்தமிட்டுவிட்டு பறந்து போகிறது
பின்னாடியே அந்த ஆறுவயதுச் சிறுமி கிளுகிளுத்தப்படிக்கு குதித்தோடுகிறாள்.