தாயார்

ஸிந்துஜா

image credit Craiyon

 

வாசல் கதவை அம்மாதான் திறந்தாள். சுதாமதியைப் பார்த்ததும், “ஐயோ!” என்றாள்.

தன்னை அவள் வரவேற்கும் விதம் எதிர்பாராத ஒன்றல்ல என்று நினைத்தபடி சுதாமதி வீட்டுக்குள் நுழைந்தாள். ஹாலில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். தொலைக்காட்சிப் பெட்டியில் ஸ்ருதிராஜிடம் சங்கீதா, உன்னை இந்த வீட்டை விட்டுத் துரத்தாத வரை எனக்கு நிம்மதி இல்லை, என்று பற்களைக் கடித்துக் கொண்டிருந்தாள். இங்கேயும் வீட்டை விட்டுத் துரத்தும் கதைதானா என்று சுதாமதி நினைத்தாள்.

வீடு கும்மென்று வெப்பத்தில் தவித்துக் கிடந்தது. இவ்வளவுக்கும் மாலை பிரிந்து இரவு வரும் நேரம் என்று பேர். பொட்டுக் காத்து இல்லை.

அவளருகில் வந்து நின்ற அம்மாவை சுதாமதி ஏறிட்டாள். ‘எதுக்குடி இப்ப இங்கே வந்திருக்கே?’ என்கிற கேள்வி தொங்கிக் கொண்டிருக்கும் அவளின் பார்வையைச் சந்தித்தாள். அதற்குப் பதில் சொல்ல வேண்டுமா? அவளாகவே பேச்சை ஆரம்பிக்கட்டும் என்று மறுபடியும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தாள்.

“இந்த அழகு சீரியலைப் பாக்கறதுக்கா தும்கூர்லேந்து ஓடி வந்திருக்கே?” என்றாள் அம்மா. “அந்தக் கடங்காரன் என்ன சொல்லி இப்ப உன்னை இங்கே தொரத்திருக்கான்?”

பார்வையில் மட்டுமில்லாது குரலிலும் எகிறும் கோபத்தை சுதாமதி கவனித்தாள். எதையும் செய்ய முடியாத தனது கையறு நிலையை நினைத்தா அம்மாவின் குரலில் துக்கத்தின் இடத்தைக் கோபம் கவ்விக் கொண்டிருக்கிறது? ஹாலில் வீசிய அரை மங்கலான விளக்கொளியில் அம்மாவின் முகம் காட்டுவதென்னவோ துக்கத்தைத்தான்.

“அம்மா, ரொம்பப் பசிக்கிறதும்மா” என்றாள் சுதாமதி.

க்ஷணத்தில் அம்மா மாறி விட்டாள் . கனிவு அவள் முகத்தில் ஏறிய தருணம் “என்னது பட்டினியா வந்திருக்கியா? வாடி உள்ளே. வயித்துக்கு எதுக்கு வஞ்சனை பண்ணிண்டு வந்திருக்கே?” என்று அவள் கையைப் பிடித்துத் தன்னுடன் இழுத்துச் சென்றாள். சமையலறைக்குள் நுழைந்தவள் “தட்டை எடுத்துப் போட்டுண்டு இங்கேயே உக்காரு ” என்று சொல்லி விட்டு மேடையை அடைந்தாள். சுதாமதியின் பார்வை சமையலுள்ளை அளைந்தது இரண்டு பித்தளை பாத்திரங்களும் ஒரு எவர்சில்வரும் மேடையிலிருந்தன. பித்தளை உருளியின் வெளிப் பாகத்தில் நாலைந்து சாதப் பருக்கைகள் ஒட்டியிருந்தன. கச்சட்டிப் பிடியில் குழம்புத் துளிகள் தெறித்து விழுந்து காய்ந்து கொண்டிருந்தன. எவர்சில்வர் பாத்திரத்தின் கீழ் பீன்ஸ் துகள்கள் கிடந்தன. மேடை மேலிருந்த ஸ்டவ்வில் அதன் ஒரிஜினல் மஞ்சள் நிறம் போய் எண்ணெய்ப் பிசுக்கு கறுப்பாக மாற முயன்று கொண்டிருந்தது. அலமாரியென்று சுவரில் ஒட்டியிருந்ததில் ஒரு கதவு மட்டும் திறந்து கிடந்தது. போன தடவை அவள் வந்த போது இருந்த இன்னொரு கதவு இப்போது இல்லை. அப்போதே அது உடைந்து உயிரை விடுவது போல்தான் இருந்தது. அம்மா மேடையிலிருந்த ஏனங்களை எடுத்துக் கொண்டு வந்து சுதாமதி உட்கார்ந்திருந்த இடத்துக்கு எதிரே வைத்தாள்.

பிறகு அவளது அருகில் உட்கார்ந்து பரிமாறினாள். சுதாமதி அம்மாவை ஒருமுறை பார்த்து விட்டுத் தட்டில் இருந்தவற்றைக் கலக்கி உருட்டி வாயில் போட்டுக் கொண்டாள்.

“இப்ப சாப்பாடு போடறதுக்குக் கூட வக்கில்லையா அவனுக்கு? இல்லே, உன்னைப் படுத்தி எடுக்கணுமேன்னு இப்பிடிப் பண்ணறானா?” என்று அம்மா கேட்டாள்

“நேத்திக்கு விடியறச்சேயே காப்பிக்குப் போட சக்கரை வாங்கி வைக்கத் துப்பில்லையா முண்டமேன்னு கத்தினான். காலங்காத்தால அவனோட கையாலாகாத்தனத்துக்கு என்னைப் போட்டு நொறுக்கறதான்னு எனக்கும் எரிச்சல் மண்டிண்டு வந்தது, கடையிலே போய் வாங்கிண்டு வந்து வச்சா இருக்கும். இல்லேன்னா அது மானத்துலேந்து வந்து குதிக்குமான்னேன் வேகமா என்கிட்டே வந்து வாயைப் பாரு வாயை. கிழிச்சு எறிஞ்சுடுவேன்ன்னு சொல்லிண்டே பளார்ன்னு கன்னத்திலே அறைஞ்சான். முழு பலத்தையும் கைக்குள்ளே கொண்டு வந்து அடிச்ச அடியிலே கீழே விழுந்துட்டேன். பின்னாலே நகர்ந்துண்டு என்னைப் பார்வையாலேயே மிதிச்சபடி போய் உங்கப்பன்ட்டேர்ந்து பத்தாயிரம் வாங்கிட்டு வா. நான் இன்னிக்கி திப்டூருக்கு டூர் போறேன். நாளைக்கு சாயங்காலம் நான் திரும்பி வரப்போ நீ பணத்தோட இங்க இருக்கணும், ஆமாம்ன்னு கத்திட்டுக் கோபத்தோட தரையிலே கிடந்த பிளாஸ்டிக் வாளியைக் எத்திண்டே பாத்ரூமுக்குப் போயிட்டான். நேத்திக்கி கார்த்தாலே ரெண்டு இட்லி பிச்சு வாயிலே போட்டுண்டது” என்றாள் சுதாமணி. “அவன் சாப்பிடறதுக்குன்னு டிபன் பண்ணினதாலே அந்தப் புண்ணியத்தில் எனக்கும் இட்லி கிடைச்சது. டூர் போயிருக்கான். வீட்டிலே ஒரு இழவும் கிடையாது. அவன் ஊர்லே இல்லாதப்போ நான் காத்தைக் குடிச்சிண்டு உயிர் வாழணும்.”

“அடிப்பாவி! நேத்திக்கே இங்கே வரதுக்கென்ன?” என்று அம்மா அவளைக் கோபத்துடன் பார்த்தாள்.

“அவன் உங்கப்பா கிட்டே போய்ப் பத்தாயிரம் வாங்கிண்டு வான்னு அடிச்சு அனுப்பியிருக்கான். போன தடவை அப்பா அடிச்ச கூத்துக்கு அப்புறம் நான் எப்பிடி அவரைப் பாத்துக் கேப்பேன்? இப்பவே அவர் வந்து என்னைப் பாத்தவுடன் இந்த பிரும்மஹத்தி எதுக்கு இங்கே வந்து நிக்கறதுன்னு அவருக்குக் கோபம் பிச்சிண்டு வரப் போறது” என்றாள் சுதாமதி.

அம்மா அவள் தலையைப் பரிவுடன் தடவிக் கொடுத்தாள். “அப்படில்லாம் ஒண்ணும் ஆகாது” என்றாள்.

போன தடவை என்றால் ஒரு வருஷத்துக்கு முன்பு. சுதாமதிக்குக் கல்யாணம் ஆகி தலை தீபாவளிக்கு வந்ததுதான். இவ்வளவு பக்கத்தில் இருந்து கொண்டு தலையையே காமிக்க மாட்டேங்கிறியே என்று அவளுடைய தோழிகள் கேட்பார்கள். அவள் புருஷனின் லட்சணம் அவர்கள் குடும்பத்துக்குள் மட்டும் இருந்தது. அதனால் மற்றவர் கேள்விகளையெல்லாம் சிரித்து மழுப்பி விடுவாள். ஆனால் ஒரு வருஷத்துக்கு முன்பு இன்றைய தினம் போல சுதாமதி மட்டும் தனியாக வந்து நின்றாள். ராமசாமி அன்றும் அவளைப் பணம் வாங்கிக் கொண்டு வரச் சொல்லி அனுப்பியிருந்தான்.

மாலையில் ஆபிசிலிருந்து வந்த சபாபதி அய்யருக்கு அசாத்தியக் கோபம் வந்து விட்டது. “அவன்தான் கேட்டான்னா எந்த மூஞ்சியை வச்சுண்டு நீ இங்கே வந்து நிக்கறேடி? உன் கல்யாணத்துக்கு வாங்கிய கடனுக்கு இப்ப வட்டி கட்டறதே எனக்குப் பெரும் பாடுன்னு உனக்குத் தெரியாதா? அந்த நாய்ப்பயல் கேட்டால் எடுத்துக் குடுக்க நான் என்ன நோட்டு அடிச்சு வச்சிருக்கேனா? எவ்வளவு கடன் வாங்கி உனக்கு நகை வாங்கிப் போட்டேன்? அந்த ராஸ்கல் எல்லாத்தையும் கழட்டி எடுத்துண்டு போய் வித்துட்டான்னு வந்து சொல்றியே? அவன் கேட்டப்போ கழட்டிக் கொடுக்க மாட்டேன் போடான்னு இங்கே வந்திருக்க வேண்டியதுதானே? அமுக்கு மாதிரி இருந்துட்டு இங்க வந்து இப்ப பணம் கொடுங்கிறே. என் கையிலே கொடுக்கறதுக்கு ஒண்ணுமில்லே. அடியோ உதையோ வாங்கிண்டு அங்கேயே விழுந்து செத்துத் தொலை” என்று காட்டுக் கத்தல் கத்தினார். அவர் பேச்சைக் கேட்டு அவர் மேல் அம்மாவுக்குக் கோபம் வந்து விட்டது.

“விளக்கு வச்ச நேரத்திலே என்ன பேச்சுப் பேசறேள்? இவ பணம் கேட்டுதானே வந்திருக்கா, என்கிட்டே இல்லைன்னு ஒரு வார்த்தையை, அது கூட உதடு பிரியற கஷ்டத்தைக் கொடுக்காத ஒரு வார்த்தையைக் கடவுள் எதுக்குப் படைச்சு வச்சிருக்கான்? நறுக்குத் தெறிச்சாப்பிலே ஒரு வார்த்தை சொல்றதை விட்டுட்டு எதுக்கு நீங்க இப்பிடி நெருப்புக் கங்கை அவ மேலே
விட்டெறியணும்? குழந்தை துடிக்கிறா பாருங்கோ. பெத்த வயிறு இன்னும் மேலாவே பதர்றது. ஜனகன் போட்டு அனுப்பாத நகைகளா சீதைக்கு? ஒரு நட்டு இல்லாம புருஷனோட அன்பை மட்டுமே வச்சுண்டு காட்டுக்குப் போற கஷ்டத்தைத் தேவி தாங்கிக்கலையா? கர்மாவை யார் தடுக்க முடியும்?” என்றாள் அம்மா.

அப்பா “நான் ஒண்ணும் ஜனகன் இல்லே, எடுத்து அள்ளி அள்ளி வீசறதுக்கு. இவ தான் கஷ்டத்துக்கு சீதையை கொண்டிருக்கா. எக்கேடு கெட்டு ஒழியுங்கோ. என்கிட்டே ஒரு சல்லி இல்லே” என்று மறுபடியும் கத்தி விட்டு வெளியே போய் விட்டார்.

இரவு வெகு நேரம் கழித்து வந்தவர் மனைவியைக் கூப்பிட்டு “சுப்பு, இந்தா. இந்தக் கவர்லே ஐயாயிரம் இருக்கு. முத்துச்சாமிகிட்டேர்ந்து ரெண்டு வட்டிக்கு வாங்கிண்டு வந்தேன். இவ்வளவுதான் தர முடியும்னு சொல்லிட்டான். இதை எடுத்துண்டு அவ போகட்டும். ஆனா இனிமே பணம்னு கேட்டுண்டு இங்கே வர வேண்டாம்னு சொல்லிடு”என்றார். ராமசாமியின் முரட்டுத்தனத்தை நினைத்து அஞ்சி அவளுடைய அம்மாவும் அப்பாவும் அதன் பிறகு அவள் எப்படி இருக்கிறாள் என்று கூட விசாரிக்க முடியவில்லை.

“அம்மா, எனக்கு நிஜமாவே இங்கே பணம் கேட்டுண்டு வர கொஞ்சமும் பிடிக்கலே. அப்பா என்ன வச்சுண்டா இல்லேங்கிறார்? ஆனா அவர் கடனோ உடனோ வாங்கிக் கொடுத்துடுவார்னு அவனுக்கு அப்படி ஒரு நம்பிக்கை. ஆனா நான் இப்ப வந்தது அதுக்காக இல்லே” என்றாள் சுதாமதி.

“நீ அன்னிக்கிக் கிளம்பிப் போனதுக்கு அப்புறம் இந்த மனுஷன் கதறியிருக்கார் பாரு, எனக்கே அழுகை வந்துடுத்து. எவ்வளவு செல்லமா வளர்த்தேன் இந்தக் குட்டியை. அவ அஞ்சாங் கிளாஸ் படிக்கறப்போ கணக்கு சரியா போடலேன்னு கிளாஸ் வாத்தியார் கிள்ளினதுக்காக நேரே அவன் வீட்டுக்குப் போய் அவன் வீட்டு ஹால்லே இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து இந்தக் கைதானே கிள்ளினதுன்னு ஏழெட்டு அடி போட்டேன். துடிச்சிட்டான். இதுமாதிரிதானேடா குழந்தைக்கும் வலிச்சிருக்கும்னேன். ‘நான் உன்னை இப்ப அஞ்சாங் கிளாஸ் வாத்தியாரா நினைச்சு அடிக்கலே. வய்யாளிக்காவல் நரசய்யான்னுதான் அடிச்சேன். திரும்ப ஏதாவது என் குழந்தைக்குப் பண்ணினாயோ அப்புறம் இந்த அடி தெருவுக்கு வந்துடும்’னு சொல்லிட்டு வந்தேன்னு உனக்குத் தெரியுமே.
அவ கேட்டதையெல்லாம் என்னிக்காவது தர மாட்டேன்னு சொல்லியிருக்கேனா? ஆனா இப்ப யாரோ ஒரு அயோக்கியன் கிட்டே சிக்கிண்டு அவ படற பாட்டை என்னாலே தாங்கிக்க முடியலையே. வாயிலே இருக்கு வார்த்தைன்னு என்னமாக் குழந்தையைப் போட்டுத் திட்டிட்டேன்னு சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போயிட்டார்” என்றாள் அம்மா.

“பாவம் அப்பா!” என்று மெல்லிய குரலில் சொன்னாள் சுதாமதி. சில நிமிஷங்கள் கழித்து “நான் இப்ப வந்தது அதுக்காக இல்லேன்னு சொன்னேன். நீ காதிலே வாங்கிக்கலையே” என்றாள் சுதாமதி.

“புரியலையேடி. சொல்றதை சரியா சொன்னாத்தானே இந்த மரமண்டைக்கும் கொஞ்சம் ஏறும்” என்று அம்மா சிரித்தாள்.

“நான் இங்க வரதுக்கு மின்னாலே தம்புவைப் பாத்தேன்.”

அம்மா கண்களை அகல விரித்து “ஓட்டல்காரத் தம்புவையா? அவன் எங்க உன்னைத் தெருவிலே பாத்தான்? எப்பவும் கார்லே மிதந்துண்டு இருக்கறவனான்னா ஆயிட்டான் அவன் உன்னை அடையாளம் கண்டானோ?”

சுதாமதி அம்மாவைப் பார்த்தாள். அம்மாவின் ஆச்சரியம் அவளுக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. தம்பு இப்போது பெரிய பணக்காரனாகி விட்டான். அம்மா சொல்லும் காரைத் தவிர ராஜாஜி நகரில் வீடு, இப்போது அவன் நடத்துகிற ஒட்டல் எல்லாவற்றையும் வாங்கி விட்டான்.

அம்மாவும் அவள் நினைப்பதையே நினைக்கிறாள் என்பதை அம்மாவின் அடுத்த பேச்சு நிரூபித்தது.

“யார் யாருக்கு என்ன கிடைக்கணுமோ அதுதான் லபிக்கும். ஆத்துக்குள்ளே வந்து சுதாவை எனக்குத் தாங்கோன்னு கேட்டான். நாலு பேர் வந்து டீசண்டா உட்கார்ந்து சாப்பிடக் கூட முடியாத ஒரு குச்சுலே ஏழை பாழைகளுக்கு இட்லி தோசை போட்டு விக்கறவனுக்கு எப்படி என் பொண்ணைக் கொடுக்கறதுன்னு வேண்டாம்னுட்டார் உங்க அப்பா. ராஜா மாதிரி கவர்மெண்ட் உத்தியாகத்திலே இருக்கற மாப்பிள்ளைன்னு பண்ணி வைச்சார். இப்ப கவர்மெண்ட் ராஜா பிச்சைக்காரனா ஆயிட்டான். ஓட்டல்காரன் எங்கையோ உசரத்திலே இருக்கான் பாரு” என்றாள் கோபமும் வருத்தமும் தொனிக்கும் குரலில்.

அவள் சற்று சமாதானமாகட்டும் என்று சுதாமதி ஒன்று சொல்லாமல் அம்மாவின் கையைப் பிடித்துத் தன் கையேடு இணைத்துக் கொண்டாள்.

திடீரென்று அம்மா நினைவுக்கு வந்தவள் போல “தம்புவை நீ எங்கே பாத்தே? என்ன சொன்னான்?” என்று கேட்டாள்.

“அவனை நான் ஒரு மாசத்துக்கு மின்னாலே பாத்தேன். தும்கூர்லே. நாளைக்கு காலம்பற எட்டு மணிக்கு அவன் ஆபீசுக்கு வரச் சொல்லியிருக்கான்.

“என்னது?”

சுதாமதி அம்மாவிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

ஒரு மாதத்துக்கு முன்பு அவள் தும்கூரில் கடைவீதியில் சென்று கொண்டிருந்த போது அவளுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று நின்றது. அவள் பார்த்துக் கொண்டிருந்தபோதே அதிலிருந்து தம்பு இறங்கினான்.

அவள் அருகே வந்து “நீ சுதாதானா? என்ன இப்படித் தேஞ்சு போய்க் கிடக்கே” என்றான்.

“ஆனா நீ அடையாளம் கண்டுபிடிச்சிட்டியே” என்று அவள் புன்னகை புரிந்தாள்.

“இந்தக் கோணக்கால் நடையை இந்த சுதாமணியைத் தவிர இந்தக் கர்நாடகாலே வேற யார் கிட்டே பாக்க முடியும்?” என்று பதிலுக்கு அவனும் சிரித்தான்.

எப்போதும் அவன் அவளை அப்படித்தான் கேலி செய்வான்.

“அடேயப்பா! எவ்வளவு இந்த?” என்று அவள் சிரித்தாள். “நீ எங்கே இங்கே?”

“தும்கூருக்கு ஒரு ஓட்டல்காரன் எதுக்கு வருவான்? வருஷாந்திர காண்ட்ராக்ட் போட்டு தும்கூர் புளி வாங்கிண்டு போறதுக்குத்தான். இவ்ளோ நாளும் மானேஜரை அனுப்பிடுவேன். இந்த வருஷம்தான் இப்ப அவர் பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம்னு லீவிலே போயிருக்கார். அதனாலே அவர் கொள்முதல் பண்ற எல்லா இடத்துக்கும் நான் போயிண்டு இருக்கேன்” என்றான்

“ரொம்பப் பிஸிதான் நீ” என்று சுதாமணி சிரித்தாள்.

“சரி எதுக்கு ரோடுலே நின்னுண்டு பேசணும்? கார்லே போலாம் வா” என்றான். அவன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டான். அவள் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.

“நிஜமாவேதான் கேக்கறேன். எப்படி இவ்வளவு மோசமா உன் உடம்பு இருக்கு? ஏதாவது ஹெல்த் பிராப்ளமா?”

ஒரு நிமிடம் அவள் மௌனம் சாதித்தாள். பிறகு அவனைப் பார்க்காமல் “மனசு உடைஞ்சா உடம்பும் உடைஞ்சுதானே போகணும்?” என்றாள்.

அவன் வண்டியை இடது பக்க ஓரமாகச் செலுத்தி நிறுத்தி விட்டான்.

அவள் தன் மணவாழ்க்கையை அந்த ஒரு வரியில் சுருக்கி விட்டதை அவன் பிரமிப்புடன் பார்த்தான்.

ஆனால் எதையும் எதற்காகச் சுற்றி வளைத்துப் பேச வேண்டும்?

தம்பு அவளைப் பார்த்து “அப்ப நரகத்திலேந்து வெளியிலே வந்துடு. என் கிட்டே சொர்க்கமில்லே. அதை நீ எதிர்பார்க்கிறவளும் இல்லேன்னு எனக்குத் தெரியும்” என்றான்.

அவள் அவன் கண்களைச் சந்தித்தாள்.

“இதை நீ அன்னிக்கே எங்கப்பா கிட்டே சொல்லிட்டு என்னை ஏன் தரதரன்னு இழுத்துண்டு போகலே?” பேசிக் கொண்டிருக்கும் போதே அழுகை வெடித்து வர அவள் கைகள் கண்களில் பதிந்தன.

தம்பு அவள் கைகளை முகத்திலிருந்து எடுத்தான். அவள் கர்சீப்பை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

சுதாமதி அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தவள் பேச்சை நிறுத்தி விட்டாள்.

“இன்னிக்கிப் போய்ப் பாத்தேங்கிறியே? என்ன சொல்றதுக்குப் போனே?”

சுதாமதி உடனே பதில் சொல்லி விடவில்லை. ‘ஒரு தப்பை எங்கப்பா செஞ்சு வச்சார். ரெண்டாவது தடவையா அதையே நான் செய்யறதாயில்லே. நீ ரொம்ப நல்லவன். என்னோட சிநேகிதன். எனக்கு உன்கிட்டேயே, இல்லேன்னா உனக்குத் தெரிஞ்சவா கிட்டேயே ஒரு வேலை பண்ணிக் கொடு. நானும் பி.காம்.னு ஒண்ணைப் படிச்சு வச்சிருக்கேன். கணக்கு எழுதறேன். எங்கப்பாம்மா என்னை அவாளோட வச்சிக்கிறேன்னா அவளோடயே இருந்துண்டு வர்ற சம்பளத்தை எங்கப்பா கையிலே கொடுக்கறேன். அவர் கடனை அடைக்கறதுக்கு அது ஒரு அணில் பங்கா இருந்துட்டுப் போகட்டும்னு சொல்லறதா இருக்கேன்’ என்று மனதிற்குள் நினைத்தாள்.

அம்மா அவள் பதிலுக்கு காத்திருக்க முடியாதவள் போல “என்னவோ கடவுள் இப்பவாச்சும் கண்ணைத் திறந்து பாக்கறானே” என்றாள்.

சுதாமணி திடுக்கிட்டு அம்மாவைப் பார்த்தாள். அவளிடமிருந்து இப்படி ஒரு பேச்சு வருமென்று அவள் எதிர்பார்க்கவில்லை.

“என்னம்மா சொல்றே?”

“ஏன், தமிழ்லேதானே சொன்னேன்” என்றாள் அம்மா பதிலுக்கு.

யாரோ வாயைக் கட்டிப் போட்டது போல சுதாமதி பேசாமலிருந்தாள். பிறகு சமாளித்துக் கொண்டு “அன்னிக்கி சீதாவுக்கு வராத கஷ்டமான்னு எல்லாம் பேசினே. இப்போ நான் சீதாவா உன் கண்லே படலியா?” என்று கேட்டாள். ஆனால் அவள் குரலில் நிலவிய அமைதி அவளுக்கே ஆச்சரியத்தை அளித்தது.

அம்மா அவளைப் பார்த்துச் சிரித்தாள். “அன்னிக்கி உன்னை ஜனகனோட பொண்ணாப் பாத்து உங்கப்பா மேலே கோபப்பட்டேன். ராமசாமிதான் ராமன் இல்லையே. அதனாலே நீயும் இப்போ என்னோட சுதாமணி மட்டும்தான்.”

அம்மாவின் லாஜிக்கைப் பார்த்து சுதாமணிக்குச் சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. வாய் விட்டுச் சிரித்தாள். அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு “சுப்புலெச்சுமி, நீ ரொம்பப் பொல்லாதவடி!” என்று சொல்லி விட்டு மறுபடியும் சிரித்தாள்.

One comment

  1. கதை பரவாயில்லை
    ஆனா சுதாமதி
    சுதாமணி
    ஆகி மீள
    சுதாமதி ஆகி
    சுதாமணி
    ஆகி
    என்ன ஒரு எழுத்து பிழை
    ஆனாலும்
    இத்தனை தடவையா
    எடிட்டர் இதை வாசிக்காம
    போட்டீங்களா
    விளக்கம் தருக

    ஆரா

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.