பதாகை 2 பிப்ரவரி 2015

“டிபென்ஸ் காலனி பூங்காச் சம்பவம் என்ற குறுங்கதை சிகந்தர்வாசியின் வெற்றிகளில் ஒன்று” என்று நினைப்பதாகச் சென்ற வாரம் எழுதியபோது, அது இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த வாரம், “நாம்பல்லிச் சம்பவம்” பதிப்பிக்கப்படுகிறது, இது சென்ற வாரக் கதையைக் காட்டிலும் அதிகம் பேசப்படும் என்று எதிர்பார்க்கிறேன். போதாக்குறைக்கு, “நினைவின் வண்ணங்கள்” என்ற கவிதையும் இருக்கிறது. சிகந்தர்வாசி வாசகர்கள் அதையும் நன்றாக கவனிக்க வேண்டும்  என்று கேட்டுக் கொள்கிறேன்.

எதிர்பாராதவிதமாக இந்த வாரம் சிறந்த சில சிறுகதைகள் பதாகைக்குக் கிடைத்து விட்டன.

செந்தில் நாதன் மொழிபெயர்ப்பில் உள்ள “திற!” என்ற சதத் ஹசன் மண்ட்டோவின் பிரசித்தி பெற்றச் சிறுகதையை பதாகை வாசகர்கள் வாசிக்கத் தவற வேண்டாம். நான் வாசித்த அவரது முதல் தமிழாக்கமே செந்தில் புனைகதைகளை மிகச் சிறப்பாக மொழிபெயர்ப்பார் என்று நம்பச் செய்தது, இந்தக் கதை நம்பிக்கையை உறுதி செய்கிறது.

மற்றொரு கதையான ஹரன் பிரசன்னாவின் “யாரோ ஒருவன்“, ஊழலின் எளிய முகத்தை அறக்கூச்சல் ஆரவாரமில்லாமல் அமைதியாக வெளிப்படுத்துகிறது. இதற்கு மேல் சொல்வது கதைக்கு நியாயம் செய்வதாக இருக்காது, படித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு கதையிலும் வித்தியாசமான கதைக்களனை நிறுவுபவர் ஸ்ரீதர் நாராயணன். அவரது “இளைப்பாறுதல்” என்ற சிறுகதை, அதன் மொழிக்கும் கதைசொல்லல் திறனுக்கும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று,

சென்ற வாரம், தன் கோபால் முகர்ஜி எழுதிய Gay-Neck, the Story of a Pigeon என்ற நாவலின் தமிழாக்கத்தைத் துவக்கினோம். இந்த வாரம் வண்ணக்கழுத்தின் கல்வி விவரிக்கப்படுகிறது. வீட்டில் குழந்தைகள் இருந்தால் வாசித்துக் காட்டுங்கள், இனிய பல தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொள்வார்கள் என்பது மட்டுமல்ல, அடுத்த பதாகை எப்போது வரும் என்றும் உங்களைத் துளைத்தெடுப்பார்கள். அவ்வளவு அருமையான கதை.

லி பாய் என்ற சீனக் கவிஞர் எழுதிய குடிக்கவிதை உலகப் பிரசித்தம், விளங்கிக் கொள்ள முடியாத புதிர்த்தன்மை அதன் தனித்துவம். தமிழில் எவ்வளவு என்று தெரியாது, ஆங்கிலத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. பதாகையில் இதோ இரண்டு- நம்பி கிருஷ்ணன் நிறைய சுதந்திரங்கள் எடுத்துக் கொண்டு மிக அருமையான ஒரு மொழியாக்கத்தைத் தருகிறார்- வெள்ளி வீதியில்… செந்திலின் நெருக்கமான மொழிபெயர்ப்பு, “நிலவொளியில், தனியே மதுவருந்துகிறேன்

கடைசியில் சொன்னாலும் முக்கியமான இரு கவிதைகள்- நந்தா குமாரனின், ஸ்தலபுராணம் IV : ஆடு தாண்டும் ஆறு, ஒரு தேர்ந்த குரலை வெளிப்படுத்துகிறது. ஸ்ரீதர் நாராயணன் மனதைத் தொடும் கவிதைகள் சிலவற்றை எழுதி வருகிறார், அந்த வரிசையில் எறும்பு  வீடுகள் ரசிக்கத்தக்க ஒன்று.

இவை தவிர, எஸ் சுரேஷின் பிளான் பி என்ற கிரிமினல் கவிதை மற்றும் வழமையான மொழிபெயர்ப்பு கட்டுரை, அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 2 ஆகிய இரு படைப்புகளும் உள்ளன. ஜுஸ்ஸாவாலாவின் முக்கியமான கவிதைகளில் ஒன்றை நம்பி கிருஷ்ணன் இந்த இதழில் தமிழாக்கம் செய்திருக்கிறார்- வருகையைப் பற்றி ஒன்பது கவிதைகள். வாசிப்பவர்களே அதன் அழகை உணர்வார்கள்.

௦௦௦

உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் editor@padhaakai.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். அல்லது கீழுள்ள படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

← Back

Thank you for your response. ✨

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.