இளைப்பாறுதல்

ஸ்ரீதர் நாராயணன்

image1

மூலக்கடை பிள்ளையார் கோவில் பக்கமாக வரும்போது சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. ‘சிக்னல் போட்டிருக்கு’ என்று சாந்தலட்சுமியின் காதுகளில் கேட்கும்படி முணுமுணுத்துவிட்டு சிவசுப்ரமணியன் வேகமாக பஸ்ஸின் படிக்கட்டுகள் பக்கமாக வந்தான். எதிர்பார்த்தது போல டிரைவர் வேகத்தைக் குறைக்க சட்டென குதித்து இறங்கினான். பின்னாடியே தடதடவென சாந்தலட்சுமி இறங்குவதற்குள் பஸ் வேகமெடுத்து விட்டது. அந்த மதிய நேரத்தில் நூறடிச்சாலை வெறிச்சோடி இருந்ததால், டிரைவர் வேகமெடுத்தபடி சிக்னலைத் தாண்ட, பஸ்ஸிலிருந்து குதித்த சாந்தலட்சுமி கொஞ்சம் தூரம் ஓடி சமாளித்து நின்றாள்.

‘த, விழுந்து சாவறதுக்குனு வந்துக்குது பாரு. ஸ்டாப்பிங்ல இறங்கி நடந்து வாறதுக்கு என்னா கேடு’ கண்டக்டர் தலையை நீட்டி திட்டுவது சிவசுப்ரமணியன் காதுகளில் நன்றாகவே கேட்டது.

‘பேமானி. ரெட்ல கிராஸ் பண்ணிட்டு, என்னா சவுண்டு விடறான்’ சாந்தலட்சுமியின் குரல் பஸ்ஸை எட்டியிருக்காது என்றாலும், சாலையோரத்து இளநீர் கடைக்காரரின் காதுகளை எட்டியிருந்தது அவருடைய சிரிப்பின் மூலம் தெரிந்தது.

‘அதான், ஸ்பீடு கூட்டிக்கிறான்ல. என்னாத்துக்கு குதிக்கிற நீயு?’

சிவசுப்ரமணியன் கேட்க நினைத்த கேள்வியை நிறுத்திக் கொண்டான். கேட்டாலும் அவளிடமிருந்து பதில் எதுவும் வராது. ‘நீ குதிச்ச. நானும் குதிச்சேன்’ என்பது போல பாவனையில் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, பிள்ளையார் கோவிலின் வலப்பக்கத்து சந்தில் திரும்பினாள் சாந்தலட்சுமி. அங்கிருந்து ஐந்து நிமிட நடையில் ‘ரங்கா கிளினிக்’ வந்துவிடும். அதற்கு பின்புறம்தான் ராமசந்திரனின் வீடு. ரங்கா காலனி ஸ்டாப்பிங்கில் இறங்கியிருந்தால், மெயின் ரோடு வழியாக பதினைந்து நிமிடம் நடந்து வரவேண்டும். சாந்தலட்சுமி மூன்று வயது குழந்தையாக இருக்கும்போது ராமசந்திரன் இங்கே வந்து விட்டார். அப்போதிருந்து இந்த சிக்னலில் இறங்கி குறுக்கு வழியில் வருவது அவளுக்கு பழக்கம் ஆகிவிட்டிருந்தது. இருபத்தியெட்டு வயதில் சிவசுப்ரமணியனோடு கல்யாணம் ஆகி தாம்பரம் சாணிடோரியம் பக்கம் போனாலும், வாரத்திற்கொரு முறை வந்து விடுவாள்.

‘அப்பாவுக்கு கிளினிக்க விட்டா பிச்சாண்டி மடம். மடத்த விட்ட கிளினிக்கு. அவர் உலகமே அம்புட்டுத்தான். அந்தக் கிளவி மட்டும் தனியா அங்க வெறுக்கு வெறுக்குன்னு உக்காந்திருக்கும். ஒரு நட போயி பாத்திட்டு வந்திடறேன்’.

ஊரையே வறுத்து வாயில் போட்டுக் கொள்ளும் சாமர்த்தியம் மட்டும் இல்லாவிட்டால் சாந்தலட்சுமியின் பாட்டி என்றோ காற்றில் கரைந்து போயிருப்பார் என்று நினைத்துக் கொள்வான் சிவசுப்பிரமணியன். வற்றிய சுள்ளியாகிப் போன கருத்த சிறிய உடலிலிருந்து குரல் மட்டும், வெங்கல மணியை முழக்கியது போல கணகணவென, இந்த எண்பது வயதிலும் எட்டு ‘ரங்கா காலனிக்கு’ கேட்கும் அளவுக்கு சத்தமாக இருக்கும்.

‘ஒரு துரும்பைக் கிள்ளி தூரப் போட்டாக்கூட மாப்பிள்ளைன்னா துள்ளி நின்னு முறுக்கிக்கும். உமக்கென்ன போச்சு. பனைமரத்துக்கு பாதி உயரம் இருக்கீர். நல்லா முறுக்கிக்கும்’

எப்போது சிவசுப்ரமணியத்தைப் பார்த்தாலும், விசுக்கென தலைமுக்காட்டை இழுத்துவிட்டுக் கொண்டு சுவரைப் பார்த்துக் கொண்டுதான் பேசுவார். வீட்டு மாப்பிளையின் முகத்தைப் பார்த்து பேசினால் மரியாதை குறைவாம். ஆனால் அதற்கு மேல் எந்தவித சலுகையும் கிடையாது.

‘ஆரு என்னாத்துக்கு துள்ளிக்கிறாங்க இப்ப… உங்க அல்லாருடய நல்லதுக்குத்தான் சொல்றேன். அந்த புது டாக்டர நம்பாதீங்க.’

‘எண்ணி வச்சுக்கும். இன்னும் ரெண்டே வருசத்தில நான் போய் சேந்திருவேன். ராமன் சாமியாராகி தேசாந்திரம் போயிருவான். அப்புறம் இந்த வீடு வாசல் சொத்து எல்லாம் நீர் ஆண்டு அனுபவிக்கப்பட்டதுதானே.’

‘ஒரு பட்டாக்கூட உங்க பேருல கெடியாது பாட்டி. அப்புறம் என்னா வீடு? வாசல் மட்டும்தான். கிண்டி ஆசுபத்திரி வேல முடிஞ்சோன்ன, இங்கிருந்து அல்லாரையும் கெளப்பி விட்ருவான் அந்த புது டாக்டரு. சாமிநாதன், சுந்தரம், வேலுப்பிள்ள அல்லாருக்கும் ஆப்புதான். முப்பத்தியஞ்சு வருசமா நீங்கதான் ஆசுபத்திரி ஆசுபத்திரின்னுட்டு கட்டி அழுதீங்க. இப்ப அங்க பெருசா கட்டியிருக்கற ஆசுபத்திரில உங்க அல்லாரோட உழைப்பும் இருக்கு. ஆனா, அதால ஆருக்கு என்னா லாபம் சொல்லுங்க’

‘கோர்ட்டு கேசுன்னு ஏன் கெடந்து குதிக்கனும்கிறேன்? பேசிப் பாத்தா அல்லாம் சரியாப் போவுது. நல்லதுக்குன்னு முனஞ்சி நின்னு ஆசுபத்திரி கட்டறான் அந்த புள்ளாண்டான். அதப் போய் ஏன் இப்படி கரிச்சு கொட்டறீர். போற நேரம் வந்திட்டா வூட்டயா கட்டி எடுத்திட்டு போகப் போறீர். உமக்கு அப்புறமும் இந்த வூடு நிறஞ்சு, விளங்கி இருக்கறதுக்கு ஒரு வழியப் பண்ணப் பாரும்.’

‘சும்மாவா கட்டறாங்க ஆசுபத்திரிய…. புள்ள பொறக்க வைக்கிறதுன்னு சொல்லி லட்சம் லட்சமா பீஸ் வாங்கப் போறானுவ. அவன் பசப்பறத நம்பிட்டு வூட்ட விட்டுக் கொடுத்திறாதீங்க. நின்னு கேஸாடினாத்தான் காசு பெயரும். இல்லன்னா வாயில வெரல வச்சுக்கினு போன்னு சுளுவா ஏமாத்திருவான்’

‘வரம் கொடுக்கிறதுக்குன்னு தெய்வமே வந்தாக்கூட, வறட்டு மனுஷாளுக்கு கண்ணு எங்கத் தெரியப் போவுது. சாந்தாவோட தலயில என்ன எழுதியிருக்கோ’ முத்தாய்ப்பாக வறட்டு மனிதர்களில் வந்து முடிப்பார். அதுக்கப்புறம் அவனிடம் பேச ஒன்றுமிருக்காது.

சிவசுப்ரமணியனின் நடை தளர்ந்து நின்றது. செல்வின் எலக்ட்ரிகல்ஸ் பக்கம் வந்ததும் ‘சாந்தா, நீ முன்னாடிப் போயிட்டிரு. நான் பாபாவ கண்டுக்கினு வந்திர்றென்’ என்றான்.

அவனுடைய குரல் அவளிடம் ஏதும் பாதிப்பை உண்டாக்கவில்லை என்பது அவளுடைய நடையின் வேகத்திலேயே தெரிந்த்து.

‘என்னாபா சிவசு.., இன்னேரத்துக்கு வந்திட்டிருக்க. கெய்வி புட்டுகிச்சா. இழுத்திட்டு இருக்குன்னு சொன்னாங்க’ ஆட்டோவின் பின்சீட்டிலிருந்து இறங்கிய பாபா, விரைந்து போகும் சாந்தலட்சுமியைப் பார்த்துவிட்டு,

‘காலைலேந்து ரைட்டு கண்ணு துடிச்சிட்டேயிருந்துச்சு. ஏதோ நடக்கும்னு நினச்சிட்டே இருந்தேன்ப்பா’ என்றான்.

‘ராத்தங்காதுன்னு காலைல போன் வந்திச்சு. அதான் பொறப்பட்டு வந்தோம்’ ஓரிரு நொடிகள் நிறுத்திவிட்டு, பிறகுக் கேட்டான் ‘தூள் வச்சிருக்கியா பாபா?’

‘த… என்னாதிது… துட்டி கேக்கப் போற நேரத்துக்கு போயி டோப்பு கேக்கற? போயிட்டு வாப்பா மொதல்ல’ அலைபாயும் முடிக்கற்றைகளை அழுத்தி விட்டுக் கொண்டபடி கேட்டான் பாபா. நெளிவும் சுளிவுமாக நீண்டு பறக்கும் மயிரினால்தான் அவன் பாபா. வேறெந்த பெயராலும் அவன் அழைக்கப்பட்டு சிவசுப்ரமணியன் அறிந்தததில்லை.

‘போகத்தான போறம்’ என்று சொல்லிக் கொண்டே ஆட்டோவின் பின்சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான். ‘அல்லாரும் ஒரு நா போகத்தானே போறம்’

‘ப்ச்ச்ச்… என்னா மாதிரியான ஆத்துமா தெரிமா கெய்வி. எத்தினி தபா அதனாண்ட துன்னூறு வாங்கிக்கினு இருக்கேன் நான். அது அருள் வந்து ஆடும்போது நமக்கெல்லாம் மயிரு நட்டுக்கிட்டு நிக்கும்பா. அப்பால, பாபா வந்திருக்கானான்னு கூப்பிட்டு பாசாமாப் பேசும். என்னா ஒரு ரெண்டு வாரம் படுக்கைல இருந்திருக்குமா? அதுக்கு முன்னாடி ஒரு தபாக்கூட சொகமில்லன்னு சொன்னதில்லப்பா. அப்படி ஒரு செயலா இருந்திச்சுப்பா. அந்தக்கால கட்டைங்களே அப்படித்தான்’ பாபாவின் குரலில் வருத்தம் இருந்தது.

ஒருவேளை பாட்டிம்மா பிழைத்துக் கொண்டுவிட்டால் ‘சரியான அராத்துப் புடிச்சதுயா. அடாவடிக் கெய்வி’ என்பதை மீண்டும் நினைவுகொள்வானாக இருக்கும்.

ஆட்டோவின் முன்சீட்டில் ஏறி உட்கார்ந்த பாபா, சிவசுப்ரமணியனை சற்று நேரம் பார்த்து விட்டு சட்டைப்பையிலிருந்து கசங்கிய சிகரெட்டை எடுத்து நீவிவிட்டு அவனிடம் கொடுத்தான். ‘காலைல எதுனா சாப்பிட்டுக்கினியா? கொஞ்சம் ரம்மு இருக்கு. வடகறி வாங்கி வச்சிருக்கேன். சாப்பிட்டுக்கினே பத்த வை. அல்லாங்காட்டி கெய்விக்கூட நீயு பட்த்துன்னுதான் சுடுகாட்டுக்கு போவனும்’

பதினைந்து வருடங்கள் முன்பு, பல்லாவரம் ஜெகன் டிராவல்ஸிலிருந்து அம்பாசிடர் எடுத்துக் கொண்டு, சாந்தலட்சுமிய பொண்ணு பார்க்க வந்தபோது இதே பாபாவிடம்தான் ராமசந்திரனின் வீட்டு விலாசம் விசாரித்தார்கள். அதற்கப்புறம் இரண்டொரு சந்திப்பிலேயே ‘வா சிவசு’ என்கிற அளவுக்கு பச்சக் என்று ஒட்டிக் கொண்டு விட்டார்கள். சங்கர்நகர் மேஃபிளவர் பாருக்குப் போய் நடுச்சாமம் வரை குடிக்கும் அளவுக்கு அந்த பச்சக் அழுத்தமாக இருந்தது.

காட்டமான மணத்துடன் ஆட்டோவின் உள்புறம் நிறைந்த புகை நடுவே, சிவசுப்ரமணியன் சிரித்தான்.

‘போ வேண்டிதான். ஆனா அஞ்சு டோப்பாவது ஒரேமுட்டா போட்டுட்டு அப்பாலிக்க போயிடனும். சந்தோஷமா போயிடனும்.’ என்றான் சிவசுப்ரமணியன். நினைவுச் சிடுக்குகளிலிருந்து விடுதலையான சந்தோஷ சிரிப்பு.

‘மொள்ளப்பா. நீ இழுக்கிற இழுப்புக்கு எஸ் சிக்ஸ் ஸ்டேஷன் வரைக்கும் புகை போவும் போல. சரி போதும் வா. ஒரு நட போயிப்பாத்திட்டு வந்திடலாம். இன்னேரம் ஆளுங்க உன்னக் காணோம்னு தேடிட்டிருக்கும். அல்லாரும் என்னாண்ட கேப்பாங்கோ’ என்று சிவசுப்ரமணியன் கையில் கால்வாசி புகைந்த சிகரெட்டை வலிந்து வாங்கி தரையில் தேய்த்து அணைத்தான் பாபா.

‘கேள்வி கேக்குறதுக்கு எவனுக்கும் ரைட் இல்ல. அப்படியே எவனாச்சும் கேட்டான்னா பதில் சொல்றதுக்கு உனுக்கு ரைட் இல்ல. நீ ஏஞ்சொல்ற?’ மிதப்பு நன்றாக ஏறியிருந்தது சிவசுப்பிரமணியனுக்கு.

‘ஆமாம். இனி கேக்கறதுக்கு அங்க ஆரு இக்குறாங்க. ஒரே ஒரு கெய்வி இருந்திச்சு. அதுவும் புட்டுக்கிடப் போகுது. அந்த அப்புராணி அய்யர் மட்டும்தான். நீ வெத்தலய மட்ச்சு வாயில போடற மாதிரி ஊட்ட சுருட்டி உள்ளப் போட்டுக்கலாம்னு பாக்கற. அந்த டாக்டருங்கோ உங்க அல்லாத்துக்கும் பல்ப்பு கொடுத்திக்கிறாங்கோ’ சிவசுப்ரமணியனக் கையப் புடிச்சு இழுத்துக் கொண்டு போகாத குறையாக கிளம்பினான் பாபா.

‘என்னா பெரிய பேலஸா அது. பெருங்காய டப்பாக்குள்ள புதச்சு வச்சா மேரி ஒரு குச்சு வூடு. அதயும்….’

சிவசுப்ரமணியனின் குரல் நின்றுவிட்டது. கிளினிக்கை நெருங்கும்போதே, ராமசந்திரனின் வீட்டின் வாசலில் கூட்டம் கூடிவிட்டது தெரிந்தது.

முன்புறம் இறக்கிவிட்ட ஓட்டுக்கூரையுடன் இருந்த தாழ்வாரத்தில், வலக்கால் மேல் இடக்காலை மடித்து வளைத்துப் போட்டுக் கொண்டு, கறைபடிந்த கைக்குட்டையால் மூக்கைத் தொடைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் ராமசந்திரன். முன்னால் வந்த பாபாவைப் பார்த்ததும் தலையாட்டியபடியே, இடதுகையினுள் இருந்த பொடிடப்பியை வலதுகைக்கு மாற்றிக்கொண்டார். பாபா இரண்டு கைகளையும் முன்னே விரித்து, பின்னர் வானத்தை நோக்கிக் காட்டினான். அவரும் இரண்டு கைகளையும் வானை நோக்கி காட்டிவிட்டு, ‘போய்விட்டது’ என்பது போல சைகைக் காட்டினார். அருகே வந்த பாபாவின் நீட்டிய கைகளைப் பற்றிக் கொண்டார்.

‘காலைலேந்து ரைட்டு கண்ணு துடிச்சிட்டே இருந்திச்சு சார். அப்பவே சிவசுகிட்ட சொல்லிட்டிருந்தேன். ஒரு தொல்லயும் கொடுக்காது கெளம்பிடுச்சுப் பாருங்க. புண்ணியாத்துமான்னா என்னா அப்புறம்.’

‘சாந்தா வந்திடட்டும்னு காத்துக்கிட்டேயிருந்திருப்பாப் போல. இப்பத்தான் பெரிய கேவலா தொண்டைலேந்து வந்து அப்படியே போயிடுச்சு. ஃபைனல்லி ஷி இஸ் ரெஸ்டிங்’ என்றார் ராமசந்திரன். பின்னாடி வந்த சிவசுப்ரமணியத்தைப் பார்த்து மையமாக தலையாட்டினார்.

ஓட்டு தாழ்வாரத்தை தாண்டி உள்ளே எட்டிப் பார்த்தான் சிவசுப்ரமணியன். ட்யூப்லைட் வெளிச்சத்தில் வெள்ளை வெளேரென்று இருந்த நார்மடி புடவையில் பக்கவாட்டில் சுருண்டபடி பாட்டி படுத்திருந்தார். இயல்பாகவே ஐந்தடி உயரம்தான். முதுமையால் கூன் விழுந்து சுருங்கி நான்கடிதான் இருப்பார். ஒரு குழந்தையைப் போல அத்தனை சிறியதாக தெரிந்தார்.

கூடத்திற்கு பின்புறமிருந்த சமையல் அறையிலிருந்த வெளிவந்த பெருங்களத்தூர் மாமா, அவனைப் பார்த்ததும்,

‘வாங்கோ. ஒரு டூ மினிட்ஸ் மின்னாடி வந்திருக்கப்படாதா. கங்கா ஜலம் விட்டிருக்கலாமே. ரைட்டு. இப்படிக்கா ஒரு கைப் பிடியும்… தெற்கு வடக்காத்தான் போடனும்ட்டுட்டான் ராஜப்பா. அரமணிக்குள்ள குளிப்பாட்டி ஒடனே ஆரம்பிச்சிட்டா நாலர அஞ்சு மணிக்குள்ள எடுத்திடலாம். பெட் சோர் வந்த உடம்பு பாரும். நீயும் வந்து ஒரு கைப்பிடியேன்ப்பா’ அந்தக் கடைசி கை உள்ளே எட்டிப் பார்த்த பாபாவை நோக்கி என்று சிவசுப்ரமணியத்திற்கு புரிந்தது.

கட்டிலில் இருந்து உடலை தூக்கியதும், உடல்புண்ணிலிருந்து வெளியேறும் சீழும், மூத்திர துணிகளின் முடைநாற்றமும் கலந்து, சட்டென காற்றில் பரவ ஆரம்பித்தது. அந்த சிறியக் கூடத்தின் நடுவே விரித்திருந்த கோரைப்பாயில் உடலைப் படுக்க வைத்ததும், எல்லோரும் அவசர அவசரமாக விலகிக் கொண்டார்கள். சிவசுப்ரமணியத்திற்கு மண்டைக்குள் போன புகையெல்லாம் கலைந்து போக, நாக்கு வறண்டு தாகமெடுத்தது. இழவு வீட்டில் தண்ணீர் குடிக்க முடியுமா என்று சந்தேகமாக சமையலறை பக்கம் திரும்பிப் பார்த்தான்.

அவன் கண் பார்வையை சந்தித்ததும் சாந்தலட்சுமி அவனை சமையலறையிலிருந்து கையசைத்துக் கூப்பிட்டாள்.

‘அந்த பூஜை ரூம்ல டிரம்மை நகர்த்தி பின்னாடி இருக்கிற ஷெல்ஃப்லேந்து சக்கர பாக்கெட்ட எடுத்திட்டு போய் சாமிநாத மாமா ஆத்துல கொடுத்திருங்களேன். அங்கதான் காப்பிக்கு ஏற்பாடாகியிருக்கு’

‘ஏண்டி இதப்போய் அவர்ட்ட கொட்டி முழக்கிட்டு. கைவேலயா இருக்கேனேன்னு உங்கிட்ட சொன்னா….’ சாந்தலட்சுமியின் பின்னாலிருந்து நாகலட்சுமி பெரியம்மா அதட்டினார்.

‘ப்ச்! நான் இப்ப பூஜை ரூமுக்குள்ள போகமுடியாது பெரிம்மா. அதான் அவர்ட்ட சொன்னேன். நீ காப்பிய சுத்தி எடுத்திட்டு போய் முன்னாடி கொடு. ராஜப்பா வன்ட்டான்னா, ஒரு ஆளும் அங்க இங்க நகர முடியாது’ என்றாள் சாந்தலட்சுமி

‘என்னமோ ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கேன்னு சொன்னியேடி. இன்னுமா கண்ணு தொறக்கல’ என்றார் பெரியம்மா.

‘ப்ச்ச்… அப்புறமா சொல்றேன். நீ தலய அவுத்து வுட்டுக்கினு போ. துட்டி கேக்க ஆளுங்க வந்திட்டிருக்கு’

சிவசுப்பிரமணியனுக்கு இப்போது ஒரு சிகரெட்டை பத்த வைக்கனும் போலிருந்தது. துக்கம் கேள்விப்பட்டு முன் தாழ்வாரத்தில் நிறைய ஆட்கள் புதியதாக வந்து சேர்ந்திருந்தார்கள். வறண்ட புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்த ராமசந்திரனுக்கும், பாபாவிற்கும் இடையே புதியதாக நின்று கொண்டிருப்பவரைப் பார்த்ததும் சிவசுப்பிரமணியனுக்கு தெரிந்துவிட்டது. அதிகம் பழக்கப்படாத உடையாக வேட்டியைச் சுற்றிக் கொண்டு, டீ ஷர்ட்டில் நின்று கொண்டிருந்தது ரங்கா டாக்டரின் மகன் சந்தீப்தான். ஆர்டிஃபீஷியல் இன்செமினேஷன் செண்டர் என்றதொரு தங்கச்சுரங்கத்தை கிண்டியில் கட்டிக் கொண்டிருக்கிறான். அவர்கள் அருகில் போனதும், அவனுடைய சிநேகமான தலையாட்டலை தவிர்த்து சற்று விறைப்பாக நின்றுகொண்டான் சிவசுப்பிரமணியன்.

சந்தீப்பின் ஏதோ கேள்விக்கு ராமசந்திரன் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘பாட்டிம்மான்னே பழகிடுச்சு எல்லாருக்கும். உண்மையான பேரு என்னன்னு இங்க யாருமே கேட்டதில்ல. நீங்கதான் முதல்ல கேட்டிருக்கேள்.’ சொல்லிவிட்டு நிறுத்தியவர், மீண்டும் ஒரு வறண்ட புன்னகையுடன் தொடர்ந்தார். ‘படிப்பு வாசனயே கெடயாது. பேரு மட்டும் சரசம்மா. கொயட் அயரானிக்கல் யூ நோ. பதினாலு வயசுல கல்யாணம். ஒரே மாசத்தில் நான் வயித்துல. எட்டுமாசம் புள்ளதாச்சியா இருக்கும்போதே புருசன் ஆத்தோட முழுகிப் போயிட்டார். நாம் பொறந்த ஒரே வருசத்தில் அவ அப்பாவும் மாரடைப்புல போயிட்டார். ஒண்ணுமே தங்காத துக்கிரி ஜென்மம் சார் அவோ. அதான் அந்தப் பேரு கூட நிலச்சு நிக்கல பாவம்’ என்றவர் நிறுத்திவிட்டு ஒரு சிட்டிகை பொடியை மூக்கில் ஏற்றிக் கொண்டார். ‘நாமட்டும்தான் அவளுக்கு மிஞ்சினேன்’

ஒரு கையில் மாலையும், மறுகையில் சீனிசாக்கில் தைத்த பை நிறைய சாமக்கிரியைகளுமாக, சூம்பிய இடது காலை தாங்கி தாங்கி வைத்தவாறே வந்தான் ராஜப்பா. கூடத்தில் இருக்கும் கூட்டத்தை ஒரே கணத்தில் அனுமானித்தபடி,

‘ஒடம்பொறந்தா உண்டா? இல்லன்னா பொறந்தாத்து பக்கம் ஆராச்சும் கோடித்துணி கொடுக்கலாம். இந்தப்பக்கமா தூணோட ஒரு பழம்புடவய கட்டி மறைப்பா வைங்க. நடுவுல ஒரு சேர் போடுப்பா. டேய், ரெண்டுகொடம் தண்ணிய பிடிச்சு இப்படி வைடாப்பா. ஆம்பளயாளுங்கள்லாம் கொஞ்சம் அந்தப்பக்கமா போங்க. டேய், செல்லப்பா… இங்க வந்து பிடி இப்படி’

இழவு வீட்டுக்கான சகல லட்சணங்களும் வந்து அந்த வீட்டில் கவியத் தொடங்கியது. பைபாஸ் ரோட்டு போக்குவரத்து நெரிசல், மருத்துவரின் ஃபீஸ்கள், கவுன்சிலர் எலெக்‌ஷன் பற்றிய எதிர்பார்ப்புகள், என ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவர்கள், பிணத்தை குளிப்பாட்டும் சடங்கை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். சுற்றிக் கட்டியிருந்த மறைப்பு சீலையையும் தாண்டி, மடக்கு நாற்காலியில் வைக்கப்பட்ட பாட்டிம்மாவைப் சிவசுப்பிரமணியனால் பார்க்க முடிந்தது. முக்காடு விலகின அரை மண்டையில், ராஜப்பா ஒரு குடம் தண்ணீரை கொண்டு கொட்ட, அவர் மேலிருந்த பழைய சீலையை கலைத்தபடி நீர் பெருகி வழிந்தது. தோலால் மூடிய எலும்புக்கூடு ஒன்று உட்கார்ந்திருப்பது போல இருந்தது. ராஜப்பா ஒரே வீச்சில், நழுவிய ஈரப்புடவையை உடலின் மேல் போட்டு மறைத்துவிட்டு, அடுத்த குடம் நீரை விட்டான். மேலும் இரண்டு குடங்கள் விட்டதும், எவ்வித அசூயையும் இல்லாமல், உடலின் மேல் தட்டுச்சுற்றாக சுற்றியிருந்த ஈரப்புடவையை விலக்கி, பெருங்களத்தூர் மாமா கொடுத்த புதிய நார்மடிப் புடவையை சுற்ற ஆரம்பித்தான்.

புடவையின் ஒரு நுனியை இடுப்போடு சுற்றி முடிச்சிட்டு, மறுபக்க நீள் நுனியை கால்களிடையே தார்பாய்ச்சி, மீண்டும் ஒருமுறை இடுப்போடு சுற்றி, மேலே இடப்புற தோள்மீதேற்றி, தலையை சுற்றிக் கொண்டு வந்து, வலப்புற தோளில் கொண்டு வந்து இடுப்பில் செருகி வைத்தான். பையோடு கொண்டு வந்திருந்த நாடாத்துணியில் தாடையைச் சுற்றி கட்டிவிட்டு, கைக் கட்டை விரல்களையும், கால் கட்டை விரல்களையும் இழுத்து பிணைத்துவிட்டு, திருநீறைக் குழைத்து நெற்றியில் மூன்று பட்டைகளை இட்டு, அதன் நடுவே சிறிய சந்தன பொட்டில் ஒரு ரூபாய் காசை அழுத்தி வைத்து, மாலையை அணிவித்து அலங்காரத்தை முடித்தான்.

சந்தீப் ‘இப்படி வச்சு போட்டோ ஏதும் எடுக்கனுமா? என்னோட கேமிராவக் கொண்டு வரட்டுமா’ என்றான்.

பதிலுக்கு ராமசந்திரன் ‘அப்படி எல்லாம் செய்யற வழக்கமில்ல. இன்னொரு ஐரணி தெரியுமா உங்களுக்கு. அவளோட போட்டோன்னு எங்ககிட்ட ஒண்ணுமே கிடயாது. அவளே எங்கேயும் நிக்க மாட்டா. ஆனா தப்பித் தவறிக்கூட எந்த போட்டோலயும் விழுந்ததில்ல. அவ கல்யாணத்தப்பக் கூட யாரும் போட்டோ எடுத்ததில்ல’ என்றார். விரலிடுக்கில் இருந்த பொடியை மீண்டுமொருமுறை ஏற்றிக் கொண்டபடி,

‘பூ தச்ச பின்னலோட ஒரு பழய போட்டோவ பாத்திருக்கேன். தாழம்பூவில் மல்லிகைச் சரம் கோர்த்து, சந்திர சூரிய வில்லையெல்லாம் அலங்கரிச்சு நீளமான பின்னலோடு இருப்ப. கொடுங்களூர் ரெவின்யூ ஆபிஸ்ல அவ அத்தை பையன் ஒருத்தன் இருந்தார். அவர் எடுத்த போட்டோதான் அது. நல்ல நீளமான தலைமுடியும், எழுதிவச்ச மையுமா பொம்ம மாதிரி இருப்போ. இங்க சென்னைக்கு வந்தப்பத்தான், போட்டோவக் காட்டினார். சின்னதா பர்ஸுலயே வச்சிட்டிருந்தார். அப்படி பாத்தவள இப்படில்லாம் பாக்க மாட்டேன்னுட்டு வீட்டுக்கே வரல அவர்’ என்றார்.

‘என்னா கோராமை பாருங்க. ஒரு வருசம் கூட நெறயாத ஒரு வாழ்க்க. அதுக்கோசரம் இம்புட்டு வருசமும்…. அதெல்லாம் சாதாரண ஆத்துமாக்களுக்கு சாத்தியப்படுமா’ பாபா சொன்னான்.

ராமசந்திரன் சொன்ன பூ தைத்த பின்னலோடு பாட்டியை கற்பனை செய்து பார்க்கத் தோன்றியது சிவசுப்ரமணியனுக்கு, கூடவே அந்த போட்டோவை பர்சில் வைத்துக் கொண்டிருந்த ரெவின்யூ ஆபிசர் பற்றியும்.

‘பின்ன… அந்தக்காலத்து வைராக்கியம்னா சும்மாவா. அதில நான் வேற அவ வயித்துல நின்னுட்டேன். துக்கிரிக்கு வாய்ச்ச துக்கிரி. யாரு என்ன நினச்சு என்ன பயன்… நத்திங் டு டூ’. என்றார் ராமசந்திரன்.

கூடத்தை கழுவி விட்டு வெளியே வந்த ராஜப்பா, வேலிப்படலோரமாக இருந்த பவழமல்லி செடியடியில் குட்காவை துப்பிவிட்டு, ராமசந்திரனைப் பார்த்து பொதுவாக ‘காட்டுக்கு போய் ஏற்பாடுகள பாக்கிறண்ணா. வாத்தியார்ட்ட என் நம்பர் இருக்கு. வேணப்ப கூப்பிடுங்கோ’ என்று சொல்லிவிட்டு தாங்கி தாங்கி நடந்து சென்றான்.

ராமசந்திரன் இன்னமும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் இருந்தார். ‘உங்கப்பா மட்டும் இல்லன்னா, நானும் சவண்டி கொத்தனா காடு கல்லுன்னு போயிருக்க வேண்டிதான். யூ நோ வாட் தட் மீன்’ என்றார். இப்படியே புலம்பி புலம்பி இவராகவே வீட்டை விட்டுக் கொடுத்துவிட்டு மடத்தில் போய் உட்கார்ந்து கொள்ளப்போகிறார் என்றிருந்தது சிவசுப்பிரமணியனுக்கு.

‘நல்லதுக்கும், நன்றிக்கும் எல்லைன்னு ஒண்ணு இருக்கனும் மாமா. இல்லேன்னா நடுத்தெருவிலதான் நிக்கனும் நாம’ என்றான் அவன்.

அவனுடைய பதிலை கவனிக்காத சந்தீப், ராமசந்திரனிடம் சமாதானமாக ‘ப்ளீஸ் கன்சோல் யுர்செல்ஃப் மிஸ்டர் ராமசந்திரன். எல்லாம் உங்க நல்ல மனசுதான் காரணம். பாட்டிம்மா எங்கயும் போயிடப் போறதில்ல. உங்க வீட்டிலேயே மீண்டும் பொறக்கத்தான் போறாங்க. நீங்க வேணா பாத்திட்டேயிருங்க’ என்றான்.

சிவசுப்பிரமணியத்திற்கு எரிச்சல் அதிகமானது.

‘ந்தா, ஒங்க பாட்டியும், பூட்டியும் என்ன ஒரு ஆளா மதிக்கலன்னா கூட பரவால்ல. ஆனா அந்த டாக்டரு கம்மனாட்டியோட பேச்ச மட்டும் நம்பாதீங்கடீ. செத்தாலும் அவன் ஆசுபத்திரிக்குள்ள நாமட்டும் காலெடுத்து வக்கவே மாட்டேன். அவன் டெஸ்ட் செஞ்சு எனக்கு சர்ட்டிபிகேட் கொடுத்து அதக்காட்டித்தான் நான் ப்ரூவ் பண்ணிக்கனும்னு தலயெழுத்தா எனக்கு. அதுக்கு களுத நாலு அனாதைங்கள எடுத்து வளத்திட்டு போவோம்’ என்று சாந்தலட்சுமியிடம் ஏற்கெனவே சூளுரைத்திருந்தது நினைவுக்கு வந்தது.

அந்த வீடு விஷயமாக, அவனால் ஒரு சின்னக் கல்லைக் கூட புரட்ட முடியவில்லை என்று நினைத்தால் அவமானமாக இருந்தது. ஆசுபத்திரி இடம் மாறும்போது, அவர்கள் கிள்ளிக் கொடுக்கப் போகும் அற்பதொகையை வாங்கிக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான். ஆதாரமே போனப்புறம் ஆளுங்களுக்கு அங்க ஏது இடம். ஏதோ ஒரு ரியல் எஸ்டேட்காரன் அத்தனை நிலங்களையும் கொண்டு அடுக்குமாடி வீடு கட்டிக் கொழிக்கப் போகிறான்.

நிலம் ஆசுபத்திரியுடையது என்றாலும், முப்பத்தியைந்து வருட அனுபவ பாத்தியதைக்காகவாவது நின்று கேஸ் ஆடிப் பார்த்து விடவேண்டும் என்றால் யார் கேட்கிறார்கள். ஆளுக்கேத்த விலையை அவர்களே முடிவு செய்துவிட்டார்கள். ராமசந்திரனுக்கும் சாந்தலட்சுமிக்கும் கூடுதலாக சில கனவுகளையும் உறுதியளித்திருக்கிறார்கள். என்ன நடந்தாலும் அவர்களுடைய பசப்புதலுக்கு அடிபணிந்து அந்த ஆசுபத்திரி வாசலில் நிற்கின்ற நிலை தனக்கு வந்துவிடக்கூடாது. ஆடும் வரை ஆடிப் பார்க்க வேண்டியதுதான்.

‘புள்ளய பெத்துட்டதால அவளுக்கு சித்திரவத. புள்ள பொறக்கனுமேன்னு இவளுக்கு சித்திரவத. இந்த பொம்பளங்களுக்கு நடுவே நான் பொறந்துட்டனேன்னு எனக்கு சித்ரவத….’ ராமசந்திரன் மீண்டும் ஒரு சிட்டிகையை மூக்கில் ஏற்றிக் கொண்டார்.

கழுவிவிடப்பட்ட தரையில் வழுக்கியபடி ஓடிவந்த பெருங்களத்தூர் மாமா, ‘சிவசு, சிவசு… எங்க சிவசு. கொஞ்சம் வாப்பா. சாந்தாவுக்குள்ள என்னமோ இறங்கியிருக்குப் போல. ஒரே முட்டா உதறிப்போடுதே. இதுக்கு என்னா செய்வாங்க…. ஏதோ மலையேறுதுன்னுவாங்களே…’ என்று பதறினார்.

அதற்குள் கொல்லைப்புறம் பரபரப்பு தொற்றிக்கொள்ள, எல்லோரும் போய் எட்டிப் பார்த்தார்கள். பாட்டியோடான அனுபவங்கள் ஏற்கெனவே இருந்ததால் பக்கத்து வீட்டு சாமிநாதனின் மனைவி சட்டென சுதாரித்துக் கொண்டார். பெரிய பித்தளை செம்பில் நீர் முகர்ந்து அதில் இரு கைப்பிடியளவு மஞ்சளை அள்ளிப் போட்டு கரைத்துக் கொடுக்க, சாந்தலட்சுமி அண்ணாந்தபடி கடகடவென மூச்சுவிடாமல் குடித்து வைத்தாள்.

‘சாமியருள்லாம் அப்படித்தான்பா. பாட்டிம்மா துன்னூறு கொடுக்க சொல்லோ எனக்கே சிலித்துக்கினு வரும். பாரு எப்படி துள்ளுது ஆத்தா. அம்மாம் மஞ்சத்தண்ணியயும் அப்படியே உள்ள வாங்கிக்கிட்டது பாரு சாமி. சாதாரண ஆத்துமாக்கு முடியுமா’ என்ற பாபா மீண்டும் ராமசந்திரனிடம் திரும்பி ‘அதான் காலைலேந்து ரைட்டு கண்ணு துடிச்சிட்டிருந்ததுன்னு சொன்னேனே சார்’ என்றான்.

அரைமயக்கத்தில் பெரியம்மா தோளில் சாய்ந்து கொண்டு அரற்றிக் கொண்டிருந்த சாந்தலட்சுமியை பார்க்கும்போது சிவசுப்பிரமணியத்திற்கு ஆசுவாசமாக இருந்தது. ஆத்தாவின் அருளே வந்து இறங்கிவிட்டது. அப்புறம் என்னடா புண்ணாக்கு ஆசுபத்திரியும் டெஸ்ட்டும். இது ஒண்ணு போதுமே ஊரின் வாயை மொத்தமாக அடைக்க. இனி எவனுக்கு தைரியம் வரும் அவர்களைப் பார்த்து குறைசொல்ல. சாந்தலட்சுமியைப் போல அவனுக்கும் யார் மீதாவது சற்றுநேரம் சாய்ந்து இளைப்பாறிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

தலையை உலுக்கிக் கொண்டு மீண்டும் முறுக்கிக் கொண்டு நின்றான். கேஸ் ஆடிப் பாத்துவிட வேண்டியதுதான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.