திரும்பிச் சென்ற காலத்தைத் தொடர்ந்து செல்லுதல்
ஜுஸ்ஸாவாலாவின் கண்கள் உற்றுநோக்கிக் காண்கின்றன என்பது மட்டுமல்ல, அதனினும் ஓர் இந்தியனிடம் காண்பதற்கரிய இயல்பு, பிற மனிதனின் திறமையை ஒப்புக் கொள்ளும் மனவிரிவு, அவரிடம் உண்டு. “சுதீரை நினைவுகூர்தல்,” என்ற கட்டுரையில் எஜகீலைக் காட்டிலும் குறைவாகவே அறியப்பட்ட, இன்று ஏறத்தாழ மறக்கப்பட்டுவிட்ட ஒரு நண்பரைக் குறித்து எழுதுகிறார் அவர். சுதிர் சொனால்கர் ஜுஸ்ஸாவாலாவின் சமவயதினர், ஜுஸ்ஸாவாலா போலவே அவரும் தனித்தியங்கும் பத்திரிகையாளராய் நீண்டகாலம் பணியாற்றி வந்தார். அவர் தன் ஐம்பதுகளின் ஆரம்பப் பருவத்தில் 1995ஆம் ஆண்டு காலமானார், மதுபானம் அவரை அழித்தது. சொனால்கர் குறித்து தாளவொண்ணா நுண்ணுணர்வுடன் எழுதுகிறார் ஜுஸ்ஸாவாலா. அவரது கட்டுரையில் இரட்டைச் சித்திரம் உருவாகிறது- ஆம், சொனால்கரின் உருவம் ஒன்று, ஆனால் அதனுடன் ஜுஸ்ஸாவாலா தீட்டும் சித்திரமும் தோன்றுகிறது, கண்ணாடியின்மீது நடந்து செல்லும் பூனையின் அமைதியுடன் அவரது வாக்கியங்கள் நம்மைக் கவர்ந்து செல்கின்றன.
சொனால்கர் தன் மனதில் தோன்றும் ஏதோ ஒரு எண்ணத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்பவர், நண்பன் பகைவன் என்று பாராமல் அனைவரிடமும் அதைப் பிரயோகிக்கக் கூடியவர், தொலைபேசியைக் கொண்டு, இரவு பகல் என்று நேரம் காலம் பார்க்காமல் அசந்தர்ப்பமான பொழுதுகளில் அழைத்துப் பேசுபவர். கோட்டித்தனத்தின் இயங்கியலையோ பசுக்கள் விஷயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டையோ பேசுவதற்கு உகந்த பொழுது அதிகாலை மூன்று மணியல்ல என்று அவரிடம் பேசிப் பயனில்லை. ஒரு கட்டத்துக்குப்பின், தொலைபேசியில் கத்திவிட்டுக் அறைந்து வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. சுதிர் அளவுக்கு யாரைப் பார்த்தும் எவரும் கத்தியிருக்க மாட்டார்கள், யாருடைய அழைப்புகளும் அறைந்து துண்டிக்கப்பட்டிருக்காது. ஏன் ஓரளவுக்கு நியாயமான பொழுதில் அழைத்துப் பேசுவதில்லை என்று அவரிடம் விளக்கம் கேட்கப்படும்போது, தான் தனிமையில் இருப்பதாகவும் அதனால் யாரிடமாவது பேசிக் கொண்டிருக்க வேண்டிய தேவை தனக்கு இருப்பதாகவும் காரணம் சொல்வார். பம்பாயிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன் புனே சென்றிருந்த அவர், அங்கு தன்னுடன் பேச யாருமில்லாத உணர்வில் இருந்தார்.
ஆனால் அவர் சொல்ல மறைத்த காரணம் குடிகாரர்கள் அனைவரும் அறிந்தது, வெளியே சொல்லத் துணியாதது. அதாகப்பட்டது, ஓரளவுக்கு மேல் ஒரு வாய் உள்ளே போனாலும் நாம் நேரம் காலம் மறந்து விடுகிறோம்; மதுபானத்தின் புழுக்கூடு தன்னுள் பல வண்ண ஒளிகளை உத்பவிக்கின்றது; நிலத்தைத் தகர்க்கும் பட்டாம்பூச்சிகள்; உடனேயே சொல்லியாக வேண்டிய தேவை கொண்ட எண்ணம் உதிக்கிறது, உணர்வு பிறக்கின்றது. எனக்கும் அதுபோல் இருந்திருக்கிறதா என்ன என்பது ஆண்டவனுக்குதான் தெரியும். ஆனால் அது நிராகரிப்பை ஏற்காத, முட்டுச்சந்தை ஒப்புக்கொள்ளாத தொடர்பாடலின் ஒருவழிப் பாதை. அதுதான் சுதிரின் பிரச்சினையை மேலும் மோசமாக்கியது.
நான் டெபொனைரின் பொறுப்பாசிரியராக இருந்தபோது ஒருமுறை அவர் என்னை நான் என் பெற்றோரின் வீட்டில் இருந்தபோது அழைத்தார், அவரது அழைப்பு வந்தது ஏற்றுக்கொள்ளக்கூடிய நேரம்தான், மீண்டும் பத்திரிகையில் தனக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்டார்; இதற்கு முன்னர் அவர் துணை ஆசிரியராக இருந்திருந்தார். பம்பாயில் தனக்கு ஒரு தங்குமிடம் பார்த்துக் கொள்வதாகச் சொன்னார். அதைப் பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை. எவ்வளவு மென்மையாகச் சொல்ல முடியுமோ, அவ்வளவு மென்மையாக அவரை நிராகரித்தேன். “தென் ஃபக் ஆஃப்” என்று சொல்லிவிட்டு அவர் அழைப்பைத் துண்டித்தார். எங்கள் உரையாடல் தொடர்ந்திருந்தால், அவருக்கு வேலை போட்டுக் கொடுக்க நான் ஏன் மறுக்கிறேன் என்பதைச் சொல்லியிருக்க முடியாது; நானும் சில சமயம் கொஞ்சம் அதிகமாகக் குடிக்கிறேன் என்பதையும், அண்மையில் நான் பத்திரிகையில் சேர்ததுக் கொண்டிருந்த எழுத்தாளரது குடிப்பிரச்சினை நான் பார்த்த எதையும்விடத் தீவிரமானது என்பதையும், சுதிரை எங்களோடு ஏற்றிக் கொள்வது என்பது ஓடத்தை ஒரேயடியாகக் கவிழ்த்து விடுவதாக இருக்கும் என்பதையும் சொல்ல வழியில்லை.
இந்தப் பத்திகளுக்குள் கார் என்ஜினின் மொழி வடிவம் ஒன்று மென்மையாய் உறுமிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது, ஜுஸ்ஸாவாலாவின் உரைநடை தொடர்ந்து முன்னகர்வதற்கான விசையை அது அளிக்கிறது, இதையே வில்லியம் ஹாஸ்லிட், “உந்துவிசை” என்று அழைத்தார். கட்டுரை நிறைவடையும் வாக்கியங்களில்- வித்தியாசமான ஒரு வகையில் இது, “நிஸ்ஸிம் எஜகீல் சித்திரத்துக்கான சில குறிப்புகள்”, என்ற கட்டுரையின் முடிவை நினைவுறுத்துகிறது- மீண்டும் மீண்டும் திரும்பும் சொற்கள் இழப்பின் வலியைத் தூண்டி, ஆற்றுப்படுத்தி, கௌரவத்தின் எல்லைகளுக்குள் இருத்தி வைக்கிறது:
“தனது வாழ்வின் இறுதி வாரங்களில் அவர் எதையும் சாப்பிடவில்லை என்று சொன்னார்கள்… அவரது உடல் வதைபட்டாலும் அவரது மனம் தெளிவாக இருந்தது என்று சொன்னார்கள்… தான் இறந்த மருத்துவமனைக்குத் தன் உடலை அவர் தானம் செய்து விட்டதாகச் சொன்னார்கள்”.
சொனால்கர் எழுதிய இரு கட்டுரைகளை ஜுஸ்ஸாவாலா பிரத்யேகமாய் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்றாகிய, “குடிப்பழக்கத்துக்கு முடிவு கட்டி விடுவதென்று அவர் தீர்மானித்தபின்” எழுதிய கட்டுரை, “எரவாடா மருத்துவமனையின் மனநலம் இழந்தவர்களுக்கான பகுதி”க்கு அவர் சென்று வந்ததை விவரிக்கும் கட்டுரை. மற்றொன்று, “தான் முதன்முறையாய் தந்தையானது குறித்த உணர்வுகளைப் பேசும்” கட்டுரை. இந்த இரு கட்டுரைகளும், “அவருக்குப் பின்னரும் வாழும், பிற பலவற்றையும் போல்” என்று சொல்கிறார் ஜுஸ்ஸாவாலா.
எதிர்காலத்தில் வரலாற்றாய்வாளர்கள் இந்தத் தடயங்களைப் பயன்படுத்தி இவரது கட்டுரைகளைக் கண்டெடுக்கக்கூடும், ஆனால் இன்று அதற்கான சாத்தியங்கள் இல்லை. இலக்கிய மறதி கடந்த காலத்தை நினைவுகூர இயலாதவர்களாய் நம்மை மாற்றிவிட்டிருக்கிறது என்பதன் இன்னுமொரு நோய்க்கூறுதான் இலக்கியத் திருவிழாக்கள் கணிசமான எண்ணிக்கையில் முளைப்பதுவும், இது வேறொரு வகை அல்ஜீமர்’ஸ். புத்தி சார்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதாய் இன்று நம்புபவர்கள் அனைவரும் இதே டிமென்ஷியாவால்தான் இறுதியில் விழுங்கப்படப் போகின்றனர். அவர்கள் நினைப்பதைவிட விரைவாகவே இது நடக்கும், அவர்களின் துரிதபயண காலத்திலேயே இது நடந்து முடிந்துவிடும்.
எனவேதான் Maps for a Mortal Moon என்ற புத்தகம் இருப்பதே அவ்வளவு பெரிய அதிசயமாக இருக்கிறது. இது உள்ளதெனில் அதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஜுஸ்ஸாவாலாவே முதல் காரணம், தான் எழுதிய அனைத்தையும் மிகவும் கவனமாக பாதுகாத்து வைத்திருக்கிறார் (அவரது ஆவணங்களில் தனது சமகாலத்தவர்களின் எழுத்தையும் பாதுகாத்து வைத்திருக்கிறார், அவர்களது கடிதங்கள், கவிதைகள், மதிப்புரைகள், நேர்முகங்கள்; அவை வெளிவந்த பத்திரிகைகளின் சிறப்பிதழ்கள், இவை நம் இலக்கியத்தில் அவருக்கென்று ஒரு தனியிடம் அளிக்கின்றன). நூலகம் ஒன்று இல்லாத நிலையில்,- ஆம், இங்கு நூலகங்கள் என்று சொல்லப்படுபவை புழுதி படிந்துகொண்டிருக்கும் புத்தகங்கள் நிறைந்த இருட்டு அறைகளும் அவற்றுக்கு வெளியே தொங்கி அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பூட்டுகளும்தான்,- அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஜுஸ்ஸாவாலா எழுதியவை வேறெந்த வகையிலும் சேகரிக்க முடியாதவையாய் போயிருக்கும். நூல் அட்டவணைகள் இல்லாத நிலையில், துவங்கவும்கூட எதுவும் இருந்திருக்காது. இதே காரணங்களால்தான் டாம் மொரேஸ் எழுதி தொகுக்கப்படாத உரைநடை காணாமல் போய் விட்டிருக்கிறது, இதேதான் ஜி.வி. தேசானி எழுத்தின் கதியும் (1,70,000 சொற்கள் என்று ஒரு கணக்கு), இன்னும் என்னவெல்லாம் இழந்திருக்கிறோம் என்பது யாருக்குத் தெரியும்?
ஆனால் இதில் உள்ள முரண்நகை இதுதான்: புத்தகங்களின் அட்டவணைப் பட்டியல்கள் காணக்கிடைக்கையில் இழப்புணர்வு இன்னும் அதிகரிக்கிறது. 1780க்கும் 1857க்கும் இடைப்பட்ட காலத்தில் 177 ஆங்கில செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் வங்காளத்தில் மட்டும் பதிப்பிக்கப்பட்டன. அவற்றுள் சிலவற்றின் பெயர்களும் உள்ளடக்க விவரணைகளும் மட்டுமே எஞ்சி நிற்கின்றன; பிறவற்றின் சில பிரதிகள் உள்ளன, முழு கோப்புகளாகவும் அவை கிடைக்கக்கூடும், ஆனால் யாரும் அவற்றை எடுத்துப் பார்த்ததில்லை. துவக்க கால பத்திரிகைகளின் பல பதிப்பாசிரியர்களும் எழுத்தாளர்களும் பிரிட்டிஷார்களாக இருந்திருக்கின்றனர், ஆனால் பலரும் இந்தியர்களே- காலனியாதிக்க மொழியில் எழுதிய பெருமைக்குரிய நம் முதல் எழுத்தாளர்கள். ராஜ் காலகட்டத்தில் அச்சில் நிகழ்ந்த பெருவெடிப்பை இத்துடன் கணக்கில் எடுத்துக் கொண்டால், மீட்கப்பட வேண்டியவற்றின் எண்ணிக்கை திடுக்கிட வைப்பதாக இருக்கிறது. இதற்கு ஒரு எளிய கல்லறை அமைப்போம், “அநாமதேய இந்திய எழுத்தாளனின் கல்லறை”; அது நமக்கு நினைவில்லமாகவும் இருக்கும்.
இந்தப் புத்தகம் பதிப்பிக்கப்பட்டதன் இரண்டாம் காரணம், ஜெர்ரி பிண்டோ, தெளிவான சிந்தனையும் வலுவான உடலும் கொண்ட பதிப்பாசிரியர் அவர். பிண்டோ இந்த நூலுக்கு மனதைத் தொடும் முன்னுரையும் எழுதிக் கொடுத்திருக்கிறார். தான் ஜுஸ்ஸாவாலாவை முதன்முதல் சந்தித்தது குறித்து இதோ எழுதுகிறார், “இந்தியாவின் பெண்களுக்கான முதல் பத்திரிகை” அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது, 1980களின் பிந்தைய ஆண்டுகளில் அதன் இலக்கியப் பகுதியின் பொறுப்பாசிரியராக ஜுஸ்ஸாவாலா இருந்தார்.
“ஆண்களின் ஸ்டைல் பற்றி ஒரு பத்தி எழுதிக் கொடுக்கும்படி கேட்டிருந்தார்கள், அதன் முதல் பகுதியைக் கொடுப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். என் தகுதி என்ன? எதுவுமில்லை. என்னை ஏன் கேட்டார்கள்? தெரியவில்லை. ப்ரீ பிரஸ் ஜர்னலில் ஊர் பேர் தெரியாமல் இருக்கும் நிலையிலிருந்து விடுபட ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்பது மட்டும் தான் எனக்குத் தெரிந்தது- அப்போது அந்தப் பத்திரிகையில் எனக்கு இடம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை- அதற்கு இந்தப் பத்தி ஒரு பாதையாக இருக்கும் என்று நினைத்தேன். நான் என் முதல் பத்தியை எடுத்துக் கொண்டு போனேன் – மின்அஞ்சல்களுக்கு முற்பட்ட காலம், எனவே ஒரு வரைவு வடிவம் எழுதி எதற்கும் இருக்கட்டும் என்று பாதுகாப்புக்கு கார்பன் காப்பி வைத்து தட்டச்சு செய்து கொண்டு போவது வழக்கம், அதே ஊரில் வசிப்பவராக இருந்தால், எந்தப் பத்திரிகை அல்லது செய்தித்தாளில் வர வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அங்கே எடுத்துச் சென்று கொடுப்பதுதான் வழக்கம். வடக்கு பம்பாயில் அரசால் நிர்வகிக்கப்பட்ட ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலின் பேஸ்மெண்ட்டில் டெபொனர் அலுவலகம் இருந்தது.”
ஸ்மார்ட்போன்கள் ந்யூ யார்க் பொது நூலகத்துக்கு மாற்றாக முடியாது. அதனோடு ஒப்பிடத்தக்க எந்த வசதியும் இல்லாதபோதும், Maps for a Mortal Moon நூலின் நூல்விவரப்பட்டியலில் ஆச்சரியப்படும் வகையில் சில தகவல்கள் விடுபட்டுப் போயிருக்கின்றன, இதை பதிப்பாசிரியரும் குறிப்பிட்டிருக்கிறார். உதாரணத்துக்கு, டெபொனைர் இதழில் முதலில் வெளிவந்த இரு கட்டுரைகளுக்கான தேதிகள் விடுபட்டிருக்கின்றன (அவற்றுள் ஒன்று, பூபன் கக்கர் குறித்த மிக முக்கியமான கட்டுரை), இதற்கு ஒரு விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது. எப்போதும் திருத்தமாக இருக்கும் ஜுஸ்ஸாவாலா, தன் கோப்புப் பிரதிகளில் அவை வெளிவந்த தேதிகளைக் குறித்து வைத்துக் கொள்ள மறந்துவிட்டார்; தேடிக் கண்டுபிடிக்கும் வகையில் இந்தியாவில் எந்த நூலகத்திலும் பத்திரிகையின் அனைத்து பிரதிகளும் இல்லை. ப்ளேபாய் தடை செய்யப்பட்ட தேசத்தில் எந்தப் பத்திரிகையும் டெபொனைருக்கு சந்தா கட்டியிருக்க வாய்ப்பில்லை என்பதாகவும் இருக்கலாம்; ஆனால் ப்ளேபாய்தான் 1980களிலும் 1990களிலும் அருமையான எழுத்தாளர்கள் சிலரைப் பதிப்பித்தது. நார்மன் மெய்லர், குர்த் வோனகட், மார்கரட் அட்வுட், காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் என்று அனைவரும் ப்ளேபாயில் எழுதியிருக்கின்றனர்; அவர்களது படைப்புகள் அதன் எந்த இதழில் வந்தது எனபதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் என்பதை நினைத்தே பார்க்க முடியாது.
Picador Book of Modern Indian Literature (2001) புத்தகத்தில், ஜுஸ்ஸாவாலாவின் கட்டுரைகளை, “ஓர் இந்தியனால் எழுதப்பட்டவற்றுள் மிகச் சிறந்தவை” என்று குறிப்பிடுகிறார் அமித் சௌத்ரி, கவனத்தை ஈர்த்திருக்கவோ புரிந்துகொள்ளக் கூடியதாகவோ உள்ள குறிப்பல்ல இது, உன் தலையில், நிச்சயம் சௌத்ரியிடம் இருந்தது போல், இந்திய உரைநடையின் வரலாறு இருந்திருந்தால் ஒழிய. நம் தேசத்தில் நூற்றுக்கணக்கான ஆங்கில இலக்கியத் துறைகள் இருப்பினும், இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றை விவரிக்கும் ஒரு புத்தகம்கூட நம்மிடம் இல்லை. ராம்மோகன் ராய், ஹென்றி திரோஸியோ, கைலாஷ் சந்தர் தத், ஷோஷீ சந்தர் தத், பங்கிம் சந்திர சத்தோபாத்யாயா, பெஹ்ராம்ஜி மலபாரி, மற்றும் அவர்களுக்குப் பின்னர் வந்த இன்னும் பலர், டிரைடனின் சொற்களைப் பயன்படுத்துவதானால், அவர்களிடையே பிணைப்பை உருவாக்கும் “உரைநடையின் பிறிதொரு ஒத்திசைவு இல்லாமல்” ஆங்காங்கே சிதறிக் கிடந்த தனிமனிதர்களாக இருந்தார்கள் என்று சொல்வது போன்றது இது,
வரலாற்றுச் சூழமைவு இல்லாத இந்த நிலையில், “நேரடி வாரிசுகள் மற்றும் குடும்பங்கள்” என்று டிரைடன் அழைத்ததன் பொருளில், ஜுஸ்ஸாவாலாவின் இடத்தை நிறுவுவது கடினமாக இருக்கிறது, இதுவரை எழுதிய வேறெந்த இந்திய எழுத்தாளரையும்விட பன்முகங்கள் கொண்ட உரைநடை அது. மரபு சரியாக வரையறுக்கப்படவில்லை, நாம் இது பற்றி பேசவே துவங்கவில்லை, ஆனால் ஜுஸ்ஸாவாலாவேதான் சொல்லியாக வேண்டும், “ஒரிகாமி தாமரையின் உள்மடிப்புகள்” என்ற கட்டுரையில் தான் மதிக்கும் பத்திரிகையாளர்கள் பற்றி கூறுவதுபோல்- “ஷாம் லால், டோம் மொரேஸ், திரேன் பகத், சுதிர் சொனால்கர், இவான் ஃபேரா, பி. சாய்நாத், அறுவரை மட்டும் சொல்ல வேண்டுமெனில்”- இவர்களது “எழுத்து ஒரு கலைப் படைப்பாக உருவம் பெறக்கூடியது”. ஆங்கில மொழி இந்திய இலக்கியத்தின் துவக்கங்களும் இந்திய பத்திரிகைத்துறையின் துவக்கங்களும் பிரிக்கமுடியாதபடி ஒன்றாய்ப் பிணைக்கப்பட்டவை, திரோஸியோவின் எழுத்தில் இரண்டுக்கும் பொது மூதாதையரைப் பார்க்கிறோம். நம் முதல் கவிஞர், அவர் நம் முதல் சில பத்திரிகையாளர்களில் ஒருவர், இந்திய கெஸட் இதழில் எழுதியவர், டிசம்பர் 1831ல் மறையும்போது ஈஸ்ட் இந்தியனின் பொறுப்பாசிரியர்.
ஜூஸ்ஸாவாலாவின் கட்டுரைகள் நாளேடுகளின் நீண்ட பக்கங்களிலும் வாராந்தரிகளிலும், மாலைத்தாள்களிலும் வழுவழுப்பான இதழ்களிலும், விமான சஞ்சிகைகளிலும் சமூக மலர்களிலும் வந்திருக்கின்றன, இலக்கிய உரைநடையுடன் இவை எதையும் நாம் நினைத்துப் பார்க்க மாட்டோம். சௌதுரி தேர்ந்தெடுத்த கட்டுரை (இந்த நூலிலும் உள்ளது), பிலிம்ஃபேரில் வந்தது. வேறொரு கட்டுரை, எழுத்துச் செயல் கலவியின் ஒப்பீடாகும் மிகக் குறுகிய, ‘The Joy of Sensuous Writing,’ (“நான் புகட்டிய கடிதத்துடன் தபால் உறை புஷ்டியாய் இருந்தது, நான் பயன்படுத்திக் கொண்டிருந்த பேனாவின் கூர்முனை அதனுள் இறங்கி எழுத்துகளை உருவாக்கிக் கொண்டிருந்தது…”), சிறந்த ரசனையுடன் முலைகளுக்கும் புட்டங்களுக்குமான, அலகாபாத் பத்திரிகை ஃபான்டசிக்காக எழுதப்பட்டது, அதுவும் குறுகிய காலமே நீடித்தது. ஆனால் பிறர் பார்வையில் எவ்வளவு குறுகிய வாழ்வு கொண்டதாக ஒவ்வொரு கட்டுரையும் இருந்திருந்தாலும், அது பத்தி எழுத்தாக தொடர்ந்து எழுதப்பட்டிருந்தாலும் அவ்வப்போது தனித்தனியாய் எழுதப்பட்டிருந்தாலும், அவரது எழுத்து, அத்தன்மையை முதலில் கண்டறிந்த சௌதுரி சொன்னது போல், நிரந்தரத்தன்மையின் இயல்பு இல்லாமல் இருந்தது மிக அபூர்வம். அசாதாரண திறமைகள் கொண்ட ஆண்களும் பெண்களும் எப்போது தோன்றுவார்கள் என்பதைச் சொல்ல முடியாது, பண்டை நாட்களின் தீர்க்கதரிசிகளைப் போன்றவர்கள் அவர்கள், சரியான ஆக்சிமொரோன் ஒன்றை உருவாக்குவதானாலும், நிரந்தர அநித்தியங்கள், மிகச்சாதாரண நிகழ்வுகள்.
கடந்து சென்றுவிட்ட காலத்துக்கான துயரின் வலி கலந்த ஏக்கமல்ல என்னை இவ்வாறு சொல்லச் செய்கிறது, அதைக் காட்டிலும் திரும்பிச் சென்ற காலத்தைத் தொடர்ந்து செல்ல விரும்புகிறேன்- ஏனெனில் இன்று, மட்டமான ரசனைக்குத் தீனிபோடும் புனைவெழுத்தாளர் சேதன் பகத், பொதுவெளியின் புத்திஜீவியாக அவதரித்திருக்கும் கலாசாரத்தில், ஒரு சில வேறுபாடுகளை நினைவில் கொள்வது அவசியமாகிறது. “கதவுகளுக்கு வெளியே இருக்கும் பிலிஸ்தினியர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்,” என்று எழுதினார் ட்வைட் மக்டொனால்ட். “உயர்சிந்தனையின் கோபுரங்களைக் கைப்பற்றும்போதுதான் அவர்கள் ஆபத்தானவர்கள் ஆகின்றனர்”. உயர்சிந்தனையின் கோபுரமாய் எப்போதும் இருந்திருக்க முடியாது என்றாலும், எந்த சண்டே டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஜுஸ்ஸாவாலா 1990களில் எழுதினாரோ, அங்கு பகத்தின் பேய்க்குரல் இப்போது சுற்றி வருகிறது.
(தொடரும்)
நன்றி – Caravan
One comment