(அடில் ஜுஸ்ஸாவாலாவின் கட்டுரைத் தொகுப்பான Maps for a Mortal Moon என்ற நூலை முன்வைத்து அர்விந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா காரவன் பத்திரிகையில் எழுதிய Being Here என்ற கட்டுரையின் தமிழாக்கம்)
பம்பாய் பல்கலைக்கழக மாணவனாய் புகுபதிவு செய்துகொள்ள நான் 1966ஆம் ஆண்டின் கோடைப்பருவத்தில் அலகாபாத்திலிருந்து பம்பாய் வந்தபோது எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் அந்த ஊரில் இல்லை. என் பெற்றோர்கள் முலுந்த் பகுதியில் எனக்கு இடம் பார்த்திருந்தார்கள், ஆசிரமம் போன்ற அதை ஒரு பெண் கவனித்துக் கொண்டிருந்தார், அவரை நாங்கள் மாஜி என்று அழைத்தோம். அவரது பெயர் பிரிஜ்மோகினி சரின். என் பெற்றோர் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களுக்கு மாஜி ஒரு குருவாய் இருந்தார். மெலிந்த, கீச்சுக் குரல் கொண்ட, நாற்பதுகளின் மத்திய பருவத்தில் இருந்த அவர் டெர்ரிகாட்டில் தைக்கப்பட்ட வெளிர் வண்ண மேக்சி அணிந்திருப்பார், ஆசிரமத்தை இரும்புக் கரம் கொண்டு நிர்வகித்தார். அவர் அருகில் வரும்போது, பக்கத்தில் இருக்கும் தூணுக்குப் பின்னால் பதுங்கிக் கொள்ளத் தோன்றும். அவருக்கு மணமாகியிருந்தது. அவரது கணவர், பப்பாஜி, டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆசிரமத்தில் அவருக்கென்று தனியாக ஒரு அறை இருந்தது.
அந்த இடத்தில் நிரந்தரமாக இருந்த மற்றவர்களில் பணக்கார மார்வாரி விதவைகள் இருவரும் அடக்கம், சர்ச்கேட்டில் ரிட்ஸ் ஹோட்டலுக்குப் பின்புறம் இருந்த ஆர்ட் டிகோ கட்டிடங்களில் ஒன்றின் உரிமையாளர்கள் இவர்கள் பொழுதெல்லாம் சமையலறையில் இருந்தனர், பாத்திரம் தேய்த்துக் கொடுத்து சில்லறை வேலைகளைச் செய்யும் பணிப்பெண்கள் என்று எளிதாக அவர்களை நினைத்துவிட முடியும். ஆசிரமத்துக்கு விருந்தினர்கள் அவ்வப்போது வந்து சிறிது காலம் தங்கிவிட்டுப் போவார்கள், மாஜி ஆசிரமத்தைச் சுற்றிக் காட்டும்போது, விதவைகளைச் சுட்டிக் காட்டி, வைரங்களை விட்டுவிட்டு ஆத்ம ஞானத்தைத் தேடிச் செல்ல வந்திருக்கின்றனர் என்று அவர்களிடம் பாராட்டிச் சொல்வார். முடிந்த அளவுக்கு நான் ஆசிரமத்தைவிட்டு வெளியே இருந்தேன்; எனக்கு அப்போது பத்தொன்பது வயது.
யாரோ, யாரென்று சரியாக நினைவில்லை, கோரல் சாட்டர்ஜி பற்றி என்னிடம் சொல்லியிருந்தார்கள். அலகாபாத்தில் ம்யூர் ரோட்டைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற காலப்களின் குடும்பத்தவர் அவர், சமகால புனைவு மற்றும் அபுனைவு நூல்களைச் சுருக்கிப் பதிப்பித்த இம்ப்ரிண்ட் என்ற இலக்கிய பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு நாள் கொலாபாவில் இருந்த அவரது அலுவலகத்துக்குப் போனேன். உயரமாக, கண்ணைக் கவரும் தோற்றம் கொண்டவராக இருந்த அவர், என் கண்களுக்கு இன்னும் உயரமாகவும் வசீகரமாகவும் தெரிந்தார்- அவர் இம்ப்ரிண்ட்டில் வேலை பார்க்கிறார் என்பதுதான் காரணம். தன்னைப் பார்க்க வந்திருக்கும் இளைஞனை என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை, எனவே சீக்கிரமாகவே தனது சக பதிப்பாசிரியர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவர்களில் ஒருவர், குர்ராத்துலைன் ஹைதர், மற்றவர் நிஸ்ஸிம் எஜகீல். நான் கவிதை எழுதுவேன் என்று சொன்னதும், எஜகீல் என்னை நட்புடன் நோக்கி, இன்னும் சில நாட்களில் தான் வோர்லியில் அளிக்கவிருந்த வாசிப்பு நிகழ்வுக்கு என்னை அழைத்தார். வாசிப்பு பில்லு போச்கானாவாலாவின் வீட்டில் நடக்கும், அங்கு செல்வது எப்படி என்று வழி சொல்லவும் செய்தார். அங்கு போனபின்தான் தெரிந்தது, போச்கானாவாலா ஒரு சிற்பி. வீட்டின் உள்ளும், வெளியே கவிதை வாசிப்பு நிகழவிருந்த புல்வெளியிலும், அவரது நவீனத்துவ ஆக்கங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. முதலில் வந்தவர்களில் ஒருவனாக இருந்ததால், ஒவ்வொருவராக வந்து சேர்ந்த பார்வையாளர்களை அவதானிக்க எனக்கு எக்கச்சக்க நேரம் இருந்தது. வந்த ஒவ்வொருவருக்கும் அங்கிருந்த அனைவரையும் தெரிந்திருப்பது போலிருந்தது. கோரல் அங்கு வருவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அவர் வரவில்லை.
அன்று மாலை, ஜுஸ்ஸாவாலாவின் கவிதைகளை வாசித்தார் எஜகீல். ஜுஸ்ஸாவாலாவின் முதல் நூலான Land’s End (1962)ல் இருந்து வாசித்தார், அதை ரைட்டர்ஸ் வர்க்ஷாப் பதிப்பித்திருந்தனர். அவற்றுள் என்மீது தாக்கம் ஏற்படுத்திய கவிதைகளுள் ஒன்று பலசரக்குப் பட்டியல் போல் இருந்தது. “பற்பசை/ பற்பொடி/ பீட்ரூட்கள்/ ஹேர் சாஃப்டனர்கள்…” எஜகீல் புகழ் பெற்றவராக இருந்ததால் அவரை முன்னரே அறிந்திருந்தேன், ஆனால் ஜுஸ்ஸாவாலாவைப் பற்றி கேள்விப்பட்டதில்லை- அவர் அப்போது இங்கிலாந்தில் வசித்துக் கொண்டிருந்தார். அவர் என்னைவிட சில ஆண்டுகளே பெரியவர், ஆனால் வடிவ நேர்த்தி கொண்ட அவரது கவிதைகளும், பலசரக்குப் பட்டியலையும் கவிதையாக்க அவரால் முடியும் என்பதும், நான் சாதிக்கக்கூடிய எதையும்விட பெருந்தொலைவில் உள்ளது போலிருந்தது. எனக்கு அவரும் எஜகீலும் உச்சி தொட முடியாத சிகரங்கள் போலிருந்தனர், தொலைவில் ஒளிரும் சிகரங்கள். போச்கானாவாலா வீடும் புல்வெளியும் ஒளியில் பிரகாசித்தன.
அடில் ஜுஸ்ஸாவாலாவின் Trying to Say Goodbye (2012) என்ற புத்தகத்தில் போச்கானாவாலாவுக்கு ஒரு புகழுரை இருக்கிறது. “மெட்டீரியல்ஸ்” என்ற அந்தக் கவிதைக்கு ஐந்து பகுதிகள், சிற்பிகள் பயன்படுத்தும் இடுபொருட்கள்தான் அதன் ஒவ்வொரு பகுதியின் தலைப்பு: களிமண், துணி, மரம், இரும்பு, பளிங்கு. “களிமண்” என்ற பகுதியில் உள்ள இரு வரிகள், ஜுஸ்ஸாவாலா எழுதிய அனைத்துக்குமான முடிவுரை போலிருக்கும்: “முழுமை நிலையில், கலை/ உடைந்து போனால், மனிதன்”, படைப்பூக்க ஜீவன், கலை, அதுதான் மானுட களிமண்ணுக்கு முழுமையளிக்கிறது. ஆனால், அந்த முழுமை பாதுகாப்பற்றது. பல காரணங்களில் எதுவொன்றும் அதைச் சேதப்படுத்திவிட முடியும், நம்மை உடைத்து நாம் முன்னர் இருந்த துகள் நிலைக்கே கொண்டு போய்விடும். ஜுஸ்ஸாவாலா, பாதுகாப்பு இல்லாதவற்றின் கவிஞர்.
ஐம்பது ஆண்டுகளாக ஜுஸ்ஸாவாலா எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வகைக் கட்டுரைகளைக் கொண்ட தொகுதியாய் இப்போது வெளிவந்திருக்கும் Maps for a Mortal Moon, என்ற நூல்தான் அவரது முதல் தொகுப்பு. ‘Notes Towards a Portrait of Nissim Ezekiel’ என்ற கட்டுரையைப் படிக்கும்போது எனக்கு அந்த இரு வரிகள்தான் நினைவுக்கு வந்தன. ஜுஸ்ஸாவாலா, எதிர்காலத்தில் எஜகீலின் வாழ்கையை எழுதப் போகிறவரான ஆர். ராஜ் ராவ் மற்றும் நாவலாசிரியர் சைரஸ் மிஸ்த்ரி, மூவரும் பந்த்ராவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று எஜகீலைச் சந்தித்ததை விவரிக்கும் கட்டுரை அது. அல்ஜீமரால் பிணிக்கப்பட்டிருந்த எஜகீல் அப்போது அங்கு தங்கியிருந்தார். கட்டுரை இப்படி துவங்குகிறது:
வீடு: சாம்பல். பின்னிருக்கும் மரங்கள், மருங்கே: அடர்பச்சை, எலுமிச்சை மஞ்சள், வான்டைக் பழுப்பு. கதவுக்கு அழைத்துச் செல்லும் புற்கள்: புதர் மண்டிய பசிய இலைகள், இலைகளின் மறுபுறம் மைக்கோடுகள்.
கதவு: நீலமும்-பழுப்பும். தப்பான கதவு. பக்கவாட்டு வழியில் உள்ளே அழைக்கப்படுகிறோம். வாசலில் அழிக்கம்பி: துருப்பிடித்த பழுப்பு நிறக் கதவில் பூட்டு.
செய்தித்தாள் ஒன்றின் ஞாயிறு மலருக்கு எழுதப்பட்ட கட்டுரை இது, ஆனாலும் இப்போதே நமக்குத் தெரிகிறது, இது பத்திரிகை நிருபரின் விவரணை அல்ல, என்று. மாறாய், ஒரு வீட்டின் சித்திரத்தை உள்ளவாறே அளிக்கிறது, நாம் எதிர்பார்த்திருக்கக்கூடிய வகையில், ஜுஸ்ஸாவாலா ஓர் ஓவியத்தைத் தருகிறார், கொஞ்சம் அப்ஸ்ட்ராக்ட்டான ஓவியம்- அதன் வண்ணங்கள், “அடர்பச்சை, மஞ்சள், வான்டைக் பழுப்பு.”. எஜகீல் குறித்து அவர் அளிக்கும் சித்திரம், அந்த இடத்துக்கு நாம் வரும்போது, அதே பாணியில், விவரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். அதிலும்கூட விவரிக்கப்படும் விஷயங்கள் பட்டியலிடப்படுகின்றன, அவற்றின் வண்ணங்கள் ஒவ்வொன்றாய் குறிப்பிட்டுச் சொல்லப்படுகின்றன:
“திடீரென்று வந்து விடுகிறார், என் எதிரே, ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார், மடித்து தன் கைகளை மடியில் கிடத்தி இருக்கிறார். முடி: ஒட்ட வெட்டப்பட்டிருக்கிறது, வெளிர்பழுப்பு. கண்கள்: பழுப்பு வண்ணம், கண்ணாடி அணிந்திருக்கிறார். புன்னகை: மென்மை; பெருநகையெனில்: கருந்துளை பொத்தல். சட்டை: நீலம் கலந்த சாம்பல், தப்பான கதவைப் போல்.”
இது, பிரான்சிஸ் பேக்கன் வரைந்த ஓவியமொன்றின் சுருக்கமான விவரணையாக இருக்கக்கூடும். கட்டுரையில் பின்னர், எஜகீல், “தன்னைச் சித்திரம் வரைய மீண்டும் நாற்காலிக்கு வந்தமர்கிறார்”, ஆனால் உடலளவில் இங்கிருந்தாலும், சித்தரிக்கப்படுபவர் எந்த விதத்திலும் இந்தக் காட்சிக்குள் இல்லை. தன்னைப் பார்க்க வந்திருப்பவர்களை அவரால் காண இயலும், ஆனால் அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை. “நீங்கள் எல்லாரும் ஓரே இடத்திலிருந்து வருகிறீர்களா?” என்று கேட்கிறார். அதன்பின், “என்னோடு இருக்கத்தான் வந்தீர்களா?” என்று கேட்கிறார்.
அல்ஜீமரால் பீடிக்கப்பட்ட எஜகீல், அவரைப் பார்க்க வந்திருந்தவர்கள் அறிந்த பழைய எஜகீல் இல்லை என்றால், வந்திருப்பவர்களும் முதற்பார்வையில் தரும் தோற்றத்துக்கு உரியவர்கள் அல்ல. அவர்கள் ஒரு நகைச்சுவை நாடகத்தில் பங்கேற்பவர்களாக இருக்கக்கூடுமோ?
“இதற்கு இடைப்பட்ட பொழுதில், என் இடது பாதம் அரிக்கத் துவங்குகிறது. நான் அதை சாந்தப்படுத்துகிறேன், ஆனால் பாதத்திலிருந்து பின்னிழுத்துக் கொள்ளும்பொழுது என் முழங்கை சைரஸின் விலாவில் இடிக்கிறது. சைரஸ் தீனமாகக் கூவுகிறார், அனிச்சைச் செயலாக அவரது இடது முழங்கால் மேலெழுகிறது. அது ராஜின் முகத்தைத் தாக்கச் சென்று மிக நெருங்கித் தவறுகிறது- சற்றேறக்குறைய ஒரு கணம் முன்னர்தான், தன் காலணியின் லேஸ்களை முடிச்சிடக் குனிய முன்வந்திருக்கிறான் ராஜ். நான் பெருமூச்செறிகிறேன். கணிக்க முடியாத மதியப் பொழுதுகளில் ஒன்று போலிருக்கப் போகிறது இதுவும் என்று நினைத்துக் கொள்கிறேன். நிஸ்ஸிமைச் சித்தரிக்க முனைந்த திட்டம், த்ரீ ஸ்டூஜஸின் வருகையாய் மாறப் போகிறது.”
மானுடச் சிதைவின் முன்னிற்கும்போது, ஒரு எழுத்தாளன் என்ன செய்ய முடியும், எழுத்தாளன் செய்யக்கூடியதை மட்டும்தான் செய்ய முடியும். அவன் கலையின் முழுமையை அவ்விடம் கொணர்கிறான். இம்முறை, இது கட்டுரைக் கலை, ஆனால் பிற கலைகளின் வெளிச்சம் மின்னி மறைகிறது – ஓவியம் (வான் டைக் பழுப்பு), நகைச்சுவை (த்ரீ ஸ்டூஜஸ்)
மும்முறை கரைந்து விட்டது காகம்
ஜன்னலில், அதன் சினந்த கண்கள்
என் மீது குத்திட்டிருக்கின்றன…
நிகழ்வுகள் பலவற்றின் சாமானியத்தன்மை.
இதனினும் சிலந்திகளின் துணை
விரும்பத்தக்கது.
எது இந்தக் கட்டுரையை மனதைத் தொடும் உருக்கம் கொண்டதாகச் செய்கிறது என்றால், ஒரு முறைகூட அவர்கள் வந்திருக்கும் வீடு நர்சிங் ஹோம் எனபதை ஜுஸ்ஸாவாலா குறிப்பிடுவதில்லை, அவர்கள் காண வந்திருக்கும் நபருக்கு அல்ஜீமர் என்பதையும் சொல்வதில்லை. இதைச் சொல்லாமல் விட்டு, நம் அனைவருக்கும் பொதுவான மானுட முடிவை, நம் அனைவருக்கும் பொதுவான மானுடத்தைத் தொடுகிறார் ஜுஸ்ஸாவாலா.
எல்லாம் போகட்டும், சொல்வதற்கு என்ன இருக்கிறது? நாம் முதியவர்களையும் நோயுற்றவர்களையும் காணச் செல்கிறோம்; நாமும்தான் முதுமை எய்துகிறோம். துயரத்தைப் பேசுவதானால், அதற்கு இணையாய் நகைச்சுவைத் தருணங்களே போதும். “அத்தனை பீதியையும் உருமாற்றும் உல்லாசம்,” என்று அழைத்தார் டபிள்யூ பி யேட்ஸ். ஆனால் இது யேட்ஸ் அல்ல, ஜுஸ்ஸாவாலா- கட்டுரையின் முடிவில், வருகை புரிந்தவர்கள் கண்ணீர் மல்க வெளியேறுகின்றனர், இறுதிச் சொற்கள் ஒரு பத்தியாகின்றன: “மை கரைந்து வழிய துவங்குகிறது, கட்டிடங்கள் இடிந்து விழத் துவங்குகின்றன”
ஜுஸ்ஸாவாலாவின் பத்திகள், அவற்றில் மிகக் குறுகியவையும்கூட, விரைவு வாசிப்பில் கடந்து செல்லக்கூடாதவை.
(தொடரும்)
நன்றி – The Caravan
ஒளிப்பட உதவி – The Caravan, A Poet’s Introduction to the works of Adil Jussawalla
2 comments