எஞ்சிய சாம்பலிலிருந்து…

ஸ்ரீதர் நாராயணன்

bookashes

ஒரு சொல்லை மட்டும்
பிரித்தெடுத்து கொண்டு
எங்கே போகிறாய்?

எழுதியது மொத்தமும் உனக்குத்தான்.
எல்லாவற்றையும் எடுத்து சென்று
எரிதழலில் இட்டுவிடு.

எழுத்தை சூழும் நெருப்பு
தின்று தீர்க்கட்டும்
உன்னையும் என்னையும்!

மாதொருபாகன் நூலுக்கான எதிர்ப்பை தொடர்ந்து நடக்கும் சர்ச்சையை ஒட்டி நிறைய அலசல்களும் கருத்து பரிமாற்றங்களையும் கவனிக்கிறோம். அழிப்பதற்காக இட்ட நெருப்பே அந்த எழுத்தை பெரும் வீச்சோடு பரப்பிச் செல்கிறது. எஞ்சிய சாம்பலிலிருந்து சில கேள்விகளும் அதற்கான விளக்கங்களையும் இப்படி தொகுத்து வைத்துக் கொள்ளலாம்.

இலக்கியம் என்பதற்கான வரையறை என்ன? இன்றைய புனைவுகள் நாளைய கலாச்சார, சமூக ஆவணமாக பேசப்படும் என்றெல்லாம் சொல்கிறார்கள். அத்தகைய படைப்புகளுக்கு கட்டுபாடுகள் தேவையில்லையா?

கணிதத்தில் செட் தியரியில் இப்படி ஒரு கோட்பாடு உண்டு.. A U A(compliment) = ∪. அதாவது ஒவ்வொரு கணத்திற்கும் (Set) அதற்கு மாறான அதை நிறைசெய்யும் காம்ப்ளிமெண்ட் கணம் ஒன்று உண்டு என்கிறது. நாம், ஓரிடத்திற்கான எல்லைகளை வகுக்கும்போதே அந்த எல்லைக்குட்படாத மாற்றுவெளி ஒன்று வெளியே உருவாகிவிடுகிறது. இரண்டும் சேர்ந்துதான் முழுமையை அடைய முடியும். நாம் உருவாக்கும் எல்லை எவ்வளவுக்கெவ்வளவு சுருங்கியிருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பெரிய வெளி, நம் எல்லைக்களுக்கு அப்பால் இருக்கிறது. நம் எல்லைக்குட்பட்டிருப்பது நமது இலக்கியம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். உண்மையில் இலக்கியம் என்பது எல்லையில்லா பிரபஞ்சம் போல, காலத்தின் வழியே, குகைசித்திரங்கள், நாட்டார் கதைகள், நீதி நூல்கள், தொன்மங்கள், புனைவுகள், செய்யுள்கள், பாடல்கள், நவீனங்கள் என்று பலவகைகளில் பெருகிக் கொண்டேதான் போகிறது.

இதில் புனைவுக்கும் சமூக யதார்த்தத்துக்கும் உள்ள உறவு என்ன? புனைவு எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையே ஒரு ‘கண்ணுக்கு புலப்படாத ஒப்பந்தம்’ (Invisible Contract) எப்போதும் இருக்கிறது. மனித யத்தனங்களுக்கான இடைவெளியை எப்போதும் கற்பனைகளை கொண்டு இட்டு நிரப்பித்தான் முழுமையை உருவாக்கிக் கொள்கிறோம். அது முழுமையாகிறதா என்பது அடுத்தக் கட்டம். ஆனால் கற்பனாத்துவம் இல்லாமல் யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள முடியாது.

பல வருடங்களுக்கு முன்னால் ஒரு சமயத்தலைவரின் பேட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தேன். டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு பற்றி மிகவும் கோபமாக கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தார். ‘குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பதை எப்படி நம்புவது? இவர்கள்தான் குரங்கிலிருந்து உருவான மனிதர்கள் என்று இரண்டு பேரையாவது நேரில் கொண்டு வந்து காட்டுங்கள் பார்ப்போம். அப்புறம் ஒத்துக் கொள்கிறோம்’ என்று காட்டமாக கேட்டுக்கொண்டிருந்தார்.

அவருடைய எளிய மனதின் மூர்க்கத்திற்கு ஒரு காரணம், பரிணாமவியல் தத்துவம், எளிய உயிரினங்களிலிருந்து பலக்கிய உயிரினங்களின் நிலைமாறுதல் பற்றி – சோதனைக்கூடங்களில் நிறுவ முடியாத – ஆய்வை முன்வைக்கிறது. இத்தனைக்கும் பூவுலகின் ஆதி ஆவணமான தொல்லுயிர் எச்சங்கள் (fossils) பரிணாமவியல் கோட்பாட்டிற்கு முக்கிய அடிப்படை. ஆனால் அதை கற்பனாத்துவம் இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது. பரிணாமவியலை நம்ப மறுப்பவர்களுக்கு,  மாற்று கருதுகோளாக, கடவுள் என்னும் கற்பனையாகத்தான் இருக்க முடியும்.

எழுத்தின் கூர்மையும், வலிமையும் தாண்டி அதன் அற மதிப்பீடுகளே அதை காலத்தின் பீடத்தில் ஏற்றி வைக்கின்றன. நம் காலத்தின் எழுத்துக்கான வரையறைகளை விரித்துக் கொண்டே செல்வதன் மூலம்தான் நாம் செறிவான கலாச்சார தொடர்ச்சியை நம்முடைய சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியும். அதன் மதிப்பீடுகளை காலம்தான் தீர்மானித்துக் கொள்கிறது. நேற்றைய தரவரிசைகளும், உள்ளடக்கங்களும் நாளைய வரலாற்று பிறழ்தலாகி போகலாம். அரசியல் மாறுதல்கள் வெள்ளமாக வந்து, அதுவரை செய்யப்பட்ட அத்தனை இலக்கியங்களையும் அடித்து புரட்டிக் கொண்டு போகலாம். ஒரு காலத்தின் கட்டுபாடுகளும் விதிகளும், பிறிதொரு காலத்தின் அடிமைத்தளைகளாக மாறுவதும் ஒரு சுழற்சிதான்.

இத்தகைய விரிந்த புரிதலோடு அணுகும்போதுதான் இலக்கியம் வழியாக காலத்தின் பிரதிபலிப்புகளை நம்மால் கண்டடைய முடிகிறது.

மாதொரு பாகன் நூலின் சர்ச்சைக்குரிய பகுதிகள் எந்தவகையில் இலக்கியம் என்று கொள்ளலாம்? அப்படியானதொரு இலக்கியத்தின் தேவைதான் என்ன? அதற்கான ஆவண ஆதாரங்களை முன்வைப்பது எழுத்தாளனின் பொறுப்பு இல்லையா?

‘சர்ச்சை’ என்ற சொல்லுக்கு பொருளே தேடுவதும், தேடுவதன் பொருட்டு விவாதிப்பதும்தானே. இன்று நேற்று எழுந்த விவாதங்கள் இல்லை இவை. ஒரு தொடர்ச்சியாக நம்மைச் சுற்றி எப்போதும் இணையாக வந்து கொண்டே இருக்கிறது.

எதுதான் தேவையாக இருக்கிறது? நம் மூதாதையரின் ஜொலிக்கும் வரலாறுகளில் கலந்திருக்கும் கற்பனைகள் எல்லாம் தேவையில்லாததுதானா? “ஒருபிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு கிழவோயே” என்பன போன்ற உயர்வு நவிற்சி அலங்காரங்கள், ‘வான வரம்பனை நீயோ பெரும’ என்று ஒரு சிறு நிலத்தை வானளவுக்கு உயர்த்தி பெருமை படும் அலங்காரங்கள் எல்லாம் இலக்கியத்தில் நமக்கு பழக்கமானதுதான்.

அதே போல நிறுவன அமைப்புகளுக்கு எதிரான அரசியல் பொதிந்த எழுத்துகளும் தொடர்ந்து வந்திருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மறையாக போற்றப்படும் ரிக்வேதத்தில் ‘பத்து அரசர்கள்’ எனும் பாடல், தஸ்யூ இன அரசனின் வெற்றியை போற்றிப் பாடுகிறது. இந்த எதிர் அரசியல் பாடலே பின்னாளில் பெரும் காப்பியம் உருவாக தோற்றுவாயாக இருந்திருக்க வேண்டும் என்றொரு கருத்துருவாக்கம் உண்டு.

திராவிட-கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கும் காபாலீசுவரர் கோவிலை எழுப்பிய, சைவ சமயத்தை போற்றி வளர்த்த மகேந்திரவர்ம பல்லவர்தான், காபாலிக சமயத்தினரை பகடி செய்யும் மத்தவிலாச பிரகாசனம் நாடகத்தையும் எழுதியிருக்கிறார். காபாலிகம், பௌத்தம், பாசுபதம் என, அக்காலத்தில் செல்வாக்கோடு இருந்த பல சமயங்களையும் பகடி செய்த நாடகம் அது.

அன்பின் ஐந்திணையில் அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கங்களில் ஒன்றாக, காமப்பரத்தையர், இற்பரத்தையர், சேரிப்பரத்தையர் என்று பல பிரிவுகளில் பரத்தையரைக் கூடும் ஒழுக்கம் பற்றி சங்க இலக்கியங்களில் பாடப்பட்டிருக்கிறது. இவைகளில் எதுதான் நமக்கு தேவை தேவையில்லை என்று வகுப்பது? அதற்கு முன்னால், அப்படி வகுக்கும் உரிமையை எப்படி நாம் பெறுவது?

போர் வெற்றிகள், தல வரலாறுகள், சமய இலக்கியங்கள் என்று அதிகார மையங்களுக்கு அணுக்கமாக, விதந்தோதும் எழுத்துகளில் ஒருவித மயக்குதன்மை (mystification) கூடுதலாக இருக்கும். புனிதபடுத்துலுக்காக சுயமாக தோன்றிய அவதாரங்கள்தான் எத்தனை. அவர்கள் நிகழ்த்திய காட்டிய அற்புதங்கள்தான் எத்தனை. அதை நம்பும் எளிய மனிதர்களின் அனுபவங்கள்தான் எத்தனை. இவை அத்தனையும் எழுத்தின் வழியாக நிறுவப்பட்டு வந்து கொண்டேயிருக்கின்றன. இதன் எடையை சமாளிக்கும் விதமாக demystifying எழுத்துகளும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. இதனை எதிர்த்து அதுவும், அதனை விழுங்கி இதுவும், மாறிமாறி இரண்டும் வளர்ந்து வந்திருக்கிறது.

பெண்-வழி சொத்துரிமை சுவீகரித்தல் நடைமுறை கொண்ட, ஒரு தாய்வழி சமூகத்தில் மாதொருபாகன் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கப் போகிறது? சிறிதளவும் இருக்காது.  ஆனால் தந்தைவழி சொத்துரிமை கொண்ட சமூகத்தில் மாதொருபாகனின் சொல்லப்படும் சடங்குகள் பெரும் ஒழுக்கப் பிறழ்வை ஏற்படுத்துகிறது.

மனிதர்களை சிறுமைப்படுத்தும் எழுத்து என்பதை விட, ஓர் அமைப்பை அசைத்துப் பார்க்கும் எழுத்து என்றுதான் கொள்ள வேண்டும். அதனாலேயே இந்த எழுத்திற்கான தேவை தொடர்ந்து இருக்கிறது.

நியோக முறையில் அறுபடாது தொடரும் சந்ததி பற்றி பல்லாயிர வரடங்களாக நம்மிடையே கதைகள் இருக்கின்றன. தாராசங்கர் பந்த்யோபாத்யாயாவின் ப்ரோதிமா, திஜாவின் நளபாகம், பைரப்பாவின் வம்சவிருஷம் என்று சமகாலத்திலும் இது போன்ற வழக்கங்களைப் பற்றிய புனைவுகள் இருக்கின்றன. மனித யத்தனத்தின் இடைவெளிகளை இப்படியான கற்பனைகளால்தான் இட்டு நிரப்பிக்கொள்கிறோம். நம்முடைய அக அதிச்சிகளுக்கும், பாசாங்கான முகச்சுளிப்புகளுக்கும் கட்டுபடாது இன்னமும் தொடர்ந்து கொண்டு இருப்பதே அதன் மதிப்பை விளக்குகிறது. இது போன்ற subaltern studies மூலமாக விடுபட்ட கலாச்சார தொடர்ச்சிகளை தொகுத்துக் கொள்கிறோம்.

முதன்மை ஆதாரங்கள் (primary source) அடிப்படையிலான ஆய்வு கொண்டுதான் அக்கடமிக் எழுத்து உருவாகிறது. அரசாங்க அறிக்கைகள், பதிவு செய்யப்பட்ட உரைகள், துண்டறிக்கைகள், கடிதங்கள், அறிவியல் தரவுகள், நாணயங்கள், தொல்லியல் ஆவணங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் என்று அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று பதிவுகள் பலவகையில் இருக்கிறது. அதையும் நேரடியாக பயன்படுத்தாமல், இந்த தரவுகள் யாரால், யாருக்காக, எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை சீர்தூக்கிப் பார்த்துதான் (பெரும்பாலும்) பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதிகார இயக்கங்களால் வடிகட்டி, புடமிடப்பட்ட ஆவணங்களுக்கு வெளியே, பெருமளவு தகவல்கள் புதினங்கள், நாடகங்கள், வாழ்க்கை வரலாறுகள், நாட்குறிப்புகள் என்று பலவகையில் விரவிக் கிடக்கின்றன. அதில் முக்கியமானது வாய்மொழி கதைகள். இந்த வடிகட்டப்படாத இரண்டாம் நிலை சோர்ஸ்களின் வழியே நிகழ்த்தும் ஆய்வுகள்தான் கலாச்சார வரலாற்றை அதன் பன்முகத்துடன் பதிவு செய்கிறது.

ஒரு படைப்பை எதிர்ப்பதற்கான முறைமை என்ன? கலைநேர்த்தி கொண்ட ஒரு படைப்பாளியால் உருவாக்கப்படும் நூலை, பெரும் வீச்சைக் கொண்டு பலரையும் சென்றடையும் எழுத்தை, ஒரு சாதாரணன் எப்படி எதிர்ப்பது?

தன் கற்பனையை முன்வைக்க ருஷ்டிக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அதே அளவு உரிமை, ருஷ்டியின் எழுத்தை எதிர்க்கும் கொமேனிக்கும் உண்டு. எழுத்தை எதிர்க்கவே கூடாது என்பது பாசிசத்தில்தான் கொண்டு முடியும். வாசிப்பவனை பரவசத்தில் ஆழ்த்துவதை விட, அவன் அகத்தை அசைத்துப் பார்ப்பதில்தான் எழுத்தின் கூர்மை வெளிப்படுகிறது. எதிர்த்து எழும் குரல்களை பற்றியேறி, அதை உண்டு செரித்து, இன்னமும் வீர்யமாக பரவுவதுதான் எழுத்தின் வல்லமை.

தம் எல்லைக்கு வெளியான கருத்துருவாக்கங்களை பொருட்படுத்தாமலோ, அல்லது எளிதாக காயப்படும் நிலையில் இருக்கும், தங்கள் நம்பிக்கைகளை வலிமையாக்கி கொள்வது மூலமாகவோ இதைக் கடந்து போகலாம். மூர்க்க எதிர்ப்பு எழுத்தாளனை தயங்க வைக்கலாம். ஆனால் எழுதியவற்றை நிர்மூலமாக்க முடியாது. தங்கள் இருப்பை உரக்க பதிவு செய்து கொண்டதோடு திருப்தி கொள்ளலாம்.

மாதொருபாகனின் நிறைகுறைகளை முறையாக அணுகும் பேராசிரியர் டி. தர்மராஜின் கட்டுரை  நல்லதொரு முன்னுதாரணம்.

தன் எழுத்துகளை முற்றிலுமாக திரும்பப் பெற்றுக் கொண்டு, இனி எழுதப் போவதே இல்லை என்று பெருமாள் முருகன் அறிவித்தது அதீதமான எதிர்வினையா?

உயிரினங்களின் ஆதார குணங்களில் ஒன்று தன்னுடைய உயிர்த்தலுக்காக போராடுவது. தன்னுடைய எழுத்தின் மூலமாக காலத்திலும் நிலைத்திருக்க பாடுபடும், தீவிர ஆய்வும், பெரும் குறிக்கோள்களும் கொண்ட எழுத்தாளனின் படைப்பூக்கமே அவனுடைய சுவாசம். ஆனால் அவன் சுவாசிப்பது எல்லாம் அந்த எழுத்தின் நிலையழியாமைக்குத்தான். அதற்கான குந்தகம் நேர்கிறபோது, ஏற்படும் வைராக்கிய முடிவைத்தான் பெருமாள் முருகனின் அறிக்கையில் காண முடிகிறது. நேற்றைய மழையினால் ஏற்பட்ட இன்றைய ஜலதோஷம் போல ‘உடனடி உதறல்’ முடிவாக அல்லாது தீர்க்கமான முடிவைத்தான் அவர் எடுத்திருக்கிறார் . பலகாலமாக அவர் எதிர்கொண்ட கடுமையான எதிர்வினைகளுக்கு, இயன்றவரை விளக்கம் கொடுத்து ஓய்ந்து போனதால் ஏற்பட்ட வெறுப்பின் உச்சக்கட்டம் அது. தன்னால் முடிந்தவரை நேரிடையாகவும், சிக்கலை தீர்க்கும் உறுதியுடனும், பெருந்தன்மையோடும் நடந்து கொண்டிருக்கிறார். இந்த எல்லைக்கு அவரை இட்டு சென்றது எதிர்ப்பாளர்களின் குரல் மட்டுமல்ல, படைப்பாளிக்கென எவ்வித மதிப்பும் கொடுக்காது முறைமையற்ற ஒடுக்குமுறையில் ஈடுபட்ட அரசும், அவரது போரட்டத்தை எள்ளலும் பகடியுமாக வேடிக்கைப் பார்த்த அரசின் குடிகளாகிய நாமும்தான்.

Advertisements

One comment

  1. நாம் உருவாக்கும் எல்லை எவ்வளவுக்கெவ்வளவு சுருங்கியிருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பெரிய வெளி, நம் எல்லைக்களுக்கு அப்பால் இருக்கிறது. நம் எல்லைக்குட்பட்டிருப்பது நமது இலக்கியம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். உண்மையில் இலக்கியம் என்பது எல்லையில்லா பிரபஞ்சம் போல

    வாசகர்களை கணக்கில் வைக்க வேண்டாம். எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் எத்தனை பேர்களை இதனை புரிந்து இருக்கின்றார்கள் என்பதும் கேள்விக்குறியே?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.