– பீட்டர் பொங்கல் –
(அடில் ஜுஸ்ஸாவாலாவின் கட்டுரைத் தொகுப்பான Maps for a Mortal Moon என்ற நூலை முன்வைத்து அர்விந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா காரவன் பத்திரிகையில் எழுதிய Being Here என்ற கட்டுரையின் தமிழாக்கம்)
அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் | 1 | 2 |
இத்தனை ஆண்டுகாலமாக பராக்கு பார்ப்பவர் என்று பம்பாயில் அருண் கொலாட்கர் ஒருவர்தான் இருந்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அவர் கால கோடாவை நமக்காகக் கவிதையாக்கினார். அதன் கட்டிடங்கள், தெருக்கள், மக்கள், ரெஸ்டாரண்ட்டுகள், கலைக்கூடங்கள், தெரு நாய்கள், பூனைகள், காகங்களை மறக்க முடியாத உயிர்ப்புடன் சித்தரித்தார். மேப்ஸ் பார் எ மார்டல் மூனின் ஆச்சரியங்களில் ஒன்று, ஜுஸ்ஸாவாலாவில் பம்பாய் இன்னொரு சோம்பேறியைப பெற்றிருக்கிறது என்பதுதான், இந்நகரத்தின் தெருக்கள் அளிக்கக்கூடியது எதுவாயிருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளக்கூடிய இன்னொருத்தர் இங்கு இருந்திருக்கிறார். சில சமயம், மழைக்காலப் பருவம் போன்றவொன்றில், அது தரக்கூடிய அனைத்தும் மகிழ்விப்பதாக இருக்காது. ஜுஸ்ஸாவாலாவின் பராக்கு பார்வை கொலாட்கரின் பார்வையைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது; மேலும், இங்கே உள்ளது போல், அவரது ஊடகமான உரைநடையும், மாறுபட்ட ஒன்றே. இந்த இரண்டும்- பராக்கு பார்வையும் ஊடகமும், ஒன்றோடொன்று தொடர்புடையவை.
கவிதை கொலாட்கருக்கு மூன்று சிறகுகள் கொண்ட ஒரு ஜோடி இறக்கைகள் அளித்திருந்தது (கால கோடா கவிதைகளில் பெரும்பாலானவை மூன்று வரி ஸ்டான்ஸாக்கள்). எனவே தனது வேசைட் இன்னில் அமர்ந்திருந்தபடி அவரால் மேகங்களிடையே பறந்து செல்ல இயலும், அவரது வேட்டைக்கார கழுகுப் பார்வை நிலத்தில் ஊர்ந்து செல்லும் அனைத்தையும், காற்றில் அசையும் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்வது- முதலில் கால கோடாவை, அதன் பின்னர் பம்பாயை, இறுதில் பூமி முழுமையையும்- அவர் ஏதோ, “ரஷ்ய விண்கலம் சல்யூட்டில் இருப்பது போல்”. அனைத்தும் மிக உன்னிப்பாய் அவதானிக்கப்படுகின்றன, அனைத்தும் பெரிதுபடுத்திப் பார்க்கப்படுகின்றன. இந்த ஊடகத்தின் இயல்பு இது. இதோ, “எலிவிஷம் வைப்பவனின் மதிய உணவு நேரம்” என்ற கவிதையில், “ஒற்றைக் கால் போஸ்டரை” விவரிக்கிறார்- ஒவ்வொரு பத்தியாக சித்திரம் பெரிதுபடுத்தப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது-
வெண்திரையாய் ஒரு நீள்சதுர கான்வாஸ்
மரச் சட்டகத்தில் நீண்டு கிடக்கிறது;
அதைச் செங்குத்தான இரு பகுதிகளாக
மரத்தாலான ஒரு கட்டை பிரிக்கிறது.
அதன் தாழ்பகுதியைக் கடந்து தொடர்கிறது
ஒரு சிறிய, துண்டிக்கப்பட்ட கால்.
அந்த தட்டைக் காலில் நட்டிருக்கிறது
காத்திரமான மூன்றங்குல சக்கரம் ஒன்று.
கவிதை கொலாட்கருக்கு ஒரு ஜோடி இறக்கைகள் தந்திருந்தால், உரைநடை ஜுஸ்ஸாவாலாவுக்கு சைஸ் டென் செருப்புகள் தந்திருக்கிறது. அவரும் கொலாட்கர் எழுதும் விஷயங்களையே எழுதுகிறார், ஆனால் இன்னும் அதிகமாக- ஒரு திசையில் ஏசியாடிக் லைப்ரரிக்கும் மறு திசையில் கொலாபா போஸ்ட் ஆபிசுக்கும் இழுத்துச் செல்கிறார். கொலாட்கர் போலல்லாமல், அவர் தனது அவதானிப்புகளை, கொலைகளை, தன் தோல் செருப்புகள் தேயும் அதே கணத்தில் செய்கிறார். அவர் எப்போதும் சாலையில்தான் இருக்கிறார், “நொடிக்கு முப்பது செண்டிமீட்டர் என்ற விருப்பத்துக்குரிய வேகத்தில்” நடந்து செல்கிறார். அவர் இருக்கும் கட்டிடத்துக்கு வெளியே சிகரெட் கடை வைத்திருப்பவன் போல், அவர், “தன் முன்னிருந்த அலங்கோல நடைபாதையின் ஒவ்வொரு தழும்பையும் அறிந்திருந்தார்”
என்ன சொன்னாலும் இவை இந்திய சாலைகள், பாரிசின் boulevardகள் அல்ல. ‘The Cuffe Link’ ல் இவ்வாறு எழுதுகிறார்- “ஜி டி சோமானி மார்க்கும் கப்பே பரேடும் சந்திக்குமிடம்” மிக மோசமாக இருந்தது என்று. “இந்த சாலையில் மாருதி கார்களை விரைவாக ஓட்டிச் செல்வது இந்நாட்களில் பாஷனாக இருக்கிறது.. ஒரு நாள், கார் திரும்ப மறுத்து, மூலையில் உள்ள விளக்குக் கம்பத்தில் மோதும், காரின் துண்டுகளும் அதை ஓட்டி வந்தவரின் உதிரி பாகங்களும் மட்டுமே அதைக் கடந்து செல்லும்”. இந்த இரு வாக்கியங்களின் தாக்கத்தை உரைநடை கொண்டு மட்டுமே உருவாக்க இயலும்; கடைசி நேர அவசரத்தின் உரைநடை இது, மூளையும் இதயமும் எழுதும் கரமும் முழுமையாய் இணைந்தியங்கும்போது நிகழும் உரைநடை.
கவிதை போல் இயங்குவது அல்ல உரைநடை. “கவிஞர்களின் உரைநடைப் பாணி” என்ற கட்டுரையில் ஹேஸ்லிட் சொன்னதைக் காட்டிலும் வேறு யாரும் இதை இத்தனை சுருக்கமாகச் சொன்னதில்லை-
“கவிதையில், மனதுக்கு உகந்த அல்லது உள்ளத்தைக் கவரும் ஒரு படிமம் இயல்பாகவே இன்னொன்றை உணர்த்துகிறது: கட்டமைப்பு அடிப்படையில் அழகுணர்வை, அல்லது, மகத்தான தோற்றத்தை அதிகரிக்கிறது: நம்பச் செய்வதே உரைநடை வெளியில் சொல்லிக் கொள்ளும் நோக்கம், அலங்காரத்துக்காகவோ தனித்துக் காட்டவோ அதில் எதையும் சேர்த்துக் கொள்ள முடியாது, முதலில் அளிக்கப்பட்ட உருவத்துக்கு கூடுதல் நம்பகத்தன்மையோ தெளிவோ அளிப்பதாகவே எதுவும் இருக்க வேண்டும்”
விளக்குக் கம்பத்தில் மோதிக் கொள்ளும் காரின் சித்திரம் வாசகர் உள்ளத்தில் நிற்பதற்கு காரணம், அது கவிதையில் நாம் பார்க்கக்கூடிய படிமம் அல்ல என்பதுதான். இது அலங்காரத்துக்காக இல்லை, முன்னர் வந்ததற்கு கூடுதல் நம்பகத்தன்மை அளிக்கிறது (சாலையில் விரையும் மாருதிகள்), இனி வருவதன் தாக்கத்தை அதிகரிக்கிறது (காரின் உதிரி பாகங்கள்). இந்தப் பத்தியை நீங்கள் படுக்கையில் படித்துக் கொண்டிருக்கலாம், ஆனால் உலோகமும் உடலுறுப்புகளும் உன்னைச் சுற்றிச் சிதறுவதை நீ பார்க்கிறாய், அது உன் முதுகெலும்பில் நடுக்கம் கொடுக்கிறது. ஜுஸ்ஸாவாலா சித்தரிக்கும் அழகு பயங்கரமானது. இந்தக் காட்சி நம் மனதைத் தொல்லை செய்ய இன்னொரு காரணம், அவர் ஏதோ நடந்து முடிந்த விஷயத்தை விவரிக்கவில்லை, எந்த நேரமும் நடக்கக்கூடிய ஒன்றையே விவரிக்கிறார் – ஒரு நாள் கார் திரும்ப மறுக்கும்… இந்திய சாலைகளில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு முறையும் இதுதான் உன் அச்சமாக இருக்கிறது, விளக்குக் கம்பத்துக்கு பதில், கார் உன்னிடம் வரும் என்று, சிதறும் உடலுருப்புகள் உன்னுடையவை என்று, இப்போது உன் முதுகெலும்பில் சிலிர்த்தோடிய நடுக்கத்தின் பொருள் புரிகிறது.
தான் சாலையில் இல்லாதபோதும் அதை நினைத்துக் கொண்டிருப்பவர் ஜுஸ்சாவாலா- அதே கட்டுரையில் கபே பரேடில் தான் வாழ்ந்த ஆண்டுகளில் கண்ணுற்ற விபத்துகளின் எண்ணிக்கையைக் கணக்கு வைத்துக் கொள்ள முடியாது என்கிறார்.
“முதல் விபத்துகள் நிகழ்ந்தபோது, நான் சம்பவ இடத்துக்கு உந்திச் செல்லப்பட்டேன், லிப்ட்டில் ஏறி கீழே செல்வதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் எந்த ஓர் உயரமான கட்டிடத்திலும் ஓராண்டாவது வசித்திருந்தால், நீங்கள் உதவிக்கு வருபவர்கள் நேர்க்கோட்டில் வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள், பெரும்பாலும் சமதளப்பாதையில்தான் வருகின்றனர். விபத்து நடந்த இடத்துக்கு விரைபவர்கள்… தவிர்ப்பதற்கில்லாமல் பத்திரிக்கையாளர்களும் தெருமுனையில் உள்ள சிகரெட் கடைக்காரர்களும்தான்… சீக்கிரமே லிப்டில் இறங்கிச் செல்வதைக் கைவிட்டேன், பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருக்கப் பழகிக் கொண்டேன்”
தனது பதினெட்டாம் மாடி பிளாட்டின் பால்கனியிலிருந்து ஜுஸ்ஸாவாலா, “கிரீச்சிடும் பிரேக்குகள், எதிர்பார்த்தபடியே மோதிக்கொள்ளும் சத்தம், உலோகமும் கண்ணாடியும் நொறுங்கும் ஓசை” கேட்டு உறைந்து நிற்கிறார். தான் ஒரு போர்க்களத்தில் நிற்பதாய் உணர்கிறார். அவரைப் போன்ற எழுத்தாளர்கள் நமக்காகப் பார்க்கின்றனர், நமக்காகவே கேட்கின்றனர், எனவேதான் இவர்களை வாசிக்க வேண்டியது அவசியமாகிறது. உதவி எப்போதும் நேர்க்கோட்டில்தான் வருகிறது என்று சொல்கிறார், அதிலும் சமதளப்பாதையில்தான் வருகிறது. ஜுஸ்ஸாவாலா எப்படிப்பட்ட அவதானிப்புகளைச் செய்பவர் என்பதையும் இது உணர்த்துகிறது. நடைப்பழக்கம் உள்ளவர் எனபதால், அவர் மிக உயரத்திலிருந்தோ அல்லது மிக நெருக்கமாய் சென்றோ இந்த உலகைப் பார்ப்பதில்லை. ஓரளவு தொலைவிலிருந்து சாலையில் எதைப் பார்க்க முடியுமோ, அதைக் கொடுக்கிறார்- இங்கு எல்லாம் சமதளப் பாதையில் செல்கின்றன. உரைநடையைப் போலவே.
சாலையில் பிற ஆபத்துகளும் உண்டு. “கிராமத்தில் ஓர் அந்நியன்” என்ற கட்டுரையில், மும்பையின் நரிமன் பாயிண்டின் மரைன் டிரைவ் பக்கம் நோக்கி இருபது நிமிடத்தில் நடந்து சென்று விடும் தொலைவில் வாழும் ஜுஸ்ஸாவாலாவுக்கு அந்த நடை ஒரு பெரும் சோதனையாக இருக்கிறது. “சாலைகளில் வெள்ளம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை டாக்சி இல்லை, சாலையோர கடைக்காரன் பாவ் பாஜி கொடுக்க மறுத்து விட்டான்“. இந்த இடத்தில் கால கோடா கவிதைகளின் வேசைட் இன்னில் பரிமாறப்படும் வறுத்த முட்டையும் பன்றிக்கறியும் வாசகரின் நினைவுக்கு வரலாம். ஆனால் இங்கு ஜுஸ்ஸாவாலா தனக்கு ஏன் பாவ் பாஜி மறுக்கப்பட்டது என்பது குறித்து யோசித்துப் பார்க்கிறார். தான் தாடி வளர்த்திருப்பதால் தன்னை ஒரு முஸ்லிம் என்று நினைத்துக் கொண்டு விட்டானா? 1993ஆம் ஆண்டு கலவரத்துக்குப்பின், “நகரம் தன் பெயரை மட்டுமல்ல, இயல்பையும் மாற்றிக் கொண்டு விட்டது,” என்று எழுதுகிறார் அவர். ஆனால் அண்மையில் தான் பாரில் சந்தித்த ஓர் அன்னியரை நினைவுகூர்கிறார், அவர் ஜுஸ்ஸாவாலாவை வீட்டுக்கு அழைத்துச் சென்று தன மனைவி மக்களை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். முஸ்லிம்களைச் சந்தேகிக்கிறார்கள் என்று நினைத்தது தவறாய் இருக்கலாம். 1962ஆம் ஆண்டின் ஹோலியை நினைவுக்கு வருகிறது, அன்று வெர்சோவா பீச்சில் ஒரு மீன்பிடிப் படகில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார், “மீனவர்களோடு சாராயமும் உணவும் பகிர்ந்து கொண்டு“. இன்னும் பல நினைவுகள் கிளர்ந்து எழுகின்றன, இந்தியாவெங்கும் அவர் பயணித்துக் கொண்டிருந்த 1960களின் இறுதி ஆண்டுகளின் நினைவுகளும் அவற்றில் சில- ஜெய்ப்பூர், தர்மசாலா, கொச்சி என்று ந்யூ ரைட்டிங் இன் இந்தியா என்ற பெங்குவின் தொகைநூலுக்காக விஷயம் சேகரிக்கப் பயணித்த நாட்கள் அவை. இப்போது, இரண்டு பக்கங்களுக்கு முனனர் அவர் துவக்கிய இருபது நிமிட நடைப்பயிற்சி என்னவாயிற்று என்று நினைக்க ஆரம்பிக்கிறீர்கள்.
இதுதான் நடந்தது-
“பெருவெள்ளமாய் மழை கொட்டியது, அது நிற்பதாயில்லை. பலமான காற்று தெருக்களை விசிறியடித்துச் சென்றது, சில நிமிடங்களில் என் குடைக்கம்பிகள் உடைந்தன. முட்டி அளவு உயர்ந்துவிட்ட தண்ணீரில் நடந்து சென்றேன், எங்கோ திறந்து கிடந்த பாதாளச் சாக்கடைக் குழியை நோக்கி வெறிபிடித்தது போல் அந்தத் தண்ணீர் விரைந்து கொண்டிருந்தது…
“அப்போதுதான் என் வழிகாட்டி வந்தான், குருடனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த உதவியாளன் போல். எனக்கு சாப்பாடு கிடைக்கக்கூடிய இடமொன்று தனக்குத் தெரியும் என்றான். அவனுக்கு பதினான்கு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது தண்ணீர் நிறைந்திருந்த பாதாள உலகத்தில் என்னை வழிநடத்திச் சென்றான்- வெள்ளக்காடாய் மாறிய தெருக்கள், வீசியடிக்கும் மழை, தெருவிளக்குகள் அணைந்து போயிருந்த இருட்குகைகள்.”
ஒரு வழியாய் ஜுஸ்ஸாவாலா தன் வீட்டுக்கு சென்று சேர்கிறார், பத்திரமாகவும் சொட்டச் சொட்ட ஈரமாகவும். ஆனால் அதற்கு முன் தாந்தேவின் நீர்நரகத்திலிருந்து நேரடியாய் வந்து சேர்ந்த செரப்ரஸ் போன்ற ஒரு நாய் அவரைப் பார்த்து உறுமியிருகிறது, பத்து ரூபாய்க்குக் குறையாமல் காசு கேட்ட ஒரு சிறுவனை எதிர்கொண்டிருக்கிறார், அவனுக்குக் கொடுக்க அவரிடம் ஐந்து ரூபாய்தான் இருந்திருக்கிறது. “என் பர்சில் இருந்த மிச்ச நோட்டுகள் அனைத்தும் ஈரத்தில் ஊறிப் போயிருந்தன”
அடுத்து வரும் உடனடி கணம் கட்டுரையாளர் மனதில் கிளர்த்தும் எண்ணங்கள்தான் இந்தக் கட்டுரைக்கு வடிவம் கொடுக்கின்றன. அது என்ன என்று தெரியாததால், உங்களுக்காகக் காத்திருக்கும் ஆச்சரியம் தரும் சந்தோஷத்துக்காக நீங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதே நேரம், புத்தகத்தின் பக்கங்களில் எழுப்பப்படும் சித்திரத்தின் கணத்துக்கு கணம் தோற்றம் கொள்ளும் கட்டமைப்பைத் தொடர்ந்து அதிசயித்துக் கொண்டே இருக்கிறீர்கள். கட்டுரை முடிந்தபின்தான், அது மழையைக் கொண்டும் பாவ் பாஜி கொண்டும் பார், ஹோலி, ஜெய்ப்பூர், நாய், சிறுவன், ஈர நோட்டுகள் என்று பலவற்றைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்கிறீர்கள். மாண்டெய்ன் காலம் முதல், பராக்கு பார்த்தலும் சுற்றி வளைத்தலும் கணப்போதின் பாதையைப் பற்றிச் செல்லுதலும் கட்டுரையின் மையமாய் இருந்திருக்கின்றன.
“தாந்தே பற்றி பேசுதல்” என்ற கட்டுரையில் ரஷ்ய கவிஞர் மாண்டல்ஸ்டாம் கேட்ட கேள்வி மிகப் பிரசித்தம்- “இப்படி ஒரு கேள்வி தோன்றுகிறது, சீரியஸாகவே கேட்கிறேன்- தன் கவிதையைப் படைக்கும் காலத்தில் இத்தாலியில் ஆடுகள் செல்லும் பாதைகளில் தாந்தே நடந்து தேய்த்த செருப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்!” இதே கேள்வியை நீங்கள் ஜுஸ்ஸாவாலாவிடமும் கேட்கலாம், தாந்தே சென்ற அதே ஆட்டுப்பாதைகளில் அவரும் சென்றிருக்கிறார். “எதையோ எழுத என் நோட்டுப் புத்தகத்தைத் திறக்கிறேன், ப்ளோரென்சில் நான் வாங்கிய டாக்டர் சிச்சரெல்லியின் கார்ன் பேட்கள் வெளியே விழுகின்றன. என் பாதங்கள் பற்றியெரிகின்றன“. “நெருப்பைப் பற்றி” என்ற அந்தக் கட்டுரையில் இதைப் பேசுமிடத்தில், அவர் பிரான்சில் உள்ள லா பூபோலில் இருக்கிறார், “தார்தொன் மேலுள்ள ஒரு பாலத்தில்“. “என் கட்டை விரல்கள் ரத்தம் கட்டி வீக்கம் கண்டிருக்கின்றன, நடந்து நடந்து அவை சிவந்திருக்கின்றன, அவற்றைத் துண்டிக்க வேண்டியிருக்கும்“. ஆனால் அடுத்த வாக்கியத்திலேயே அவர் இத்தாலி திரும்பிவிடுகிறார்: “வெசுவியஸ் ஏற மிகவும் கஷ்டப்பட்டோம், அதன் திறந்த வாய் பல்லில்லாமல் இருந்தது…” நாம் அனைவரும் அதன் திறந்த வாயை அறிவோம். ஜெகாங்கிர் ஆர்ட் காலரிதான் அது- கால கோடா கவிதைகளில் இவ்வாறு விவரிக்கப்படுகிறது- “இன்னும் வாய் திறந்து உறங்குகிறது/ எப்போதும்போல் இப்போதும்“.
ஜெகாங்கிர் ஆர்ட் காலரிக்கு அருகில்தான் ஆசியாட்டில் லைபரரி இருக்கிறது. புத்தாயிரத்தின் ஒரு நாள், ஜனவரி 2004ல், அந்த நூலகத்தின் நியோ கிளாசிகல் கட்டிடத்திலிருந்து நரைத்த முடி கொண்ட நால்வர் வெளியேறி அதன் “ஐசன்ஸ்டினிய படிகளில்” இறங்கத் துவங்கினர். அப்போது மணி மூன்றேகால். அதற்கு சற்று முன்னர், அவர்கள் மிகவும் விசாலமான சோபாக்களில் அமர்ந்திருந்தனர், சர் ஜகன்னாத் சன்கர்சேட்டின் சிலைக்குப் பின்னால் கொஞ்சம் உயரே அந்த சோபாக்கள் இருந்தன. “வேறு பல விஷயங்களோடு, சுமேரிய எழுத்துருக்கள்” பற்றி விவாதம் செய்திருந்தனர். “மூன்று பதினெட்டுக்கு அந்த நால்வரும் நகரத்தில் புதிதாய் பதித்துக் கொண்டிருந்த எரிவாயுக் குழாய்களுக்காக தோண்டப்பட்டுக் கொண்டிருந்த சாலையின் போக்குவரத்தைத் தப்பிச் செல்வதைப் பார்க்க முடிந்தது“. அவர்கள் காப்பியும் உருளைக்கிழங்கு வறுவலும் சாப்பிட ஒரு ரெஸ்டாரென்ட் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களில் இருவர் யாரென்று தெரியவில்லை, ஆனால் இருவர் அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஒருவர் ஜுஸ்ஸாவாலாதான். இன்னொருவர், சாலையைக் கடந்து அவர்களை அழைத்துச் செல்பவர், “மதியச் சூரியன் கொளுத்தும்” “உக்கிர வெள்ளை” நரைமுடிக்கு உரியவர் “கவிஞர் அருண் கொலாட்கர்“. நகர்ப்புற தெரு சுற்றலின் வரலாற்றில் கைப்பற்றப்பட்ட இந்த கணம் இலக்கிய வரலாற்றுத் தருணமும்கூட. அந்த ஆண்டே, செப்டம்பர் மாதம் கொலாட்கர் இறந்தார். இந்தப் புத்தகத்தின் தலைப்புக் கட்டுரையில் அத்தருணம் நமக்குக் கிட்டுகிறது.
Maps for a Mortal Moon: Essays and Entertainments
Adil Jussawalla
Edited and Introduced by Jerry Pinto
Aleph Book Company, 360 pages, Rs 395
நன்றி- Caravan