
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பெருவிய எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசா தன் 78வது வயதில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். நடிகர் லோசா? “இல்லை, இல்லை, இல்லை”, என்று சந்தோஷமாகச் சிரிக்கிறார் அவர். நைட்ஸ்பிரிட்ஜில் வாடகைக்கு எடுத்துள்ள அபார்ட்மெண்டில் உள்ள சோபாவில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தபடி அமர்ந்திருக்கிறார் லோசா. “எனது நடிப்புத் தொழில் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் என்னவொரு அருமையான, செறிவான அனுபவம்- வாழ்க்கையில் நான் இந்த அளவுக்கு பயந்ததே கிடையாது,” என்று சிரிக்கிறார்.
அவரது சிரிப்புதான் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறது: ஆனந்தம் நிறைந்த, அடக்க மாட்டாத, அறையை நிறைக்கும் ஓசை, மூட்டம் போட்டிருந்த வசந்த கால மதியத்தில் அவரைச் சந்தித்து பல நாட்கள் சென்றபின் இந்த நேர்முகத்தின் பதிவைக் கேட்கும்போது அடக்கமாட்டாமல் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
அவரது அண்மைய நாவலான, The Discreet Hero, பற்றிய எங்கள் உரையாடல் இப்போது தடம் புரண்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டது; பொக்காசியோவின் டெக்காமரான் கதைகளில் சிலவற்றை மிக அதிக சுதந்திரம் எடுத்துக் கொண்டு அவரே எழுதிய நாடகம் இந்த ஆண்டுத் துவக்கத்தில் மாட்ரிட் நகரில் அரங்கேற்றம் ஆனபோது அவரும் மேடையில் தோன்றி நடித்தது பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம்.
தன் மரகதப் பச்சை கண்களால் வர்காஸ் லோசா என்னைத் தீவிரமாகப் பார்க்கிறார், அவரது சிரிப்பு நின்றுவிட்டது. “எல்லாருக்கும், அல்லது, மனிதர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு மாற்றான் ஆகும் விருப்பம் இருக்கிறது என்று நினைக்கிறேன், சிறிது காலத்துக்காவது வேறொரு அடையாளத்துடன் வாழும் ஆசை இருக்கிறது,” என்கிறார். “வாழ்நாளெல்லாம் புனைவுகள் எழுதிக் கொண்டிருந்த என்னைப் போன்ற ஒருவனுக்கு, ஒரு கதாபாத்திரமாவது என்பது… அற்புதமான அனுபவம்”.
அவர் முகம் இறுக்கமாக இருக்கிறது, அவரது எண்ணங்கள் வேறெங்கோ சென்றுவிட்டது போல் தெரிகிறது. அத்தனை புத்தகங்களும் எழுதிய ஆளுமை இதுதான், என்று நினைத்துக் கொள்கிறேன்: ஆதிக்கம் செலுத்தும் அனைத்தையும் புரட்டிப் போடும் நகைச்சுவை உணர்வும் கேலிக்குரியனவற்றுக்கான தீராப்பசியும், உயிர்ப்புடன் இருப்பது குறித்த காத்திரமான, பெருந்தலைமைக்குரிய தீவிரத்தன்மையுடன் முட்டி மோதுவதைத் தன் ஆக்கங்களை அளித்தவர் இவர்.
தி டிஸ்க்ரீட் ஹீரோவில் இந்த இரு உந்துதல்களும் வலுவாக இயங்குகின்றன. இதுவரை அவர் எழுதிய புனைவுகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்களின் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல் வரிசையில் புதிதாய் பதிப்பிக்கப்பட்ட புத்தகம் இது. அவரது எழுத்துப்பணியில் தொய்வு ஏற்படுவதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை. இந்த நாவல் ஓரளவு சமூக நாவலாக இருக்கிறது- கடந்த இருபது ஆண்டுகளில் லத்தின் அமெரிக்காவில் உருவாகியுள்ள புதிய மத்திய வர்க்கத்தைப் பின்னணியாய் கொண்ட படைப்பு இது. ஆனால், சமூக நாவலாக இருக்கும் அதே வேளை வசீகரமான, திசையற்ற புத்தகமாகவும் இருக்கிறது,- பிசினஸ்மேன் ஒருவன் பிளாக்மெயில் செய்யப்படுவதோடு துவங்கும் இந்த நாவல் வெகு விரைவிலேயே நாடகீய பின்விளைவுகள் கொண்ட விரிவான சூழ்நிலம் செல்கிறது- நம்ப முடியாத திருமணங்கள், மிகத்தீவிரமான காமம், குடும்பத் துரோகம், தனிமனித பெருந்துயர்- சமகால பெரு சமூகத்தைத் தன் கதைக்களமாய் கொள்கிறது.
இது நகைச்சுவை மிகுந்த நாவலாக இருக்கும் அதே சமயம், மிக ஆழமான ஒரு தளத்தில் விநோதமாகவும் இருக்கிறது- பேய்த்தன கிளைக்கதைகள் அடுத்தடுத்து இடம் பெறுகின்றன (தீர்க்கதரிசன ஆரூடங்கள், பேய்களின் தோற்றங்கள்), இது குறித்து லோசாவுக்கு மௌனமான பெருமிதம் உண்டு. டேட் பிரிட்டனின் ஓர் இளம் ஊழியர் தன்னை மறித்ததாகச் சொல்கிறார், அந்த இளைஞன் இந்தப் பேய்களில் ஒன்றைப் பற்றி விசாரித்திருக்கிறான். “அது ஆவியா அல்லது நிஜ மனிதனா என்று அவன் அறிந்து கொள்ள விரும்பினான்!” என்கிறார் அவர். “அதுவெல்லாம் உன்னைப் பொருத்தது, என்று நான் பதில் சொன்னேன்,” என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரிக்கிறார்.
நாளேடு ஒன்றில் தான் வாசித்த செய்தியே கதைக்கருவாய் அமைந்தது என்கிறார் வர்காஸ் லோசா. “வடக்கே ஒரு நகரத்தில்,” என்று அவர் விளக்கத் துவங்குகிறார், “மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒரு சிறு தொழில்முனைவோன், போக்குவரத்து நிறுவனம் ஒன்று நடத்திக் கொண்டிருந்தான், அவன் செய்தித்தாளில் ஒரு விளம்பரம் தந்திருந்தான். மாபியாக்களை நோக்கி அந்த விளம்பரம், “நீ என்னிடம் கேட்கும் காசை நான் கொடுக்க முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொண்டாக வேண்டும்: என்ன வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள், ஆனால் இதுதான் பொதுவில் நான் எடுத்திருக்கும் நிலைப்பாடு, உங்கள் மிரட்டலுக்கு நான் அடிபணிய மாட்டேன்“, என்று சொன்னது”.
அந்த மனிதருக்கு என்ன ஆயிற்று என்று நான் கேட்கிறேன், வர்காஸ் லோசா தோள் குலுக்கிக் கொள்கிறார்- “நான் படைத்த பாத்திரம் பற்றி எனக்குக் கிடைத்த ஒரே தகவல் இதுதான்- ஆனால், இந்தக் கதை எந்த மாற்றமும் இல்லாமல், த டிஸ்க்ரீட் ஹீரோ நாவலில் இடம் பெறுகிறது. இதன் நாயகன், ப்ளிசிடோ யானாக், தன்னைத் தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கும் அடையாளமற்ற முரடர்களுக்கு இதே போன்ற சவால் விடுக்கிறான். இந்தக் கதைக்கு எதிராக பணக்கார, இலக்கிய பித்து பிடித்த இன்சூரன்ஸ் குமாஸ்தா டான் ரிகொபெர்டாவை நிறுத்துகிறார் வர்காஸ் லோசா. முதுமையைத் தழுவிக் கொண்டிருக்கும் அவனது முதலாளி தன் வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பெண்மணியைத் திருமணம் செய்து கொள்ளும்போது தலைதூக்கும் சிக்கலான சொத்துப் பிரச்சினையில் அவனும் சிக்கிக் கொள்கிறான். “அவன் வாழ்வில் நிலநடுக்கம் போன்ற ஒன்று நிகழ்கிறது,” என்று விளக்குகிறார் வர்காஸ் லோசா. “இரு கதைகளிலும் தங்கள் குழந்தைகளுடன் இவர்களுக்கு இருக்கும் உறவே பிரச்சினை தோன்றக் காரணமாகிறது”.
சாதாரண வாழ்வையும் சிற்றூரின் மிகைநாடகத்தையும் பேசும் இந்த நாவல், “Conversations in the Cathedral” மற்றும் “The War at the End of the World” போன்ற முந்தைய நாவல்களுக்குரிய மிகப்பெரும் அரசியல் வெளியை வலியத் தவிர்க்கிறது. “என் இளமைப் பருவத்தில், நான் மிகப் பெரும் அளவில் சார்த்தர், காமு ஆகியவர்களின் தாக்கத்தில் இருந்தேன். போர்கள் நாடகங்கள் என்றார் சார்த்தர், ஆனால் இலக்கியத்தைக் கொண்டே வரலாற்றில் மாற்றத்தை உருவாக்க முடியும். இப்போது நான், இலக்கியம் மாற்றத்தை உருவாக்குவதில்லை என்று நினைக்கிறேன், ஆனால் இலக்கியத்தின் சமூக, வரலாற்று தாக்கங்கள் நாம் நினைப்பதைக் காட்டிலும் கட்டுபபடுத்தக் கடினமானவையாக இருக்கின்றன. குறிப்பிட்ட சில விஷயங்களை, குறிப்பிட்ட ஒரு வகையில் எழுதி நமக்கு வேண்டிய விளைவை நோக்கி இலக்கியம் படைக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நான் நினைத்தது முழுக்க முழுக்க தவறு என்று தெரிகிறது”.
“ஆனால் இலக்கியம் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை என்று நான் சொல்ல மாட்டேன்,” என்று தொடர்கிறார். “மிகப் பொதுவாகச் சொன்னால், வாசகர்களிடத்தில் ஒரு விமரிசனப் பார்வையை வளர்ப்பதுதான் எனக்கு முக்கியமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். நல்ல ஒரு இலக்கியம், நல்ல ஒரு கலாசாரம், உன்னுள் சூல் கொண்டால், உன் உணர்வுகளைப் பிறர் பயன்படுத்திக் கொள்வது கடினம் என்று நினைக்கிறேன், அதிகாரங்களின் ஆபத்துகள் குறித்து உனக்கு இன்னும் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அந்த வகையில், சமூக மாற்றத்துக்கான இலக்கியத்தில் நான் இன்றும் நம்பிக்கை வைத்திருக்கிறேன், ஆனால், எந்த ஒரு கோட்பாடு அல்லது எந்த ஒரு பிரிவுக்கும் சாதகமான அர்த்தத்தில் அல்ல”.
வித்தியாசமான ஒரு வகையில் நன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் இந்த நாவல் வாழ்விலும் வயோதிகத்திலும் உள்ள வினோதத்தன்மையைச் சுற்றி வருகிறது, அவரைத் தொடர்ந்து வசீகரிக்கும் அந்த ஒரு சில பாத்திரங்களை மீண்டும் பேச லோசாவுக்கு வாய்ப்பு அளிக்கிறது. போலீஸ்காரன் லூடுமா இதில் இருக்கிறான், “நான் எப்போது நாவல் எழுதத் துவங்கினாலும் அவன் வந்து அதில் பணியாற்றத் தயார்நிலையில் நிற்கிறான்”. தொடர்ந்து தடைகளைச் சந்திக்கும் டான் ரிகோபெர்டோ இதில் இருக்கிறார், அவரது பேரார்வம், “கலை, இசை, புத்தகங்கள்; ஆனால் அவர் தன் வாழ்நாளெல்லாம் ஒரு வர்த்தக நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறார்”
வர்காஸ் லோசாவுக்கு ரிகொபெர்டோவின் வசீகரம் அலுப்பதாயில்லை. தற்கால கலாசார நிலை குறித்து ரிகொபெர்டாவின் புரிதல்கள் சில சமயம் லோசா நேர்முகங்களில் கூறுவதைப் பிரதிபலிக்கின்றன. ஆனால், லாசாவின் பிரதிபிம்பம்தான் ரிகொபெர்டா என்று நான் சொல்வதை அவர் மறுக்கிறார். “ஒரு வகையில் அவன் துயரின் வாதையில் வாழ்பவன்,” என்கிறார் அவர். “அவனுக்கு கலாசாரத்தில் பேரார்வம் இருக்கிறது, ஆனால் அவனுக்கு எந்த ஒரு கலைத்துறையிலும் தன் ஆர்வத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் திறனில்லை. அவன் பெரிய அளவில் எதையும் தெரிந்து கொள்ளாமல் தன் ஆர்வங்களில் ஈடுபடுகிறான். மக்கள் திரள் அதிகமுள்ள ஒரு சமூகத்தில் அவன் தன் கலாசார, கலை ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்ள தனக்கான இடத்தைக் கண்டு கொண்டிருந்திருப்பான்; பெருவில் அது மேலும் சற்று கடினமானது”
“எனக்கு நன்றாக நினைவிருக்கிறது,” என்று தொடர்கிறார் லோசா, “இலக்கியம் அல்லது கலை ஆர்வம் இருப்பது என்பது நாடகீயத்தன்மை கொண்டதாக இருந்தது. ஏனெனில், நீ பொது உலகை விட்டு மிகவும் தனித்து விடப்பட்டவனாய் இருப்பாய். உனக்கு நீ விளிம்புகளைச் சேர்ந்தவன் என்ற உணர்வு இருந்தது, உன் ஆர்வத்தை மையமாய் கொண்டு உன் வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்பினால், நீ முழுமையாக ஒதுக்கப்பட்டவனாவாய் என்று உனக்குத் தெரிந்திருந்தது. இது இப்போது மாறி வருகிறது, குறிப்பாக பெரும் தேசங்களில்- லிமாவில்கூட நீ ஓர் ஓவியனாகவோ, இசைக்கலைஞனாகவோ கவிஞனாகவோ வாழ்க்கை நடத்த முடியும். இது கடினமான வாழ்வாக இருக்கும், ஆனால் அசாத்தியமானதாக இருக்காது. ஆனால் அப்போதெல்லாம் இப்படி வாழ்வது நடக்க முடியாத காரியம் போலிருந்தது. ஒரு வேளை, ரிகொபெர்டோ இப்படிப்பட்ட கருத்தில் உருவானவனாக இருக்கலாம்”.
தி டிஸ்க்ரீட் ஹீரோ சமகாலத்துக்குரிய நாவல் எனினும், அதன் நிகழ்வுகள் தொழில்நுட்ப, தகவல் யுகத்தை விட்டு வெகு தொலைவில் உள்ள பிரதேசங்களில் நடைபெறுகின்றன. வர்காஸ் லோசா மாற்றங்களை உன்னிப்பாய் கவனிக்கிறார்- லோசா பிறந்த ஊரில் அவருக்கு ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது, அங்கு வருகை புரிபவர்கள் முன் இந்த மாபெரும் எழுத்தாளர் ஹோலோகிராம் உருவில் தோற்றம் தருகிறார்-, ஆனால், கலாசாரம் பயணிக்கும் திசை குறித்து அவருக்கு சில ஐயங்கள் இருக்கின்றன.
“ஒரு நல்ல விஷயம் என்று பார்த்தால் இப்போதெல்லாம் எதையும் தணிக்கை செய்வது சாத்தியமில்லை,” என்கிறார் அவர். “ஆனால், அதற்கு மாறாய் எல்லாவற்றைப் பற்றியும் ஏராளமான தகவல் இருக்கிறது, அவற்றைத் தரம் பிரிக்க முடியாமல் போய் விட்டது, எல்லாம் ஒரே தட்டில் எடை போடப்படுகின்றன. தகவல்களைப் பகுத்து, அவற்றில் ஒரு தரவரிசையை உருவாக்கும் மிக முக்கியமான பணி விமரிசகனுக்கு உரியதாக இருந்தது, ஆனால் இப்போது விமரிசகர்களே இல்லை. ஒரு காலத்தில் நாவலின் மிக முக்கிய பங்களிப்புகளில் அதுவும் ஒன்றாய் இருந்தது. ஆனால் இப்போது அச்சிடப்படும் நாவல்கள் முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காகவே வாசிக்கப்படுகின்றன- மிக நன்றாக எழுதுகிறார்கள், கச்சிதமாக இருக்கிறது, நல்ல செய்நேர்த்தியைப் பார்க்க முடிகிறது- ஆனால் இன்று எழுதப்படுவது இலக்கியம் அல்ல, பொழுதுபோக்கு மட்டும்தான் இருக்கிறது“
மேம்போக்கான ஒரு நாவல்கூட அவர் வாசித்ததில்லையா? உரக்கச் சிரிக்கிறார் லோசா. “சில சமயம் வாசிக்கிறேன். சில நாவல்கள் மிக நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன. எனக்கு தொடர்கள் மிகவும் பிடிக்கும். ஹவுஸ் ஆப் கார்ட்ஸ் பார்க்கப் பிடிக்கும், அருமையாக இருக்கிறது, நல்ல பொழுதுபோக்கு. ஆனால் அது மனதில் நிற்பதில்லை. கோட்பாட்டில், அல்லது அரசியலில் மாற்றங்கள் எதுவும் ஏற்படுத்துவதில்லை, இந்த அசாதாரண டிஜிடல் புரட்சி அசாதாரண குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று தோன்றுகிறது”.
இருந்தாலும் உலக விவகாரங்களில் தொடர்ந்து அக்கறை காட்டுவதை அவர் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. தினமும் ஒரு நாளிதழில் பத்தி எழுதுகிறார், பல திட்டங்கள் வைத்திருக்கிறார்- “திட்டங்களுக்கு குறைவில்லை, நேரம்தான் போதவில்லை”. எண்பது வயதை நெருங்கும்போதும் அவர் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்வதாயில்லை. “கடைசி வரை உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன். தம் காலம் வருவதற்கு முன்பே பலரும் தோல்வியை ஏற்றுக் கொண்டு எதையும் செய்யும் ஆர்வமின்றி இருக்கின்றனர் என்பது சோகமானது, துயரம் தருவது. அந்த நிலை என்னை அச்சுறுத்துகிறது.
“மரணம் அல்ல” என்று தெளிவாய்ச் சொல்கிறார். “மரணத்தைக் குற்றம் சொல்ல முடியாது. எல்லாவற்றுக்கும் இயல்பான முடிவு அது. ஆனால் கடைசி கணம் வரை உயிர்ப்புடன் இருப்பது மிக முக்கியம் என்று நினைக்கிறேன். மரணம் ஒரு விபத்து போல் இருக்க வேண்டும் என்பது முக்கியம்”.
அவர் நிதானமாகத் தலையசைத்தபடி சொல்கிறார், “எனவே புதிய திட்டங்களை மேற்கொள்கிறேன், வெவ்வேறு விஷயங்களைத் திட்டமிடுகிறேன். உயிர்ப்புடன் வாழவும், வாழ்வு நமக்கு அளிக்கும் அற்புதமான சாத்தியங்களை ஏற்றுக் கொள்ளவும் இது ஒரு வழியாக இருக்கிறது”
ஒளிப்பட உதவி- விக்கிப்பீடியா
நன்றி- The Telegraph