கலங்கிய நதி- வர்லாம் ஷாலமோவின் கொலிமா கதைகள்

கார்டியன் இதழில் முன்னோடிச் சிறுகதைகள் குறித்து ஒரு தொடர் வெளியிடுகிறார்கள். அந்த வரிசையில் வர்லாம்  சிறுகதைகள் குறித்து கிரிஸ் பவர் எழுதிய பகுதி இது.
“நான் இலக்கியத்தை வெறுக்கிறேன்,” என்று 1965ஆம் ஆண்டு கடிதம் ஒன்றில் எழுதினார் வர்லாம் ஷாலமோவ். “நான் என் வாழ்க்கை அனுபவங்களை எழுதுவதில்லை; நான் சிறுகதைகளும் எழுதுவதில்லை. நான் சிறுகதை எழுதுவதை, இலக்கியமாய் இருக்கக்கூடியதை எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்கிறேன்”. ஷாலமோவ்வின் தயக்கங்கள் இவ்வாறு இருப்பினும், கொலிமா கதைகள் (Kolyma Tales) என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு, குலாக் அனுபவத்தில் உருவான மிகச் சிறந்த எழுத்துகளில் சிலவற்றைக் கொண்டிருக்கிறது.

 
அவர் தன் வேதனையின் மொழியில் கூறியது இதுதான்- அவரது எழுத்தில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் இருந்தது. ஒருவன் உயிர் வாழ்கிறானா மரணிக்கிறானா என்பதை அன்று அவனுக்குக் கிடைத்த சூப் திடமாக இருந்ததா அல்லது கூடுதலாக ஒரு ரொட்டித் துண்டு கிடைத்ததா அல்லது அவனுக்கென்று உணவு பெற ஒரு கோப்பை இருந்ததா என்பது போன்ற மிகச் சிறு விஷயங்களே தீர்மானித்த குலாக் போலவே அவரது கதைகளில் தேவைக்கு அதிகமாக எதற்கும் இடம் கிடையாது. வேண்டுமென்றோ இல்லையோ, தனது எழுத்து தனித்தன்மை கொண்டது என்பதையும் அவர் சொல்கிறார்.
 
ரஷ்யாவில் மனிதன் வாழ முடியாத பகுதிகளில் விரிந்திருந்த மிகப்பெரும் தொகுப்பு முகாம்களின் தொகையே குலாக், இவை அனைத்தைக் காட்டிலும் கொலிமாதான் மிகவும் அசாதாரணச் சூழல் கொண்டிருந்தது. “பொது நினைவில் ஆஷ்விட்ஸ் பிற அனைத்து நாஜி முகாம்களுக்கும் குறியீடாக இருப்பது போல், கொலிமா என்ற சொல் குலாக்கின் மிகத் தீவிரமான துன்பங்களின் குறியீடாக உருவாகியிருக்கிறது,” என்று எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் ஆன் ஆப்பிள்பாம். ஷாலமோவ்வின் மொழிபெயர்ப்பாளர் ஜான் கிளாட் கொலிமா பகுதியை இவ்வாறு விவரிக்கிறார், “கிழக்கில் பசிபிக் பெருங்கடல், வடக்கில் ஆர்க்டிக் சர்க்கிள், முக்கோணத்தின் மூன்றாம் திசையில் கடந்து செல்ல முடியாத மலைகள் கொண்டு இயற்கையாய் உருவான மாபெரும் சிறைக்கூடம்”. அதன் சீதோஷ்ணம் -45 டிகிரி சென்டிகிரேட்டை எட்டக்கூடியது. அதன் குளிர், ஷாலமோவ் சொற்களில், “தசைகளை நசுக்கி மனிதனின் நெற்றிப்பொட்டுக்களைப் பிழிந்தெடுக்கும்”.
 
லெனினின் தடை செய்யப்பட்ட ஒரு கடிதத்தை விநியோகிக்க முயன்ற குற்றத்துக்காக 1929ஆம் ஆண்டு முதலில் கைது செய்யப்பட்ட ஷாலமோவ், மூன்றாண்டு கால ஹார்ட் லேபர் தண்டனைக்குப்பின் 1932ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் மிகப்பெரும் சுத்திகரிப்பு நடவடிக்கையின் துவக்கத்தில் 1937ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்ட ஷாலமோவ் அடுத்த பதினேழு ஆண்டுகளை கொலிமாவில் கழித்தார். அவரது சிறை தண்டனை பற்றி அலெக்சாண்டர் சோல்ஸனிட்சின், “எனதைக் காட்டிலும் கடுமையாகவும் நீண்டதாகவும் இருந்தது. அவர் மீது மிகுந்த மரியாதையுடன் இதைச் சொல்கிறேன், முகாம் வாழ்வு முழுமையும் எங்களை எத்தகைய இரக்கமின்மைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இட்டுச் சென்றதோ, அந்த அடிமட்டத்தைத் தொட வேண்டுமென்று எனக்கல்ல, அவருக்கே விதிக்கப்பட்டது”. தன பங்குக்கு ஷாலமோவ், சோல்ஸனிட்சின் பொருட்படுத்தத்தக்கவரல்ல என்றே கருதினார், அவரது புகழ் மீது ஷாலமோவ்வுக்கு பொறாமை இருந்தது; குலாக் தீவுத்தொகுப்பு எழுதும்போது, தன்னோடு இணைந்து எழுத சோல்ஸனிட்சின் அழைத்தபோது ஷாலமோவ் அவரது அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். ஒருமுறை தொகுப்பு முகாம்கள் பற்றி பேசும்போது, இங்கு, “மிக எளிதாக சோல்ஸனிட்சின் போன்ற நூறு எழுத்தாளர்களுக்கும் ஐந்து தால்ஸ்தாய்களுக்கும் இடமிருக்கும்,” என்றார்.
 
1954க்கும் 1973க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஷாலமோவ் ரஷ்ய சிறைகள், தற்காலிக இருப்பு முகாம்கள், கொலிமா சுரங்கங்கள், முகாம் மருத்துவமனை வாழ்வு, வீடு திரும்புதலின் பிரச்சினைக்குரிய அனுபவங்கள்  குறித்து 147 சிறுகதைகள் எழுதினார். இந்தக் கதைகள் அவரது வாழ்வனுபவத்தை விவரிக்கின்றன என்று கருதுவது மிக எளிது, ஏன், சுயசரிதைகள் என்றும்கூட முடிவு செய்யலாம். ராபர்ட் கான்க்வெஸ்ட், ஆப்பிள்பாம் இருவரும் தங்கள் வரலாற்றாய்வு நூல்களிலும் அரசியல் தத்துவ ஆய்வாளர் ஜான் கிரே தன் எழுத்திலும் அவரது கதைகளை முதல்நிலை தரவுகளாக மேற்கோள் காட்டப் பயன்படுத்திக் கொள்கின்றனர்- இவற்றை வாசித்தவர்கள் இன்னும் தீர்மானமாக இவை சுயசரிதைகள் என்று நம்பக்கூடும். அவரது உரைநடை பாணியும் இந்த முடிவுக்கு சாதகமாகவே இருக்கிறது: “ஒரு கலைஞனாக ஷாலமோவ் தன்னை இறுக்கமான கட்டுக்கோப்புக்குள் வைத்துக் கொள்கிறார்,” என்று எழுதுகிறார் இர்விங் ஹோவ், “விருப்பு வெறுப்பற்ற பேரார்வத்துடன் அவர் ஒரு விஷயத்தில்தான் கருத்தாக இருக்கிறார், துல்லியமாக எழுத வேண்டும்”
 
ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு அவரது எழுத்தை வாசிக்கிறோமோ, அவ்வளவுக்கும் நமது வாசிப்பு அனுபவம் ஆவண வாசிப்புக்கு முரணாய் இருக்கிறது.. இயல்புக்கு மாறான வகையில் சில விஷயங்கள் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன- மூன்று வெவ்வேறு கதைகளில் ஒரு பணிக்குழு மாறுபட்ட கோணங்களில் விவரிக்கப்படுகிறது: மூன்று வெவ்வேறு பாதைகள் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்கின்றன. அதே போல், குறிப்பட்ட சில படிமங்களும் சொற்றொடர்களும் மீண்டும் மீண்டும் வருகின்றன; பொருட்கள் வலுவான குறியீடுகளுக்குரிய ஆற்றலை வெளிப்படுத்துகின்றன; இருபொருள்படும் விவரணையைக் காண முடிகிறது, முகாமின் அன்றாட வாழ்க்கை அழகியல் மற்றும் தத்துவவியல் பரிமாணங்கள் சேர்த்துக் கொள்கின்றன. ராபர்ட் சான்ட்லர், நாதன் வில்கின்சன் இருவரும் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்-
 
“ஒரு சில கதைகள் மட்டுமே வாசித்த வாசகன், கொலிமா கதைகள் ஷாலமோவ்வின் அனுபவங்களை ஆவணப்படுத்துகின்றன என்று நினைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. விவரிக்கப்படும் நிகழ்வுகள் ஒவ்வொரு கதையிலும் முழுக்க முழுக்க உண்மை போல் இருக்கின்றன. ஆனால் தொடர்ந்து வாசிக்கும்போதுதான், இந்த காவிய வட்டத்தை முழுமையாகக் கைப்பற்ற முயற்சி செய்யும்போதுதான், அதன் உண்மையைக் கைப்பற்றவே முடியாது என்று உணரத் துவங்குகிறோம். உயிர் பிழைத்தவனின் உலகம் எவ்வளவு பயங்கரமாய் யதார்த்தமற்றிருக்கிறது என்பதை ஒருவழியாய் நாமும் உணர்கிறோம். அடுத்தடுத்து வரும் கதைசொல்லிகள் ஒரே மாதிரியான கதைகளைச் சொல்கின்றனர், அசாத்திய வகையில் அவர்களது கதைகள் பின்னிப் பிணைகின்றன, காலம் ஸ்தம்பித்து நிற்கிறது. யதார்த்தமும் மீயதார்த்தமும் ஒன்று சேரும்போது கொலிமா கதைகளுக்கு அசாதாரணமான ஆற்றல் கிடைக்கிறது”  
 
ஷாலமோவ்வின் எழத்து அதன் சிடுக்கின் காரணமாக வலைப்பின்னல் போன்றது என்று பலரும் குறிப்பிட்டிருக்கின்றனர். சிறுகதைகளை தனிக்கதைகளாக வாசிக்க முடியும், அவற்றில் சிலவற்றை மாஸ்டர்பீஸ்கள் என்றே சொல்லலாம். ஆனால் அவை அனைத்தையும் முழுமையாய்க் கொண்டு ஷாலமோவ் குறிப்பிடும் வரிசையில் வாசிப்பதே சரியாக இருக்கும். துரதிருஷ்டவசமாக, சோவியத் யூனியனிலிருந்து அவரது கதைகள் சிறு பகுதிகளாக கடத்திக் கொண்டுவரப்பட்டு மேற்கில் பதிப்பிக்கப்பட்டன- ஷாலமோவ் பிறந்த தேசத்தில், அவர் இறந்து ஏழாண்டுகள் ஆனபின் 1989க்குமுன் அவரது எந்த ஒரு சிறுகதையும் அச்சிடப்படவில்லை. இது தவிர, இன்றுவரை அவரது கதைகளில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. எனவே ரஷ்ய மொழி அறியாதவர்களால் இந்தக் கதைகளின் தாக்கத்தை முழுமையாய் பெற முடியாது.
 
ஷாலமோவின் கதைகள் தனியுலகம் போன்ற முகாம்களை வலிமிகு மாபெரும் அமைப்புகளாக விவரிக்கின்றன. அது தன்னுள் சிக்கிக்கொண்ட ஆண்களையும் பெண்களையும் தின்று செரிக்கிறது. ட்ரை ரேஷன்ஸ் என்ற கதையில் அவர் எழுதுகிறார்: “மனித உணர்வுகள் அனைத்தும்- அன்பு, நட்பு, பொறாமை, சக மனிதன் மீதான அக்கறை, கருணை, புகழாசை, நேர்மை- அவற்றின் உணவற்ற நீண்ட காலங்களில் நம் உடலிலிருந்து உருகி ஒழுகிய சதைப்பிண்டங்களாய் நம்மை விட்டுச் சென்றுவிட்டன”. டைபாய்ட் க்வாரண்டைன் என்ற கதையில் அவர் கடும் பணி தண்டனையின் நீண்ட கால பின்விளைவுகளைப் பட்டியலிடுகிறார்: இறுகி வளைந்த கரங்கள், பனிக்கு பலியான உடலுறுப்புகள், ஸ்கர்வி புண்கள், சீழ் ஒழுகும் கால் விரல்கள். தொழுநோயாளிகள் என்ற கதையில், ஒரு பணியாள், “அவனே கொதியில் வைக்கப்பட்டுள்ள பயங்கரமான ஒரு கெட்டிலில்” சிக்கிக் கொண்டவனாக விவரிக்கப்படுகிறான்.
 
சுரங்கங்களில் வேலை செய்வதைத் தவிர்க்க தங்கள் காயங்களில் அழுக்கைத் தடவிக் கொள்ளும் கைதிகள் உலகுக்கு நம்மை ஷாலமோவ் கொண்டு செல்கிறார்; இங்கு அதே காரணத்துக்காக தங்களை ஊனப்படுத்திக் கொள்கின்றனர்- “கொல்யாவின் சந்தோஷம் குண்டு வெடித்து அவனது கை சிதறிய நாளில் துவங்கிற்று”-; அண்மையில் இறந்தவர்களை மண்ணிலிருந்து தோண்டி எடுத்து அவர்களின் ஆடைகளைத் திருடிக் கொள்கின்றனர் (“கால் சராய்கள் புதிது போல் இருக்கின்றன, தெரியுமா.” என்று திருப்தியுடன் சொன்னான் பாக்ரெட்சோவ்”); இங்கு கவிஞன் ஓசிப் மாண்டல்ஸ்டாமின் பங்க்கில் இருப்பவர்கள் அவன் இறந்தபின் அவனது கையை ஒரு பொம்மை போல் இரண்டு நாட்கள் உயர்த்திப் பிடிக்கின்றனர்- அவன் பங்காக அளிக்கப்படும் ரொட்டியைப் பகிர்ந்து கொள்கின்றனர்; இங்குதான்  தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய வாய்ப்பு அளிக்கப்படுகிறது- அங்கு அற்புத கனிகள் இருக்கின்றன, “அடர்ந்த நீல வண்ண நெல்லிகள், காலியாய் இருக்கும் தோல்பை போல் சுருக்கங்கள் கொண்டவை, விவரிக்க முடியாத சுவை கொண்ட கருநீலச் சாறு நிரம்பியவை”, இந்தப் பகுதியினுள் புகுபவர்கள் தண்டனையாய் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். 
 
“நெல்லிகள்” என்ற கடைசி கதையில் உள்ள கதைசொல்லி, தன் சகாவின் உடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்:
 
“மலைமேடுகளுக்கிடையே கிடந்த ரைபாகோவ் வினோதமான வகையில் குறுகிப் போயிருப்பது போல் தெரிந்தான். வானம், மலைகள், ஆறு எல்லாம் மிகப் பெரிதாய் இருந்தன, இந்த மலைப்பாதைகளிடையே எத்தனை பேர் இந்த மலைமேடுகளுக்கிடையே கொன்று புதைக்கப்பட முடியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.”
 
இப்போதே இறந்தவர்களும் இனி இறக்கப்போகிறவர்களுமாய் இறந்தவர்கள் நிறைந்த வெளி என்று கொலிமா அனைத்து கதைகளூடும் விவரிக்கப்படுகிறது-  இது, ஷாலமோவின் கதைகளின் நோக்கத்துக்கு அடிப்படை முக்கியத்துவம் கொண்டதொன்று குறித்து ஏதோ ஒன்றைச் சுட்டுகிறது. லெண்ட்- லீஸ் என்ற கதையில் வரும் இந்த வரிகளைப் பாருங்கள். இந்தக் கதை இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் நிகழ்கிறது, மரம் வெட்டும் இயந்திரம் ஒன்றை இயக்குபவன் 1958ஆம் ஆண்டைச் சேர்ந்த கூட்டுக் கல்லறைகளைக் கண்டெடுக்கிறான்:
 
“கொலிமாவில் உடல்கள் மண்ணுக்கு அளிக்கப்படுவதில்லை, கல்லுக்குக் கொடுக்கப்படுகின்றன. கற்கள் ரகசியங்களைக் காப்பாற்றி வைத்திருக்கின்றன, ரகசியங்களை வெளிப்படுத்துகின்றன. உறைபனி ரகசியங்களை பாதுகாத்து வைத்து வெளிப்படுத்துகிறது. கொலிமாவில் இறந்த நம் அன்புக்குரியவர்கள் அனைவரும், சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும், அடித்துக் கொல்லப்பட்ட அனைவரும், பசியால் உறிஞ்சப்பட்டு உலர்ந்து இறந்த அனைவரும், பல பத்தாண்டுகள் போன பின் இப்போதும் அடையாளம் கண்டு கொள்ளப்படக் கூடியவர்களாக இருக்கின்றனர். கொலிமாவில் வாயு அடுப்புகள் கிடையாது. பிணங்கள் கல்லில் காத்திருக்கின்றன, உறைபனியில் காத்துக் கிடக்கின்றன… இங்கு உடல்கள் அழுகிப் போவதில்லை; அவை காய்ந்து போன எலும்புக்கூடுகள் மட்டுமே, அவற்றின் மீது அழுக்காய், சிரங்குபிடித்து சொறிந்து கொள்ளப்பட்ட, உண்ணிகளால் கடிக்கப்பட்ட தோல் போர்த்தப்பட்டிருக்கிறது… பூமி திறந்து கொண்டது, அதன் மண்ணுறை காப்பிடங்களை வாய் திறந்து காட்டியது, அவற்றுள் பொன்னும் ஈயமும், டங்க்ஸ்டனும் யுரேனியமும் மட்டுமல்ல, அழுகாது கிடக்கும் பிணங்களும் இருக்கின்றன”
 
ஆயின், உறைந்த மண், ரகசியங்களை பாதுகாத்து வெளிப்படுத்துகிறது; அது ஓர் ஆவணக்காப்பகமாய் செயல்படுகிறது, ஷாலமோவ் நினைவுக்காப்பகங்களாய் படைக்கும் கதைகளின் பௌதிக மாற்றுரு. இவற்றில் நம்பிக்கையின்மை இருந்தாலும், முகாம்களிலிருந்து நன்மை எதுவும் பிறக்க வாய்ப்பில்லை என்ற அவரது வலியுறுத்தலுக்கு அப்பாலும் (“வடக்கு எங்களுக்கு நிரந்தரமாய் நஞ்சிட்டு விட்டது, அதை நாங்கள் அறிந்திருந்தோம்”), அவரது எழுத்து ஒரு எதிர்ப்பு, அது விரக்தியின் குரலல்ல. அவரது கதைகள், “உண்மையான வாக்குமூலம் ஆனால் அவற்றில் விரக்தியோ நம்பிக்கை வறட்சியோ கிடையாது” என்று எதை லியோனா டோகர் விவரிக்கிறாரோ, அதில் அவருக்கு உண்மையாகவே நம்பிக்கை இருந்தது. 
 
ஷாலமோவ்வின் நம்பிக்கையை அவரது கதைகளைக் கொண்டே நாம் அறிந்து கொள்ள இயலும். இந்தக் கதைத் தொடரின் முதல் கதை, பனியினூடே, சிறைக்கைதிக் குழுவொன்று மிதித்துச் செல்லும் வழி நெடுக சாலையொன்று உருவாவதை விவரிக்கிறது. நேரடி விவரிப்பு போல் இருக்கிறது இந்தக் கதை, அதாவது, அதன் இறுதி வாக்கியங்களுக்கு வரும் வரை: 
 
“அவர்கள் ஒவ்வொருவரும், அவர்களில் மிகச் சிறியவனும்கூட, அவர்களில் மிக தொய்ந்திருப்பவனும்கூட, கன்னிப்பனியை மிதித்துச் சென்றாக வேண்டும்- வேறொருவனின் பாதச்சுவட்டின் அடியொற்றிப் போகக்கூடாது. அந்தப் பாதையில் டிராக்டர்களிலும் குதிரைகளிலும் பயணித்தவர்கள், எழுத்தாளர்களாக மாட்டார்கள், வாசகர்களாய் இருப்பார்கள்”.
 
தண்டனைக் கைதிகள் எழுத்தாளர்களாய் சித்தரிக்கப்படும் அந்தக் கணத்தில், புதிய சாலை முகாமுக்கும் சுரங்கத்துக்கும் இடையில் சரக்கு கொண்டு செல்லும் பாதையாய் மட்டும் நில்லாமல், முகாமுக்கும் அதைக் காட்டிலும் பரந்த சமுதாயத்துக்கும், ரகசியத்துக்கும் உண்மைக்கும் இடையிலான தொடர்பு பாதையாகிறது. கொலிமா கதைகள் தனித்தன்மை கொண்ட தளங்கள் பலவற்றிலும் ஏககாலத்தில் எப்போதும் இயங்கும் கதைகளாகத் தன்னை அறிவித்துக் கொள்கிறது. இதே போல், எஞ்சினியர் குப்ரீவ்வின் வாழ்க்கைக் கதை என்ற கதையில் ஒரு கண்ணாடியின் விவரணை சாட்சியம் அளித்தலின் முக்கியத்துவத்தையும் அதன் விலையையும் பேசி இரட்டைப் பணி செய்கிறது:
 
“கண்ணாடிகள் நினைவு காப்பதில்லை. என் பெட்டியில் நான் ஒளித்து வைத்திருக்கும் பொருளை கண்ணாடி என்று சொல்லக் கடினமாக இருக்கிறது. கலங்கிய நதிப்பரப்பு போல் தோற்றம் தரும் கண்ணாடித் துண்டம் அது. இந்த ஆறு சேறாகிவிட்டது, இனி எப்போதும் சேறு படிந்தே இருக்கும், அது முக்கியமான எதையோ, எக்காலத்துக்கும் மறக்கப்படக்கூடாத முக்கியத்துவம் கொண்ட எதையோ நினைவு வைத்திருக்கிறது என்பதால் அல்ல, அது படுகை வரை தெள்ளிய படிகம் போன்ற, ஒளி ஊடுருவும் நீரோடையாய் இனி எப்போதும் இருக்க முடியாது. இந்தக் கண்ணாடி கலங்கலாகி விட்டது, அது எதையும் பிரதிபலிப்பதில்லை”
 
சேறு படிந்த கண்ணாடியை ஷாலமோவ் என்று எடுத்துக் கொண்டால், அவரது நினைவுகூரல் (“எக்காலத்துக்கும் முக்கியத்துவம் கொண்ட” ஏதோவொன்று) அதன் தடத்தை அவரிடத்து விட்டுச் சென்றிருந்தால், லேண்ட்-லீஸ் என்ற கதையின் முடிவில், தோண்டியெடுத்த பிணங்களை மீண்டும் புதைத்த புல்டோசர் ஒன்றைக் குறித்த விவரிப்பு, ரகசியம் காப்பது, ரகசியங்களை வெளிப்படுத்துவது ஆகிய இரண்டு குறித்த உரையாடலின் ஒரு பகுதியாகிறது: 
 
“புல்டோசர் உறுமியபடி எங்களைக் கடந்து சென்றது; கண்ணாடி போன்ற புல்லிதழில் ஒரு சிராய்ப்பும் இல்லை, துளி கறை படியவில்லை”
 
உண்மையை எதிர்கொள்வது என்பது, சிறிதளவு சேதத்தையேனும் ஏற்றுக் கொள்வதாகும் என்பதை இந்த இணை பிம்பங்கள் உணர்த்துகின்றன. இவற்றோடு தொடர்புடையதாய், ட்ரை ரேஷன்ஸ் என்ற கதையில், “மனிதன் தன மறதியின் ஆற்றலால் வாழ்கிறான்”, என்று வாசிக்கிறோம். ஆனால் நினைவுகூரல் என்ற வகையில் வலிந்து எழுதப்பட்ட ஒரு கதையில் இந்த வாக்கியம் வருவதில் ஒரு முரண்நகை இருக்கிறது. கொலிமா கதைகளை வாசிப்பது என்பது இதுபோன்ற கணங்களை எதிர்கொள்வதாகும், நமக்குள் மட்டுமல்ல, இந்தக் கதைகளிடையே உள்ள குறுக்குக் கோடுகளையும் விலகு கோடுகளையும் கண்டுணர்வதாகும். “ஒவ்வொரு நாவலாசிரியனைப் போலவும்,” என்று ஷாலமோவ் எழுதுகிறார், “நானும் துவக்கச் சொற்களும் இறுதிச் சொற்களும் தனித்துவம் கொண்ட வகையில் பொருள்பட அமைக்கிறேன்”. அந்த இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள சொற்கள் அனைத்து குறித்தும் அவர் இதையே சொல்லியிருக்கலாம், தனித்தனியாய் நிற்கும், ஆனால் ஒன்றுடனொன்று தொடர்புடைய இந்தக் கதைகளுக்கிடையே உள்ள அடர்ந்த, ஆனால் தீவிரமாய் இயங்கும் இடைவெளிகள் குறித்தும் அவர் இதையே சொல்லியிருக்கலாம்.
 
மேற்கோளில் கையால்பட்டவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் ஜான் கிளாட், ராபர்ட் சான்ட்லர், நாதன் வில்கின்சன்.
 
ஒளிப்பட உதவி- விக்கிப்பீடியா
நன்றி- The Guardian

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.