
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் டேனிஷ் சகா ஒருவர், நான் நல்ல சிறுகதை எழுத்தாளராக வருவேன் என்று தான் நினைப்பதாகச் சொன்னபோது, அதை மறுத்து தலையசைத்தேன்- அதெல்லாம் இல்லை. ஆனால் அவர் தான் சொன்னதை மீண்டும் வலியுறுத்தினார். நான் பேசும் விதத்தில் ஒரு துல்லியம் இருக்கிறது, ஆணித்தரமாகப் பேசுகிறேன், இவை சிறுகதை வடிவத்துக்கு கச்சிதமாகப் பொருந்தக்கூடும். நான் திரும்பவும் சொன்னேன்: அதெல்லாம் இல்லை.
அச்சமும் அனுபவமின்மையும்தான் என் மறுப்புக்கான காரணங்கள் என்று நினைக்கிறேன். எனக்கு எழுத்துத் திறமை போதாது என்று அஞ்சினேன், எல்லாவற்றையும்விட சிறுகதை வடிவம்தான் மிகக் கடினமானது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏன்? சிறுகதையில் பிழை செய்ய இடமில்லை. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்ற விஷயத்தில் ஒவ்வொரு நொடியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒவ்வொரு வாக்கியமும் பாத்திரப்படைப்புக்கு உதவக்கூடிய, ஒரு கிராமத்தைக் கொளுத்தக்கூடிய, ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும்- இதை எல்லாம் சிரமம் தெரியாத வகையில் செய்ய வேண்டும். துல்லியமாய் எழுதக்கூடிய திறமை வாய்க்கப்பெற்ற ஒரு சில எழுத்தாளர்களால் மட்டுமே இதைச் சாதிக்க முடிந்திருக்கிறது, இதில் தோற்றுப் போவது குறித்து எனக்கு அச்சம் இருந்தது.
நான் பட்டப்படிப்பு முடித்ததுமே என் முதல் நாவலை பதிப்பித்திருந்தேன், அது மிக நீண்ட நாவல். ஸ்வீடிஷ் இலக்கியத்தில் பட்டக்கல்வி செய்திருந்தேன், கெர்ஸ்டன் ஈக்மான் குறித்து நான் ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தேன். அவர் மிகப்பெரிய இருப்பியல் நாவல்கள் எழுதுபவர். ஸ்வீடிஷ் வரலாற்றில் அவரைப் போன்ற எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். செல்மா லாகர்லாப் என் மற்றொரு ஆதர்ச எழுத்தாளர். இவர்கள் வீரமானவர்கள் என்று நினைத்தேன். இவர்கள் இங்க்மார் பெர்க்மான் போன்றவர்கள்: ஆன்மாவினுள் ஆழச் செல்லும்போது வெளிப்படும் விஷயங்களை எதிர்கொள்ள அஞ்சாதவர்கள், எப்போதுமே நாகரிகத்தின் வலிமிகுந்த, கண்ணுக்குப் புலப்படாத உலகங்களை ஆய்வு செய்பவர்கள். எனக்கு எழுதக் கற்றுத் தந்த எழுத்தாளர்கள் இவர்கள். அல்லது, எழுத முயற்சிக்கும் துணிச்சலைக் கொடுத்தவர்கள். அவர்கள் பெரிய பெரிய புத்தகங்கள் எழுதியதால் நானும் கனமான நாவல்கள் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.
இப்போது இந்த டேனிஷ் எழுத்தாளர் என்னிடம் வந்து, நான் சிறுகதை வடிவில் அசத்துவேன் என்று சொல்கிறார். அதெல்லாம் இல்லை! மறந்துவிடு, என்று முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்கிறேன்.
எம் நேசத்துக்குரிய ஸ்வீடிஷ் சகோதரர்கள் போலன்றி, டேனிஷ் மக்களாக்கிய எங்களுக்கு மானுடத்தின் இருண்ட பகுதிகளில் ஆழத் துளைத்துச் செல்வதில் குறிப்பாய் எந்த ஒரு நாட்டமும் கிடையாது. ஆம், நார்டிக் நோர் வகை டிவி சீரியலில் ஒரு சிலரைக் கொலை செய்யலாம், ஆனால் இலக்கியம் என்று வரும்போது முரண்நகையும் நடையும்தான் எங்களை வசீகரிப்பவை. எல்லாவற்றையும்விட, டேனிஷ் மொழி வார்த்தையின்மையால் சபிக்கப்பட்டது- அல்லது, அருளப்பட்டது என்று சொல்ல வேண்டுமோ என்னவோ. ஆங்கில மொழியோடு ஒப்பிட்டால், உருப்படியாய் எதையும் செய்ய எங்களிடம் இருக்கும் சொற்களின் எண்ணிக்கை பாதியளவுதான் இருக்கும். எனவே டேனிஷ் மொழி, படைப்பூக்கத்தைக் கோருகிறது. சில வார்த்தைகளுக்கு பல்வேறு அர்த்தம் உண்டு. ஒரு சொல்லை எங்கு பயன்படுத்துகிறோம் என்பதற்கு ஏற்ப அதன் பொருள் மாறுகிறது. நாங்கள் இருப்பதை வைத்துக் கொண்டு எப்படி இட்டுக் கட்டுகிறோம் என்பதைப் பார்த்து ஸ்வீடிஷ் எழுத்தாளர்கள் எங்கள்மீது பொறாமைப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. நாங்கள் மொழியை விளையாட்டாய் பயன்படுத்த கட்டயப்படுத்தப்படுகிறோம், வேறு வழியில்லை.
ஆக, இதுதான் நிலவரம்: ஸ்வீடிஷ் எழுத்தாளர்கள் இலக்கியத்தை பெருநோக்குடன், அச்சமின்றி, இருத்தலியல் பார்வையுடன் அணுகுகிறார்கள். டேனிஷ் எழுத்தாளர்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டவர்களாக, விளையாட்டாய், கலைத்துப் போடும் மனப்பான்மை கொண்டவர்களாய், மொழியை முரண்நகை வெளிப்படும் வகையில் பயன்படுத்துகிறார்கள். எனக்குள் ஒரு ஸ்வீடிஷ் எழுத்தாளன் பதுங்கியிருக்கிறான் என்ற நிலையில் இதோ இவன் சொல்கிறான் – என் மொழியின் பலங்களை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முடியவே முடியாது, என்று சொன்னேன்.
ஆனால் அப்போது ஒரு சிறுகதை போட்டி பற்றி என்று கேள்விப்பட்டேன். பரிசுத் தொகை இருந்தது, எனக்கு பணம் தேவைப்பட்டது. எனவே நான் ஒரு கதை எழுதினேன். வெற்றி பெறவில்லை, ஆனால் எனக்கு இரண்டாம் பரிசும் நிறைய பாராட்டும் கிடைத்தது. தடிமனான புத்தகங்களை எழுத நான் போராடிக் கொண்டிருந்தாலும்கூட, சிறுகதை வடிவம் குறித்து எனக்கு இருந்த அச்சம் என்னைவிட்டு அகலத் துவங்கிற்று. 2008ஆம் ஆண்டு, கராத்தே அடி (Karate Chop) என்ற சிறுகதை தொகுப்பு எழுதி முடித்தேன். அந்த எழுத்தனுபவம் அற்புதமானது, ஏனெனில் ஒரு வழியாய் எனக்குச் சிறுகதை வடிவம் பிடிபட்டு விட்டது. அதில் இருந்த விஷயங்கள் ஆழமானவை, இருள் நிறைந்தவை, ஸ்வீடிஷ்தனமானவை. ஆனால் மொழியும் நடையும் டேனிஷ்தனமாக இருந்தது. மாபெரும் காவியங்களின் பேசுபொருளை என் அகத்துக்கு இன்னமும் நெருக்கமான அழகியல் வடிவத்தோடு இணைப்பது எப்படி என்பதை ஒரு வழியாய் கண்டு கொண்டேன். இது ஒருவகை மினிமலிசம், ஆனால் அதைக் காட்டிலும் பெரிய ஏதோவொன்று உள்ளிருந்து உடைத்துக் கொண்டு வெளிவரப் போராடிக் கொண்டிருக்கிறது. அந்த ஏதோவொன்று என்னவென்பது எனக்குத் தெரிந்திருக்கிறது: ஒரு டேனிஷாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஸ்வீடிஷ்காரிதான் அது, அல்லது ஸ்வீடிஷ் மொழியில் எழுதப்படும் விஷயங்களை ஒரு டேனிஷ்காரி முயற்சித்துப் பார்க்கிறாள்.
மீண்டும் யோசித்துப் பார்க்கும்போது: என் பல்கலைக்கழகத்தின் இலக்கிய துறை பேராசிரியர்கள் எப்போதும் அழுத்திச் சொன்ன விஷயம் இது- ஓர் எழுத்தாளர் தன் எழுத்து குறித்து கூறுவது எதையும் எப்போதுமே நாம் நம்பக் கூடாது. எழுத்தாளர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல.
என்னையும் நீங்கள் நம்பக்கூடாதோ என்னவோ.
ஆனால் எனக்கு இது தெரிந்திருக்கிறது: கராத்தே அடி எழுதியபின் நான் மிகவும் கட்டுக்கோப்பான இரு குறுநாவல்கள் எழுதி முடித்திருக்கிறேன்- அவற்றில் மிக அண்மையில் எழுதியதுதான், மின்னாவுக்கு ஒத்திகைக்கான இடம் தேவைப்படுகிறது (Minna Needs Rehearsal Space)- தன் குரலை இழந்துவிட்ட கம்போஸர் ஒருத்தியைப் பற்றிய கதை (அதுதான் அவளது ஒத்திகை வெளி). தலைப்புச் செய்திகளை மட்டுமே பயன்படுத்தி அதை எழுதியிருக்கிறேன்- ஆம், தலைப்புச் செய்திகள் மட்டுமே. கராத்தே அடியும் மின்னாவுக்கு ஒத்திகைக்கான இடம் தேவைப்படுகிறது என்ற இரண்டும் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன, குறுகிய வடிவில் எழுதக்கூடியவள் என்று எனக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்திருக்கின்றன.
ஆம், என்னால் இந்த வடிவில் நன்றாக எழுத முடியும் என்று சொன்ன அந்த எழுத்தாளரை நான் அழைத்துப் பேச வேண்டும். அவரிடம் இதைச் சொல்ல வேண்டும்- என் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டதற்கு வருந்துகிறேன், மன்னித்து விடு. நீ சொன்னதுதான் சரி.
ஒளிப்பட உதவி- Graywolf Press
நன்றி- Pen