யாரோ ஒருவன்

ஹரன் பிரசன்னா

பிரகதி மைதானத்தில் நடக்கும் டெல்லி புத்தகக் கண்காட்சியின் குளிரூட்டப்பட்ட அரங்குக்குள் நுழைந்தபோதே என் நாசி அந்த மணத்தை உணர்ந்து இதற்கு முன்பு டெல்லி வந்ததன் நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தது. உடனே நினைவுக்கு வந்தவன் சுனில் வர்மாதான். கடந்தமுறை என் புத்தக அரங்குக்குப் பக்கத்து அரங்கில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தான். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்துகொண்டிருந்த புத்தகக் கண்காட்சியில் எத்தனையோ முறை பங்கேற்றிருந்தாலும், யாருடனும் ஒட்டிப் பழகியதில்லை. ஒரு ஹாய் ஒரு ஹலோ, அவ்வளவுதான். ஆனால் கடந்தமுறை சுனில் வந்து வந்து பேசினான். எத்தனை முறை கிழே இறக்கிவிட்டாலும் வலிந்து இடுப்பேறிக் கொள்ளும் குழந்தை போல.

அவனுக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் விடாமல் பேசிக்கொண்டே இருப்பான். எனக்கும் அவனுக்கும் பத்து வயது வித்தியாசமாவது இருக்கும். வெளுத்த தோலுடன் ஒல்லியாக உடல் உள்ளொடுங்கி அவன் பேசும்போதெல்லாம் தொண்டைக் குமிழ் ஏறி இறங்குவது எனக்கு சிரிப்பாக வரும். அவனைப் பார்க்கும்போதெல்லாம் சிரிப்பேன். சம்பந்தமில்லாமல் என்னென்னவோ பேசுவான். ரொட்டியை வாங்கி சாயாவில் முக்கி யாரோ அடித்துப் பிடுங்கவருவதுபோல வேகவேகமாக அவன் உண்பதைப் பார்க்க எனக்குச் சிரிப்பாக வரும். அதே ரொட்டியைக் காண்பித்து சாப்பிடறீங்களா ஜி என்பான். வேண்டாம் என்று மறுப்பேன். சுடச்சுட கடும் சாயா வாங்கித் தருவான். மெல்லிய மீசை நெளிய இது தனது ட்ரீட் என்று சொல்வான்.

எனக்கு சுத்தமாக ஹிந்தி வராது. மதராஸி எல்லோருமே ஒன்றுபோலத்தானா என்று கேட்டான். ஆமாம் என்பதா இல்லை என்பதா என்று நான் முடிவெடுப்பதற்குள் அடுத்த கேள்விக்குப் போனான். இங்கேயே கிடைக்கும் ரொட்டி சப்ஜியை விட்டுவிட்டு வெளியே சென்று ஆட்டோ பிடித்து தென்னிந்திய ஹோட்டலுக்கு சாப்பிடப் போவீர்களே என்றான். மிக ஆர்வமாக இங்கே தென்னிந்திய சைவ ஹோட்டல் உள்ளதா என்று கேட்டேன். மதராஸி என்றான்.

உங்களுக்கு மட்டும் கோதுமை இல்லாம முடியுதா என்று ஆங்கிலத்தில் வேகமாகக் கேட்டேன். நான் சொன்னது அவனுக்குப் புரியவில்லை. நான்கைந்து முறை மாற்றி மாற்றிக் கேட்டேன். சிரித்துக்கொண்டே இருந்தான். ஆன்லைனில் திக்கித் திணறி அதை ஹிந்தியில் மாற்றி அவனிடம் கேட்டேன். நீங்கள் முதல்தடவை ஆங்கிலத்தில் சொன்னபோதே புரிந்ததே என்றான். நான் நினைத்தது போல அத்தனை முட்டாளில்லை. முட்டாள்களிலேயே கொஞ்சம் விவரமானவன்தான்.

இன்னும் ஆறு மாதங்களில் கல்யாணம் என்றான். அப்படிச் சொன்னபோது கல்யாணப் பெண்கூட கன்னம் அத்தனை சிவந்திருப்பாள் என்று சொல்லமுடியாது. பத்திரிகை அனுப்புகிறேன் என்றான். புத்தகக் கண்காட்சி முடிந்ததும் எங்களுடன் ஊர்சுற்றிப் பார்க்க உடன் வருவதாகச் சொல்லி, அவனும் வந்தான். என்னுடன் வந்திருந்த செல்வாவுடன் சேர்ந்துகொண்டு என்னவோ சொல்லி சிரித்துக்கொண்டிருந்தான். ஹிந்தி தெரிந்தவன் உள்ளூர்க்காரன் கூடவருவது நல்லதுதான் என்று செல்வா சொன்னான். புத்தகங்களை அடுக்குவது, பில் போடுவது இதெல்லாம் செல்வாவின் வேலை. செல்வாவுக்கு ஆங்கிலமும் வராது, ஹிந்தியும் வராது. ஆனாலும் அவர்கள் இருவரும் பேசி சிரித்துக்கொண்டு வந்தார்கள்.

பக்கத்தில்தான் தனது கிராமம் என்று சொல்லி அவன் ஊருக்கு எங்களை அழைத்துச் சென்றான். தமிழ்நாட்டு கிராமங்களைப் பார்த்துப் பழகிய எங்களுக்கு அந்த கிராமம் ஆச்சரியமாக இருந்தது. ஆங்காங்கே வீடுகள் இருந்தன. பஸ் என்ற ஒன்று எப்போதாவது வரும். கிடைக்கும் டிராக்டரில் தொற்றிக்கொண்டு எங்கே வேண்டுமானாலும் போகிறார்கள். சாயா கிடைத்தால் போதும். ரொட்டியும் கிடைத்துவிட்டால் சொர்க்கம். சாலையோரங்களில் உட்கார்ந்து பேசிக்கொள்கிறார்கள். எல்லாரும் கம்பளி சுற்றி கண்ணில் படும் இடங்களிலெல்லாம் துப்பிக்கொண்டே இருக்கிறார்கள். வழியெங்கும் தோட்டங்களில் உருளைக்கிழங்கு பயிரிட்டிருக்கிறார்கள். சுனிலும் அவன் தோட்டத்தில் உருளைக்கிழங்கு பயிரிட்டிருந்தான். அவன் அம்மா தலையில் முக்காடிட்டு கருத்து உடல் வற்றி நடுங்கும் கைகளில் குடிக்க நீர் கொடுத்தாள். உருளைக்கிழங்கு ஊருக்குக் கொண்டு போகச் சொன்னாள். ரொட்டி சுட்டுத் தரட்டுமா என்று கேட்டாள். செல்வா ஆசையாகப் பார்த்தான். நான் கண்களால் மறுத்தேன்.

ஊர் கிளம்பும் நாளில் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த சுனில் எங்கள் கம்பார்ட்மெண்ட்டில் இரண்டு கூடைகள் உருளைக்கிழங்கை ஏற்றி வைத்திருந்தான். நான் செல்வாவைத் திட்டினேன். எங்கள் தொலைபேசி எண்களை சுனில் வாங்கிக்கொண்டான். தொடர்புகொள்வதாகக் கூறினான். அவன் கல்யாணத்துக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினான். ரயில் கிளம்பியதுமே மெல்ல அவன் வெறும் நினைவாக மாறிவிடுவான் என்றுதான் நினைத்தேன். ஆனால் என் கண்முன் உருளைக்கிழங்கு கூடைகள் ரயிலில் ஆடிகொண்டு நின்றன.

சொன்னது போலவே போனில் அடிக்கடி அழைத்தான். நேரம் காலம் தெரியாமல் ஆங்கிலத்தில் உளறிக் கொட்டினான். பிஸி என்றால் ஸாரி ஸாரி என்று சொல்லிவிட்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பான். செல்வா எங்கள் கம்பெனியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வேறு கம்பெனிக்குப் போய்விட்டான். அதைக் கேள்விப்பட்டவுடன் அவனை துரோகி என்று சொன்னான். இன்றுவரை அவன் ஏன் அப்படி சொன்னான் என்று எனக்குப் புரியவில்லை.

தன் கல்யாணத்துக்கு என்னை மட்டும் அழைத்தான். செல்வாவுக்கு சொல்லவேண்டாம் என்றான். உங்களை விட்டுவிட்டு எப்படி வேறு கம்பெனி போகலாம் என்று கோபப்பட்டான். அவ்வளவுதானா நம்பிக்கை என்றான். இவன் முட்டாளா நடிக்கிறானா என்ற சந்தேகம் வந்தது. ஏன் தன் கல்யாணத்துக்கு வரவில்லை என்று வருத்தப்பட்டு மீண்டும் ஒருநாள் அழைத்தான். ஒட்டுமொத்தமாக எடுத்தெறிந்து பேச என்னவோ தடுத்தது. உருளைக்கிழங்கா, நடுங்கும் கைகளில் அவன் அம்மா தந்த நீரா, சுனிலின் அப்பாவித்தனமான பேச்சா எதுவென்று தெரியவில்லை. என்னவோ தடுத்தது. இது என்னியல்பில்லை என்று புரிந்தது. எப்படியோ சுனிலுக்கென்றும் ஒரு தனித்துவம் உள்ளது என்பதை உணர்ந்தேன்.

அடுத்த புத்தகக் கண்காட்சி ஒரு வருடத்துக்குள்ளாகவே வந்தது. இரண்டு வருடங்களுக்கொருமுறை என்றிருந்ததை ஒரு வருடத்துக்கு ஒருமுறை நடத்த ஏற்பாடாகி இருந்தது. இந்தமுறை அவனைப் பார்க்கலாம் என்ற எண்ணமே சந்தோஷம் தந்தது. எதாவது நல்ல பரிசு தர முடிவு செய்து, ஈ புத்தக ரீடர் ஒன்றை கிஃப்ட் பேக் செய்து வைத்துக்கொண்டேன். ஹிந்தி கவிதைகள் பற்றி அவன் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்த நினைவு வந்தது. யார் யார் பெயரையெல்லாமோ சொல்லி நல்ல வரிகள் என்று என்னவோ சொல்லுவான். இந்த பரிசு அவனுக்கு உதவுமா என்று தெரியவில்லை. ஆனால் என்னிடம் இதுதான் தேவைக்கதிகமாக ஒன்று இருந்தது.

புத்தகக் கண்காட்சிக்கு இந்தமுறை என்னுடன் சாஹித் வந்திருந்தான். சாஹித் யாருடனும் ஒட்டமாட்டான். சொன்ன வேலையை எந்திரம் போலச் செய்வான். அடுத்த வேலைக்காகக் காத்திருப்பான். அவனாக எதையும் செய்யமாட்டான். அவனை எங்கள் அரங்கில் இருக்கச் சொல்லிவிட்டு, சுனிலின் அரங்கு இருக்கும் கூடத்தைத் தேடிச் சென்றேன்.

இந்தமுறை நாங்கள் பதினான்காவது கூடத்தில் இருந்தோம். அவனது அரங்கு 10வது கூடத்தில் இருந்தது. அவனுக்கு நான் கொண்டுவந்திருந்த பரிசுப் பொருளைக் கையில் எடுத்துக்கொண்டு சென்றேன். வழியில் உள்ள சாயா கடைகளில் தலையில் மப்ளர் சுற்றி சிலர் சாயா குடித்துக்கொண்டிருந்தார்கள். கடைகளில் ரொட்டியும் பிரெட்டும் சப்ஜியும் கடலையும் கண்ணில் பட்டது. இந்தக் கடைகளில் வந்துதான் கடந்தமுறை செல்வாவும் சுனிலும் எதையாவது சாப்பிட்டபடி அரற்றிக்கொண்டிருப்பார்கள். கண்ணில் படுபவரெல்லாம் சுனிலின் தோற்றத்தில் இருப்பதாகத் தோன்றியது. ஒரு கட்டத்தில் சுனிலின் முகமே மறந்துவிட்டது போல எண்ணம் உருவானது. பையிலிருந்த போனை எடுத்து கடந்தமுறை எடுத்திருந்த புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டே நடந்தேன். உள்ளே இருந்த ராணுவ டாங்கரின் முன்பு சுனில் சிரித்துக்கொண்டிருந்த படத்தைப் பார்த்தேன்.

பத்தாவது கூடத்தில் சுனிலின் கடையில் சுனிலைக் காணவில்லை. வேறு யாரோ ஒருவர் இருந்தார். அவரிடம் என்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டேன். கடை இன்னும் தயாராகவில்லை என்றும் நாளை வந்தால் எனக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அங்கிருந்தவர் சொன்னார். நான் சுனிலைக் கேட்டேன். உங்களுக்கு எப்படி அவனைத் தெரியும் என்று கேட்டார். அவர் சுனிலின் அண்ணனாம். சுனிலுக்கு நேர்மாறான உருவத்தில் இருந்தார். உடல் பெருத்து சிவப்பாக கன்னம் பிதுங்கி வழிந்துகொண்டிருந்தது. குளிர்தாங்காமல் ஸ்வெட்டர் போட்டிருந்தார். நீங்கள் எப்படி வெறும் டீஷர்ட் போட்டுக்கொண்டு இந்தக் குளிரில் நடக்கிறீர்கள் என்று கேட்டார். எனக்கு அப்படி ஒன்றும் குளிர் தெரியவில்லை. அவரது ஆங்கிலம் கொஞ்சம் நன்றாகவே இருந்தது. சுனில் அளவு மோசமில்லை.

சுனில் எங்கே என்று மீண்டும் கேட்டேன். அவரது அம்மா எப்படி இருக்கிறார் என்று நான் கேட்டபோது ஆச்சரியப்பட்டார். அவரது கிராமத்துக்குப் போயிருக்கிறேன் என்றபோது அவரால் அதை நம்பவே முடியவில்லை. கடைப்பையனை அழைத்துக் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே வந்து என்னைத் தனியே அழைத்துப்போய் மெல்ல ரகசியமாக ‘சுனிலுக்கு நாளை இல்லேன்னா நாளைக் கழிச்சு ஜாமின் கிடைச்சிடும்’ என்றார்.

கொலை செய்திருப்பானா? அவனுக்கு அவ்வளவு தைரியம் வருமா? கல்யாணம் என்றார்களே, அதில் ஏதும் பிரச்சினையா? இல்லை, வேறு ஏதேனும் பெரிய சிக்கலா? இப்போது என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டிருந்தபோதே, ஒரு பெண் எங்களை நோக்கி வந்தாள். தலை வகிட்டில் குங்குமம் இருந்தது. சுனிலின் அண்ணன் அவளை என்னிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். சுனிலின் மனைவியாம். அவள் தன்னிச்சையாக தன் சேலைத் தலைப்பை தன் தலையைச் சுற்றி போர்த்திக் கொண்டாள். நமஸ்தே என்றாள். ஒடிந்துவிடுவது போல நின்றாள். என்னைப் பற்றி சுனில் அவளிடம் சொல்லியிருப்பதாகச் சொன்னாள். செல்வாவையும் பற்றிச் சொல்லியிருக்கிறான். இரண்டு நாள்களுக்கு முன்பு அவனைப் பார்க்க சிறைக்குச் சென்றபோதுகூட என்னைப் பற்றிச் சொல்லி, அவனைப் பார்க்க நான் சிறைக்கு வருவேன் என்றும் சொல்லி இருக்கிறான்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவள் கண்களில் வேதனையின் கோடுகளைப் பார்த்தேன். கல்யாணம் ஆகி மூன்றே மாதங்களில் ஏதோ பிரச்சினையில் சிக்கியிருக்கிறான் போல. போலிஸ் அவனை உள்ளே வைத்துவிட்டார்கள். அவள் அவனை நல்லவன் என்றும் அவன் அப்படி செய்ய வாய்ப்பே இல்லை என்றும் சொன்னாள். என்ன செய்தான், என்ன செய்திருக்கமாட்டான் என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் தீவிரமான பிரச்சினை எதுவும் இல்லை என்பது புரிந்தது. அவன் சிறையில் இருந்ததால்தான் நான் சென்னையில் இருந்தே அவனை அழைத்தபோது அவனை போனில் தொடர்புகொள்ளவே முடியவில்லை போல.

கையிலிருந்த பரிசை அவளிடமே கொடுத்துவிடலாமா என்று யோசித்தேன். இல்லை, இன்னும் ஒரு வாரம் இங்கேதான் இருக்கப்போகிறோம், சுனில் வந்தால் சுனிலிடம் கொடுத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன். நாளை நாங்கள் செல்கிறோம், நீங்களும் வருகிறீர்களா என்று அவனது அண்ணன் கேட்டார். ஏனோ சரி என்று சொன்னேன். பின்னர் இதெல்லாம் தேவையா என்ற எண்ணம் வாட்டி எடுத்தது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஏன் பயம்? தெரியவில்லை. சாஹித்திடம் சொன்னபோது அவன் சிரித்தான். சாஹித்தையும் அழைக்கலாமா என்று யோசித்தேன். ஆனால் இரண்டு பேர்தான் பார்க்க முடியுமாம்.

அவனது மனைவியும் நானும் சிறை வளாகத்துக்குச் சென்றோம். சுனிலின் அண்ணா வெளியே நின்றுகொண்டார். சிறை வளாகத்துக்குச் செல்லும் தெருக்களில் நடந்தபோது இனம் புரியாத அனுபவம் என்னைச் சூழ்ந்தது. சிறைக்கம்பிகளை நான் சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். உண்மையான சிறைக்கும் அவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பலர் காத்திருந்தார்கள். ஒரு பெண் தன் கைக்குழந்தையுடன் அவளது கணவனைக் காண காத்திருந்தாள். சுனிலின் மனைவி அக்குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு முதியவர் தன் மகனைக் காண வந்திருந்தார். அவன் யார் வீட்டிலோ நூறு ரூபாய் திருடிவிட்டானாம். இரண்டு நாள்களுக்கு முன்பு போலிஸ் பிடித்துக்கொண்டு வந்துவிட்டது. இந்தக் காலத்தில் நூறு ரூபாய்க்கு ஜெயிலா என்றிருந்தது.

சுனிலைப் பார்க்கும் அனுமதி பெற என் பெயரையும் சுனிலின் மனைவி பெயரையும் எழுதிக்கொடுத்தோம். என்முகவரி, அதற்கான அடையாள அட்டை எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு என்னை உள்ளே அனுப்பினார்கள். என் கண்ணை கணினியில் பதிந்து வைத்துக்கொண்டார்கள். கைவிரல் ரேகையும் வேண்டும் என்றார்கள். இவற்றை சுனிலின் மனைவியிடம் வாங்கவில்லை. நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது. எல்லாம் பழகியதுபோல் சுனிலின் மனைவி வேகவேகமாக அனைத்தையும் செய்தாள். அவளே நேராகச் சென்று கையெழுத்திட்டாள். அவளது ரேகை ஏற்கெனவே இருப்பதால் அவளை நேரடியாக உள்ளே அனுப்பிவிட்டார்கள் என்று பின்னர் அவள் சொன்னபோது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நான் ரேகை பதிந்துவிட்டு வந்ததும் எனக்காகக் காத்திருந்து என்னை அழைத்துச் சென்றாள். கைதிகளை இருபது இருபது பேராகப் பார்க்க அனுமதித்தார்கள்.

திரைப்படங்களில் வருவது போல வலைக்கம்பிகளுக்கு அப்புறத்தில் இருந்துகொண்டு கைதிகள் பேசினார்கள். இப்புறத்தில் இருந்து நாங்கள் பேசினோம். சில நிஜக் காட்சிகள் சினிமாவை ஒத்தும் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பக்கத்தில் சுனில் வந்து நின்றான். என்னைப் பார்த்துச் சிரித்தான். நல்ல உடையில் நெற்றியில் நாமம் இட்டு மொழுக் என்று சிரைத்து பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிடுவது போல இருந்தான். நல்லா இருக்கியா என்று அசந்தர்ப்பமாகக் கேட்டு வைத்தேன். சுனிலின் மனைவி விசும்பி விசும்பி அழுதாள். அவளிடம் ஸாரி என்றேன்.

சுனில் கொஞ்சம் சதை போட்டிருந்தான். கொஞ்சம் நிறம் சிவந்திருந்தான். செல்வா ஏன் வேலையை விட்டுப் போனான் என்றான். அதுல என்ன இருக்கு என்றேன். தான் அப்பா ஆகப் போவதாக சுனில் சொன்னபோது, அவனிடமும் அவன் மனைவியிடமும் கங்கிராட்ஸ் என்று சொல்லி, சொன்னது சரியா தவறா என்று தெரியாமல் நின்றேன். சுனிலின் மனைவி பேசட்டும் என்று ஒதுங்கி நிற்க எத்தனித்தேன். ஆனால் சுனில் என்னுடன் பேசுவதிலேயே குறியாக இருந்தான். இன்னும் ஒருநாளில் ஜாமின் கிடைத்துவிடும் என்றான். புத்தகக் கண்காட்சிக்கு வந்துவிடுவதாகவும், பின்பு கிராமத்துக்குச் செல்லலாம் என்றும், இந்தமுறை நான் கிராமத்தில் ஒருநாளாவது தங்கவேண்டும் என்றும் சொன்னான். சரி என்று தலையை ஆட்டி வைத்தேன்.

தன்மேல் தவறே இல்லை என்றும் போலிஸ் வேண்டுமென்றே உள்ளே வைத்துவிட்டது என்றும் சொன்னான். பின்னால் போலிஸ் நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால் அவன் அதைப் பற்றி கவலைப்பட்டது மாதிரியே தெரியவில்லை. எனக்குத்தான் படபடப்பாக இருந்தது. ஏதோ பண விவகாரம். அரசாங்க அலுவலகத்தில் இவனது நண்பர் ஒருவருக்கு ஒரு வேலை நடக்க அரசு ஊழியர் ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. இவனது நண்பர் இவனைக் கூட்டிக்கொண்டு போயிருக்கிறார். தான் பணத்தை கொடுக்க சங்கோஜப்பட்டு இவனைப் பணம் கொடுக்க சொல்லியிருக்கிறார். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று, இவனே எல்லாம் பேசி பணம் கொடுத்திருக்கிறான். அப்போது அரசு ஊழியர் கொடுத்த புகாரின்பேரில் இவனை உள்ளே வைத்துவிட்டார்கள். உதவி கேட்டு வந்த நண்பன் அத்தோடு போனவன்தான், ஆளையே காணவில்லை.

விஷயம் ஒருவாறாகப் புரிந்தது. சுனில் தப்பு செய்திருக்க வாய்ப்பில்லை என்று என் மனதில் அப்போதும் பட்டது. சுனிலின் மனைவி கண்களைத் துடைத்துக்கொண்டு, இருபதாயிரம் ரூபாய் கொடுத்தது அவ்ளோ பெரிய குற்றமா, அவனவன் கோடி கோடியாக அடிக்கிறான் என்று சொல்லி, கடவுள் இருக்கிறார் என்றாள். அவனும், ‘ஆமா, கடவுள் உள்ளேயும் இருக்கிறார். இங்க கோவில் இருக்கு. பூஜை உண்டு. பிரசாதம் உண்டு’ என்றான். பிரசாதமாக சில சமயம் ரொட்டிகூடக் கொடுப்பார்களாம். சுனிலுக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். உள்ளே கோவிலில் அவன் தினமும் வேண்டிக்கொள்வதுதான் தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று சுனிலின் மனைவி சொன்னாள். வாரம் ஒரு தடவை சமய வகுப்பெல்லாம் உண்டாம். இஸ்கானில் இருந்து வருவார்கள் என்றும் அவர்கள் போட்ட நாமமே இது என்றும் தன் நெற்றியைக் காண்பித்தான்.

இவன் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருப்பதால் அதிகக் கெடுபிடிகள் இல்லாமல் இருந்தான். இவனுக்காக வாங்கிக் கொண்டு போயிருந்த ரொட்டி, கடலை, பிஸ்கட், முறுக்கு எல்லாவற்றையும் வெளியே போலிஸிடம் கொடுத்திருப்பதாகச் சொன்னோம். ஐந்து பாக்கெட் கொடுத்தால் மூன்றை போலிஸ் எடுத்துக்கொண்டு இரண்டை இவனுக்குத் தருவார்களாம். சிகரெட் கொண்டு வந்தீர்களா என்று கேட்டான். உள்ளே புதிய நண்பர்களுக்கு சிகரெட் வேண்டுமாம். அவன் மனைவி ஐந்து பாக்கெட் கொடுத்திருப்பதாக சொன்னாள்.

சுனில் என்னைப் பார்த்து, ‘நீங்க உள்ள வந்திருந்தீங்க, ரொம்ப கஷ்டம். இங்க வெறும் ரொட்டியும் ஊறுகாயும்தான். சப்ஜி எப்பவாச்சும். அதும் வாய்ல வைக்கமுடியாது’ என்றான். நான் ஏன் வரவேண்டும் என்று தோன்றியது. தன் மனைவியைக் காண்பித்து ‘அவ நல்லா சமைப்பா. ஒரு நாள் வீட்டுக்கு வாங்க. அசல் ரொட்டி அசல் சப்ஜி சாப்பிடலாம்’ என்றான். அவள் மீண்டும் விசும்பத் தொடங்கினாள்.

மணி அடித்தார்கள். சுனில் பை சொல்லிவிட்டு உள்ளே சென்றான். நான் அவளுடன் வெளியே வந்தேன். சுனிலின் அண்ணா காத்துக்கொண்டிருந்தார். சுனிலின் மனைவி அழுதுகொண்டே அவரிடம், ‘சாப்பாடு சரியில்லை போல, இன்னும் நிறைய வாங்கிட்டு வந்திருக்கலாம்’ என்றாள். அவர் ஒன்றும் பேசவில்லை. மூவரும் மீண்டும் பிரகதி மைதானத்துக்கு வந்தோம்.

சொன்னபடியே இரண்டு நாளில் ஜாமீனில் சுனில் வெளியே வந்துவிட்டான். ஒரே நாளில் புத்தகக் கண்காட்சிக்கும் வந்துவிட்டான். அன்றிரவு என்னுடன் என் ஹோட்டல் அறைக்கு வருவதாகச் சொன்னான். நிறைய பேசவேண்டும் என்றான். எனக்கு தூங்காமல் இருக்கமுடியாது. இரவு முழுவதும் பேசிக்கொண்டிருப்பானோ என்று தோன்றியது. செல்வா இருந்திருந்தால் பிரச்சினை இல்லை. சாஹித் செல்வாவைப் போல் யாருடனும் சட்டென்று ஒட்டிக்கொள்பவனல்ல. சாஹித்திடம் கேட்டேன். தனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவிட்டான். எத்தனை பெரிய சத்தத்திலும் அவன் தூங்கிவிடுவானாம்.

அன்றிரவு நான் நினைத்தபடி சுனில் பேசிக்கொண்டே இருந்தான். பத்துமுறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டதைச் சொன்னான். எல்லாமே அட்டூழியம் என்றான். பணம் தந்தது ஒரு குற்றமா என்று மீண்டும் மீண்டும் கேட்டான். யார் வாங்கவில்லை, இவன் மட்டும் நல்லவன் வேஷம் போட்டு தன்னை மாட்டிவிட்டதாகப் பொறுமினான். அரசாங்க ஊழியரின் வேலையில் குறுக்கிட்டதாக போலிஸ் சொன்னதாகச் சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தான். ‘அவனுங்க வேலையே அதுதானே’ என்றான். மெல்ல சிரிக்குமாறு சைகை செய்தேன். அது ஒரு ஹோட்டலோடு கூடிய தங்குமிடம். பக்கத்தில் பலர் தங்கி இருப்பார்கள். இப்படி சத்தம்போட்டால் அது அவர்களை எரிச்சலடைய வைக்கலாம். ஆனால் அதையெல்லாம் சுனில் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

ஒரு கட்டத்தில் சுனிலுடன் என்ன பேசுவதென்று தெரியவில்லை. சரி உறங்கலாம் என்றேன். ஆளுக்கொரு படுக்கையில் படுத்துக்கொண்டோம். சாஹித் கீழே ஒரு படுக்கையைப் போட்டுக்கொண்டு கம்பளியை முழுக்க போர்த்திக்கொண்டு படுத்த உடனே உறங்கிவிட்டான். எனக்கு தூக்கம் வராமல் மொபைலில் ஃபேஸ்புக் பார்க்க ஆரம்பித்தேன். என்ன பார்க்கறீங்க என்றான் சுனில். ஒன்றுமில்லை என்றேன். என்னவோ பார்க்கிறீங்களே என்று மீண்டும் கேட்டான். பதில் சொல்லாமல் சிரித்தேன். இந்த நேரத்தில் அவனுக்கு ஃபேஸ்புக்கை விவரிக்கும் சக்தி எனக்கில்லை. சுனில் மீண்டும் தன் கதையைச் சொல்லத் தொடங்கினான். போலிஸ் அவனைக் கைது செய்ததாகச் சொன்ன நேரத்தில் அவனால் என்ன நடக்கிறதென்று நம்பவே முடியவில்லையாம். என்ன செய்வதென்றும் தெரியவில்லையாம். தன் மனைவியை நினைத்தும், அவள் கர்ப்பமாக இருப்பதை நினைத்தும் கண்ணீர் வந்ததாம். நான் என் மொபைலைப் பார்த்துக்கொண்டே தலையசைத்தேன்.

யாருமே நேர்மையாளர்கள் இல்லையாம். ஆனால் அவனைப் போன்ற நேர்மையாளருக்குத்தான் சோதனையாம். அவனது அம்மா சொன்னாளாம். ஓ என்று சொல்லி வைத்தேன்.

என்ன பார்க்கிறீங்க என்றான். மீண்டும் ஃபேஸ்புக் என்றேன். ஓ என்றான். உங்களையெல்லாம் கைது செஞ்சிருந்தா மிரண்டிருப்பீங்க என்றான். மெல்ல அதிர்ந்து பின்னர் புன்னகைத்தேன். அவனும் புன்னகைத்தான். ஏன் சிரிக்கிறீங்க என்றான். பேச்சை மாற்றும் நோக்கத்துடன், ‘இல்லை, ஒரு நல்ல ஸ்டேட்டஸ்’ என்றேன். அப்படீன்னா என்று கேட்டான். அவனைப் பார்த்தேன். என்ன விளக்குவது என்று தெரியாமல் கவிதை என்றேன். என்ன கவிதை என்று கேட்டான். யார் எழுதியது என்றான். யார் ஸ்டேட்டஸ் போட்டது என்றெல்லாம் தெரியாது. அக்கவிதையை யார் எழுதியது என்றும் தெரியாது. யாரோ எழுதியதை யாரோ படித்து யாரோ போட்டிருக்கிறார்கள் என்றேன்.

எங்கே சொல்லுங்கள் கேட்போம் என்றான். எந்த ஆங்கிலத்தில் எப்படி புரியவைக்க என்று தெரியாமல் மெல்ல ஒருவாறு சொன்னேன். ‘லஞ்சம் கொடுத்தேன், சிறையில் தள்ளினார்கள். லஞ்சம் கொடுத்தேன், விட்டுவிட்டார்கள்.’ அர்த்தம் புரிந்ததும் சத்தம் போட்டுச் சிரித்தான். உரக்கச் சிரித்தான். கண்ணில் நீர் வர சிரித்தான். மெல்லச் சிரி என்று நான் சொன்னது எதுவுமே அவன் காதில் விழவில்லை. மெல்ல மெல்ல என்றேன். குலுங்கி குலுங்கிச் சிரித்துவிட்டு, வயிற்றைப் பிடித்துக்கொண்டு கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்து மீண்டும் சிரித்தான். சாஹித் போர்வையை விலக்கிப் பார்த்து, மீண்டும் போர்த்திக்கொண்டான். சுனிலின் முகத்தைப் பார்த்தேன். இவன் சிரிக்கிறானா, அழுகிறானா?

அவன் சிரித்துக்கொண்டே சிரிப்பை அடக்கிக்கொண்டே படுத்துக்கொண்டான். போர்த்திக்கொண்டான். அப்படியே உறங்கியும் போனான். எனக்குத்தான் அதற்கு மேல் உறக்கம் வரவில்லை.

ஒளிப்பட உதவி – Linda Pinda Designs

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.