
காலை ஆறு மணி. வழக்கம் போல் வாக்கிங் கிளம்பினேன். எங்கள் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் உள்ள கட்டிடங்களை ஒரு மணிநேரம் பல முறை சுற்றி வருவது வழக்கம். நடக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் எதிரில் வெங்கடேஸ்வர் ராவ் தோன்றினார். “ஹலோ சார்?” என்று விசாரித்தார். எனக்கு அவரை பார்த்ததில் ஒரே ஆச்சரியமாக இருந்தது. சுமார் இரண்டு வருடங்கள் கழித்து அவரை மறுபடியும் பார்க்கிறேன்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு வெங்கடேஸ்வர் ராவ் தன் மனைவி ராஜி என்று அழைக்கப்படும் ராஜேஸ்வரியையும் பன்னிரண்டு வயது பெண் குழந்தையும் (அவள் பெயர் மாலினியோ ஷாலினியோ) விட்டுவிட்டு வேறொரு பெண்மணியின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அந்தப் பெண்ணை இவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும், ராவ் ராஜியை கூடிய சீக்கிரமே விவாகரத்து செய்துவிடுவார் என்றும் அரசல்புரசலாகக் கேள்விப்பட்டேன்.
என் மனைவிதான் இதை என்னிடம் சொன்னாள், ஆனால் அவளுக்கும் எல்லா விவரங்களும் தெரியவில்லை. அபார்ட்மென்ட்டில் எனக்கு தெரிந்தவர்கள் யாருக்கும் முழு விபரங்களும் தெரிந்திருக்கவில்லை. சில நாட்களுக்கு பிறகு நானும் இதைப் பற்றி கவலைப்படவில்லை. எப்பொழுதாவது ராஜி கண்ணில் பட்டால் மட்டும், என்ன ஆகியதோ இவர்கள் கதை, என்று நினைத்துக் கொள்வேன். விவாகரத்து நடந்து விடும் என்று பலர் உறுதியாக சொல்லியிருந்தார்கள். ஆனால் இன்றைக்கோ என் முன்னால் ராவ் நிற்கிறார். இது என்ன திடீர் திருப்பம்?
ராவ் தெலுங்கர், ஆனால் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் நன்றாக தமிழ் பேசுவார். குள்ளமாக, பெருமனாக இருப்பார். பாதி தலை வழுக்கை. தடிமனான உதடு. காதில் முடி. யாரும் அவரை ஆணழகன் என்று கூறமாட்டார்கள், ஆனால் அவருக்கு இரண்டு மாணவிகள்!! வாழ்க்கையில் பல விஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன.
ராவ் என்னைப் பார்த்து, “ஹலோ சார்,” என்று சொன்னவுடன் எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பதிலுக்கு வெறும் “ஹலோ” என்று சொன்னால் போதுமா? “இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க?” என்று கேட்கவில்லை என்றால் நமக்கு எல்லாம் தெரியும் என்று அவர் நினைத்துக் கொள்வாரா? அப்படி கேட்டால் என்னை இங்கிதம் இல்லாத ஒருவன் என்று நினைத்துக் கொள்வாரா? எனக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. ஒரே தர்மசங்கடமாக இருந்தது. சரி, ஒரு “ஹலோ” சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று நினைத்துக்கொண்டு, “ஹலோ சார், ஹொவ் ஆர் யூ?” என்றேன்.
“ரொம்ப நாளாச்சு பாத்து. எப்படி இருக்கீங்க?”, என்று ராவ் என்னை கேட்டார்.
“ரொம்ப நாளாச்சு. நீங்க எங்க இருந்தீங்க?” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் நானோ, “ஆமாம் சார். ரொம்ப நாளாச்சு. நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” என்றேன்.
“நான் சூப்பரா இருக்கேன் சார். இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்,” என்றார்.
நான் இப்பொழுது அவரது சந்தோஷத்தின் காரணம் கேட்கவேண்டுமா? இல்லை, அவரே சொல்வாரா? அப்படி கேட்கவேண்டும் என்றால், அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி தெரிந்துக்கொள்ள நான் ஆவலாக இல்லை என்ற தொனியில் வார்த்தைகளை எப்படி கோர்த்து கேள்வி கேட்பது?
நான் இதற்கு விடை காணும்முன் ராவ் சொன்னார், “எனிவே நானும் வாக்கிங் போகலாம்னுதான் கிளம்பினேன். உங்களோடயே வாக்கிங் வரேன்” என்றார்.
வேண்டாம் என்றா சொல்லமுடியும்? என்னுடன் அவரும் நடக்க ஆரம்பித்தார். என் மண்டைக்குள் ஒரே ஒரு கேள்விதான் ஓடிக்கொண்டிருந்தது. ராவை “நீங்கள் ஏன் திரும்பி வந்துவிட்டீர்கள்?” என்று கேட்கலாமா, கூடாதா? நகர நாகரிகப்படி இன்னொருவர் சொந்த வாழ்க்கையில் தலையிடுவது தவறு. அதே சமயம் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ஆர்வ கோளாறு எனக்கும் இருந்தது. எதாவது வேண்டாததை கேட்டு ராவ் கோபப்படும்படி ஆகிவிட்டால்? உடன் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அவரே நமக்கு அவர் கதையை சொல்வாரோ? அதைச் சொல்வதற்குதான் என்னுடன் நடக்கிறாரோ?
“என்ன சார். ரொம்ப திங்க் பண்றீங்க போல இருக்கு?” என்று கேட்டார் ராவ்.
“ஒண்ணும் இல்ல சார்” என்றேன்.
“இந்த ரெண்டு வருஷத்துல பெங்களூரு எவ்வளவோ மாறி போச்சு சார். ஆனா நம்ப அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ் அப்படியே இருக்கு. ரெண்டு வருஷம் தள்ளி இருந்ததா தெரியவே இல்ல. அதுவும் ஒங்கள மாதிரி ரெகுலர் வாக்கிங் போறவங்கள பாத்தா ஒண்ணுமே மாறலைன்னு சத்தியம் பண்ணி சொல்லலாம்,” என்றார்.
“நீங்க ரெண்டு வருஷமா எங்க இருந்தீங்க?” என்று நான் கேட்பேன் என்று எதிர்பார்கிறாரா?
நாங்கள் இருவரும் சேர்ந்து நடந்து கொண்டிருப்பதை என் மனைவி இரண்டாம் மாடியிலுள்ள எங்கள் வீட்டின் பால்கனியிலிருந்து ஆச்சரியமாகப் பார்ப்பது தெரிந்தது. அவளும் இப்பொழுதுதான் ராவை இரண்டு வருடம் கழித்து பார்க்கிறாள். வாக்கிங் சென்றுகொண்டிருந்த சிலரும் ராவை இங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அவர்கள் பார்வையில் தெரிந்தது.
“உங்க மனைவி பசங்க எப்படி இருக்காங்க?” என்று ராவ் என்னை கேட்டார்.
“எல்லாம் நல்லா இருக்காங்க சார்” என்றேன். இப்பொழுது நான் அவர் மனைவி மக்கள் பற்றி கேட்க வேண்டுமா? எந்த மனைவியை பற்றி கேட்பது?
“ஹலோ. ஹொவ் ஆர் யூ?” என்று எதிரில் வந்த ஷ்யாம் பானர்ஜியை பார்த்து கேட்டார் ராவ்.
“மிஸ்டர் ராவ். ஐ யாம் பைன். ஹொவ் ஆர் யூ?” என்று கேட்டார் பானர்ஜி
“ஐ யாம் பைன்” என்றார் ராவ்.
பானர்ஜி எங்களை தாண்டிச் சென்ற பிறகு, ராவ் என்னைப் பார்த்து
, “இவன் இன்னுமா கல்கத்தா போகலையா? அப்போல்லாம் அவன் வாரத்துக்கு ஒரு தடவ கல்கத்தா போயிடுவான். அங்க அவனுக்கு ஒரு சின்ன வீடு இருக்குன்னு நிறைய பேரு சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ராவ் எப்பொழுதுமே எல்லோரை பற்றியும் இப்படிதான் பேசுவார்.
“எங்க போனா என்ன சார், நம்ப வீடு நம்ப வீடுதான். திரும்பி வந்துதானே ஆகணும்” என்றார் ராவ். அவர் தன்னை பற்றி சொல்கிறாரா இல்லை பானர்ஜி பற்றி சொல்கிறாரா என்று எனக்கு புரியவில்லை. “ஆமாம் சார் நீங்க சொல்றது சரி,” என்று பொதுவாகச் சொல்லிவைத்தேன்.
“பசங்கதான் சார் முக்கியம். அவங்க எதிர்காலம் நல்லா இருக்கணும்னுதான் நாம பாடுபடணும். எதுவா இருந்தாலும் குழந்தைகள நல்ல வச்சிக்கணும். அதுவும் பெண் குழந்தைய இந்த காலத்துல வளர்க்கறது ரொம்ப கஷ்டம் சார். நாட்டுல அநீதி தலைதூக்கி ஆடுது,” என்றார். இவர் குழந்தைகளை பற்றி எதற்கு பேசுகிறார் என்று எனக்கு புரியவில்லை.
அதற்குப் பிறகு ஒரு சுற்று இருவரும் மெளனமாக நடந்தோம். அப்பொழுது எங்கள் எதிரில் வந்த ராஜி என்னை பார்த்து ஒரு சிறு புன்னகை புரிந்தார். ராவ் என்னிடம், “நான் ரெண்டு ரவுண்டு என் வைஃப் கூட நடக்கிறேன்,” என்றார். ராஜியைப் பார்த்து, “சார் இன்னிக்கி மூட்ல இல்ல. ரொம்ப சைலண்டா நடந்தாரு,” என்றார். “அதெல்லாம் ஒன்றுமில்லை,” என்றேன்.
ராஜியும் ராவும் பேசிக்கொண்டே பின்தங்கிவிட்டார்கள். நான் அரை மணி நேரம் வேகமாக நடந்துவிட்டு எங்கள் கட்டிடத்துக்குள் செல்ல இருக்கையில் என்னை ராமநாதன் பார்த்து விட்டார். “என்ன சொல்றான் அந்த பொறுக்கி?” என்று கேட்டார். ராமநாதன் கேள்வி கேட்பார் என்பது நான் எதிர்பார்த்ததுதான்.
ராமநாதன் எப்பொழுதும் எல்லோரையும் பாராபட்சம் இல்லாமல் திட்டிக் கொண்டிருப்பார். குழந்தைகள், கார் டிரைவர்கள், செக்யூரிட்டி கார்ட், ப்ளம்பர், மாமிகள், தாதாக்கள் என்று எல்லோருக்கும் தின்னும் அர்ச்சனை விழும். அவர் தன் வீட்டில் எப்போது இருப்பார் என்பது யாருக்கும் புரியாத புதிராக இருந்தது. எப்பொழுதும் வெளியில் யாரிடமாவது சத்தமாக விவாதித்துக்கொண்டோ அல்லது திட்டிக்கொண்டோ இருப்பார். அபார்ட்மென்ட் வேலையெல்லாம் இழுத்துபோட்டுகொண்டு செய்வார். அரசு அலுவலங்களுக்குச் சென்று சண்டை போட்டு வேலையை முடிப்பார். அவரை எதிர்த்துக்கொண்டால் எங்கே தாங்கள் அபார்ட்மென்ட் வேலைகளைச் செய்ய வேண்டி வந்துவிடுமோ என்ற பயத்தினால் யாரும் ராமநாதனுடன் யாரும் சண்டை போடுவதில்லை. அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு, அவர் அங்கிருந்து நகர்ந்த பிறகு அவரை திட்டுவார்கள்.
“ஒண்ணும் சொல்லல மாமா. பொதுவா பேசிண்டிருந்தோம்” என்றேன்.
“எப்படி சொல்லுவான்? பண்ணது ரவுடித்தனம். அவன் மூஞ்சியப் பாரு. அவனுக்கு ரெண்டு வீடு வேண்டியிருக்கு. பெண் கொழந்தைய நல்லா பாத்துக்கனும்னு திரும்பி வந்துட்டேன்னு சொன்னானா, அந்த பொம்பள பொருக்கி?”
ராமநாதன் மாமா கேள்வி கேட்பது பதிலை எதிர்பார்த்து அல்ல என்று எனக்கு தெரியுமாதலால் நான் ஒன்றும் சொல்லவில்லை.
“சொல்லி இருப்பான். அப்படிதான் எல்லார்கிட்டயும் சொல்லிண்டு திரியறான். என்கிட்டே வந்து ‘ஹலோ’ன்னு சொன்னான். ‘போடா. உன்னோட என்ன பேச்சு’ன்ற மாதிரி மூஞ்சிய திருப்பிண்டுட்டேன். அவன் மூஞ்சில ஈ ஆடல. அசடு வழிஞ்சிண்டே அங்கேந்து போனான். எனக்கு என்ன பயம். இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் இப்படிதான் டீல் பண்ணனும்” என்றார் கோபமாக.
பிறகு தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.
“அவனோட நான் பேசலையே தவிர அவன பத்தி எல்லா விஷயமும் எனக்கு தெரியும். எல்லார்கிட்டயும் போயி ‘என் பொண்ணுக்காக நான் திரும்பி வந்துட்டேன்’ன்னு பீலா உடறான். எனக்கு தெரியாதா என்ன ஆச்சுன்னு? ரெண்டு பெரும் விவாகரத்துக்கு பாமிலி கோர்ட் போயிருக்கா. அவன் உடனே விவாகரத்து கொடுத்துடுவானா? கவுன்சிலிங் போங்கோன்னான். எல்லாம் முடிஞ்சி விவாகரத்துன்னு முடிவானப்போதான் இவங்களுக்கு சொத்து பத்தி தெரிய வந்தது. ராவ் நெறைய சொத்து வாங்கி போட்டிருக்கான். இங்க மூணு நாலு வீடு இருக்கு. சென்னைல ஒரு வீடு இருக்கு. அத தவிர எங்கயோ ஒரு பிளாட். இப்படி ஏகத்துக்கு சொத்து இருக்கு. இதுனால ரெண்டு பேருக்கும் பிரச்னை.கோர்ட் எப்படியும் சொத்துல பாதிய ராஜிக்கு கொடுத்திடும். அது இவனுக்கு சரிபடல. ஆனா ஒன்னும் பண்ண முடியாது. விவாகரத்து கிடைச்சிடுத்துன்னா ராவ் இன்னொரு லேடிய சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கலாம். அப்போ மீதி இருக்கற சொத்து அவளுக்குப் போகலாம். இது ராஜிக்கு பிடிக்கலை. அதுனால ராவ் ராஜியோட ராஜியாயிட்டான்.”
“அப்போ அந்த இன்னொரு பெண்ணோட நிலைமை?” என்று நான் கேட்டேன்.
“அவளப் பத்தி ராவுக்கே அக்கறை இல்லை. உனக்கு எதுக்கு அக்கறை? நீ போயி அவளுக்கு மறுவாழ்வு கொடுக்கப் போறியா?” என்று கேட்டார் ராமநாதன் மாமா.
நான் பதில் ஏதும் சொல்லவில்லை
“அந்தப் பொண்ணுக்கு அறிவில்லை. இந்த ராஜிக்கும் அறிவில்லை. ரெண்டு பேரும் படிச்சவா. ரெண்டு பேரும் வேலைக்கு போறா. ஆனாலும் ரெண்டு பேருக்கும் இவன் பொம்பள பொறுக்கின்னு தேரியல. அவன செருப்பால அடிச்சி வெளியில அனுப்பாம அவனோட மறுபடியும் வெக்கமில்லாம சேந்துண்டிருக்கா. அவனோட எல்லாரும் கொஞ்சி குலாவிண்டிருக்கா” என்று ஜாடை மாடையாக என்னையும் இடித்தார்.
பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மஞ்சுநாத், “தட் இஸ் தேர் பர்சனல் ப்ராப்ளம்” என்றார். மஞ்சுநாத் கன்னடக்காரன். அவனுக்கு தமிழ் புரியும் ஆனால் பேசவராது.
“வாட் பர்சனல் ப்ராப்ளம். ஊருக்கு பூரா தெரியும். எல்லா எடத்துலயும் நாறர்து. இதுல என்ன பர்சனல் ப்ராப்ளம்?” என்று ராமநாதன் ஆரம்பித்தார்.
மஞ்சுநாத்துக்கோ விவாதம் என்றால் உயிர். இந்தியா ஏன் டெஸ்ட் மாட்ச் தோற்றுவிட்டது, மோதி ஏன் பிரதமராக வரவேண்டும், பெங்களூர் ஏன் இப்படி கெட்டுப் போய் விட்டது என்று எந்த ஒரு டாபிக்காக இருந்தாலும் மணிக்கணக்காக விவாதிப்பான். ராமநாதன் மாமா பேச்சை நிறுத்துவது என்பது அபூர்வம். இனி இங்கே இருந்தால் நான் ஆபிஸ் மட்டம்தான் போட வேண்டும். “ஆபிஸ் போகணும். நான் கிளம்பறேன்” என்றேன். “யூ கோ யா” என்றான் மஞ்சுநாத்.
வீட்டிற்குள் நுழைந்து ஷூ கழட்டும்பொழுதே மனைவி கையில் கரண்டியுடம் சிரித்துக்கொண்டே என் அருகில் வந்தாள். “என்ன சொன்னார்? எதுக்காக திரும்பி வந்தாராம்?” என்று கேட்டாள்
“ஒன்னும் சொல்லல. நாங்க அதப் பத்தியே பேசல”
“சும்மா சொல்லாதீங்கோ. எவ்வளவு நேரம் சேர்ந்து நடந்திருக்கீங்க, ஒண்ணும் சொல்லாமலா இருப்பார்?”
“இல்லம்மா. ஒண்ணுமே சொல்லலே”
“அந்த பிரதிபா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடக்கறதை பார்த்தாள். என்னை சாயங்காலம் தொலைச்செடுத்துடுவா. என்ன சொன்னார்ன்னு சொல்லுங்கோ”
“அம்மா தாயே. அவர் எங்கிட்ட ஒண்ணுமே சொல்லல”
“ஓஹோ. அவர் ஒங்களுக்கு அவ்வளவு நெருங்கிய நண்பர் ஆயிட்டார் போல இருக்கு. அவர் ரகசியத்த நல்லா காப்பாத்துங்கோ,” என்று சொல்லிவிட்டு வேகமாக சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.
நான் மெதுவாக ஷூ கழட்டிவிட்டு ஹாலுக்கு வந்தேன். “உங்களால தோச கருகிடுத்து” என்று சமையலறையிலிருந்து மனைவி உரக்க கத்தினாள்.
துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றேன். இன்றைக்கு ஆபிஸ் லேட்டாகதான் போவேனோ என்னவோ.
ஒளிப்பட உதவி – Public Domain Pictures.net