Month: January 2023

குர்தயால் சிங்: ஒரு எளிய அறிமுகம்

எஸ். சுரேஷ் 

நேஷனல் புக் டிரஸ்ட் கடையில் ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று சென்றபோது குர்தயால் சிங் என்னும் எழுத்தாளரின் ‘பர்ஸா’ என்னும் நாவல் கண்ணில் பட்டது. அந்த பெயர் அதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. நண்பர் ராஜ்மோகனை தொலைபபேசியில் அழைத்து “இந்த எழுத்தாளரை நீங்கள் படித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். இந்திய எழுத்தாளர்களைப்  பற்றி விக்கிபீடியாவுக்கு தெரிந்ததை விட ராஜ்மோகனுக்கு அதிகம் தெரியும். “அவர் ஒரு மிக சிறந்த எழுத்தாளர். பஞ்சாபின் முக்கிய எழுத்தாளர். தச்சர் குலத்தை சேர்ந்தவர். தலித் சர்தார்ஜிகளை பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.”

என்னை இரண்டு விஷயங்கள் ஆச்சரியப்படுத்தின. ஒன்று, எனக்கு இவ்வளவு பெரிய ஒரு எழுத்தாளரை பற்றி தெரியாமல் இருந்தது. இரண்டாவது, சீக் சமூகத்திலும் ஜாதி பேதங்கள் இருப்பது. அந்த சமூகத்திலும் தலித்துகள் இருக்கிறார்கள் என்பதை அப்பொழுதுதான் உணர்த்தேன்.

‘பர்ஸா’ என்ற அந்த நாவலை படித்துக்கொண்டிருக்கும்பொழுதே குர்தயால் சிங்கின் ஆளுமையை அறிய முடிந்தது. அந்த நாவலில் ஒரு சமூகத்தின் மொத்த உருவத்தையும் நம் கண் முன் நிறுத்துகிறார். அவர் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ராணா நய்யர் என்பவர் குர்தயால் சிங்கின் பர்ஸாவை ஆக சிறந்த பூஞ்சாபி நாவலாக ஒரு கருத்தரங்கில் சொன்னார். அதற்கு பின் என்னுடன் பேசிய அவர், “பர்ஸா பஞ்சாபின் கலாசாரத்தை அற்புதமாக முன்னெடுத்து வைக்கிறது. இந்த நாவலை படித்தால் எப்படி சீக் கலாச்சாரமும் ஹிந்து கலாச்சாரமும் இணைந்து இருந்தன என்று நமக்கு தெரிய வருகிறது. ஒரு கலாசாரம் என்பது எப்படி மற்ற கலாசாரங்களுடன் உரையாடுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.” குர்தயால் சிங் தலித்களை பற்றி அதிகம் எழுதியிருப்பதை பற்றி நான் சொன்னபொழுது, “ஆனால் அவர் எல்லோரை பற்றியும் எழுதியிருக்கிறார்.  பர்ஸா என்பவர் ஒரு ஜாட் பிராமின். மற்ற நாவல்களில் அவருடைய தச்சர் ஜாதி மக்கள் பற்றியும் எழுதியிருக்கிறார்”.

பர்ஸாவுக்கு அடுத்ததாக நான் குர்தயால் சிங்கின் முதல் நாவலான ‘மர்ஹி தே தீவா’ என்னும் நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்தேன். (ஆங்கிலத்தில் இதற்கு ‘லாஸ்ட் ஃப்ளிக்கர்’ (Last Flicker) என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது). ஒரு தலித் சர்தார்ஜி இளைஞன் தன் நண்பனின் புதிய மனைவி மேல் மோகம் கொள்கிறான். அதன் விளைவுகளை இந்த நூல் விவரிக்கிறது. இது மனதை நெகிழவைக்கும் காதல் கதையாக இருக்கும்பொழுதும், அந்த காதல் கதை நடக்கும் களத்தை நம் கண்முன் குர்தயால் சிங்அற்புதமாக கொண்டுவருகிறார். நமக்கு அந்த காதல் மட்டுமல்ல, அந்த சமூகத்தை பற்றியும் நல்ல ஒரு புரிதல் கிடைக்கிறது.

குர்தயால் சிங்கின் எல்லா நாவல்களிலும் தனி மனிதர்கள் சமூகத்தின் ஒரு சிறிய அங்கமாகதான் காட்சியளிக்கிறார்கள். அவர்கள் சமூகத்துடன் தொடர்ந்து மோதுகிறார்கள். அப்படி மோதும் ஒரு தச்சன் கதைதான் ‘அன்ஹோயீ’. சாலை விரிவுப்படுத்தவேண்டி அரசு அவனுடைய வீட்டை பலிகொள்ள முடிவெடுக்கிறது. தன் வீட்டை எக்காரணத்தினாலும் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று அடம் பிடித்து, அரசுடன் மோதி, போலீசுடன் மோதி, தன் தம்பியுடன் மோதி, எல்லோரையும் ஜெயிக்க வேண்டும் என்று உறுதியுடன் போராடும் எளிய மனிதனின் கதை இது.

அரசு, போலீஸ், சமூகத்தின் பெரிய புள்ளிகள் என்று எல்லோரும் சுரண்டும் எளியவரின் வாழ்கையை தான் குர்தயால் சிங் தன் நாவல்களில் எழுதினார். ‘அந்தே கொடே த தான்’ என்னும் நாவலில் மாறும் காலம் எப்படி ஏழைகளை தாக்குகிறது என்பதை மிகவும் கரிசனத்துடன் சித்தரித்திருக்கிறார். எழுதப்படாத ஒப்பந்தங்கள் எப்படி பணபலத்துடன் மீறப்படுகின்றன என்பதையும், அவைகள் மீறப்படும்பொழுது அரசு எளியவர்களுக்கு எதிராகவே நிற்பதையும் குர்தயால் சிங் தெளிவுப்படுத்துகிறார்.

குர்தயால் சிங் குடும்ப காரணங்களால் பன்னிரெண்டு வயதிலேயே தச்சு வேலை செய்ய ஆரம்பித்தார். ஆனால் அவர் மனது முழுவதும் படிப்பதில் இருந்தது. பல வேலைகளை செய்து கொண்டே அவர் படிப்பை தொடர்ந்து எம்.ஏ. பட்டம் பெற்றார். அவருடைய நாவல் சாகித்ய அகாடெமி விருது  பெற்றிருக்கிறது. அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ  விருது வழங்கியது. ஞானபீடம் விருதும் அளிக்கப்பட்டது. 1933 இல் பிறந்த அவர் 2016 வருடம் மறைந்தார்.

அவருடைய ‘பர்ஸா’,‘Last Flicker’ மற்றும் ‘Handful of Sand’ என்று மூன்று புத்தகங்கள் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் நேஷனல் புக் டிரஸ்ட்டில் கிடைக்கின்றன. ‘அந்தே கோடே த தான்’ ‘In the name of blind horse’ என்ற பெயரில் ராணா நய்யரால் மொழிபெயர்க்கப்பட்டு அமேஜானில் கிடைக்கிறது. ‘அன்ஹோயி’ மற்றும் ‘அத் சாந்த்நி ராத்’ என்னும் நாவல்கள் ராணா நய்யரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இப்பொழுது கிடைப்பதில்லை. யாரும் அவற்றை மறுபிரசுரம் செய்யவில்லை.

ஏழை எளியவர்களை பற்றியும், அவர்களுக்கும் அரசுக்குமான உறவை பற்றியும் அதே சமயம் தனி மனித உணர்வுகளை பற்றியும், குடும்ப சிக்கல்களை பற்றியும் எழுதி ஒட்டுமொத்த பார்வையை அளித்த குர்தயால் சிங் நம் நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று எனக்கு எந்த  சந்தேகமும் இல்லை. நம் நாட்டில் பல எழுத்தாளர்களுக்கு நிகழ்வதுதான் அவருக்கும் நிகழ்கிறது- அவரைப் பற்றி பஞ்சாபுக்கு வெளியே அதிகம் நபர்களுக்கு தெரிவதில்லை. நல்ல இலக்கியம் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குர்தயால் சிங்கை படித்திருக்காமல் இருக்கக் கூடாது.

 

 

மனிதம்

ஷ்யாமளா கோபு

முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நின்று தலையை ஒழுங்காக வாரி பின்னலை இழுத்து கொண்டையிட்ட  இந்திரா நெற்றிப் பொட்டை சரி செய்து கொண்டாள். தரையோடு தளர்ந்திருந்த  கயிற்றுக் கட்டிலில் படுத்து அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் கணவன் ராமலிங்கம். இன்று நேற்றா? கடந்த இரு வருடங்களாகவே.

அடுப்பு மேடையின் மீதிருந்த அலுமினிய வாளியை எடுத்து கூடைக்குள் வைத்தவாறே கணவனிடம் சொன்னாள் மனுஷி. “இங்கே பாரு. இதோ உனக்கு சாப்பாடு, பிளாஸ்கில் சுடு தண்ணி வெச்சிருக்கேன். அடுப்பில டீத்தண்ணி கிடக்கு. கங்கை அணைக்கலை. அதனால் சூடாகவே இருக்கும். எடுத்து குடிச்சிக்க. சாயங்காலம் பிள்ளைங்க வந்ததும் அதுகளுக்கும் ஆளுக்கு ஒரு கிளாஸ் டீத்தண்ணி குடு. நான் வெள்ளனே வந்துடறேன்”

“முதலாளிக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டியா?”

“அதான் நித்தியப்படி ஆச்சே”

“உனக்கு?”

“எடுத்துக்கிட்டாச்சு. மாத்திரை மருந்தை பக்கத்துல டப்பால வெச்சிருக்கேன் பாரு. மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு போட்டுக்க மறந்துடாதே”

“இது ஒரு கருமம்’

“ஏன்யா சலிச்சிக்கிறே?”

“பின்னே என்ன? இன்னும் எத்தனை வருஷம் தான் இந்த கட்டையை வெச்சிக்கிட்டு கிடக்குனுமோ”
“ஏன் நான் பூவும் பொட்டுமா இருக்கறது உன் கண்ணை உறுத்துதா?”

“அந்த ஒரு காரணத்துக்குத்தான் உசுரை கையில பிடிச்சிக்கிட்டு இருக்கேன்” என்றவனின் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது

.கையில் இருந்த தூக்குசட்டியை அடுப்படி மேடையின் மீது வைத்து விட்டு அவனருகில் வந்து அமர்ந்தாள் “ஏன்யா இப்படி பேசறே?” என்றாள் அன்புடன்.

“பிரவோசனம் இல்லாமல் போயிட்டேனே?” விசும்பினான்.

“பிரவோசனமா இருந்தவன்தானே நீ” என்று அவன் தலையை தன் மார்போடு அணைத்து முகத்தை வருடிக் கொடுத்தவள் “இந்த ஊரே மெச்சும்படி என்னைக் கல்யாணம் கட்டி ஆசை ஆசையாய் ரெண்டு பிள்ளையைப் பெத்து கவுரவமாத் தானே எங்களைக் காப்பாத்தினே”

‘இந்த ரெண்டு வருஷமா நீ என்னென்ன கஷ்டப்பட்டு நாலு ஜீவனுக்கும் கஞ்சி ஊத்தறே”

“அதுக்கு என்னய்யா பண்றது? உன்னாலே முடிஞ்ச போது நீ செஞ்சே. இப்போ உனக்கு முடியாம போகவும் நான் செய்யறேன். குடும்பம்னா அப்படி இப்படித் தான் இருக்கும்”

“ம்”

“அதை விட உன் அன்பு பெருசுய்யா” என்று அவன் முகத்தை வருடி திருஷ்டி சுத்தி நெட்டி முறித்தாள். அது படக்படக்கென முறிந்தது. ”பாரு. எம்புட்டு திருஷ்டி உனக்கு” என்று மெல்ல அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

“இன்னைக்கு ராவுக்கு முதலாளி வருவாரா?” கட்டிலில் எழுந்து உட்கார்ந்தவன், “வூட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சே. அதான் கேட்டேன்” என்றான்.

“ரெண்டு நாளா மேலுக்கு முடியலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு”

“என்னவாம்?” என்றான் உண்மையான அக்கறை குரலில் தென்பட.

“நாக்குக்கு ஒன்னும் பிடிக்கலை. சரியா சாப்பிட முடியலைன்னு சொன்னாரு”

“அவருக்கு உனக்கையா சமைச்சிக் கொடு தங்கம்”

“உக்கும். அவருக்கு உனக்கையா சமைச்சிப் போட நான் என்ன அவரு பொண்டாட்டியா?”

“எனக்கு விபத்து ஏற்பட்டு இப்படி ஆன நாளில் இருந்து அந்த மனுஷனாலத் தான் நாம கஞ்சி குடிச்சிக்கிட்டு இருக்கோம்” என்றான் நன்றியுடன்

மண்டித் தெருவில் மூட்டைத் தூக்கும் தொழிலாளியான ராமலிங்கம், முதுகில் மூட்டை விழுந்து, முதுகெலும்பு முறிந்து, படுத்த படுக்கையான பின்,  அதே தெருவில் நாலைந்து கடைகளை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறாள் இந்திரா. அதனால் இந்த நான்கு ஜீவன்களும் ஒரு வாய் உணவையேனும் உண்ண முடிந்தது. ஆனாலும் கணவனுக்கு போதிய வைத்தியமும் அதற்கேற்றாற்போல சத்தான ஆகாரமும் கொடுக்க இயலவில்லை அவளால். வளர்ந்து வரும் இரு பிள்ளைகளுக்கும் வயிறார உணவிட முடியாமல், உழைத்து களைக்கும் தன் பசி போக்கும் வகை தெரியாமல். அந்த பிள்ளைகள் பசியால் இழுத்துப் பிடிக்கும் வயிற்றை தடவியவாறு தூக்கம் வராமல் கிடக்கையில் அதைக் கண்டு எத்தனயோ இரவுகள் அழுகையில் கரைந்திருக்கிறாள் அவள்.  இன்னும் நான்கு வருடங்கள் கஷ்டப்பட்டு பிழைத்து விட்டால் மகன் வேலைக்கு போய் விடுவான். குடும்ப பாரத்தை சுமக்க தன்னோடு ஒரு தோள் கொடுப்பான். அதுவரை கண்ணிருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய் வாழத் தான் வேண்டும்.

மண்டித்தெருவில் முதலாளி ராஜேந்திரனுக்கு சிறு அரிசி கடை இருந்தது. முதலில் இவளுக்கு கடனுக்கு அரிசி கொடுத்துக் கொண்டிருந்தவர் ஒருநாள் தனக்கு சோறு ஆக்கித் தர முடியுமா என்று கேட்கவும், அவருக்கு கொடுக்க வேண்டிய கடனுக்குப் பதில் சோறு ஆக்கித் தர சம்மதித்தாள். இநத முதலாளியின் தயவால் இவர்கள் குடும்பம் வயிறார பசியாற முடிகிறது. சமயத்தில் வைத்திய செலவும், அவளுக்கு கிழிசல் இல்லாத நல்ல புடவைகளும் கூடத் தான்.

ஒருநாள் காயலாய் கிடந்த முதலாளியை மகனின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டி விட்டு தங்கள் வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொண்டார்கள் அவர்கள். பத்திய சாப்பாடும் விருந்தோம்பிய பண்பும் அவரை நெஞ்சை நெகிழ்த்தவே, தனிமை சலிப்பைத் தரும் பொழுதுகளில் இரவு  கடை மூடிய பின் இங்கே வந்து பேசிக் கொண்டிருப்பதும் வழக்கமாக இருந்தது. அலுத்துக் களைத்து வருபவருக்கு சுடச்சுட வெந்நீர் குளியலும் சூடான உணவும் அதுவும் குடும்பத்துடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்புகளும் உண்டு.

ஓரத்தநாட்டுப் பக்கம்  களக்காடு கிராமம் முதலாளிக்கு. தாய் தகப்பனற்று, தாய்மாமன் வீட்டில் எடுபிடியாக வளர்ந்தவருக்கு, காதலனை நம்பி வீட்டை விட்டு ஓடிப் போய் ஏமாந்து திரும்பி வந்த தன் மகளை மணமுடித்து கொடுத்தார் மாமன். தென்னை மரம் ஏறும் போது கால் தவறி கீழே விழுந்ததில் ஆண்மையற்றுப் போனவனை, வேலைக்கு ஆகாதவன் என்று வெறுத்த மனைவி. வீட்டை விட்டு இவரை துரத்திய மாமன் மனைவி, மகளுக்கு வேறு ஒருவனை மணமுடித்து வீட்டோடு வைத்துக் கொண்ட மாமன் என வாழ்க்கையே துரோகமாகவும் அவமானமாகவும் வேதனையாகவும்  முடிய இங்கே வந்து தனித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

‘ஆனாலும் இந்த முதலாளி நம்ம வீட்டுக்கு வராம இருந்தா தேவலை. இது மாதிர் வீண் பேச்சை கேக்க வேண்டியிருக்காது” என்று குறைப்பட்டுக் கொள்வாள் இந்திரா.

“நீ இல்லாத சமயங்களிலும் நம் வீட்டுக்கு வந்து என்னிடம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருப்பார். என்றோ இறந்து போன பெத்தவங்களை பற்றி சொல்லிக் கொண்டிருப்பார். உன்னைப் பார்க்கையில் அவர்  அம்மா மாதிரி இருக்கவே உன்னிடம் ஒரு மரியாதை இருப்பதாக சொல்வார்”

“உண்மை தான். என்னை ரொம்பவே மரியாதையாகத் தான் நடத்துவார் இங்கேயும் சரி. கடையிலும் சரி. மற்றவர்கள் எதிரிலும் சரி. மரியாதை தான். தாயி என்று தான் அழைப்பார்” என்றாள் அவளும் ஆத்மார்த்தமான நெகிழ்வுடன்.

ஒருநாள் முதலாளிக்கு காய்ச்சல் வந்தது. மருத்துவமனையில் சேர்த்ததில் அவருக்கு உயர் ரத்தக் கொதிப்பு என்றனர். கட்டுக்கடங்காத ரத்தக் கொதிப்பு கைகால்களை முடக்கிப் போட்டு விட்டது. இப்போது இவரை யார் பார்த்துக் கொள்வது என்று ஒரு கணமும் தயங்கி நிற்காமல் ராமலிங்கம் தன் கட்டிலை விட்டு இறங்கி அங்கே முதலாளியை படுக்க வைத்தான்.  இந்திரா தான் முதலாளிக்கும் பாடு பார்க்கிறாள். கணவன் கூடமாட உதவி செய்கிறான். இதற்கு பேர் என்ன சொல்வது?

இந்த உலகம் அவளை சோரம் போனவள் என்றாலும் சரி.  வீரபாகு அக்காவை கொடுத்து பேக்கரி வாங்கியதைப் போல ராமலிங்கம் பொண்டாட்டிய அனுப்பி அரிசி கடையை வாங்கிட்டான் என்று மற்றவர்கள் கேலி செய்தாலும் சரி. இது அவர்கள் வாழ்க்கை. அவர்கள் உலகம். அவர்கள் யாருக்கு பதில் சொல்ல வேண்டும்?

ரப் நோட்டும் பேனாவும்

பத்மகுமாரி

‘இப்படி படிச்சா ஃபெயில் தான் ஆவ. வர வர படிப்பு கழுத போல தான் போகுது’ தாவரவியல்  பரீட்சை விடைத்தாளை தரையில் விசிறி அடித்தாள் டெய்ஸி டீச்சர்.

நான் பதில் பேசாமல் குனிந்து விடைத்தாளின் நுனி நூல்கட்டை பிடித்து கையில் எடுத்துக் கொண்டேன். மொத்த வகுப்பறையின் கண்களும் என்னையே வெறித்தன.

மூன்று மாதங்கள் முன்னால் வரை எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கென்று டெய்ஸி டீச்சர் மனதில் ஒரு நல்ல மரியாதையான இடம் கூட இருந்திருக்கலாமென்று நினைக்கிறேன். உறுதியாக சொல்ல தெரியவில்லை.

 

நான் காய்ச்சல் விடுமுறை முடித்து வந்திருந்த அந்த காலை முதல் வகுப்பில், டெய்ஸி டீச்சர் தாவரவியலை தள்ளி வைத்து விட்டு வகுப்பின் நடுவே இருந்த மேசையோடு சாய்ந்து நின்று அறிவுரைகளை எங்கள் முன்னால் குவித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

‘படிப்பில போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை இருக்கக் கூடாது. ‘

‘என்ன கேல்ஸ், புரிஞ்சதா? ‘

‘யேஸ் மிஸ்’ அங்குமிங்குமாக சில குரல்கள் ஒரே சீராக எழுந்து அடங்கியது.

எவ்வளவு உன்னதமான வரிகள். நான் சிலாகித்து உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.

‘நான் இப்ப என்ன சொன்னேன்னு சொல்லு. ‘ டீச்சர் எழுப்பி நிறுத்தியிருந்தது என்னை.

‘படிப்பில் போட்டி இருக்கலாம், பொறாமை இருக்க கூடாது. ‘  மனதில் வாங்கியிருந்ததை வார்த்தை மாறாமல் ஒப்பித்தேன்.

‘உனக்கு தான் இத சொன்னேன். இனிமே யாரையும் பார்த்து பொறாமை படாத. உட்காரு.’ இப்பொழுது வகுப்பின் மொத்தக் கண்களும் என்மீது.

‘நான் யாரை பார்த்து பொறாமை பட்டேன். ‘ அழுகை முட்டிக் கொண்டு வந்தது. வார்த்தைகள் வெளிவரவில்லை.

மணிச்சத்தம் அமைதியை கலைத்தது.

‘பிரேக்ல ஸ்டாப் ரூம் வா’ டீச்சர் வாசலுக்கு போகும்பொழுது திரும்பி பார்த்து   முதல் பெஞ்சில் இருந்த என்னிடம் சொல்லிவிட்டு போனாள். என் கன்னங்களில் நீர் இறங்கிக் கொண்டிருந்தது.

அடுத்த வகுப்பில் நடத்தப்பட்ட கணிதச் சமன்பாடுகள் எதுவும் என் காதில் விழவில்லை. மனம் தேம்பிக் கொண்டிருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்டான்ஸி மெல்ல முழங்கையில் விரலால் சீண்டினாள்.

‘ தாமரை, மிஸ் ஏன் அப்படி சொன்னாங்கன்னு எனக்கு தெரியும். ‘

ஆச்சரியத்தில் விரிந்திருந்த கண்களோடு ஸ்டான்ஸி பக்கம் திரும்பினேன்.

‘ரேவதி தான் ஏதோ மிஸ்கிட்ட போட்டு கொடுத்திருக்கா. நேத்து ஸ்வாலஜி ரெக்கார்ட் வைக்க ஸ்டாஃவ் ரூம் போனப்ப அவ டெய்ஸி மிஸ்கிட்ட நின்னு பேசிக்கிட்டு இருந்தா. என்ன சொல்லிட்டு இருந்தான்னு எனக்கு கேட்கல. ஆனா மிஸ் ரொம்ப ஸீரியஸா கேட்டுகிட்டு இருந்தாங்க. ‘

ரேவதி கடந்த சில நாட்களாகவே என்னிடம் பேசுவதை முழுவதுமாக நிறுத்தியிருந்தாள். எனது அப்பாவும் ரேவதியின் அப்பாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கிறவர்கள். பதவியில் ரேவதியின் அப்பா சற்று உயர்வான இடத்தில் இருப்பவர். எனது பரீட்சை மதிப்பெண்களை எனது அப்பாவின் வாயிலிருந்து பிடுங்கி அதை ஒப்பீடு செய்து ரேவதியை திட்டுவது அவளது அப்பாவின் வழக்கம். நாளடைவில் ரேவதிக்கு இது பெருங்கோபமாக என்மீது திரும்பியிருந்தது.அந்த கோபத்தின் வெளிப்பாடாக ஏதோ நடத்தியிருக்கிறாள் என்று எனக்கு புரிந்தது.

ஸ்டாவ் ரூமில் டெய்ஸி டீச்சர் முன்னால் நின்று கொண்டிருந்தேன். சிறிய புஷ்பம் டீச்சர் உடன் இருந்தாள்.

‘ஆர்த்திய விட ஒரு மார்க்காச்சு பைனல் எக்ஸாம்ல கூடுதலா வாங்கி காட்டுவேன்னு ரேவதிகிட்ட சொன்னியாம்மே. அவ பர்ஸ்ட் வரவே கூடாது சொன்னியாமே. இந்த வயசில அப்படியென்ன  பொறாமை உனக்கு. ‘

ஆர்த்தி எல்லா ஆசிரியைகளுக்கும் கூடுதல் பிடித்தமான மாணவி. மூன்று காரணங்கள். முதலாவது ஆர்த்தியின் அப்பா வழி பாட்டி ராணி இதே பள்ளியில் முன்னால் ஆசிரியை.  பள்ளி நிர்வாக போர்டில் இருக்கும் மதர்களின் நடுவே இன்றும் அவளுக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. இரண்டாவது, ஆர்த்தியின் அம்மா நாங்கள் ஆறாம் வகுப்பு படிக்கும்பொழுது புற்றுநோயில் தவறி போயிருந்தாள். மூன்றாவது தற்போதைய பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்த்தியின் அப்பா அலெக்ஸ்.

இந்த வருடம் பண்ணிரெண்டாம் வகுப்பின் முதல் மாணவியாக ஆர்த்தி தான் வரவேண்டுமென்கிற எதிர்பார்ப்பு எங்களுக்கு வகுப்பு நடத்தும் எல்லா ஆசிரியைகளுக்கும் உள்ளூர இருந்தது. தலைமையாசிரியை வரையிலும் கூட. டெய்ஸி டீச்சருக்கும், சிறிய புஷ்பம் டீச்சருக்கும் கொஞ்சம் கூடுதலாகவே அந்த எதிர்பார்ப்பு ஒரு நோயைப் போல உடல் முழுவதும் பரவியிருந்தது.

நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும், டெய்ஸி டீச்சர் என்னை நம்புவதற்கு  துளியளவேனும் தயாராக இல்லை. கொலை குற்றம் செய்ததை மாதிரி அவள் கண்கள் அன்றிலிருந்து என்னை துரத்த ஆரம்பித்திருந்தது. கூடவே சிறிய புஷ்பம் டீச்சரும் கைகோர்த்திருந்தாள். கணக்கு வகுப்புகளில் நான் தவறான விடையை சொல்லும் வரையிலும் வரிசையாக என்னிடம் சூத்திரத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விக்கு தாக்குபிடிக்க முடியாமல் நான் தவறான விடையை சொல்லும் அந்த நிமிடத்தில் டீச்சரின் முகத்தில் பிரகாசம் துளிர்க்கும். நான் வகுப்பின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படுவேன். சில நேரங்களில் எனது வெற்றியை ஏற்று கொள்ள முடியாமல், அன்றைய மொத்த வகுப்பு நேரத்தையும் என்னிடம் சூத்திரங்கள் கேட்கவே செலவிட்டு  இருண்ட முகத்தோடு டீச்சர் வெளியேறிய நாட்களும் உண்டு. தாவரவியல் வகுப்பிலும் பெரும்பாலான கேள்விகள் என்மீதே வீசப்பட்டன. தாக்குதல் கேள்விகளாக இருக்கும் வரை தாக்குபிடிக்க தெம்பிருந்த எனக்கு, தாக்குதல் மதிப்பெண் குறைப்பீடாக மாறி இரண்டாம் ரேங்கில் இருந்து பண்ணிரெண்டாம் ரேங்கிற்கு தள்ளபட்டபோது தாக்குபிடிக்கத் தெம்பில்லாமல் போய்விட்டது.

 

அப்பாவின் முன்  உடைந்து அழுது கொண்டு நின்றேன்.

‘எதுக்கு இப்ப இவ்வளவு அழுக. ‘

‘வேணும்னே மார்க் குறைச்சிட்டாங்க. சத்தியமா நான் நல்லா தான் எழுதினேன். ‘

‘அதான் நான் உன்ன நம்புறேன் சொல்லிடன்ல. கண்ண தொட. ‘

‘… .. .. ‘ என் அழுகை இன்னும் கூடியது.

‘அழுகைய நிறுத்து. ‘

நான் நிறுத்துவதாக இல்லை.

‘நிறுத்துங்கம்லா.’ அப்பாவின் அதட்டலில் வீடே அதிர்ந்தது.

நான் உறைந்து நின்றேன்.

‘போய் ரஃப் நோட்டும் பென்னும் எடுத்துட்டு வா. ‘ அதட்டலாக கட்டளை வந்தது.

அடுத்த நிமிடம் பேனாவும் ரஃப் நோட்டும் ஏந்தி அப்பா முன்னால் நின்று கொண்டிருந்தேன். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது.

‘உட்காரு’

‘ நான் சொல்லுகத போல செய். பரீட்சை பேப்பர்ல இருக்க ஒவ்வொரு விடையையும் நீயே திருத்தி  ஒவ்வொரு கேள்விக்கும் எத்தனை மார்க் வரும்ன்னு  நோட்ல எழுது. தப்ப பொறுத்து அரை மார்க்ல இருந்து குறைக்கணும். நிறைய தப்பு இருந்தா மார்க்கே போடாத அந்த விடைக்கு.’

அப்பா தொடர்ந்தார், ‘ ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு மார்க் வரும்ண்ணு எழுதிட்டு கடைசியா மொத்தமா கூட்டு. சரியா மனசாட்சிபடி திருத்தி எழுதணும். கூடுதலா போட கூடாது. அப்பாக்கு இங்கிலீஷ் தெரிஞ்சா அப்பாவே திருத்தி தந்திருப்பேன். ‘

‘… .. ‘ நான் குனிந்து முதல் கேள்வியை திருத்த ஆரம்பித்திருந்தேன்.

நாளடைவில் திட்டமிட்ட மதிப்பெண் குறைப்பீடுகள் என்னை அச்சறுத்துவது மொத்தமாக நின்று போயிருந்தது.

காலாண்டு, அரையாண்டு போன்ற பரீட்சை மதிப்பெண்களை பெற பெற்றோர்கள் தான் வரவேண்டும் என்கிற விதி பள்ளியில் இருந்தது.

அப்பா பள்ளிக்கு வந்திருந்தார்.

‘அரையாண்டு வந்தாச்சு, இப்படி மோசமா மார்க்க வாங்கியிருக்கா. ஜஸ்ட் பாஸ்தான். வர வர படிப்புல கவனமேயில்ல. ஒரு பேப்பர் போனாலும் போனதுதான. கண்டிச்சு வைங்க. ‘

அப்பா பதில் பேசவில்லை. தலையை மட்டும் ஆட்டினார். நீட்டிய விடைத்தாளை கையில் வாங்கி கொண்டார். உதட்டின் ஓரம் லேசான சிரிப்பு இருந்தது.

அப்பாவின் சிரிப்பில் இருந்த உண்மையின் அனல் தாங்க முடியாமல் டெய்ஸி டீச்சர் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

படிப்பில் எனது வேகம் அதிகரித்திருந்தது. எந்த சீண்டல்களாலும் என்னை அசைத்து பார்க்க முடியவில்லை

முழு பரீட்சை எழுத போகும் நாட்களில் டெய்ஸி டீச்சர் எதேச்சையாக எதிரில் வந்தால் முறைத்துக் கொண்டே கடந்து போனாள். நான் சாதாரணமாக கடந்து போனேன். நான் நினைத்தபடி நல்ல முறையில் பரீட்சைகளை எழுதி முடித்திருந்தேன்.

வகுப்பு ஆசிரியை என்கின்ற முறையில் டெய்ஸி டீச்சர் தான் எங்கள் வகுப்பின் மாணவிகளுக்கு மதிப்பீட்டு தாளை வழங்கி கொண்டிருந்தாள். மொத்த மதிப்பெண்ணில் நான் ஆர்த்தியை விட ஒரு மதிப்பெண் அதிகமாக வாங்கியிருந்தேன். அந்த ஒரு மதிப்பெண்ணை கூட்டி தந்திருந்தது தாவரவியல்.ரேவதியின் மதிப்பெண் எங்கோ அதல பாதளத்தில் விழுந்திருந்தது.

டெய்ஸி டீச்சர் கண்களை வேறெங்கோ அலையவிட்டபடியே மதிப்பீட்டு தாளை என்னிடம் நீட்டினாள். முழு பரீட்சை விடைத்தாளை தன்னால் திருத்த முடியாது போயிருந்ததில் டெய்ஸி டீச்சருக்கு பெரும் வருத்தம் இருந்திருக்கக் கூடும்.

‘தேங்க்யூ மிஸ். ‘ புன்னகை மாறாமல் சொல்லிக்கொண்டே மதிப்பீட்டு தாளை கையில் வாங்கி கொண்டேன்.

பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்தபொழுது அப்பா வண்டியை முறுக்கி தாயாராக வைத்திருந்தார்.

‘போலாமா?’

நான் தலையாட்டினேன்.

இன்று வரை ரஃப் நோட்டும் பேனாவும் என்னோடு பயணித்துக்  கொண்டிருக்கின்றன.