ந. ஜயபாஸ்கரன்

பகலில் மட்டும் நடக்கும் வாண வேடிக்கை – ந. ஜயபாஸ்கரன்

ந. ஜயபாஸ்கரன்

Image result for ந ஜயபாஸ்கரன்

1

வீட்டிலிருந்த பூர்வத்து வாளை மெருகு போடக் கொடுப்பதற்காக, அதைக் கையில் ஏந்தியவாறு கடைப்படிகளில் ஏறி வந்து கொண்டிருந்த சுரேஷ்குமார இந்திரஜித்தின் தோற்றம், சில பத்தாண்டுகளுக்கு பின்னும் நினைவில் பதிந்திருக்கிறது. அப்போது நாங்கள் வைத்திருந்த கடைக்கு அடுத்தாற்போல் இருந்த சிறு கோவிலில் மதுரை வீரனின் வாள் தூக்கிய உருவமும், ஆவணி மூலப் பிட்டுத் திருவிழாவின் ஒருநாள் நிகழ்ச்சியாகப் பாணனின் அங்கங்களை வெட்டிய வாளுடன் மீனாட்சி கோவிலுக்கு நடந்து வருகிற முதிய பட்டரின் மெலிந்த உருவமும் சேர்ந்தே நினைவுக்கு வருகின்றன.

நவீன உடையில் சுரேஷ்குமாரின் வாளேந்திய தோற்றத்தில், அபத்தத்தின் ஒரு கீற்றும், பரிகாசத்தின் சிறுநகையும், புதிரின் நுட்ப இழையும் கலந்து இருந்ததாக தோன்றியது. அது அவரது வகைப்படுத்த முடியாத சிறுகதைக் கலையின் பக்கவாட்டுத் தோற்றம் என்றே இப்பொழுது நினைக்கத் தோன்றுகிறது.

2

‘என் அப்பா ஒரு வாளை உறையிலிட்டு வைத்திருந்தார்,விசேஷ நாட்களில் பூஜையின் போது வாளை உறையிலிருந்து எடுப்பார், பளபளப்பும் கூர்மையும் கலந்து மின்னும் அந்த வாளைப் போலிருந்தாள் அவள்.’ –‘நள்ளிரவில் சூரியன்’

3

அந்த வாளின் பூர்வீகத்தையே சுரேஷ்குமார் மறுக்கவும், கட்டுடைக்கவும் கூடும், வாளைப் போல் மின்னிய சுகு என்ற சுகந்தி ‘தலைமுடி முழுவதும் வெள்ளையாக நரைத்து, புருவங்களும் வெள்ளையாக நரைத்து, கடுமை தொனிக்கும் சூனியக் கிழவி போல் கடையை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கடைக்கு வந்து அங்கு விலாஸ் புகையிலையும், கொட்டப்பாக்கும், வெற்றிலையும் கேட்டாள்.’

4

‘மனக் கள்ளம் எத்தனை
மேலும் சிந்தனை எத்தனை சலனம்
இந்திரஜாலம் போன்ற தேகத்தில் வாஞ்சை முதலாய்
அல்லாமை எத்தனை அமைத்தனை.’

என்ற தாயுமானவரின் ‘ஆனந்தமான பரம்’ வரிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன, சுரேஷ்குமாரின் சிறுகதைகளைப் படிக்கும் அகத்தில். ‘எங்கம்மா எனக்கு எக்சிபிஷன்லே பந்து வாங்கிக் கொடுக்க முடியாதுன்னு சொல்லிடுச்சு’ என்கிறார் பிரக்ஞை தவறிய இறுதிக் கட்டத்தில் ‘நிகழ்காலமும் இறந்த  காலமும்’ சந்திரசேகர். அழுத்தப்பட்ட ஏக்கங்களும், மனப்பிறழ்ச்சி சார்ந்த மாயக் காட்சிகளும், மாய ஒலிகளும், உருமாற்றங்களும், காமத்தின் கள்ளத்தன்மையும் சுரேஷ்குமாரின் புனைவுலகத்தை இடைவெட்டியவாறு சென்று கொண்டிருக்கின்றன. இறுதியில் வாசகனின் கையில் ஒரு அருவமான புதிர் வஸ்து வந்து அமர்ந்து கொள்கிறது. உலகளந்த பெருமாளின் கையிடுக்கில் இருந்து ஒரு கரப்பான்பூச்சி வந்து அவர் மார்பில் ஊர்ந்து கொண்டிருக்கிறது.

5

“குறைச் சொல் மூலமே வெற்றி கண்டவர்” என்று கு.ப.ராவைப் பற்றி சிட்டி செய்திருக்கும் மதிப்பீடு, சுரேஷ்குமாருக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. எந்தக் கணத்திலும் சொற்கள் தன்னை மீறிச் செல்வதை சுரேஷ்குமார் அனுமதிப்பதில்லை- ஒரு கறாரான அதிகாரியைப் போல எந்த இடத்திலும் அவர் சொற்களை அழுத்துவது இல்லை; திருகுவதும் இல்லை. உணர்ச்சி அதிகம் கலக்காத சிறிய சொற்கள்; சிறிய தொடர்கள்; சிறிய அசைவுகள்- இவற்றின் மூலமே ஒரு புதிரான அக உலகத்தை சிருஷ்டிக்க அவரால் முடிந்திருக்கிறது. அவருடைய சிறந்த சிறுகதைகளில் ஒன்றான “மாபெரும் சூதாட்டம்” கதையில், “இரண்டு சீட்டுக்களையும் ஒருவரே ஆடும் போது இருபக்கமும் நியாயமாக ஆட முடியுமா என்ற கேள்வி விடை தெரியாமல் அலைகிறது” என்ற எளிய வாக்கியத்தில் ஒரு முக்கியமான இருத்தலியல் சிக்கலை அவரால் முன்வைக்க முடிகிறது.

6

விவரணைகளைப் போல உரையாடல்களையும் பெரிதும் தவிர்த்துவிடுகிறார் சுரேஷ்குமார். ஹெமிங்வேயின் “மலைகள் வெள்ளை யானைகள் போல” சிறுகதை முழுவதும் உரையாடல்களால் கட்டப்பட்டிருக்கிறது, நிலப்பரப்பு பற்றிய நுட்பமான சிறிய தகவல்களுடன். தமிழிலும் தி. ஜானகிராமனின் “சத்தியமா” அசோகமித்திரனின் “பார்வை”, ஜெயமோகனின் “ஆழமற்ற நதி” போன்ற கதைகளும் உரையாடலால் உருவாக்கப்பட்டவையே. சுரேஷ்குமாரின் கதைகளில் பொது மொழியில் அமைந்துள்ள அளவான உரையாடல்கள் தவிர்த்து, மனவோட்டங்களும் சம்பவங்களும் கதை சொல்லியால் முன்பின்னாக அடுக்கி வைக்கப்படுவதே பெரும்பாலும் நிகழ்கிறது. நாவல் என்ற வடிவத்திற்குள் இதுவரை சுரேஷ்குமாரால் பயணிக்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

7

திட்டமிட்டுச் செயல்படும் மாயக் காட்சியாளராக சித்தரிக்கப்படும் ஜார்ஜ் லூயி போர்கேசின் புனைவாற்றல் வாசகனை திணற வைக்கிறது; நையாண்டி செய்கிறது; மனக் கற்பிதங்களைத் தொட்டு எழுப்புகிறது. அத்துடன் பிரபஞ்சத்தை அடக்கியுள்ள ஒற்றைச் சொல்லுக்காக மண்ணை துருவிப் பார்க்கிறது என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். போர்கேசை ஆதர்சமாக கொண்டுள்ள சுரேஷ்குமாரின் சிறுகதைகளிலும் யதார்த்தம், அதி புனைவு- என்ற இருவகை கதைகளிலும்- இந்தக் குணங்களை வெவ்வேறு படிநிலைகளில் காண முடிகிறது. சாலையில் தென்பட்ட பெண்களின் விரித்த கூந்தல் திகிலை ஏற்படுத்துவதும், பெண்ணின் இடப்பக்க மூக்குத்தி ஆண்களின் ரகசிய வேட்கையாக உருமாறுவதும், புதிர் புதிராகவே இறுதிவரை எஞ்சிவிடும் முடிவிலி நிலையில் வாசக மனத்தை உறையவைக்கின்றன.

8

“எந்தப் போக்கும் வாழ்வினுடைய, காலத்தினுடைய சூதாட்டங்களினால் கணிப்புக்கு உட்படுவதில்லை, நடந்த காரியத்தின் காரணங்களை ஆராய்ந்து அடுக்குவது சுலபம். வலுவான காரணங்கள் இருக்க அவற்றிற்கான காரியங்கள் ஏன் நடக்கவில்லை என்பதை எவரும் அறிய முடியாது. நடந்ததை நடக்க விதிக்கப்பட்டதாக நினைத்து ஏற்றுக்கொள்ள, சூதாட்டம் வெற்றிகரமாக ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.” “மாபெரும் சூதாட்டம்” சிறுகதையில் சூரியின் பாட்டனின் நோட்டுப் புத்தகத்திலிருந்து.

வாழ்க்கை சூதாட்டம் ஹருகி முரகாமியின் கதையில் வேறுவிதமாக ஆடிப் பார்க்கிறது.

9

“யதேச்சை என்பது கூட சாதாரணாமாக அடிக்கடி நடக்கும் விஷயம் தான். இதுபோன்ற யதேச்சையான நிகழ்வுகள் எப்போதும் நம்மைச் சுற்றி நடந்துகொண்டே தான் இருக்கின்றன, எப்போதுமே, ஆனால் நம்மில் பலர் அதை கவனிக்காமல் தவற விடுகிறோம். அது பகலில் நடக்கும் வாண வேடிக்கை போல. ஒருவேளை மெல்லிய இசை உனக்கு கேட்கலாம். நீ வானத்தை நிமிர்ந்து பார்த்தாலும் உன்னால் எதையும் பார்க்க முடியாது. ஆனால் இது நடக்கும் என்று உண்மையாக நாம் நம்புவோமானால் அது நம் கண்ணுக்கு தெரியும்.”- யதேச்சையின் பயணி, ஹருகி முரகாமி, தமிழில்- ஸ்ரீதர் ரங்கராஜ்.

சுரேஷ்குமாரின் கை வாளில் கண நேரம் பிரதிபலித்த பகல் ஒளியும் அப்படிப்பட்டது தான் என்று  தோன்றுகிறது.