ப மதியழகன்
லிஃப்ட் 24ஆவது தளத்துக்கு
என்னை அழைத்துச்
சென்று கொண்டிருந்தது
நான் பதட்டப்படுவதற்கு
காரணமிருக்கிறது
நான் தேடி அலைந்து
கொண்டிருந்த கடவுள்
அறை எண் 103ல் இருப்பதாக
இன்று காலை எனக்கு
தகவல் கிடைத்தது
முதல் முறையாக கடவுளைச்
சந்திக்கப் போகிறேன்
எப்படி முகமன் கூறுவது
யாரைப் பற்றி விசாரிப்பது
எந்த கேள்வியை
முதலில் கேட்பது என
தடுமாறிக் கொண்டிருந்தேன்
பதட்டத்தில் ஏ.சி இருந்தும்
வியர்த்துக் கொட்டியது
லிஃப்ட் 10ஆவது தளத்தைக்
கடந்து கொண்டிருந்தது
பல பிறவிகளாக தேடியவரை
இப்போது கண்டுகொள்ளப்
போகிறேன்
லிஃப்ட் 24ஆவது தளத்தை
அடைந்தது
கதவு திறந்து கொண்டது
வெளியே வந்தேன்
அறை எண் கண்டுபிடித்து
அழைப்பு மணியை
அழுத்த கையை தூக்கினேன்
திடீரென ஒரு பொறி தட்டியது
கடவுளைக் கண்டவுடன்
வாழ்வு உப்புசப்பில்லாமல்
போய்விட்டால் என்ன செய்வது
தினமும் நான் சந்திக்கும்
நபர்களில் பத்தோடு பதினொன்றாக
ஞாபக அடுக்குகளிலிருந்து
அவரும் மறக்கப்பட்டு
போவாரானால்
நான் ஏற்கனவே உருவாக்கி
வைத்திருக்கும் கடவுளின் பிம்பம்
அவரைப் பார்த்தவுடன்
உடைந்து சுக்குநூறானால்
அழைப்பு மணியை அழுத்தாமல்
பின்வாங்கினேன்
என்னை நானே
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
படிகள் வழியாக
கீழே இறங்கினேன்
இனி கிளைகள் வழியாக
துழாவுவதும்
வேர்கள் வழியாக தேடுவதும்
என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும்