காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போதே முதுகு வலி தன் கைவரிசையைக் காட்டத் துவங்கி விட்டது. அன்றையக் காப்பி, சமையல் கடையைக் கவனிக்க வேண்டுமே என்று குஞ்சாலி எழுந்து விட்டாள். கொதிக்கும் நீரை முதுகில் விட்டுக் கொண்டு குளித்தது இதமாக இருந்தது. இன்று டாக்டரிடம் போக வேண்டும். மூன்று மாதமாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஏதோ மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குப் போவது போல டாக்டரிடம் போக வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமைதான் சந்திரசேகரனுக்கு வார விடுமுறையாதலால் அவரே குஞ்சாலியைக் கூட்டிக் கொண்டு போய் வருவது சிரமமில்லாதிருந்தது. ஆனால் இந்த வெள்ளிக்கிழமையன்று டாக்டருடைய மாப்பிள்ளை திருச்சியில் புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்ததால் அவர் ஊரில் இருக்கவில்லை. அதனால் ஞாயிற்றுக் கிழமை வரச் சொல்லியிருந்தார்.
சந்திரசேகரன் அவள் முகத்தைப் பார்த்து விட்டு டாக்டரிடம் அவள் போவதை ஒத்திப் போட்டு விடலாம் என்றார். “இன்னிக்கி ஷாக் ட்ரீட்மெண்ட் வேறே கொடுத்துப் பாக்கலாம்னு சொன்னாரே. நானும் கூட இருந்தாத்தானே சரியா இருக்கும்” என்றார் குஞ்சாலியிடம்.
“அதெல்லாம் வேண்டாம். நான் போய்ப் பாத்துட்டு வரேன். ஒவ்வொரு நாளும் இந்த முதுகே இல்லாம இருந்தா எவ்வளவு நன்னா இருக்கும்னு வெறுப்பா இருக்கு” என்றாள் குஞ்சாலி. “நீங்க ஆபீசுக்குப் போங்கோ. நான் சீமாவை அழைச்சசிண்டு போயிட்டு வரேன்.”
“சே, குழந்தைக்கு என்ன தெரியும்?” என்றார் சந்திரசேகரன்.
பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சீமா “ஏன் தெரியாது? பத்தொம் போதாம் நம்பர் பஸ்ஸிலே ஏறி சின்னக்கடைத் தெருவிலே இறங்கி டாக்டரோட கிளினிக்குக்கு கூட்டிண்டு போறது என்ன பிரமாதம். அப்பா! நான் இப்ப ஏழாவது படிக்கிறேன்” என்றான்.
குஞ்சாலி “ஆமாண்டா என் ஆம்பிளை சிங்கம்” என்று சீமாவைப் பார்த்துச் சிரித்தாள்.பிறகு சமையலைக் கவனிக்க ஆரம்பித்தாள். குனிந்து வேலை செய்யும் போது வலி ஜாஸ்தியாகத்தான் இருந்தது. குனிந்து நிமிராமல் சமையக்கட்டில் வேலை செய்யும் நிபுணத்துவத்தை ஏன் யாரும் இதுவரை கண்டு பிடிக்கவில்லை?
அவர்கள் இருவருக்கும் தோசை வார்த்தாள். சந்திரசேகரனுக்கு டிபன் செட்டில் சாப்பாடு வைத்துக் கொடுத்ததும் அவர் கிளம்பிச் சென்றார். குஞ்சாலி சீமாவிடம் “நான் சித்தே ஊஞ்சல்லே படுத்துக்கறேன். பதினோரு மணிக்குத்தானே வரச் சொல்லியிருக்கார். நாம் பத்து பத்தேகாலுக்குக் கிளம்பினா சரியா இருக்கும்” என்று சொல்லி விட்டுக் கூடத்தில் போட்டிருந்த ஊஞ்சலை நோக்கிச் சென்றாள். சீமா ஊஞ்சல் மேலிருந்த தினமணியையும் அம்புலிமாமாவையும் எடுத்துக் கொண்டு திண்ணைக்குப் போனான்.
பத்து மணிக்கு “அம்மா!” என்று கத்திக் கொண்டே சீமா வாசலிலிருந்து வீட்டுக்குள் ஓடி வந்தான். குஞ்சாலி தரையில் உட்கார்ந்து கூடத்துச் சுவரில் சாய்ந்திருந்தாள். அவள் முகம் வேதனையில் சுருண்டிருந்தது. சிறு முனகல்கள் அவளிடமிருந்து வெளிப்பட்டன.
“ரொம்ப வலிக்கிறதாம்மா?” என்று சீமா அவள் கையை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டான்.அவன் கண்கள் கூடத்துச் சுவரின் மேலே தொங்கிக் கொண்டிருந்த அனுமார் படத்தை இறைஞ்சலுடன் பார்த்தன.
“ஆமா. என்னமோ தெரியலே. இன்னிக்கிக் கொஞ்சம் வலி ஜாஸ்தியாத்தான் இருக்கு. நீ எதுக்குக் கத்திண்டே உள்ளே வந்தே?” என்று குஞ்சாலி கேட்டாள்.
“பத்தொம்போது பைக்காராவுக்குப் போயிண்டிருக்கு. அவன் போயிட்டு அஞ்சு நிமிஷத்திலே வந்துடுவான். அதான் நீ கிளம்பறையா?” என்றான் சீமா.
“அது வரதுக்குப் பத்து நிமிஷம் ஆகும் போ” என்றாள் குஞ்சாலி. “நான் புடவை மாத்திண்டு வரேன்” என்று உள்ளேயிருந்த அறைக்குச் சென்றாள்.
‘சோமசுந்தரம் செட்டியார் நகை மாளிகை’ என்று அச்சாகியிருந்தஅம்மாவின் மஞ்சள் பையை சீமா கையில் எடுத்துக் கொண்டான். போன தீபாவளிக்கு அப்பாவின் தடிமனான கழுத்துச் சங்கிலியை அழித்து மூக்குத்தியும் தோடுகளும் செட்டியார் கடைக்குப் போய்ப் பண்ணிக் கொண்டு வந்தார்கள். அப்போது கடையில் கொடுத்த பை அது. மூன்று மாசத்துக்கு முன்னால் வரை அது புதுக்கருக்கு அழியாமல்தான் இருந்தது. அம்மா அதைக் காட்ரெஜ் பீரோவுக்குள் வைத்திருந்தாள். எந்தப் புதுசு வந்தாலும் அதை அவள் அங்கே ஜாக்கிரதை பண்ணி வைத்திருப்பாள். தங்கம், வெள்ளிக்குக் கிடைக்கும் மரியாதை துணிப்பைக்கும் புதுக் கர்சீப்புக்கும் வளையல்களுக்கும் கிடைக்கும், ஆனால் வாரா வாரம் டாக்டரிடம் போக ஆரம்பித்த பின்னால் நோயைப் போல மஞ்சள் பையும் கூட ஒட்டிக் கொண்டு வந்தது. பணம் வைத்துக் கொள்ளும் சுருக்குப்பை, டாக்டர் சீட்டுக்களும் மருந்து பைல்களும் அடங்கிய சின்ன ஃபைல், டாக்டரிடமிருந்து திரும்பி பஸ்ஸில் வரும் போது வயிற்றைப் புரட்டினால் வாயில் போட்டுக் கொள்ளவென்று இரண்டு அசோகா பாக்குப் பொட்டலம், அப்பா ஆபிசிலிருந்து ஒரு தடவை கொண்டு வந்த ரைட்டர் பேனா என்று உள்ளடக்கிய பையின் மீது ஊரழுக்கும், கை வேர்வையும் படர்ந்து திட்டுத்திட்டாகக் கறுப்பு பரவியிருந்தது.
அவர்கள் இருவரும் வாசலுக்கு வந்த போது பக்கத்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த காவேரி மாமி “இந்த வெய்யில்லே எங்கே கிளம்பிட்டேள்? கறிகாய் மார்க்கெட்டுக்கா?” என்று கேட்டுக் கொண்டு வந்தாள்.
“ஆமா. எனக்கு டாக்டர் வீடுதான் கறிகாய் மார்க்கெட்டு” என்று சிரித்தாள். வெய்யில் உக்கிரமாகத்தான் இருந்தது. தலையைத் தூக்கி மேலே வானத்தைப் பார்த்தாள். சூடான தோசைக்கல் வானில் பளபளத்துக் கொண்டிருந்ததின் எதிரொலியில் ஊர் புழுங்கித் தவித்தது.
“இன்னிக்கி ஞாயத்திக்கிழமைன்னா?” என்றாள் காவேரி.
“ஆமா. வெள்ளிக்கிழமை போகலே. அதனாலே இன்னிக்கிவரச் சொன்னார்னு இப்ப போயிண்டிருக்கேன்.”
“சமையல்லாம்? நான் வேணா குழம்பு கறி ஏதாவது பண்ணி வைக்கட்டா?”
“அதெல்லாம் காலம்பறவே சீக்கிரம் எழுந்து பண்ணிட்டேன். அதான் முதுகைப் பிடிச்சு இழுக்கறது” என்றாள் குஞ்சாலி.
“அம்மா, பஸ் வரது” என்றான் சீமா.
அவர்கள் இருவரும் வீட்டு வாசலின் முன் இருந்த ஸ்டாப்பில் வந்து நின்ற பஸ்ஸில் ஏறிக் கொண்டார்கள். அம்மா கடைசி வரிசையில் இருந்த பெண்களுக்கான இருக்கையில் காலியாக இருந்த ஒற்றை சீட்டில் உட்கார்ந்து கொண்டாள். உள்ளே உட்கார இடமில்லாமல் ஆண்கள் வாரைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். சீமா தனக்கு முன்னால் நின்ற ஒல்லியான ஆளின் பின் பக்கம் நின்றான். கண்டக்டர் சீமாவை நெருங்கிய போது “சின்னக்கடை ரெண்டு” என்று சொல்லி டிக்கட் வாங்கிக் கொண்டான்.
சீமாவுக்கு அருகில் இருந்த சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு வயதானவர் “வேலு! எதுக்கு இன்னிக்கு ஞாயத்துக் கெளமை இப்பிடி ஒரு கூட்டம் வண்டியிலே?” என்று ஒல்லி ஆளிடம் கேட்டார்.
“இன்னிக்கி எம்சியாரு வாராரில்லே. அதுக்குத்தான். எந்த முக்கு திரும்பினாலும் சனக் கூட்டம்தான்” என்று சிரித்தான் வேலு
“அடக் கெரகமே! அவுரு சினிமாலே வரவருதானே? அவருக்கா இம்புட்டுக் கூட்டம்?”
“ஆமா. லச்சம் பேரு வருவாங்கன்னு தினத்தந்திலே போட்டுருக்காங்கே. தமுக்கத்திலே இல்லே கூட்டம்? அதுக்கு மேலேயும் கூட எக்கும் பெரியப்பா” என்றான் வேலு.
“ஓரு லட்சமா? அளகரு ஆத்துலே எறங்கறே அன்னிக்கிக் கூட இம்மாஞ் சனம் வராதேடா?” என்றார் பெரியவர்.
அவருக்குப் பக்கத்தில் இருந்த நாமக்காரர் “இப்பல்லாம் அழகரை விட அரிதாரத்துக்குத்தான் மவுஸ் ஜாஸ்தி!” என்றார் சிரித்துக் கொண்டே,
பெரியவர் மறுபடியும் “வேலு!எதுக்குடா இப்ப இதெல்லாம்?” என்று கேட்டார்.
“நாடோடி மன்னன் சினிமா ஓடிக்கிட்டு இருக்கில்லே? அதுக்கு விளா எடுக்கறாங்களாம். இந்த வண்டியிலே முக்காவாசிப் பேரு அங்க போறவங்கதான்.”
பஸ்ஸிலிருந்து யாரும் இறங்காததாலும் பயணிகள் நின்று செல்ல வேண்டிய நிலைமைக்கு வண்டி வந்து விட்டதாலும் பழங்காநத்தம், ஆண்டாள்புரம், நந்தவனம், சுப்பிரமணியபுரம் என்று ஒரு நிறுத்தத்திலும் நிற்காமல் பஸ் ஓடிற்று. வழக்கமான நேரத்துக்குச் சற்று முன்பே சின்னக்கடை ஸ்டாப் வந்ததும் சீமாவும் குஞ்சாலியும் இறங்கிக் கொண்டார்கள்.
அவர்கள் சற்று முன் சென்று இடது பக்கம் சென்ற திண்டுக்கல் ரோடில்
திரும்பி நடந்தார்கள்.
“இன்னிக்கி பஸ்ஸிலே கூட்டம் இருக்காதுன்னு நினைச்சிண்டு வந்தா அப்பிடி ஒரு கூட்டம். சினிமாக்காரான்னா எம்கேடி காலத்திலேர்ந்தே ஜனங்களுக்கு அப்படி ஒரு ஆகர்ஷணம் . நீதான் பாவம், வழி பூரா பஸ்ஸிலே நின்னுண்டே வந்தே” என்றாள் குஞ்சாலி.
“நல்ல வேளையா உனக்கு உக்கார இடம் கிடைச்சதே” என்று சீமா சிரித்தான்.
ராஜா பார்லியிலிருந்து பிஸ்கட் வாசனை காற்றில் மிதந்து வந்தது. அந்தக் கடைக்குச் சற்றுத் தள்ளியிருந்த இடது பக்கத்துத் தெருவில் நுழைந்து சென்றார்கள். டாக்டரின் கிளினிக் முன்பு அவரது ஆஸ்டின் கார் நின்றிருந்தது. வாசலில் டாக்டர் சாமிநாதன் எம்பிபிஎஸ் என்று போர்டு தொங்கிற்று. பெயரிலும் பட்டத்திலும் இருந்த புள்ளிகள் காலத்தின் இரையாக உயிரை விட்டிருந்தன. சீமாவின் அப்பாவுக்கு டாக்டரை வெகு காலமாகத் தெரியும்.
அவர்கள் உள்ளே போன போது வேறு யாரும் இல்லை. டாக்டரின் அறை வாசல் திறந்திருந்தது. குஞ்சாலியைப் பார்த்ததும் “வாங்கோ” என்றார். இருவரும் அவருக்கு எதிரே இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள்.
“இன்னிக்கி சந்துருவுக்கு ஆபீஸோ? அதான் இந்தப் பெரிய மனுஷன் உங்களை அழைச்சுண்டு வந்திருக்கானா? என்று சீமாவைப் பார்த்து ஒரு புன்சிரிப்பைச் சிந்தினார்.
“வலி எப்படி இருக்கு முன்னைக்கு?” என்று கேட்டார்.
“அப்படியே தண்டு வடத்தைப் பிச்சு எடுத்து வீசியெறிஞ்சிட மாட்டமான்னு இருக்கு டாக்டர். ராத்திரியிலேதான் வலி பொறுத்துக்க முடியாம போறது.”
“சந்துரு வந்திருந்தா நன்னாயிருந்திருக்கும்” என்றார் டாக்டர்.
“ஏன் டாக்டர்?” என்று குஞ்சாலி கேட்டாள்.
“மூணு மாசமா இங்கே நீங்க ட்ரீட்மெண்ட் எடுத்துண்டு இருக்கேள். முதுகு வலி அப்படி ஒண்ணும் குறைஞ்ச மாதிரி தெரியலையே. மருந்தும் மாத்திரையும் சொல்றதை இந்த வலி கேக்க மாட்டேங்கறதேன்னுதான் சந்துரு கிட்டே சொன்னேன் எலெக்ட்ரிக் ஷாக் வேணா கொடுத்துப் பார்க்கலாம்னு” என்றார் டாக்டர் யோசனையுடன்.
“அதுக்கென்ன, கொடுக்க வேண்டியதுதானே?”
டாக்டர் அவளை வியப்புடன் பார்த்தார்.
“என்கிட்டேயும் அவர் சொன்னார். இன்னிக்கி மனசில்லாமதான் ஆபீசுக்குப் போனார். நான்தான் சொன்னேன். இது என்ன பிரமாதம், குணமாகணும்னா டாக்டர் சொல்றதை செஞ்சுதானே ஆகணும்; வழவழன்னு இதமா வெண்ணையைத் தடவி ட்ரீட்மெண்ட் கொடுத்து இந்த வலி அடங்கும்னா டாக்டர் அதை நமக்கு மொதல்லேயே பண்ணிடுவாரேன்னேன்.”
டாக்டர் இன்னும் வியப்புத் தாளாமல் கண்ணகல அவளைச் சில வினாடிகள் பார்த்தார்.
“உங்கம்மாவுக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்தி” என்றார் சீமாவிடம் . “அப்ப
இன்னிக்கி ட்ரீட்மெண்ட் ஆரமிச்சிடலாமா?” என்று குஞ்சாலியிடம் கேட்டார். அவள் சரியென்று தலையசைத்தாள்.
“நான் இப்ப மயக்க மருந்து கொடுத்து ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கறேன். ஷாக் கொடுத்து முடிஞ்சதும் ரொம்பவே வலிக்கும். அதனாலே இங்கேயே ஒரு மணி நேரம் படுத்துண்டு ரெஸ்ட்லே இருங்கோ. ஆத்துக்குப் போய் சாப்பிட்டதுக்கு அப்புறம் இப்ப நான் தர்ற மாத்திரையை சாப்பிடுங்கோ. ஒரு சார்ட் தரேன். பகல்லே ஆறு மணி நேரத்துக்கு ஒரு தடவை வலி எப்படி இருக்கு? குறைஞ்சிண்டு வரதா, இல்லே அப்படியே இருக்கா, இல்லே முன்னை விட ஜாஸ்தியா ஆயிண்டு வரதான்னு நோட் பண்ணி வச்சுண்டு அடுத்த தடவை வரப்போ கொண்டு வந்து காமியுங்கோ. ஒரு வாரத்துக்கு மாத்திரை தரேன். ஒண்ணையும் வெளியே போய் வாங்க வேண்டாம். முடிஞ்ச வரை ஆத்து வேலைகளைக் குறைச்சுக்கப் பாக்கணும். இது உங்களுக்குக் கஷ்டமான காரியந்தான். வேறே வழியில்லே. வாரத்திலே ரெண்டு நாள்னு அடுத்த மூணு வாரத்துக்கு வரணும். செவ்வாயும் வெள்ளியுமா வச்சுக்கோங்கோ” என்று சொல்லி விட்டு சீமாவைப் பார்த்தார். பிறகு தன் மேஜை டிராயரைத் திறந்து ஒரு புத்தகத்தை எடுத்து “படிச்சிண்டிரு. இன்டரெஸ்டிங்கா இருக்கும்” என்று அவன் கையில் கொடுத்தார். மெதுவாகக் குஞ்சாலியை அவர் அடுத்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.
சீமாவுக்கு இனம் தெரியாத பயம் ஏற்பட்டது. அம்மாவுக்கு ஒரு கெடுதலும் நேரக் கூடாது என்று வேண்டிக் கொண்டான். அம்மா எவ்வளவு தைரியமாக இருக்கிறாள் என்று டாக்டர் சொன்னதை நினைத்துக் கொண்டான். டாக்டரை ‘எமகாதகன்’ என்று அவனுடைய அப்பா செல்லமாகத் திட்டுவதை அவன் பலமுறை வீட்டில் கேட்டிருக்கிறான். நிதானமும் திறமையும் உடைய டாக்டர் என மதுரையில் பெயர் எடுத்தவர் என்றும் அப்பா சொல்லியிருக்கிறார். சீமா உட்கார்ந்த இடத்திலிருந்து சுற்றிலும் பார்த்தான். சிகப்பும், நீலமும் வெள்ளையுமாய் மூளை, முதுகுத் தண்டுவடம், இருதயம், கால்கள் கைகள் என்று கோட்டுப் படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன.
டாக்டர் கொடுத்த துப்பறியும் நாவலை எடுத்துப் பார்த்தான். அதை எழுதியவருடைய மற்ற துப்பறியும் நாவல்களையும் அவன் விரும்பிப் படித்திருக்கிறான். அதில் துப்பறிவாளரின் உதவியாளனாக வரும் கத்தரிக்காயை சீமாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அவன் பேசுவது செய்வது நடந்து கொள்வது எல்லாம் சிரிப்பை வரவழைக்கும். அந்தத் துப்பறிவாளரைப் போலவே தானும் ஒரு நாளைக்குப் ஏழெட்டுத் தடவை டீ குடிக்க வேண்டும் என்று சீமா ஒரு நாள் சொன்ன போது குஞ்சாலி “ஏண்டா, கீழ்ப்பாக்கத்துலேதான் அவாம் இருக்கு. அங்கே உன்னைக் கொண்டு போய் விட்டுட்டா தினம் ஏழெட்டு டீ உனக்கும் கிடைக்கும்” என்று சிரித்தாள்.
கையிலிருந்த நாவலைப் படிக்க ஆரம்பித்ததும் அதன் சுவாரஸ்யத்தில் சீமா தன்னை இழந்து விட்டான். “அவ்வளவு நன்னாவா இருக்கு புஸ்தகம்?” என்று குரல் கேட்டு சீமா தலை நிமிர்ந்தான். டாக்டர் அவனைப் பார்த்துச் சிரித்தார். அவன் வெட்கத்துடன் புத்தகத்தை மூடினான். “வேணும்னா நீ இதை ஆத்துக்கு எடுத்துண்டு போய்ப் படி” என்றார்.
சீமா உள்ளே இருந்த அறையைப் பார்த்தான்.
“பத்து நிமிஷம் கழிச்சு அவ முழிச்சுப்பா. அப்ப நீ போய்ப் பாரு. அப்புறம் அரை மணி கழிச்சு நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குக் கிளம்பினாப் போறும்” என்றார். சீமா சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். பதினொன்றே முக்கால்.
பத்து நிமிஷம் கழிந்த பின் சீமா உள்ளே சென்றான். கண்களை மூடிப் படுத்திருந்த குஞ்சாலி அவன் வரும் சத்தம் கேட்டுக் கண்களைத் திறந்து பார்த்தாள். முகத்தில் அயர்ச்சி படிந்திருந்தது. அவனைப் பார்த்ததும் புன்னகை செய்ய முயன்றாள். சீமா அவளருகே சென்று “எப்படி இருக்கும்மா?”என்று நடுங்கும் குரலில் கேட்டான். அவள் அவன் கையைப் பிடித்து ஆறுதலாகத் தடவிக் கொடுத்தாள்.
“ரொம்ப வலிக்கறதுடா” என்றாள் ஈனஸ்வரத்தில். உடம்பு புரண்டு நெளிந்தது. “அம்மா, அம்மா” என்று வாய்விட்டு அழுதாள். சீமாவுக்கு என்னசெய்வதென்று
தெரியவில்லை. “நான் போய் டாக்டரை அழைச்சுண்டு வரேன்” என்று திரும்பினான்.
“அவர்தான் நன்னா வலிக்கும்னு சொல்லியிருக்காரே. நான்தான் பொறுத்துக்கணும். ஆனா, அம்மா, முடியலையே” என்று இரு கால்களையும் ஒட்டி முறுக்கிக் கொண்டாள்.
“நா முதுகைப் பிடிச்சி விடட்டுமாம்மா?” என்று கேட்டான் சீமா.
அவள் “நீ பாவம்டா” என்று ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு அவன் கையைத் தன் முதுகின் அருகில் எடுத்துச் சென்றாள்.
“இரும்மா. நான் அந்தப் பக்கம் வந்துக்கறேன்” என்று சொல்லி விட்டு அவன் கட்டிலைச் சுற்றிக் கொண்டு மறுபக்கம் சென்றான். இப்போது அவன் குஞ்சாலியின் முதுகைப் பார்த்தபடி நிற்க முடிந்தது. போர்வையை நீக்கி விட்டு இரண்டு கைகளாலும் அவள் முதுகை அமுக்கி விட்டான்.
“மெள்ள, மெள்ள, ரொம்ப அமுக்கினா அதுவே வலிக்கறது” என்றாள் குஞ்சாலி.
ஐந்து நிமிஷம் போயிருக்கும்.
“போறும்டா கண்ணா” என்றாள் குஞ்சாலி. சீமா கேட்காமல் கழுத்திலிருந்து இடுப்பு வரைக்கும் தன் கைகளால் மெதுவாக அமுக்கி விட்டான்.
“அப்பாடா, எவ்வளவு இதமா இருக்கு!” என்றாள் குஞ்சாலி. சற்றுக் கழித்து “சரி, போறும். நிறுத்திக்கோ. அப்புறம் உனக்குக் கை வலிக்கும்” என்றாள்.
அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் மேலும் அவளது முதுகுப்புறத்தை அமுக்கி விட்டான்.
அவன் தான் சொல்வதைக் கேட்கவில்லை என்று குஞ்சாலி முதுகைத் திருப்பி நேராக விட்டத்தைப் பார்த்தபடி கட்டிலில் படுத்துக் கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள். பிறகு “மணி என்ன?” என்று கேட்டாள்.
“பன்னெண்டு. பன்னெண்டேகால் இருக்கும்.”
“இப்ப கிளம்பினாலே ஆத்துக்குப் போய்ச் சேர ஒரு மணி ஆயிடுமே”என்றாள்.
“இன்னும் அரை மணி கழிச்சு டாக்டர் போகச் சொன்னார்” என்றான் சீமா.
“உனக்குப் பசிக்கிறதா?” என்று கேட்டாள் குஞ்சாலி.
“இல்லே. இப்போ வயத்திலே பயம்தான் இருக்கு” என்றான் சீமா.
“சீ அசடே, இதுக்கென்ன பயம் வேண்டிக் கிடக்கு? உங்கப்பா சொன்னதும் சரிதான். சின்னப் பசங்களைக் கூட்டிண்டு வரக் கூடாதுதான். டாக்டர் எதோ புஸ்தகம் கொடுத்தாரே. என்ன புஸ்தகம்?”
அவன் சொன்னான். “ஓ, உனக்குத்தான் ரொம்பப் பிடிக்குமே. சரி அதை வச்சுண்டு வெளியே போய் உக்காரு. அரை மணி கழிச்சு நாம கிளம்பலாம்” என்றாள் குஞ்சாலி.
சீமா மறுபடியும் வெளியே வந்து உட்கார்ந்து கொண்டு கத்தரிக்காயை ருசிக்க ஆரம்பித்தான்.
குஞ்சாலியும் சீமாவும் கிளினிக்கை விட்டுக் கிளம்பும் போது பனிரெண்டே முக்கால் ஆகியிருந்தது.
“அம்மா. நாம ரிக் ஷாலேயே போயிடலாம். நீ ரொம்ப டயர்டா இருக்கியே!” என்றான் சீமா.
“மனுஷனை மனுஷன் இழுத்துண்டு போறதுலையா? வேண்டாம். வேண்டாம். நாம பஸ்லேயே போலாம். உடம்பு அப்படி ஒண்ணும் உருகிப் போயிடாது.”
ராஜா பார்லியைக் கடக்கும் போது குஞ்சாலி அவனிடம் “ஒரு கேக் வாங்கிக்கோடா. கார்த்தாலே எட்டு மணிக்கு மூணு தோசை சாப்பிட்டது” என்று கடை வாசலில் நின்றாள். அவனுக்கு ஒரு சாக்லேட் கேக் வாங்கிக் கொடுத்தாள். அவன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே அவளுடன் நடந்தான். பஸ் ஸ்டாப்பை நெருங்கும் சமயம் அப்போது வந்த பத்தொன்பதாம் நம்பர் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் அவர்களைக் கடந்து சென்றது. சீமா குஞ்சாலியிடம் “ஒரே கூட்டமா இருக்கேம்மா பஸ்ஸிலே இப்பக் கூட” என்றான்.
“அடுத்த பஸ் வர இன்னும் காமண்னேரம் ஆகும்” என்றாள் குஞ்சாலி
சலிப்புடன். சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“இங்கே கொஞ்சம் உக்காந்துக்கறேன்” என்று பஸ் ஸ்டாப் அருகே இருந்த ஒரு வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டாள்.
“நீயும் வரியா?” என்று சீமாவிடம் கேட்டாள்.
“நீ உக்கார்றதுக்கே அங்கே இடமில்லே” என்றான் சீமா
“அப்பாடா! என்ன வெய்யில், என்ன வெய்யில்!உஸ் !” என்று முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள் குஞ்சாலி..
ஆங்காங்கு இருந்த மரங்களுமே வெய்யிலில் வதங்கிக் கொண்டிருந்தன. இயற்கை மூச்சு விட மறந்து விட்டதை இலைகளின் அசைவு அற்று நின்ற மரங்கள் சுட்டின.
அப்போது அந்த வீட்டின் உள்ளிருந்து வந்தவர் குஞ்சாலியைப் பார்த்தார். “இந்தப் பாழாப் போன வெய்யில்லே எடமும் பத்தாம உக்காந்துண்டு இருக்கேளே. ஆத்துக்குளே வேணும்னா போயி சேர்லே சித்த நாழி உக்காந்துக்குங்கோ. பாத்தா ரொம்ப டயர்டா இருக்கேளே” என்றார்.
“இல்லே, இப்ப பஸ் வந்துடும்” என்றாள் குஞ்சாலி.
“கொஞ்சம் தேர்த்தம் தரட்டுமா?” என்று கேட்டவர் அவள் பதிலை எதிர்பாராமல் உள்ளே சென்று ஒரு சொம்பில் தண்ணீரும் ஒரு தம்பளரும் கொண்டு வந்து கொடுத்தார். குஞ்சாலி வாங்கிக் குடித்த பின் சீமாவுக்கும் கொடுத்தாள். பாத்திரங்களைத் திரும்பக் கொடுக்கையில் “தவிச்ச வாய்க்குத் தூத்தம் கொடுத்தேள்” என்று நன்றியுடன் சொன்னாள்.
அடுத்த பஸ்ஸும் கூட்டத்தை அப்பிக் கொண்டு வந்து நின்றது. இரண்டு பேர் இறங்கினார்கள். குஞ்சாலிக்கும் சீமாவுக்கும் முன்னால் பஸ்ஸின் ஏறும் படியருகே மூன்று பேர் நின்றார்கள். பஸ்ஸை விட்டு இறங்கி வந்த கண்டக்டர் “ரெண்டு பேர்தான் ஏறலாம்” என்றான். அதைக் கேட்டு அந்த மூவரும் ஒதுங்கிக் கொண்டார்கள். குஞ்சாலியும் சீமாவும் ஏறிக் கொள்ள பஸ் புறப்பட்டது. பஸ் உள்ளே பெண்கள் பக்கம் காலியாக இருந்த ஒரே சீட்டில் குஞ்சாலி உட்கார்ந்து கொண்டாள்.
அவர்கள் வீட்டை அடையும் போது ஒன்றரை மணியாகி விட்டது. குஞ்சாலி சீமாவிடம் “வரப்பவும் கூட்டம் ஏன் தெரியுமோ? பசுமலை சர்ச்சிலே கல்யாணம்னு முக்காவாசி பஸ்ஸை ரொப்பிண்டு ஏழெட்டு குடும்பம் தல்லாகுளத்திலேர்ந்து வராளாம். என்ன மிச்சம்னா நீ திரும்பி வரச்சேயும் கால் கடுக்க நின்னுண்டு வந்ததுதான்” என்றாள். வீட்டை அடைந்ததும் அவர்கள் சாப்பிட்டார்கள்.
சாப்பிட்டு முடிந்ததும் சீமா “அம்மா, நான் கோபாலாத்துக்குப் போறேன். இன்னிக்கி அங்கே கேரம் மேட்ச். ஆறு மணிக்கு வந்துடறேன்” என்றபடி கிளம்பினான்.
“ஏண்டா, கொஞ்சம் ஆத்திலே இருந்து ரெஸ்ட் எடேன். எனக்கும் ஒத்தாசையா இருக்கும்” என்றாள் குஞ்சாலி.
அவன் பதில் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்து விட்டுக் கூடத்தில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டான். குஞ்சாலியும் டாக்டர் கொடுத்த மாத்திரையைப் போட்டுக் கொண்டு ஊஞ்சலில் படுத்தாள். ஆனால் அவள் தூங்க முடியாமல் முதுகைத் திருப்பியும் நெளிந்தும் புரள்வதை சீமா பார்த்தான்.
“அம்மா, இப்ப கொஞ்சம் முதுகைப் பிடிச்சு விடட்டுமா?” என்று சீமா கேட்டான்.
“வேண்டாம். வேணும்னா நானே கூப்பிடறேன்” என்றாள் குஞ்சாலி. ஆனால் அவள் முன்பைப் போலவே புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். அவன் அதைப் பார்க்க முடியாமல் தன்னுடைய அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டான். டாக்டர் கொடுத்த நாவலில் மனதைச் செலுத்த முயன்றான். அரை மணி கழித்து குஞ்சாலி அவனைக் கூப்பிட்டாள். இப்போது தரையில் ஒரு விரிப்பைப் போட்டுக் கொண்டு படுத்திருந்தாள். அவனைப் பார்த்ததும் “வலி விடமாட்டேங்கிறதேடா கண்ணா” என்றாள்.
பிறகு அவனிடம் “நான் குப்புறப் படுத்துக்கறேன். நீ உன் காலாலே கொஞ்சம் மெள்ள முதுகை மிதிச்சு விடறயா?” என்று கேட்டபடி குப்புறப் படுத்துக் கொண்டாள்.
சீமா வலது காலை குஞ்சாலியின் முதுகில் வைத்து மெல்ல அழுத்தினான். “ஆங், அப்படித்தான். அம்மாடா எவ்வளவு நன்னா இருக்கு!” என்றாள் குஞ்சாலி. “அப்படியே கொஞ்சம் மேலாகக் கழுத்து வரைக்கும் மிதிச்சிண்டு போயிட்டு வரியா?”
சீமா அவள் சொல்படி காலை வைத்து அமுக்கி விட்டான். சற்றுக் கழித்து இடது காலுக்கு மாற்றிக் கொண்டான்.
“வலிக்கிறதாம்மா உனக்கு? சரி போறும்” என்றாள்.
அவன் அவள் சொல்வதைக் காதில் வாங்காமல் தன் வேலையைத் தொடர்ந்தான். சற்றுப் பெரிதாக ஆரம்பத்தில் அவளிடமிருந்து வந்த குரல் இப்போது தேய்ந்து சிறு முனகலாக வெளிப்பட்டது. அந்த முனகலும் நின்ற போது சீமா மிதிப்பதை நிறுத்தினான்.
ஐந்து மணிக்கு சந்திரசேகரன் ஆபிசிலிருந்து வந்து விட்டார். அப்போது குஞ்சாலி தனக்குக் காப்பியும் சீமாவுக்கு ஓவல்டினும் போட்டுக் கொண்டிருந்தாள். கணவரைப் பார்த்ததும் அவருக்கும் காப்பி கலந்தாள்.
“நீ படுத்திண்டிருப்பேன்னு நினைச்சிண்டு வந்தேன்”என்றார் அவர் காப்பியை வாங்கிக் கொண்டு.
“நான் என்ன உங்க சித்தி பொண்ணு பத்மாவா? ஒரு தும்மல் போட்டா நாலு நாளைக்கிப் போர்வையைப் போத்திண்டு கட்டில்லே படுத்து ராயசம் பண்ணறதுக்கு?” என்று சிரித்தாள் குஞ்சாலி.
“எங்காத்துக்காராளைப் பத்தி ஒசத்தியா சொல்லாட்டா உனக்குத் தூக்கம் வராதே” என்றார் சந்திரசேகரன். “எலக்ட்ரிக் ஷாக் கொடுத்ததுக்கு என்ன எஃபெக்ட்? ரொம்ப வலிக்கும்னாரே சாமிநாதன்?”
“ஆமா. வலிக்கும்தான்? யார் கிட்டயாச்சும் கொடுத்து முடியுமா? அழுதாலும் பிள்ளை நான்தானே பெறணும்? ஆனா பாவம் கொழந்தை. ரொம்பக் கஷ்டப்பட்டுடுத்து இன்னிக்கி” என்று வாஞ்சையுடன் சீமாவைப் பார்த்தாள் குஞ்சாலி.
“ஏன், என்ன ஆச்சு?”
“போகறச்சேயும் எம்ஜியார் வரார்னு அப்படி ஒரு கூட்டம் பஸ்ஸிலே. கொழந்தை நின்னுண்டுதான் வந்தான். திரும்பி வரச்சேயும் ஏதோ கல்யாணக் கூட்டம் பஸ்ஸை அடைச்சிண்டு வந்ததிலே கொழந்தை நின்னுண்டுதான் வரவேண்டியதாப் போச்சு. அதுக்குக் கால் இத்துப் போயிருக்கும். ஆனா ஒரு வார்த்தை சொல்லலியே?” என்றாள் குஞ்சாலி.
“இன்னிக்கி எம்ஜியார் வரார்னு கார்த்தாலேர்ந்து ஊரே திமிலோகப்படறது. இப்ப நான் வரச்சே ஆபீஸ் கார்லேதான் கொண்டு வந்து விட்டுப் போனா ” என்றார். பிறகு சீமாவைப் பார்த்தபடி. “ராஜா பார்லிலே ஒரு மொக்கு மொக்கியிருப்பானே!”
“ஆமா. கடவாய்க்குக் கூடப் பத்தாம ஒரு கோலிக்குண்டு சைசிலே கேக்குன்னு கொடுத்தான். ஆத்துக்கு வரச்சே ரெண்டு மணி ஆயிடுத்து. பாவம் நன்னா பசிச்சிருக்கும். அப்புறம்தான் கொழந்தை சாப்பிட்டான்.”
“அம்மா ட்ரீட்மெண்ட் எடுத்துண்டு இருக்குறப்போ என்னடா பண்ணினே பொழுது போறதுக்கு?”
“ஒரு நாளைக்கு ஏழெட்டு டீ குடிக்கறவர் புஸ்தகத்தை டாக்டர் அவன்கிட்டே கொடுத்தார்” என்று குஞ்சாலி சீமாவைப் பார்த்துச் சிரித்தாள். “ஆனா கொழந்தை நான் அங்கே படுத்துண்டு இருக்கறதைப் பாத்துப் பயந்து நடுங்கிடுத்து. சின்னவன்தானே? மணியாச்சே, பசிக்கிறதாடான்னு கேட்டா, இல்லே வயறு பூரா பயம் ரொம்பிக் கிடக்குன்னது. பாவம்” என்றாள் குஞ்சாலி.
“வேறென்ன சொன்னார் டாக்டர்? வலி ஜாஸ்தியாகாம இருக்க மருந்து கொடுத்திருக்காரா?” என்று கேட்டார் சந்திரசேகரன்.
“ம். கொடுத்தார். ஆனா வலியைக் கொறைக்கிற தன்வந்த்ரி இதோ நம்மாத்துலேயே இருக்காரே” என்று சீமாவை இழுத்து அணைத்துக் கொண்டாள். “ஒத்தடம் கொடுத்தாப்பிலே அதோட காலையும் கையையும் வச்சு என் முதுகிலே அமுக்கி அமுக்கி அப்படி ஒரு சிஷ்ருக்ஷை பண்ணித்து கொழந்தை. எப்படி வலிச்சிருக்கும் அதுக்கு காலிலேயும் கையிலேயும்?” என்றாள் குஞ்சாலி.