கவிதை

கசிதல்,பறத்தல் – பானுமதி கவிதைகள்

கசிதல்

இறுக்கித் தாழிட்ட கதவுகள்
கொக்கிகள் பிணைத்த சன்னல்கள்
இருந்தும்
வெளிச்சம் தயங்கும் இடுக்குகளில் பார்வை
ஒருக்கால்
தேங்கும் இருளும் தேம்பிக் கொண்டே போகுதோ?

பறத்தல்

உனக்கு நிலம், எனக்கு வான்
பிணைப்பு பசியோடும், தம் மக்களோடும்
பறப்பது ஒன்றும் விடுதலையல்ல
என் கூட்டுக்குள் வானம் உண்டு
கூண்டிலேயும் சிறைப்படும் வானம்
பாவம், நீ ஒரு மனிதன் மட்டுமே!

கடத்தல் – கா.சிவா கவிதை

நலுங்காத சிறு தீபம் போலும்
நனுங்காத  சிறு மலைச்சுனை போலும்
இளவெந்தண்மையுடன்
நிதமும்
நினைவிலெழுகிறது
எங்களின் அந்நாள்

தினங்களைக் கொண்டு
தொடுக்கப்பட்ட
வெளிவட்ட சாலையையென
வருடத்தைக்  கடக்கையில் ,
எதிர்ப்படும் அந்நாளை ..
அகம்விரிய நான்
எதிர்கொள்ளும்போது..
மைல்கற்களில் ஒன்றென அதைக் கடந்து
நோக்கில்லா விழியால் எனை வினவுகிறாள் ..
என்னான்ற இப்ப

​பறக்கும் உள்ளாடைகள் – கவியரசு கவிதை

பெரிய பட்டை வைத்த உள்​​ளாடை
சிறிய கோடு வைத்த உள்ளாடைக்கான
சூரிய ஒளியை மறைத்தபடி
காய்ந்து கொண்டிருந்தது.
தூரத்திலிருந்து நெருக்கப்பட்ட
பெரிய ஆடைகள்
இரண்டையும் தள்ளியபடி
சூரியனை எடுத்துக் கொண்டன.
கிளிப்பை விட்டுப்
பறக்க நினைத்தாலும் அவசரத்திற்குக்
காய்ந்தால் போதுமென நகருகின்றன.
ஈரத்துடன் மோதிக் கொள்வது
எரிச்சலாக இருந்தாலும்
நறுமணத் தண்ணீரில் மூழ்கி எடுத்ததால்
சகித்துக் கொள்வது பழகியிருந்தது.
காய்ந்த பெரிய ஆடைகளை
இரவில் மழைக்கு பயந்து
எடுத்துச் சென்றவர்கள்
உள்ளாடைகளை மறந்து விட்டனர்.
திடீரென கிட்டிய தனிமையில்
கிளிப்பை மறந்து குதித்து
தலையும் கால்களும் முளைத்து
நடனமாட ஆரம்பித்தன.

வாய்ப்பது – கா.சிவா கவிதை

இடமூலையில் வேம்பு
வடமூலையில் மா
நடுவில் பலா
இடையில் நெல்லி எலுமிச்சை
இடைவெளிகளில்​​
ரோஜாவும் செம்பருத்தியும் என்ற பெருவிழைவை
செயல்படுத்தியபோது
கழிவுநீர்த் தொட்டி
மாவினிடத்தைப் பெற்றது
ஆழ்துளைக் கிணறு பறித்தது
வேம்பினிடத்தை
நீர்சேகரத் தொட்டி அடைத்தது
பிறவற்றின் இடத்தை

அலைவரிசை, மாற்றுலகம்,அந்தியின் கடைசிப்பறவை – கமலதேவி கவிதைகள்

அலைவரிசை

கானலடிக்கும் வெயில் அலைகளில்
மிதக்கிறது
நிழற்படம் போலவோ,
தொலைப்படம் போலவோ,
அந்தமுகம்.
புறத்தின் எந்தத்தடையும் இன்றி
செவிநரம்புகளை இதமாய் தொடுகிறது
மென்காற்றென ஒருகுரல்,
படக்கருவி அருகினில் காட்டிய கண்கள்,
எப்போதோ புன்னகைத்த இதழ்களை இப்போதெனக் காணும்
யுகத்தில் நீயாரோ ?
பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு அலையில் உன்குரல்,
அதே பிரபஞ்சத்தில் கேட்கும் என் செவிகள்,
அருவக்குரல் சொந்தமில்லையாதலால்
அன்னியமுமில்லை.
வெயிலுக்கு ஒதுங்கிய கூரையிலிருந்து
உன்குரலோடு தெருவில் இறங்கி நடக்கிறேன்.
எனக்கும்….
அந்தத் தகரக்கொட்டகைக்கும்
இடையிலான தொலைவில் தேய்ந்து மறைகிறது
ஒரு புரியாதபுதிர்.

மாற்றுலகம்

இன்னும் மென்மை எய்தாத
இளம்சிறுமியின் குரல் அது,
கண்களை விரித்து இசைக்கு
தலையாட்டியபடி பாடினாள்,
பெரும்பாலும் முகத்தின் உணர்வுகளில்
மாற்றமில்லை…
அவள் காணும் கனவில்
நானுமிருந்தேன்
நிகழ்காலத்தின் மாசில்லாதொரு
பொழுதில்

அந்தியின் கடைசிப்பறவை

மேகங்கள் அற்றவெளியில்
நிலவெழுந்த வானில்….
மென்குரலில் ‘ கீகீகீ.. ’
ஒற்றைப்பறவையின் பதறிய குரல்.
உணவோ… நீரோ..
குறிவைத்தக் கண்ணியோ… உடலோ…
இப்படி எதனால் பிந்தியதோ?
என்னவாயிருந்தால் என்ன?
அதன் வழியில் குறுக்கிட
எந்தப்பறவையும் இல்லை என்பதே
எத்தனை ஆசுவாசம்.