
சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்
சூன்யத்தின் இசை
“அதிகாரம் என்பது செலுத்துவதற்கு மட்டுமல்ல, ஏற்றுக் கொள்வதற்கும் உகந்ததாக இருக்க வேண்டும்” விஷ்ணுகுப்தர் அடிக்கடி சொல்வதுண்டு. பெரும் சுண்ணாம்புக்கற்களைக் அடுக்கி வைத்து, இடைவெளியில் சிறிய கற்களை உடைத்து நிரப்பி, எழுப்பப்பட்டு, இரண்டு அடுக்கு சுற்றுசுவர்களை கொண்ட ராஜகிருகக் கோட்டையைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு விஷ்ணுகுப்தரின் போதனைதான் நினைவுக்கு வருகிறது. ஹர்யாங்கர்களின் பேரரசனான ஷ்ரேனிகனின் காலத்திலிருந்தே ராஜகிருகம் தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டது என்று சொல்கிறார்கள். கோசலம், காசி, பாஞ்சாலம், கலிங்கம், குரு வம்சத்தார், இக்ஷ்வாகுகள், மைதிலர்கள், சுரசேனர்கள், லிச்சாவியரிலிருந்து சிந்துநதி தீரத்து மாத்ரர்கள்வரை ராஜகிருகத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில் எவருக்கும் சுணக்கம் இருந்ததில்லை.
ஒருவகையில் மகதத்தின் அனுசரனை அவர்களுக்கு தேவையானதும் கூட. அண்டைநாட்டாரெல்லாம் அஞ்சி நடுங்கும்படியான படைபலத்தை ஹர்யாங்கரர்கள் திரட்டியிருந்தார்கள். ரத்னமலை, சைலம், விபுலம் என்று சுற்றியிருந்த மலைப்பகுதிகளில் இருந்த பெரும் யானைக்கூட்டத்தை வைத்து மிகப்பெரும் யானைப்படையை உருவாக்கி வைத்திருந்தார்கள். கூட்டமாக மதமிளகிய மத்தகத்துடன் யானைக்கூட்டத்தை விரட்டிவிட்டு பின்னாலேயே குதிரைப்படை வந்து சூறையாடியதும், அதன்பின்னர் வரும் காலாட்படை அத்தனை செல்வத்தையும் கட்டியெடுத்துச் சென்று ராஜகிருகத்தை நிரப்பி வைப்பதுமாய் மகதத்தின் வெற்றிகள் பெருகியவண்ணம் இருந்தன. நந்தர்களின் குறுகியகால ஆட்சியில் இன்னமும் வீர்யமாக கங்கைதீரம் முழுவதும் மகதம் வேட்டையாடிக் கொண்டிருந்தது. சூறையாடுதலை தவிர்க்க விழையும் அரசர்கள் உடன்படிக்கையாக மகதத்தின் அரசர்களுக்கு பெண்கொடுத்து சம்பந்த உறவு வைத்துக் கொண்டுவிடுவார்கள். சமாதானத்திற்கு விலையாக அறை நிரப்பும் பொன்னும், வெள்ளியுமாக கொடுத்து உறவுபேணிக் கொண்டிருந்தார்கள்.
நெடிய கோட்டைக்கதவுகளை ஒட்டி குதிரை லாயங்களைச் சுற்றிக்கொண்டு வருகிறவனுக்கு ஒன்று புரிகிறது. மகதத்தின் அரசுதான் மாறியிருந்ததேத் தவிர அரசு அமைப்பு, நடைமுறைகள், வழிவகைகள் எல்லாமே பெரும்பாலும் மாறாமல் இருக்கின்றன. அப்படி இருக்க வேண்டும் என்பது விஷ்ணுகுப்தரின் முக்கிய நோக்கம். ராஜகிருகத்தை அப்படியே அதன் அதிகார, செல்வ செழிப்போடு கைக்கொள்வதே அவருடைய முதன்மையான திட்டம்.
‘வைபாரகரின் படைக்கொட்டடிகள் தொலைவில் இருக்கின்றனவோ’ கூடவரும் காவலர் தலைவனிடம் கேட்கிறான். ஆலோசனைக் கூடத்தை அடையும்போது அவன் எப்போதும் கேட்கும் கேள்விதான் என்றாலும் புவனபாலன் பொறுமையாக பதிலளிக்கிறான்.
‘இரண்டு குரோச தொலைவு இருக்கும். தென்கிழக்காக குமாரசாவடி கடந்து வைபார மலையடிவாரம் அருகில் இருக்கும்’
அந்த படைக் கொட்டடியின் நீளமும் அகலமும், ஏன் மண்ணின் நிறம் கூட அவனுக்கு பரிச்சயமானவைதான் என்றாலும், நந்தர்களின் படையை வென்று, மகதத்தின் அரசனாக பட்டினப்பிரவேசம் செய்த நாளிலிருந்து அவன் குமாரசாவடி பக்கம் போனதே இல்லை.
‘குமாரசாவடியில் ஏதோ தூதுக்குழு வந்து தங்கியிருக்கிறது என்று ஆச்சாரியர் சொன்னாரே’
அதற்கு மேல் புவனபாலனும் பதிலளிக்கவில்லை. அவனும் கேட்கவில்லை. புவனபாலனும் ஆச்சாரியரின் செவிப்புலச் சங்கிலியில் ஒரு கண்ணியாகத்தான் இருப்பான். விஷ்ணுகுப்தரின் அரசியலமைப்பில் அரசனுக்கு என்று பிரத்யேகம் ஏதும் கிடையாது.
அவ்வளவு அதிகாலையிலேயே யுக்தர்களின் பிரதிநிதிக்குழு ஆலோசனைக்கூடத்தில் நிறைந்திருக்கிறார்கள். மகாமத்திரர்கள், யுக்தர்கள், ராஜுகர்கள், பிரதேசிகர்கள் என்று ஒரு அதிகார மண்டலத்தை தீர்க்கமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் விஷ்ணுகுப்தர். மதச்சடங்குகளுக்கு தனியே தம்ம மகாமத்திரர்கள்.
‘இப்படியாக ஆண்டவனுக்கு ப்ரியமான முதலாம் சந்திரகுப்த மௌரியரின் ஆணைப்படி,
மகாமத்திரர்களுக்கு அடுத்தபடியான ஸ்தானிகர்களாக பொறுப்பேற்றுக் கொள்ளும் இவர்கள் அனைவரும் யுக்தர்கள் என்றழைக்கப்படுவார்கள். இவர்களுக்கான முதன்மை காரியங்களாக தினப்படி வரவு செலவு பதித்தலும், தானிய கணக்கெடுப்புகளும், சந்தை கொள்முதல் முறைமைபடுத்தலும், வீதி பராமரித்தல் திட்டங்களும்…..’
விஷ்ணுகுப்தர் நீளமாக வாசித்து முடித்து, முத்திரையிட்ட பட்டயங்களையும், இலச்சினைகளையும் கையளித்ததும் சிரம்தாழ்த்திப் பெற்றுக்கொண்ட பிரதிநிதிகள் குழு, அரசனை வாழ்த்துப் பாடி நிகழ்வை நிறைவு செய்கிறார்கள்.
பிறகு கௌமுதி உற்சவத்தை முன்னிட்டு, கிரேக்க சத்ரபதி நிகனோருக்கு பரிசு சீர்வரிசைகளைப் பற்றிய விவாதம் நிகழ்கிறது.
‘யவன பிரதிநிதியான பைலார்க்கஸ் புறப்பாடுக்கு தயாராகிவிட்டார். மஞ்சிட்டி மடல் சூரணங்கள், தூபவர்க்கம், ஏலமூட்டைகள், சந்தனக்கட்டைகள், மசோபா மதுவகைகள் என்று பெரும் பட்டியலே தயாராக இருக்கிறது’
விஷ்ணுகுப்தர் முறுவலித்துக் கொள்கிறார். அவன் கணிப்புப்படி யவன சத்ரபதிகளை விஷ்ணுகுப்தர் மகதத்திற்கான அச்சுறுத்தலாக நினைத்ததேயில்லை.
‘அந்திம நேரத்து விளக்கொளியென படபடத்துக்கொண்டிருக்கிறது. அணைந்துபோகும்வரை பொறுமை காப்போம்’
நித்திய அலுவல்கள் முடிந்ததற்கு அறிகுறியாக சபைச்சீலை விலக்கப்பட கேளிக்கை நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. பாசர் இயற்றிய ‘வாசவதத்தையின் கனவு’ நாடகம் பாடல்களும் அபிநயமுமாக உருவெடுத்து சபையை நிறைக்கிறது. கௌமார உற்சவக் கொண்டாட்டத்தின் பகுதியாக பாசரின் காப்பியத்தை பத்ராசலரின் திறன்மிகுந்த சீடர்கள் நாடகமாக நிகழ்த்துகிறார்கள்.
போதிசத்வர் காலத்தில் கௌசாம்பி ராஜ்யத்தை ஆண்டு வந்த உதயணனைப் பற்றிய உணர்ச்சி காவியம் அது. அவந்தி நாட்டு இளவரசியான வாசவதத்தையை காதலித்து கடிமணம் புரிந்து பின்னர் பிரிந்து வாடும் கதை.
பத்ராசலரின் காந்தர்வக்குரலில் வாசவதத்தையின் எழிலுருவை வர்ணித்தபடிக்கு பாடல் பிரவகித்து சபையை மூழ்கடிக்கிறது.
‘சிவந்த நிறமுடைய திருமகள் என்ற தெய்வம் உண்டு என்று செவியால் மட்டும் கேட்டுணர்ந்த மாந்தர்களே, இனி அத்தெய்வத்தின் உருவத்தை உங்கள் கண்களாலும் கண்டு தெளிவீராக! திருமகளின் உருவம் உண்மையாகத் தோன்றும்படி ஓவியப் பலகையிலே எழுதித் திருத்தி உலகத்தவர்க்கு எடுத்துக்காட்டாகக் செய்ததுதான் அவள் அழகு உருவம். அவ்வழகிற்கும் அழகு செய்யும் அணிகலன்களையும் அணிந்துகொண்டு, யாரும் இதுவரைக் காணாத பெண்மை மிகுந்த, நாணத்தால் உண்டான அடக்கத்துடன், மணியே முலையாக உருக்கொண்டாற் போன்ற அழகிய மெல்லிய மார்பகங்களையும், அது தாங்காத குளிர்ந்த ஒற்றைவடமாகிய முத்துமாலையுமாக எழில்கோலம் கொண்டவள்’
அவருடைய வரிகள் மெள்ள மெள்ள கேட்போரின் சிந்தனையில் ஏறி பெண்ணாக உருக்கொண்டு நிலைகொள்கிறது.
“இலவ மலர் போன்று சிவந்த வாயையும், அவ்வாயின்கண் நிரல்பட்ட பற்கள் சின்ன சிரிப்பை வெளிப்படுத்த, அது என்னை கேலி செய்வது போலிருக்கிறது. அழகிய முகத்தையும் கூந்தலின்கண் அப்பிய செம்பொன்னாலியன்ற சுண்ணம் சிதறிய அழகிய நுதலையும் நான் பார்க்கும்போது கண் தாழ்த்தியும், நான் பார்க்காதபோது தேன் நிறைந்த செந்தாமரை மலரின் சிவந்த இதழையொத்த மதர்த்த செவ்வரியோடிய தன் நெடிய கண்களாலே என்னை வாரிப் பருகுவாள். வேலையொத்த அந்த கண்களின் கடைப்பகுதி உகுத்த வெவ்விய கண்ணீரைப் பிறர் அறியாவண்ணம் மறைத்துக்கொண்ட என் உள்ளங்கவர்ந்த கள்வியே… பேரழகியே… உன் அழகால் உண்ணப்பட்ட என்னுடைய புகழையெல்லாம் மீண்டும் பெறுவேனா? இப்படியாக மனஞ்சுழன்று மயங்கித் துன்பம் மிகுந்த உதயணன் வருந்தி நிற்க…’
வேகசர்மனின் தூதுக்குழு அர்த்தமண்டபத்திற்கு வந்திருப்பதாக புவனபாலன் அவனுக்கு மட்டும் கேட்கக்கூடிய சன்னமான குரலில் தெரிவித்தான்.
2 comments