அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018
தனிமையின் இலக்கியம்.
“ஒருவரை ஒருவர் சித்திரவதை செய்து கொள்வதற்காகத் தான் இந்த மனிதர்களே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.” – தஸ்தயேவ்ஸ்கி.
அள்ள அள்ள குன்றா அமுதம் தரும் வாழ்வின் பல முனைகள் – குறிப்பாக வாழ்வின் இச்சைகளை சமூகக் கட்டமைப்பிற்கேற்ப நேர்பட வாழச்சொல்லும் ஒழுக்க விதிகளினால் ஊடறுக்கப்படும் முனைகள் – இலக்கியத்தின் ஊற்றாக தொடர்ந்து வாய்த்து, காய்த்து கிடக்கிறது. இதன் சாதகங்களை எழுத்தாளரின் மனம் மெல்ல, நேர்மையாய் கைக்கொள்ளும் தோறும் ஒரு செவ்விலக்கியம் நம் அவதானிப்புகளின் முன் இணைந்து கொள்ள தயாராய் முன் வைக்கப்படுகிறது.
நினைவிலிருந்து எழுதப்படும் எந்த ஒரு இலக்கியமும் அதன் சிறப்பான ஒருமை அழகை அடைய – நினைவேக்கம், பால்யம், காலப்பற்று என – சில காரணங்கள் உண்டு. அவை அனைத்தையும் தாண்டி, அடிப்படையில் நினைவுகளே புனைவெழுப்பிடும் கட்டுமானப் பொருட்கள் என்ற உண்மை இலக்கியத்தின் செந்தன்மைகளுக்கு அடிநாதமாகிடுகிறது. இன்று காலையில் நிகழும் நினைவுகள் கூட பொருட்படுத்தும் தோறும் புனைவாகவே வெளிப்படுகிறது. காலம் நீள நீள புனைவின் வீச்சும் அதிகமாகிற வாய்ப்புகளே பெரிதும் நிகழ்கிறது.
‘நிழலின் தனிமை’ நாவல் தமிழின் வெகுமதியாய் திகழ்வதற்குக் காரணம், அது கொண்ட வடிவம், பெரிதும் சிக்கலற்றதாகவும், உண்மைகளைச் சொல்லி இருளை அடையாளம் காட்டும் பண்புடையதாலுமே! உலகின் அதிக நவீன செவ்வியல் படைப்புகளைச் செய்தது தஸ்தயேவ்ஸ்கியாவே இருப்பார். நிழலின் தனிமை, தஸ்தயேவ்ஸ்கியின் நாயகர்களால், கட்டி எழுப்பப்படும் ஒரு இருண்மையின் கதைகளை போலவே உருவாகி நிலை பெற்றிருக்கிறது. அதிகம் புற வர்ணனைகளை பயன்படுத்தாமலும், அகத்தின் தவிப்புகளை பற்றி பேசுவதிலும் அந்த உருசிய இராட்சதனின் படைப்புகளின் தன்மை கொண்டே இருக்கிறது.
இது சிறுகதையா, நாவலா என்ற குழப்பம் ஏதுமெனக்கு ஏற்படவில்லை. மனதின் ஒட்டுமொத்த தொகுப்புகளை உருவாக்கிக் காட்டியதனால், அது வாழ்வை முன்வைத்து நாவலாகவே உருவெடுத்திருக்கிறது. ஆனால், சிகப்பு நிறத்தில் தொடங்கி பழுப்பேறிய கண்கள் வழியே நமக்கு கதை சொல்லி, சாம்பல் நிறத்தில் முடிவதால் அதை ஆசிரியர் சிறுகதையே (சற்றே நீண்ட சிறுகதை – தேவிபாரதி) என சொல்லவும் தயங்கவில்லை. எளிய வாசிப்பு தரும் சிறு ஓடையில் பெரும் காட்சிகள் உருவாகும் பெருநதியின் ஓட்டம்.
சிறிய சுனை போலத் தோற்றம் கொண்ட நீர்பரப்பு, இறங்கியதும் தன் ஆழத்தை விரித்துக் காட்டுவது போல, நாவல் முழுவதும் விரவிக் கிடக்கும், திடுக்கிடல்கள், அவற்றிற்கான இயல்புகளையும், வடிவ ஒருமையைச் சிதைக்காமலும் மினுக்கிடுகின்றன. வருடும் பீலியே சட்டென பறந்து வந்து நம் கண்களைக் கிழிக்கும் தன்மை பெறுவது போல, இந்த சிறுசுனையில் ஒரு பெருநதியின் ஓட்டத்தை பெற முடிகிறது. அது, நம் தோல்விகள், பழியுணர்வு, வஞ்சினம், காமம் என தொடர்ந்து எதிர்மறை பற்றிய கேள்விகளை அல்லது காட்சிகளை எழுப்பும் தோரும் நம் நினைவின் நதியில் வந்து இணைந்து கொள்கிறது.
மகாபாரதம் முதலாய் நிழலின் தனிமை ஈறாய் வைத்து, ஆண்களின் போர்களைக் கணக்கிட்டுப் பார்த்தால், அதில் பெண்களின் ஆற்றல் பெரும்பங்கு வகிப்பது, வியப்பாய் எஞ்சுகிறது. சாரதா, சுலோ, சுகந்தி என நீளும் கதைப் பெண்கள் ஆங்காங்கே தன் உணர்வுகளின் நீட்சியிலேயே வந்து – தன் வலையிலேயே சிக்கிய – சிலந்தி போல என சிக்கித் தவிப்பதும், பேரொலி எழுப்பி அழவேண்டிய தருணங்கள், உலகம் உமிழுமென உணர்ந்தும் தொடரும் ஒழுக்கமீறல்கள், தொடர்ந்து ஆற்றல் கொண்டு எழும் தீராத பழியுணர்வுடனான நடமாடுதல்கள் (அவ்வாறான ஆண்களின் கற்பனைகளில்) ஆகியவற்றிலெல்லாம் எளிய கடந்து செல்லுதலை செய்வதும் பயத்தையும், கருணையையும் ஒன்றாய் அள்ளித் தெளிக்கிறது.
நாவலில் வரும் நாயகனின் பால்யம், பெரும்பாலான பால்ய கதைகள் போலவே தென்பட்டாலும், ஒரு வழக்குமீறிய, பின்வாழ்வின் பதற்றங்களுக்கான விதைகளை ஏந்திய நிலமாகவே உருவாக்கப்பட்டுள்ளதென அவதானிக்கிறேன். வளர்வதும் சிதைவதும் பற்றியவையே அனைத்து இலக்கியமும். நாயகனின் பால்யத்தில் வரும் வின்செண்ட், வெகு சிறப்பாக உருவாக்கப்பட்ட துணைப் பாத்திரம். கருணாகரனின் மீதான பழி, க்ரோதத்தை காட்டிக் கொண்டிருக்கும் நண்பனின் கதைக்கு கைத்தாங்கலாய் ஆறுதல் கொடுத்து விட்டு, அதிலிருக்கும் வன்மத்தின் மயக்கத்திற்கு ஆளாகி புதர்மறைவில் தனிக்காமம் கொள்ளும் மிருகத்தை அச்சிறிய பாத்திரமே உணர்த்தி வென்றிருக்கிறது.
தன்மையில் சொல்லப்பட்டிருக்கும் கதை, அது கதையாடும் விதத்திலும், பிங்க், பழுப்பு, சாம்பல் என வெவ்வேறு நிறங்களைக் கையாண்டிருக்கும் அழகிலும், அதிக நிலக்காட்சிகள் இல்லாதிருப்பினும், குழப்பமான வடிவங்களை கொண்டிருக்கும் அக புற நிலக்காட்சிகளை வடிவம் கொண்டதிலும், மன இருளின் அத்தனை ரகசியங்களையும் வெளிச்சமிடும் ஆகிருதிகளிலும், செவ்வியல் படைப்பாக ஆகியிருக்கும் தனிமையின் நிழல் நாவல் சினிமாவாக எடுக்க உகந்த உன்னதம் என்பது என் துணிபு.
எளிமையான கோபம் நடிக்கப்பட்டு, மெல்ல ஆழமாக வேர்கொண்டு பூதாகரமாய் வளர்ந்து விடுகிறது. அதை, செயலாக்கிட பழியுணர்வு கொண்டு, அதற்கும் தன் சுயநிலை மீதான பற்றுக்கும் இடையிலான தவிப்பு மனிதனை அலைகளின் தொகையாக்கி பார்க்கிறது. தன்னைத் தானே வென்று கொள்ள முனைவெடுத்து, ஒழுக்கமீறல்களின் மூலம் தன்னை உலகம் தனிமையால் சபிக்க வேண்டுமென அருகில் உள்ளவர்களையெல்லாம் தன் அலைகளுக்குள் இழுத்து போட இச்சை கொள்கிறது மனித மனது. ‘நிழலின் தனிமை’ இருளைச் சொல்லும் பொழுதே, தனிமையின் நிழல் தரும் ஆற்றுப்பாட்டையும் சொல்லி செல்கிறது.
தமிழின் இன்றைய இலக்கிய சூழ்நிலையில் தான் வட்டார வழக்குகளின் ஆழத்திலிருந்து எழும் புனைவுகளோ, சங்க தமிழின் சொல்லாட்சிகளுடன் எழும் புனைவுகளோ, காப்பியங்களின் மீளுருவாக்கங்களோ தமிழிலக்கியத்திற்குத் தேவையாகிறது. அவ்வகை புனைவுகள் தமிழுக்கு சீரிய கால இடைவெளிகளில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், நிழலின் தனிமை இவற்றையும் கடந்து ஒரு – தன்மை கதையாடல் முறையில் சொல்லப்படும், வஞ்சம் பற்றிய திகில் நிரம்பிய, வழக்கமான ஆண்பெண் உறவுகளைப் பேசும் – எளிமையான நாவலாக எஞ்சிவிட்டது போல தோற்றம் தருகையிலேயே, அத்தனை வகைமையையும் மிஞ்சியும் நிற்கும் படைப்பாகிறது.
நிழலின் தனிமை – தேவிபாரதி – காலச்சுவடு.