நீங்கள்
நினைப்பது போல
என்றோ செத்துப்போன
அற்ப அறிவு
ஜீவராசிகள் அல்ல,
டைனஸார்கள்.
காலத்தைக் கடந்த
கடவுளைப் போல
அவை
சர்வ வல்லமையும்
கொண்டவை
தம்
பிரவேசம்
துல்லியமாக அமையும்
கணத்தை
தியானித்தபடி
அவை
நான்காம் பரிமாணத்தில்
காத்திருக்கின்றன
மேக வடிவெடுத்து
உங்கள் தலைக்குமேல்
மிதந்தபடியும்
பாதத்திற்கு கீழே
புதைந்து
பதுங்கிக்கொண்டும்
சுவரின் நிறத்தில்
உங்கள்
படுக்கை அறையிலும்
தாழ்வாரத்தின்
கூரைச் சரிவிலும்
தாழிடப்பட்ட
கழிவறையின்
கதவுக்குப்பின்னும்
மரத்தின் வடிவில்
வீட்டு
முற்றத்திலும்
மேசையில் நிற்கும்
போத்தலின்
திரவத்திலும்
அவை
மறைந்திருக்கின்றன,
கண்ணுக்கு தெரியாமல்
உங்களை
கண்காணித்தபடி.
ஒரு
சிறிய சபலம்
பேராசை
முரட்டுத்தனம்
அல்லது
ஏதோ ஒரு கணத்தின்
எதிர்பாரா
சிறு பிழை
போதும்
அவைகளை
நிகழ்காலத்துக்குள்
கொண்டுவர.
எதிர்பாராமையின்
ஒற்றை நொடியில்
உங்கள்
பாதங்களைப் பற்றி
பாதாளத்துள்
ஆழ்த்திவிடும்
படுக்கையறையின்
சுவற்றிலிருந்து
பாய்ந்து வந்து
பிடித்து விடும்
நீட்டி வளைத்து
மரத்தின் கிளைகளாகி
உங்கள் கழுத்தை
நெறித்தும் விடும்.
கண்ணுக்குத்
தெரியவில்லை
என்பதால்
தொலைவில்
இருப்பவை பற்றி
நீங்கள்
தைரியம் கொள்ளத்
தேவையில்லை
மரங்கள்
அடர்ந்த தீவுகள்
மின் வேலிகள்
இரும்புக்கோட்டைகள்
கதவுகள்
சங்கிலிகள்
ஆயுதங்கள் ஏந்தி நிற்கும்
பலசாலிக் காவலர்கள்
அனைத்தையும் தாண்டி
சரியான ஒளியுடன்
அமைந்துவிட்ட
புகைப்படத்தில்
கச்சிதமான கோணத்தில்
காட்சியளிப்பது போல
உயரமான
ஒரு இடத்தில்
ஏறி நின்று
உரக்க ஓலமிட்டபடி
எப்படியாவது
வந்து சேர்ந்துவிடும்
உங்கள்
வரவேற்பறைக்கு.
நீங்கள்
உறக்கத்திலிருக்கும்
படுக்கையறை
கூரையிலும்
விழிக்க காத்திருக்கும்
சாளரத்தின்
சதுரத்தின்
முன்னும்
நடந்து
செல்ல இருக்கும்
சமையலறையின்
தரையிலும்
கொடுக்கு போன்ற
ஒற்றை நகத்தை
தட்டிக்கொண்டு
கொடிய பற்களை
காட்டிக் கொண்டு
சரியான நேரத்திற்கு
வந்து காத்திருக்கும்
நெடுஞ்சாலையைப்பிடித்து
வாகனத்தில் விரைந்து
எப்படியாவது
தப்பிவிடலாம்
என்று மட்டும்
நினைக்காதீர்கள்
இந்த டிரெக்ஸ் மட்டும்
ரொம்பவே
பொல்லாதது
இதில்
காண்பதை விடவும்
வஸ்துக்கள்
உங்களுக்கு
மிகவும் அருகில்
இருக்கின்றன
என்ற வாசகம் பொறித்த
பக்கக் கண்ணாடியில்
நீங்கள் பார்த்து
திரும்புவதற்குள்,
பாய்ச்சலாய் ஓடிவந்து
உங்களை
பாய்ந்து பிடித்துவிடும்.
ஆகவே,
டைனோஸார்களை
அஞ்சுவதும்
வழிபடுவதும்
மட்டுமே
தப்பிப் பிழைக்க
ஒரே வழி
ஆமென்!
தத் சத்.