அவளுக்கு எப்போதும் பழங்கள் பிடிக்கும்.
ஆனால் இப்போது பழங்கள் பிடிக்கவில்லை.
நறுக்கி வைத்தால் ஒருவேளை பிடிக்கலாம்.
என்று உத்தி செய்கிறான் அவன்.
நீளவாக்கில் வெட்டியிருந்த
ஆப்பிள் துண்டுகளிலிருந்த
பிசிறுகளை சுட்டி
‘இதெல்லாம் ஆப்பிள் இல்லை’ என்கிறாள்.
தர்பூசனியின் விதைகள் நீக்கிய
சதுரத்துண்டுகளை புரட்டிப் பார்த்து
உதட்டைப் பிதுக்குகிறாள்.
அண்ணனுக்கென ஒரு பகுதியை ஒதுக்கி வைக்கிறாள்
அளவு கூடிவிட்டதோ என ஐயம்.
குட்டிக் கைகளால் அளந்து பார்க்கிறாள்
டைமண்டு வடிவமாக நறுக்கி வைத்த
பேரிச்சையைப் பார்த்ததும்
முகம் கோணிக் கொள்கிறது.
கன்னங்களை பிட்டுக் கொண்டதைப் போல
சுளிக்கிறாள்
அங்காடியின் அடுக்குகளிலிருந்து
அந்த பழ டப்பாவைக்
இரட்டைப் பின்னல் துள்ள
அவள்தான் குதித்தோடி
எடுத்துக்கொண்டு வந்தது.
அப்பாவைத் திரும்பிப் பார்த்து
கறாராக
‘இது உனக்கு பிடிக்குமென வாங்கி வந்தேன்’
என்று சொல்லிவிட்டு
விரலில் தங்கியிருந்த
பிளம் பழத்தின் பிசுக்கை
அவன் சட்டையில் தீற்றிவிட்டு
சிரிக்கிறாள்.
அதைத் தொட்டுத்தொட்டுப் பார்க்க
பெருகிக்கொண்டே போகிறது.