அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

கடந்த காலத்திலும்,நிகழ் காலத்திலும் மற்றும் எக்காலத்திலும் உள்ள அந்த மாறாத ஒன்றை இலக்கியத்தின் வழியே கண்டடையவேண்டுமெனில்,கவிஞனுக்கு கடந்த காலத்தை பற்றிய அவதானிப்புடன் கூடிய பிரக்ஞை இருக்க வேண்டும் என்கிறார் டி.எஸ்.எலியட். கடந்த காலத்தை விசாரணைக்குட்படுத்தும் வரலாற்று நாவல்கள் வழியே காலதீதமாக உள்ள அந்த ஒன்றை கண்டடைகிறான் வாசகன்;அதே வேளையில் வரலாற்று அறிஞர்கள் போல தரக்கத்தராசு கொண்டு வரலாற்றை தட்டையாக்கி ஒற்றைப்படையாக அறிய முற்படாமல் மனிதர்களை மனிதர்களாக கடந்த காலத்தில் வாழவிட்டு மெய்நிகர் அனுபவங்களை பெற முற்படுகிறான் வாசகன்,எனவே வரலாற்று நாவல் வாசிப்பின் வழியே யார் மீதும் பழி சுமத்தாமல் கடந்த காலத்தைப்பற்றிய மறு பரிசீலனையை வாசகன் மேற்கொள்கிறான்.

அயர்லாந்தின் பஞ்சத்தால் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து இந்தியாவில் பணியாற்றுகிறான் ஏய்டன். சென்னையில் பணியாற்றும் பொது நீலமேகம் இரு தொழிலாளர்களை அடிப்பதை பார்த்து ஐஸ்ஹவுஸ் தொழிலாளர் பிரச்சனையில் ஏய்டன் தலையிடுகிறான்;காத்தவராயன் வழியே இந்தியாவில் நிகழும் பஞ்சத்தின் உண்மையான முகம் ஏய்டனுக்கு தெரியவருகிறது;பஞ்சத்தின் விளைவுகளில் சிறிதளவேனும் மற்ற இருவரும் முயற்சி செய்கிறார்கள். ஏய்டன் செங்கல்பட்டுக்கு பயணம் செய்து பஞ்சத்தை பற்றி பக்கிங்ஹாம்க்கு அறிக்கை அளிக்கிறான். காத்தவராயன் ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்களை கொண்டு இந்தியாவின் முதல் வேலை நிறுத்தப்போரட்டத்தை செய்கிறான்.முரஹரி ஐயங்கார் எளிமையாக ஏய்டனைக்கொண்டே அந்த போராட்டத்தை நிறுத்திவிடுகிறார் மற்றும் வரலாற்று தடயங்களை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுகிறார்.ஏய்டனின் அறிக்கையை கொண்டே ரஸ்ஸல் பல லட்சம் தொழிலாளர்களை அடிமைகளாக கொண்டு மிகப்பெரிய கட்டிட வேலைகளை செய்து லாபம் மீட்டிக்கொள்கிறான்;வெறுப்படைந்த ஏய்டன் தன்னையே சுட்டுக்கொள்கிறான் மண்டையோட்டை குண்டு துளைக்காமல் சென்றதால் ஏய்டன் மீண்டும் உயிர்த்தெழுகிறான். ஒட்டு மொத்தமாக மூன்று அல்லது நான்கு நாட்களில் நிகழும் நிகழ்வுகளால் நாவல் முடிவடைந்துவிடுகிறது.

வரலாற்று நிகழ்வுகளை மையமாக கொண்ட நாவல்களை நமது புரிதலுக்காக நாவல் நிகழும் காலத்தை கொண்டு இரண்டு வித அமைப்பாக பிரிக்கலாம்.

முதலாவது அமைப்பு போரும் அமைதியும் நாவல் போன்று வரலாற்று நிகழ்வுகளை பல மைய கதாப்பாத்திரங்களைக்கொண்டு பெரும் வலைப்பின்னல் கொண்ட ஆடல் களம் போன்று சித்தரித்தல். இந்த அமைப்பில் பல மைய கதாப்பாத்திரங்கள் மற்றும் மிகப்பெரிய காலத்தில் நிகழ்வதால்,எல்லா நிகழ்ச்சிகளும் தொடர்வினைகளாகவும் ஆதியும் அந்தமுமின்றி சுழற்சியாக தெரிகின்றது எனவே இந்த அமைப்பிலிருந்து எக்காலத்திலும் மாறாது சில தரிசனங்களையும்,ஒட்டு மொத்த மானுடத்துக்குரிய சில உயரிய விழுமியங்களையும் வாசகன் கண்டடைகிறான்.

இரண்டாவது அமைப்பு – நாவல் நிகழும் காலம் குறிகிய காலமாக இருத்தல்;இந்த அமைப்பில் ஒரு சில மைய கதாப்பாத்திரங்களைக்கொண்டு ஒற்றை செல்லை நுண்ணோக்கியில் வைத்து ஆராய்ச்சி செய்தல் போன்று அமைத்தல். இந்த அமைப்பில் சில மைய கதாப்பாத்திரம் மற்றும் குறிகிய காலத்தில் நிகழ்வதால் எல்லா நிகழ்வுகளும் நாவலின் மையத்தை நோக்கியே இட்டுச்செல்கின்றன எனவே இந்த அமைப்பிலிருந்து வரலாற்றில் நிகழும் சில உச்ச தருணங்களின் காரணங்களையும்,வரலாற்றின் உச்ச தருணங்கள் மீண்டும் நிகழ அல்லது நிகழாமல் இருப்பதற்கான வாய்ப்புகளையும்,அந்த தருணத்திற்கே உரிய சில தரிசனங்களை வாசகன் கண்டடைகிறான்.

வெள்ளையானை நாவலின் மையப்பகுதி இந்தியாவின் முதல் வேலை நிறுத்தத்தை பற்றியது.இந்த நாவல் இரண்டாவது அமைப்பில் அமைந்துள்ளதால் அதற்கான காரணங்களை தெளிவாக நம்மால் அறியமுடிகிறது. நாம் நமது அறத்தை இழந்துவிட்டதுதான் அதற்கான காரணம் என அறியமுடிகிறது,நாம் அனைவரும் அதற்கு பொறுப்பேற்று எங்கே நாம் நமது அறத்தை இழந்தோம் என்று வாசகனை சுய பரிசீலனைக்கு உட்படுத்துகிறது.


நாவலின் பெரும் பகுதி பஞ்சம்,தலித் அரிசியல் பற்றி இருந்தாலும் நாவலின் ஊடே மேலைநாட்டுக்கல்வி,கிறிஸ்துவ மதம் காலுன்றுதல்,பண்பாட்டு கலப்பு போன்றவற்றையும் நாவல் தொட்டுச்செல்கிறது.எனவே தலித் அரிசியல் மற்றும் பஞ்சத்தை பற்றிய பன்முகம் கிடைக்கிறது.

(பக்:91) “அத்தனைக்கும் மேலாக நீங்கள் எங்களுக்கு உங்களுடைய மொழியில் ஒரு வாசலைத்திறந்து வெளியுலகத்தை காட்டினீர்கள்.எங்களுக்கும் மானுடநீதி கிடைக்க வாய்ப்புண்டு என்று எங்களிடம் முதன்முதலாக சொன்னீர்கள்

தீண்டத்தகாதவர்கள் அல்லது நான்கு வர்ணம் போன்றவை தொன்மங்களிலிருந்து உருவானவை.தொன்மங்கள் பழங்குடி சடங்குகளிருந்து உருவானது. அறச்சமுதாயம் மற்றும் அமைதியான சமுதாயம் உருவாக மற்றும் நிலைநிறுத்த தொன்மங்கள் உதவி புரிகின்றன.

(பக்:191) “அந்த மதச்சின்னங்கள்தான் உண்மையில் இங்கே வாழ்கின்றன.இந்த உடல்கள் அவற்றின் வாகனங்கள்.இவை பிறந்து வந்து அவற்றை ஏந்திக்கொண்டுச்செல்கின்றன”.

(பக்:171) “சில அசட்டுப்பாதரிகள் இவர்களை ஏதாவது சொல்லி மதம் மாற்றி சிலுவை போட்டுவிட்டுச் செல்கிறார்கள்.அதன்பின் திரும்பியே பார்பதில்லை.அவர்களுக்கும் பெயர்கள் மாறுவதோடு சரி வேறெந்த மாற்றமும் நிகழ்வதில்லை

தொன்மங்களில் மாற்றம் நிகழாமல் சமுதாய அமைப்பில் நிலையான மாற்றம் நிகழ்த்தயிலாது.இல்லையேல் முன்னர் விஷ்ணு சிலை இருந்த இடத்தில் தற்போது கிறிஸ்துவின் சிலை மட்டுமே மாற்றமடையும்,அதே சாதி பாகுபாடு மீண்டும் நீடிக்கும்.தொன்மங்களில் மாற்றத்தை தொன்மங்களுக்கு மறு விளக்கமளித்தல்,புது தொன்மங்களை உருவாக்கி அவற்றை தத்துவங்களின் வழியே நிறுவுதலின் வழியே ஏற்படுத்தலாம்.தொன்மங்களின் மாற்றம் ஒட்டு மொத்த சமூகத்தையும் புது ஞானத்தை நோக்கி இட்டுச்செல்கிறது ஞானத்தை நோக்கி இட்டுச்செல்வதுதான் கல்வி.ஞானம் அக விடுதலையை அளிக்கிறது.அந்த ஒரு துளிக்கல்வி காத்தவராயனை சமத்துவத்தை நோக்கி ,கருப்பனை சுதந்திரத்தை நோக்கி செல்லவைக்கிறது

(பக்:320) “எனக்கு கிறித்துவ நம்பிக்கை இல்லை.நான் நம்புவது சுதந்திரத்தையும் சமத்துவத்தையும்தான்.அந்த நம்பிக்கைகள் மீது ஒவ்வொருநாளும் சேறு அள்ளிக் கொட்டப்படுவைதைப் போல உணர்கிறேன்

இதை பார்மர் கூருகிறார்,சமத்துவம் சுதந்திரம் போன்ற தொன்மம் மேலை நாடுகளில் முன்னரே வலுவாக உள்ளது.அந்த தொன்மத்தை அப்படியே நகல் எடுத்தார் போல இங்கு நிறுவ இயலாது அதை இந்தியத்தொன்மத்துடன் இணைத்தால் மட்டுமே இங்கு நிரந்தரமாக நிறுவயியலும்.நாவலில் வரும் காத்தவராயன் உடை போன்று தூரப்பார்வையில் கிறுத்துவன் போன்றும் அருகில் பார்க்கும்போது வைணவன் போன்றும் இரண்டும் கலந்ததாக இருக்கவேண்டும்.


நாவல் முழுவதும் ஏய்டனின் பார்வையில் கூறப்பட்டுள்ளதால் ஏய்டனின் ஆளுமையை பொருத்தும் நாவலை புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது.ஏய்டனின் ஆளுமை என்பது பஞ்சத்தால் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தவன்,கவிதையின்மீது விருப்பமுள்ளவன்,கனவு காண்பவன்,எதிலும் பொருந்தி போகதவன்,கிறித்துவ மதத்தை சார்ந்தவன்,அகச்சிக்கல் உடையவன். அவனுடைய பார்வையிலிருந்து இந்தியத்தொன்மங்களை அணுகும்போது அபத்தமாகவும்,தர்க்கத்திற்கு உட்படாமலும்,பிழையாகவும் தெரிகிறது.

அந்தப்பிழை,அபத்தம்தான் ஒழுங்கு படுத்துவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. பலருக்கு வாய்ப்பு இருந்தும் ஒரு சிலர் மட்டுமே மாற்றத்தை நிழ்த்துகிறார்கள் அதற்கு காரணம் சிலர் மட்டுமே அவர்களுடைய தொன்மத்தின் அர்த்தத்தை ஆன்மாவால் அறிந்துள்ளனர்.அவர்களுடைய தொன்மத்தை முழுமையாக அறிந்தால் மட்டுமே இங்குள்ள பிழையை நீக்க முடியும்.

‘உதாரணமாக கிறிஸ்து மற்றும் சாத்தான் தொன்மம்,கிறித்துவ மதத்தில் உள்ள பழைமையான தொன்மம்.

(பக்:187) “பஞ்சத்தை பார்க்கச் செல்வதில் உள்ள மிகப்பெரிய சாவலே இதுதான்.அது ஒரு பிரம்மாண்டமான சாத்தான்.உங்கள் கண்களுக்குள் ஊடுருவி ஆன்மாவுடன் பேச அதனால் முடியும்

அது நம் தர்க்கபுத்தியை அழிக்கும்.நம்ம அழச்செய்யும் .வாழ்க்கையின் எல்லா அடிப்படைகளையும் நிராகரிக்க வைக்கும்

கடவுளிடம் அதிக அன்பு கொண்டது சாத்தான் தான் ,மனிதனிடம் அதிக அன்பு கொண்டவர் கடவுள் எனவே சாத்தன் மனிதனை வெறுக்கிறது.சாத்தானை கண்டடைந்தவன் கடவுளிடம் நெருங்குகிறான்,கடவுளை அடையவேண்டுமானால் சாத்தனின் அருகில் எப்பொழுதுமிருக்க வேண்டும்.

(பக்:195) “உண்மையான கிறித்தவனாக இருப்பது ஒரு கடமை.ஒரு பெரிய வேலை.அதைச் செய்து கொண்டுருக்கிறேன்

அவரும் என்னைப்போல இதற்க்கு முயற்சி செய்து கொண்டுருந்தவர்தான்.நாங்கள் சக ஊழியர்கள்

மனிதன் பிறக்கும்போது மிருகத்தன்மையுடன் தான் பிறக்கிறான்,மனிதத்தன்மை என்பது தொடர் முயற்சி செய்தல்தான்,மானுடத்தன்மைதான் கிறிஸ்து.

இதை போன்று தொன்மங்களை ஏய்டன்,ஆண்ட்ரு,பாதர் பிரண்ணன் போன்ற ஒரு சிலர் மட்டுமே புரிந்துள்ளனர் அவர்கள் மட்டுமே செயல் புரிகின்றனர்.


தலித் அரசியலை இந்திய தத்துவ பின்புலத்துடன் பின்னி இந்த நாவல் உருவாகி இருப்பதால்,இதற்கான காரணத்தை நமது இந்தியத்தொன்மங்களில் தேடவும் அதற்கான தீர்வை இந்திய தத்துவத்தில் கண்டடையவும் வாய்ப்பளிக்கிறது.

(பக்:382) “அந்த தாக்குதல் நிகழும்போது நான் ஒரு கணம் முரஹரி ஐயங்காரின் முகத்தைப் பார்தேன்.நீங்கள் அதை பார்க்கவில்லை.பார்த்திருந்தால் ஒருபோதும் உங்கள் கொடுங்கனவுகளில் இருந்து அந்த முகம் விலகியிருக்காது

அந்த தாக்குதலை நடத்திய அத்தனை முகங்களும் ஒன்றுபோலத்தான் இருந்தன.கொடூரமான வெறி கொந்தளிக்கும் முகங்கள்.உச்சகட்ட கூச்சலில் அப்படியே நிலைத்துவிட்ட பாவனைகள்.ஆனால் அவரது முகம்.அது வேறுமாதிரி இருந்தது சார்.அது ஒரு உச்சகட்ட பரவசத்தில் இருந்தது சார்.ஒவ்வொரு காட்சியையும் கண்ணாலும் காதாலும் அள்ளி அள்ளிப்பருகி வெறி தீர்பதுபோல.பிறகு நான் நினைத்துக்கொண்டேன்.அங்கே நூற்றுக்கணக்கான உடல்கள் பின்னிப்பிணையும் ஒரு காமக்களியாட்டம் நடந்தால் அதைப்பார்க்கும் முகம் அப்படித்தானிருக்கும்

ஏய்டனின் பார்வையில் பார்க்காமல் இந்தியத் தொன்மங்களின் வழியே பார்க்கும்போது இவையாவும் பிழையாகவும்,அபத்தமாகவும் தோன்றாது .எல்லாம் பிரம்மத்தின் லீலையாகவும்,பௌத்தத்தில் உள்ள தர்மமாகவும் தோன்றும். நீலமேகம்,முரஹரி ஐயங்கார்,நாராயணன் போன்ற யாரும் குற்றமுடையவர்களாக தோன்றாது.அது அவர் அவர்களின் சுதர்மம் எனத் தோன்றும்.

இந்தியத்தொன்மங்களின் வழியே பார்க்கும்போது காத்தவராயன் கண்ணனைப்போன்று ஞானயோகியாகவும்,ஏயிடன் அர்ஜுனைப்போன்று கர்மயோகியாகவும் தோன்றுகிறது.காலச்சுழலில் மீண்டும்மீண்டும் கண்ணனும்,அர்ஜுனனும் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்.


தொன்மங்கள் மலை உச்சியில் கூழாங்கல்லென தவம் புரிக்கின்றன என்றோ ஒருநாள் ஒரு ஆட்டிடையான் கண்டடைகிறான்,கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.