குடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு

லாவண்யா சுந்தரராஜன் 

மனை என்பதற்கு இல்லம், இல்லத்தைக் கட்ட உதவும் நிலம், இல்லத்து அரசி, குடும்பம் என்ற பொருள்களை தருகிறது தமிழ் விக்சனரி. ஆக மனை என்ற சொல்லுக்கு குடும்பத்தில் முக்கியமான அங்கம் வகிக்கும் மனைவி என்று பொருள் கொள்ளலாம். மாட்சி என்ற சொல் மாண்பு, பெருமை, அழகு, மகிமை, நன்மை என்று பல பொருள் கொள்கிறது. வள்ளுவர் மனைமாட்சி என்ற வார்த்தைக்குப் பல அதிகாரத்தில் பெரும்பாலான குறள்களில் பெண்களின் குணநலங்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். இதனை இங்கே நினைவுகூர வேண்டிய அவசியம் “மனைமாட்சி” என்றொரு நாவல் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. அதில் மையம் கொள்ளும் பெண்களை நாவலாசிரியர் வடித்திருக்கும் பாங்கு இந்த ஆராய்ச்சியை செய்யத் தூண்டியது.

Image result for மனைமாட்சி நாவல்

மனைமாட்சி மூன்று பகுதிகள் கொண்ட நாவல். ஒவ்வொரு பகுதியுமே தனித்தனி நாவலுக்குரிய தன்மையுடன் விளங்குபவை. அவை மூன்றையும் இணைக்கும் மைய்ய சரடு தன்மனையை இயக்கும் பெண்ணின் மாண்பு. தன்மனைப் பேணும் பொருட்டு கொண்டுவரும் சிடுக்கல்கள் அதன் மூலம் உருவாகும் உறவு, அக சிக்கல்கள். மூன்று பகுதியிலும் இரண்டு பெண்கள் முக்கிய கதாப்பாத்திரங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள். அவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் வரும் ஒற்றை ஆண்மகனுடன் ஏதேனும் ஒருவிதத்தில் (நேரடி உறவாகவோ, முன்னால் காதலனாகவோ, இன்னபிறவாகவோ) சம்மந்தப்பட்டவர்கள். இந்த நாவலின் முக்கியமான எல்லா கதாபத்திரங்களும்(ஆண்களும், பெண்களும்) பிறன்மனை நாடும் பேராளுமை கொண்டவர்கள். அதன் பொருட்டு ஏற்படும் சிக்கல்களே நாவலின் மொத்த இயக்கத்தையும் தீர்மானிக்கிறது. பிறன்மனையாகிவிட்ட தன்மனையும் பின்னர் பிறன்மனையாக நோக்கப்படுவார்கள் தானே. மூன்று பகுதிக்கும் பொதுவான மற்றொரு சரடு மூன்றிலுமே திருமணம் முடிந்து ஒரு சில நாட்களிலேயே கணவனை விட்டு மனைவி பிரிகிறாள் அல்லது பிரிக்கப்படுகிறாள். அங்கிருந்து தான் கதையின் ஒரு இழை தொடங்குகிறது அந்த இழை பிற இழைகளோடு இணைந்து பெரிய தாம்பு கயிறாகத் திரிந்து எழுகிறது. அது தேர் வடத்தின் பிடியாகிறது. நம்மை அதனைப் பற்றி இழுக்கக் கட்டளையிட்டு நகர்வலம் வரச் செய்கிறது.

நாவலாசிரியர் எம். கோபாலகிருஷ்ணன் அதன் தொடக்க அத்தியாயத்திலேயே முதல் பத்தியிலேயே கனலும் இரும்பு கம்பியால் தன் கணவனின் உடலைப் பதம் பார்க்கும் மனைவியைப் பற்றி சொல்லி அதிரவிடுகிறார். அது ஒரு கனவு தானோ என்று நினைக்கும் போதே நாவல் மெல்ல வளர்ந்து எப்படிப்பட்ட இல்லத்தரசி இருக்கக் கூடாதென்பதற்காக அடையாளமான சாந்தி(அணங்கு போல் அத்தனை குரூரமான பெண்ணுக்கு சாந்தி என்ற பெயர்) என்ற கதாப்பாத்திரத்தை மனதுள் இருத்துகிறார். மனையின் மாட்சி அதன் தலைவியை பொறுத்தே பெரும்பாலான இல்லங்களில் அமைகிறது. அதுவே இந்த மொத்த நாவலில் கதைக்களமாக இருக்கிறது. நாவலில் ஒரு இடத்தில் “பேராசையும் எரிச்சலும் கசப்பும் கண்ணீரும் ஏமாற்றமும் துரோகமும் வஞ்சகமும் அசட்டுத்தனமும் தன்னலமும் கொண்ட பெண்கள் கூட்டத்துக்கு நடுவே தான் வாழ்க்கை என்பது ஓடிக் கொண்டிருக்கிறது” என்கிறார். இப்படிப்பட்ட வரியைப் பதிவு செய்ய எல்லா நியாயமும் இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதாப்பாத்திரங்கள் நாவலில் வலம் வருகிறது. ஆனால் இந்த வரிகளுக்கு முற்றும் முரண்படும் விதமாக நாவல் முழுவதும் பெண்ணின் பெருமையைப் பற்றியே பேசியிருக்கிறார். நாவலின் ஒவ்வொரு பகுதியிலும் தன்மனைக்கு விசுவாசமானவளாய்(பகுதி 1 – ராஜம்பாய், பகுதி 3 – வினோதினி), தன்னலத்தை விடப் பிறர் நலம் பேணுபவளாய்(பகுதி 1 – ராஜம்பாய், பகுதி 2 – மங்கை, பகுதி 3 – வாணி), எந்த நேரத்திலும் யாருக்குமே தீங்கு நினைத்திடாத பெரும் பிறவிகளாய் (பகுதி 1 – ராஜம்பாய், பகுதி 2 – மங்கை) இன்னும் பற்பல போற்ற தகும் குணங்களோடு பெண்களை படைத்திருக்கிறார் நாவலாசிரியர். நாவலின் ஒட்டு மொத்த சாரமும் பெண் ஆக்கவும், அழிக்கவும் செய்யவல்லவள் என்பதை எடுத்துக்காட்டும் பெண்ணிய பிரதியாக இருக்கிறது.

நீரும் நெருப்பும் இந்த நாவலில் மூன்று பகுதிகளிலுமே குறீயிடுகளாக வருகின்றன. பகுதி 1 – சாந்தி ஒரீடத்தில் அணைக்கட்டில் அடைந்திருக்கும் நீரைப் பார்த்து “இத்தனை தண்ணியும் இந்த செவுரு தான் தடுத்து நிறுத்துதா? அந்தளவுக்கு அது ஸ்டராங்கா? என்று உதடுகளை ஈரபடுத்திக் கொண்டே சொன்னவள், அசைவற்ற நீர்பரப்பை கூர்ந்து கவனித்தாள். எனக்கெனவோ இந்த தண்ணி தான் சரி இருப்பமேன்னு சும்மா இருக்குன்னு தோணுது” என்கிறாள். அவளுடைய பாத்திர வார்ப்பையே இந்த வரிகள் குறிக்கின்றன. அவள் அணை உடையாத வெள்ளம் போன்றவள். எந்த நேரத்திலும் அணைய உடைத்து அனைத்தையும் அழிக்கவல்லவள். பின்னர் வரும் வரிகளில் அவளே “பொம்பளைங்களும் இந்த தண்ணி மாதிரி தான்” என்கிறாள். அதே பகுதியில் இன்னொரு இடத்தில் ஓடும் நதியில் மிதக்கும் தீபங்கள் மற்றொரு படிமம். “நெருப்பை அணைக்கக் கூடியது நீர் தான் நின்று எரியவும் துணை புரியும்” என்ற வரிகள் தியாகுவின் பாத்திர அமைப்பு. அவன் கனலும் நெருப்பான சாந்தியை தாங்கிக் கொள்ளும் நீர். ஆக ஒரே பெண் ஓரிடத்தில் நீராக மறு இடத்தில் நெருப்பாகவும் வடிவு பெறுகிறாள். பகுதி – 2 “பெண்ணை உருவாக்கியது நீரும் நெருப்பும் தானே? நீராக கொதித்து நெருப்பாகி குளர்கிறதா?” என்று மங்கையைப் பற்றி சோம சுந்தர வாத்தியார் நினைக்கும் இடத்தில் பெண்ணை நீர் என்றோ நெருப்பென்று பிரித்தறிய முடிவதில்லை. மேலும் இந்தப் பகுதியில் இரண்டு இடங்களில் உணர்வுகளை எரியும் நெருப்பாகச் சித்தரித்திருக்கிறார் நாவல் ஆசிரியர். “பசி. காலையிலிருந்து எதுவுமில்லை. வயிற்றுக்குள் எரிகிறது” என்று அத்தியாயம் பத்திலும் “வயிறு பசிக்கவேயில்லை. உடம்பு தவித்தது. கொதித்தபடி இருந்தது” என்று மகாதேவனின் உணர்வுகளைப் பதிவு செய்து இருக்கிறார். உடம்பு 90% நீரால் ஆனாது. அதில் பசியும், காமமும் நெருப்பை படிமாக கொண்டு சித்தரிக்கப்பட்டது மிகவும் பொருத்தமானது. பகுதி 3 “உயிரை நீர் எடுத்துக் கொள்ள உடல் நெருப்பில் சாம்பல் ஆனது” என்று ஆனந்தகுமாரின் மரணத்தைப் பற்றிய பதிவிருக்கிறது.

பாம்பு மற்றொரு வித்தியாசமான குறியீடாக இரண்டாம் பகுதியில் வருகிறது. மகா தேவனின் பாத்திர வார்ப்பில் அவன் சிறுவயதில் தாயை இழந்தவன் பார்த்து பரிமாறிப் பசியாற்ற யாருமில்லாத காரணத்தால், பெரும் பசியை தன்னுடைய குணாதிசியமாகக் கொண்டவன். எப்போதும் பார்த்தாலும் சாப்பிட்டபடியே இருப்பது போல ஒரு கதாப்பாத்திரம். அவனுக்குப் பசியை பற்றிச் சொல்லும் இடத்தில் “நீரில் அசையும் அதே பாம்பு தான் வயிற்றுக்குள்ளும் அசைந்தோடுகிறதோ? கண்ணில் படும் மின்னலின் பளபளப்பை வயிற்றுக்குள் பரவும் எரிவிலும் உணர முடிந்தது அது பாம்பு தானா? பசி” இப்படி பசியின் தீவிரத்தை உணரும் ஒருவன் காமம் தலை கண்டதும் பசி மறந்து போகிறான். உள்ளம் தடுமாறுகிறான் “பளபளத்து நகரும் இந்த சர்ப்பமும் காமமும் ஒன்று தானா? இத்தனை நாள் புற்றில் உறைந்திருந்த அது, இன்று வெளிப்பட்டதில் எத்தனை தவிப்பு, எத்தனை தடுமாற்றம்?” என்ற வரிகள் அவன் வயிற்றுப் பசியை தாண்டி, உடல் பசியை உணரும் தடுமாற்றத்தை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறது. காமத்துக்கு சாரைப் பாம்பையும், பசிக்குக் கண்ணாடி விரியனையும் உருவகமாகச் சொல்லி இருப்பதில் ஏதேனும் உள்கருத்து இருக்கிறதா என்பதை ஆராய மனம் விழைகிறது.

“தெப்பக்குளத்தில் நடு மண்டபத்தில் ஒரு கருப்பு ஆடு அது அங்கே எப்படிப் போய் சேர்ந்தது.” இந்த வரிகள் மதுமிதாவின் பாத்திர வார்ப்பைச் சார்ந்து குறிக்கிறது. அவளும் அப்படித் தான் நடு மண்டபத்துக்கும்(மண வாழ்க்கைக்கு) அறியாமல் வந்து விட்ட ஆடு. பயமற்றவள் போல காட்டிக் கொண்டு தனக்குத் தானே மருளும் குணம் கொண்டவள். மற்றும் “படகுகள் கிழித்து போகும் நீர்பரப்பின் வலியை அறிந்தாள். அவரவர் வலைக்குச் சிக்கிய மீன்களைக் கொண்டு நீரையும் அதன் ஆழத்தையும் அளக்கிறார்கள். வலைக்கு எட்டாத, படகு கிழிக்காத நீரை யார் அளப்பது?” இதுவும் மதுமிதாவின் பாத்திர வார்ப்பின் இன்னொரு பரிமாணம் அவள் மனதில் ஆழத்தில் படிந்திருக்கும் தயக்கங்களும் தர்க்கங்களையும் அவளே அறிய முடியாத ஆழத்தில் கொண்டிருப்பவள். புறத்திலிருந்து அவளைப் பார்ப்பவர்கள் அவரவர் வலையில் அகப்பட்ட மீன்களைக் கொண்டு அவளைப் பற்றிய பார்வையைக் கொண்டிருக்கின்றனர் அவள் அது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவள். முத்தரசுவின் மகள் தான் கட்டி வைத்த மணல் வீட்டைக் கடல் அலை அழிக்கும் முன்னர் தானே உடைத்து நான் ஜெயிச்சிட்டேன் என்று குதிப்பதும் மதுமிதாவின் வாழ்க்கையை அவளே சிதைக்கும் அதை தன் வெற்றியாக நினைப்பதும் சிறுபிள்ளை அறியாமையை ஒத்த சித்திரத்தை குறிப்பதாகவோ அல்லது முத்தரசு மதுமிதா மேல் கொண்டிருந்த ஒருதலை காமம் உடைந்து ஒன்றுமில்லாமல் போனதை குறிப்பதோ எப்படி வேண்டுமானாலும் சிந்திக்கலாம். மேலும் காமத்தை பாவகாரியமாக நினைக்கும் மதுமிதா சரவணன் மீது காம வசப்படும் தருணத்தை சமயம் காகம் ஒன்று தேங்கிய நீரில் அலகை தயங்கித் தயங்கி அலசி பின்னர் “துவைக்கிற கல்லுக்கு தாவிய அந்தக் காக்கை மறுபடி சரிந்திறங்கி தேங்கிய நீரில் கால்கள் நனைய உட்கார்ந்து அலகை நனைத்தது” என்ற வரிகளில் உணர்த்துகிறார். பறவைகளில் காகம் கொஞ்சம் அருவருக்க தக்கது என்ற காரணத்தால் இந்தக் குறியீடு இவ்விடத்தில் இடம் பெறுகிறதென்று நினைக்கிறேன்.

மகாதேவனின் வீடு அவன் தனிமையின் குறியீடாக அழுக்கும், முடை வாடையும், இருளும் நிறைந்து இருப்பது போலவும் பின்னர் அவனுக்குத் தகுந்த துணை வரும் இடங்களில் அதே வீடு அழகாகவும், பிரகாசமாகும் ஆவதே மனைமாட்சி என்பதன் அர்த்தத்தைப் பிரகாசமாக காட்டும் பதிவு. வீடு அதன் அமைப்பு அந்த வீடு இருக்கும் தெருவும் நாவலில் வரும் கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தோடு ஒப்பிட்டு அமைத்திருக்கும் காட்சி பாராட்டத்தக்கது. மூன்றாம் பகுதியில் வரும் கண்ணன் என்பவரின் மனைவி, தனது மாமியார் வீடு அமைத்திருக்கும் தெருவின் நேர்த்தியும், அமைதியும், நிதான போக்கும் தன்னுடைய கணவனின் நிதானமும், வசீகரமும் பொருந்திய குணத்தோடு ஒப்பிட்டு “எல்லா வீடுகளில் தென்னைகளும், கொய்யா மரங்களும் இருந்தன, அமைதியான, அழகான தெரு. கண்ணனைப் போலவே நிதானமான, எதற்கும் அவசரப்படாத தெரு”என்ற பதிவு நாவலின் மூன்றாம் பகுதியில் இருபத்தி எட்டாம் அத்தியாயத்திலிருக்கிறது.

மூன்றாம் பகுதியின் முக்கிய கதாபத்திரமான வினோதினி கணவன் மீது தீராத காதல் கொண்டவள். இழந்த கணவனின் அவள் நினைவுகளே அவளைத் தொடர்ந்து இயக்குகிறது. அவளைத் தவறான கண்ணோட்டத்துடன் அணுகும் கொழுந்தனை “உங்களுக்கு குழம்புல போட்ட கரண்டி ரசத்துல போட்டாலே பிடிக்காது. இது மட்டும் சரியா?” என்று கேட்டு விரட்டுகிறாள். திருமணத்திற்கு முன்னர் “பா தாயே பா” என்று சக்தி அழைப்பில் தனது காதலை வெளிப்படுத்திய கண்ணனுக்கு அவள் தந்த காதல் நிறைகுடம் அலுங்காதது மேல் விழுந்து பிறாண்டாதது. அந்தக் காதல் கை கூடாமல் போகிறது. வினோதினியை காதலிக்கும் லோகுவின் காதல் ஊதா பலூனாக ஒரு அத்தியாயத்தில் வந்து போகிறது. வினோதினியின் திருமணத்திற்கு முன்னர் ஒரு பொங்கல் விழாவில் பலூன் ஊதும் போட்டியில் லோகு ஜெயிக்க காரணமான ஊதா பலூன், அவள் திருமணத்துக்கு பின்னர் லோகு அவளை விட்டு விலகி நடக்கும் போது ஊதா நிற பலூன்கள் வெடித்துச் சிதறியது(வினோதியின் நினைவோடையாக வரும் பகுதி) என்று எழுதி இருப்பது நுட்பமான குறியீடு.

மூன்றாம் பகுதியில் கோவையில் சாரதா டீச்சர் வீட்டுக்கு முன் வீட்டு நாய் குரைப்பு மற்றுமொரு குறியீடு. ஒரு காதல் தோல்வியின் அடையாளமாக அந்த குரைப்பொலி மாறிப் போகிறது. அதைக் கேட்கும் தருணமெல்லாம் சாரதாவும், அவள் கணவனும் மிகவும் ஆத்திரபடுக்கின்றார்கள். ஒருநாள் அந்த குரைப்பொலி முற்றிலும் மறைந்ததும் சூன்யமாய் உணரும் கண்ணன், அது தன் தங்கை ஜோதிக்கு நிம்மதி தருமென்று நினைக்கிறான். மனதைத் தொட்ட பல இடங்களில் இதுவும் ஒன்று.

மூன்றாம் பகுதியின் மற்றொரு முக்கியமான கதாப்பாத்திரமான வாணி, திருமணத்தின் பின்னர் தனது முன்னாள் காதலனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தன் கணவனிடம் சொல்லும் தைரியசாலியாகவும் நேர்மையானவளாகவும் இருக்கிறாள். தன்னுடைய காதலனுக்கு மிகவும் விசுவாசமானவளாய், அதே நேரம் கணவனின் கண்ணியத்தையும் அன்பையும் அக்கரையையும் மறுக்க முடியாதவளாய் இருக்கிறாள். அவள் சிவசமுத்திரம் அருவியைப் பார்க்கும் போது திருமணத்திற்கு முன்னர் ரசித்த அதிரப்பள்ளி நினைவுக்கு வருகிறது. இரண்டு அருவியையும் ஒப்பிடுகிறாள். சிவசமுத்திரம் கண்ணனையும், அதிரப்பள்ளி அவள் காதலன் சசி. இரண்டிலும் கொட்டுவது நீர் தானே. சிவசமுத்திரம் பெரியதாய் வசீகரமாய் இருப்பதற்காக அதிரப்பள்ளியை விட முடியுமா என்பது அவள் நம்மைக் கேட்காமல் கேட்கும் கேள்வி.

இந்த நாவலில் மனதில் நிற்கும் ஆண் கதாப்பாத்திரங்களாக தியாகு, கண்ணன் மற்றும் லோகுவை சொல்வேன். தியாகு கொடூர குணமும் பிடிவாதமும் கொண்ட சாந்தி அவளை அடித்து கை கால்களை உடைத்துச் சூடு போட்டு இன்னும் எத்தனையோ சித்திரவதைகளை செய்தாலும் அவள் நான் காதலித்து மணந்தவள் அவளை நானே பொருத்துக் கொள்ள முடியவில்லை என்றால் பின்னர் வேறு யார் பொறுப்பார்கள் என்று நினைக்கிறான். கண்ணன் பெரு நகரத்தில் பணமும் உல்லாசமும் ஒருங்கே அமைந்த வாழ்க்கை முறையில் உடன் பணிபுரியும் தோழிகள், பிற பெண்களுடன் அவர்களில் சம்மதத்தோடு உடனிருந்தாலும் வாணியை மிகவும் விரும்பி அவள் அழகில் மயங்கி திருமணம் செய்து கொண்டவன் அவள் சிறுபிள்ளைத்தனமாக செய்யும் எல்லாத் தவறுகளையும் பொறுமையாகக் கையாள்கிறான், அவள் காதல் வாழ தன் வாழ்க்கையே விட்டுத் தரும் பக்குவத்தோடு இருக்கிறான். கொஞ்சமும் நிதானம் இழக்காமல் வாணி மீண்டும் அவளோடு வரும் போதும் ஏற்கிறான். லோகு காதலித்த பெண் ஜாதியைக் காரணம் காட்டி வேறொருவனைத் திருமணம் செய்தாலும் பின்னர் அவளே தன் துணையை இழந்து நிற்கும் போது எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் அவளையும் அவள் குழந்தைகளையும் ஏற்கிறான். அவ்வாறான ஒரு நிலை வரும் முன்னர் அவள் அருகிலேயே இருந்தாலும் கொஞ்சமும் வினோதினியை தொந்தரவு செய்யாது இருக்கிறான். இத்தனை நல்லவர்களா ஆண்கள் ஆம் இருக்கத் தான் செய்கிறார் அதனை கோபாலகிருஷ்ணன் என்றொரு ஆண் எழுத்தாளர் எழுதாமல் வேறு யார் எழுத முடியும்.

நாவலாசிரியர் கோபால கிருஷ்ணன் ஆண்களில் வினோத மனநிலையையும் கொஞ்சம் தயக்கமின்றி பதிவு செய்து இருக்கிறார். கண்ணன், சசியை சந்திக்க வரும் போது அவன் தன்னை விட எந்த விதத்தில் சிறந்தவன் என்று ஆராய்வதும், அவன் வீட்டுக்கு வரும் போது தன் மனைவியை அவனோடு விட்டு விட்டு வெளியிலே சுற்றும் போது தடுமாறுவதும், மனைவி அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிய நினைக்கும் போது அவனையே மீறி அதிகமாய் சாப்பிடுவதுமான சில இடங்களே கண்ணன் தடுமாறும் இடங்கள். அவை நுட்பமாகச் சித்தரிப்புகள்.

சோமு வாத்தியார் மிக நுட்பமான பாத்திர வடிவம். புரோகிதம் பண்ணும் தனிகட்டை அவருடைய வீட்டை நேர்த்தியாய் பராமரிக்கும் சித்தரிப்புகள், மகாதேவனுக்காகப் போராடும் இடங்கள், மங்கையைப் பார்த்து தடுமாறும் மனநிலையும் அதன் பொருட்டு மகாதேவன் மேல் பொறாமைகொள்ளுமிடங்கள், அவனுக்கு மங்கையோடு திருமணம் பேச வேண்டிய நேரத்தில் தவிர்க்குமிடங்கள் எல்லாமே மிகவும் தத்துருபமானவை. எதார்த்தமானவை.

முத்தரசுவின் பாத்திர வடிப்பு மிகவும் அருமையானது. ஒரு பெண் தன்னிடம் நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கிறாள். தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். தனியாக உடன் வருகிறாள் என்றதும் அவளை திசைதிருப்பி தன்னிச்சைக்கு அடிபணியச் செய்யாமல் நட்பைப் போற்றும் நேயம் மிக்க கதாப்பாத்திரம். பின்னர் அவள் சரவணனுடன் திருமணம் செய்யப் போகிறாள் என்றதும் சரவணன் மீது பொறாமை கொள்ளும் அழகான பாத்திர அமைப்பு.

வைத்தியநாதன், சசி போன்றோர் தனது அன்னையரிடம் கொண்டிருக்கும் அதீத பக்தி/பயம் அவர்களது வாழ்க்கையை எப்படிப் புரட்டி போடுகிறது என்பது மிக எதார்த்தமான சித்தரிப்பு. வைத்தியநாதனிடம் அவர் மனைவி மங்களா “அந்த வியாதியோட கை கால் முடியாம எங்காயவது ஹோம்ல இருந்து உங்களை பாக்கனும் கேட்டிருந்தா போய் பார்த்திருப்பீங்களா?” என்ற கேள்வி வாசகரை சரென திரும்பி “ஆமால்ல” என்று யோசிக்க வைக்கும் கேள்வி. அதே போல் கண்ணன் தன்னுடன் படுக்கை பகிர்ந்து கொண்டு, தன்னையே உயிராக நினைக்கும் லதாவை நிராகரிப்பதற்கு காரணமாக அவள் அழகாய் இல்லாத காரணமோ என்று நிஜமான ஆண் மனவோட்டத்தை பதிவு செய்த நேர்மைக்காக நாவலாசிரியரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

நாவலில் சில இடங்கள் நெருடலாக இருக்கிறது. முக்கியமாக மங்கை மதுமிதாவிடம் பேசுவதில் சில இடத்தில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மங்கை மிகப் பிறர் மனதை ஆராய்ந்தறிந்திடும் திறன்படைத்தவள் என்பதை எடுத்துக்காட்டும் பதிவுகளும், மண முறிவு ஏற்பட்டு மதுமிதா தாலியை கழிட்டி கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளும் சமயம் மகாதேவன் மதுமிதாவோடு இருக்க வேண்டுமென்று சொன்னதாக சரவணன் சொல்வதும்(சரவணனுக்கு அது எப்படியோ தெரிந்தது என்று எடுத்துக் கொள்ள வேண்டும் ) எதார்த்தோடு ஒத்துப் போகாத விஷயங்களாக எனக்குத் தெரிந்தன. சோமு வாத்தியார் கோபமாக மகாதேவனைத் திட்டுவதோடு நிறுத்தியிருக்கலாம். எல்லா விஷயங்களையும் வாசகர்களுக்குச் சொல்ல வேண்டுமா என்ன?

நாவலில் சில இடங்கள் ஓரிரு வரிகளில் மிக பூடகமாக சொல்லிய விஷயம் இன்னொரு நாவலை வாகசர் மனதில் புனைய விடும் வலிமை பொருந்தியதாக இருக்கிறது. உதாரணத்துக்கு தியாகுவிடம் செந்தில் சொல்லும் “கவுண்டர் மில்லுன்னா காயத்ரியோடா…” இந்த வரிகள், பின்னர் அத்தியாயம் முப்பத்தேழாம் அத்தியாயத்தில் தன் மகள் காயத்ரி பற்றி வைத்தியநாதன் “இப்பவும் இங்க வரும் போது பொள்ளாச்சிக்கு தானே ஓடி வர, என்னை அவன் கிட்ட வேலைக்கு சேர்த்து விட்டு, அவன் தோப்புலயே வீடு குடுக்க சொன்னதெல்லாம் என்ன கணக்குக்குன்னு எனக்கு தெரியாதா?” வரிகளோடு இணையும் போது அந்த புனைநாவல் தென்படும். நுட்பமாக வாசிக்கும் போது இது போன்ற பல புனைகதைகளை மறைத்து வைத்திருக்கும் பெரிய கதை மனைமாட்சி என்பது விளங்கும்.

நாவலின் மிக முக்கியமான சமூகத்தின் மீது அக்கரைக் கொண்ட தருணமாக நான் பார்ப்பது இரண்டாம் பகுதியில் மங்கை மிக இக்கட்டான சூழலில் கழிக்கும் ஒரு இரவு. அவள் பின்னாளில் தன்னை அந்த இக்கட்டான சூழலில் இருந்து மீட்ட, பொருள் பெண்டிரை தன்னைக் காத்த தெய்வமெனக் காண்கிறாள். ஆம் நாட்டில் விலை பெண்டிர் எல்லோருமே தெய்வத்துக்கு இணையாக போற்றப்பட வேண்டியவர்கள் தான். பாலியல் சார்ந்த குற்றங்கள் பெரும்பாலும் பெருகாமல் இருக்க இவர்கள் முக்கியமான காரணம். இந்த நாவலிலும் அப்பாவி குடும்பப் பெண் சில கயவர்களின் காமபசிக்கு பலியாகாமல் காக்கும் காட்சிப் பதிவாகி இருக்கிறது. அது நாவலுக்கு வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட பகுதி போல தோன்றினாலும் மிக முக்கியமான பதிவு.

நாவலில் பல இடங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் மரங்கள், நதிகள், இயற்கை காட்சிகள், பழங்கள் ஆகியவற்றைப் பற்றி தனி கட்டுரையே எழுதலாம். கும்பகோணம் / கீழ தஞ்சை நிலப்பரப்பையும், இயற்கை எழிலையும், கீழ தஞ்சைக்கே உரிய “இஞ்ச, சாரிட்டேன்” போன்ற வட்டார வழக்கையும் மிக அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார். கோபால கிருஷ்ணன் அவர்களில் மூன்று நாவல்களிலும் நெசவு தொழில் சார்ந்த பல தகவல்களும் கொங்கு வட்டார வழக்கும், ஆதிக்க ஜாதியினரின் உடல் மொழி, அதிகார போக்கு, சாமர்த்தியம், கொஞ்சமும் இரக்கமற்றதன்மை சார்ந்த பதிவுகள் பொதுவானதாக இருக்கின்றன. கும்பகோணம், கீழ தஞ்சை, திருச்சி, கோயம்பத்தூர், பெங்களூர், விஜயாவாடா, ராஜமுந்திரி, ஒத்தபளையம் என்ற தென் இந்தியாவின் அனேக நிலப்பரப்புகளை அங்கேயே வாழ்ந்து அனுபவிப்பது போல பதிவு செய்து இருக்கிறார்.

பாவ புண்ணிய தீர்த்தங்கள் மூன்று பகுதிகளிலுமே வந்து போகிறது. கும்பகோணம் மகாநதி தீர்த்தம், பாசநாசம் பாபவிமோசன தீர்த்தம், பிற புண்ணிய நதி நீராடல்கள் என்று பதிவாகி இருக்கும் அதே சமயம் அழுக்கைக் கழுவ வந்த நதியே அழுக்காகி இருக்கிறது என்ற அவல காட்சியையும் பதிவிடத் தவறவில்லை நாவலாசிரியர்.

இந்த நாவலில் எனக்கு மிகப் பிடித்த கதாப்பாத்திரமென்றால் மீரா என்ற குழந்தையின் கதாப்பாத்திரம். அவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு அறிவு முதிர்ச்சியும், பொறுப்புணர்ச்சியும் அந்தக் குழந்தையை போன்ற குழந்தையை பெற்ற பெற்றோர் புண்ணியம் செய்தவர்கள். அவள் செயல்பாடுகளை தங்கையை கவனித்துக் கொள்ளுமிடங்களை நெகிழாமல் கடக்க முடியாது. இப்படி எழுதிக் கொண்டே போக எத்தனையோ விஷயங்கள் இந்த நாவலில் இருக்கிறது. எல்லாம் சொல்லிய பின்னர் ராஜம்பாய் என்ற கதாப்பாத்திரத்தை பற்றிச் சொல்லாமல் விடமுடியுமா? அவளைப் பற்றி ஒருசில வரிகளில் சொல்லி விட முடியுமா? நாவலை வாசித்தறிந்து கொள்ள இந்தக் கட்டுரையை வாசிப்பவர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

எந்த ஒரு படைப்பும் அதனை வாசிக்கும் போதே அல்லது வாசித்து முடித்தவிட்ட நிலையிலோ ஒரு சில கணங்களாவது அந்தப் படைப்போடு ஒன்றாகப் பயணப்பட வகைபுரிய வேண்டும். அப்படி இந்த நாவலில் எல்லா கதாபத்திரங்களும் அவற்றோடு சில கணங்களேனும் வாழ வழி செய்கிறது. தியாகு கோயம்புத்திரிலிருந்து ஹைதரபாத் கிளம்பும் தருணம் அப்பாடா என்று பெரு மூச்செறிய வைக்கிறது. அந்த ஒரு உணர்வே இந்த நாவலின் மிகப் பெரிய வெற்றிக்குச் சாட்சி. அதைப் போல இன்னும் பல்வேறு இடங்களில் நம்மை நெகிழ, கண்ணீர் விட, ஆனந்தம் அடைய, நிம்மதியை உணரச் செய்கிறது இந்த நாவல். ஒட்டுமொத்தமாக மிகச் சிறந்ததொரு வாசிப்பவனுவத்தை கடத்தி இருக்கும் நாவல் மனைமாட்சி. அவசியம் வாசித்து பாதுகாக்கப்பட வேண்டிய படைப்பு. நாவலாசிரியருக்கு எனது வாழ்த்துகள். மேலும் இது போன்ற பல நாவல்களைத் தர வேண்டும் என்ற பேராசையுடன் முடிக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.