அந்தச் சாலையில் விர்ர்ரென என்னை முந்திக் கொண்டு போனார்
அது விர்ர்ரெனவா என ஒரு டவுட்
என் பங்கிற்குக் கைகளைத் திருகியபடி நானும் முந்தினேன்
அதே பழைய சர்ச்சையைக் கிளப்பி அவர் முந்தினார்
அதையும் விட திருகி நான் முந்தினேன்
இப்பொழுது எங்களை இன்னொருவர் முந்திப் போனார்
எங்கள் எல்லோரையும் இன்னொருவர் முந்தினார்
திரும்பவும் அவர் என்னை முந்திக் கொண்டு போக
அவர்கள் எல்லோரையும் முந்திக் கொண்டு
நான் போய்க் கொண்டிருந்தேன்
அவர் என்னை விட்டபாடில்லை
திரும்பவும் என்னை முந்த முந்தப் பார்க்க
இப்பொழுது அந்தச் சாலையில் யாராலும் முந்த முடியவில்லை
தலை தெறிக்க சாலை கீழே ஓடிக்கொண்டிருந்தது
லேசாகக் குனிந்தாலும் மண்டையைக் குழப்பி விடும் ஓட்டம்
சாலை இப்படி ஓடுவதாலேயே வந்துவிட்டோம் வேறு வழியில்லையென
வண்டிகள் அதில் ஓடிக் கொண்டிருக்கிறதோ
ஆம் ஆம் அப்படித் தான்
இல்லையென்று கூறி விட்டால் அதுவே ஒரு பிரச்சினையாகி
வேறு வேறு பிரச்சினைகளைக் கிளப்பலாம்
சாலையின் நட்ட நடுவே இதெல்லாம் கூட ஒரு சிக்கலே
தலையை அங்கிட்டு இங்கிட்டு ஒரு சொட்டு திருப்பமுடியவில்லை
கைகள் மரத்துப்போனதால் அது இருக்கிறதா என்றே தெரியவில்லை
எது எப்படிப் போனாலென்ன
வண்டி சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது
ஆனால் ஏன் நிற்பது மாதிரி இருக்கிறது தெரியவில்லை
எதுயெதுவோ எதிரே கடந்து பறக்கும் போதெல்லாம்
விருட் விருட்டென ஒரு சவுண்டு
ஆனால் அது விருட் விருட்டெனவா என
திரும்பவும் அதே போல ஒரு டவுட்
அய்யய்யோ நேரங்காலம் தெரியாமல் இது வேறா
இனி இந்தச் சாலை உலகம் தான் என்னைக் காக்க வேண்டும்
நானே பறந்து கொண்டிருக்கிறேனோ மிதந்துகொண்டிருக்கிறேனோ
ஒரு கட்டத்தில் அந்தச் சாலையில் வேறெதுவுமே கேட்கவில்லை
வேறெதுவுமே எனக்குள் இல்லை
எல்லாம் ஷ் மயம் தான்
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்………………………………ஷ்