கதை சொல்லி
♪
சூபிச ஞானத்தில் உறங்குகிறது பறவை
அதன் இறக்கைகளை
எறும்பு ஒன்று வாய் பிளந்து கடிக்க
அமைதியின்மை தொலைத்து
வலி உணர்ந்த பறவை
அதன் சொண்டால்
எறும்பின் சருமத்தின்மேல்
மரணத்தை எழுத முனைகிறது
தப்பிக்க முடியாத எறும்பின் சருமத்தில்
மின் அலைகளாய்
பட்டுப்பட்டு விலகுகிறது மரண நேரம்
எறும்பு நினைத்துக் கூடப் பார்த்திருக்காது
பிரதியின் கதைசொல்லி
நான் என்பதால்
ராட்ஷச பறவை ஒன்றாக மாறி
பறவைக்கு மரண நேரம் ஒன்றைக் காட்டி அங்கிருந்து பறவையை விரட்டி விடுகிறேன்.
பறவை வெளி
♪
எங்கிருக்கிறாய்
பறவை வெளியில்
அல்லது
உச்சி நடுவானம்
எப்படிச் சென்றாய்
வண்ணத்துப் பூச்சியின்
சிறகில் அமர்ந்து.
எப்போது திரும்புவாய்
காற்று இன்னும்
அனுமதி தரவில்லை
தேநீர் அருந்தினாயா
ஆம்,
மேகங்களை
உணவு
சூரியன்
சில நட்சத்திரங்கள்
அனுபவம்
கவிதை எழுதும் ஆர்வத்தில்
உரையாடலை மறந்துவிட்டேன்
அடுத்து,
வீட்டு கூரையிலிருந்து
கீழிறங்க
ஏணியை வைத்துவிடுங்கள்.