அடுத்த வாரிசு

–  கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

தியாகராஜனிடமிருந்து ஃபோன் வந்ததுமே சரவணனுக்கு வயிற்றில் முடிச்சுகள் தோன்ற ஆரம்பித்தன. நெற்றியோரமாக வியர்க்க தொடங்கியது. ஆங்க்ஸிட்டி அட்டாக் வருவதற்கான எல்லா அறிகுறிகளையும் உணர ஆரம்பித்தான். அபாயம் நேரப்போகிறது என்பதிற்கான உடலின் இயல்பான எதிர்வினையாக படபடப்பு கூடி மூச்சு சீரில்லாமல் வெளி வரத் தொடங்கியது. அதற்காக ஃபோனை எடுக்காமலும் இருக்க முடியாது. கண்ணிவெடிகளிடையே காலை வைப்பது போல ஜாக்கிரதையாக ஃபோனை எடுத்தான்.

‘சனிக்கிழமையும் அதுவுமா, ஒரு பேச்சிலர் எம்புட்டு நேரம்யா தூங்குவ’ என்று ஃபோனில் ஆரம்பித்தார் தியாகராஜன்.

நானெங்கே தூங்கினேன், சொல்லப்போனால் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடர்ந்து பேக்-டு-பேக்காக இரு திரைப்படங்களும் ஒரு புத்தகமுமாக விச்ராந்தியாக பொழுது போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்ல நினைத்து சொல்லாமல் மென்று விழுங்கியபடி ‘ம்ம்… சொல்லுங்க சார்’ என்று மட்டும் சொன்னான். சரவணன் எந்த பதில் சொன்னாலும் அதை நுனிபிடித்துக் கொண்டு பேச்சை திருகிக் கொண்டு போய் விடும் சாமர்த்தியம் தியாகராஜனுக்கு உண்டு. அவர் கண்களில் எப்போதும் ஒரு தராசுக் கட்டி தொங்கவிட்டிருப்பார். இல்லை அப்படியொரு தராசு இருப்பது போல சரவணனுக்குப் படும்.

‘என்னத்த நொள்றது? டெம்பிளுக்கு புறப்பட்டு வாய்யா. ஆர்கனைசிங் கமிட்டின்னு பேரெல்லாம் போட்டு மெயில் அனுப்பினோம்ல. எம்புட்டு வேலை இருக்கு’ சரவணன் பதில் சொல்லுமுன்னர் ஃபோன் வைக்கப்பட்டு விட்டது.

தியாகராஜன் எப்போதும் இப்படித்தான். அவர் நட்புடன் பேசுகிறார் என்று அவன் நம்ப யத்தனிப்பதற்குள், அவருடைய காரியவாதி முகம் முன்னால் வந்து மறைத்துவிடும்.

‘எள்ளுதான் எண்ணெய் புண்ணாக்குக்கு காயனும், எலிப்புழுக்கை என்னாத்துக்கு சார் கூட காயனும்’ என்று தோன்றியது அவனுக்கு. அதை அவர் ஃபோன்காலை துண்டிப்பதற்கு முன்னர் கேட்டிருக்கவேண்டும். Anxiety அதிகமானாலே இப்படித்தான்.

அவருடைய உலகில் ‘வேலைக்கு ஆகுபவர்கள்’ என்றொரு பட்டியலும், ‘வேலைக்கு ஆகாதவர்கள்’ என்றொரு பட்டியலுமாக இரண்டு பட்டியல்கள் மட்டும்தான் உண்டு. இரண்டாம் பட்டியலில் இருப்பவர்களை காவு கொடுத்தாலாவது முதல் பட்டியலில் இருப்பவர்களின் நல்லெண்ணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எளிய சித்தாந்தநெறி கொண்டவர். சரவணன் இந்த இரண்டாம் பட்டியலிலிருந்து முதல் பட்டியலுக்கு மாறும் பார்டர் கேஸ் என்பதால் ஒரு நெருக்கமும் விலகலும் கலந்த அணுகுமுறையை கடைபிடிப்பார்.

நவராத்திரி விழாவின் தொடக்கமாக ஏதோ சங்கீதக் கச்சேரி நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தியாகராஜன் முனைந்திருந்தார். இது போன்ற பண்டிகைகள் கொண்டாட்டங்கள் எல்லாம் குடும்பமாக கூடி களிக்கும் விழாக்கள் என்பதைத் தாண்டி அதன் பின்னால் இருக்கும் அதிகார விளையாட்டுக்கள் சுவாரசியமானவை. ஈஸ்டன் நகர்வாழ் இந்தியர்களுக்கு முக்கிய குமுகாய கேந்திரமாக அந்தக் கோவிலும், அதன் சங்கமும் விளங்கியது. பதினைந்து வருடங்களாக அங்கேயே செட்டிலாகி இருக்கும் தியாகராஜனுக்கு அந்த சங்கத்தின் அதிகார உச்சி ஒரு பெரிய ஈர்ப்பு. கோவிலென்றால் அது சாதாரண கோவில் அல்ல. பாண்டுரெங்கர் சன்னிதி, மகாவீரர் வழிபாடு, குருதுவாரா, புஷ்டிமார்க்க வைணவ வழிபாடு, சாயிபக்தர்களுக்கான பஜனை மையம், ரெகுலரான சத்யநாராயணா விரதம் என்று எல்லாம் கலந்த மிகப்பெரிய கார்பொரேட் கோவில். அதனால்தான் தியாகராஜன் என்னும் எலி தன்னுடைய நாப்பத்திநாலு இஞ்ச் அளவான இடுப்பை சுத்தி எட்டுமுழ வேட்டியைக் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது.

‘சித்ரவீணை ரவிகிரண் இப்ப வெர்ஜினியால டூர் வந்திருக்காராம். அதாம்பா இந்த கோட்டு வாத்தியம்னு சொல்வாங்களே. மாதங்கி சோமனாதன்னு வாஷிங்க்டன்ல ஒரு மாமிதான் ஆர்கனைஸ் பண்றாங்கன்னு நம்ம ராஜகோபால் சொன்னார். ரெண்டாயிரத்து ஐநூறுக்கு முடிச்சிடலாம்னு கியாரெண்டியா சொல்றார். அவர் சைல்ட் பிராடிஜியா இருந்தவராச்சே. நல்ல கவரேஜ் கிடைக்கும்’

‘பொங்கலுக்கு சுதா ரகுநாதன் டூர் வருதாம். இதே மாதங்கி மாமிதான் கோ-ஆர்டினேஷன். அதை மூவாயிரத்துக்கு முடிச்சிடலாம்கிறார். தமிழ் இந்துல சுதாவோட டூர் ஜர்னல்னு தனி காலமே வரப்போறதாம்’

என்று பல்வேறு வகையில் ஈஸ்டன் நகரத்து சங்கத்தை உலகளவில் எடுத்து செல்ல பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய ஆஸ்பிரேஷன்கள் அவரளவுக்கு இருக்கும்வரையில் சரவணனுக்கு எந்தவித பிரச்னையுமில்லை.

‘நீ மண்ணச்சநல்லூராடா பாவி… நான் திருவானைக்கா… ஆர்ஈஸி 87ம் பேட்ச்’ என்று முதல் சந்திப்பிலேயே நெருங்கிய நட்பாக்கிக் கொண்டு அவருடைய திட்டங்களில் எல்லாம் சரவணனுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ இழுத்துப் போட்டுவிடுவார். அதுவும் கூட சரவணனுக்கு பிரச்னையில்லை. அவன் வெளிப்படையாக விருப்பம் காட்டாதது தியாகராஜனின் அந்தரங்கத்தில் எங்கோ சீண்டிவிட்டது. அதுதான் சரவணன், தியாகராஜனின் இரண்டு பட்டியல்களிலும் பொருந்த முடியாத பார்டர் கேஸாகிப் போன கதை.

கோவிலின் பின்புறம் இருந்த அறைகளில் தமிழ்வகுப்பு, பாலவிஹார், நாட்டிய ரிஹர்சல்கள் என்று பிஸியாக இருக்க, கீழ்த்தளத்தில் இருந்த ஆடிட்டோரியத்திற்கு போனான் சரவணன். நவீன அகௌஸ்டிக் வசதிகளுடன் கூடிய பெரிய ஆடிட்டோரியம். ‘நவராத்திரி மேளா’ என்று மேடையின் பின்புலத்தை குழந்தைகள் தெர்மக்கோல்களால் வடிவமைத்துக் கொண்டிருக்க மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ராகவானந்தம் இவனைப் பார்த்ததும் சிரித்தபடி வந்து கைகொடுத்தார்.

‘நீங்க வந்தது நல்லதாப் போச்சு. போனவாட்டி விட இந்த வருசம் கிராண்டா ஆரம்பிச்சிருக்கோம். நீங்கள்லாம் இருக்கிற தைரியம்தான்’ என்று தெலுங்கு கொப்பளிக்கும் தமிழில் சொன்னார். சரவணன் ஒரு வெட்க சிரிப்பை உதிர்த்தவாறே பதிலளிக்குமுன்னர் தியாகராஜன் வந்துவிட்டார்.

‘விட்டா வீக் எண்ட் ஃபுல்லா தூங்கிட்டிருப்பான். அவன விடுங்க. நீங்க கொஞ்சம் இப்படி வாங்க. சௌந்திரா மாமி எங்க போயிட்டாங்க? ராஜகோபாலை காலைலேந்து ஃபோன்ல டிரை பண்ணிட்டிருக்கேன் வாய்ஸ் மெயிலா போகுதே’ என்று பேசியபடியே ராகவானந்த்தத்தை மேல்தளத்திற்கு இட்டுச்சென்றுவிட்டார்.

அவனை கூப்பிட்டதை காட்டிக் கொள்ளவும் மாட்டார். ஆனால் அவர் கூப்பிட்டால் அவன் வந்துதான் ஆகவேண்டும் என்பார். இது சரவணனுக்கு தெரிந்த விஷயம்தான். கொஞ்சநேரத்தில் மேடை அலங்காரச் சிறுமிகளும் ஓடிவிட அங்கிருந்த நாற்காலிகளோடு நாற்காலியாக சரவணன் மட்டும் உட்கார்ந்திருந்தான். என்னவோ ஏகத்துக்கு வேலை இருக்கிறது என்று சொன்னாரே என்று என்ன செய்வது என்று தெரியாமல் அந்த நாற்காலிகளை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தான். கசக்கிப் போட்ட பேப்பர் டிஷ்யூக்கள், சிறு குழந்தையின் ஒற்றைச் செருப்பு, காலி காப்பி கோப்பைகள் என்று சில குப்பைகளை திரட்டிக்கொண்டு போய் கூடையில் போடும்போதுதான் அந்த பேம்ஃபிளெட்டை கவனித்தான். ‘சௌம்யா விஸ்வம் நடனம்’ என்ற அறிவிப்புக்கு பக்கத்தில் வட்டவடிவ போட்டோவில் இருக்கும் முகத்தை, குறிப்பாக அந்த கூர்நுனி கிரேக்க மூக்கை பார்த்ததும் சரவணனுக்கு நினைவில் எங்கோ மின்னல் வெட்டியது.

இந்திராநகர் சௌம்யாவா இது? திருச்சி ஆர்ஆர் சபாவில் பிரும்மாண்டமாக அரங்கேற்றம் நடந்தபோது, பாட்டியுடன் போயிருந்திருக்கிறான். அழைப்பிதழுடன் விஐபி அந்தஸ்த்தில் போன நிகழ்ச்சி என்பதால் மனதில் அப்படியே பதிந்து போயிருந்தது. அப்போது அவன் நான்காவதோ ஐந்தாவதோ படித்துக் கொண்டிருந்தான். சபா வாசலிலேயே சௌம்யாவின் அப்பாவான ‘ஒரப்புலி மாமா’ அவர்களை வரவேற்று, அழைத்துக் கொண்டுபோய் முன்வரிசையில் அமரவைத்தார். ஒரப்புலி மாமாவிற்கும் அதே கூர்முனை கொண்ட கிரேக்க மூக்கு இருந்தது. சுற்றி வளைத்து, சரவணனின் பாட்டி அவருக்கு ஒண்ணுவிட்ட அத்தை முறையாகும் என்று பேசிக்கொண்டார்கள். எத்தனை முறை சந்தித்தாலும் அதில் ஒரு முக்கிய சடங்காக அந்த உறவுமுறையை விளக்கிக் கொள்வார்களாக இருக்கும்.

தியாகராஜனைக் காணாமல் தேடிக்கொண்டு முதல்தளத்தில் அந்த அறையில் நுழைந்த்போது வெகுசூடான விவாதம் போய்க்கொண்டிருந்தது. ஆளாளுக்கு பேசிகொண்டிருந்தார்கள். சில அறிமுகமில்லாத முகங்களுக்கிடையே தியாகராஜன் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருக்க, மாம்பழக்கலர் புடவையுடுத்திய மாமி ஒருவர் தீர்க்கமான குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘யார வேணுன்னாலும் நம்பிடறதா? ராஜாவைப் பத்தி எனக்கு தெரியாதா… எவ்ளோ வருஷமா பாத்திண்டிருக்கேன். பத்துக்கு எட்டு வேலைகளை இப்படித்தான் குழப்பியடிச்சிருக்கார்னு அன்னிக்கே சொன்னேன். மகராஜபுரம் ராமசந்திரன் வந்தப்ப இதே கதைதான். அவர்ட்ட பேசிட்டேன் இவர்ட்ட பேசிட்டேன்னு எதையுமே பேசிமுடிக்காம அந்தரத்தில் விட்டுட்டு டபாய்ச்சிட்டார். அப்புறம் இங்கிருந்து எல்லாருமா ஆஸ்ர வித்யா குருகுலத்துக்கு ஓடிப்போய் அங்க கச்சேரியில இருந்தவர் கைலகால்ல விழுந்து இங்க கூட்டிண்டு வந்தோம். ரமாமணி இன்னிக்கு வரலயா… அவளுக்கு எல்லாம் நினைப்பிருக்கும்’

‘பழங்கதைய விடுங்க மாமி. இப்ப என்ன செய்யறது. ரவிகிரண் கச்சேரிக்கு என்ன செய்யறது?’ தியாகராஜன் தடுமாறியபடி கேட்கிறார்.

‘அவர் வெட்னெஸ்டேயே வெஸ்ட் கோஸ்ட் போறாராமே. மாதங்கிதான் கன்ஃபர்ம்டா சொல்றாளே. உங்க முன்னாடிதானே ஃபோன் பேசினேன். அப்புறம் என்ன கேள்வி. கச்சேரி கேன்சல்ட்’ மாமி அழுத்தந்திருத்தமாக சொல்கிறார்.

கூட்டம் ஏறக்குறைய கலைந்து போகும் நிலையில்தான் உள்ளே வந்திருக்கிறோம் என்று உணர்ந்த சரவணன், தியாகராஜனிடம் சொல்லிக்கொண்டு போவதா இல்லை அப்படியே நழுவிவிடுவதா என்று யோசிக்க ஆரம்பித்தான்.

‘ஃபிலியில் சௌம்யா டான்ஸ் நடக்கிறதாம். கேட்டுப் பாருங்கிறா மாதங்கி. யாருட்ட போய் என்னத்த கேக்கறது…. அவ ஹஸ்பெண்ட்தான் எல்லாத்தையும் கவனிச்சுகிறாராம். மாதங்கிக்கே ஒண்ணும்தெரியலன்னா நாமென்ன செய்யறது. சௌம்யாவோட அப்பான்னாலாவது எதையாவது பேசலாம். சந்திரசேகரன்னு நல்லா கலகலப்பான மனுஷன் அவர்…’

சரவணன் அவனையறியாமல் ‘ஒரப்புலி சந்திரசேகரன்’ என்று சற்று உரக்கவே சொல்லிவிட்டான். சொன்னதும்தான் அந்த சூழலின் தன்மை முற்றிலும் மாறிப்போனதை கவனித்தான்.

மாம்பழப் புடவை மாமி சட்டென அவன் மேல் பார்வையை நிறுத்தி ‘உங்களுக்கு சௌம்யாவைத் தெரியுமா?’ என்றார். மாமியின் மன ஓட்டத்தை புரிந்தவராக தியாகராஜனும் சட்டென அவன் பக்கம் திரும்பி ‘நம்மூர் பக்கம்தானா… உனக்கெப்படிற்ரா தெரியும்?’ என்று அவனைப் பார்த்து கேட்டார்.

Anxiety படபடப்புகள் மீண்டும் கூடுவதை உணர்ந்த சரவணன், நெற்றியில் வியர்வை துளிர்க்க ‘ஒருமாதிரி தூரத்து உறவு. பாட்டிவழியில் அவர் மாமா முறை’ என்றான். ‘அஸ்வத்தம்மா என்ற யானை இறந்தது’ என்பது போல அந்த பதிலின் ஒரு பகுதியை மட்டும் மாமியின் மனதில் பதிந்து போய்விட்டது.

‘தங்கமா போச்சு. அதான் சௌம்யாவோட ரிலேஷனே இங்க இருக்காரே. அப்படியே ஒரு நட ஃபிலி போய் அடுத்த ஞாயித்துக்கிழமைக்கு ப்ரோகிராம் ஃபிக்ஸ் பண்ணிட்டு வந்திரு தியாகு. பிராப்ளம் சால்வ்ட். நவராத்திரி மேளா அமோகமா தொடங்கியாச்சு’ சோகமாக கலைய ஆரம்பித்த கூட்டம் சந்தோஷமாக கலைந்து சனிக்கிழமை பின்மதிய தூக்கத்திற்கு கிளம்பிப் போனார்கள்.

அவன் கையிலிருக்கும் பேம்ஃபிளட்டை வாங்கிப் பார்த்த தியாகராஜன், ‘உனக்கு இப்ப ஒண்ணும் வேலை இல்லயே. ஒரு மெதி மெதிச்சு போயிட்டு வந்திடலாமா?’ என்றார். அந்தக் குரலில் இருந்த தொனியிலிருந்தே சரவணனுக்கு தன்னுடைய முதல் பட்டியலில் பிரமோஷன் கொடுத்துவிட்டார் என்று புரிந்தது.

‘சார், ஏதோ பாட்டிவகையில் அவர் ரிலேஷன்னு தெரியும். ஒரப்புலி மாமான்னு சொல்வாங்க. இப்ப இவங்க சொல்லித்தான் அவருடைய முழுப்பேரே தெரியும். அவருக்கு என்னையெல்லாம் அடையாளமே தெரியுமாங்கிறது சந்தேகம்’ என்றெல்லாம் சொல்ல நினைத்து தியாகராஜனின் கண்களில் தொங்கவிட்டிருந்த தராசைப் பார்த்ததும் எதுவும் சொல்லவில்லை. கொஞ்சம் மேலோட்டமாக,

‘எனக்கு ஒரு வேலையும் இல்ல சார். ஆனா இன்னிக்கு புரோகிராம் களேபரத்தில் அவங்கள மீட் பண்ண முடியுமான்னு….’ என்று இழுத்தான்.

‘அட நீ வேற. சௌந்திரா மாமி சொன்னதக் கேட்டீல்ல. இந்த புரோகிராம் புக் பண்ணாத்தான் இந்த நவராத்திரி களைகட்டும் இங்க. டிசம்பர்ல அசோசியேஷன் எலக்‌ஷன் வேற வருது’ கொஞ்சம் அதிகப்படியாக பேசிவிட்டோமோ என்றெண்ணி அவனை நிமிர்ந்து பார்த்தவர், அவனுடைய புன்னகையைப் பார்த்து சமாதானம் ஆகிக் கொண்டார்.

‘இப்படியே போய் ஃபோர்த் அவென்யூ டங்க்கின்ல காப்பி எடுத்திட்டு, 476 நார்த் புடிச்சோம்னா ஒண்ணர மணி நேரத்தில் போயிடலாம். ஆறரைக்குதான் புரோகிராம். நடுவில ஒரு மணிநேரம் இருக்கு. அடுத்த சண்டேக்கு அச்சாரம் கொடுத்திட்டுத்தான் திரும்ப வர்றோம். வா…வா…’ என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக சரவணனைக் கூட்டிக்கொண்டு கிளம்பினார்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த சௌம்யாவின் அரங்கேற்ற நிகழ்ச்சியை நினைவிலிருந்து ஒவ்வொரு நொடியாக தோண்டி எடுத்து ரீவைண்ட் செய்து பார்த்தான் சரவணன். ஒரப்புலி மாமாவின் உருவத்தை, அன்றைக்கு பாட்டியால் சிலாகிக்கப்பட்ட ஜாவளி, வர்ணம் உருப்படிகளை, சௌம்யாவின் உடையலங்காரத்தை, மறுநாள் இந்துவில் எட்டாம் பக்கத்தில் வெளிவந்த விமர்சனத் துண்டை, எல்லாவற்றையும் சேர்த்ட்து நினைவில் ஓட்டிப் பார்க்க முயன்றான். சௌம்யாவின் கூரான கிரேக்க நாசியைத்தவிர எதுவும் உருப்படியாக நினைவில் நிற்கவில்லை. வழக்கத்திற்கு மாறாக தியாகராஜன் கலகலப்பாக அவனிடம் பேசிக்கொண்டே வந்தார். அவருடைய வேலையில் சமாளித்த சிக்கல்கள், ஹூஸ்டனில் வீடு வாங்கி விற்ற சர்க்கஸ் அனுபவங்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார்.

‘இதுவரை இங்க டான்ஸ் புரோகிராம் அரேஞ்ச் பண்ணதில்ல சரவணா. நாமதான் மொதோ செய்யறோம். (அந்த ‘நாம’ சரவணனுக்கு கொஞ்சம் குஷி ஏற்படுத்தியது). ஸ்டேஜ் செட்டிங்க்ஸ்லாம் அவங்க சௌகரியத்துக்கு பக்காவா செஞ்சு கொடுத்திருவோம். சௌந்தரா மாமிக்கு உன்னபத்தி ஆரம்பத்திலேந்து ஒரு பெரிய அபிப்ராயம்பா. பாஸ்டன்ல அவங்க சொந்தக்கார பொண்ணுக்கு வரன் தேடிட்டு இருக்காங்களாம். உன் ஜாதகம் கேட்டாலும் கேப்பாங்கன்னுதான் நினைக்கிறேன்’

‘அடப்போங்க சார். நீங்கவேற’ இப்போது சரவணனுக்கு மீண்டும் படபடப்பு அதிகமாகியது. ஏதோ ஊர் பெயர் அறிமுகமில்லாத பெண்ணின் எதிர்காலமும் வேற சம்பந்தப்பட்டிருக்கிறதோ. விஷயம் சொதப்பினால் தியாகராஜன் மட்டுமல்லாது சௌந்திரா மாமியின் விரோதமும் அல்லவா சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.

தியாகராஜனும் தன் பங்குக்கு ஏதாவது சொல்லியாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் ‘ஆர்ஆர் சபாவில் கேண்டின் காண்ட்ராக்ட் எடுத்திருந்தாரே நடேசன்னு… கேள்விப்பட்டிருக்கியா, அவர் திருவெள்ளறைப் பக்கம்தான்னு எங்க மாமா ஒர்த்தர் சொல்வார். எங்க மாமாவுக்கு கர்நாட்டிக் சர்க்கிள்ல நிறைய காண்டாக்ட்ஸ் உண்டுப்பா. சுந்தரமூர்த்தின்னு பேரு’ சொல்லிவிட்டு அவனை ஓரக்கண்ணால் பார்த்தார். சரவணனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

‘அப்படியா சார்!’ என்று மட்டும் கேட்டுவைத்துக் கொண்டான்.

ஃபிலடெல்ஃபியாவிலும் ஒரு கோவிலுக்கு பின்புறமான ஆடிட்டொரியத்தில்தான் டான்ஸ் நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. அத்தனை சீக்கிரத்திலும் பார்க்கிங்கில் நிறைய கார்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. பரபரப்பாக இறங்கிய தியாகராஜன் ‘ஆடிட்டோரியம் பின்னாடி இருக்குன்னு போட்டிருக்கான் பார், இப்படி போயிடலாம்’ என்று வேகுவேகென்று நடந்தார்.

அங்கே முகப்பில் இருந்து விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர் / சிறுமியர் கூட்டத்தைப் பார்த்ததும் சரவணன் ஒருநிமிடம் திகைத்துப் போனான். அன்றைக்கு அரங்கேற்றத்தில் பார்த்த சௌம்யா அப்படியே நின்றுகொண்டிருந்தது போல் இருந்தது. படபடவென பட்டணம் அன்று அவள் ஆடிய கமாஸ் ஜாவளியும், பட்டிணம் சுப்ரமணிய ஐயரின் அடாணா உருப்படியும் வரிசையாக அவன் நினைவில் வந்து நின்றது. கொஞ்சம் நிதானித்த பிறகுதான் அது சௌம்யாவின் சாயலில் உள்ள சிறுமி என்று புரிந்தது. ‘சார், பாத்தீங்களா, இதான் சௌம்யாவின் பொண்ணு போல. கிட்டத்தட்ட இதே வயசிலதான் அவளோட அரங்கேற்றம். அப்போ ஆடின அடானா வர்ணம் பத்தி எங்க பாட்டி ரொம்ப ப்ரைஸ் பண்ணாங்க. இந்துவில் கூட அதப்பத்தி வந்திருந்தது’ என்றான்.

தியாகராஜன் உள்ளே இன்னமும் நீளமாக பார்வையை ஓட்டிப் பார்த்து ‘அங்க பாருய்யா, அதான் ஸ்டேஜுக்கு பின்னாடி போற வழி. வா வா’ என்று கூட்டிக் கொண்டு போனார்.

ஏகப்பட்ட மக்கள் குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டிருந்தார்கல். தியாகரஜானின் தன்னுடைய தேர்ந்த விழிகளால் ஒரு நீலநிற ப்ளேசர் போட்ட மனிதரைப் பிடித்து குசலம் விசாரிப்பது போல ‘மாதங்கி சோமனாதன்’ பெயரை வீசினார். அவர் மூலமாக சந்தித்த சந்தனநிற ஷெர்வானி போட்ட மனிதரிடம் ‘ஒரப்புலி சந்திரசேகரன்’ என்ற பெயரை வீசினார். இப்போது தங்கநிற ஃப்ரேம் கன்ணாடி அணிந்த, செழுமையான கன்னங்கள் கொண்டவரை அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது.

‘ஐயம் விஸ்வம் சுப்ரமணியன்’ என்றவரின் கையைப் பிடித்து சரவணன் குலுக்கியபோது கூட அவனுக்கு உறைகக்வில்லை. ஆனால் தியாகராஜன் சட்டென சுதாரித்துக் கொண்டு

‘உங்க மனைவியின் நடனத்தைப் பார்க்கவே ஒன்றரை மணிநேரம் பயணித்து வந்திருக்கிறோம்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

‘ஓ, மிக்க மகிழ்ச்சி. வாருங்கள். உங்களுக்கான அருமையான இடத்தை நான் தேர்வு செய்து தருகிறேன்.’ என்றார்.

‘ஈஸ்டன் நகரத்து கோவிலை நீங்கள் நிச்சயம் தவறவிடக்கூடாது. பிரமாதமான கலாரசிகர்கள் நிறைந்த ஊர் அது. அதவும் இந்திய பாரம்பரிய கலைக்கு தனி மவுசு உண்டு’ தொடர்ந்து அடுக்கிக் கொண்டே போன தியாகராஜனின் பேச்சில் விஸ்வம் மிகவும் ஈர்க்கப்பட்டார். எல்லோரும் பேசும் அதே பேச்சுதான். ஆனால் பேசுபவர் பேசினால்தானே கேட்பவர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதுவும் தியாகராஜன் இலைமறை காய்மறையாக ஈஸ்டன் சங்கத்தின் இவ்வருட ‘தாராள கொள்கையை’ அடிக்கோடிட்டு சொன்னது விஸ்வத்தை மிகவும் ஈர்த்தது.

‘நெக்ஸ்ட் சண்டேயா? க்ளீவ்லேண்ட் போயிட்டு அப்படியே வெஸ்ட் கோஸ்ட் போகலாம்னு இருக்கோம். டேட் ஒத்துவருமான்னு தெரியலயே. வாங்க சௌம்யாவையும் ஒருவார்த்தை கேட்டுக்கிட்டு ஏதாவது அட்ஜெஸ்ட் செய்ய முடியுமான்னு பாக்கலாம்’ என்று மேக்கப் அறையை நோக்கிக் கூட்டிக் கொண்டு போனார்.

உடையலங்காரம் முடிந்து முக அலங்காரத்தில் இருந்த சௌம்யாவிடம் தியாகராஜனை அறிமுகப்படுத்திய விஸ்வம் ஈஸ்டன் புரோகிராம் பற்றி சொல்லி நிறுத்தினார். சரவணன் அவளுடைய கூரான கிரேக்க மூக்கை பார்த்ததும் சிறுவயது நினைவுகள் மீண்டும் கிளர்ந்தெழ படபடப்பு அதிகரிக்க பேசாமல் நின்று கொண்டிருந்தான்.

‘இங்கதான் பக்கமா இருக்கு இவங்க ஊர். சண்டே புரோகிராம் முடிச்சிட்டு க்ளீவ்லேண்ட் போக முடியுமான்னு தெரியல. அப்படியே ஸ்கிப் பண்ணிட்டு வெஸ்ட் கோஸ்ட் போக வேண்டியிருக்கும்’ என்றார்.

புருவத்தை தீட்டியபடி இருந்த சௌம்யா சட்டென திரும்பி

‘ஹா! சவுண்ட்ஸ் குட். ஆனால், உனக்கு தெரியாதா, க்ளீவெலேண்ட் புரோகிராம் பத்தி அப்பா எவ்வளவு முக்கியமாக சொல்லியிருக்கிறார்ன்னு’ புருவத்தின் மேல் இருந்த பொட்டு வரிசைய சரிசெய்ய ஆரம்பித்தாள்.

‘அது நீதான் சொல்லி புரிய வைக்கனும்’ விஸ்வம் இவர்களைப் பார்த்து புன்னகைத்தார்.

சௌம்யாவின் பதிலுக்கு எல்லாரும் காத்திருக்க சில நொடிகள் அமைதியாக கழிந்தது. கண்ணாடிவழியாக அவளும் விஸ்வமும் பரிமாறிக்கொண்ட முகக்குறிப்புகளும் சாதகமானவையாகத்தான் சரவணனுக்குத் தோன்றியது.

மிகச்சரியான தூண்டில்களில் மிகச்சரியான இரைகளைப் பிடித்து தியாகராஜன் முன்னேறிக் கொண்டிருப்பது கண்டு சரவணனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தன் பங்குக்கும் ஏதாவது சொல்ல வேண்டும் என்று சற்று படபடப்பாக

‘நான் உங்க அரங்கேற்றத்துக்கு வந்திருக்கேன். அப்போவே நீங்க கஷ்டமானா உருப்படியெல்லாம் செய்தீங்கன்னு எங்க பாட்டி ரொம்ப சிலாகிச்சா. அடானா வர்ணம்தானே அது. அப்புறம் அந்த தில்லானா….’ என்றான்.

லிப்ஸ்டிக்கை கொண்டு உதடுகளை தீட்டிக் கொண்டிருந்த கைகள் நிற்க சௌம்யா வியப்புடன் அவனை திரும்பிப் பார்த்தாள். ‘அந்த தில்லானா இந்தோளம். உங்க பாட்டி யாரு? எனக்கு சட்னு நினைவு வரமாட்டேங்குதே’ என்றாள்.

‘ஒரப்புலி மாமா தன்னோட ஒண்ணுவிட்ட மருமான்னுவா. ஒத்த ஆளா நின்னு உங்கள பெரிய டான்ஸராக்கிற வரைக்கும் ஓயாம உழைச்சார்ன்னுவா.’ சரவணன் நிறுத்தினான்.

‘ம்ம்ம்… இட்ஸ் ட்ரூ. அவருக்கு நிறைய ஆப்பர்சூனிட்டிஸ் வந்தது. எனக்காக, என்னோட டான்ஸுக்காக, என்னோட கரீயருக்காக எல்லாத்தையும் சாக்ரிஃபைஸ் பண்ணார். ‘ என்றாள்.

‘மாமா, இப்போ எங்க இருக்கார்? திருச்சிதானா?’

‘ஓ! நோ… அப்பா என்னோட மேரேஜ் முடிஞ்சதுமே இங்க க்ளீவ்லேண்டுக்கு வந்திட்டாரே. என்னோட அமெரிக்கா புரோகிராம் எல்லாத்தையும் அவர்தான் கோ-ஆர்டினேட் பண்ணிட்டிருந்தார்’ என்று சொன்னவள் நிறுத்தி விஸ்வத்தை ஒருபார்வை பார்த்துவிட்டு மௌனமானாள்.

சரவணனும் விஸ்வத்தை திரும்பிப் பார்த்து ‘நான் அப்போ ரொம்ப சின்னப் பையன். சௌம்யா அரங்கேற்றத்தப்ப பாத்தா மாதிரியே அப்படியே அச்சு அசலா உங்க பொண்ணை வாசல்ல பாத்தோம். உடனே எனக்கு எல்லாம் சட்சட்ட்னு நினைப்புக்கு வந்திட்டுது. இந்துவில் கூட கங்காதரன்னு ஒர்த்தர் பிரமாதமா ரெவ்யூ எழுதியிருந்தாரே. பாட்டி அதையும் சொல்லிருக்கா. அடுத்த வாரிசும் ரெடியாயிட்டுது போல. ‘ என்று சொல்லி சிரித்தான்.

வியப்பான விழிகளோடு அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சௌம்யா, சரவணன் சொல்லி முடித்ததும் புருவத்தை சற்று சுருக்கிக் கொண்டு திரும்பி விஸ்வத்தைப் பார்த்தாள். பிறகு மீண்டும் கண்ணாடிப் பக்கம் திரும்பி மேக்கப்பை தீட்ட ஆரம்பித்தாள். இன்னும் இரண்டொரு நொடிகள் அமைதிக்குப் பிறகு, விஸ்வம்

‘கமான். லெட்ஸ் கோ. புரோகிராமுக்கு டைம் ஆயிட்டிருக்கு. அவ ரெடியாகட்டும்’ என்று சொல்லிவிட்டு அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் விடுவிடுவென வெளியே போய்விட்டார்.

எவ்வளவு சுமுகமாக போய்க்கொண்டிருந்த சூழல் எப்படி இவ்வளவு சடுதியாக முடிந்துபோகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்பது அதன் அசாதாரண அமைதியில் புரிந்தது.

மேக்கப் அறையை விட்டு வெளியே வந்ததும் கதவு மூடிவிட, விஸ்வமும் காணாமல் போய்விட்டார்.

‘என்னய்யா, உங்க பாட்டி பத்தி சொன்னதும் சட்ன்னு மூஞ்சிய சுருக்கிட்டு போயிட்டாங்க. உங்க ரெண்டு பேரு ஃபேமிலிக்குள்ள ஆகாதா. ‘ தியாகராஜனின் குரலில் வெளிப்படையாக சலிப்பு தெரிந்தது.

‘இல்ல சார். அவங்க அப்பாதான் சபா வாசல்ல நின்னு பாட்டிய கூட்டிட்டுப் போனார். நல்லா நினைப்பிருக்கு. வாசல்ல அந்த சின்னப்பொண்ண பாத்ததும் எனக்கு எல்லாம் படம் போல நினைப்புல வந்திடுச்சு. அரங்கேற்றம் முடிஞ்சதும் வந்து பாட்டிகிட்ட ஆசிர்வாதமெல்லாம் வாங்கிட்டுப் போனா சார். ‘

‘அடப் போய்யா.. புரோகிராம் டேட் வாங்கினப்புறம் இந்த ஃபேமிலி விஷயமெல்லாம் பேசி, கொஞ்சி குலாவியிருக்கலாம்ல. நீ வாயைத் தொறந்ததும்தான் அவ மூஞ்சி மாறிட்டது’ இப்போது சலிப்போடு சேர்ந்து எரிச்சலும் ஏறியிருந்தது தியாகராஜன் குரலில்.

சரவணனுக்கு தெரிஞ்சவரை பாட்டியைப் பற்றி சொன்னதும் சௌம்யா வெறுப்பு காட்டுவதற்கு எந்தவித முகாந்திரமும் கிடையாது. வேறு யாரையோ போட்டு குழப்பிக் கொண்டுவிட்டாளோ.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபடி ஜன்னலோரமாக நின்றுகொண்டு காப்பியை குடித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டொருமுறை கடந்து போனபோது கூட விஸ்வம் சரியாக முகம் காட்டாமல் விடுவிடுவெனப் போய்விட்டார். தியாகரஜாஜனின் அம்புறாத்துணியில் இப்போது எந்த அஸ்திரமும் இருக்கவில்லை என்பது அவருடைய நிச்சலனமான முகத்திலிருந்தே தெரிந்தது.. அவர் கண்களில் இருந்த தராசு தட்டில் தன் நிலை படுபாதாளத்திற்கு போய்விட்டிருந்ததை சரவணனுக்கு தெரிந்தது.

‘எக்ஸியூஸ் மி’ என்ற குரலுக்கு திரும்பினால் சரவணன் பார்த்த அதே சிறுமி பின்னால் நின்றிருந்தாள். அவர்கள் அருகில் இருந்த காப்பி மேஜையை சுட்டிக் காட்டவும் நகர்ந்து இடம் கொடுத்தார்கள். அந்த மேஜையில் இருந்த காப்பி பாத்திரத்தில் இருந்து ஒரு கோப்பையில் காப்பி விட்டுக்கொண்டு அந்தப் பெண் கிளம்ப தியாகராஜன் ஆச்சரியமாக,

‘ப்ளாக் காப்பியா சாப்பிடுகிறாய்?’ என்று ஆங்கிலத்தில் வினவ,,

‘ஓ! நோ! இது அப்பாவுக்கு’ என்று சுத்தமான அமெரிக்கன் அக்செண்ட்டில் சொல்லிவிட்டு கிளம்பிப் போனாள்.

உடனே சுறுசுறுப்பான தியாகராஜன்,

‘எங்கியும் போயிடாம இங்கேயே இரு. வந்திடறேன்’ அந்த ‘இரு’வில் ‘கூட வந்து ஏதாவது உளறி வைத்து விடாதே’ என்ற பொருளும் தொக்கி இருந்ததால் சரவணன் அங்கேயே நின்றுகொண்டு இன்னொரு கோப்பை காப்பி தயாரித்து குடிக்க ஆரம்பித்தான். அடுத்த கோப்பை ரெடி செய்யலாமா என்று யோசிக்கும்போது தியாகராஜன் வெற்றி புன்னகையுடன் திரும்பி வந்து அவனிடம் இருவிரல்களை தூக்கிக் காட்டினார்.

‘என்ன சார்? புரோகிராம் டேட் கொடுத்திட்டாங்களா?’

‘பின்ன…. இம்மாந்தொலைவு வந்திட்டு, டேட் வாங்காமப் போயிருவேனா என்ன’ என்று சிரித்தவர், கூடவே. ‘இரண்டு புரோகிராம் ஃபிக்ஸ் பண்ணியாச்சு’ என்றார்

‘ஹா…. எப்படி சார்?’ சரவணன் ஆர்வம் அதிகமாகி மீண்டும் anxiety படபடப்பு கூடக் கேட்டான்.

‘எல்லாம் உன்னோட அதே டைலாக்தான். என்ன நான் ஆளை மாத்தி சொன்னேன். எல்லாம் ஒர்க்-அவுட் ஆயிடுச்சு. ஒண்ணுக்கு ரெண்டு புரோகிராம் ஃபிக்ஸ் பண்ணிக் கொடுத்திட்டார் உங்க ‘க்ளீவ்லேண்ட்’ மாமா. சண்டே சௌம்யா புரோகிராம். அதுக்கு முன்னாடி சாட்டர்டே ரியாவோட அரங்கேற்றம்’ என்றார்.

தியாகராஜன் சுட்டிக் காண்பித்த இடத்தில், சிறிய வயதில் சஃபாரி சூட்டில் பார்த்த ஒரப்புலி மாமா, இப்போது சற்று வயதான தோற்றத்துடன் பிளேசர் போட்டுக் கொண்டு நின்றுகொண்டிருந்தார். பக்கத்தில் புடவையையால் இந்திய தோற்றத்தை வெளிப்படுத்தும் முயற்சியில் ஓரளவுக்கு வெற்றிபெற்ற ஸ்பானிய பெண்மணி ஒருவரும் இருந்தார். இருவருக்கும் முன்னே சௌம்யாவின் சிறியவயது பதிப்பு போலிருந்த சிறுமி அவர்களுக்கு ‘டாட்டா’ என்று அபிநயித்துக் கொண்டிருந்தாள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.