திகைத்த பத்து – எஸ். ராஜ்மோகனின் பத்து புத்தகங்கள் பட்டியல்

எஸ். ராஜ்மோகன்

நீங்கள் படித்த புத்தகங்களில் சிறந்த பத்து அல்லது இருபது புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள் என்றால் அது யாருக்குமே மிகக் கடினமான காரியமாக இருக்கும்.

எவ்வளவு புத்தகங்களைப் படித்திருந்தாலும், அல்லது அந்த அளவுக்குப் படித்திருக்காவிட்டாலும் இப்படிப்பட்ட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலை வெளியே சொல்வது கஷ்டம்தான். இதைச் செய்வதில் எப்போதும் ஒரு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது – முதன்மை நூலோ புகழ்பெற்ற நூலோ விட்டுப் போகலாம், அல்லது, பட்டியலில் இடம்பெறும் தகுதி இல்லாத ஒரு புத்தகத்தை நாம் பரிந்துரைக்கும் அபாயம் இருக்கிறது.

ஆனால் இயல்பிலேயே இந்த வேலை தனிநபர் விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தது எனும்போது அகவயத்தன்மையை முழுமையாய் தவிர்க்கவும் முடியாது. அதிலும் என்னைப் போன்றவர்களுக்கு, நாங்கள் செய்யும் பணி காரணமாக இது இமாலயச் சாதனையாகிறது. நானிருக்கும் பணியில் பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களில் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சொற்கள் படித்துக் கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் மற்ற எதையும்விட நமக்கு விருப்பமான துறை சார்ந்த புத்தகங்களையே வாசிக்க முற்படுகிறோம் எனும்போது நாங்கள் பல்வகைப்பட்ட புத்தகங்களைப் படித்தாக வேண்டியிருப்பதாலேயே, சிறந்த பத்து அல்லது இருபது புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் பட்டியலிடுவது கிட்டத்தட்ட முடியாத காரியம் என்று சொல்லி விடலாம்.

முப்பத்தைந்து வருடங்களாக தொடர்ந்து புத்தகங்கள் படித்து வந்ததில் எது மிகவும் எரிச்சலூட்டும் விஷயமாக இருந்திருக்கிறது என்று பார்த்தால், அவ்வப்போது யாராவது ஒருவர், “என் வாழ்க்கையை மாற்றிய பத்து புத்தகங்கள்,” என்றோ அது போன்ற வேறு ஏதோ மூளையில்லாத கட்டுரையோ எழுதியிருப்பதைப் பார்ப்பதுதான். புத்தகங்கள் மட்டுமே நம் வாழ்வைத் தகவமைத்துவிடக் கூடுமா? புத்தகங்கள் பண்பாட்டுக் கூறுகள், மனிதனின் வாழ்வுக்கும் பணி மேம்பாட்டுக்கும் உருவம் கொடுக்கும் பல கருவிகளில் ஒன்று. அதேபோல், பண்பாடு என்று சொல்லும்போது, உருவமற்ற, உள்ளீடற்ற ஏதேதோ விஷயங்களைக் கற்பிதம் செய்துகொள்ள முற்படுகிறோம். பழக்க வழக்கங்கள், விழுமியங்கள், பாரம்பரியம், அமைப்புகள், சமூக கருவிகள், சட்டங்கள் என்றும் இன்னும் பலவும் கொண்டதே பண்பாடு. இப்படியிருக்கும்போது, புத்தகங்களை மட்டும் சிறப்பிப்பது போலித்தனமான, கவனம் ஈர்க்கும் உத்தியாகத்தான் எனக்குப் படுகிறது.

என்னை ஈர்த்த ஆயிரக்கணக்கான புத்தகங்களில் பத்து புத்தகங்களை இங்கே தேர்ந்தெடுக்கிறேன் – இவை என் வாழ்விலும் சிந்தனை முறைமையிலும் சிந்தனைத் திறனிலும் ஒரு சிறு தாக்கத்தைக்கூட ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். அறிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டி, நம் கவனத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு என்பதற்காகவே இவற்றைத் தேர்ந்தேடுத்திருக்கிறேன்

1) Dialogues of Plato –translated and edited by Benjamin Jowett

முழுமையான ஆனந்தமும் மகிழ்ச்சியும் எழுத்தில் கிடைக்குமா? இந்தக் கேள்வியே ஒரு நகைமுரண். ஆனால் அவை இந்த உரையாடல்களில் கிடைக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் மனித வாழ்வின் அடிப்படைக் கேள்விகளை இழை விடாமல் விவாதித்தார்கள் என்பதும் காலங்கள் மாறியபின்னும் விழுமியங்கள் மாறியபின்னும் இந்த உரையாடல்கள் நம்மோடு பேசுகின்றன என்பதும் திகைப்பாக இருக்கிறது. பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் என் மனதின் களங்கமின்மையை கலைத்தவர், பிளாடோவின் கற்பனைத்திறன் உயர்வானது என்றும் இந்த உரையாடல்கள் ஒரு புனைவு நூல் என்றும் நம்புவதில் எனக்கு அவரோடு இணக்கம் இருக்கலாம். ஆனாலும்கூட இளம் மனங்களின் ஆர்வத்தையும் தர்க்கச் சிந்தனையையும் தூண்டும் முதன்மை நூல்களில் ஒன்றாக இது இன்றும் இருக்கிறது.

2) Gay Science by Nietzsche – translated and edited by Walter Kauffman

“கடவுள் இறந்துவிட்டார்” என்ற புகழ் பெற்ற அறிவிப்பை உலகெங்கிலும் உள்ள இறை மறுப்பாளர்கள் மற்றும் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் தத்தெடுத்துக் கொண்டதால் கிட்டத்தட்ட நூறாண்டுகளாக இந்தப் புத்தகம் பிரபலமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் இப்புத்தகத்தின் குறைபுரிதலும் இதன் சிந்தனையின் இழையை உள்வாங்கிக் கொள்ள இயலாமையுமே இப்படிப்பட்ட பிரகடனங்களுக்குக் காரணமாகின்றன. இதைச் சொன்னால் என்னைக் கல்லால் அடிப்பார்கள் என்று தெரியும், இருந்தாலும் உயிரைப் பணயம் வைத்து இப்படி நான் சொல்வது சரிதான் என்று நம்புகிறேன். பொன்மொழிகள், புகழ் ஒளியில் இருப்பவர்களைக் கடுமையாக மதிப்பிடுதல், மானுடத்தை வெளிச்சத்துக்குக் கொணர்தல் – இந்தப் புத்தகத்தில் இவை அத்தனையும், இதற்கு மேலும் உண்டு. இது இவர் எழுதிய “Thus Spake Zarathustra”வின் முன்னோடியோ இல்லையோ, எனக்குப் பிடித்த புத்தகமாக இருக்கிறது.

3) Commentaries on Living series by Jiddu Krishnamurti

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, மிகவும் குறைமதிப்பிடப்பட்ட சிந்தனையாளர் ஒருவர் உண்டென்றால் அது ஜேகேவாகதான் இருக்க வேண்டும். இந்தத் தொடர் நூல்களிலும் தன் வாழ்நாள் நெடுகவும், இயந்திரமயமாக்கப்பட்டுப் பின்னர் டிஜிடலாக்கப்பட்ட எதிர்காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்வார்கள் என்பதை முன்கூட்டியே இவர் புரிந்து கொண்டு உரையாடுகிறார். மிக வேகமாகச் சரியும் விழுமியங்களையும் அறிவியக்கச் சிதிலமடைதலையும் உணர்ந்து தன் உரையைக் கேட்க வந்தவர்களிடம் ஒவ்வொரு முறையும் இதுகுறித்து இறைஞ்சுகிறார். ஆனால் நம்மில் யாருமே அவர் சொன்னதைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை – நமக்கு எதுவும் புரியவில்லை. இன்று நாம் வாழும் வாழ்வே இதற்குப் போதுமான சாட்சியமாக இருக்கிறது.

4) Surely You’re Joking Mr Feynman

தலைப்பில் துவங்கி கடைசி பக்கம்வரை வாசகர்களின் கற்பனையை வசீகரிக்கும் புத்தகமாக இது இருக்கிறது. அந்த வகையில் இது எளிய ஒரு புத்தகம் – ஃபெய்ன்மென் தன் வாழ்வில் எதிர்கொண்ட நிகழ்வுகளையும் இயற்கை விதிகளையும் பருண்ம உலகின் இயற்பியல் இயங்குதல் குறித்த அவரது அசாதாரண அவதானிப்புகளையும் பதிவு செய்யும் புத்தகம் இது. இதைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும் பாதுகாக்கப்பட்ட பெட்டகங்களைத் திறக்கவும், எலுமிச்சையும் க்ரீமும் கலந்த டீ குடிக்கவும், உடைந்த இயந்திரங்களைப் புரிந்து கொள்ளவும் இப்படிப்பட்ட பல்வேறு ஃபெய்ன்மேனியங்களைச் செய்ய விரும்புவார்கள் என்பதுதான் இதன் சாதனை. பயணத்தில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் புத்தகத்தையும் Tuva or Bust ஐயும் படித்தபின் Tannu Tuva பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் இதைக் காண தொலைதூரம் செல்லவும் ஏங்கியிருக்கின்றனர். விஞ்ஞானிகள் அனைவரும் தீவிரமான, புரிந்து கொள்ள முடியாத மர்ம மனிதர்களாக இருந்தாக வேண்டும் என்ற புனைகதையை ஃபெய்ன்மேன் உடைத்தெறிந்தார். இந்தப் புத்தகம் ஒரு அடிப்படை உண்மையை அடிக்கோடிடுகிறது – இயற்கையைச் சரியாகப் புரிந்து கொள்தலும் அதன் வெளிப்பாடும் எந்த ஒரு சாதாரணனும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவே இருக்கும்.

5) Godel, Escher, Bach – An Eternal Golden Braid by Douglas Hofstadter

எந்த ஒரு இளைஞனும் புத்தகம் படித்தபின் இன்னும் கொஞ்சம் விஷயம் தெரிந்தவனாக வெளியே வர முடியும் என்பது உண்மையானால், அந்தப் புத்தகம் இதுதான். Godel, Escher, Bach முதலியோரின் படைப்புகளுக்குப் பொதுவாக உள்ள தீம்களை எடுத்துக் கொண்டு, Hofstadter அறிவு, அர்த்தம், சீர்மை என்று துவங்கி ஏறத்தாழ வாழ்வில் எல்லாவற்றின் அடிப்படை ஆதாரங்களையும் பிரித்து மேய்கிறார்- தெரிதல் (cognition), அறிவு (intelligence), தொடர்பாடல் (communication) எவ்வாறு சாத்தியப்படுகிறது என்பதை விளக்குகிறார். புத்தகத்தைப் படிக்கப் படிக்க, ஒவ்வொரு பக்கமும் விருந்தாக இருக்கிறது- பக்கத்துக்கு பக்கம் Escher வரைந்த ஓவியங்கள், ஜென் கோன்கள் (koans), பொதுவான புதிர்கள், வாழ்வின் வெவ்வேறு மூலக்கூறுகளின் கூடுகையில் சுயமாய் தோன்றும் புதுப்புது அர்த்தங்கள், உருப்படிவங்கள் (patterns) என்று பிரமாதப்படுத்தியிருக்கிறார். இதைப் படித்தபின் ஒவ்வொரு வாசகனும் வாழ்க்கையின் பரிமாணங்கள் ஒவ்வொன்றையும் புதிய கோணத்தில் பார்ப்பது உறுதி. ஒரு வார்த்தைதான் – அசத்தல்.

6) The Self and its Brain – by Popper and Eccles

எளிமையாகச் சொன்னால் இந்தப் புத்தகம் உடலும் மனமும் இணைந்து செயல்படுவதைப் பேசுகிறது. உயிரி மற்றும் ரசாயன வினைமுறைகள் நம் எண்ணங்களையும் நடத்தையையும் எவ்வாறு பாதிக்கின்றன என்று சொல்லும் புத்தகம். Karl Popper மற்றும் John Ecclesன் தனித்தன்மை கொண்ட மேதைமை இல்லாமல் இதுவும் அலுப்பூட்டும் எண்ணற்ற தத்துவ ஆராய்ச்சிகளில் ஒன்றாக மாறியிருக்கும். புத்தகத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து, முதலில் பருப்பொருட்களின் புறவுலகை விவாதிக்கிறார் Popper. புகழ்பெற்ற நியூரோஃபிசியாலஜிஸ்ட்டான Eccles, எண்ணங்களையும் உணர்வுகளையும் நரம்பாய்வியல் முடிவுகளைக் கொண்டு விளக்குகிறார். இது அடிப்படை கேள்விகளை விவாதிக்கும் நூல். உடல் வேறு உயிர் வேறு என்ற இருமையைப் புரிந்து கொள்ள உதவும் மிக முக்கியமான நூலும்கூட- வேறு பல விஷயங்களுடன், பருப்பொருட்களில் எவ்வாறு உயிர் தோன்ற இயலும் என்ற கேள்வியைப் பேசுகிறது. ஆனால், “an Argument for Interactionism” என்ற இந்நூலின் துணைத்தலைப்பே மேலைச் சிந்தனையிலுள்ள அடிப்படைச் சிக்கலை வெளிப்படுத்திவிடுகிறது. இந்து தத்துவங்கள் மனம், எண்ணங்கள் போன்றவற்றை கட்புலனாகிய பருவுலகுக்குரியவையாகக் கருதுவது போலல்லாமல், ஐரோப்பிய தத்துவங்கள் பலவும் மனம், எண்ணங்கள், உணர்வுகளை பருவுலகோடு தொடர்பற்ற வேறொன்றாகக் கருதி அணுகுகின்றன. இந்தச் சிக்கல் “இடைவினையாடலுக்கு ஆதரவான வாதத்துக்கும்” (“an Argument for Interactionism”) அப்பாற்பட்ட ஒன்று, ஆயினும் நாற்பதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க உரையாடல் இது.

7) The man who mistook his wife for a hat – Oliver Sachs

வித்தியாசமான 24 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இது. இதில் Sachs தன்னிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களின் துயரர் குறிப்புகளை (case histories) விவரிக்கிறார்- அசாதாரண புலனாற்றல்களோடு இயங்கினாலும், நிஜ வாழ்வில் துயர வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நிறைந்த வசீகர, ஆனால் அச்சுறுத்தும் உலகினூடே நாம் அவருடன் பயணிக்கிறோம். கடந்த பல நூற்றாண்டுகளில் இவர்கள் தீயசக்திகளால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பார்கள், வேறு சில கலாசாரங்கள் இவர்களை அடித்தே கொன்றிருக்கும்.

8) பாரதியார் கவிதைகள்

நம் கைக்குக் கிடைக்கும் புத்தகங்களில் நம்மை தன்வயப்படுத்திக் கொண்டு, நமக்கு சக்தி கொடுக்கும் கவிதை தொகுப்புகளில் மிகச் சிறந்தவற்றுள் இது ஒன்று. தனிப்பட்ட முறையில் நான் வெகுசில கவிதை வரிகளிலும் படைப்பூக்கத்தின் நித்திய தோற்றுவாய்கள் பொதித்து வைக்கப்பட்டிருப்பதாய் உணர்கிறேன். அதுவன்றி வேறில்லை. படித்துப் பார்த்து ஊக்கம் பெறுங்கள்.

9) The Secret Doctrine by Madame Blavatsky

எழுதியவன் உட்பட எந்த மனிதனாலும் நிறைவு செய்யப்படாத புத்தகம் ஒன்றிருந்தால் அது Blavatsky எழுதிய The Secret Doctrineதான் என்று நகைச்சுவையாய்ச் சொல்வதுண்டு. அசாதாரணமான பிரகடனங்கள் கொண்ட மிகப்பெரிய புத்தகம் இது- தத்துவம், சமயம், மறையுலகம், அறிவியல், இனங்களின் பரிணாம வளர்ச்சி என்று பல்துறைகளையும் திகைப்பூட்டும் வகையில் மிக விவரமாக விளக்குகிறது. இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டிருக்கும் துறைகளைத் தவிர்த்தாலும்கூட, ப்ளாவட்ஸ்கி தவிர வேறு எந்த மனிதருக்கும் இத்தனை மொழிகள் தெரிந்திருக்குமா என்றும் மறைந்த நாகரிகங்களைக் குறித்து இவ்வளவு விஷயம் தெரிந்திருக்குமா என்பதும் எதிர்காலம் மற்றும் சூரியக் குடும்பத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள தொலைதூர கோள்கள் குறித்து இவ்வளவு ஆய்வு செய்திருக்க முடியுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. அட்லாண்டிஸ், லெமூரியா, வெள்ளிக்கோளின் வாழ்வுமுறை மற்றும் பல சுவையான ஊகங்களை நுண்தகவல்களோடும் நீண்ட அடிக்குறிப்புகளுடனும் இந்நூல் விவரிக்கிறது. இதன் முக்கியமான பகுதிகள் அலுப்பூட்டுவனவாக இருக்கின்றன, ஆனால் தொலை பண்பாடுகள் மற்றும் நாகரிகங்களைப் பற்றி பேசும் பகுதிகள் மிகவும் சுவையாய் இருக்கின்றன. சமயத்தையும் நவீன அறிவியலையும் இணைப்பதாகச் சொல்லிக் கொண்டாலும், இந்நூல் அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

10) The History of Dharma Shastra by P.V. Kane

இந்த மகத்தான படைப்பை எழுத நாற்பது ஆண்டுகளானதாம்! ஐந்து புத்தகங்கள் கொண்ட இந்த தொகை நூல் இரண்டாயிரம் ஆண்டுகால இந்தியாவின் சமூக விதிமுறைகளையும் சட்டங்களையும் தொகுக்கும் அபூர்வ பதிப்பு – இவற்றின் வளர்ச்சியையும் இது சிறப்பாக விவரிக்கின்றது. சாலையில் உள்ள கற்களை வழிபடுவது முதல் மிக உயர்ந்த தத்துவங்கள் வரை, சாமானிய மனிதர்களின் வாழ்வை நெறிப்படுத்தும் நீதி நூல்கள் முதல் ஆட்சியாளர்களை நிர்வகிக்கும் சட்டங்கள் வரை, பல்பிரதிகள் மற்றும் பலஆசிரியர்கள் குறித்த சர்ச்சைகள் முதல் நவீன இந்திய சட்ட உருவாக்கம் மற்றும் காலவரிசையில் அதன் வளர்ச்சி வரை, மிகச் சிறந்த இந்திய கவிதைகள் முதல் சமய உட்குழுக்கள், மடாலயங்கள் என்று இந்தியாவில் உள்ள எதையும் இந்நூல் தொடாமல் விடுவதில்லை. எல்லா விஷயங்களையும் இந்நூல் சமநிலை தவறாமல் விவரிக்கிறது என்பதுதான் இதன் பலம் என்று நினைக்கிறேன் – சாதியமைப்பு, மனித வாழ்வில் சாஸ்திரங்களின் பாதிப்பு, மாட்டிறைச்சி உண்ணுதல், ஜோதிடம், வானவியல் என்று எல்லா விஷயங்களும் பக்கச் சார்பின்றி விவாதிக்கப்படுகின்றன. இதிலுள்ள விஷயங்களைப் பேசும் ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு இது ஊற்றுக்கண்ணாக இருந்திருக்கிறது. Olivelle சொன்னது போல், நவீனத்துக்கு முற்பட்ட காலம்தொட்டு இன்றுவரை இந்தியாவில் வேறெந்த ஒரு தனி மனிதனின் பங்களிப்பைக் காட்டிலும் இது ஒன்றே மிகுந்த தாக்கம் கொண்டதாக இருக்கிறது.

பின்குறிப்பு:

இக்கட்டுரையின் துவக்கத்தில் சொன்னது போல் நல்ல புத்தகங்கள் பலவும் பேசப்படாமல் போகலாம். இன்னும் நூறு புத்தகங்களாவது இப்படி விட்டுப்போகலாம் என்று நினைக்கிறேன். நேரம் கிடைத்து, உடல்நிலை ஒத்துழைத்தால் இந்தப் புத்தகங்களைப் பற்றி ஒருசில வாக்கியங்களாவது எழுத நினைத்திருக்கிறேன்:

1. The Emperor’s New Mind: Concerning Computers, Minds and the Laws of Physics by Roger Penrose

2. The Society of Mind by Marvin Minsky

3. Morphic Resonance: The nature of formative causation by Rupert Sheldrake

4. Myth of Invariance: The origin of Gods, Mathematics and Music by Ernest McClain

5. Collected Works of Baba Saheb Ambedkar

6. The biological and historical significance of Vedic mythology by A.K. Bhattacharyya

7. One Hundred Years of Solitude by Gabriel Garcia Marquez

8. Ulladu Naarpadhu by Ramana Maharshi

9. An Enquiry concerning Human Understanding by David Hume

10. Adi Shankara’s commentary of Bhagavad Gita

11. The Second Sex by Simone de Beauvoir

பின்னிணைப்பு-

https://twitter.com/flawsaphor/status/603407476004818944

https://twitter.com/flawsaphor/status/603408227829579776

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.