பானுமதி ந
திருமதி. ச. அனுக்ரஹாவின் வீடும் வெளியும் தொகுப்பினை அமெசான்- கிண்டில் பதிப்பில் படித்தேன். கவிதைகளும், கதைகளுமான இதில் அவரது ஓவியத் திறமையும் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழ் எழுத்தாளர் திரு அ. முத்துலிங்கம் தன் முன்னுரையில், இப்படைப்பின் சிருஷ்டி கர்த்தாவின் கடித வாக்கியங்களே கவிதை போல இருப்பதாகச் சொல்கிறார். நுண்ணிய கவனிப்புகள், புரிதல்கள் கொண்ட எழுத்தில் உண்மை ஒளி வீசுகிறது என்பது அவரது அவதானிப்பு.
மாதத்தில் ஒரு நாள் தான் முழு நிலவு என்று தன் செல்ல வருத்தத்தைப் பதிவு செய்யும் சொல்வனம் இணைய இதழின் ஆசிரியர் திரு. மைத்ரேயன், இந்தத் தொகுப்பின் பரிமாணங்களை தன் அணிந்துரையில் காட்டுகிறார். கண்ணதாசனின் ஒரு பாடல் ‘அனுபவம்’ என்பதைப் பற்றி பேசுகிறது. கடவுள்- மனிதன் இடையே நடைபெறும் உரையாடலில், அனுபவமே தான்தான் என்று கடவுள் சொல்கிறார். தன் கூர்மையான பார்வை வழியே அனுக்ரஹா, இந்த உலகை, அறிவிலும் உணர்விலும் பதித்து, அந்த அனுபவத்தை கவிதைகளாகவும் கதைகளாகவும் தந்துள்ளார். நிதானித்து, கவனம் செலுத்தி, ஆழ்ந்து படைத்து, அதை நுட்பமாகச் செதுக்கியுள்ளார். இவரது பார்வைக் கோணங்கள், சொல் உணர்த்தும் பொருளாக, இரண்டும் இடைவெளியேயற்றுத் தரும் உணர்வாக பரிமளிக்கிறது.
இதில் நான்கு பகுதிகள் இருக்கின்றன. முதல் பகுதியில் (வீடும் வெளியும்) 11 கவிதைகள், 2 சிறுகதைகள், இரண்டாம் பகுதியில் (நகரமும் நானும்) 9 கவிதைகள், ஒரு சிறுகதை, மூன்றாம் பகுதியில் (அவர்களும் நானும்) 9 கவிதைகள், இரு சிறுகதைகள், நான்காம் பகுதியில் (மழையும் மற்றவையும்) 12 கவிதைகள், ஒரு சிறுகதை என இடம் பெற்றிருக்கின்றன. இந்த அமைப்பில் காலம், வளர்ச்சி, யதார்த்தம், போன்றவைகள் சீராக நடைபயில்கின்றன. தன்னிலை, பிறருடன் தானும் என்னும் நிலை, தரையில் பதியும் பாதங்களெனும் உணர்வு நிலை, காலம், மழை, மலை, இயற்கை இவை தரும் ஆழ் நிலை எனக் கவிதைகளும், கதைகளும் ஒத்திசைந்த ஸ்வரக் கோர்வையாக இசைக்கின்றன.
வெளியில் வீட்டைச் சுமந்து அலைகிறோம்; வீட்டிலோ, தனிமையில் நம் மனம் வெளியில் சென்று விடுகிறது. ஆனால், நமக்கெனக் காத்திருக்கும் வீடு. தேவதேவன் மரத்தின் வீடு என்ற கவிதையில் கேட்பார்: ‘யார் சொன்னது மரம் தனக்கோர் வீடு கட்டிக் கொள்ளவில்லையென்று? தனது இலைகளாலும், கிளைகளாலும், கொம்புகளின் அற்புத அமைப்புகளாலும், தனக்குள்ளே மரம் தனக்கோர் வீடு கட்டிக் கொண்டுள்ளது.’ எழுத நினைக்கும் போதெல்லாம், அனைத்தையும் நகர்த்தி நகர்த்தி ஒழுங்குபடுத்துகையில் தானுமே நகர்ந்து கொண்டிருப்பதை வியக்கிறார் கவிஞர். இன்று மெல்ல மெல்ல நேற்றாவது அனுபவச் சேகரிப்பு; அது பரணில், தூசி படிந்து உள்ள நேற்றோடு இன்றும் போய் சேரும் கால விளையாட்டு.
நிற்கத் தரைகளற்ற வானம், மற்றொரு கவிதையில் விளக்கணைத்து காத்திருக்கிறது. மேலும், அந்தத் தரைகளற்ற அனைத்து வானங்களிலும் இவரது மொட்டை மாடி காணக்கிடைக்கிறது. வளர்வதின் மிகப் பெரிய அறிதல் என்பதே மாற்று உலகம் இல்லையென்பது தானோ? நகரத்தின் ரேகைகளின் ஒரு சந்திப்பில் மூன்றாம் மாடி அறையைப் பூட்டி மீள் வந்து திறக்கையில் கதவில் சிக்கிய மிதியடியாய் வாசல் வரை வரும் உலகம்.
இவரது கவிதையில் காலையில் ஓடும் காலத்தை கிலுகிலுப்பையில் சலங்கையாக கவி மனம் இருந்தால் கேட்கலாம். தேவதச்சன் சொல்வார் ‘காற்று ஒரு போதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை’ என்று. அவளிருந்த போது அவளுடன் செல்லும் சரிந்து நீளும் அந்தச் சாலையில் திடீரென உணரும் இட மாற்றம் வலியைக் கடத்துகிறது. சிலந்திக்கு மட்டுமே தெரியும் யாரும் தங்கள் வீட்டை மொத்தமாய்க் காலி செய்ய முடியாதென்று என்று பேசும் இந்திரனின் கவிதை நினைவிற்கு வந்தது. சொல் உதிர்ந்து பொருள் கனியும் கணங்களில் பேசும் கவிதைகள் கவிஞன் யாருடன் பேசுவான் எனக் கேட்டு பதில் சொல்கிறது. கடந்து விட்ட இடங்கள் மீண்டும் வந்து இணைகின்றன. காட்சி மறைவும் நடக்கிறது. பூமியின் எல்லையில் தூங்கும் மலை முகடுகள் மூன்று ஜன்னல்களாகப் பிரிந்து, ப்ளாஸ்டிக் தொட்டியிலுள்ள ஆலமரத்தில் நிலைப் படுகிறது.
சுவர்களெல்லாம் வேர் விரித்து வளர்ந்து கொண்டிருக்கும் போதி மழையை இவர் காட்டும்போது சிலிர்க்கிறது. முடியாக்காரியங்களுக்கென ஒதுக்கப்பட்ட கனவுகளில் துவைக்க நினைத்து நனைத்து பின்னர் கனவுள்ளே உலரப் போடுகையில் பெய்கின்றது மழை. ஆமாம், மழை சுத்தப்படுத்துகிறதா, சுற்றி இறுக்குகிறதா?
இதைப் போன்றதொரு சிந்தனையைக் கொண்டு வருகிறது இவர் சொல்லும் ஒரு வாக்கியம் : ‘இன்பத்தை அறியும் உலகத்தின் தொலைவு ஒவ்வொருவரின் வாழ் நாள் தூரம்.’ மரணம் தரும் தற்காலிக விடுதலை என நான் எண்ணுகிறேன். மரணம் முற்றுப்புள்ளி என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், தூக்கிச் சுமந்த வாழ்வை அந்தச் சுமைதாங்கியில் இறக்கி வைக்கலாமல்லவா? தின மணியான அந்த ஆதவனின் நிலையிருப்பு இவரை இப்படிப் பாட வைத்திருக்கிறது-‘மண்ணிலிருந்து வராத கிழட்டுத் தக்காளி எத்தனை காலைகளாக, செஞ்சிவப்பாக..’
மொத்தம் ஆறு சிறுகதைகள் அடங்கியுள்ள இந்தத் தொகுப்பில் கவித்துவம் நிரம்பிய வரிகள் மின்னல் கீற்றுகளென பளீரிடுகின்றன. தன்னைத்தானே அணைத்துக் கொண்டு மின் விளக்குக் கம்பத்தின் கீழ் படுத்திருக்கும் நாய் ஒரு காட்சியாக விடுதியில் தங்கியிருக்கும் ஒரு பெண்ணின் பார்வையில் வருகிறது. தொழில் நுட்பப் பூங்காவின் வாயிலில் ஒரு சிமென்ட் மரம்- அந்தத் தொழில் நுட்பப் பூங்காவோ இரவையே வெட்டிச் செகுத்துவது போலத் தென்படுகிறது. சாயும் காலத்தின் பூடக வரிகள் இவை: ‘சட்டென ஏதோ ஒன்று நினைவிற்கு வந்து மறைந்தது போல.’ அத்தனை கதைகளிலும் சிறப்பான ஒன்றாக நான் நினைப்பது ‘ராஜேஷ் கன்னா’ தான். ஐந்தாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுமி, தான் வகுப்புத் தலைவி எனப் பெருமிதம் கொள்வது, தன்னை சட்டை செய்யாத சந்திராவுடன் சண்டைக்குப் போவது, அதற்கான சாக்குகள் தேடுவது, அது மெல்ல மெல்ல ராஜேஷ் கன்னா என்ற பையனிடம் கற்பனைக் குரோதமாக வளர்வது, யாருடனும் பேசாத மக்குப் பையனான அவன், யார் பழித்தாலும், அடித்தாலும் புன்சிரிப்புடன் இருக்கும் அவன், இந்தச் சிறுமியுடன் இணக்கமாக விழைவது, இவள் அவனை அடிக்கையில் முதல் முறையாக அவன் வலியை வெளிப்படுத்துவது, அதன் காரணமாக தன் மனக் கோணலை இவள் உணர்வது, அவன் படித்து தன்னை அதிகாரம் செய்யும் நிலைக்கு வந்துவிடுவானென்றும், அந்தக் காரணம்பற்றியே தன் மேலாளரின் பெயர் ராஜேஷ் கன்னாவாக இருக்க வேண்டுமென நினைப்பது அனைத்துமே மனித குணங்களின் சிறந்த எடுத்துக்காட்டு.
நிலம் மீது நிலம் மீது நிலம்
கடல் மீது கடல் மீது கடல்
சமீபத்தில் இவர் எழுதிய ஹைக்கூ கவிதைகளைப் படித்தேன். விரைவில் அவையும் தொகுப்பாக வர வேண்டுமென விழைகிறேன்.