வளவ துரையன்
அம்மூவனார் பாடியுள்ள ஐங்குறுநூற்றின் மருதத்திணைப் பாடல்களில் முதல் பத்துப் பாடல்கள் கொண்ட தொகுதி ”தாய்க்குரைத்த பத்து” எனும் பெயரைப் பெற்றுள்ளது. இப்பாடல்கள் அனைத்துமே “அன்னை வாழி!” என்றுதான் தொடங்குகின்றன. மேலும் எல்லாப் பாடல்களும் தோழி கூற்றாக அமைந்துள்ளன. அவை செவிலித் தாய்க்குத் தோழி உரைப்பவனாக அமைந்துள்ளன.
தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு மனம் பறிகொடுக்கின்றனர். தனிமையில் கலந்து பழகுகின்றனர். பின்னர் அவன் அவளை மணம்புரிய வேண்டிப் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்கிறான். சங்க காலத்தில் ஆடவர் பொருள் கொடுத்துத்தான் மகளிரை மணம் செய்து கொள்ளவேண்டும் என்னும் நிலை இருந்ததை அறிய முடிகிறது. பொருள் ஈட்டிய அத்தலைவன் தேடிச் சேர்த்த பொருளுடன் தேரில் வருகிறான்.
தலைவன் சென்றபின் அவன் பிரிவால் தலைவி வாடுகிறாள். அவள் கண்களில் பசலை நோய் படர்கிறது. அவளின் நிலை கண்டு செவிலித் தாய் மனம் வருந்துகிறாள். அப்பொழுது தலைவியின் தோழி செவிலியிடம் கூறுகிறாள். “அன்னையே வாழ்வாயாக! உன் மகளின் கண்கள் நெய்தல் மலருக்கு நிகரானவை. தலைவன் பிரிவால் அக்கண்களில் இப்பொழுது பசலை நோய் படர்ந்துள்ளது. அந்நோய்க்கு மருந்து தலைவனின் வருகைதான். அதோ பார்! பசலை நோய்க்கு மருந்தாக நெய்தல் நிலத் தலைவனாகிய கொண்கணின் தேர் நீண்டு வளரும் அடும்பங்கொடியை அறுத்துக் கொண்டு வருகிறது.” கொண்கண் என்பது நெய்தல் நிலத் தலைவனைக் குறிப்பதாகும். கொடியை அறுத்துக் கொண்டு வருவது தேரின் விரைவைக் காட்டுவதாகும். தாய்க்குரைத்த பத்தின் முதல் பாடல் இது:
”அன்னை, வாழி! வேண்டு அன்னை! உதுக்காண்
ஏர்கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று, நின்மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்கு மருந்துஆகிய கொண்கண் தேரே”
தலைவன் பொருள் தேடிக் கொண்டுவந்து விட்டான். திருமணம் நடக்க இருக்கிறது. அதனால் தோழி மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். தலைவனும் தலைவியும் ஒருவர்க்கொருவர் மிகவும் பொருத்தமாக இருப்பதைப் பார்த்து செவிலித் தாய்க்குக் காட்டி உரைப்பதாக இப்பத்தின் மூன்றாம் பாடல் இருக்கிறது.
"அன்னை வாழி! வேண்டுஅன்னை புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்குஅமைந்த தனனால் தானே;
தனக்குஅமைந் தன்றுஇவள் மாமைக் கவினே”"
”அன்னையே! புன்னையும், ஞாழலும் மலர்கின்ற குளிர்ச்சி பொருந்திய நீர்த்துறைகளை உடைய நெய்தல் நிலத்தலைவன் அவன். அவன் இவளுக்காகவே அமைந்துள்ளான். அதேபோல இவளது அழகும் மாந்தளிர் மேனியும் அவனுக்காகவே அமைந்துள்ளது” என்பது பாடலின் பொருளாகும். புன்னை, ஞாழல் போன்ற நெய்தல் நிலத்தாவரங்கள் இப்பாடலில் காணப்படுகின்றன.
இப்பொழுது தலைவன் வந்துவிட்டான். தலைவி மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். அவள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அழகு கூடுகிறது. தலைவியின் நெற்றி பொன்னை விட மிளிர்கிறது அதைக் காட்டிச் செவிலித்தாய் தோழியிடம் கேட்டதற்கு அவள் விடை கூறுவது போல ஐந்தாம் பாடல் அமைந்துள்ளது.
”அன்னை, வாழி! வேண்டுஅன்னை! முழங்குகடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தெனப்
பொன்னினும் சிவந்தன்று; கண்டிசின் நுதலே”
இப்பத்தின் ஏழாம் பாடலும் தலைவனின் பிரிவால் தலைவி வாடுவதைக் காட்டுகிறது. அவள் மெலிந்து விட்டாள். நெற்றி பசந்து விட்டது. அதனால் அழகு குறைந்து விட்டது. அவள் நெய்தலில் இருப்பதால் குளிர்ச்சி பொருந்தியக் கடலலையின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த ஓசை காதில் விழும் போதெல்லாம் அது தன் தலைவன் வரும் தேரின் ஒலியோ என்றெண்ணி அவள் தூங்காதிருக்கிறாள். இதைச் சொல்லும் தோழி, “நோகோ யானே” என்கிறாள். அதாவது நானும் வருந்துகிறேன் என்றுரைக்கிறாள்.
”அன்னை, வாழி! வேண்டுஅன்னை! என்தோழி
சுடர்நுதல் பசப்பச் சாஅய், படர்மெலிந்து,
தண்கடல் படுதிரை கேட்டொறும்,
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே’
ஒன்பதாம் பாடல் ஒரு புதுவகையானக் காட்சியைக் காட்டுகிறது. தலைவியை மணம் புரிய வேண்டி பொருள் தேடி வரச்செல்கிறான் தலைவன். சென்றவன் இன்னும் திரும்பவில்லை. நெடுநாள்களாகின்றன. வருவானா, மாட்டானா எனச் செவிலித்தாய் ஐயுறுகிறாள். அவன் பிரிந்து செல்லும் காலத்து என்ன சொல்லிச் சென்றான் என செவிலித் தோழியிடம் கேட்கிறாள். அதற்குத் தோழி தலைவியின் நிலையில் நின்றே விடை கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்:
”அன்னை, வாழி! வேண்டுஅன்னை! நெய்தல்
நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
எம்தோள் துறந்த காலை எவன்கொல்
பல்நாள் வரும் அவன்அளித்த பொழுதே?”
”அன்னையே, நான் சொல்வதைக் கேட்பாயாக; நீரில் வாழும் உள் துளைகள் உடைய நெய்தல் மலர்கள் நெருங்கி வளர்ந்துள்ள நீர்த்துறைகளைக் கொண்டவன் எம் தலைவன்; அவனுடன் நாங்கள் மகிழ்ந்திருந்தபொழுது, அவன் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினான். அந்த வாக்குறுதிகள் இப்பொழுதும் எம் நினைவில் வந்துவந்து நிற்கின்றன” என்பது பாடலின் பொருளாகும்.
நெய்தல் நெருங்கி மலர்ந்துள்ளது அவன் தலைவிபால் கொண்டுள்ள அன்பின் நெருக்கத்தைக் காட்டுவதாகும். நீரிலேயே அவை தங்கி வளர்வதால் அவனும் இவள் நினைவிலேயே இருப்பான்; எனவே விரைவில் வந்துவிடுவான் எனக் கூறுவது போல அமைந்திருப்பதாகும்.
தோழன், தோழி போன்றோர் அகத்துறைப் பாடல்களில் முக்கியமான பங்கை வகிக்கின்றனர். தலைவனையும் தலைவியையும் சேர்த்து வைப்பதிலும் அவர்கள் ஊடல்கள் கொண்ட காலத்து அந்த ஊடலைத் தீர்ப்பதிலும் அவர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். இந்தப் பத்துப் பாடல்களிலும் தலைவியின் திருமணத்தின் பொருட்டுத் தோழி ஆற்றும் செயல்பாட்டை அவள் கூற்றின் வழி ஐங்குறுநூறு தெரியப்படுத்துகிறது எனலாம்.