தி இரா மீனா
கன்னட மொழி கவிதை உலகில் ’ நவ்யா ’ இலக்கிய இயக்கத்தின் முன்னோடியாக போற்றப்படுபவர் மொகேரி கோபாலகிருஷ்ண அடிகா. ஆங்கில மொழி பேராசிரியர், கல்லூரி முதல்வர் என்று முக்கிய பொறுப்புகள் வகித்தவரெனினும் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகாலம் கன்னட இலக்கிய உலகை படைப்புகளால் பெருமைப்படுத்தியவர். சாட்சி பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து கன்னட இலக்கியத்தை பெரும்பான்மை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணின் வாசனே, அனந்தே, பூமி கீதா, வர்த்த மானா, பாவதரங்கா ஆகியவை அவருடைய படைப்புகளில் சிலவாகும்.
ஞானபீட விருது பெற்ற யு.ஆர். அனந்தமூர்த்தி கோபாலகிருஷ்ண அடிகாவின் மாணவரும், சிறந்த நாவலாசிரியரும், விமர்சகருமாவார். அவர் அடிகாவோடு நிகழ்த்திய பேட்டியின் சில முக்கியமான பகுதிகள் இங்கே. எந்த மொழி கவிஞனுக்கும் ஆர்வமூட்டுவதான பார்வையை யு.ஆர். மற்றும் அடிகா வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
யு. ஆர்: உங்கள் இளம்பருவத்து நினைவுகளையும், அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டே உங்கள் பெரும்பாலான கவிதைகளின் வெளிப்பாடுள்ளது. ஏன் அப்படி? கவிதை எழுத உங்களைத் தூண்டிய ஓரிரு சமபவங்களைச் சொல்ல இயலுமா?
அடிகா: உங்களுடைய கேள்விக்கான பதில் சுலபமானதில்லை. ஆனால் அந்த பதிலைத் தேடுவதும் பொருத்தமானதுதான். ஒரு குழந்தையின் ஆசையான பார்வைக்கு முன்னால் உலகத்திலிருக்கும் எல்லாமும் புதியதாகவும், மலர்ச்சியானதாகவுமிருக்கும். குழந்தையின் மனம் மெழுகு பந்து போன்றது. பார்த்த அனுபவங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் அதில் பதிவாகிவிடும். அவை பின்னாளில் சரியான நேரத்தில் வெளிப்படும். இது எல்லா மனித உயிர்களுக்கும் பொருந்தும். இளம்பருவத்தின் அனுபவ தொகுப்புகள் யாருடைய [கவிஞன்] மனதிலும் புதிய கோணத்தை கற்பனைகளோடு உருவாக்கும். இந்த அனுபவங்களும், கற்பனைகளும் சாதாரண கருத்து என்பதை மீறி காலவெளி கடந்தவையாகின்ற அந்த உணர்வில் வெளியானவைதான் என்னுடைய சில சிறந்த கவிதைகள். இளம்பருவ அனுபவங்களைக் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ மதிப்பீடு செய்வதென்பது சிறிது கடினமானதுதான். இப்போது அந்த நாட்களை நான் நினைக்கும்பொழுது உடனடியாக கேட்க முடிவது- காக்கையின் அலகில் சிக்கிக் கொண்டு தப்பிக்கப் போராடும் தவளையின் குரல்தான். அந்த தவளையைக் காப்பாற்றத் தவறிவிட்ட வேதனையில் நெஞ்சு துடித்ததை கேட்க முடிகிறது. மழைக்குப் பின்னால், சம்பிரதாயம் போல வீட்டின் மிக அருகிலிருந்த குளத்தில் நூற்றுக்கணக்கான தவளைகள் குரல் கொடுத்ததைப் பார்த்தும், கேட்டும் கழிந்த, வளர்ந்த நாட்கள்… இது போல பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். எதுவும் முக்கியமானதோ, முக்கியமற்றதோ இல்லை. ஒவ்வொரு சம்பவமும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு முக்கியமானதாகத் தெரிந்திருக்கிறது.
யு.ஆர் : உங்களின் தொடக்க கால கவிதைகளில் நகரக் குறியீடும், பிற்கால கவிதைகளில் கிராமம்சார் வெளிப்பாடும் உள்ளது போல தெரிகிறதே! இதற்கு காரணம் உங்களின் கிராமம் சார்ந்த இளம்பருவத் தாக்கம் எனலாமா? ? மொழித் தடை [கன்னடம்] என்பதற்கு இதில் பங்குண்டா?
அடிகா: இந்தியச் சுதந்திர காலகட்டத்தில் நாங்கள் [கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகள்] உடனடி கடந்த காலவெளிப்பாட்டிற்கு முதன்மை தந்தது உண்மைதான். நாங்கள் நகர்ப்புற குறியீட்டுத் தளைகளிலிருந்து தப்பிக்க முயன்றோம். என் தொடக்க காலக் கவிதைகளில் கவனக் குறைவாக நான் நகர்ப்புறக் குறியீடுகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். அன்று மேற்கத்திய நாகரிகம் சார்ந்த ஆங்கிலக் கவிதைகளின் தாக்கம் அதிகமிருந்தது என்பதையும் நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். எப்படியிருப்பினும், கவிதை எழுதுவதென்பது ஒருவரின் வாழ்வுச் சூழல் என்பதை மட்டும் உள்ளடக்கியதில்லை. இலக்கிய உணர்வுநிலை என்பது வாழ்க்கையின் பன்முகத்தன்மையை அறிவதும், அடையாளம் காட்டுவதும் மட்டுமின்றி, மாறுபட்ட ,உயர்வான அகம்சார்ந்த அனுபவங்களின் தேடலுமாகிறது.
யு.ஆர்: மக்கள் ஏற்கும் முறையில் , அணுகுவதற்கு எளிதான வகையில் கவிதைகள் எழுத வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அடிகா: நீங்கள் மக்கள் என்று சொல்லும் போது உடனடியாக எழும் கேள்வி ’எந்த மக்கள்’ என்பதுதான் . எந்த கலையும் எவருக்கும் எளிமையானதி்ல்லை. பொது ஜனங்களை விட்டுவிடுவோம். படித்தவர்கள், அறிவாளிகள் என்று நாம் சொல்பவர்களில் பலர் கலையின் மீது அவ்வளவாக ஈடுபாடு இல்லாதவர்களாகவோ அல்லது கலையுணர்வு அற்றவர்களாகவோ இருப்பதை நாம் பார்க்கவில்லையா? கவிதைகளில் வெளிப்படும் எளிய அனுபவங்கள் எளிமைத் தன்மையை காட்சிப்படுத்துவது முக்கியமானது. ஆனால் அதே நேரத்தில் மிகச் சிக்கலான அனுபவங்களை வெளிப்படுத்தும்போது, அந்த வெளிப்பாடு அதிநவீனம் சார்ந்த நிலையில் அமைவதும் முக்கியமானதே. அணுகுவதற்கு எளிமையான நிலையில் இருப்பதுதான் கவிதை என்று சொல்வது எப்படித் தவறானதோ அது போலவே புரிந்து கொள்ளக் கடினமாக இருப்பது கவிதை என்று சொல்வதும்- இரண்டும் தவறுதான். ஒலிநயம் என்ற தளையை உடைத்துக் கொண்டு வருவது இலக்கியத்திற்கு மிக அவசியமானது. வடிவத்தை ஆழமாக புரிந்து கொண்டவருக்கு அது சாத்தியமாகிறது. தளையை உடைப்பதென்பது ’கட்டுத் தளர்வான செய்யுளை ’ உருவாக்கும் தன்மையல்ல. புதிய வடிவில் நம்மைத் தயார் செய்து கொள்ள நாம் ஓர் இறுக்கமான வடிவத்தை உடைத்து இன்னொன்றை உருவாக்குகிறோம் அவ்வளவுதான். இன்றைய சூழலில் நாம்- கவிஞர்கள் மக்கள் விரும்பும் படைப்புகளைத் தரும் வகையிலான பொறுப்பிலிருக்கிறோம்.
நன்றி :உதயவாணி – கன்னடம் தீபாவளிச் சிறப்பிதழ் மூலம் : கோபாலகிருஷ்ண அடிகா [1918—1992] ஆங்கிலம் : சி.பி.ரவிகுமார் தமிழில் : தி.இரா.மீனா
விமர்சகர்
நான் ஏறிய உயரத்திற்கு நிழல்போல நீயும் ஏறினாய்,
தாழ்வு ஆழங்களில் நான் குதித்து நகர்ந்தேன்,
உன் சிறகுகளை என்னுடைய சிறகுகளோடு உராய்ந்தபடி.
நான் பறக்கும் தொடுவானத்தில் நீயும் பறக்கிறாய்.
என்னைப் போல புதிய எல்லைகளைத் தேடுகிறாய் ;
இன்னமும் நீ தனியாகவே நிற்கிறாய் ,
தீண்டப்படாமல், உன்னைப் பரத்தியபடி,
மேலே, கீழே , சுற்றி வானத்தை ஊடுருவியபடி
நிலத்தைத் துளையிட்டபடி.
தலையிலிருந்து கால்வரை நான் என்னைத் திறந்து கொண்டேன்.
உள்ளிடத்தை உப்பால் நிரப்பினேன்,
காயங்களைத் ஆற்றிக்கொண்டேன்,
நிலத்தடிக்குப் போய் காட்டேரியானேன்,
மேலே வந்து சூரியனை நோக்கிக் குதித்து ,
சிறகுகளை எரித்துக் கொண்டேன்,
மண்ணில் விழுந்தேன்,
அந்த இடத்தைச் சுற்றி குகை அமைத்துக்கொண்டேன்,
அந்தக் குகையின் கும்மிருட்டானேன்,
பதினான்கு வருடங்கள் போராடினேன், கசந்து போனேன்
பழுத்து, நெருப்பைப் போல வெடித்தேன்,
சிறகுகள் மீண்டும் கிடைத்தது,
காணும் சிறகாக ஒன்றும், காணாததாக மற்றொன்றும்.
இசைவானவனாக மாறிக் கொண்டிருந்தேன்.
ஸ்தூலத்திலிருந்து சுருக்கத்திற்கு,
சுருக்கத்திலிரு!ந்து உண்மைக்கு ––இவை எல்லாமும்
உன்னாலும் பார்க்கப்பட்டிருக்கிறது,
என்றாலும் நிழலைப் போல
இன்னமும் நீ முழுமையாக , இடையீடின்றி…
நீ மனக்கண்ணில் எழுகிறாய்; நீ வெளியே இல்லை,
ஆனால் எனக்குள் இருக்கிறாய்;
சோதித்து ,அளந்து, எடைபோட்டு, சரிபார்த்து—
இவையெல்லாம் உன் பணிகள்.
நான் உறங்கும் போது ஊசியால் குத்தினாய்
எனக்குள் வீங்கியிருந்த தேவையற்ற
காற்றை வெளியேற்றினாய்.
நீ உள்ளிருக்கும் நிழலா? அல்லது,
சித்ரகுப்தனின் ஒரு தூதனா?
உணர்ச்சியுள்ள எந்த விலங்கும் செய்ய விரும்புகிற
அலைந்து திரிதலுக்கு நீ என்னை அனுமதிக்கவில்லை.
நீ என்னை இரங்கலுக்குட்படுத்தினாய், இரங்கலால் என்னை எரித்தாய்,
சரி ,தவறு என்ற சக்கரத்தில் என்னைப் பிடித்துக் கொண்டாய்
என்னை அவமதித்து,தெருக்களில் இழுத்துச் சென்று கொன்றாய்,
கொன்றதன் மூலம் எனக்குப் புத்துணர்ச்சி தந்தாய்,
நீ , ஒரு சனி, ஒரு அட்டைப் பூச்சி,
இருப்பினும் ஒரு சினேகிதன் ,என் ஆசான்.
உன் கண்கள்
உன் கண்கள் . அவை வித்தியாசமானவை, உன் கண்கள் !
அவைகளின் தங்க இழையில் என்னிதயம் சிக்கிக் கிடக்கிறது.
அவற்றின் நீலவானில் என்நெஞ்சு பறக்கிறது.
பனியின் வெண்மைக்கிடையில்
ஒளிரும் நீலக்கற்களா அவை ?
அல்லது வெண்தாமரையின் கருவறையிலிருந்து
எட்டிப் பார்க்கும் ஒரிரு குழந்தை தேனீக்களா?
உன் இதயக் கடைசலிலிருந்து தெறிக்கும் திவலைகளா?
ஒவ்வொன்றிலும் இத்தனை காதலை நிரப்பிக் கொண்டும்
எப்படி அவைகளால் இவ்வளவு பேசமுடிகிறது?
உன் கண்கள் .அவை வித்தியாசமானவை, உன் கண்கள் !
அவற்றின் நினைவுகளில் மூழ்கி
என் இதயம் தனிப் பயணியாகிறது
என் செந்தாமரை
வழிப்போக்கர்களுக்காக, பிரகாசமாக செந்தாமரை
இன்று மலர்ந்திருக்கிறது என்ன நறுமண விருந்து !
காற்று, தேனீக்கள், அல்லது மெலிதான திவலை
விருந்திற்கு அழைப்பு வேண்டுமா, என்ன?
பொன் கதிர்களால் கிச்சுகிச்சு மூட்டப்பட்டு
தண்ணீர் களிப்புடன் தெறித்துக் கொள்கிறது
எத்தனை வழிகளில் நான் இவற்றைக் காதலிக்க முடியும்?
தேனீ சுறுசுறுப்பாக வழிகளைக் கணக்கிடுகிறது….
தாமரை நாணுகிறது:
இதழ்கள் கருஞ்சிவப்பாகின்றன.
கவனி ! அவனுடைய ஏழு குதிரைகள் பூட்டியதேர்
கிழக்கு வானத்தில் ஊடுருவுகிறது..
அவனுடைய ஒவ்வொரு லட்சக் கணக்கான கைகளிலும்
சிக்கலான காதலின் வலைப் பின்னலைச் சுமக்கிறான்.
அந்தத் தாமரை மகிழ்வுக்குள்ளானது.
தேனீக்களின் ரீங்காரம் தேய்ந்தது;
அது எப்படியோ வெளிறிப் போனது
தன்னைச் சுற்றியுள்ள தேனீக்களை அவள் புறக்கணிக்கிறாள்
என் செந்தாமரை கதிரவனுக்காகக் காத்திருக்கிறாள்,
நாளைய கனவு கதிரவனின் உருவமாகுமா?
———————–