பாட்டியின் கடவுள்
தாத்தாவின் வடிவில்
பொன்னழகு சாமிக்கு
பூசை முடித்து
பாட்டிக்கு
பொட்டு வைக்கிறது.
தாத்தாவின் கடவுள்
ஏரிக்கரையோரம்
மீசை முறுக்கி
குதிரையில் வாளேந்தி
ராத்திரி பகலாய்
காவலுக்கு நிற்கிறது
பரசுராமர் உருவில் இருந்து
பெரியாருக்கு
கூடு விட்டு
கூடு பாய்ந்த
பெரியப்பாவின் கடவுள்
இப்போது
பஸ்டாண்டுக்கு நடுவில்
சிமிண்டு சுவரில்
மாலையுடன் சிரிக்கிறது
அப்பாவின் கடவுள்
அப்போது ஹிப்பி வளர்த்த
கமலஹாசன்.
இப்போது யார்
என்பதை
அவர் சொல்வதில்லை
நாங்கள்
கேட்பதுமில்லை.
கால் மடக்கி அமர்ந்த
பளிங்குச் சிலையின் படமாகி
சாய்பாபாவின் வடிவில்
உள்ளங்கை காட்டி
ஆசிர்வதிக்கும்
என் மனைவியின்
கடவுள்
கரடி பொம்மையை
தன் குட்டிக் கைகளால்
இறுக அணைத்தபடி
மனைவிக்கு பக்கத்தில்
ஒருக்களித்து உறங்கும்
என் கடவுள்
எல்லாவற்றையும்
மேலிருந்து
பார்த்துக்கொண்டிருக்கும்
அந்த
பெரிய
கடவுளுக்கு
யாராம்
கடவுள்?