இன்று காலை
நடைப்பயிற்சி செல்கையில்
என் பின் வந்து
பதுங்கி,
தயங்கி நின்றபின்
திடீரென வேகமெடுத்து
முந்திச்சென்று
பாதை மறைக்கும்
குளிரின் காற்று.
தாடை வருடி
இளவேனிலின்
வாழ்த்தை
கன்னக்கதுப்பில்
முனுமுனுத்து
மஞ்சள் தும்பை நிறைத்த
புல்தரையில் படர்ந்து
படுத்து உருண்டு
நிதானமாய் மேல் எழுந்து
விண்நோக்கி
விரைகிறது.
ஏரியை நோக்கி
இறங்கிச்செல்லும் பாதை
திடீரென வழிமறிக்கும்
பிர்ச் மரத்தின்
ஏந்திய யானையின்
துதிக்கை.
உடலெங்கும்
வண்ணம் பூசி
தியானித்திருக்கும்
தனித்த ஒரு பறவை.
மெளனம் கலைத்து
மணிக்கழுத்தில்
உச்சரித்த ஒலி ஒன்று
மந்திரம் கொண்டு
உன் குரலாய்
எதிரொலிக்க
கேட்டுக் களித்து
மிதந்து செல்லும்
மேகத்தின் நெகிழ்ச்சியில்
முகிழ்க்கும்
துளிக்கண்ணீர்.
நாசியின்
நுனி தீண்டும்
என் விதிர்ப்பு கண்டு,
விஸ்தாரமாய்
மல்லாந்திருக்கும்
ஏரியின் மீது
ஆபாசித்து
புல்வெளியின் சரிவில்
அலையாகி நெளிந்து செல்லும்
தனியனாய்
நான் நடக்கும்
பாதை நெடிதும்
காட்டுப்பூவின்
நறுமணமாய்
நிறைந்து
விடாது
உடன் வரும்
துணையென,
பெயர் தெரியாத
ஒரு
தெய்வம்.