“இனியும் சுதாகரிக்காம இருந்தோம்னா அப்பறம் மொத்தமும் இல்லாம போயிடும்,” சந்திரானந்தாசாமி இப்படி சொன்னதும் கூடமே அதிர்ச்சி அடைந்தது . பெரியவர் அதிர்ச்சியும் துக்கமும் கலந்தவராக அவரைப் பார்த்தார், மேலும் முதுமையின் சலிப்பும் பெரியவரின் முகத்தினில் இருந்தது. எல்லாவற்றையும் துறந்து துறவியானவர் இப்போது இதற்குள் மாட்டிக்கொண்டு வெளியேற துடிக்கிறார் போல தோன்றியது .
கூடத்தின் நிசப்தம் பெரியவரின் குரலுக்காக கலைய காத்திருந்தது . மெல்ல இருமி, அசைந்து, “இப்ப என்ன பண்ணலாம்னு சொல்ற” என்றார் . சந்திரானந்தாசாமி, “சுற்று வேலி போடுவோம், கண்காணிப்போம்,” என்றார். சந்திரானந்தசாமி என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அவர் உடல்மொழி வழியாக புரிந்து கொள்ளவே முடியாது. எதையும் வெற்று பார்வைகள் வழியாகவே அணுகுவார் .
பெரியவர், “சரி, ஏற்பாடு செய்,” என்றார், பிறகு எழுந்து அவரது அறை நோக்கி நடந்தார், அருகில் இருந்த இளம் சந்நியாசி அவர் பின்னாலேயே சென்றான் . கூட்டத்திலிருந்த பிற சாமிகளும் ஒவ்வொருவராக நகர்ந்து வெளியேறினார்கள் , நானும் சந்திரானந்தா சாமியும் மட்டும் நின்றிருந்தோம். நான் அவரிடம், “ஒரு வேளை திருட்டு க்கு காரணமானவங்க உள்ளவுள்ளவங்களா இருந்தா?” என்றேன் . சந்திரானந்தா சாமி என் தோளில் தட்டியபடி, “அப்ப உள்ளேயும் கண்காணிப்போம்,” என்றார் . அதைக் கேட்டவுடன் மனதில் ஒருவித புது பதற்றம் குடியேறி கொண்டது.
முதலில் சின்ன சின்ன பொருட்கள் காணாமல் போனது. கைமறதியாக வேறு எங்காவது வைத்து காணாமல் போனதாக சொல்கிறார்கள் எண்ணிக் கொண்டிருந்தோம் . தீபம் காட்ட பயன்படும் செம்பாலான தட்டு காணாமல் போனபோதுதான் திருட்டு நடப்பதை உணர்ந்தோம், சந்திரானந்தசாமிதான் ஆரம்பத்திலேயே உணர்ந்து சொன்னவர் . தொடர்ந்து எல்லோரும் கவனமாக இருந்தும் பொருட்கள் திருடு போவது நிற்கவில்லை . பிறகு சந்திரானந்தாசாமி பெரியவரிடம் முறையிட்டு வேலியிட வேண்டும் எனும் தன் யோசனையை வெற்றிகரமாக ஏற்க வைத்தார் .
எங்கள் ஆசிரமம் 15 ஏக்கர் அளவு விரிந்த ஒன்று, பிரார்த்தனைக் கூடம்தான் இங்கு இருப்பதில் பெரிய கட்டிடம், ஓடு கொண்டு கூரை வேயப்பட்ட கட்டிடம் இது, அதில் வலது மூலையில் இருந்த ஓய்வு அறையில் பெரியவர் தங்கியிருந்தார். பிற சந்யாசிகள் , வெளியாட்கள் தங்க தனித்தனி கட்டிடங்கள் இருந்தன, நான் சமையல் கூடத்திலேயே படுத்துக் கொள்வேன். நான் சமையல்காரனாக இங்கு வந்து சேரவில்லை , வீட்டில் இருக்க முடியாமல் தப்பி ஓடி வந்தவன் , தற்செயலாக இங்கு வந்து சேர்ந்து எடுபிடி வேலைகள் ஆரம்பித்து இந்த பதினைந்து வருட வளர்ச்சியில் சமையல் பொறுப்பாளன் இடத்திற்கு வந்துள்ளேன் . ஆசிரமத்தில் நடக்கும் திருட்டுகள் பற்றி ஆர்வம் இருந்தாலும் பொருட்படுத்தாமல் இருந்து கொண்டிருந்தேன் ,பிறகு சமையலறையில் இருந்த செம்பு போசி காணாமல் போனபின் சாதாரண ஆர்வம் பதற்றமாக மாறி திருட்டைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருக்கும்படி ஆகிவிட்டது . மொத்த ஆசிரமமும் கடவுளை மறந்து திருட்டை மட்டுமே பேசிக் கொண்டிருந்தது .
தற்காலிகமாக இரும்புக் கம்பி முள்வேலி போட்டுக்கொள்ளவும் பிறகு அதை மதில்சுவர்களாக மாற்றிக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டு வேலை துவங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன . சந்திரானந்தாசாமி இதில் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருந்தார, இவரைப் பொருத்தவரை ஏதாவது தீவிரம் எப்போதும் இருக்க வேண்டும் , இவரால் சும்மா இருக்க முடியாது, வேறு எதுவுமே கிடைக்கவில்லையெனில் விறகு வெட்டித் தருகிறேன் என்று சொல்லி வந்து நின்று விடுவார், உடல் சும்மா இருக்கக் கூடாது, ஏதாவது பணி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பார், இவர் பிரார்த்தனை செய்தோ , தியானம் ஏதேனும் செய்தோ நான் பார்த்ததே இல்லை , பெரியவரை கண் நோக்கி பேசக் கூடிய தைரியம் இங்கு இவர் ஒருவருக்கே உண்டு. வேலி அமைக்கும் திட்டத்தில் என்னை இழுத்து போட்டுக் கொண்டு வேலை வாங்கிக் கொண்டிருந்தார், எனக்கும் இந்த மாற்றம் ஒரு புது உற்சாகத்தை கொடுத்தது.
எங்கள் ஆசிரமம் வஞ்சிபாளையம் ஊர் எல்லையில் மலையடிவாரத்தில் இருந்தது, எங்கள் ஆசிரமம் தாண்டிப் போகக் கூடியவர்கள் ஆடு மேய்ப்பவர்களும், சீமார் புல் எடுக்கச் செல்பவர்களும்தான். இந்த பக்கம் புதிதாக யாராவது வருகிறார்கள் என்றால் அவர்கள் எங்கள் ஆசிரமத்திற்கு வருபவர்கள்தான். பாதுகாப்பு தேவைப்படாத இடத்தில் ஆசிரமம் இருந்தது என்று சொல்லலாம். இப்போது 3 மாதமாக நடக்கும் இந்த திருட்டுகள் ஆசிரமவாசிகள் எல்லோருக்கும் அதிர்ச்சியானதாகவும் புதிதானதாகவும் இருந்தது, ஒருவகையில் உறக்கத்தில் இருந்து கொண்டிருந்த ஆசிரமத்தை இந்நிகழ்வுகள் விழிப்படையச் செய்து விட்டது.
வேலி அமைக்க ஒரு மேஸ்திரி, பணியாட்கள் 9 பேர், என ஒரு குழு வந்து ஆசிரமத்திலேயே தங்கி பணியில் ஈடுபட்டது , 8 அடி தூரத்திற்கு ஒரு கல்லுக்கால் என வைத்து இரும்பு முள்வேலிக் கம்பிகள் சுற்றி வேகமாக வேலை செய்து கொண்டிருந்தனர், இதில் கம்பிகளை வரிசை முறையில் சீராக இழுப்பதுதான் கொஞ்சம் கடினமான பணி, அதற்காகவென ஒரு குறுக்கு கட்டை வைத்து இறுக்கி இழுக்கும் ஒரு யுக்தியை பயன்படுத்தினார்கள், மொத்தம் ஐந்து நாட்களுக்குள் வேலி போட்டு முடித்து விட்டார்கள். ஆச்சரியமாக, வேலி அமைக்க முதல் கல்லுக்கால் போட துவங்கியதிலிருந்தது இப்போது வரை எந்த பொருளும் திருடு போகவில்லை, ஒவ்வொரு நாளும் எல்லோரும் எதிர்பார்த்து ஏமாறுவதாக நாட்கள் போனது.
சந்திரானந்தாசாமி வெற்றிப் பெருமிதத்துடன் ஆசிரமத்தில் வளைய வந்துகொண்டிருந்தார் . ஆனால் எனக்கு உள்ளுக்குள் ஒரு எண்ணம் புதிதாக உருவாகிக் கொண்டிருந்தது , வேலி ஒரு கூண்டு போல சிறைபடுத்தி விட்டது என. வேலி போட்ட மறுநாளே சந்திரானந்தாசாமி பக்கத்தில் இருந்த கிராமத்திற்கு போய் ஒரு வயசாளியை கூட்டி வந்து வாசலில் காவலாளியை போல அமர்த்தி விட்டார், அந்த காவலாளி உள்ளே வருபவர்களையும் வெளியே செல்பவர்களையும் திருடனை போலவே பாவித்து அனுப்பிக் கொண்டிருந்தார். ஆசிரம சூழலே சிறைசாலை மாதிரி ஆகிவிட்டது போல உணர்ந்தேன் , என் உணர்வு சந்திரானந்தா சாமி தவிர பிறர் எல்லாருடைய முகத்திலும் பிரதிப்பலிப்பதை உணர்ந்தேன் .
சந்திரானந்தாசாமியிடம் இதை எப்படி சொல்வது என தவித்தேன், அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது பேசி காவலாளியை நீக்க எண்ணி சமயம் பார்த்து காத்திருந்தேன். அதிசயமாக அவர் எந்த வேலையும் செய்யாமல் வேப்ப மரம் அருகில் இருந்த கல்லாலான இருக்கையில் அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்தேன், இப்போது போய் பேசி பார்க்கலாம் என்று தோன்றியது. அருகில் சென்று நின்றபோது என்ன என்பது போல பார்த்தார் .
ஆசிரம சூழலே மாறிடுச்சு சாமி”
“ஏன் திருட்டு நடக்கலைனா …”
நான் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்தேன். அவர் அருகில் அமரச் சொன்னார்.
“கந்தா , இந்த ஆசிரமம் உனக்கும் எனக்குமோ இல்ல உள்ள இருக்கற பெரியவருக்கோ மட்டுமே சொந்தமானதுல்ல, இனி இங்க வரப் போகிற எல்லாருக்கும் சொந்தமானது, அதுக்கு இந்த ஆசிரமம் தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம்…”
“மத்தவனுக்கு பயந்து நாம கூண்டுக்குள்ள சிக்கின மாதிரி தோணுது சாமி”
மெல்ல புன்னகைத்தவர் என்னில் இருந்து பார்வையைத் திருப்பி தூரத்தில் இருந்த வேலியைப் பார்த்தார். “கந்தா , இன்னைக்கு பொருள் திருடு போகுதுன்னா நாளைக்கு நிலமும் திருடு போகும்னு அர்த்தம் ”
அதீதமாக எண்ணிக் கொள்கிறாரோ என்று தோன்றியது, பதில் சொல்லாமல் அவரை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன் .
“இங்க இருந்து காணாம போன ஒவ்வொரு பொருளும் வெளிய பாக்குறேன் , அவனுகளோடதா …”
நான் உண்மையா என்பது போல பார்த்தேன், ஆனால் இவர் முன்பெல்லாம் பகலில் ஊர்களில் சுற்றி திரிவார் , சூரியன் அஸ்தமிக்கும்போதுதான் ஆசிரமம் வருவார், இந்த திருட்டு பிரச்சனைக்கு பிறகே அவர் ஆசிரமத்தில் பகலிலும் இருந்தார் .
“கந்தா , எந்த பொருளும் யாருக்கும் உரிமையானதில்லை , ஆனா அப்படி எல்லோரும் நினைக்கும்போது மட்டும்தான் அது சரி, மத்தவங்க ஒவ்வொன்னுக்கும் உரிமை கொண்டாடும்போது நாம எல்லாம் எல்லாருக்கும் சொல்லிட்டு இருந்தா பிறகு நமக்கு பயன்படுத்தக்கூட ஏதும் இல்லாம போயிடும் ”
“இது வெத்து பயம் சாமி”
“நம்ம ஆசிரமத்துக்குனு சொந்தமா கொஞ்சம் நிலம் வெளியில இருந்தது, இப்ப அது நம்ம கைல இல்ல…”
எனக்கு விஷயம் லேசாக புரிபட ஆரம்பித்தது.
“பெரியவர் இதெல்லாம் கண்டுக்க மாட்டாரா” என்றேன்.
“அவர் இதையெல்லாம் ஏன் கண்டுக்கணும் , அவரோடது சமயப் பணி, அதை அவர் செய்யட்டும், நான் இதை செய்யறேன், அவ்வளவுதான்”
“சாமி , நான் இதுவரை இங்க உணர்ந்தது ஒன்னுதான், ஆசிரமம் இங்க வர யாரையும் பிரிச்சு பார்க்காம வரவேற்கும், சாப்பாடு போடும், நான் இங்க வர ஆளு பசியோட இருக்கானான்னு மட்டுமும்தான் பார்ப்பேன், அவனுக்கு சாப்பாடு போடறதுதான் என் வேலை, அவன் திருடனோ, நல்லவனோ அது எனக்கு தேவையில்லை, பெரியவர் என்னைச் செய்ய சொன்ன வேலையும் இதுதான் ”
சந்திரானந்தாசாமி பிரியமாக முதுகில் தட்டினார், பிறகு ஏதும் சொல்லாமல் ஆசிரமம் பின்பு தெரியும் மலைகளை பார்த்தபடி இருந்தார், கிளம்பலாம் என எண்ணினேன், எழும்போது அவர் பேசத் தொடங்கினார் .
“நானும் அப்படி பிரிச்சுப் பாக்கறவன் கிடையாது, உண்மைல எவன் எப்ப திருடினான் னுகூட தெரியும், திருடற சமயத்தில் அதை பார்த்தும் பார்க்காத மாதிரியெல்லாம் இருந்திருக்கேன். மக்கள் இயல்புங்கிறதை உண்மைல எவ்வளவு யோசிச்சாலும் வகுத்து சொல்லிட முடியாது. அப்பறம் எல்லா மக்களும் ஆன்மிகம் நோக்கி திரும்பணும்னும் , நல்லவர்கள் ஆகணும்னெல்லாம் எதிர்பார்ப்பது எல்லாம் முட்டாள்தனம் , தேடல் உள்ளவனுக்கு ஒரு இடம் வேணும், அதுக்காக இந்த ஆசிரமம் எப்போதும் இருக்கணும்னு நினைக்கிறேன் . இது எப்போதும் இருக்கணும்னுனா இது பாதுக்காக்கப்படனும் ,அதை நான் செய்ய முயற்சிக்கிறேன், அவ்வளவுதான்”
“சாமி , பெரியவரை கவனிச்ச வரை அவருக்கு பேதமில்ல, இந்த ஆசிரமம் மக்கள்கிட்ட இருந்து தள்ளி இருக்கக்கூடாது னு நினைக்கிறார், இந்த பாதுகாப்பு நெருங்க விடாம தள்ளி வைக்குதுன்னு தோணுது ”
“இப்படி விலகி இருக்கறது நல்லது, அது மதிப்பை உருவாக்கிக் கொடுக்கும்,” என்று சொல்லிச் சிரித்தார், மேலும், “உண்மையான ஆர்வம், மதிப்பு வரும்போதுதான் உருவாகும்,” என்றார் . ராபட் பிராஸ்ட் எழுதின ஒரு கவிதை இருக்கு , “வேலியை விரும்பாத ஒன்று”னு ஆரம்பிக்கும், எனக்கும் அந்தக் கவிதையோட மனநிலை பிடிக்கும், ஆனா அயலனுக்கும் நம்மைப் போல அபகரிக்க விரும்பாத மனநிலை இருக்கற போதுதான் இந்த வேலியே வேண்டாங்கற மனநிலை சாத்தியம், அப்படியில்லாம நாம மட்டும் அந்த மனநிலையில் இருந்தா இழப்பு நமக்குத்தான் ”
“இது எதிர்மனநிலைனு தோணுது,” சொல்லும்போது என்னை மீறி என்னில் புன்னகை வெளிப்பட்டது.
“இல்ல , இதுதான் யதார்த்தம், மனுஷன் ஒன்னுல இருந்து அடுத்ததுக்கு தாவ பார்க்கற குணம் உள்ளவன், இன்னும் இன்னும்கிறதுதான் அவன் இயல்பான குணம், அதுதான் அவனை நகர்த்தற விசை, அவன் அப்படிதான் இருப்பான், தற்காலிகமா வேணும்னா நீதி நேர்மைனு சொல்லி மட்டுப்படுத்தலாம், அவ்வளவுதான் முடியும் ”
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பிரார்த்தனை கட்டடத்தில் சிறிய பரபரப்பு தோன்றியது, இருவரும் பேசுவதை அப்படியே விட்டு கூடம் நோக்கி நடந்தோம். பெரியவர் உடன் இருந்து சேவகம் செய்யும் அந்த இளம் சந்நியாசி எங்களை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. அருகில் வந்தவன், ” பெரியவர் வெளிய பயணம் போக விரும்பறார், உங்ககிட்ட ஏற்பாடு செய்ய சொன்னார்”
சந்திரானந்தாசாமி, “எங்க, பக்கத்துலயா?” என்றார்.
“இல்ல வடக்கே, திரும்ப வருவாருனு தோணல, உங்ககிட்ட இதைப் பத்தி பேசதான் உங்களை அழைத்து வர சொன்னாருனு தோணுது ”
சந்திரானந்தா திரும்பி வேலியைப் பார்த்தார் , எனக்கு இனி இவர்தான் இந்த ஆசிரமத்தின் பெரியவர் என்று தோன்றியது .
வேலி போடவும் பெரியவருக்குத் தான் சிறைப்பட்ட உணர்வோ?